Followers

Thursday 23 February 2023

ஓராண்டுப் போரின் பின்னரும் தளராத உக்ரேனும் வளராத புட்டீனும்



இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார்செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார்ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்வேதியியல் குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட சிரியாவைப் பாதுகாத்தார்எகிப்தை மீண்டும் தன் பக்கம் இழுத்தார்; குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் கோலகலமாக அரங்கேற்றினார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைய முயன்ற உக்ரேனைத் தடுக்கும் முயற்ச்சியில் அவர் ஆப்பிழுத்த குரங்கு போல் ஆனாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



புவிசார் அரசியல் போட்டி

2004-ம் ஆண்டில் இருந்து நேட்டோ நாடுகளும் இரசியாவும் உக்ரேனில் யார் ஆட்சியில் இருப்பது என்பது தொடர்பாக திரைமறைவு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இரசிய ஆதரவு விக்டர் யனுக்கோவிச்சிற்கு எதிராக உக்ரேனிய மக்களை கிளர்ச்சி செய்யப்பண்ணி அவரை உக்ரேனை விட்டு விரட்டுவதில் நேட்டோ நாடுகளின் சதி இரசியச் சதியை வெற்றி கொண்டது. இரசியா தலைமையிலான யூரே ஏசியன் பொருளாதார ஒன்றியத்தில் உக்ரேனும் ஓர் உறுப்பு நாடாக இருப்பது அவசியம் என்பதாலும் இரசியாவின் கடற்படைக்கு கிறிமியா அவசியம் என்றபடியாலும் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் உக்ரேன் மீது 2014 போர் தொடுத்து கிறிமியாவைக் கைப்பற்றியதுடன் உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கினார். இதன் பின்னரும் உக்ரேன் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் முயற்ச்சி தொடர்ந்த படியால் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரண்டாம் படையெடுப்பை நடத்தினார். உக்ரேன் மீதான புட்டீனின் 2022 படையெடுப்பு 2014 படையெடுப்பைப் போல் இலகுவானதாக அமையவில்லை. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரேனியப் படையினருக்கு 2014இன் பின்னர் தீவிர பயிற்ச்சி வழங்கியிருந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களையும் வழங்கியிருந்தனர்.  



பிழையாகிப் போன திட்டங்கள்

உக்ரேன் மீது சிறப்புப் படை நடவடிக்கை என்னும் பெயரில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் செய்யும் ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும் போது புட்டீன் போட்ட பல திட்டங்கள் பிழைத்துப் போயின என்று மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து கொண்டிருந்தாலும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக இரசியாவால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புட்டீனின் நம்பிக்கை வீண் போகவில்லை. 2022 பெப்ரவரி ஆரம்பமான உக்ரேன் போரில் ஒரு இலட்சம் படையினரைப் பலிகொடுத்தும் தனது போர்த்தாங்கிகளில் அரைவாசியை இழந்தும் இரசியவால் காத்திரமான வெற்றி எதையும் பெற முடியவில்லை. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரை இழந்தும் மின்சார உற்பத்தியில் 40% சிதைந்தும் பல்லாயிரக் கணக்கான வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு எதிராக உறுதியாகப் போராடிக் கொண்டிருப்பதால் எத்தரப்பு போரில் வெல்லும் எப்போது போர் முடியும் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது.



புட்டீன் எண்ணிய எண்ணமெங்கே?

ஆகக் கூடியது இரு வாரங்களில் அல்லது ஆகக் குறைந்தது மூன்று நாட்களில் முடிக்க புட்டீன் திட்டமிட்ட உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கை ஓராண்டாகியும் அவரது இலக்கு எட்டப்படவில்லை. இரசியாவின்று கடுமையான இழப்பை ஏற்படுத்துவதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. 142,860 இரசியப் படையினரைக் கொன்றதாகவும் மூன்று இலட்சம் இரசியப்படையினரைக் காயப்படுத்தியதாகவும் உக்ரேனியர்கள் சொல்கின்றனர். மேலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு ஏற்படுத்திய இழப்புக்கள்:

போர் விமானங்கள் 298

உலங்கு வானூர்திகள் 287

போர்த்தாங்கிகள் 3310

கவச வண்டிகள் 6545

சேணேவிகள் (Artilleries) 2327

பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் 469

படகுகள் 18

எரிபொருள் தாங்கிகளும் மற்ற ஊர்திகளும் 5196

விமான எதிர்ப்பு குண்டுச் செலுத்திகள் 243

ஆளிலி விமானங்கள் 2016

வழிகாட்டல் ஏவுகணைகள் 873

 


