Followers

Sunday 28 March 2021

அமெரிக்க சீனப் பனிப்போர் ஆரம்பிக்கவில்லை

 


முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்புக்  கேந்திரோபாயத்தில் அமெரிக்கா கட்டியெழுப்பிய அமெரிக்காவை சுற்றிய உலக ஒழுங்கை சீனா இல்லாமற் செய்து தனக்கு சாதகமான ஓர் உலக ஒழுங்கை கட்டி எழுப்ப முயல்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. டிரம்ப்பின் பதவிக்காலத்தில் மோசமடைந்திருந்த அமெரிக்க சீன உறவு ஜோ பைடன் பதவிக்கு வந்த பின்னர் சிறிது தணிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிகாவின் வட துருவ மாநிலமான அலாஸ்க்காவில் 2021 மார்ச் மாதம் 19-ம் 20-ம் திகதிகளில் நடந்த அமெரிக்க சீனப் பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் விதிக்கப்பட்ட மேலதிக வரிகளை இல்லாமற் செய்யத் தவறிய இரு தரப்பினரும் பகிரங்கமாக ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக்கொண்டனர். அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் மேலதிக வரி நீக்கம் தொடர்பான உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவெ உள்ளன.

சீன அமெரிக்க உறவு சோவியத் அமெரிக்க உறவு போலல்ல.

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் நடந்த வர்த்தகம் சீன அமெரிக்க வர்த்தகம் போல் பாரிய அளவிலானது அல்ல. சீனாவால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சோவியத் ஒன்றியத்தால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல் போல் மோசமானதுமல்ல. சோவியத் ஒன்றியம் உலகெங்கும் பரப்ப முயன்ற பொதுவுடமை ஆட்சி முறைமை அமெரிக்கர்களின் வாழ்வையே தலைகீழாக மாற்றிவிடும் என அமெரிக்கர்கள் 1950இல் இருந்து கரிசனை கொள்ளத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போர் முடிந்த போது 1. உலக தங்க இருப்பின் மூன்றில் இரண்டு பங்கை அமெரிக்கா வைத்திருந்தது. 2. உலக மூலதனத்தின் முக்காற் பங்கு அமெரிக்காவினுடையது. 3. உலக மொத்த தேசிய உற்பத்தியின் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவினது. 4. உலக தொழிற்துறை உற்பத்தியில் அரைப்பங்கு அமெரிக்காவினுடையது. அந்த நிலையை தொடர்ந்து பேண அமெரிக்காவிற்கு உலக ஆதிக்கப் தேவைப்பட்டது. அமெரிக்காவும் சோவியத்தும் தம் பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றில் ஒன்று பெரிதும் தங்கியிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசியா துருக்கி நீரிணையையும் ஈரானையும் கைப்பற்றும் திட்டத்தை வைத்திருந்தது. அப்போது சோவியத் பரப்ப முயன்ற பொதுவுடமைத் தத்துவத்திற்கு உலகெங்கும் கணிசமான வரவேற்ப்பும் இருந்தது. பிரித்தானிய மக்கள் தமக்கு போரை வென்று கொடுத்த வில்ஸ்டன் சேச்சிலை தேர்தலில் தோற்கடித்து சமுகவுடமைக் கட்சியான தொழிற்கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். 1949இல் சீனாவில் பொதுவுடமை ஆட்சி ஏற்பட்டது. உலகெங்கும் பல நாடுகளை பொதுவுடமைவாதிகள் புரட்சி மூலம் கைப்பற்ற முயன்றனர். சோவியத் ஆதரவுடன் நடக்கும் புரட்சிகளைத் தடுக்கவே பனிப்போர் தீவிரமானது. சீனா தனது பொதுவுடமைவாதத்தை மற்ற நாடுகளுக்கு பரப்ப இப்போது முயல்வதில்லை. ஆனால் சீனாவின் வெற்றிக்குக் காரணம் அதன் ஆட்சிமுறைமைதான் என்பதை உலக அரங்கில் பறைசாற்றுகின்றது. அப்படிப் பறைசாற்றுவதன் நோக்கம் தனது ஆட்சிமுறைமையை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதற்கல்ல. மாறாக சீனர்கள் தமது ஆட்சி முறைமை பற்றி பெருமையும் மகிழ்ச்சியுமடைய வேண்டும் என்பதற்காகவே. ஹொங் கொங் மக்களுக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட மக்களாட்சி உரிமையை சீனா படிப்படியா இல்லாமல் செய்வதும் ஹொங் கொங்கின் ஆட்சி முறைமைமீது பிரதான சீன நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு விருப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே. British Exceptionalism, American Exceptionalism போன்றவை பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் தம்மை மற்ற உலக மக்களிலும் பார்க்க மேம்பட்டவரக்ள் என சிந்திக்கும் கொள்கையாகும். அதே போல் சீனர்களுக்கும் Chinese Exceptionalism என்ற சிந்தனை வரவேண்டும் என சீன ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள்.

