Followers

Monday 28 February 2022

புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?

 



புட்டீன் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற செய்தியை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் பரப்புகின்றன. புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பிய நான்காம் நாள் இரசியா மீதான பொருளாதாரத் தடையை மேற்கு நாடுகள் அதிகரித்த போது புட்டீன் தன்னுடைய அணுக்குண்டு வீசும் படைப்பிரிவை உயர் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மேற்கு நாடுகளில் அவரது மன நிலை குறிந்த செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கியுள்ளன. வெள்ளை மாளிகை, அமெரிக்க மூதவை, பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித் எனப் பலரும் புட்டீனின் மன நலம் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள்.

கைவீச்சு குறைந்து விட்டதாம்!

பிரித்தானிய வானொலி ஒன்று புட்டீன் பற்றி நரம்பியங்கியல் (Nurology) நிபுணர் ஒருவரை பேட்டியும் கண்டது. அவர் புட்டீன் நடக்கும் போது அவரது வலது கையின் வீச்சு தூரம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டு போவதை வைத்துக் கொண்டு புட்டீனின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் புட்டீன் தற்போது இருக்கும் மனநிலையில் அவர் மற்றவரகளின் ஆலோசனைகளைக் கேட்க மாட்டார் என்றார். தனக்கு plastic surgery செய்து முகச் சுருக்கமின்றி இளமையாகத் தோற்றமளிக்கும் புட்டீன் தொடர்ச்சியாக steroid என்னும் மருந்தை உட்கொள்கின்றார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன. Steroid உட்கொள்பவர்களுக்கு irritability, anxiety, aggression, mood swing, manic symptoms and paranoia ஆகியவை ஏற்படும். அமெரிக்கவின் Newsweek சஞ்சிகை புட்டீனை வஞ்சமாகப் புகழ்ந்து எழுதிய கட்டுரையில் இரசியாவைக் கண்டு உலகம் அஞ்ச வேண்டும் என்ற தனது நோக்கத்தை புட்டீன் உக்ரேனில் நிறைவேற்றி விட்டார் என்கின்றது. அவர் செஸ்னியா, ஜோர்ஜியா, சிரியா, கிறிமியா ஆகியவற்றில் செய்த படை நடவடிக்கைகள் வெற்றியில் முடிந்ததையும் அச்சஞ்சிகை சுட்டிக் காட்டுகின்றது.

நுண்ணறிவாளி புட்டீன்

சோவியத் ஒன்றிய காலத்தில் பொருளாதாரம் படித்தவர் புட்டீன். சோவியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய அம்சம் நீண்ட காலத் திட்டமிடல். பொருளாதாரம் படித்துவிட்டு சோவியத்தின் உளவுத்துறையான கேஜிபியில் பணிபுரிந்தவர் புட்டீன். அத்துடன் குங்ஃபு விளையாட்டில் தேர்ச்சி பெற்று கறுப்பு பட்டி வென்றவர். நன்கு சதுரங்கம் ஆடக் கூடியவர். இவற்றால புட்டீன் நீண்ட காலத் திட்டமிடல், எதிரியின் தகவல்களை அறிந்து கொள்ளுதல், எதிரியும் நகர்வுகளை முன் கூட்டியே திட்டமிட்டு தன் நகர்வுகளை, தன் நகர்வுக்கு எதிரியின் நகர்வு எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றுள்ளார். அதனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை Genius – நுண்ணறிவாளன் என விபரித்தார்.

20-ம் நூற்றாண்டின் விபத்தை புட்டீன் சரி செய்வாரா?

1991-ம் ஆண்டு ஜெர்மனியை கிழக்கு என்றும் மேற்கு என்றுப் பிரித்த பேர்லின் சுவர் தகர்க்கப்படும் போது சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உளவாளியாகப் பணிபுரிந்தவர். எந்த சுவர் விழக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் பணி செய்தாரோ அதே சுவர் அவர் கண்முன் சரிந்தது. அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியமும் சரிந்தது. பனிப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் வெற்றி பெற்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இரசியாவிடமிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைந்தன. பனிப்போருக்குப் பின்னரான கிழக்கு ஐரோப்பிய நிலையை புட்டீன் ஏற்றுக் கொள்ளவில்லை, இது நம்ம ஏரியா. இது எதிரிகளிடம் போவதா என புட்டீன் மனதுக்குள் கொதித்தார். 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார் அரசியல் விபத்து சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்றார் புட்டீன்.

இரசியப் பொருளாதாரத்தை மீட்ட புட்டீன்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசிய அதிபராக வந்த பொறிஸ் யெல்ஸ்ரினின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக வலென்ரின் யுமாசேவ் என்பவர் இருந்தார். அவருடைய மகளையெ யுமாசேவ் திருமணம் செய்தார். யுமாசேவ் முலமாக யெல்ஸ்ரினுக்கு விளடிமீர் புட்டீன அறிமுகமானார். அவரது நிர்வாகத்தில் பணியும் புரிந்தார். 1999 ஓகஸ்ட் மாதம் புட்டீனை யெல்ஸ்ரின் தலைமை அமைச்சராக்கினார். 1998இல் மோசமான பொருளாதார நெருக்கடியை இரசியா சந்தித்தது. அதிலிருந்து இரசியாவை புட்டீன் சாதுரியமாக மிட்டெடுத்தார். அதில் முழு மகிழ்ச்சி அடைந்த யெல்ஸ்ரின் புட்டீனிடம் இரசியாவை 1999 டிசம்பரில் ஒப்படைத்தார். அன்றில் இருந்து இன்றுவரை இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் விளடிமீர் புட்டீன் இருக்கின்றார். இரசிய அதிபர் தொடர்ச்சியாக இரண்டு தடவை பதவி வகிக்கலாம் என்ற அரசியலமைப்பை புட்டீன் மாற்றி தன் ஆயுள் முடியும் வரை தான் பதவியில் இருக்க வழி செய்தார்.

கொள்ளையர்களைக் கொள்ளையடித்தார்?

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வங்களை கொள்ளையடித்து பலர் பெரும் செல்வந்தரானார்கள். அவர்களை ஆதரத்துடன் பிடித்த புட்டீன் சிலரை சிறையில் அடைத்தார். மற்றவர்களிடம் உங்களையும் இப்படி அடைப்பேன் என மிரட்டினார். அவர்கள் தம் செல்வத்தை புட்டீனுடன் பகிர்ந்து கொண்டார்கள் அதனால் புட்டீன உலகின் முன்னணி செல்வந்தரானார். அவரது சொத்து மதிப்பு $190பில்லியன் எனக் கருதப்படுகின்றது. எல்லாச் செல்வந்தர்களையும் சிறையில் அடைத்தால் இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது புட்டீனுக்கு தெரியும்.

உறுதி மொழி வேறு உடன்படிக்கை வேறு

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவிற்கும் சோவியத் அதிபர் மிக்கையில் கோர்பச்சேவிற்கும் இடையில் தொடர் பேச்சு வார்த்தையில் நடந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் பேக்கர் கோர்பச்சேவிடம் உரையாடும் போது அமெரிக்கா கிழக்கு ஜெர்மனியை மட்டும் தான் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும். அதைத் தாண்டி ஒரு அங்குலம் கூட கிழக்கு நோக்கி நேட்டோ நகராது எனச் சொல்லியிருந்தார். அதன் பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் வார்சோ ஒப்பந்த நாடுகளுமாக 14 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. 2014 உக்ரேனின் கிறிமியாவை இரசியா கைப்பற்றிய போது ஜேம்ஸ் பேக்கர் தான் பேச்சு வார்த்தையின் போது சொன்னதை உடன்படிக்கையாக கருத முடியாது என்றார்.

ஜோர்ஜியாவிற்கும் உக்ரேனுக்கும் பாடம்

2006இல் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகிய ஜோர்ஜியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது விளடிமீர் புட்டீன் அதை ஆக்கிரமித்து துண்டாடினார். அதே போல 2014இல் உக்ரேனைத் துண்டாடினார். அத்துடன் உக்ரேன் அடங்கவில்லை. உக்ரேன் அதிபர் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரேனின் அரசிலமைப்பு திருத்தப்பட்டது. அதனால் சினமடைந்த புட்டீன 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்குள் மீண்டும் இரசியப் படையை அனுப்பினார்.

 

மேற்கு நாடுகள் புட்டீன் மீது தனிப்பட்ட பொருளாதாரத் தடை விதித்தன. அவரது சொத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பது பற்றி மேற்கு நாடுகளால் அறிய முடியவில்லை. பனிப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிலவிய பாதுகாப்பு ஒழுங்கை புட்டீன் தகர்த்து விட்டார். 2022 பெப்ரவரி 27-ம் திகதி பிரித்தானிய வானிலியின் நேயர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் புட்டீனின் தலைக்கு ஏன ஒரு விலை குறிக்கக் கூடாது என பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித்திடம் கேள்வியை முன் வைத்தார். அதற்கு அவர் நேரடியான் பதில் கொடுக்காமல் அப்படி ஒரு விலையும் குறிக்கப்படவில்லை என்றார். இப்போது பல மேற்கு நாட்டு ஊடகங்களில் போர் நடப்பது உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் அல்ல என்றும் போர் உக்ரேனுக்கும் புட்டீனுக்கும் இடையில்தான் நடக்கின்றது என்றும் பரப்புரைகள் நடக்கின்றன. புட்டீனுக்கு எதிராக இரசியர்களை கிளர்ச்சி செய்யும் நோக்கத்துடனேயே இரசியாமீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படுகின்றன. பொருளாதாரத் தடைகளைப் பார்த்து புட்டீன பின் வாங்கக் கூடியவர் அல்லர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. லிபியாவின் கடாஃபிக்கும் ஈராக்கின் சதாம் ஹுசேனுக்கும் நடந்தது  புட்டீனுக்கும் நடக்குமா?