ஒராண்டு இறுதியில் உக்ரேன் சென்ற ஜோ பைடன்

20-02-2023 அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேனுக்கு ஒரு பயணத்தை செய்திருந்தார். உக்ரேனிய மக்களையும், படையினரையும் உற்சாகப் படுத்தும் நோக்கமாக அவர் தனது பயணத்தை மேற் கொண்டிருக்கலாம். மேலும் 500மில்லியன் டொலர் உதவி உக்ரேனுக்கு கிடைக்கவிருக்கின்றது. ஹிமார்ஸ் ஏவுகணைச் செலுத்திகள், ஜவலின் ஏவுகணைகள், சுடுகலன்கள் என பல தரப்பட்டவற்றை உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் உக்ரேன் தற்போது வற்புறுத்தும் F-16 போர் விமானங்கள் வழக்கப்படவில்லை. ஏற்கனவே 700 போர்த்தாங்கிகள் கவச வண்டிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட சேணேவிகள் (Artilleries), ஐம்பதிற்கு மேற்பட்ட மேம்பட்ட ஏவூர்தி செலுத்திகள் (Rocket Launchers) போன்றவற்றை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியதாக உக்ரேனில் வைத்து அமெரிக்கத் தலைவர் ஜோ பைடன் சொன்னார்.



உக்ரேனை இரசியா கைப்பற்றினால் போலந்து, ஹங்கேரி, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல். அத்துடன்  உலகின் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் இரசியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். இதனால் இந்த நாடுகள் உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்குகின்றன. 

புட்டீனின் சரியான கணிப்பீடுகள்

1. தன்னால் பொருளாதாரத் தடைக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியும்.

2. இரசியர்கள் தனக்கு ஆதரவாக நிற்பார்கள் என புட்டீன எதிர்பார்த்தது நடக்கின்றது. இரசிய மக்களின் 80% ஆதரவு அவருக்கு உள்ளது. இது எந்த ஒரு முன்னணி நாட்டுத் தலைவருக்கும் இல்லாத ஆதரவு.



உண்மை அறிய முடியாத போர்

உக்ரேன் போரின்போது:

1. பொய் தாராளமாகச் சொல்லப்படுகின்றது.

2. இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு.

3. உக்ரேனியப் பொருளாதாரம் 2022இல் 30% வீழ்ச்சி. 30% மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

4. உணவும் பொருள் விலையும் எரிபொருள் விலையும் உலகில் அதிகரித்துள்ளது.

5. இரசியாவில் இருந்து முளைசாலிகளும் முதலீட்டாளர்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

புட்டீன் வெற்றி பெற்றால்

1. மேற்கு நாடுகள் என அழைக்கப்படும் வட அமெரிக்க மற்றும் மேர்கு ஐரோப்பிய நாடுகளும் நிலை நிறுத்த முயலும் விதிசார் உலக ஒழுங்கிற்கு பேரிழப்பு

2. தேர்தல் மூலம் வெற்றி பெறும் தன்முனைப்பு ஆட்சியாளர்களுக்கு பெரும் ஊக்கம்.

3. சீனா தைவானைக் கைப்பற்ற ஊக்குவிக்கப்படலாம்

4. அணுக்குண்டுகளை வைத்துக் கொண்டு மிரட்ட நினைப்பவர்களுக்கு ஊக்கம்.

5. இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுக்க மாட்டாத நிலையில் உள்ளர்.

6. போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.

7. எத்தரப்பு வெற்றி பெறும் என்று சொல்ல முடியாத நிலை

8. எப்போது போர் முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாத நிலை.

9. இரசியாவிடம் படைக்கலன் தட்டுப்பாடு மோசமடைகின்றது. 2023 ஜூன் மாதம் போர் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதைத் தவிர்க்க சீனாவை புட்டீன் மனம் மாறச்செய்து சீனாவிடமிருந்து படைக்கலன்களை இரசியா வாங்க வேண்டும்.