ஒன்றின் மீது ஒன்று தங்கியுள்ளன

அமெரிக்காவினதும் சீனாவினதும் பொருளாதாரங்கள் ஒன்றில் ஒன்று பெரிதும் தங்கியுள்ளன. சீனா அமெரிக்காவிற்கு 435பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கின்றது. அமெரிக்கா சீனாவிற்கு 125பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கின்றது. அமெரிக்காவின் திறைசேரியின் முறிகளை அதிகம் வாங்கி வைத்துள்ள நாடு சீனாவாகும். 2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

போர் இன்றி சீனாவால் தொடர முடியுமா?

அமெரிக்காவை சீனா அடக்குவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு போர் நடக்க வேண்டும். அமைதியான எழுச்சி என்னும் பெயரில் தனது பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய சீனாவின் படையினர் எந்த ஒரு காத்திரமான போர் முனை அனுபவங்களும் இல்லாதவர்களாக இருக்கின்றார். சீனக் கடற்படையில் அட்மிரல் பட்டம் பெறத் தகுதியான போர் அனுபவம் யாருக்கும் இல்லை என்கின்றனர் மேற்கு நாட்டு படைத்துறை நிபுணர்கள். கிரேக்க சரித்திரவியல் வல்லுனரான துசிடைட்டின் கருத்துப் படை புதிதாக ஒரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் வல்லரசுடன் போர் புரிந்தே ஆக வேண்டும். இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் இடையில் நடந்த போர், இரண்டு உலகப் போர்கள் போன்றவை புது வல்லரசுகள் உருவாக முயன்ற போது உருவானவையே. ஆனால் அமெரிக்காவும் இரசியாவும் நேரடிப் போர் செய்யவில்லை. இரண்டும் ஒன்றிற்கு ஒன்று தம் வலிமையைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தன. அதே போல் சீனாவும் தன் வலிமையைக் காட்டி அமெரிக்காவை தனது பிராதியத்தில் இருந்து விலகச் செய்வது கடினமான ஒன்றாகும்.

சீனக் கனவு

2021 ஜூலையில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவடைகின்ற போதும் 2049இல் சீன பொதுவுடமைப் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவடையும் போதும் சீனா எட்ட முடிவு செய்து வைத்திருந்த இலக்குகள் சீனக் கனவு எனப்படும். இந்தக் கனவுத் திட்டத்தில் சீனா மற்ற நாடுகளுடன் இசைவிணக்கமான உறவையே விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. சீன விரிவாக்கம் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் 2030-ம் ஆண்டின் பின்னர் சீன மக்கள் தொகைக் கட்டமைப்பில் வயோதிபர்கள் அதிகமாகவும் இளையோர் குறைவாகவும் இருக்கும் நிலை உருவாகும். அதனால் ஏற்படப்போகும் பொருளாதாரப் பின்னடைவை சமாளிக்க உலகெங்கும் சீனா முதலீடு செய்கின்றது. தனது வெளிநாட்டு முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாயை வைத்து தனது மக்களை பராமரிக்க சீனா விரும்புகின்றது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீனா ஒரு பெரிய போரில் ஈடுபட்டால் அதன் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படையும். 2018-ம் ஆண்டு சீன மக்கள் தொகை 1.39பில்லியன்கள் எனவும் 2019இல் அது 1.4பில்லியன்களாக உயர்ந்ததாகவும் சீன அரசு அறிவித்திருந்தது. வழமையாக ஒவ்வொரு மார்ச் மாதமும் முந்தைய ஆண்டின் மக்கள் தொகையை அறிவிக்கும் சீனா 2021மார்ச்சில் இறுதிவரை தனது மக்கள் தொகைக் கணக்கை வெளிவிடவில்லை. மக்கள் தொகை சீன அரசு விரும்பியது போல் இல்லை என்பதால் வெளிவிடப்படவில்லை என ஐயம் தெரிவிக்கப்படுகின்றது. தனது பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்தி அறிக்கை விடுவது போல் சீனா தனது மக்கள் தொகையையும் மிகைப்படுத்திச் சொல்வதாக குற்றம் சாட்டப்படுகின்றது. தமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதையிட்டு பல சீனர்கள் பெருமையடைகின்றார்கள் என்பதை சீன அரசு நன்கு அறியும். சிலர் சீனாவின் மொத்த மக்கள் தொகை 1.26முதல் 1.28பில்லியனாக இருக்கலாம் என மேற்கு நாடு மக்கள் தொகை கண்ப்பீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் அமெரிக்க ஊடகம் China this century is on track to experience history’s most dramatic demographic collapse in the absence of war or disease எனத் தெரிவித்துள்ளது.  

