Followers

Tuesday 31 January 2023

மோடி-பிபிசி+அதானி-ஹிண்டன்பேர்க்: காவிகளுக்கு எதிராக பாவாடைகளின் தாக்குதலா?

 


மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் வெளியிட்ட போது கொதித்த அதே ஆட்கள் அதானிகளுக்கு எதிராக ஹிண்டன்பேர்க் அறிக்கை வெளியிட்ட போது கொதிக்கின்றார்கள். பல மோடி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளரக்ளும் அதானி மீதான தாக்குதல் மோடி மீதான தாக்குதல் என்கின்றார்கள். மோடியைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதானியின் வீழ்ச்சி மோடியின் வீழ்ச்சி என்கின்றார்கள். கௌத்தம் அதானி தனக்கு எதிரான தாக்குதல் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் என்கின்றார். அதானி குடும்பத்தினர் ஊழல், பணச்சலவை (Money Laundering), வருமான வரி மோசடி, தவறாக வங்கிக் கடன் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. பல அரச விசாரணைகளும் நடை பெற்றன. அவை ஏதும் அவரது செல்வப் பெருக்கத்திற்கு தடையாக அமையவில்லை.

தடையை மீறிய அதானியின் எரிபொருள் வியாபாரம்

உக்ரேன் போரில் மோடியின் நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் என்று சொல்லப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த இரசியாவிடமிருந்து அதானி எரிபொருளை குறைந்த விலையில் வாங்கி அதை உலகச் சந்தையில் விற்பனை செய்வதையும் மேற்கு நாடுகள் விரும்பவில்லை. உலகச் சந்தையில் எரிபொருள் விலை பீப்பாய் ஒன்று $100இற்கு மேல் இருக்கும் போது அதானியின் நிறுவனம் இரசியாவில் இருந்து $33இற்கு வாங்கி அதை இந்திய மக்களுக்கு மலிவு விலையில் விற்காமல் உலகச் சந்தையில் விற்று அதானியின் நிறுவனங்கள் பெருமளவு இலாம் ஈட்டியுள்ளன.

கிருத்தவர்களுக்கு எதிரான இந்துத்துவா?

இந்தியாவில் உள்ள கிருத்தவ அமைப்புக்களுக்கு எதிராக மோடி அரசு செயற்படுவதாக குற்றச் சாட்டு உண்டு. கிருத்த போதகர்களை பாவாடைகள் என பல மோடியின் பாரதியக் ஜனதாக் கட்சியைச் சேர்ந்த பலர் கேலி செய்கின்றார்கள். கிருத்தவ மதத்திற்கு இந்துக்கள் மாற்றப்படுவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். பிரித்தானிய சஞ்சிகையான Spectator 2022 டிசம்பர் நத்தார் பண்டிகைக் காலத்தில் “கிருத்துவம் மீதான இந்தியாவின் போர்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவில் என்றும் இல்லாத அளவு கிருத்தவர்களிக்கு எதிராக அதிக அளவு தாக்குதல்கள் 2022-ம் ஆண்டு நடந்துள்ளன எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



நண்பேண்டா

மோடியும் அதானி குடும்பமும் இணைந்தே வளர்ந்தார்கள். மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது அதானி இந்தியாவில் பெரிய செல்வந்தராக இருந்தார். மோடி இந்தியத் தலைமை அமைச்சரான பின்னர் அவர் உலகில் பெரிய செல்வந்தரானார். மோடி தலைமை அமைச்சராக 2014-ம் ஆண்டு பதவி ஏற்றபோது அதானி குடும்பத்தின் சொத்து $2.8 பில்லியனாக இருந்தது. அது இப்போது $119 பில்லியனாக அதிகரித்துள்ளதுவ் அதானி குடும்பத்தினர் ஊழல், பணச்சலவை (Money Laundering), வருமான வரி மோசடி, தவறாக வங்கிக் கடன் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. பல அரச விசாரணைகளும் நடை பெற்றன. அவை ஏதும் அவரது செல்வப் பெருக்கத்திற்கு தடையாக அமையவில்லை. அதானி தனது சொத்து மதிப்பை கடந்த மூன்று ஆண்டுகளில் $100பி ஆல் உயரத்தியுள்ளார். அவருக்கு சொந்தமான ஏழு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பின் மூலம் அவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அவரது நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 819%ஆல் அதிகரித்துள்ளது.