Saturday 26 February 2022

உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்


புவிசார் அரசியல் என்பது நிலப்பரப்புக்கள், கடற்பரப்புகள், வான்வெளி, விண்வெளி, வளங்கள், அரசுகள், தலைமைத்துவ ஆளுமைகள், அரசற்ற அமைப்புக்கள், நாகரீகங்கள், மக்கள், பொருளாதாரம், படைவலிமை ஆகியவற்றிடையேயான செயற்பாடுகள் பற்றிய கேந்திரோபாயத்தை பகுப்பாய்வு செய்வதாகும். அரசியல் புவியியல் (Plitical Geography) நிலவியல் (Anthropogeography) ஆகியவற்றில் இருந்து புவிசார் அரசியல் உருவானது. இங்கு நிலம் என்பது அளவு மட்டும் சார்ந்ததல்ல தரமும் சார்ந்ததாகும். புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்

2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பார்கள்.” என்பது அவரது கோட்பாடு. 193இனக்குழுமங்களைக் கொண்ட இரசியாவில் 146மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்திலும் அதிகமாக இருப்பதாலும் குடிவரவாளரகளின் தொகையிலும் பார்க்க குடியகல்வாளர்களின் தொகை அதிகரிப்பதாலும் இரசியாவின் மக்கள் தொகை குறைந்து செல்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவின் நிலப்பரப்பு உலகின் மிகப் பெரியதாக உள்ளது. அதனால் Friedrich Ratzelஇன் கோட்பாடு உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கான உட்பார்வையைக் தரவில்லை.

Sir Halford John Macinderஇன் இதயநிலக் கோட்பாடு

Halford Mackinder புவியியல் சுழற்ச்சி மையத்தின் வரலாறு என்னும் தலைப்பில் 1904இல் எழுதிய கட்டுரையில் அவர் உலகப் புவிசார் அரசியல் ஆசிய-ஐரோப்பிய பெருங்கண்டத்தின் இதயநிலத்தில் தங்கியுள்ளது என்றார். உலகத்தை ஐம்பெரும் பகுதிகளாகப் பிரித்தார்:

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland): உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.

கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலகத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது Halford Mackinder முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது. பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, போலாந்து, இரசியா, சிலோவாக்கியா, பெலரஸ், மொல்டோவா, உக்ரேன், எஸ்த்தோனியா, லத்வியா, எஸ்த்தோனியா, ஜோர்ஜியா ஆகியவை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளாகும். இவற்றில் பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா, போலந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருக்கின்றன. உக்ரேனும் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முற்பட்ட போது இரசியா அவற்றின் மீது படையெடுத்து அங்கு பிரிவினைகளை உருவாக்கி புதிய நாடுகளை உருவாக்கியுள்ளது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த 1914-1918இல் நடந்த முதலாம் உலகப் போர் இதய நிலத்திற்கான போட்டியை முடிவுக்கு கொண்டுவராது என்றும் அவர் அப்போதே எதிர்வு கூறியிருந்தார். இன்று அது மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் இரசியா மறுதரப்பாகவும் இருந்து கொண்டு போட்டி நகர்வுகளில் ஈடுபடுகின்றன. அதன் ஒரு பகுதியே இரசியா 2022 பெப்ரவரியில் 24-ம் திகதி உக்ரேன் மீது செய்த ஆக்கிரமிப்பாகும்.

கடல்வலிமைக் கோட்பாடு

அமெரிக்கரான Alfred Thayer Mahan ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது. உக்ரேன் தனது கடற்படையின் வலிமையை பெருக்காமல் விட்டதுடன் தன்னிடம் இருந்த கடற்கலன்களை விற்பனை செய்து தனது பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்தது. உக்ரேனிடம் வலிமையான கடற்படை இல்லாத படியால் அது உலகின் அதியுயர் கேந்திரோபாய நிலப்பரப்பில் ஒன்றான கிறிமியாவை 2014இல் இழந்தது. இன்று (26-02-2022) ஓரிரு நாட்களில் இரசிய போர்த்தாங்கிகள் அதன் தலைநகரிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

Nicholas Spykmanஇன் வளையநிலக் கோட்பாடு

Nicholas Spykman வளைய நிலத்தை ஆள்பவன்தான்தான் உலகத்தை ஆள்வான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி. Nicholas Spykman இன் கோட்பாட்டின் முக்கிய அம்சம் கடல் போக்குவரத்திற்கான  அண்மையாக நாடுகள் இருக்க வேண்டும் என்பதாகும். இரசியாவின் குளிர்மையற்ற கடல் உக்ரேனை ஒட்டியே அமைந்திருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா பிரதேசத்தில் உள்ள இரசியக் கடற்படைத்தளம் இரசியாவின் எதிரியின் கைக்களுக்குப் போனால் அது இரசியாவின் வல்லரசு என்ற நிலையைக் கேள்விக் குறியாக்கும். உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்தால் கிறிமியாவை இரசியா இழக்கும் ஆபத்து ஏற்படும். அதைத் தவிர்க்கவே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது.

நாகரீக கோட்பாடு

Samuel Phillips Huntington (1927- 2008) 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். 1. மேற்கு நாடுகள், 2. லத்தின் அமெரிக்க நாடுகள், 3. இஸ்லாமிய நாடுகள், 4. சீனா, 5. இந்து, 6. மரபு வழியினர், 7. ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப் படுத்தியுள்ளார். இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் உள்ளன. இரசிய உட்பட பலகிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம் பிறந்து வளர்ந்த தொட்டிலாக உக்ரேன் தலைநகர் கருதப்படுகின்றது. அதனால் உக்ரேன் இரசியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்கின்றார் இரசிய அதிபர் புட்டீன். இங்கு இரசிய-உக்ரேனிய கலாச்சார முரண்பாட்டிலும் பார்க்க கலாச்சார ஒற்றுமையே ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றது.

அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக் கோட்பாடு

இரசியாவில் பிறந்து இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவரான அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி முன் வைத்த வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனை இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வழங்கியிருந்தன. ஆனால் வலிமை மிக்க இரசிய வான்படையை எதிர்கொள்ளக் கூடிய படைக்கலன்களை வழங்கவில்லை. அதனால் இரசியாவின் வான்வலிமையால் உக்ரேனில் முன்னேறியது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலைத் தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை நிர்மூலமாக்கக் கூடிய வானில் இருந்து வீசும் எறியியல் ஏவுகணைகளையும் (Kh-47M2 Kinzhal 'Dagger' hypersonic ballistic missile.) அவற்றை வீசக் கூடிய MiG-31 போர் விமானங்களையும் இரசியாவிற்கு சொந்தமான கலின்னின்கிராட் பகுதியில் இரசியா நிறுத்தி வைத்துவிட்டு புட்டீன் உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இரசியாவின் இந்த வான் வலிமையால் நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட அசைத்தால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையை இரசியா உருவாக்கி விட்டது.

மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்-சோனிக்) ஏவுகணைகளின் உற்பத்திக்கு முற்பட்ட மேற்படி கோட்பாடுகளுக்கும் அப்பால் இரசியாவை மேற்கு நாடுகளால் கைப்பற்றி ஆள முடியாது. அதே போல் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் இரசியாவால் கைப்பற்ற முடியாது. இரசியாவின் படைவலிமை அதன் எல்லையை முடிவு செய்யும். உக்ரேனை அதன் நீப்பர் நதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள டொன்பாஸ் பிரதேசத்தைக் கைப்பற்றி ஒரு தனி நாடாக்குவது அல்லது இரசியாவுடன் இணைப்பது இரசியாவால் இயலுமான ஒன்று. டொன்பாஸ் பிரதேசத்தில் இருந்து கிறிமியா வரை செல்லும் கரையோரப்பகுதியைக் கைப்பற்றி இரண்டையும் தரை வழியாக இணைப்பதையும் இரசியாவால் செய்ய முடியும். அது கிறிமியாவை இரசியாவிடமிருந்து பிரிக்க முடியாத பிரதேசமாக்கி இரசியக் கடற்படையை வலிமை மிக்கதாக்கும். இரசியா அதியும் தாண்டி முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று தற்போது நேட்டோவில் இருக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க முயன்றால் உலகம் போரழிவைச் சந்திக்கும்.

 (தொடரும்)

Monday 21 February 2022

நிலாந்தனின் உருட்டல்களும் பேராசிரியர் கணேசலிங்கத்தின் புரட்டல்களும்

 


இந்திய வான் படையினர் Geopolitics என்னும் சஞ்சிகையை மாதம் தோறும் வெளியிடுகின்றனர். அதன் நவம்பர் 2017 பதிப்பு “கடலோரக் கண்காணிப்பு” என்னும் தலைப்பில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியாவின் கரையோரத்தில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகளும் இந்திய மீனவர்களும் இந்தியாவின் கரையோரப்பாதுகாப்பிற்கு முக்கியமானவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. அதில் எங்கும் ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவின் பாதுகாப்பு எனக் குறிப்பிடப்படவில்லை. அந்த சஞ்சிகையின் எந்த ஒரு பதிப்பிலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு வேண்டியவர்கள் எனக் குறிப்பிடவில்லை. இந்தியாவின் எந்த ஒரு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களும் எப்போதாவது ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்களா?