அமெரிக்கா வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதா?

அமெரிக்காவின் பொருளாதாரம் முன்பு வளர்ந்தது போல் இனி வளர முடியாது என சீனா நம்புகின்றது. உலகெங்கும் படைத்தளங்களை வைத்து பராமரிக்க முடியாமல் பிரித்தானியா பின் வாங்கியதைப் போல அமெரிக்காவும் பின்வாங்கும். அப்போது ஏற்படும் இடைவெளியை தான் போர் இன்றி நிரப்பிக் கொள்ளலாம் என சீனா நம்புகின்றது. அதற்காக புதிய பட்டுப்பாதை, கடல் வழிப்பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை, பொருளாதாரப்பாதை என பல திட்டங்களை சீனா முன்னெடுக்கின்றது. ஆனால் அமெரிக்கா தான் விழ மாட்டேன் எனவும் சீனாவை மேலும் எழ அனுமதிக்க மாட்டேன் எனவும் நம்புகின்றது. அமெரிகாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அமெரிக்காவிற்கு சாதகமான தொழில்நுட்ப இடைவெளியை மேலும் அதிகரிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இன்னும் எண்பது ஆண்டுகளில் அமெரிக்காவின் மக்கள் தொகை சீனாவிலும் பார்க்க அதிமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா மக்கள் தொகையை குடிவரவு மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். சீன மக்களோ ஆட்சியாளர்களோ குடிவரவை விரும்புவதாக தெரியவில்லை.

பனிப்போரல்ல

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடயிலான போர் சீனா தைவானைக் கைப்பற்ற முயலும் போது நடக்கலாம். சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சி செய்யும் போது அதை தடுக்க அமெரிக்கா வகுக்கும் வியூகத்தை பார்த்து சீனா தயக்கம் காட்டினால் அது அமெரிக்க சீன பனிபோரின் ஆரம்பம் என்று சொல்லலாம். அல்லது சீனாவின் வலிமைப் பெருக்கத்திற்கு இனி தன்னால் ஈடு கொடுக்க முடியாது என அமெரிக்கா சீனாவைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் இருந்து விலகிச் சென்றால் போரோ பனிபோரே ஆரம்பமாக மாட்டாது. சீனா இந்த இரண்டாவது முறையை நோக்கியே தனது நகர்களைச் செய்ய விரும்பும். அமெரிக்க சீன போர் அல்லது பனிப்போர் தைவானை தன்னுடன் இணைக்க முயலும் போது ஆரம்பமாகும். தைவானியர்கள் வேண்டாம் ஐயா எமத் நாட்டை சுற்றி இரு வல்லரசுகளின் முறுகல் நாம் பேசாமல் சீனாவின் ஒரு மாகாணமாக இருந்து விட்டுப் போகின்றோம் எனவும் முடிவு செய்யலாம். அதற்கு சீனாவின் பொருளாதாரம் தைவானியர்கள் விரும்பும் அளவிற்கு செழுமையானதாக இருக்க வேண்டும்.

Sunday 14 March 2021

மத்திய கிழக்கில் புதிய படைத்துறைக் கூட்டமைப்பு உருவாகுமா?

 


2021 மார்ச் 7-ம் திகதி அமெரிக்காவின் கேந்திரோபாய குண்டு வீச்சு விமானங்களான பி-52 இரண்டு இஸ்ரேல், சவுதி அரேபியா, காட்டார் ஆகிய நாடுகளின் போர்விமானங்கள் புடைசூழ மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பில் பறந்தன. அமெரிக்காவில் இருந்து கிளம்பிப் பறந்த இரு B-52 Stratofortress விமான்ங்களுடன் இடையில் வைத்து மற்ற விமானங்கள் இணைந்து கொண்டன. இந்த ஆண்டில் மத்திய கிழக்கில் இப்படியான நான்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களை தடுக்கவும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பங்காளி நாடுகளிற்கும் நட்பு நாடுகளிற்கும் அவற்றின் பாதுகாப்பை இட்ட கரிசனையைக் கருத்தில் கொண்டும் இந்த விமானப் பறப்புக்கள் மேற்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கை

அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கையில் 1. உலக எரிபொருள் விநியோகம், 2. இஸ்ரேலின் பாதுகாப்பு, 3. இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றிற்கான முக்கியத்துவம் இப்போது குறைந்து விட்டது. இஸ்ரேல் படைத்துறையிலும் உளவுத்துறையிலும் முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அயல் நாடுகள் தனித்தோ அல்லது பல ஒன்றிணைந்தோ அதன் மீது தாக்குதல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈரான் இஸ்ரேல் கரிசனை கொள்ளும் அளவிற்கு தனது படைகல உற்பத்தியை பெருக்குகின்றது. ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியிலும் யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் பலரை அமெரிக்கா அழித்த நிலையிலும் பல அரபு நாட்டு செல்வந்தர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்குவதைக் நிறுத்திய நிலையிலும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம் தீவிரமடைய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் எரிபொருள் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருப்பதால் அது தனது தேவையின் 40%ஐ உள்நாட்டில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. 42% மற்ற அமெரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது. தனது தேவையில் 12%ஐ மட்டுமே வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா பெறுகின்றது. அதனால் அமெரிக்காவில் தமது பாதுகாப்புக்கு தங்கியிருந்த வளைகுடா நாடுகள் தமது பாதுகாப்பில் மாற்றம தேவை என்பதை உணர்ந்துள்ளன.

பொருளாதாரம் வளராத போதும் தளராத ஈரான்

மேற்கு நாடுகளின் கடுமையான பொருளாதார தடைகளை ஈரான் சமாளித்துக் கொண்டிருக்கின்றது. உலகில் மிக வலிமை மிக்க இரு உளவுத்துறைகளால் ஈரானில் ஓர் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை. பராக் ஒபாமாவில் ஆட்சிக் காலத்தில் ஈரானில் மிதவாதிகளின் கைகளுக்கு ஆட்சியை மாற்றும் முயற்ச்சியும் தோல்வியடைந்தது. 2019இல் 7.6% பொருளாதார வீழ்ச்சியைக் கண்ட ஈரானியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் கொவிட்-19 தொற்று நோய்க்கு நடுவில் தன் பொருளாதார வீழ்ச்சியை 6% ஆகக் குறைத்தது. 2021இல் ஈரானியப் பொருளாதாரம் 3%இலும் அதிக வளர்ச்சியடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஈரானியர்களின் தனி நபர் வருமானம் 12,912 டொலர் இது இந்தியாவின் 6,920 டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்ததாகும். இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானின் புளோட்டோனியம் உற்பத்தி தொடர்பாக முறைசாரா பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது. அரபு நாடுகளையும் இஸ்ரேலையும் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான முதன்மைக் காரணம் ஈரான் ஆகும். ஈரானுடைய படைத்துறை வளர்ச்சி இவர்களை கரிசனை கொள்ள வைத்தது. பல பன்னாட்டு ஊடகங்களில் “எப்படி ஈரான் இஸ்ரேலையும் அரபு நாடுகளையும் ஒன்றுபட வைத்தது?” என்பது போன்ற தலைப்பில் பல கட்டுரைகள் 2020-ம் ஆண்டு வெளிவந்தது.

துருக்கியின் பிராந்திய ஆதிக்கம்

துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கையில் கடந்து மூன்று ஆண்டுகளாக பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்காசியா, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா ஆகிய பிராந்தியங்களில் துருக்கி தனது ஆதிக்கத்தை வளர்க்க முயல்கின்றது. சிரியா, லிபியா, போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போரிலும் அஜர்பைஜான் ஆமீனியா ஆகிய நாடுகளுக்கிடையிலான போரிலும் துருக்கி காத்திரமான பங்குகளை வகுத்தது. அரபுக்கள், ஈரானிய, துருக்கியர் ஆகிய மூன்று பெரும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இனங்களிடையேயான போட்டி நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

சவுதி எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல்

யேமனில் இருந்து செயற்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி போராளி அமைப்பினர் 2021 மார்ச் மாதம் 8-ம் திகதி சவுதி அரேபிய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் கொண்டு நடத்திய தாக்குதலை இட்டு சவுதி மட்டுமல்ல அமெரிக்காவும் கரிசனை கொண்டுள்ளது. சவுதிக்கு அமெரிக்க வழங்கும் வான் பாதுகாப்புகளையும் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்த மாதிரியான தாக்குதல்கள் 2015-ம் ஆண்டு ஏழு தடவையும், 2016இல் பத்து தடவையும் 2017இல் ஒன்பது தடவையும் 2018இல் முப்பதிற்கு மேற்பட்ட தடவையும், 2019இல் பதினெட்டு தடவையும் 2020இல் வழிகாட்டல் ஏவுகணைகள் உட்பட பல தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட ஆளில்லா விமானங்களையும் கொண்டு ஹுதி அமைப்பினர் சவுதி மீது தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா யேமனில் செய்யும் பல குண்டுத்தாக்குதலால் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் கூட கண்டித்திருந்தன.