கடன் ஏய்ப்பு

மற்றச் சந்தைகளைப் போலவே பங்குச் சந்தையிலும் பங்கு விலைகளை விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் முடிவு செய்கின்றனர். ஆனால் அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் தம் பங்குகளை விற்பனை செய்யும் போது அவற்றை மற்ற அதானி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன. இதனால் அப்பங்குகளின் விலைகள் மிகைப்படுத்தப்படுகின்றன. அதானி குழுமத்திற்கு சொந்தமாக பல் வேறு நாடுகளில் பல நூறு நிறுவனங்கள் இருப்பதால் அது இலகுவாகின்றது. அதானி குடும்பத்தினரின் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதானியின் நிறுவனம் Aயில் அதானியின் நிறுவனம் B முதலீடு செய்து அதன் பங்குகளை வாங்கி தனது சொத்தாக கணக்கு காட்டும். போலியாக நிறுவனம் Aயின் பங்குகளின் விலைகள் மிகைப்படுத்திக் கட்டப்படும். அதனால் நிறுவனம் Bயின் சொத்துக்களின் பெறுமதி மிகைப்படுத்தப்படும். அதை ஈடாக வைத்து இந்திய அரச வங்கிகளில் பெருமளவு கடனை நிறுவனம் B பெற்றுக் கொள்ளும். இப்படிப் பல கடன்களைப் பெறுவதால் அதானியின் நிறுவனங்களின் தற்காலிக சொத்துக்களுக்கு ஈடாக தற்காலிக கடன்கள் உள்ளன. பொதுவாக சொத்துக்களின் பெறுமதி கடன்களின் பெறுமதியிலும் ஒன்றரைப் மடங்கிற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பது நிதித்துறை நியமமாகும்.

பணச் சலவையும் வரி ஏய்ப்பும்

இந்தியாவில் இருந்து நிறுவனம் C வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது அதை நேரடியாகச் செய்வதாக கணக்கு காட்டாமல் மொறிசியஸ் தீவுகளில் உள்ள அதானி நிறுவனம் Dயிற்குமிகவும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாக கணக்குக் காட்டப்படும். இதனால் நிறுவனம் Cயின் இலாபம் பெருமளவு குறைத்துக் காட்டப்படும். மொறிசியஸ் தீவுகளில் உள்ள நிறுவனம் D சந்தை விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கணக்கு காட்டப்படும். மொறிசியஸ் தீவில் உள்ள நிறுவனம் D பெருமளவு இலாபம் ஈட்டும். அதற்கு அங்கு வரி விலக்கு உண்டு. இதனால நிறுவனம் Dயிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு இருக்கும். அதை இந்தியாவிற்கு அந்நிய முதலீடு என்னும் பெயரில் கொண்டு வரப்படும். சில அந்நிய முதலீட்டுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதும் உண்டு. இதைப் பணச்சலவை என்பார்கள். 2014இல் இரண்டு நாட்களில் 270 நிறுவனங்களை உருவாக்கினார்கள் அதானி சகோதரர்கள். அவற்றில் 125 இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டன. விநோத் ஷாந்திலால் அதானி வெளிநாடுவாழ் இந்தியச் செல்வந்தர் (Richest NRI) ஆவார். ஹிண்டன்பேர்க் ஆய்வகம் செய்த புலன் விசாரணையை ஒரு நிதித் தடயவியல் விசாரணை (Financial Forensic Inquiry) எனச் சொல்லலாம்.

குஜராத் மாடல் (Model) அல்ல தென் கொரிய மாடல்

திரள்கூட்டாண்மைகளை (Conglomerates) வளர அரசு ஆதரவு கொடுத்ததன் மூலம் தென் கொரியப் பொருளாதாரம் பெரிதும் வளர்ந்தது. அது போல இந்தியாவிலும் செய்ய மோடி முயன்றார். அவரது ஆட்சி நாம்(மோடி, அமிஷா) இருவர் நமக்கிருவர்(அதானி, அம்பானி) என அமைந்திருந்தது. ஆனால் இந்திய திரள்கூட்டாண்மைகளின் வளர்ச்சி இந்தியாவின் நடுத்தர வருமானம் உள்ள மக்கள் மேல் அதிக சுமையை ஏற்படுத்தியது. உலகிலேயே மிகச் சிறந்த மக்கள் தொகைக் கட்டமைப்பைக் (அதிக இளையோர் – குறைந்த முதியோர்) கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக நிர்வகித்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதை மோடியின் வெற்றியாக இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. 