10. நேட்டோ நாடுகளின் சுடுகலன் தட்டுப்பாடு உருவாகின்றது. அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கருங்கடல் தானிய முன்னெடுப்பு (Black Sea Grain Initiative)

உக்ரேன் போரில் இத்தனை விடாப்பிடிகளுக்கும் நடுவில் இரண்டு நாடுகளும் உணவு ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவில் இருந்தும் உக்ரேனில் இருந்தும் கருங்கடலூடாகச் செல்லும் உணவுக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் பங்களிப்புடன் செய்து கொண்ட பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொண்டன.  உக்ரேனும் இரசியாவும் துருக்கி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடாக பேச்சு வார்த்தைகள் பலவற்றை நடத்தி வருகின்றன.

உக்ரேனியர்களுக்கு கிடைத்த தன்னம்பிக்கை

பெலரஸ் நாட்டிலிருந்து உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி ஆட்சி மாற்றம் செய்யும் நோக்கத்துடன் முன்னேறிய இரசியப் படையினரை தாம் விரட்டியதாக உக்ரேனியர்கள் பெருமையடைவதுடன் போரில் தம்மால் இரசியாவைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அறுபது கிலோ மீட்டர் நீளமான போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் கொண்ட இரசியாவின் பெரும் படையணி 2022 மார்ச் மாதம் உக்ரேனின் வட பகுதியில் இருந்து பின்வாங்கியது. இரண்டு வாரங்களுக்குள் உக்ரேன் போரை முடித்து விடலாம் என நம்பிய இரசியர்களுக்கு ஏமாற்றத்தையும் பலநாட்கள் உக்ரேனியப் படையினர் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என எதிர்பார்த்த நேட்டோ நாடுகளுக்கு வியப்பையும் உக்ரேனியர்கள் கொடுத்தனர். உக்ரேனின் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் குடிசார்-கட்டுமானங்களில் மீதும் புட்டீன் நடத்தும் அட்டூழியத் தாக்குதல்கள் அவரை ஒரு போர்க்குற்றவாளியாக்கி விட்டது. 

சிஐஏயின் பத்து விழுக்காடு தள்ளுபடி

அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏயின் இயக்குனர் பில் பேர்ண்ஸ் இரசிய jஉளவுத்துறைப் பொறுப்பாள சேர்கி நருஸ்க்கின்னை 2022 நவம்பரில் இரசியத் தலைநகர் மொஸ்க்கோவில் சந்தித்து உக்ரேன் போரை முடிவிற்கு கொண்டுவர பேச்சி வார்த்தை நடத்தினார். அவரது பயணத்தில் உக்ரேன் தொடர்பாக தாங்கள் உக்ரேன் இல்லாமல் பேச முடியாது என்பதால் இரசியா அணுக்குண்டுகளைப் பாவித்ஹ்டால் அமெரிக்காவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசினோம் என்றார் சிஐஏ இயக்குனர் பில் பேர்ண்ஸ். ஆனால் அவர் இரசியா உக்ரேனின் நிலப்பரப்பில் 10%ஐ வைத்துக் கொண்டு போரை நிறுத்துவதை அமெரிக்கா விரும்புவதாக இரசியாவிடம் அவர் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இரசியா அதற்கு தயாராக இல்லை. முழு டொன்பாஸ் பிரதேசமும் கிறிமியா குடா நாடு இரசியாவிற்கு சொந்தமானது என்பதே இரசியாவின் இறுக்கமான நிலைப்பாடாக இருக்கின்றது.

மழுங்குமா புட்டீனின் எரிபொருள் படைக்கலன்?

இரசியப் பொருளாதாரம் புட்டீன் உக்ரேன் மீது தொடுத்த போரினால் பாதிப்படையாமல் உலக எரிபொருள் விலை அதிகரிப்பு கை கொடுத்தது. 2022இறுதி 2023ஆரம்ப மாதங்களில் உலக குளிர்கால நிலை எதிர்பார்த்ததிலும் பார்க்க மிதமானதாக இருந்தது. அத்துடன் மக்கள் வீட்டில் இருந்து பணிசெய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் 2023உலக எரிபொருள் விலை பெரிதளவில் அதிகரிக்காமல் நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் பணவீக்கம் சீர் செய்யப்பட வாய்ப்புண்டு. உக்ரேன் தோற்கடிக்கப் பட முடியாத நாடு என நேட்டோ நாடுகள் நம்புகின்றன. புட்டீனை அடக்க உக்ரேன் சிறந்த போர் முனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. 2022இல் இரசியாவின் பொருளாதாரம் 2.2%ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023இல் 0.3% மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனுக்கு தொடர்ச்சியான் உதவிகள்

