Followers

Showing posts with label படைத்துறை. Show all posts
Showing posts with label படைத்துறை. Show all posts

Tuesday, 5 April 2022

உக்ரேன் போர் தாங்கிகளை செல்லுபடியற்றதாக்கிவிட்டதா?

 


உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழுவில் 10 தாங்கிகள் மற்றும் 30 கவச வண்டிகள் இருக்கும். மொத்தம்1200 தாங்கிகளையும் 3600 கவச வண்டிகளையும் இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. உக்ரேனிடம் 2,500 தாங்கிகள் உள்ளன. ஐரோப்பாவில் 5,000இற்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் உள்ளன. உலகெங்கும் மொத்தம் 54,000 உள்ளன. பெரிய துப்பாக்கி, துருப்புக்களுக்கு பாதுகாப்பு கடினமான நிலத்தில் பயணித்தல் போன்றவை தாங்கிகளின் முக்கிய அம்சங்களாகும். எதிரியின் காலாட் படைகளை எதிர்கொள்ள சிறந்தவையாக தாங்கிகள் கருதப்படுகின்றன. அவர்களின் காப்பரண்களை தாங்கிகளால் அழிக்க முடியும். எண்பது ஆண்டுகளாக காலாட் படையினரின் முக்கிய படைக்கலன்களாக இருந்த எழுபது தொன் எடை கொண்ட தாங்கிகள் உக்ரேன் போரின் போது செல்லுபடியற்றதாகிவிட்டனவா எனற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இரசியப் படையினர் உக்ரேனினுடனான முதல் மூன்று வாரப் போரில் 270 தாங்கிகளை இழந்துள்ளனர். இவை தாங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மேலும் 326 தாங்கிகளை இழந்தனர். இதனால் தாங்கிகளை தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளும் ஆளிலிவிமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளும் தாங்கிகளின் வலிமை மீது ஐயத்தை எழுப்பியுள்ளது.

தானூர்தி அணியும் (Motorised Unit) இயந்திரமய அணியும் (Mechanised Unit)

முதலில் போர்த்தாங்கிகளைப் பாவித்த நாடு பிரித்தானியா. 1916-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவால் போர்த்தாங்கிகள் பாவிக்கப்பட்டன. தாங்கிகளை தரையில் நகரும் போர்க்கப்பல்கள் என பிரித்தானியவர் அப்போது விபரித்தனர். முதலில் அவற்றின் பாவனையைக் கைவிட்ட நாடு நெதர்லாந்து 2011இல் கைவிட்டது. பின்பு அது ஜெர்மனியிடமிருந்து குத்தகைக்கு 18 தாங்கிகளைப் பெற்றுள்ளது. சுடுதிறன், தப்புதிறன், நகரும் திறன், தகர்க்கும் திறன் ஆகியவை தாங்கிகளின் சிறப்பு அம்சங்களாகும். தானூர்தி அணி (Motorised Unit) பார ஊர்திகளால் நகர்த்தப்படுபவை. இயந்திரமய அணி (Mechanised Unit) கவச வண்டிகள் மூலம் நகரும் காலாட் படையணியாகும். கவச வண்டிகளின் மிகச் சிறந்த வடிவம் தாங்கிகளாகும். 2014-ம் ஆண்டு இரசியர்கள் தமது T-72 தாங்கிகளுடன் இலகுவாக உக்ரேனை ஆக்கிரமித்தனர். பெரும்பாலான தாங்கிகள் 120மிமீ குண்டுகளை வீச வல்லன. இரண்டாம் உலகப் போரில் விமானங்களை அழிக்கவும் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் Battle of Kursk

உலக வரலாற்றில் அதிக தாங்கிகள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயன்ற போது பயன்படுத்தப்பட்டன. 1943-ம் ஆண்டு இரசியாவின் Kursk நகரில் இரண்டு நாடுகளிடையே நடந்த போரில் ஆறாயிரம் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. இரசியர்கள் ஜெர்மன் தாங்கிகளுக்கு அண்மையில் சென்று கண்ணி வெடிகள அவற்றின் சில்லுச் சங்கிலிகளின் இடையே வீசி அவற்றைச் செயலிழக்கச் செய்தனர். ஹிட்லரின் படையினர் Tiger, Panther, Ferdinand ஆகிய தாங்கிகளையும் இரசியர்கள் T-14 தாங்கிகளையும் பாவித்தனர். ஹிட்லரின் படையினரின் தாங்கிகள் வலிமை மிக்கனவாயும் பெரிய அளவிலான குண்டுகளை வீசக் கூடியவையாகவும் இருந்தன. வலிமை குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் இரசியர்கள் ஜெர்மனியரிலும் பார்க்க இரண்டு மடங்கு தாங்கிகளைப் பாவித்தனர். ஜெர்மனியர்களிடம் 1400 தாங்கிகளும் இரசியர்களிடம் 3600தாங்கிகளும் இருந்தன. இரசியர்கள் தங்கள் தாங்கிகளை நிலைத்தின் கீழ் மூடி வைத்து சுடு குழாயை மட்டும் வெளியில் தெரிய வைத்திருந்து ஜெர்மனியர்கள் அண்மையில் வரும்போது சுட்டுத்தள்ளினார்கள்.