நியதிசார் தாராண்மைவாத ஒழுங்கு Rule Based Liberal Order

உலக அரங்கில் முதலாளிகள் ஒழுங்கான முறையில் போட்டியிட்டு தம் செல்வத்தை பெருக்குவதற்கு என உருவாக்கப்பட்டது தான் நியதிசார் தாராண்மைவாத ஒழுங்கு. எந்த ஒரு முதலாளியும் அரச சலுகையைப் பெற்றுக் கொண்டு உலகச் செல்வந்தராக வருவதை தாராண்மைவாதிகள் விரும்புவதில்லை. மோடியையும் அதானியையும் தாராண்மைவாதிகள் விரும்பத்தகாத வகையில் நடந்து கொள்கின்றார்கள். தாராண்மைவாதிகள் மதக் குரோதத்தை விரும்புவதில்லை. அதிலும் தம் சொந்த மதத்திற்கு எதிரான செய்ற்பாடு என்றால் கொதித்துப் போவார்கள். அந்தக் கொதிப்பின் விளைவுகளாக பிபிசி மோடிக்கு எதிராக ஒளிபரப்பிய ஆவணப்படத்தையும் ஹிண்டன்பேர்க் நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையையும் பார்க்க வேண்டி உள்ளது.

சீனாவைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடன் நேரடியாக மேற்கு நாடுகள் மோத விரும்பாமல் மறைமுகமாக மோதுகின்றன. பிபிசியின் ஆவணப்படம் இந்து மத வெறியர்கள் மத்தியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்தும் என்பது பிபிசியிற்கும் தெரியும் மேற்கு நாடுகளுக்கும் தெரியும். ஆனால் அந்த ஆவணப்படம் உலக இஸ்லாமியர்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான கருத்தை வளர்ப்பது நிச்சயம். “நானும் ரௌடிதான்” என அலையும் துருக்கி இந்தியாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மேலும் மோசமாக்கும். ஈரான் இந்தியாவுடன் உறவை வளர்க்க விரும்பாது. இப்படிப்பட்ட நெருக்குவாரங்களை இந்தியாவை ஆளும் காவிகளுக்கு கொடுப்பதுதான் மேற்கு நாடுகளின் அதாவது இந்துத்துவா மொழியில் சொல்வதானால் பாவாடைகளின் நோக்கமாகும்.

அதானி குடும்பத்தினருக்கு எதிராக மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடை வருமா?

Monday 30 January 2023

ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலைமீது தாக்குதல்

 


ஈரானின் Isfahan நகரில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது ஆளிலிகள் மூலம் 2023 ஜனவரி 28-ம் திகதி தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. ஈரானி ஷஹாப் நடுத்தர தூர ஏவுகணைகள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றால் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியும். இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்கா இரசியா ஈரானிடமிருந்து பல ஆளிலிகளை வாங்குவதாகவும் பல ஏவுகணைகளை வாங்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தது.   அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் இஸ்ரேலின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. ஆனால் இத்தாக்குதலுக்கும் ஈரான் இரசியாவிற்கு ஏவுகணைகள் வழங்குவதற்கும் தொடர்பில்லை என அமெரிக்கா சொல்கின்றது.

Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து Juniper Oak 23 என்னும் போர்ப்பயிற்ச்சியை 2023 ஜனவரி 23-ம் திகதி செய்திருந்தன. இப் போர்ப்பயிற்ச்சி ஒர் இணைந்த எல்லாத்தள (Combined Joint All-Domain) போர்ப்பயிற்ச்சி என அமெரிக்க நடுவண் கட்டளையகம் அறிவித்திருந்தது. தரை, வான், கடல், விண்வெளி, இணையவெளி ஆகியவற்றில் படையினரின் செயற்பாட்டை ஒருங்கிணைத்துச் செய்வதே எல்லாத்தள (All-Domain) நடவடிக்கயாகும். இப்பயிற்ச்சி மேற்காசியாவில் அமெரிக்காவினது ஈடுபாட்டை கோடிட்டுக் காட்டுகின்றது என்றது அமெரிக்க அரசு. இப்போர்ப்பயிற்ச்சி எந்த ஒரு தனிப்பட்ட நாட்டை இலக்கு வைத்துச் செய்யப்படவில்லை என்றும் அதேவேளை ஈரான் போன்ற எதிரி நாடுகளைக் கருத்தில் கொண்டு செய்யப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 6,400 அமெரிக்கப்படையினரும் 1,100 இஸ்ரேலியப்படையினரும் 100 அமெரிக்க விமானங்களுடனும் 42 இஸ்ரேலிய விமானங்களுடனும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்தது. அமெரிக்காவின் நான்கு B-52 குண்டு வீச்சு விமானங்கள், நான்கு F35 போர் விமானங்கள், பதினெட்டு F/A-18 விமானங்கள், இரண்டு MQ1-9 Reaper ஆளிலிகள் ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட ஆறு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் என ஒரு வலிமை மிக்க படையணி இஸ்ரேலுடன் இணைந்து செய்திருந்தது. இஸ்ரேலின் F-35-I, F-15, F-16 ஆகிய போர் விமானங்களும்  G550 கண்காணிப்பு வானூர்திகளும் B770 என்னும் வானில் எரிபொருள் மீள் நிரப்பு விமானங்களும் பங்கு பற்றி Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி செய்திருந்தன. ஒரு சில மாதங்களுக்குள் பாரிய போர்ப்பயிற்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கப் படைத்துறையினர் மார்தட்டிக் கொள்கின்றனர். இஸ்ரேலின் ஆறு கடற்படைக் கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.