நேட்டோ நாடுகள் தாம் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களின் தரத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் படைக்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரசியப் படையினரால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் புட்டீன் 2023 பெப்ரவரி 21-ம் திகதி ஆற்றிய உரையில் அவர் உக்ரேனைக் கைப்பற்றும் முயற்ச்சியில் பின்வாங்கப் போவதில்லை என மார் தட்டியுள்ளார். ஆனால் உக்ரேன் போர்க்கள சூழல் அவருக்கு உகந்ததாக இல்லை. ஆப்கானிஸ்த்தானில் பத்து ஆண்டுகளில் சோவியத் படையினருக்கு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க உக்ரேனில் ஓராண்டுப் போரில் இரசியாவிற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.  நேட்டோ நாடுகள் இனி உக்ரேனை தமது புதிய படைக்கலன்களை பாவிக்கும் தேர்வுக் களமாக மாற்றினால் இரசியா கிறிமியாவையும் இழக்கும் நிலை ஏற்படலாம். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் மஹ்மூட் நகரைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இரசியாவின் கூலிப்படைகள் அளவிற்கு அதிக உயிரழப்பை சந்தித்துள்ளன. இரசியக் கூலிப்படையின் தளபதி இரசியாவின் படைத்தளபதி மீது குற்றம் சுமத்துகின்றார். கூலைப்படைத் தளபதியின் கைகள் ஓங்குவது புட்டீனிற்கே உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம். கூலிப்படைத் தளபதி புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்ச்சிக்கலாம். புட்டீனைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் அவருக்கான ஆதரவைப் பேணுவார்கள் எனச் சொல்ல முடியாது. இரசிய மக்களின் பெரும்பகுதியினர் புட்டீனிற்கு ஆதரவாக தற்போது உள்ளனர். போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் அந்த ஆதரவுத் தளம் வலிமை இழக்கின்றது. சீன அதிபர் 2023 மார்ச் மாதம் இரசியாவிற்கு செய்யவிருக்கும் பயணத்தில் இரசியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்ய இணங்காவிடில் புட்டீனின் நிலை வலிமை மிகவும் குறையலாம்

அணுக்குண்டு மிரட்டல்

புட்டீன் அடிக்கடி விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல் உலகின் பெரும்பகுதி அழிவை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அதை அவர் கைவிடவில்லை. இந்திய சீன ஆட்சியாளர்கள் இந்த அணுக்குண்டு மிரட்டலையும் போர் நீடிப்பதையும் விரும்பவில்லை. உலக அரங்கில் புட்டீனுக்கு காத்திரமான ஆதரவுத் தளம் இல்லை. தனது எல்லையில் நேட்டோ நாடு இருக்கக் கூடாது என போரை புட்டீன ஆரம்பித்தார். ஆனால் இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட  சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணையவிருக்கின்றன. முன்னாள் உளவாளியான புட்டீன் அரசுறவியலாளராக வளரவில்லை.

Monday 6 February 2023

இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிபந்தனைகள்


இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு 54%ஆகவும் வரவு 3.2ரில்லியன் ரூபாவாகவும் செலவு 11.7ரில்லியன் ரூபாவாகவும் பொருளாதார வீழ்ச்சி 2022இல் 9.%ஆகவும் 2023இல்4.2%ஆகவும் இருக்கின்ற நெருக்கடியான வேளையில் இலங்கைக்கு கடன் கொடுக்க பன்னாட்டு நாணய நிதியம் மேலும் பல நெருக்கடிகளை கொடுக்க முயல்கின்றது. அந்த நெருக்கடியை மேலும் மோசமாக்க இலங்கைக்கு கடன் கொடுத்தோர் குழு (Bondholders Group) இலங்கை தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத்திற்கு ஒரு கடிதத்தை 2023 பெப்ரவரி 3-ம் திகதி அனுப்பியுள்ளது.

கடன் கொடுத்தோர் குழுவின் (Bondholders Group) வேண்டுகோள்கள்:

கடன் நெருக்கடியில் இருந்து மீள இலங்கை எடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரச முறிவாங்கியோர் அதாவது கடன்கொடுத்தோரின் குழு ஏற்றுக் கொண்டுள்ளது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று நிபந்தனைகளை தமது கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.

முதலாவது நிபந்தனை 2027-2032 வரை இலங்கையின் அரச நிதிக் கொள்கை தொடர்பானதாகவே உள்ளன. முதலாவது நிபந்தனைக்குள் மூன்று நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன:

1.   Annual Gross Financing need < 13% of the GDP. 2027-2032 இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் ஆண்டொன்றிற்கான நிதித் தேவையானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 13% ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். 