இந்தியாவின் மு திருநாவுக்கரசு

மு திருநாவுக்கரசு என்பவர் மட்டும் இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள்தான் பாதுகாப்பு எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவரது காணொலிப்பதிவுகளில் அவர் அப்படிச் சொல்லும் போது அவர் தனது கண்களை உருட்டிப் புரட்டிக் கொண்டுதான் சொல்லுவார். அதைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர் சொல்வது உருட்டலும் புரட்டலும். என்று. தன்னை இந்திய வெளியுறவுக் துறையின் பேச்சாளர் போல கருதிக் கொண்டு அவர் எப்போதுக் கருத்து வெளியிடுவார். உலகில் மிகச்சிறந்த மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளைக் கொண்ட நாடு சீனா அது தனது DF-41 ஏவுகணையைச் இந்தியாமீது வீசினால் அதை எப்படி ஈழத்தமிழர்கள் தடுப்பார்கள்? திருநாவுக்கரசு சுதுமலையில் ஏறி நின்று கையைக் காட்டினால் DF-41 ஏவுகணை திரும்பிச் சென்று பீஜிங்கில் விழுமா? உலகிலேயே அதிக கடற்படைக்கலன்களைக் கொண்ட சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலும், நாசகாரிக்கப்பல்களும், கரையோரத்தாக்குதல் கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வங்காள விரிகுடாவிற்கு வந்து இந்தியாமீது தாக்குதல் நடத்தினால் அதை எப்படி ஈழத்தமிழர்களால் தடுக்க முடியும்? திருநாவுக்கரசு கீரிமலையில் நின்று கொண்டு வாயால் ஊத சீனக் கப்பல்கள் அழிந்து விடுமா? சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏவூர்திகளில் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் பாவனைக்கு வந்தால் தமிழர்கள் என்ன செய்வார்கள்? இந்தியாவின் பகை நாடுகள் எந்த எந்த படைக்கலன்களால் இந்தியாவைத் தாக்கும் போது தமிழர்கள் அவற்றை எப்படி எதிர் கொண்டு இந்தியாவைப் பாதுகாப்பார்கள் என விளக்கம் கொடுக்கும் அளவிற்கு திருநாவுக்கரசுக்கு படைத்துறை அறிவு இருக்கின்றதா? அவரது சரித்திர அறிவு மட்டும் புவிசார் அரசியல் ஆய்வு செய்யப் போதுமானதா?

நிலாந்தனின் உருட்டல்கள்

இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளராக தன்னை கருதிக் கொள்ளும் திருநாவுக்கரசுக்கு நிலாந்தன் என்பவர் கொள்கை பரப்புச் செயலாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகின்றது. நிலாந்தன் இந்தியாவின் வால் பிடிக் கும்பல்களான ஆறு தமிழ் கட்சிகள் “ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” என்னும் தலைப்பில் நடந்திய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் திருநாவுக்கரசு சொன்னது போல் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேசம் என்றால் அது இந்தியாதான் என்றார். ஈழத்தமிழர்களை இந்தியாவில் காலடியில் ஒரு கூட்டுப் புழுவாக கேவலப்படுத்துகின்றனர். இது நிலாந்தனின் முதலாவது உருட்டல். இரண்டாம் உருட்டல் நிலாந்தனின் இன்னொரு வாசகம்: “ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இந்தியாவிற்கு பாதுகாப்பு இல்லை.” ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தவர்களை இந்தியா ஏன் அழித்தது என்ற கேள்விக்குப் பதில் கூறும் அறிவு நிலாந்தனுக்கு இருக்கின்றதா? நிலாந்தனின் அடுத்த உருட்டல்: “ஒரு சிறிய அரசற்ற தேசிய இனத்தின் விடுதலைக்கான இறுதித் தீர்வை பக்கத்தில் இருக்கும் பெரிய அரசுதான் இறுதியிலும் இறுதியாக தீர்மானிக்கின்றது.” இதற்கு அவர் பல உதாரணங்களைச் சொல்கின்றார். அதில் ஈடுகால உதாரணமாக உக்ரேனைச் சொல்லுகின்றார்: “இரசியாவின் செல்வாக்கு மண்டலத்தை மீறி சிந்திக்க உக்ரேனால் முடியவில்லை. கிறிமியாவாலும் சிந்திக்க முடியவில்லை.” இது நிலாந்தனின் மிகப் பெரிய உருட்டல். இரசியாவின் எல்லையில் உள்ள உக்ரேனிலும் பார்க்க மிகச் சிறிய போல்ரிக் நாடுகளான லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் இரசியாவை மீறி இரசியாவின் எதிரணியில் இணைந்து இறைமையுள்ள சுதந்திர நாடுகளாக இருப்பது நிலாந்தனுக்கு தெரியாதா? கியூபாவை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை நிலாந்தன் ஏன் மறைத்தார். சீனாவுடன் எல்லையைக் கொண்டு சீனாவின் பகை நாடாக வியட்னாம் இருப்பதை நிலாந்தன் அறிய மாட்டாரா? நிலாந்தன் போன்றவர்களை ஆய்வாளர்களாக வியட்னாமியர்கள் ஏற்றுக் கொள்ளாததுதான் அவர்களின் உறுதியான இருப்புக்கு காரணமாக இருக்கலாம். நிலாந்தனின் நோக்கம் தமிழர்களை இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்துவது மட்டுமே. நெல்சன் மண்டேலா வெள்ளையர்களை மன்னித்தாராம் சொல்கின்றார் நிலாந்தன். அதனால்தான் இன்னும் தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் விடுதலை பெறவில்லை என்பதை திருநாவுக்கரசின் கொ.ப.செ அறியமாட்டார். ஜப்பானியர்கள் தம்மை அழித்த அமெரிக்கர்களை மன்னித்தார்கள் என உருட்டுகின்றார் நிலாந்தன். அமெரிக்கா ஜப்பான் தொடர்பான தனது கொள்கையை மாற்றியது போல் ஈழத் தமிழர்கள் தொடர்பான கொள்கையை எப்போது மாற்றினார்கள் நாம் மன்னிப்பதற்கு? நிலாந்தன் எம்மை சிங்களவர்களை மன்னிக்கச் சொல்கின்றாரா? இதுதானா கொடுத்த காசுக்கு மேலாக கூவுவது என்பது?

பேராசிரியர் கே ரி கணேசலிங்கத்தின் புரட்டல்கள்

நிலாந்தன் திருநாவுக்கரசின் உருட்டுப் புரட்டல்களை பரப்புகின்றார் என்றால் பேராசிரியர் கணேசலிங்கம் நிலாந்தனின் அலட்டல்களை பரப்புரை செய்கின்றார். “ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்” என்ற மாநாட்டில் உரையாற்றும் போது மூன்று எடுகோள்களை முன்வைத்தார்:

1. ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு இலங்கைத் தீவுக்குள் சாத்தியமற்றது. பிராந்திய சர்வதேச மட்டத்திலான தீர்வுகளும் தீர்வுக்கான அணுகு முறைகளுமே எங்களுக்கு யதார்த்தமானதாக இருக்கின்றது.

2. கடந்த கால உடன்படிக்கைகள் அனைத்தும் தீர்வுக்கான எத்தனங்களாக இருந்தனவே அன்றி இலங்கைத் தீவுக்குள் ஒரு தெளிவான தீர்வை நோக்கிய எண்ணத்தை இந்த இனத்துக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

3. 2007இற்குப் பின்னர் இந்தோ பசுபிக் உபாயம் இந்து சமுத்திரத்தையும் பசுபிக் விளிம்பு நாடுகளுக்கும் அந்த விளிம்பு நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும் ஒரு வாய்ப்பான காலப்பகுதியாக அமைந்திருக்கின்றது.

ஒரு வரியில் சொல்லுவதானால் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு இந்தியாவிடம் தான் இருக்கின்றது என புரட்டுகின்றார் கணேசலிங்கம். அவரது அடுத்த புரட்டல்: “இன்று ஜெர்மனியர்களும் பிரான்ஸ்காரர்களும் இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை தடுக்க முயற்ச்சிக்கின்றார்கள். பின்புலத்தில் அவர்களுடைய பொருளாதார இருப்பு அடிப்படையானது.” ஆனால் புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இரசியா ஒரு Economic Fortressஐ உருவாக்கிவிட்டுத்தான் உக்ரேனுக்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றது. இரசியவின் பொருளாதாரத்தை Sanction Proofஆக மாற்றிவிட்டுத்தான் புட்டீன் செயற்படுகின்றார் என்பதை அறியக் கூடிய பொருளாதார அறிவு கணேசலிங்கத்திற்கு இல்லையா?

திருநாவுக்கரசால் மந்திரித்து விடப்பட்ட கோழிபோல அமைந்திருந்தது கணேசலிங்கத்தின் இன்னொரு கொக்கரிப்பு:

  • ·   ழத் தமிழர்கள்தான் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஓரளவில் பாதுகாப்பு அரணைக் கொடுக்கக் கூடிய சக்திகளாக இருக்கின்றார்கள். ஏறக்குறைய நான் நினைக்கின்றேன் இந்தியர்களுடைய பாதுகாப்பு என்பது ஈழத்தில் இருக்கின்ற மக்களுடைய, ஈழத்தமிழ் மக்களுடைய இருப்போடுதான் ஐக்கியப் பட்டிருக்கின்றது.