ஈரானுக்கு Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி மூலம் ஒரு மிரட்டல் விடுத்த பின்னர்தான் ஈரானின் Isfahan நகரில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் செய்யப்பட்டதா என எண்னத் தோன்றுகின்றது.

ஈரான் சொல்வது வேறு

Isfahan நகர் மீது செய்யப்பட்ட தாக்குதலை ஈரான் ஒரு வேலைநிலையம் (Workshop) மீது சில ஆளிலிகள் செய்த தாக்குதல் என்றும் அதில் ஈடுபட்ட ஒரு ஆளிலியை தமது வான்பாதுகாப்பு முறைமை அழித்து விட்டதாகவும் மற்ற இரண்டு தமது பாதுகாப்புப் பொறிக்கு சிக்குண்டு வெடித்துச் சிதறியாதகவும் அறிவித்துள்ளது. வேலைநிலையத்தின் (Workshop) கூரை மீது சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் சொல்கின்றது.

சுலைமானியின் கொலைக்கு பழிவாங்க முடியாத ஈரான்

ஈரானைப் பொறுத்தவரை ஒரு பெரும் படைத்துறைச் சொத்தாக கருதப்பட்ட அதன் படைத்தளபதியை காசெம் சுலேமானியை அமெரிக்கா 2020 ஜனவரியில் குண்டு வீசிக் கொன்றிருந்தது. இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையான குட்ஸ் படையின் கட்டளைத்தளபதி சுலேமானீ 600 அமெரிக்கர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்; லெபனானில் ஹிஸ்புல்லாவை வளர்த்தவர். ஈரானால் Isfahan நகர் தாக்குதலுக்கு பழிவாங்க முடியுமா?

Friday 27 January 2023

புட்டீன் மீண்டும் விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல்



ஐரோப்பாவில் போர் நடந்தால் அமெரிக்கா கல்லாக் கட்டும் என்பது வரலாற்று உண்மை. மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு வலிமை மிக்க போர்த்தாங்கிகளை வழங்கியுள்ளன. ஆனால் அவை சிறப்பாக செயற்படுவதற்கு சிறந்த வான் படை ஆதரவு அவசியம். அதனால் அமெரிக்காவின் உயர்தொழில்நுட்பப் படைக்கல உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டீன் தனது F-16 போர்விமானங்களை எந்த நாடாவது வழங்க முன் வந்தால் அந்த நாட்டுக்கு தாம் விநியோகிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

உக்ரேனின் அடுத்த முயற்ச்சி F-16ஐப் பெற்றுக் கொள்வது. 

உக்ரேன் போர் விமானிகளுக்கு பயிற்ச்சி வழங்குவதை அமெரிக்க நாடாளுமன்றம் 2022 ஓகஸ்ட்டில் அனுமதி வழங்கியதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது. புட்டீனின் சினத்தை தவிர்க்கும் முகமாகவும் உக்ரேன் போர் உக்கிரமடைவதை விரும்பாமையாலும் உக்ரேனுக்கு F-16 போர்விமானங்களை வழங்குவதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் நிறுத்தி வைத்தார். F-16 போர்விமானங்கள் இல்லாமலே உக்ரேனியர்களால் போரில் தாக்குப் பிடிக்க முடியும் என அமெரிக்கா இதுவரை கருதியிருந்தது. இரசியா தனது படைக்கு மேலும் இரண்டு இலட்சம் பேரை சேர்க்கவிருப்பதால் உக்ரேனியர்கள் பெருமளவு உயிரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் உக்ரேன் இப்போது F-16 போர்விமானங்களை பெற்றுக் கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளது. உலகில் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு அதிக போர்முனைகளைக் கண்ட போர் விமான்ங்களில் F-16 போர்விமானங்கள் முன்னிலை வகிக்கின்றது. நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 எதிரியின் வான், தரை, கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வல்லது.