·         இந்த முதலாம் நிபந்தனையை நிறைவேற்ற இதற்கு இலங்கையின் வரவு அதிகரிக்கப்பட வேண்டும்; செலவு குறைக்கப் படவேண்டும்; மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.

2.   Foreign currency debt service = 4.5% of GDP. 2027முதல் 2032வரை அரசின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் இருந்து ஆண்டு தோறும் செலுத்தப்படும் கடன் சேவைத்தொகையானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 4.5% வரை உயர்த்தப்பட வேண்டும்.

·         இந்த இரண்டாம் நிபந்தனையை நிறைவேற்ற இலங்கையின் ஏற்றுமதியும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் இலங்கைக்கு அனுப்பும் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கையின் இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்.

 

3. Domestic Gross financing should be limited to 8.5% of GDP. 2027-2032 காலப்பகுதியில் உள்ளூர் மொத்த நிதித்தொகை, மொத்த உள்ளூர் உற்பத்தியின் 8.5% ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாம் நிபந்தனை: பநாநி(IMF)இன் நிகழ்ச்சித்திட்ட இலக்குகளுக்கான அடிப்படைத் தற்கோள்களை (assumptions) முடிவு செய்யும் பொறுப்பு பநாநி(IMF)இன் உடையது என்பதை ஏற்றுக் கொண்டு அவற்றின் போதுமை மற்றும் இயலுமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு எமக்கு உண்டு.

மூன்றாம் நிபந்தனை: இந்தியாவின் முக்கிய வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்கின்ற வேளை மற்ற இருதரப்பு கடன்களை இலங்கைக்கு கொடுத்தவர்களுக்கும் இலங்கை அதே விதிகளைப் பாவிக்க வேண்டும்.

விலகி நிற்கும் சீனா பாய்ந்து வந்த இந்தியா

மூன்றாம் நிபந்தனையில் மற்ற இருதரப்பு கடன் கொடுத்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சீச்னாவை என்பது சொல்லத் தேவையில்லை. சீனா தனது கடனில் தள்ளுபடி செய்வது தொடர்பாக எதையும் சொல்லவில்லை. கடன் மீளளிப்பை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைப்பதற்கு மட்டுமே சீனா உடன்பட்டுள்ளது. இலங்கையில் செய்யப்படும் இனக்கொலை முதல் கடன் வழங்குதல் வரை இலங்கைக்கு சேவகம் செய்ய இந்தியா பின்னிற்பதில்லை. இலங்கையின் கடன் தொடர்பாக இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா பன்னாட்டு நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியது கௌத்தம் அதானிக்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை வாங்கிக் கொடுப்பதற்காகவா என்ற கேள்வியும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. . இலங்கையின் மொத்தக் கடனில் சீனாவின் கடன் 10% ஆக இருக்கின்ற வேளையில் இலங்கையின் இருதரப்புக் கடனில் சீனவின் பங்கு 52%ஆக உள்ளது.

இலவசம் இனி இலவசமல்ல

இதுவரை காலமும் அரச சலுகைகளை அனுபவித்து வந்த இலங்கை மக்கள் இனி பல சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு தடவையும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தமக்கு வேண்டியவர்களை அரச பணிகளில் அமர்த்துவது இனிச் செய்யக் முடியாமற் போகலாம். அது மட்டுமல்ல ஆட்சிக்கு வரும் கட்சிகள் தமக்கு வேண்டியவர்களை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிப்பதற்கு என்றே புதிய தூதுவரகங்களை இனித் திறக்க முடியாமற் போகலாம். அரசு தனது செலவைக் குறைத்து வரியை உயர்த்தி மக்களுக்கு செய்யும் சேவைகளைக் குறைத்து சேமிக்கும் பணத்தில் தமது கடனை மீளளிப்பு செய்ய வேண்டும் என பன்னாட்டு நாணய நிதியமும் இலங்கைக்கு கடன் கொடுத்த முதலாளிகளும் சொல்கின்றார்கள்.

இலங்கைக்கு கடன் கொடுத்தோர் குழுவினர் (Bondholders Group) தமது கடனில் எத்தனை விழுக்காட்டை தள்ளுபடி செய்வார்கள் என்பது தொடர்பாக அவர்களது கடிதத்தில் இல்லை.