பேராசிரியர் கணேசலிங்கத்திற்கு படைத்துறை அறிவு அறவே கிடையாது என்பதை அவரது ஒரு சொற்றொடர் காட்டுகின்றது: “பிரான்ஸின் சுக்கோய் (Sukhoi) விமானம்”. இதுவும் அவரது உரையில் இடம்பெற்றுள்ளது. சமூகத்தின் வரிப்பணத்தில் தான் வசிப்பதாகச் சொன்னார் கணேசலிங்கம். வரிசெலுத்துபவர்கள் value for moneyயை எப்போதும் பார்ப்பார்கள் உங்களின் அறிவின் பெறுமதி சுக்கோய் விமானத்தை உற்பத்தி செய்வது இரசியா என்று கூடத் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதை யாரிடமய்யா சொல்லி அழுவது. புவிசார் அரசியலைப் பற்றி ஆய்வு செய்வதற்கு படைத்துறை மற்றும் பொருளாதாரத் துறை பற்றிய அறிவு அவசியமய்யா. இரண்டும் உங்களிடம் இல்லை. உங்களுக்காக வரி செலுத்துபவர்களுக்காக அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.

கூலிப்படையாக இந்தியா

SWRD பண்டாரநாயக்கா மட்டுமே இந்தியா தொடர்பாக சிறந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தார். ஜே ஆர் ஜெயவர்த்தனேயும் மஹிந்த ராஜபக்சேயும் இந்தியா தொடர்பான வெளியுறவுக் கொள்கையைத் தவறானதாக இருந்தன என்பது கணேசலிங்கத்தின் இன்னும் ஒரு புரட்டல். ஆனால் ஜே ஆரும் மஹிந்தவும் ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியாவைத் தமது கூலிப்படையாக கையாண்டனர் என்ற உண்மையை பாவம் அவர் மறைக்க முயல்கின்றார்.

பல புரட்டல்களைச் செய்த பேராசிரியர் கணேசலிங்கம் ஆறு கட்சிகளின் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்:

  • ·         காலையில் கூட ஒரு சிங்களப் பேராசிரியரோடு உரையாடினேன். 13ஐ நிராகரித்து விட்டு நாம் இந்தியாவைத் திருப்திப்படுத்துவோம். இந்தியாவின் நெருக்கீட்டில் இருந்து தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் - எங்களுடைய தலைவர்கள் - தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்றார் அவர். மிக ஆணித்தரமாக அவருடைய வாதமும் நியாய்ப்பாடுகளும் இருந்தன. நான் நினைக்கின்றேன் அவர்களிடம் இது சார்ந்து ஒரு தெளிவான உபாயம் ஏற்பட்டுவிட்டது.

Tamilnet இணையத்தளத்தினர் நடத்திய ஓர் உரையாடலில் சொல்லப்பட்ட வாசகம்: “இந்தியாவிற்கு திராணி இருந்தால் 13ஐ முழுமையாக நிறைவேற்றட்டும். இந்தியாவால் அது முடியாத வேலை!” அதை கணேசலிங்கம் உண்மை என உறுதி செய்துள்ளார். 13 என்னும் கூரையில் ஏற முடியாத இந்தியாவிடம் இணைப்பாட்சி (சமஷ்டி) என்னும் கோபுரத்தை இந்திய வால் பிடிகளான ஆறு கட்சிகள் வேண்டி நிற்கின்றன.

அமெரிக்காவுடன் மோடி நட்பை அதிகரிப்பதை கணேசலிங்கம் தூக்கிப் பிடித்து உரையாற்றினார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இன்று நிலவும் நட்பு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் 1979இல் உருவான நட்பைப் போன்றது என்பதை கணேசலிங்கம் அறிய மாட்டாரா? இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க - இந்திய நட்பு மோசமான பகைமையாக மாறாது இருக்கும் என்பதை பேராசிரியர் உறுதி செய்வாரா?

நிலாந்தனும் கணேசலிங்கமும் இந்தியாவைப் பற்றி தாழ்த்தி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஜே ஆர் ஜெயவர்த்தனே 1985-86இல் இந்திய வெளியுறவுச் செயலராக இருந்த ரொமேஸ் பண்டாரியின் மகளிற்கு செய்த கல்யாணப்பரிசுடன் இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான கொள்கை தலைகீழாக மாறியது. அதிலிருந்து இன்றுவரை இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பல கொடுமைகளைச் செய்து கொண்டே இருக்கின்றது. இந்தியா தனது கொள்கையை மாற்றாமல் இந்தியா பற்றி தமிழர்களுக்கு யாரும் போதிக்கத் தேவையில்லை. 2009-ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் இருந்து “அரசியல் ஆய்வு” செய்து கொண்ந்தியாவின் உளவாளிகளாகச் செயற்பட்டவர்களை இந்தியா இலங்கை அரசுக்கு வேண்டு கோள் விடுத்து  அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றது. அவர்கள் தங்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கூவுகின்றார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

Friday 18 February 2022

ஐரோப்பிய ஒன்றியம் பெருவல்லரசாகுமா (Superpower)?

 


ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரிய, குரோசியா, சைப்பிரஸ், செக் குட்யரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்ரா, நெதர்லாந்து, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவேக்கிய, சிலோவேனியா, ஸ்பெயின், சுவீடன் ஆகிய 27 நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இருகின்றது.  அது ஓர் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும். அதற்கு என ஒரு நாடாளுமன்றம், நீதித்துறை போன்றவை இருந்தாலும் அது ஒரு நாடு அல்ல.

எது பெருவல்லரசு?

எது பெருவல்லரசு என்பது பற்றி பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் ஆகியவை உலகப் பெருவல்லரசாக கருதப்பட்டன. பனிப்போர்க் காலத்தின் போது அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகப் பெருவல்லரசாகக் கருதப்பட்டன. தற்போது அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக கருதப்படுகின்றது.  இரசியாவும் சீனாவும் உலகப் பெருவல்லரசு என்போரும் உண்டு. அவை இரண்டும் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன என்போரும் உண்டு. உலகப் பெருவல்லரசு என்பது உலகின் எப்பாகத்திலும் தனது ஆதிக்கத்தை தனது பொருளாதார மற்றும் படைவலிமையால் நிலைநாட்டக் கூடியதாகவும் உலக அமைப்புக்களில் தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாகவும் உலக ஒழுங்கை நிலைநாட்டக் கூடியதாகவும் இருக்கும். 

வலிமை மிக்க நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்

பிரான்ஸ் என்கின்ற ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வல்லரசு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருக்கின்றது. அத்துடன் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் ஆகியவை வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட நாடுகள். G-7 நாடுகளிலும் G-20 நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை 447மில்லியன். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றது. அதன் மொத்த உற்பத்தி உலகின் உற்பத்தியில் 14% ஆக இருக்கின்றது. மற்ற வல்லரசு நாடுகளின் மொத்த உற்பத்தி உலக உற்பத்தியுடன் பார்க்கையில் அமெரிக்கா 15.83%, சீனா 15.82%, பிரித்தானியா 2.2%. பெயரளவு(Nominal) தனிநபர் வருமானம் எனப் பார்க்கும் போது ஐரோப்பிய ஒன்றியம்-$41,504, சீனா $16,642, இந்தியா $2191, அமெரிக்கா $65,100 என இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொண்டன. அவற்றின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பொருளாதாரம் மேம்படும் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிநபர் வருமானம் மேலும் அதிகரிக்கும். உலக வர்த்தகத்திலும் அதன் செயற்பாட்டை முடிவு செய்வதிலும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இணையாக நிற்கின்றது. 

மென்வல்லரசு

ஒரு நாடு வல்லரசா என்பதை அதன் படைவலிமையும் பொருளாதார வலிமையும் முடிவு செய்கின்றன. ஒரு நாடு மென்வல்லரசா என்பதை அதன் அரசியல் மதிப்பு, கலாச்சார விழுமியங்கள், வெளிநாட்டுக் கொள்கை ஆகியவை முடிவு செய்கின்றன. பன்னாட்டு அமைப்புக்களில் ஒரு நாட்டுக்கு இருக்கும் ஆதரவும் மென்வல்லரசுத் தனைமையை முடிவு செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும். உலகின் முதல்தர மென்வல்லரசாக பிரான்ஸ் இருக்கின்றது. ஜெர்மனி மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமெரிக்காவையும் சீனாவையும் விஞ்சக் கூடிய நிலையில் இருக்கின்றது. வல்லரசு என்பது கண்டங்களைத் தாண்டி தனது படைகளையும் பொருளாதாரத்தையும் மென்வலு அழுத்தத்தையும் முன்னிறுத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய அரசாகும். ஐரோப்பிய ஒன்றியத்தால் அப்படிச் செய்ய முடியும். 2021-ம் ஆண்டு தென் சீனக் கடலின் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் தம் கடற்படையை அங்கு அனுப்பின. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அங்கு படையனுப்பிய வேற்றுப் பிரதேச நாடுகளாக இருந்தன.

பொருளாதாரத்தை மேம்படுத்த படைத்துறை அவசியம்

Alexandar Stubb 2008-ம் ஆண்டு பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய அரசியல் ஒன்றியமாகவும் மிகப்பெரிய ஒற்றைச் சந்தையாகவும் மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருப்பதால் அதை ஒரு உலகப் பெருவல்லரசு (World Superpower) எனச் சொல்லலாம் ஆனால் படைத்துறையும் வெளியுறவுத் துறையும் அதற்கு ஏற்றாற் போல் இல்லை என்றார். 2018-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் ஐரோப்பா தொடர்பான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வைத்தது. பொருளாதார மேம்பாடும் படைத்துறையும் கைகோர்த்துச் செல்ல வேண்டியவை. பிரித்தானியாவின் பொருளாதாரமும் அதன் படைவலிமையும் இணையாக வளர்ந்த போதுதான் அது ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. தற்போது அமெரிக்காவும் அதையே செய்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறை வளர்ச்சிக்கு ஈடாக அதன் பொருளாதாரம் வளரவில்லை. சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தன் படைத்துறையைப் பெருக்குகின்றது.