இரசியாவின் எச்சரிக்கை

இரசிய நாடாளுமன்றமான டூவாவின் தலைவர் உக்ரேனுக்கு அமைதியான இரசிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய வலிமை மிக்க படைக்கலன்களை வழங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தமக்கான அழிவை தாமே தேடிக் கொளின்றன. அதிக வலிமை மிக்க படைக்கலன்களால் அந்த நாடுகள் தாக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தன்னைத் தானே கூராக்கும் யூரேனியம்

யூரெனியம் உலகிலேயே மிகவும் அடர்த்தி கூடிய உலோகமாகும். அதனால் அது துப்பாக்கிச் சன்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. யூரேனியத்தால் உருவாக்கப்பட்ட சன்னம் இன்னும் ஒரு உலோகத்தின் மீது மோதும் போது அது தன்னை மேலும் கூர்மையாக்கிக் கொண்டு மோதப்படும் உலோகத்தை இலகுவாகப் பிளக்கும். இதை self-sharpening என்பர். ஒரு தாங்கியை அல்லது காப்பரணை (Bunker) யூரேனியத்தால் செய்யப்பட்ட குண்டு தாக்கும் போது அது தன்னைக் கூர்மையாக்கிக் கொள்வதுடன் கதிர் வீச்சையும் உமிழ்கின்றது. அணுக்குண்டு உற்பத்திக்கு யூரேனியத்தைப் பதப்படுத்தும் போது அருகிய யூரேனியமும் (Depleted Uranium) பெறப்படுகின்றது. அருகிய யூரேனியம் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்திலும் பார்க்க கதிர்வீச்சு மிகவும் குறைந்தது. அதனால் அமெரிக்கா அருகிய யூரேனியமும் (Depleted Uranium) பாவித்து துப்பாக்கி குண்டுகள் மற்றும் தாங்கிகளில் இருந்து வீசப்படும் குண்டுகளை உருவாக்கியது. அவை Uranium core armour-piercing” cells என அழைக்கப்படும். 

Uranium core armour-piercing” cells

போர்த்தாங்கிகளில் “Uranium core armour-piercing” cells பாவிக்கப்படுவதுண்டு. அவை எதிரிகளில் வலிமை மிக்க காப்பரண்களையும் தாங்கிகளையும் அழிக்க வல்லன. இவற்றை “Silver Bullet” என்றும் “Dirty Bomb” என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவற்றில் பாவிக்கப்படும் யூரேனியம் அணுக்குண்டுகளில் பாவிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தைப் போல் பேரழிவு விளைவிக்கக் கூடிய கதிர் வீச்சைக் கொண்டவை அல்ல. 1991இல் வளைகுடாப் போரிலும், 1992இல் பொஸ்னியா போரிலும் அமெரிக்கா அமெரிக்கா Uranium core armour-piercing” cellsகளைப் பாவித்தது.. வளைகுடாப் போரிலும் பொஸ்னியாப் போரிலும் Uranium core armour-piercing” cells பாவிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டனர். இதனால் அமெரிக்கா அந்தக் குண்டுகளின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக 2015இல் சொன்னது. ஆனால் அதே ஆண்டில் சிரியாவில் அமெரிக்கா அக்குண்டுகளைப் பாவித்தது. எதிரியின் மிகக் கடினமான கவசங்களை அழிப்பதறிகு இக்குண்டுகள் பொருத்தமானவையாக இருப்பதால் அக்குண்டுகளை அமெரிக்கா இன்னும் இரகசியமாக வைத்திருக்கலாம்.

உக்ரேனுக்கு வழக்கப்படும் தாங்கிகளில் யூரேனியம் குண்டுகள்

யூரேனியம் குண்டுகளை ஜேர்மனியின் லெப்பேர்ட்-2 போர்த்தாங்கிகள், அமெரிக்காவின் Bradly போர்வண்டிகள் அமெரிக்காவின் Marder போர்வண்டிகள் ஆகியவை Uranium core armour-piercing” cellsகளை வீசக் கூடியவை. இரசியப் படையினர் மீதோ அல்லது படை நிலகள் மீதோ வீசப்பட்டால் அது அணுக்குண்டுப் போருக்கு ஒப்பானதாகும் என இரசியா எச்சரித்துள்ளது. இதனால் உக்ரேனில் அருகிய யூரேனியத்தால் உருவாக்கப்பட்ட Uranium core armour-piercing” cellsகளை பாவிக்கப்பட்டால் இரசியா அணுக்குண்டுகளை பாவிக்கத் தயங்காது எனப் பொருள்படுகின்றது. ஐரோப்பவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பிடம் (Organisation for Security and Cooperation in Europe) இரசியா இதை தெளிவு படக் கூறியுள்ளது.