தங்கிகளின் வலிமையற்ற தன்மைகள்

கரந்தடிப் படையினருக்கு எதிராக தாங்கிகள் முன்பு சிறப்பாக செயற்பட்டன. கரந்தடிப் படையினர் வலிமை மிக்க கண்ணிவடிகளால் செயலிழக்கச் செய்யப்படக் கூடியவை. ஈழ மண்ணிற்கு அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலைப்படையினர் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பதற்காக தெருக்களால் பயணிப்பதைத் தவிர்த்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டு பயணித்தன. ஒரு கட்டத்தில் அகப்படும் பொது மக்களை தாக்கி வீழ்த்தி விட்டு அவர்கள் மேல் தாங்கிகளைச் செலுத்திக் கொன்றன. ஈழப் போராளிகள் கண்ணி வெடிகளால் எதிரிகளின் தாங்கிகளைத் தகர்த்தனர். கைப்பற்றியும் உள்ளனர். ஆர்.பி.ஜீ என்னும் வீசு குண்டுகள் மூலமும் பழைய தாங்கிகளை அழிக்க முடியும். தாங்கிகளில் இருந்து வெளிவரும் உயர் வெப்பம் அவற்றை இனம்காண இலகுவானதாக இருக்கின்றது. அதனால் வெப்பத்தைத் தேடியழிக்கும் ஏவுகணைகள் (Heating seeking missiles) அவற்றை இலகுவாக அழிக்கின்றன.  அமெரிக்காவின் Javelin, பிரித்தானியாவின் NLAW ஆகிய தோளில் வைத்துச் செலுத்தப்படும் ஏவுகணைகளும் துருக்கியின் TB-2 Drones என்னும் ஆளிலிவிமானங்களில் இருந்து ஏவும் சிறிய ஏவுகணைகளும் இரசிய தாங்கிகளை வேட்டைக்காரன் பன்றைகளைச் சுடுவது போல் சுட்டு அழிக்கின்றன. அது மட்டுமல்ல அது பயணிக்கும் இடங்களில் தாங்கிகள் விட்டுச் செல்லும் தடயங்கள் அவற்றை இனம் காண உதவுகின்றன. அமெரிக்காவின் ஒரு தாங்கி பத்து மில்லியன் பெறுமதியானது. இரசியாவின் தாங்கிகளான T-14 Armata நான்கு மில்லியன் பெறுமதியானது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் Fallujah மீட்புப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக் ஆகிய நாடுகளின் படைகள் வெற்றி பெற்றமைக்கு அமெரிக்காவின் ஏப்ராம் தாங்கிகள் முக்கிய பங்கு வகித்தன.  ஆனாலும் அமெரிக்காவின் ஏப்ராம் (M1Abrams) தாங்கிகளையும் பிரட்லி (M2 Bradley) தாங்கிகளையும் நூறு டொலர் பெறுமதியான வெடிபொருட்களால் இஸ்லாமியப் போராளிகள் தகர்த்தனர். போரியல் நிபுணராகிய Michael Peck: Tanks may be the star player, but war is a team game. அமெரிக்காவின் Apache உலங்கு வானூர்திகள் தாங்கிகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவை. தாங்கிகள் அதிக அளவு எரிபொருளைப் பாவிப்பன. அவற்றிற்கு எரிபொருள் மீள்நிரப்ப எரிபொருள் தாங்கிகள் அவற்றைத் தொடந்து கொண்டிருக்க வேண்டும்.