இஸ்ரேலிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய வர்த்தகக் கப்பல் மீது 2021 பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் தாக்குதல் நடாத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஐநா சபையில் ஈரானிய தூதுவர் அதைக் கடுமையாக மறுத்திருந்தார். ஈரானின் ஆதரவுடம் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரியப் போரின் போது நேரடிப் போர்ப்பயிற்ச்சியையும் புதிய படைக்கலன்களை இயக்கும் திறனையும் பெற்றுள்ளது. ஹிஸ்புல்லாவை அடக்க இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.

படைத்துறைக் கூட்டமைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் படைத்துறைக் கூட்டமைப்புக்கள் அவ்வப்போது உருவாகுவதுண்டு. 1955இல் துருக்கி, ஈரான், ஈராக், பாக்கிஸ்த்தான், ஐக்கிய இரச்சியம் ஆகிய நாடுகளை அமெரிக்கா ஒன்றிணைத்து ஈராக்கின் பாக்தாத் நகரில் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை கைச்சாத்திட வைத்தது. இதன் மூலம் மத்திய உடன்படிக்கை நாடுகள் என்ற படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் மத்திய கிழக்கு விரிவாக்கத்தை தடுப்பதே. ஈரானிலும் ஈராக்கிலும் நடந்த ஆட்சி மாற்றங்களால் இந்த அமைப்பு 1979இல் கலைக்கப்பட்டது. எகிப்திய முன்னாள் அதிபர் கமால் நாசரும் சிரிய முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அசாத்தும் ஓர் அரபு நாட்டு பாதுகப்பு கூட்டமைப்பு உருவாக்க எடுத்த கடும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. இப்போது இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் ஆகிய நாடுகளிடையேயான படைத்துறை மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு அணமைக்காலங்களாக அதிகரித்து வருகின்றன. இவற்றினிடையேயான ஒத்துழைப்பு ஈரான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தலை சமாளிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டவை. சவுதி, அமீரகம், பஹ்ரேன் ஆகிய நாடுகளின் மன்னர்கள் தமக்கு எதிராக தமது படையின் சதி செய்யாமல் இருப்பதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் ஒத்துழைப்பை நாடுகின்றன. இஸ்ரேலுடன் வர்த்தகம், படைத்துறை, உளவு போன்றவற்றில் மற்ற மூன்று நாடுகளும் ஒத்துழைப்பது 2020-ம் ஆண்டில் பெருமளவு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் மீது தங்கியிருப்பதை குறைக்க நான்கு நாடுகளும் விரும்புகின்றன. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் இஸ்ரேலிடமிருந்து அந்த தொழில்நுட்பத்தை வாங்க விரும்புகின்றன. இஸ்ரேலின் IRON DOME, DAVID’S SLING and ARROW ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளிலும் அந்த மூன்று நாடுகள் அக்கறை காட்டுகின்றன. முன்பு மத்திய கிழக்கு உறவுகளிலும் போர்களிலும் தலைமை வழங்கிய எகிப்து இப்போது முன்னணியில் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது நடக்கும் லிபியா உள்நாட்டு போரில் எகிப்த்து பங்கு வகிக்கின்றது என்பது செய்தியில் அடிபடுகின்றது.

படைத்துறை ஒத்துழைப்பும் கூட்டமைப்பும் வெளியார் தலையீடின்றி தமது நிலையை உணர்ந்து நல்ல நோக்கதுடன் முன்னெடுக்கப்படும் போது மட்டுமே வெற்றியளிக்கும் என்பதற்கு 1955இல் பக்தாத்தில் உருவாக்கப் பட்ட படைத்துறைக் கட்டமைப்பை போலவே பயனின்றிப் போகும். அரபு ஆட்சியாளரக்ளும் இஸ்ரேலியர்களும் மட்டுமே ஒத்துழைக்கின்றனர். அரபு மக்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் ஈரானை வெறுப்பார்களா?


Friday 12 March 2021

ஸ்டாலின் - பழனிச்சாமி ஓர் ஒப்பீடு

 


மு. க. ஸ்டாலின் (1953) எடப்பாடி பழனிச்சாமியிலும் (1954) ஒரு வயது மூத்தவர். ஸ்டாலின் 14 வயதில் கட்சிப் பரப்புரை ஆரம்பித்து விட்டார். 1967 தேர்தலில் 14 வயதுச் சிறுவனாக பரப்புரையில் ஈடுபட்டவர். அப்போது மோடியோ அமித் ஷாவோ அல்லது எடப்பாடியாரோ அரசியலுக்கு வரவில்லை. அன்றில் இருந்தே ஸ்டாலின் தீவிர அரசியலில் இருப்பவர். எடப்பாடியாரை யாரும் தமிழரல்லர் எனச் சொல்வதில்லை. ஆனால் ஸ்டாலினைச் சொல்வதுண்டு.