பநாநி(IMF)இன் நிகழ்ச்சித்திட்ட இலக்குகள்

முதலாம் இலக்கு: 2032இல் அரச மொத்தக் கடன் மொத்த தேசிய உற்பத்தியின் 95%ஆக குறைக்கப்பட வேண்டும்

இரண்டாம் இலக்கு: அரசின் நிதித்தேவை மொத்த தேசிய உற்பத்தியின் 13% ஆக 2027-2032 காலப்பகுதியில் இருக்க வேண்டும். அதே காலப்பகுதியில் வெளிநாட்டு நாணயக் கடன் மீளளிப்பு மொத்த தேசிய உற்பத்தியின் 4.5% ஆக இருக்க வேண்டும்.

மூன்றாம் இலக்கு: அரசின் வெளிநாட்டு நிதித்தேவை இடைவெளி மூடப்பட வேண்டும். அதாவது வெளிநாட்டுச் செல்வாணி வருவாயும் செலவும் ஈடாக இருக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் வாக்குறுதி கொடுத்து விட்டு பின் நிறைவேற்றாமல் போனது வரலாறு சொல்லும் உண்மை. 2027முதல் 2032வரை செய்வோம் என வாக்குறுதி கொடுக்க நரி என அவரது எதிரிகளால் அழைக்கப்படும் ரணில் விகிரமசிங்க பின்னிற்க மாட்டார். ஆனால் அமெரிக்கப்படைகள் நினைத்த நேரத்தில் இலங்கை வந்து இறங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் Status of Forces Agreement (SOFA) ஒப்பந்தத்தை செய்யாமல் இலங்கை தன் கடன் நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

Friday 3 February 2023

உக்ரேனுக்கு கிடைக்குமா 4-ம் தலைமுறைப் போர்விமானங்கள்?


உக்ரேன் போரில் தரையில் இருந்து வானிற்கு வீசப்படும் ஏவுகணைகள் (SAM – Surface to Air Missiles) அதிக அளவில் பாவிக்கப்படுவதுடன் இரு தரப்பினரிடமும் அவை அதிக அளவி கையிருப்பில் உள்ளன. இரு தரப்பினரும் தமது போர் விமான இழப்புக்களை தவிர்க்க முயல்வதால் விமானப் பாவனை குறைந்த ஒரு போர்க்களமாக உக்ரேன் இரசியப் போர்க்களம் பார்க்கப்படுகின்றது. இரசியாவிடம் உயர்ந்த விமானங்களும் சிறந்த விமானைகளும் இருந்த போதிலும் இரசியாவிடம் உரிய விமானப் பராமரிப்பு முறைமை இல்லை. இதனால் இரசியாவால் அதிக அளவு போர் விமான ங்களை உக்ரேனுக்கு எதிராக இரசியாவால் பாவிக்க முடியவில்லை.

இரசிய வானூர்திகளுக்கு சவாலான பிரித்தானிய Starstreak ஏவுகணைகள் பற்றி இந்த இணைப்பில் அறியலாம்:

https://puviarasiyal.blogspot.com/2022/04/starstreak.html

உயிரிழப்பு RISK இரசியாவிற்கு RUSK சாப்பிடுறமாதிரி

 உக்ரேனியப் படையினரைத் திணறடிக்கக் கூடிய வகையில் அதிக அளவு தரைப்படையினரை புட்டீன் உக்ரேனுக்கு எதிராக களமிறக்கிக் கொண்டிருக்கின்றார். 1853-ம் ஆண்டில் இருந்து 1856வரை நடந்த கிறிமியாப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் 1950முதல் 1953 வரை நடந்த கொடியாப் போரிலும் இரசியா அதிக அளவு உயிரிழப்பைச் சந்தித்தது. உயிரிழப்பை பெரிதாக பொருட்படுத்தாமல் அதிக அளவு படையினரை களத்தில் இரசியா இறக்கக் கூடியது. 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பமான உக்ரேன் போரில் 2022 டிசம்பர் வரை கடுமையாகக் காயப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இரசியப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானது எனச் சொல்லப்படுகின்றது. இரசியக் குடியரசுத் தலைவர் புட்டீன் மூன்று இலட்சம் உயிரிழப்பு வரை செல்லத் தயாராக இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவை புதிய தரமான போர்த்தாங்கிகள்