Wednesday 25 January 2023

போர்த்தாங்கிகளின் மோது களமாக மாறும் உக்ரேன்

2023இன் குளிர்கால முடிவிற்கு முன்னர் உக்ரேன் மீது பெரும் தாக்குதல் நடத்தக் கூடிய வகையில் இரசியா ஒரு மீள் ஒருங்கிணைப்பைச் செய்து கொண்டிருக்கின்றது என உக்ரேனிய உளவுத்துறை 2023 ஜனவரி 20-ம் திகதி கருத்து வெளியிட்டுள்ளது. இரசியா தன்னுடன் இணைத்துள்ள உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள Donetsk, Luhansk ஆகிய பகுதிகளில் இருந்து உக்ரேனியப் படையினரை முற்றாக வெளியேற்றி இரசிய ஆதிக்கத்தை நிலை நிறுத்த இரசியா தீவிர முயற்ச்சி எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

புட்டீனின் இலக்கு

2022 பெப்ரவரியில் உக்ரேனினின் தலைநகரைக் கைப்பற்றி அங்கு ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட புட்டீனின் படை நடவடிக்கை தன் இலக்கை அடைய முடியாமல் போனதால் திசை மாறி நிற்கின்றது. 18-நூற்றாண்டில் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள Donesk மற்றும் Luhansk மாகாணங்களில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக உக்ரேனின் கிழக்குப் பகுதியில் குடியேறிய இரசியர்கள் அங்கு வாழ்ந்த உக்ரேனியர்களை விரட்டி தாம் பெரும்பான்மையினர் ஆகினர். டொன்பாஸ் பிராந்தியம் என அழைக்கப்படும் அந்த இரண்டு மாகாணங்களையும் தற்போது இரசியா தன்னுடன் இணைத்துள்ளது. ஆனால் அவ்விரு மாகாணங்களையும் இரசியாவால் இன்னும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை. இரசிய அதிபர் புட்டீன் அவற்றை முழுமையாக கைப்பற்றுவதையும் உக்ரேனின் கடற்கரைகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதையும் தனது முதன்மை இலக்குகளாகக் கொண்டுள்ளார்.



டொன்பாஸ் வாழும் இரசியர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டா? என்பது பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://puviarasiyal.blogspot.com/2022/04/blog-post_14.html

உக்ரேனிற்கு பாரவகை வண்டிகள் தேவைப்படுகின்றது

2022 செப்டம்பரில்  உக்ரேனின் வட கிழக்கில் உள்ள கார்கீவ் பிரதேசத்திலும் ஒக்டோபரில் தெற்குப் பக்கமாக உள்ள கேர்சோன் மாகாணத்திலும் இரசியப் படைகளை உக்ரேனியர்கள் பின்வாங்கச் செய்துள்ளர். ஆனால் 2023 ஜனவரியில் உக்ரேனியப் படையினரை Soledar நகரில் இருந்து இரசியர்கள் பின்வாங்கச் செய்ததுடன் Bukhmut நகரத்தை கைப்பற்ற முயல்கின்றது. பாறை உப்புக்கள் நிறைந்த Soledar, Bukhmut ஆகிய நகரங்களில் பல சுரங்கங்கள் உள்ளன. அச்சுரங்கங்களில் படைக்கலன்களையும் சுடுகலன்களையும் மறைத்து வைத்திருந்து போர் செய்து டொன்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என புட்டீனின் படையினர் நம்புகின்றனர். கடந்த சில மாதங்களாக உக்ரேனியப் படையினர் அமெரிக்கா கொடுத்த ஹைமார்ஸ் போன்ற துல்லியத்தாக்குதல் செய்யக் கூடிய பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் மூலம் தாக்கி இரசியாவின் படைகலன் களஞ்சியங்களை அழித்து வருகின்றது. இதனால் Soledar நகரை கைப்பற்றும் போரில் இருதரப்பினரும் பலத்த உயிரிழப்பைச் சந்தித்தனர். மேலதிக ஆளிணி இழப்பைத் தவிர்ப்பதற்கு தாம் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரேனியப் படையினர் தெரிவித்துள்ளனர். 2022 டிசம்பரில் உக்ரேனியப் படைத்தளபதி தமக்கு முன்னூறு முதன்மைப் போர்த்தாங்கிகள் (Main Battle Tanks) ஐநூறு புதியவகை ஆட்டிலெறிகள், அறுநூறு தாக்குதற் கவச வண்டிகள் மேலதிகமாகத் தேவைப் படுவதாக அறிவித்திருந்தார்.