பல நாடுகள் தாங்கிகளைக் கைவிடுவதிலும் பார்க்க அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடுத்த தலைமுறை தாங்கிகளை உருவாக்குகின்றன. 1980களில் உருவாக்கிய தாங்கிகள் பெரிஸ்கோப்களை பாவித்தன. தற்போது தாங்கிகளில் 360பாகையும் சுற்றிப் பார்க்கக் கூடிய உணரிகள் உள்ளன. எதிர் காலத்தில் போர்த்தாங்கிகளில் இருந்து பறந்து செல்லும் சிறிய ஆளிலி வானூர்திகள் தாங்கிகளின் கண்களாக மூலை முடுக்கு மேடு பள்ளம் எல்லாம் மறைந்து இருக்கும் எதிரிகளை இனம் காணும். பெரிய காத்திரமான உருவம் கொண்ட தாங்கியுடன் செல்லும் படையினருக்கு மனவலிமை கிடைக்கின்றது என்பது உண்மை. அதே போல எதிரிக்கு அச்சத்தையும் கொடுக்கக் கூடியது. போரை விரும்பும் நாடுகள் மேலும் வலிமைப்படுத்தப் பட்ட இலத்திரனியல் போர் செய்யக் கூடிய புதிய தாங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பல பத்து ஆண்டுகளில் காலட்படையினரின் கவசமாக இருக்கும்.

இரசியாவின் மிகச் சிறந்த தாங்கியான T-14 Armata உக்ரேன் போரில் பயன்படுத்தப்படவில்லை. இரசியாவிடம் போதிய அளவு T-14 கையிருப்பில் இல்லை. 

Thursday, 20 January 2022

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் வலிமையற்றதா?

 


அமெரிக்க கடற்படைத் தளபதி ரோய் கிச்சினர் 2022 ஜனவரி 11-ம் திகதி நடந்த கடற்படையினரின் மாநாடு ஒன்றில் வெளியிட்ட தகவல் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிடம் லியோனிங், ஷண்டோங் என்னும் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. விமானம் தாங்கிக் கப்பலின் வலிமை 1. அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 2. அவ்விமானங்களின் வலிமை, 3. படைக்கலன்களின் அளவு 4. கப்பலின் இயங்கு வலிமை 5. அதை சுற்றிவரும் பரிவாரக் கப்பல்கள் போன்றவற்றில் தங்கியுள்ளன.

விமானம் தாங்கி - சிங்கிளாக வராத சிங்கம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரியின் விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

நீலத் தண்ணீர் கடற்படை

1980களின் ஆரம்பத்தில் இருந்து பொருளாதாரத்தில் மிகப்பாரிய வளர்ச்சியை ஆரம்பித்த சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்றுமதி செய்யவும் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் சீனாவும் தனது கடற்போக்குவரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப சீனா தனது கடற்படையை தற்போது எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உயர்த்தியுள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டும் வலிமையை முடிவு செய்ய மாட்டாது. கடற்படையின் தொழில்நுட்ப மேம்பாடும் மிக அவசியமானதாகும். 1990களின் சீனாவின் கடற்படை பழுப்புப் தண்ணீர் கடற்படை என்ற நிலையில் இருந்து நீலத் தண்ணீர் கடற்படை என்ற நிலைக்கு தற்போது உயர்ந்தது. நாட்டின் உட்புறத்தில் உள்ள கடல் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் செயற்படும் கடற்படையை பழுப்புப் தண்ணீர் கடற்படை (Brown Water Navy) எனவும் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் கூடிய கடற்படையை பசுமைத் தண்ணீர் கடற்படை (Green Water Navy) எனவும் உலகெங்கும் உள்ள ஆழக்கடல்கள் எல்லாவற்றிற்கும் சென்று ஆதிக்கம் செலுத்தக் கூடிய கடற்படையை நீலத் தண்ணீர் கடற்படை (Blue Water Navy) எனவும் அழைப்பர்.

அமெரிக்க சீன விமானம் தாங்கி கப்பல்கள்

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் வெறும் பயிற்ச்சிக் கப்பல் மட்டுமே என கிண்டல் செய்வோரும் உண்டு. லியோனிங் தாங்கிச் செல்லும் Shenjang J-15 போர்விமானங்களால் ஆகக் கூடியது 4000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். ஆனால் அமெரிக்காவின் விமானம் தாங்கிகளில் பாவிக்கப்பட்ட F/A-18 போர்விமானங்களால் 12,000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல முடியும். அமெரிக்காவின் நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பலில் 64 F/A-18 விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். லியோனிங்கில் 26 Shenjang J-15 போர்விமானங்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான ஷாண்டோங்கால் 44 Shenjang J-15 போர்விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். கடற்போரில் பயிற்ச்சியும் நேரடி அனுபவமும் பெற்ற ஒரு அட்மிரலின் தலைமையில்தான் விமானம் தாங்கிக் கப்பலும் அதன் பரிவாரக் கப்பல்களும் இயங்கும். எந்த ஒரு கடற்போர் அனுபவமும் இல்லாத சீனக் கடற்படையில் எவரையும் அட்மிரல் என அழைக்க முடியாது என சீனாவை சில படைத்துறை ஆய்வாளர்கள் கிண்டலடிப்பதும் உண்டு.