2014இல் வெளிப்பட்ட வலிமையின்மை

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் தனது பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்ட போலாந்து அமெரிக்காவிற்கு பணம் கொடுத்து தனது நாட்டில் அமெரிக்காவை படைத்தளம் அமைக்கும் படி வேண்டியது. இது ஐரோப்பிய நாடு ஒன்று தனது பாதுகாப்பிற்கு இன்னொரு கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைத் தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய சுதந்திரம் அவசியம் என்ற கருத்து உறுப்பு நாடுகளிடையே பரவத் தொடங்கியது. 2022இன் ஆரம்பத்தில் இரசியா உக்ரேனுக்கு எதிராக பெரும் படையைக் குவித்தமை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள இரசிய எல்லையில் இருக்கும் சிறிய நாடுகளை தமது பாதுகாப்பையிட்டு கரிசனை கொள்ள வைத்துள்ளது.  

தனித்துவத்தை விரும்பும் பிரான்ஸ்

பிரான்ஸ் அமெரிக்காவிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்ற விருப்பமுடையது. அது தனக்கு தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றில் பலவற்றை பிரான்ஸால் மலிவு விலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். பிரான்ஸ் தனது கேந்திரோபாய தன்னாளுமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அதே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என பிரான்ஸ் நினைக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு தனியான படையணி தற்போது இல்லை, ஆனால் அதன் உறுப்பு நாட்டுப் படைகளுக்கு என ஐரோப்பிய ஒன்றியம் தனியான படைத்துறை கட்டுப்பாடு-கட்டளையகத்தை வைத்திருக்கின்றது. பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த போது ஒன்றியத்திற்கு என ஒரு படையணி இருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு படையணி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நேட்டோ

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் படைவலிமை அதிகரிக்கும் போது அவை தமது பாதுகாப்பில் நேட்டோவின் முதன்மை நாடான அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைக்கப்படுவதுடன். நேட்டோவின் வலிமையும் அதிகரிக்கும். வலிமை அதிகரித்த நேட்டோவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதிக்கமும் அதிகரிக்கும். அமெரிக்க ஆதிக்கத்தை ஐதாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் அப்படி நடப்பதை விரும்புகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் ஒரு செழுமையையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு வல்லரசாக வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்றியம் உருவாக்கப்படவில்லை. செழுமைக்கும் அமைத்திக்கும் படைவலிமை அவசியமாகும். 

ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தனி அமைப்பாகப் பார்க்கும் போது அதன் அதிகாரம் அதிக அளவு உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வலிமை மிக்க அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இன்னும் அதிக அளவு அரசியல் ஒன்றிணைப்பு தேவைப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலேயான பிளவுகளால் உருவாகியுள்ள பிரச்சனை சீனாவிற்கு தைவானால் உள்ள பிரச்சனையிலும் மிகச் சிறியது. அதை தீர்ப்பதற்கு மோதல் தேவைப்படாது.வ் ஒன்றிய உறுப்பு நாடுகள் பொருளாதாரம், படைத்துறை, வெளியுறவு தொடர்பாக தங்களது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து ஒன்றியத்திற்கு என பொதுவான ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அது நடக்கும் போது ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உலகப் பெருவல்லரசாக உருவெடுக்கும்

Wednesday 16 February 2022

உக்ரேனில் புட்டீன்: பதுங்கலா பின்வாங்கலா?

 

2022 பெப்ரவரி 15-ம் திகதி இரசியப் பாதுகாப்புத்துறை உக்ரேன் எல்லையில் இருந்து பத்தாயிரம் படையினரை விலக்குவோம் என அறிவித்தவுடன் உலகப் பங்குச் சந்தைச் சுட்டிகள் அதிகரித்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருந்த அமெரிக்காவின் Dow Jones சுட்டி 400 புள்ளிகளால் அதிகரித்தது. 2022 பெப்ரவரி 14-ம் திகதி இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரேன் நெருக்கடி தணிக்க வாய்ப்புள்ளது எனச் சொன்னவுடன் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி அதிகரித்தது. இரசியப் பங்குச் சந்தையின் சரிவும் குறைந்தது. இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு வார்த்தைக்கு முக்கியமாக படைக்கலக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு இன்னும் இடமுள்ளது என்று அறிவித்தமை போரை தவிர்க்க இரசியா விரும்புகின்றது என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.  

இரசியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்

உக்ரேன் நெருக்கடிக்குப் பின்னர் இரசியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வது ஐம்பது விழுக்காட்டால் குறைந்து போயிருந்தது. இந்தோனேசியா, அல்ஜீரியா, எகிப்த்து ஆகிய நாடுகள் இரசியாவிடமிருந்து வாங்கவிருந்த SU-35 போர் விமானங்களை வாங்குவதில்லை என முடிவெடுத்தன. இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை வந்தால் SU-35இன் முக்கிய பாகங்களை இரசியா மேற்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் போகும். அதனால் SU-35இன் செயற்படு திறன் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் எல்லையில் படை குவித்ததைத் தொடர்ந்து இரசியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

போர் வேண்டாம் உக்ரேனைப் பிரிப்போம்

“எமக்கு போர் வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் வேண்டாம்” என்ற இரசிய அதிபர் புட்டீனின் வாசகம் உலகத்தை உலுப்பியுள்ளது. இரசியாவின் பத்தாயிரம் படையினர் விலக்கல் அறிவிப்பை உக்ரேனும் நேட்டோ நாடுகளும் கவனத்துடன் வரவேற்றன. உக்ரேன் நேரில் காணும் வரை அதை நம்ப மாட்டோம் என்றது. அமெரிக்கா தாம் அதை உறுதி செய்து கொள்வோம் என்றன. இரசிய அதிபர் சமாதான சமிக்ஞையை ஒரு புறம் வெளிப்படுத்த மறுபுறம் உக்ரேனின் இரண்டு வங்கிகள் இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதேவேளை இரசிய நாடாளுமன்றம் உக்ரேனின் கிழக்குப் புறமாக பிரிவினை வேண்டி நிற்கும் Donetsk, Luhansk ஆகியவற்றை குடியரசுகளாக அங்கீகரிக்க அதிபரைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இவை புட்டீனின் பின் வாங்கலுக்கான அறிகுறிகள் இல்லை.

இரண்டு கழுகுகள்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் 1990களில் அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினராகவும் வெளியுறவுத்துறைக் குழுவின் உறுப்பினராக இருந்த போது முன்னாள் சோவியத் ஒன்றிய செய்மதி நாடுகளாக இருந்த போலாந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகளை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைப்பதற்கு முன்னின்று உழைத்தார். நேட்டோ விரிவாக்கத்தில் விருப்பம் உள்ளவராக ஜோ பைடன் கருதப்படுகின்றார். ஜெர்மனியை கிழக்கு மேற்கு என இரு நாடுகளாகப் பிரித்து நின்ற பேர்லின் சுவர் 1989-ம் ஆண்டு தகர்க்கப்பட்டமை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. பேர்லின் சுவர் தகர்க்கப் பட்டபோது கிழக்கு ஜெர்மனியில் சோவியத்தின் உளவுத்துறையில் பணிபுரிந்தவர் தற்போது இரசிய அதிபராக இருக்கும் விளடிமீர் புட்டீன். சோவியத் ஒன்றியத்தை நிலை நிறுத்த உழைத்தவர். அவர் கண் முன்னே அது சரிவதை பார்த்துக் கொண்டிருந்தவர்.

உறுதிமொழி பற்றி உறுதி செய்ய முடியவில்லை

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் கிழக்கு ஜெர்மனியை மட்டும் நேட்டோவில் இணைக்கும் மற்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைக்க மாட்டாது என இரசியாவிற்கு ஜோர்ஜ் புஷ் ஒரு உறுதி மொழியை வழங்கியிருந்தார் என இரசியர்கள் நம்புகின்றனர். 12-09-1990இல் அப்படி ஓர் உறுதி மொழி ஜோர்ஜ் புஷ்ஷால் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கப்பட்டது என புட்டீன அடித்துச் சொல்கின்றார். அது பற்றி எந்த எழுத்து மூலமான ஆதாரமும் இல்லை. இப்போது அப்படி ஓர் உறுதி மொழி வழங்கப்படவில்லை என்கின்றன மேற்கு நாடுகள். ஆனால் தங்களுக்கு துரோகமிழைக்கப் பட்டு விட்டதாக பல இரசியர்கள் நம்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 20-ம் நூற்றாண்டில் நடந்த ஒரு புவிசார் அரசியல் விபத்து என விளடிமீர் புட்டீன் கருதுகின்றார். சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என அவர் கருதுகின்றார்.

இளகிய இரும்பென நினைக்கின்றாரா பைடன்

உக்ரேனில் இருந்து பத்தாயிரம் படையினர் விலக்கப்படுவார்கள் என இரசியா அறிவித்தவுடன் உலக மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் நாம் முழு வலிமையுடன் பாதுகாப்போம். உக்ரேனின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என முழங்கினார். இரசியாவின் பத்தாயிரம் படைவிலக்கலை இளகிய இரும்பென நினைத்து அவர் பாய்ந்து பாய்ந்து அடிப்பது போல் அவரது உரை அமைந்திருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் இரு கட்சிகளும் இணைந்து இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் இரசியாமீது முன்பு எப்போதும் இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அறிக்கை விட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் உலகெங்கும் உள்ள நாடுகளையும் திரட்டி பொருளாதாரத்தடை செய்ய வைப்போம் எனவும் பைடனின் உரையில் சூளுரைக்கப்பட்டிருந்தது.  