ஸ்டாலின் தன் தந்தையின் வாரிசாக அரசியலுக்கு வந்தார். எடப்பாடியார் அப்படியல்ல. ஸ்டாலினை சுற்றிவர அவரது சகோதரி கனிமொழி மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் திமுகவில் முக்கிய பதவிகளை வகிப்பதாலும் ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர் தயாநிதி மாறன் நாடாளமன்ற உறுப்பினராக இருப்பதாலும் திமுக ஒரு குடும்பக் கட்சி என்ற குற்றச்சாட்டை எதிர் கொள்கின்றார். கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கை வைத்து எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. வி கே சசிகலா சுட்டிக்காடிய படியால் தான் அவர் முதல்வரானார் என்ற குற்றச் சாட்டு உண்டு

ஸ்டாலின் 1983இல் திமுக பொதுக்குழுவில் இடம்பெற்றார். 2001 சென்னை நகர பிதா. 2006-ம் ஆண்டு மீண்டும் நகர பிதா. ஜெ ஆட்சியில் வளர்ச்சித்துறை அமைச்சர். 2009இல் துணை முதலமைச்சர் பதவி. 2016இல் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை வகித்தார். அரச முகாமைத்துவத்தில் ஸ்டாலினின் அனுபவம் எடப்பாடியாரின் அனுபவத்திலும் சிறந்தது. நகர பிதாவாகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்க முடியாது என அரசால் சட்டம் இயற்றப்பட்ட போது நகர பிதா பதவியை ஸ்டாலின் துறந்தார். ஆனால் அவர் சட்டப்படி பதவியில் இருந்திருக்கலாம் எனதீர்ப்பு வந்தது.

ஸ்டாலின் தன் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு செல்வந்தர். எடப்பாடியார் அந்த அளவு செல்வந்தரல்லர். எடப்பாடி சொத்து எட்டுக்கோடிக்கு மேல் இருக்கலாம். ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை வீடு 50 கோடி பெறுமதியானது. அவரது கார்களின் பெறுமதி 10கோடி. திமுகவின் முரசொலி அறக்கட்டளையிடம் இருக்கும் சொத்து பல நூறு கோடி. முரசொலி அறக்கட்டளை மு க ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மகளின் கணவர் சபரீசன் ஆகியோரின் பெயரில் உள்ளன.

அபிராமி…..அபிராமி....

இவரது இளவயதில் முதல்வரின் மகனாக பல அடாவாடித்தனங்களில் ஈடுபட்டதா குற்றம் சாட்டப்படுவதுண்டு. அவர் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்க்கும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையின் தலைமைக் காவலாளியின் மருமகள் ஸ்டாலினால் பாதிக்கப்பட்டவர். அவர் ஸ்டாலினை சித்திரவதை செய்தார். அவர் ஸ்டாலினைத் தாக்கும் போது குறுக்கே பாய்ந்து தடுத்த சிட்டிபாபு என்ற இன்னும் ஒரு கழக உறுப்பினர் கொல்லப்பட்டார். ஸ்டாலின் தப்பித்துக் கொண்டார். சிறையிலேயே தனது பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை எழுதினார்.

கணக்கு விடும் ஸ்டாலின்

தனித்தமிழில் சமஸ்கிருத எழுத்துக்களைத் தவிர்த்து எழுத வேண்டும் என்ற அடிப்படையில் அவரது பெயர் சுடாலின் என்று எழுதப்பட்டது. அதை அவரது எதிரிகள் திரித்து சுடலை என அழைக்கின்றார்கள். மீம்ஸ்களில் அவரை சுடலை என குறிப்பிடுவார்கள்.

தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி உடையலாம் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தொடர் பேச்சு வார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்பட்டது ஸ்டாலின் வெற்றி.

இதே மாதிரியான வெற்றியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பெற்றுள்ளார். உட்கட்சிப் பூசல், அமித்-மோடி அழுத்தம் ஆகிய இரண்டும் எடப்பாடியாருக்கு கடுமையான சவால். அவர் அதை சமாளித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இருவரும் நாவன்மை மிக்கவர்களல்லர். இருவரும் எழுத்தாளர்களுமல்லர். இருவரும் மேடைகளில் எழுதி வாசிக்கும் போதே தடுமாறுபவர்கள்.

எடப்பாடியார் 1974இல் அரசியலுக்கு வந்தவர். அது ஸ்டாலின் வந்து 7 ஆண்டுகளின் பின்னர் நடந்தது.