பொறியில் மாட்டிய புட்டீன்

இரசியப் பொருளாதாரமும் படைத்துறைத் தொழில்நுட்பமும் பாரிய வளர்ச்சியைக் காண்பதைச் சகிக்க முடியாத அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு உக்ரேனில் ஒரு பொறி வைக்க முடிவு செய்து உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைப்பது போலப் பாசாங்கு செய்தன. அந்த இரண்டு அமைப்பிலும் இணையும் ஆட்சி முறைமையோ பொருளாதார சூழலோ உக்ரேனில் இல்லை. இதனால் 2014இல் உக்ரேன் மீது இரசிய அதிபர் விளடிமீர் ஓர் ஆக்கிரமிப்பு போரை உக்ரேன் மீது தொடுத்து கிறிமியாவைத் இரசியாவுடன இணைத்தார். அதன் பின்னர் உக்ரேனியப் படையினருக்கு கடுமையான பயிற்ச்சியை நேட்டோ நாடுகள் வழங்கியதுடன் உக்ரேன் நேட்டோவில் இணையும் விண்ணப்பத்தை முன்வைத்தது. அதைத் தடுப்பதற்காக உக்ரேன் மீது தனது இரண்டாவது படை நடவடிக்கையை 2022 பெப்ரவரியில் ஆரம்பித்தார். இப்போது இரசியா ஒரு நீண்ட காலப் போரை இரசியா எதிர் கொள்ள வேண்டிய சூழலை நேட்டோ நாடுகள் உருவாக்கியுள்ளன. இரசியாவிற்கு பெரும் ஆளணி இழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும் முகமாக உக்ரேனுக்கு தாம் வழங்கும் படைக்கலன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் தொலைதூரத் தாக்குதல் செய்யக்கூடிய படைக்கலன்களையும் வழங்குகின்றன.

குளிர் முடிய முன்னர் கொதிக்கலாம்

2023 குளிர்கால இறுதியில் அதாவது பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முற்பகுதியில் இரசியா மேலும் பல படையினரைக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியா ஏற்கனவே மூன்று இலட்சம் பொதுமக்களைப் படையில் சேர்த்துள்ளது, அதை ஐந்து இலட்சமாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. 2022 செப்டம்பரில் கார்க்கீவிலும் ஒக்டோபரில் கேர்சனிலும் வியக்கத் தக்க வெற்றியை கண்ட உக்ரேனியப் படையினர் 2023 ஜனவரியில் Soledar நகரில் நடந்த போரில் இரசியப் படைகள் பெரும் உயிரிழப்புக்களுடன் முன்னேறின. அதற்கு காரணம் உக்ரேனிடம் போதிய வலிமை மிக்க போர்த்தாங்கிகள் இல்லாமையே. அதனால் ஜேர்மனி தனது லெப்பார்ட்-2 போர்த்தாங்கிகளையும் அமெரிக்கா தனது எம்-1 ஏப்ராம் (M-1 Abram) போர்த்தாங்கிகளையும் வழங்கும் முடிவை 2023 ஜனவரி 25-ம் திகதி எடுத்துள்ளன. போலாந்தும் பின்லாந்தும் தம்மிடமுள்ள ஜேர்மன் உற்பத்தி லெப்பார்ட்-2 போர்த்தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்கு முன்வந்து அதை தமக்கு விற்பனை செய்த ஜேர்மனியின் அனுமதிக்கு காந்திருந்தன. ஏற்கனவே பிரித்தானிய தனது சலெஞ்சர்-2 (Challenger-2) போர்த்தாங்கிகள் 12ஐ உக்ரெனுக்கு அனுப்பியுள்ளது. லெப்பார்ட்-2, சலெஞ்சர்-2, எம்-1 ஏப்ராம் ஆகியவை முதன்மை போர்த் தாங்கிகள் (Main Battle Tanks) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குளிர் விட்டுப்போன மேற்கு நாடுகள்

புட்டீன் அணுக்குண்டுகளைப் பாவிக்கும் வாய்ப்புக் குறைந்துள்ளது. சீனாவினதும் இந்தியாவினதும் எதிர்ப்பு. மேற்கு நாடுகளின் திரைமறைவு மிரட்டல் ஆகியவற்றால் புட்டீன் அணுக்குண்டைப் பாவிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாம் மேலதிக படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கினால் போர் மேலும் தீவிரமடையும் கொடூரமான தாக்குதல் மூலம் இரசியா போலில் வெல்லும் என தயக்கம் காட்டிய ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்போது உக்ரேன் இரசியாவை தோற்கடிக்க வாய்ப்பு உண்டு என உணர்கின்றன. இந்த நிலையில் இதுவரை காலமும் உக்ரேனுக்கு தற்பாதுகாப்பு படைக்கலன்களை மட்டும் வழங்கி வந்த நாடுகள் இனி கேந்திரோபாய படைக்கலன்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன் மூலம் ஒரு நீண்ட காலப் போரில் புட்டீனின் படைகளை மாட்ட வைக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முயல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ஐநூறு யூரோ உதவியை உக்க்ரேனுக்கு செய்வதாக முடிவு செய்துள்ளது. உக்ரேன் போர் தீவிரமடைவதை பல நாடுகள் விரும்பாதமைக்கு ஒரு காரணம் எரிபொருள் விலையாகும். தற்போது பெரும் அச்சத்தை விளைவிக்க முடியாத அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



லெப்பார்ட்-2 தாங்கிகள்.