இரசியா பெருமளவு தரைப்படையினரை களத்தில் இறக்கும் போது உக்ரேன் படையினரின் உயிரிழப்பை மிக குறைக்கக் கூடிய வகையிலும் இரசியப் படையினரின் உயிரிழப்பை மிக அதிகரிக்கக் கூடிய வகையிலும் உக்ரேனியர்கள் போர் புரிந்தால் தான் அவர்கள் மேலும் நிலப்பரப்புக்களை இழக்காமல் தடுக்க முடியும் அத்துடன் இழந்த நிலப்பரப்பை மீளக் கைப்பற்றவும் முடியும். போலாந்து கொடுத்த பழைய சோவியத் ஒன்றிய காலத்து T-75 போர்த்தாங்கிகளை சிறப்பாக திருத்தி அவற்றைப் பாவித்து 2022 செப்டம்பரில் உக்ரேனியர்கள் வியக்கத்தக்க வகையில் துரிதமாக உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கீவ் பிரதேசத்தை மீளக் கைப்பற்றினர். அதன் பின்னர் தம்மிடம் போதிய போர்த்தாங்கிகள் அதிலும் புதிய தரமான போர்த்தாங்கிகள் இருந்தால் இரசியப் படையினரைத் தோற்கடிக்க முடியும் என உக்ரேனியப் படையினர் நம்புகின்றனர். அதற்கு ஆதரவாக நேட்டோ நாட்டுப் படைத்துறை நிபுணர்களும் கருத்துக்களை வெளியிட்டனர். அதன் விளைவாக ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது லெப்பார்ட்-2 சலெஞ்சர்-2, M1 Abrams ஆகிய போர்த்தாங்கிகளை அனுப்பினர். அவை தரத்தில் உயர்ந்தவையாக இருந்தாலும் எண்ணிக்கையில் போதுமானவையாக இல்லை என்பதுடன் அவற்றை அனுப்பி பயிற்ச்சி பெற மூன்று மாதங்கள் எடுக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

உக்ரேனியர்களின் அடுத்த வேண்டுகோள்

புதிய தர போர்த்தாங்கிகளைப் பெற்றுக் கொண்ட உக்ரேனியப் படையினர் மகிழ்ச்சியில் மிதக்கையில் உக்ரேனிய வான் படையினர் தமக்கு ஆகக் குறைந்தது நான்காம் தலைமுறைப் போர்விமானங்களாவது வேண்டும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் F-16 போர் விமானங்கள் வேண்டும் என்கின்றனர். அமெரிக்கப் படைத்துறையினர் அதை ஆதரிக்கின்றனர். ஆனால் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் F-16 உக்ரேனுக்கு வழங்கப்பட மாட்டாது என்றார். உக்ரேன் போரில் அமெரிக்கா முதலில் இல்லை எனச் சொல்லப்பட்ட படைக் கலன்கள் எல்லாம் பின்னர் வழாங்கப்படுவது வழமையாக இருக்கின்றது. ஏற்கனவே அமெரிக்கா உக்ரேனியர்களுக்கு F-16 ஓட்டுவதற்கான பயிற்ச்சிகளை வழங்க ஆரம்பித்து விட்டனர் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் தலைமுறைப் போர்விமானங்களாவன: அமெரிக்காவின் F-15, F-16 பிரான்ஸின் ரஃபேல், ஐரோப்பாவின் யூரோ ஃபட்டர், இந்தியாவின் தேஜஸ், சீனாவின் J-20 ஆகியவை சிறந்த நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் என்றாலும் F-16 நீண்டகாலமாக பாவனையில் உள்ளதும் பல போர் முனைகளைக் கண்ட போர்விமானமாகும். அமெரிக்கா தற்போது ஐந்தாம் தலைமுறை F-35, B-21 போர்விமானங்களை அதிகரித்து F-16ஐ குறைக்கவிருக்கின்றது.

F-16 இரசியாவிற்கு எதிராக சாதிக்குமா?