எடபாடியார் தனது விஞ்ஞானப் பட்டப்படிப்பில் தேறவில்லை. ஸ்டாலின் சிறையில் இருக்கும் போது தனது அரசியில் இளங்கலைமானி பட்டப்படிப்பின் இறுதித் தேர்வை எழுதி சித்தியடைந்தார்.

1984இல் ஸ்டாலின் தனதுமுதல் தேர்தல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.

1989 சட்ட சபைத் தேர்தல் ஸ்டாலினுக்கு இரண்டாவது தேர்தலாகவும் எடப்பாடியாருக்கு முதல் தேர்தலாகவும் அமைந்தது.

திருச்செங்கோடு தொகுதியில் எடப்பாடியார் வெற்றி ச்பெற்றார். அதே தேர்தலில் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.

2011இல் அமைச்சர் பதவி: நெடுஞ்சாலை சிறுதுறைமுகங்கள்.

ஸ்டாலின் இரண்டு திரைப்படங்களிலும் இரண்டு தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்டாலின் போட்டியிட்ட சட்ட மன்றத் தேர்தல்களில் ஆறில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளார்.

1984இலும் 1991இலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டர். 1996இல் இருந்து கொளத்தூர் தொகுதியில் தொடச்சியாக வெற்றி பெற்று வருகின்றார். தந்தையைப் போலவே இவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டுவதில் எடப்பாடியார் ஸ்டாலினிலும் பார்க்க அதிக சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஈழத்தமிழர்கள் இத்தாலிச் சனியன் என அழைக்க விரும்பும் சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணி தொடருவதை விரும்புகின்றார். அமித் ஷா எப்படி கூட்டணி அமைத்துக் கழுத்தறுப்பது என்பதை மனதில் வைத்தே செயற்படுகின்றார். திமுகவை அழிக்கும் நோக்கமோ வலிமையோ காங்கிரசிடம் இல்லை.

ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியால் ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

அடுத்து எடப்பாடியார் எதிர் கொள்ளவிருக்கும் பிரச்சனை அண்ணா திமுக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் தேர்வு ஆகும். பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளர்கள் அதிகம் போட்டியிடுவதை விரும்புவார். எடப்பாடியார் அந்தப் பிரச்சனையை தவிர்க்க சென்ற ஆண்டு போட்டியிட்ட வேட்பாளர்களையே அதிமுக சார்பில் களமிறக்க முனைகின்றார்.

திமுகவில் தற்போது உள்ள பழம் பெரும் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைக்க அதிக முனைப்பு காட்டுகின்றார்கள். அதைச் சமாளிக்க தனது மகன் உதயநிதியை தேர்தலில் போட்டியிடாமல் நிற்பாட்ட ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அதற்கு அவரது குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எடப்பாடியாரும் ஸ்டாலினும் தங்கள் கட்சிகளின் சார்பில் 170இற்கு மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்கள். அறுதிப் பெரும்பான்மையிலும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் அல்லது யார் வெற்றி பெற்றாலும் அவர்களது ஆட்சியை அமித் ஷா முழுங்கி விடுவார் என்ற அச்சம் இருவருக்கும் உண்டு. அமித் ஷா திமுக பெருவெற்றியடையாமல் தடுப்பதற்காகவே அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட அமித் ஷா சம்மதித்தார்.

இருவருக்கும் ஈழத்தமிழர் பற்றி அக்கறை இல்லை.

இந்தியாவை ஒரு சிலமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு Oligarchy ஆக மாற்ற நடந்து கொண்டிருக்கும் முயற்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும அறிவு இல்லை. 

தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவில் இருந்து 45 சட்ட மன்ற உறுப்பினர்களையும் திமுகவில் இருந்து 45 சட்ட மன்ற உறுப்பினர்களையும் பாஜவிற்கு கட்சி தாவச் செய்து பாஜக் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமனை முதல்வர் பதவியில் அமர்த்துவார் அமித் ஷா என்ற அச்சம் ஸ்டாலினையும் எடப்பாடியாரையும் நிச்சயம் ஆட்டிப்படைக்கும்.

Monday 8 March 2021

அமெரிக்காவின் புதிய லேசர் படைக்கலன்கள்


தற்போதுள்ள லேசர் படைக்கலன்களிலும் பார்க்க ஒரு மில்லியன் மடங்கு வலிமையுள்ள லேசர் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.

லேசர் என்பது என்ன?