அதிக அளவில் உடனடியாக விநியோகிக்கக் கூடிய நிலையில் லெப்பார்ட்-2 தாங்கிகள் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன.

லெப்பார்ட்-2 தாங்கிகள் உக்ரேனின் நில அமைப்பிற்கு பொருத்தமானவை.

லெப்பார்ட்-2 தாங்கிகளைப் பராமரிப்பதும் அவற்றிற்கான விநியோகங்களும் இலகுவானவை.

லெப்பார்ட்-2 தாங்கிகள் சிறந்த தற்பாதுகாப்பைக் கொண்டவை.

கடினமான நிலப்பரப்பிலும் சிறப்பாகச் செயற்படக் கூடியவை.

லெப்பார்ட்-2 தாங்கிகள் அசையும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை.

லெப்பார்ட்-2 இரவிலும் செயற்படக் கூடியவை என்பது மட்டுமல்ல லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் நிலைகளை அறியக் கூடியவை.

கொசோவா, சிரியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய போர் முனைகளில் லெப்பார்ட்-2 தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

லெப்பார்ட்-2 இரசியாவின் முதன்மை போர்த்தாங்கிகளிலும் பார்க்க சிறந்தவை.

ஐரோப்பாவில் 13 நாடுகளிடம் லெப்பார்ட்-2 தாங்கிகள் உள்ளன.

போலாந்து மட்டும் உடனடியாக நூறு லெப்பார்ட்-2 தாங்கிகளை அனுப்பத் தயாராக உள்ளது. அது போலவே பின்லாந்தும் பல லெப்பார்ட்-2 தாங்கிகளை அனுப்பத் தயாராக உள்ளது.

அமெரிக்காவின் எம்-1 ஏ-2 ஏப்ராம் (M-1 A-2 Abram) தாங்கிகள்

ஜேர்மனி முதற்கட்டமாக 14 லெப்பார்ட்-2 தாங்கிகளை அனுப்பும் முடிவை எடுத்ததை தொடர்ந்து அமெரிக்கா எம்-1 ஏப்ராம் தாங்கிகள் 31ஐ அனுப்ப முன் வந்துள்ளது. முன்பு உக்ரேன் போர் முனைக்கு தமது தாங்கிகள் பொருத்தமானவை எனச் சொல்லி வந்த அமெரிக்கா ஜேர்மனி தனது தாங்கிகளை அனுப்புவதாக அறிவித்தவுடன் தானும் அனுப்புவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்-1 ஏப்ராம் தாங்கிகள் விமானங்களைப் போல் ஜெட் எந்திரங்களால் இயக்கப்படுபவை. இவை யூரேனியத்தால் செய்யப்பட்ட வலைகளால் பாதுகாக்கப்படுபவை.

வலிமை காட்ட முடியாத இரசிய வான் படை

கடந்த ஐம்பது ஆண்டுகளில் போர் முனையில் விமானங்களே அதிக பங்காற்றி வந்தன. இரசியாவிடம் சிறந்தப் போர் விமானங்கள் இருந்தும் சிறந்த விமானிகள் இருந்தும் உக்ரேன் போரில் இரசிய வான் படையால் சிறப்பாகச் செயற்பட முடியவில்லை. இரசியாவிடம் தொடர்ச்சியான வான் தாக்குதலுக்கு ஏற்றவகையில் விமானப் பராமரிப்பு முறைமை இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அதனால் இரசியா பெருமளவு காலாட்படையை போர்க்களத்தில் இறக்குகின்றது. அவற்றை சமாளிக்க உக்ரேனுக்கு போர்த்தாங்கிகளும் போர் வண்டிகளும் தேவைப்படுகின்றன. கனடா 600 படையினர் காவு வண்டிகளையும் சுவீடன் ஆட்டிலெறி முறைமைகளையும் அமெரிக்கா மேலதிகமாக நூற்று ஒன்பது Bradleys போர் வண்டிகளையும் உக்ரேனுக்கு வழங்க முன்வந்துள்ளன. இவற்றுடன் ஜேர்மனி நாற்பது Marders போர் வண்டிகளையும் அனுப்பவுள்ளது. இரசியா அதிகம் பாவிக்கும் போர்த்தாங்கிகள் T-90 தாங்கிகளாகும். அவை உக்ரேன் தலைநகரை அண்மித்து விட்டு திரும்பிச் சென்றவையாகும். துருக்கியில் ஆளிலிகளால் (Drones) பெரிதும் பாதிப்பு உள்ளானவை.

இரசியா உக்ரேனின் தாங்கிகளால் விரட்டப்படுமா?

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...