2015 நவம்பரில் துருக்கியின் F-16 விமானம் இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானத்தை சிரிய துருக்கி எல்லையில் வைத்து சுட்டுவீழ்த்தியது. துருக்கி சுட்டு வீழ்த்திய இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானங்கள் 23மில்லி மீட்டர் துப்பாக்கிகள் மூன்று பொருத்தப்பட்டவை. அத்துடன் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழிகாட்டி ஏவுகணைகளையும் கொண்டவை. தேவை ஏற்படின் தொலைக்காட்சி வழிகாட்டி ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லக் கூடியவை. அதில் சிறந்த ரடார் வசதிகளும் உண்டு. இப்படிப் பட்ட இரசிய விமானத்தை அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து இரு விமானிகள் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்க முற்பட்ட வேளையில் துருக்கிக்கு ஆதரவான சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களில் ஒருவரை ஜெனிவா உடன்படிக்கைக்கு மாறாகச் சுட்டுக் கொன்றனர். இரசியாவின் Su-35, SU-57 ஆகிய போர் ளுக்கு எதிராக விமானங்கஅமெரிக்காவின் F-16 விமானங்கள் சிறப்பாக செயற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் Su-35, SU-57 இரசியாவிடம் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. SU-57 பத்து என்றும் SU-35 110 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதை இரசியா பெருமளவில் பயன் படுத்துவதும் இல்லை. ஒரு Su-35ஐ உக்ரேனியர் சுட்டு வீழ்த்தியதுடன் அதன் விமானியையும் கைப்பற்றினர். இரசிய Su-57ஐ பயன்படுத்தினால் அதை அமெரிக்கர்கள் எப்படியாவது சுட்டி வீழ்த்தி அவற்றின் இரகசியங்களைப் பெற அமெரிக்கர்கள் முயல்வது நிச்சயம் என்பதால் இரசியா அவற்றைப் பாவிக்க தயக்கம் காட்டுகின்றது. மற்ற இரசியப் போர் விமானங்களை F-16 விமானங்கள் புதிய வானில் இருந்து வானிற்கு வீசும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த முடியும் F-16 விமானங்களின் புதிய வடிவமான F-16V விமானங்கள் உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும்.

இரசிய வான் பாதுகாப்பும் F-16

இரசியாவின் முதன்மை வான்பாதுகாப்பாக இருப்பது எதன் S-400 முறைமை. அதனால் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களை இனம் கண்டு அழிக்க முடியும். அது இதுவரை ஒரு முறையான போர்க்களத்தில் தேர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை, சிரியாவில் அது பாவிக்கப்பட்டது. சிரியப் போரின் போது லெபனானுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் படைக்கலங்களை எடுத்துச் செல்ல முயன்ற போதெல்லாம் இஸ்ரேலின் F-16 அங்கு தாக்குதல் நடத்தின. துருக்கியின் F-16ஐ கிரேக்கத்திடமிருக்கும் இரசியாவிடமிருந்து வாங்கிய S-300 வான் பாதுகாப்பு முறைமை இலகுவில் இனங் காண்பதாக துருக்கி அறிவித்துள்ளது. உக்ரேன் – இரசிய எல்லையைத் தாண்டி உக்ரேனியர்களால் F-16 வானூர்தியை கொண்டு செல்ல முடியாது. ஆனால் உக்ரேனுக்குள் இருக்கும் இரசிய வான் பாதுகாப்பு முறைமைகளை அமெரிக்காவின் HIMARS பல்குழல் ஏவுகணைச் செலுத்துகள் மூலம் அழித்த பின்னர் உக்ரேனில் உள்ள இரசியப் படை நிலைகளை F-16 மூலம் குண்டுகளை வீசி அழித்து தாங்கிகள் மூலம் இரசியப்படையினரைப் பின்வாங்கச் செய்யலாம். அமெரிக்கா தொலைதூர தாக்குதல் படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்க் முன் வந்திருப்பதால் உக்ரேன் எல்லைக் அண்மையாக உள்ள இரசிய வான் பாதுகாப்பு முறைமைகளை மேலும் இரசியா எல்லையில் இருந்து விலக்கும் என எதிர்பாக்கலாம். 

பிரான்ஸ் தனது போர் விமானங்களை அனுப்புவதை தவிர்க்க மாட்டாது என அறிவித்துள்ளது. உக்ரேனுக்கு புதிய போர்த்தாங்கிகளை வழங்க முடியாத பிரான்ஸ் தனது நிலையை உலக அரங்கில் நிலை நாட்ட உக்ரேனுக்கு போர்விமானங்களை அனுப்ப முயலலாம். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்ற நேட்டோ நடுகளை F-16களை அனுப்ப அனுமதிக்கலாம். அவற்றை ஈடுகட்ட அந்த நாடுகள் அமெரிக்காவின் F-35 வாங்கும். அதனால் அமெரிக்க படைத்துறை உற்பத்தியாளர்களின் இலாபம் அதிகரிக்கும்.

இன்னும் ஓராண்டுக்குள் F-16 உட்பட்ட பல நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் உக்ரேனுக்கு வழங்கப்படும்.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...