லேசர் என்பது செறிவாக்கப்பட்ட ஒளிக்கதிர்கள். Light Amplification by Stimulated Emission of Radiation என்பதை அதன் முதலெழுத்துக்களைக் கொண்டு ஆக்கப்பட்ட சொல் LASER ஆகும். அவ்வகையில் லேசர் என்பது ஒளியை மிகையாக்கி தூண்டப்பட்ட கதிர்வீச்சு செய்யும் கருவியாகும். லேசர் ஓரியல்பான, ஒற்றை நிறமுடைய, திசைப்படுத்தப்பட்ட, மிகச்செறிவான ஒளிக்கதிராகு, பொதுவாக ஒளியில் ஏழு நிறங்கள் கலந்துள்ளன. ஆனால் லேசரில் ஒரு நிறம் மட்டுமே இருக்கும். எரியும் தீயில் அல்லது ஒளிரும் மின் குமிழில் இருந்து பல திசைகளிலும் ஒளி வீசப்படும். ஆனால் லேசர் கருவியில் இருந்து வரும் ஒளி ஒரு திசையில் மட்டும் செல்லும். மற்ற ஒளி மூலங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் பல் வேறுபட்ட அலைநீளங்களைக் (Wavelengths) கொண்டிருக்கும். ஆனால் லேசரில் இருந்து வரும் ஒளி ஒரே அலைநீளத்தைக் கொண்டது. மருத்துவம் உட்படப் பல பயந்தரு துறைகளின் லேசர் கதிர்கள் பாவிக்கப்படுகின்றன.


பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.



விமானம் தாங்கி கப்பல்களை எதிர்க்க ஹைப்பர் சோனிக்

அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள  hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது.  ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கிய பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் ஏவுக் ஆயிரம் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் பெறுமதியான ஏவுகணையை வீச வேண்டியுள்ளது.

விமானங்களில் லேசர் படைக்கலன்கள்

விமானங்களில் பொருத்தக் கூடிய அளவிற்கு சிறிய லேசர் கதிர் பிறப்பாக்கிகளை அமெரிக்கா பல வழிகளில் முயற்ச்சி செய்வதாக 2015-ம் ஆண்டளவில் செய்திகள் வெளிவந்திருந்தன. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் இருந்து அமெரிக்க போர் விமாங்களைப் பாதுகாக்க அவை அவசியமாகும். அமெரிக்கா இரகசியமாக உருவாக்கி வைத்திருக்கும் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளும் நுண்ணலைப் பிறப்பாக்கிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும் எனவும் கருதப்படுகின்றது. 2021 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவின் விமானப் படையினர் விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளை பொருத்திப் பரிசோதித்தன. The Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அவை அழைக்கப்படுகின்றன.


ஆளில்லா விமானங்க்ளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா போர் விமானங்களை வலிமை மிக்க ஒரு படை நிலைமீது அல்லது விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது தாக்குதல் செய்யும் பாது அவற்றின் மீதுள்ள விமான எதிர்ப்பு படைக்கலன்களால் எல்லாவற்றையும் அழிக்க முடியாத நிலை ஏற்படும். அதில் ஒரு சில ஆளில்லா விமானம் தன் இலக்கை தாக்கும். இத்தகையக குளவித் தாக்குதல் முறைமையை எதிர் கொள்ள லேசர் கதிர்களும் நுண்ணலை கதிர்களும் பாவிக்கப்படுகின்றன. தற்போது ஆளில்லா விமானங்களை இரு நூறு டொலர் செலவு செய்து உருவாக்க முடியும். ஒரு தீவிரவாத அமைப்பால் பல நூறு ஆளில்லா விமானங்களை தாக்குதலுக்கு அனுப்பும் போது அவை ஒவ்வொன்றையும் ஒரு இலட்சம் பெறுமதியான ஏவுகணைகளால் தாக்கி அழிப்பது செலவு மிக்கதாகும். அவற்றை லேசர் கதிர்களால் அழிப்பது செலவு குறைந்ததாகும்.

உத்திசார் லேசர் படைக்கலன்கள் (Tactical Laser Weapons)

பொதுவாக லேசர் கதிர்களும் நுண்ணலைக் கதிர்களும் எதிரி இலக்குகளை கருக்கி சாம்பலாக்கும் அல்லது ஆவியாக்கும். ஆனால் அமெரிக்கா உருவாக்கியுள்ள Tactical Ultrashort Pulsed Laser (UPSL) எதிரியின் ஏவுகணைகள் உட்பட பல படைக்கலன்கள் மீது வீசப்படும் போது அவற்றின் மின்காந்த மற்றும் மின்னணு போன்றவற்றால் செயற்படும் கருவிகளை செயற்படாமல் செய்துவிடும்.

அமெரிக்கா மட்டுமல்ல சீனாவும் இரசியாவும் லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சில வகைப்படைக்கலன்களை உருவாக்கியும் விட்டன.


இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...