புட்டீனின் பிரச்சனைகள்

1, நேட்டோ ஒற்றுமை: புட்டீன எதிர்பார்த்தது போல் உக்ரேனை எப்படி இரசியாவிடமிருந்து பாதுகாப்பது என்பது தொடர்பாக முறுகல் தோன்றவில்லை. அவர்களிடையே எப்படி அணுகுவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்தன. பிரான்ஸ் அதிபரும் ஜேர்மனிய அதிபரும் தமது பாணியில் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஆனால் உக்ரேன் நேட்டோவில் இணைவது தொடர்பாக நேட்டோ தலைவர்களிடம் ஒரே கருத்து இருந்தது. உக்ரேன எந்தப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது என்பது உக்ரேனின் இறைமையுடன் தொடர்புடையது என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். உக்ரேனை இரசியாவிற்கு விட்டுக் கொடுத்தால் இரசியா அத்துடன் நிற்காமல் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துள்ள லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என புட்டீன அடம் பிடிக்கலாம் என நேட்டோ தலைவர்கள் கருதலாம்.

2. பருவ நிலை: 2022 பெப்ரவரி நடுப்பகுதியில் இரசியா உக்ரேனுக்குள் படைகளை அனுப்பினால் அது இரண்டு வாரங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். இரசியாவின் உயர்ந்த எதிர்பார்ப்பு உக்ரேனில் தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்ந்த்துவது ஆகும். உக்ரேனியர்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னால் உறுதியாக திரண்டு நிற்பதுடன் பலர் படையில் சேர விருப்பமும் தெரித்துள்ளனர். மார்ச் மாத ஆரம்பத்தில் உக்ரேனை முடியுள்ள பனி பகுதியாக உருகத் தொடங்கி பனிச்சேறு உருவாகும். அது இரசியப் படையினருக்கான வழங்கல்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விமான மூலமாக உணவு, சுடுகலன்கள், எரிபொருள், படைக்கல உதிரிப்பாகங்களை விநியோகிக்க வேண்டி வரும். அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரேனுக்கு போல்ரிக் நாடுகளூடாக வழங்கியுள்ளது.

3. படைக்கலன்கள்: தரையூடான படை நகர்விற்கு முழு ஆதாரமாக போர்த்தாங்கிகள் செயற்படும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ள போர்த்தாங்கிகளிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையான தாங்கி அழிப்பு ஏவுகணைகள் தற்போது உக்ரேனிடம் உள்ளன. அதனால் இரசியப் படையினர் பெரும் ஆளணி இழப்புக்களை சந்திப்பர்

4. பொருளாதாரம்: மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற பல நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவரும் போது இரசியா பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்ளும்.

5. உக்ரேனின் உறுதிப்பாடு: உக்ரேனை இலகுவில் மிரட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் இரசியா உக்ரேன் எல்லையில் ஒரு இல்ட்சம் படையினரைக் குவித்தது. உக்ரேன் விட்டுக் கொடுக்காத நிலையில் மேலும் முப்பதினாயிரம் படையினரைக் குவித்தது. அதற்கும் உக்ரேன் மசியவில்லை.

6. ஜெர்மனி கடுமையான நிலைப்பாடா? இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜெர்மனி மட்டுமே இளகிய நிலையில் இருந்தது. ஜெர்மனி அதிபரின் நிலைப்பாடு தொடர்பாக ஜெர்மனியிலும் மேற்கு நாடுகளிலும் எதிர்ப்பு உருவானது. ஜெர்மனிய அதிபர் புட்டீனைச் சந்திக்க முன்னரே அவர் தனது நிலைப்பாடு மாறும் என்ற செய்தியை இரசியாவிற்கு தெரியப்படுத்தி இருக்கலாம்.

புட்டீன் புகழுக்கு பங்கம்

பெரியதாக வீராப்பு பேசும் புட்டீன் உக்ரேன் திரையரங்கில் அரங்கேற்ற முயன்ற காட்சி உப்புச் சப்பில்லாமல் முடிவது அவரது விம்பத்திற்கு பங்கம் ஏற்படும். அதனால் அவர் வீராப்பு பேசக் கூடிய வகையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நேட்டோவுடன் செய்ய வேண்டும் அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகள் மூலம் ஒரு தாக்குதலை உக்ரேன் மீது செய்ய வேண்டும். இது போன்ற Face saving நடவடிக்கைகள் எதையாவது செய்து தப்ப வேண்டும்.

மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் புட்டீன் உறுதியாக நிற்பார். தனது எல்லை நாடுகளில் நேட்டோ எந்தப் படையையும் நிறுத்தக் கூடாது இரசியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தக் கூடிய வகையில் படைக்கலன்களைக் குவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த அவர் தொடர்ந்து முயற்ச்சி செய்வார்.

கிழக்கு ஐரோப்பாவில் முடியாததை அவர் நடுவண் ஆசியாவில் செய்ய முயலலாம். அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வர துருக்கி எண்ணுகின்றது. அவற்றைப் பொருளாதார அடிப்படையில் சுரண்ட சீனா தொடங்கி விட்டது.  

Monday 14 February 2022

உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW

 


உக்ரேன் எல்லையில் மேலும் முப்பதினாயிரம் படையினரை நிறுத்தி மொத்தப் படையினர் எண்ணிக்கையை 130,000 ஆக உயர்த்திய இரசியா சொல்கின்றது தான் உக்ரேனை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று. அமெரிக்கா சொல்கின்றது எந்த நேரமும் இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்று. உக்ரேன் அதிபர் சொகின்றார் பதட்டம் வேண்டாம், பதட்டம் எதிரிக்கு சாதகமாக அமையும் என்று. இரசியப் படையினர் விமானத் தாக்குதல்களுடனும் எறிகணை வீச்சுகளுடனும் தாங்கிகளும் கவச வண்டிகளும் முன்செல்ல உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் இரசியப் போர்த் தாங்கிகளும் உக்ரேனின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் கடுமையாக மோதிக் கொள்ளும். உக்ரேன் படையினர் நகரங்களில் மரபு வழிப் போர் முறைமையையும் கிராமங்களில் கரந்தடிப் போர் முறையையும் பின்பற்றலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

உக்ரேனிடம் குறைந்த தாங்கிகள்

இரசியா உக்ரேனுக்கு எதிராக 1200 போர்த்தாங்கிகளை நிறுத்தியுள்ளது. இது உக்ரேனின் மொத்த தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க முன்னூறு அதிகமானதாகும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பக் கூடிய தாங்கிகளிலும் பார்க்க அதிக அளவு தாங்கி அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனுக்கு வழங்கி அவற்றை இயக்கும் பயிற்ச்சியையும் அளித்துள்ளன.

பிரித்தானிய ஏவுகணைகள்

பிரித்தானியா தனது New Generation Light Anti Tank Weapon (NGLAW) எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளில் இரண்டாயிரத்தை உக்ரேனுக்கு அவசரமாக 2022 ஜனவரியில் அனுப்பி வைத்துள்ளது. பிரித்தானியாவின் BAE, பிரான்ஸின்THALES, சுவீடனின் SaaB, அமெரிக்காவின் RAYTHEON ஆகிய படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து NGLAW எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளை 2002இல் இருந்து உருவாக்கியுள்ளன. பின்லாந்து, லக்சம்பேர்க், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவை விற்பனை செய்யப்பட்டும் உள்ளன. தோளில் காவிச் சென்று ஏவக் கூடிய NGLAW 27.5இறத்தல் எடையுள்ளது. எண்ணூறு மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அது துல்லியமாகத் தாக்கக் கூடிய வகையில் அது கணினிமயப்படுத்தப் பட்டுள்ளது. இதன் பாயும் வேகம் ஒரு செக்கண்டுக்கு 200மிட்டர் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு 440மைல் ஆகும்.

உக்ரேனில் உக்கிரமான பரீட்சைக் களம்

சிரியாவிற்கு முப்பது T-90 போர்த்தாங்கிகளை இரசியா வழங்கியிருந்தது. அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு தனது ஜவலின் ஏவுகணைகளை வழங்கியிருந்தது. சிரியாவில் குர்திஷ்களும் சிரியப் படையினரும் நேரடி மோதல்களை எப்போதும் தவிர்த்தே வந்தனர். ஆனாலும் சிரியாவின் ஐந்து T-90 போர்த்தாங்கிகளை போராளிகள் அழித்திருந்தனர். சிரியப் போரில் இரசியாவின் வலுவற்ற புள்ளி அதன் குழாய்கள் என அறியப்பட்டது. அதை அழித்துவிட்டால் தாங்கி இயங்கும் ஆனால் அதனால் சரியாக படைக்கலன்களை வீச முடியாது. அமெரிக்காவின்ன் Tube-launched optical tracked wire guided missiles (TOW) மூலமாகவே T-90 போர்த்தாங்கிகள் அழிக்கப்பட்டன. ஆனால் உக்ரேனிடமுள்ள ஜவலின் ஏவுகணைகள் TOW ஏவுகணைகளிலும் பார்க்க சிறந்தவை. ஜவலின் ஏவுகணைகளை Fire & Forget ஏவுகணைகள் என அழைப்பர். அவற்றை இலக்கை நோக்கி ஏவுவிட்டால் மிகுதி வேலையை அவையே பார்த்துக் கொள்ளும் இலக்கு அசைந்து சென்றாலும் ஜவலின் தன் திசையையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். T-90 போர்த்தாங்கிகள் தன்னைச் சுற்ற ஒரு புகைக் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியின் அகச்சிவப்பு உணரிகளைக் குழப்பிவிடும் செயற்பாடு கொண்டவை. சிரியாவில் அவை போதிய பாதுகாப்பை வழங்கவில்லை.  ஜவலின் ஏவுகணைகள் மூன்று மைல் தொலைவுவரை பாய்ந்து தாங்கிகளை அழிக்க வல்லவை. இரசியாவின் மிக்ச் சிறந்த தாங்கிகள் T-14 Armata ஆகும். இவற்றில் எதிரியின் ஏவுகணைகளை குழப்பி திசைமாற்றும் திறன் உண்டு. அதனால் அமெரிக்கா தனது ஏவுகணைகளில் கம்பி வழிகாட்டியைப் பயன் படுத்துகின்றது. ஏவுகணைகளில் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் அதன் மூலம் எதிரியின் இலக்கு தொடர்பான தகவல்களை ஏவுகணைக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் ஏவுகணைக்கு இலக்குத் தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும். இதனால் இரசிய தாங்கிகளை அமெரிக்க ஏவுகணைகள் அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனின் சொந்த உற்பத்தி தாங்கிகள்

உக்ரேனியர்கள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது மிகச் சிறந்த படைக்கல உற்பத்தியாளர்களாக இருந்தார்கள். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த பின்னர் தமது படைத்துறை உற்பத்தியை தீவிரப்படுத்தினர். அவர்கள் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளுக்கு ஈடான Stugna-P anti-tank missilesகளை 2018 ஆண்டில் உற்பத்தி செய்தார்கள். அந்த ஆண்டில் மொத்தம் 2500 ஏவுகணைகள் உற்பத்தி செய்தனர். அவை பல இரசிய கவச வண்டிகளையும் வழங்கல் வண்டிகளையும் இரசியா 2014இல் ஆக்கிரமித்த உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அழித்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஜவலின் ஏவுகணைகளை எஸ்தோனியா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

பதுங்கு குழிகள்

குறுந்தூர ஏவுகணைகள் மூலம் எதிரியின் தாங்கிகளை அழிப்பதற்கு சிறந்த மறைவிடங்கள் அவசியமாகும். இரசியப் படைகளை எதிர்பார்த்து மூன்று மாதங்களாக காத்திருக்கும் உக்ரேனியப் படையினர் அமைத்துள்ள மறைவிடங்களை இரசிய விமானங்கள் முன் கூட்டியே அழிக்காமல் இருப்பதில் உக்ரேனின் வெற்றி தங்கியுள்ளது. 1994இல் செஸ்னியப் போராளிகள் குறுந்தூர ஏவுகணைகள் மூலம் பல இரசிய தாங்கிகளை அழித்தார்கள். இரசியாவின் bunker-buster குண்டுகளின் திறனும் உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாகும்.

எண்ணிக்கையில் குறைந்த இரசிய தாங்கிகள்

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், பிரித்தானியா வழங்கிய ஏவுகணைகள், உக்ரேனின் சொந்த தயாரிப்பு ஏவுகணைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் வரும் எண்ணிக்கை இரசியா உக்ரேனுக்கு அனுப்பவிருக்கும் 1200 போர்த்தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பல மடங்காக வரலாம். அவற்றுடன் இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசக் கூடிய ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி உக்ரேனுக்கு வழங்கியதுடன் உக்ரேனில் அவற்றை உற்பத்தியும் செய்ய அனுமதியும் வழங்கியுள்ளது. அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் ஆர்மினியாவிடமிருந்த இரசிய தாங்கிகளை துருக்கியின் ஆளிலிப் போர்விமானங்கள் துவம்சம் செய்து அஜர்பையானுக்கு வெற்றி கொள்ள வைத்தன.

உலகில் மிகச் சிறந்த தாங்கிகளை உருவாக்கும் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தால் பெரும் சவாலை அங்குள்ள ஏவுகணைகளால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உக்ரேன் அதற்கான தேர்வு நிலையமாகலாம்.

Friday 11 February 2022

அரபு யூத உறவை மாற்றும் ஈரான்

 

ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வரைக்கும் பாய்ந்து தாக்கக் கூடிய நிலையும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரான் வரை சென்று தாக்கக் கூடிய வலிமையையும் தற்போது பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளைச் சூழவுள்ள பிராந்திய போட்டியில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அரபுக்கள், யூதர், ஈரானியர் என்ற முப்பெரும் இனங்களுக்கிடையிலான் போட்டியையும் அது மாற்றி அமைத்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு உள்ளான அரபு நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்ரேலுடன் பல வழிகளில் ஒத்துழைக்கின்றன. ஈரானின் படைத்துறை வளர்ச்சியும் அது இரசியா, சீனா, வட கொரியா ஆகியவற்றுடன் அதிகரிக்கும் ஒத்துழைப்பும் அரபி நாடுகளைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது.

இஸ்ரேலுடன் படைத்துறைப் பயிற்ச்சி

ஐக்கிய அரபு அமீரகம், பாஹ்ரேன் ஆகிய் நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஐந்து நாள் போர்ப்பயிற்ச்சியை செங்கடலில் 2021 நவம்பர் மாதம் செய்தன. உலகத்தை வியப்பிற்கு உள்ளாக்கிய இந்தப் போர்ப்ப்யிற்ச்சியைத் தொடர்ந்து 2022 பெப்ரவரி 2-ம் திகதி IMX-22 என்னும் பெயரில் சவுதி அரேபியா, ஓமான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியை நடத்தின. ஏழு ஆண்டுகளாக நடக்கும் இப்போர்ப்பயிற்ச்சியில் இஸ்ரேல் முதற் தடவையாக இணைந்து கொண்டது. பாரசீகக் குடா அரபுக் கடல், ஓமான் வளைகுடா, செங்கடல், வட இந்துமாக்கடல் என பரந்த கடற்பரப்பில் நடந்த இப்போர்ப்பயிற்ச்சியில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவு முக்கிய பங்கு வகித்தது. இஸ்ரேலுடன் அரசுறவை வைத்துக் கொள்ளாத சவுதி அரேபியா அதனுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை மேற் கொண்டமைக்கு காரணம் ஈரானின் படைத்துறை வளர்ச்சி பற்றிய கரிசனையே.

பொது எதிரி ஈரான்

சவுதி அரேபியாவிற்கு வேறு நாடுகள் படைக்கலன்களை அல்லது படைத்துறைத் தொழில்நுட்பங்களை வழங்கும் போது இஸ்ரேல் தவறாமல் தனது ஆட்சேபனையை தெரிவிக்கும். ஆனால் சவுதி அரேபியாவின் ஏவுகணை உற்பத்திக்கு சீனா உதவி செய்த போது இஸ்ரேல் ஏதும் பேசவில்லை. சவுதியின் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட மாட்டாது என இஸ்ரேல் நம்பும் அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையில் உறவு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் வளர்ந்துள்ளது. அந்த ஏவுகணைகள் ஈரான் மீது வீசப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என இஸ்ரேல் அறியும். 2020 செப்டம்பரில் இஸ்ரேலுடன் ஐக்கிய அமீரகமும் பாஹ்ரேனும் அரசுறவுகளை ஏர்படுத்திக் கொண்டமைக்கு பொது எதிரியான ஈரானுக்கு எதிரான கூட்டு அமைக்க வேண்டும் என்ற நோக்கமே காரணம். 2012-ம் ஆண்டு ஈரானின் வடக்கு எல்லையில் உள்ள இஸ்லாமிய நாடாகிய அஜர்பைஜானின் விமானத்தளங்களை இஸ்ரேலிய விமானங்கள் பாவிப்பதற்கு இரகசியமாக அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக இஸ்ரேல் தனது படைக்கலன்களை தடையின்றி அஜர்பைஜானுக்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டது. 2020-ம் ஆண்டு நடந்த அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் அஜர்பைஜான் வெற்றி பெற்றதில் துருக்கியினது பகிரங்கப் பங்களிப்பும் இஸ்ரேலின் இரகசியப் பங்களிப்பும் முக்கிய பங்களித்தன. 2021 செப்டம்பரில் ஈரானிய ஊடகம் ஒன்று ஈரானுக்கும் இரசியாவிற்கும் எதிராக அஜர்பைஜானை அமெரிக்கா, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் பாவிக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியிருதது.

ஈரானின் சியா பிறைத்திட்டம்

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் படைத்துறை அடிப்படையிலும் அரசுறவியல் அடிப்படையிலும் வலிமை மிக்க நாடாக ஈரான் இருக்கின்றது. உள்நாட்டிலேயே பல படைக்கலன்களை உருவாக்குவதில் ஈரான் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகின்றது. ஈராக், சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் வலிமையாக உள்ளது. ஈராக், சிரியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஈரானின் சியா பிறைத் திட்டத்தின் முதல் இலக்கு ஈராக், இரண்டாம் இலக்கு சிரியா. சிரியாவில் ஈரான் செய்த படைத்துறை மற்றும் அரசுறவியல் நகர்வுகள் சியா இஸ்லாமியரான பஷார் அல் அசாத்தை பதவியில் நீடிக்கச் செய்கின்றதுடன் இரசியாவையும் துருக்கியையும் ஈரானுடன் ஒத்துழைக்கச் நிர்ப்பந்தித்துள்ளது. அசாத்தை பதவியில் இருந்து அகற்ற சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்படப் பல அரபு நாட்டு ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சி ஈரானின் நகர்வுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சியா பிறைத்திட்டம் நிறைவேறி அதனால் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் திறனையும் பெற்றால அதை மத்திய தரைக்கடலில் ஒரு வல்லரசாக்கும்.  

மேனா பிரதேசம்

அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையில் மேனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கப் பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் கொடுத்து வந்தது. இப்போது அமெரிக்கா தனது கவனத்தை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து மேனா பிரதேசத்தில் குறைக்கின்றது. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கை எரிபொருள் விநியோகம், கடற்போக்குவரத்து, இஸ்ரேலின் பாதுகாப்பு, இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு, ஈரானை அடக்குதல் ஆகியவை முதன்மையானவை. இஸ்ரேல் படைத்துறையிலும் உளவுத்துறையிலும் முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அயல் நாடுகள் தனித்தோ அல்லது பல ஒன்றிணைந்தோ அதன் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈரான் இஸ்ரேல் கரிசனை கொள்ளும் அளவிற்கு தனது படைக்கல உற்பத்தியை பெருக்குகின்றது. ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியிலும் யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் பலரை அமெரிக்கா அழித்த நிலையிலும் பல அரபு நாட்டு செல்வந்தர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்குவதைக் நிறுத்திய நிலையிலும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம் தீவிரமடைய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் எரிபொருள் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருப்பதால் அது தனது தேவையின் 40%ஐ உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 42% மற்ற அமெரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. தனது தேவையில் 12%ஐ மட்டுமே வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா பெறுகின்றது. அதனால் அமெரிக்காவில் தமது பாதுகாப்புக்கு தங்கியிருந்த வளைகுடா நாடுகள் தமது பாதுகாப்பில் மாற்றம தேவை என்பதை உணர்ந்துள்ளன. அமெரிக்காவின் மேனா பிரதேசக் கொள்கையில் ஈரானை அடக்குதல் மட்டுமே அதன் அதிக கவனத்தைப் பெறுகின்றது. ஈரானை அடக்கும் பொறுப்பை இஸ்ரேலும் அரபு நாடுகளும் இணைந்து மேற் கொண்டால் தனது பாரம் குறையும் என்பதால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்த்தான் என்னும் ஈரானின் இரண்டு எல்லை நாடுகளில் அமெரிக்கப் படையினர் பெருமளவில் இருந்தமை ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஈராக்கை தனது செய்மதி நாடாக்க ஈரான் விரும்புகின்றது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அமெரிக்கா செலுத்தி வந்த அக்கறை மெல்ல மெல்ல குறைந்து கொண்டு போகின்றது.

ஈரானின் ஆதரவுடன் வட யேமனில் இருந்து செயற்படும் ஹூதி எனப்படும் அன்சர் அல்லா அமைப்புப் போராளிகள் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் செய்வது. போல் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலை உள்ளது. 2300கிமீஇற்கும் அதிகமான தொலைவில் இருக்கு ஹூதி போராளிகளால் டெல் அவீவ் மீது ஆளிலிப் போர் விமானத்தாக்குதல் செய்ய முடியாது.  ஈரானின் ஆளிலிப் போர்விமானங்களின் பற்ப்பு தூரம் அதிகரிக்கும் போது மேலும் பல மாற்றங்களை மேனா பிரதேசத்தில் எதிர்பார்க்கலாம். 


Monday 7 February 2022

வேகமாக வளரும் இரசிய-சீன நட்பு

 


மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

வித்தியாசமான இரசிய சீன உறவு

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற ஒரு கேந்திரோபாயப் பங்காண்மை அல்ல. அந்த உறவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற உயர் நிலை பொருளாதாரக் கூட்டமைப்பும் அல்ல. சீனாவினதும் இரசியாவினதும் ஆட்சி முறைமைகள் வேறுபட்டனவாக இருப்பதால் அந்த உறவு ஒரு கொள்கைக் கூட்டணியும் அல்ல. அதே வேளை அது தேவைக்கு ஏற்ப ஒன்று கூடி பின்னர் கால் வாரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியும் அல்ல. அது அமெரிக்க உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ளவும் இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்ச்சி. இரசியாவும் சீனாவும் 4200கிமீ நீளமான தரை எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு 2006-ம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. சீனா தனது கொல்லைப் புறத்தில் மக்களாட்சியில் வளர்ச்சியடைந்த தைவான் இருப்பதையும் இரசியா தனது எல்லையில் வளருகின்ற மக்களாட்சி கொண்ட உக்ரேன் இருப்பதையும் விரும்பவில்லை. உலகில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைக் கைப்பற்றக் கூடிய வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் கைப்பற்றும் எண்ணம் எந்த நாட்டுக்கும் இல்லை.

எரிபொருள் வர்த்தகம்.

சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பைக் குறைத்து இரசியாவில் இருந்து பெறும் இயற்கை வாயு மூலம் தனது எரிபொருள் தேவையை சமாளிக்க சீனா முயல்கின்றது. சைபீரியா வலு (Power of Siberia) என்னும் எரிவாயுக் குழாய்த்திட்டம் மூலம் இரசியா சீனாவிற்கு சைபீரியாவில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கவிருக்கின்றது. புட்டீனின் சீனப் பயணத்தின் போது இரசியாவின் Rosneft நிறுவனமும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனமும் சீனாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு மில்லிய தொன் எண்ணெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. எரிவாயு விநியோகத்தையும் தற்போது உள்ள ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லிய கன மீற்றர் அளவில் இருந்து 48பில்லியன் கமீ ஆக உயர்த்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இரசிய சீன கூட்டுப் போர்ப்பயிற்ச்சி

Vostok 2018என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியை இரசியாவும் சீனாவும் செய்யதனVostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய் மிகப்பெரிய படைபயிற்ச்சி இதுவாக அமைந்தது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபட்டன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி நடந்தது. Tsentr-2019 (Center-2019) என்னும் பெயரில் 2019 செப்டம்பர் 16-21 வரை இரசியாவும் சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான், கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்ஹ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளும் இணைந்து படைப்பயிற்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தன.

பொருளாதார ஒத்துழைப்பு

2001-ம் ஆண்டில் $10.7பில்லியனாக இருந்த இரசிய-சீன வர்த்தகம் 2021இல் 14 மடங்காக அதிகரித்து $140பில்லியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 35% அதிகரித்தது. இரசியா தனது ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க முயல்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரசியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நடுவண் ஆசிய நாடுகளூடாகவும் நடக்கின்றது. புட்டீனின் பயணத்தில் இரசியாவின் தலைமையிலான யூரோ ஆசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt and Road Initiative) ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

நாட்டுறவிலும் உயர்ந்த நட்பு

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவிலும் பார்க்க ஜின்பிங்கிற்கும் புட்டீனிற்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்கின்றது. இருவரும் தத்தம் நாடுகளைத் தாமே உயிருள்ளவரை ஆளவேண்டும் என விரும்புகின்றார்கள். இருவரும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் மனித உரிமை என்னும் பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றன என இருவரும் கருதுகின்றனர். நேட்டோ விரிவாக்கத்தை இரசியா எதிர்ப்பதை ஜீ ஜின்பிங் ஆதரிக்கின்றார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றார் புட்டீன்.

சீனாவிற்கு சாதகமான உறவா?

இரசிய சீன உறவு சீனாவிற்கு இரசியாவிலும் பார்க்க அதிக நன்மையளிப்பதாக இருக்கின்றது என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவரின் கவனம் முழுமையாக சீனாவின் பக்கம் போகாமல் உக்ரேன் பக்கமும் போகச் செய்வதாக புட்டீன் உக்ரேனுக்கு எதிராகச் செய்யும் படை நகர்வுகள் அமைந்துள்ளன. பராக் ஒபாமா ஆசிய சுழற்ச்சி மையம் என்ற முன்னெடுப்பைச் செய்ய முயன்றபோது இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்ததால் அவர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா பன்னாட்டுக் கடல் பிராந்தியம் எனக் கருதும் தென் சீனக் கடலில் சீனா இரு செயற்கைத் தீவுகளை அமைத்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு எதிராகச் செய்ய முயலும் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்கு சீனாவில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரு படி உறவை உயர்த்தும் கூட்டறிக்கை

2021 ஜனவரியில் சீனாவின் ஊடகத்தில் இரசிய அதிபர் புட்டீன் எழுதிய Russia and China: A future-oriented strategic partnership என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இரசிய சீன உறவின் மேம்பட்ட நிலைக்கு சான்றாகி நிற்கின்றது. 2022 பெப்ரவரி 4-ம் திகதி இரு நாட்டுத் தலைவர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐயாயிரத்தி முன்னூறுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்த நீண்ட அறிக்கையில்:

1. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது உள்ள ஒன்றிற்கொன்று நன்மையளிக்கும் சிறந்த உறவை தொடர்ந்தும் பேணுவதும் மேம்படுத்துவதும்;

2. இரசியாவின் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt & Road Initiative) இணைந்து செயற்படுவது.

3. ஆர்க்டிக் வலயத்தில் இணைந்து செயற்படுவது.

4. இரு நாடுகளும் உலக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவாலையிட்டு கரிசனை கொண்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இன்னொரு நாட்டின் பாதுகாப்பை பலியிடக் கூடாது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

5. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இரு நாடுகளும்

அறம்சார் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் விதிகளுக்கமைந்த உலக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.

6. நேட்டோ விரிவாக்கத்தை இரு நாடுகளும் எதிர்க்கின்றன. (உக்ரேன் என்ற வார்த்தையே அந்த கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.)

7. இரசியா-சீனா-இந்தியா என்றவடிவத்தில் ஒத்துழைப்பை விரும்புகின்றோம்.

8. கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒத்துழைக்க விரும்புகின்றோம்.

இரசியாவும் சீனாவும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது அவற்றின் பொது எதிரிகளுக்கு பெரும் சவாலாகும். பல நட்புக்களின் வலிமையை பொது எதிரியே முடிவு செய்கின்றான். அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குளிகால ஒலிம்பிக்-2022இல் நடுங்குகின்றது.

இரசிய சீனக் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.bilaterals.org/?joint-statement-of-the-people-s

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...