Close Encounter

2021 ஏப்ரல் மாதம் தென்சீனக் கடலில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங்கிற்கு கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் அண்மையாகச் சென்ற அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலான USS Mustin லியோனிங்கின் செயற்படு திறன் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்தது. அமெரிக்க நாசகாரி லியோனிங்கை சாதரண ஒளிபடப் பதிவுக் கருவியால் படம் பிடித்துள்ளது. ஒரு வலிமை மிக்க விமானம் தாங்கியைச் சுற்றியுள்ள நாசகாரிக் கப்பல்கள் எதிரியின் கப்பல்களை விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்லாமல் தடுத்துவிடும். ஒரு தனி நாசகாரி எதியின் விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்வது அந்த விமானம் தாங்கியில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2021இன் ஆரம்பத்தில் லியோனிங்கை கண்காணிக்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் தமது USS Mustin என்னும் பற்பணி நாசகாரிக்கப்பலை ஈடுபடுத்தினர். USS Mustin என்பது Arleigh Burke-Class guided missile destroyer ஆகும். இந்த வகுப்பைச் சேர்ந்த நாசகாரிகள் Aegis Combat System என்னும் வலிமை மிக்க கணினிகளாலும் உயர் உணர் திறன் கொண்ட கதுவிகளாலும் (ரடார்கள்) இயங்கும் ஏவுகணைகளைக் கொண்டவை. அவ் ஏவுகணைகள் எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியவை.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்

இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும். சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலில் EMALS முறைமை இணைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியே வந்த ஒரு நாசகாரிக் கப்பல்களை எதிர் கொள்ள முடியாத சீனாவின் விமானம் தாங்கி கப்பல் Carrier Battle Group என அழைக்கப்படும் பல கப்பல்கள் சூழ ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுடன் வரும் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றின் விமானம் தாங்கி கப்பல்களை எப்படி எதிர் கொள்ளப்போகின்றது? சீனா விமானம் தாங்கி உற்பத்தித் துறை இப்போது தவழும் நிலையில்தான் இருக்கின்றதா?

Monday, 20 December 2021

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்கள் அழிக்குமா?

 


2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா கடலில் இருந்தும் இஸ்ரேல் தரையில் இருந்தும் வீசப்படும் லேசர் படைக்கலன்களை பரிசோதித்துள்ளன. இரு நாடுகளும் தீவிரவாதிகளின் சிறிய ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் கூட்டமாக வந்து தாக்கும் ஆபத்தை எதிர் நோக்க லேசர் கதிர்களை பாவிக்க முயல்கின்றன. அமெரிக்கா தனது பெரிய கடற்கலன்களை எதிரி பல சிறிய படகுகளில் வந்து தாக்குதவதை தடுக்க லேசர் கதிர்களைப் பாவிக்கப் போகின்றது. அத்துடன் இரசியா மற்றும் சீனா போன்ற படைத்துறைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் பெருமளவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்கக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்கள்

லேசர் கதிர்களை ஒரு இலக்கின் மீது வீசும் போது அது உடனடியாக அந்த இலைக்கை கருகச் செய்துவிடும். ஒலியின் வேகம் ஒரு செக்கனுக்கு ஆயிரத்து நூறு அடி பயைப்பது. மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக்) என்பது ஒலியின் வேகத்திலும் பார்க்க ஐந்திற்கு மேல் இயங்குவது. தற்போது உள்ள மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளின் ஆகக் கூடிய வேகம் ஒலியின் வேகத்திலும் 24 மடங்காகும். ஆனால் லேசர் கதிர்களின் வேகம் ஒலியின் வேகத்திலும் ஒரு மில்லியன் மடங்காகும். ஒளியின் வேகத்தில் இயங்கும் லேசர் கதிர்கள் ஒரு செக்கனுக்கு 186,000மைல்கள் பயணிக்கும். சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வர 4 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

லேசர் படைக்கலன்களின் நன்மை:

1 துல்லியத் தாக்குதல். அசையும் இலக்குகளை (கடற்கலகள், தாங்கிகள், விமானங்கள், ஏவுகணிகள்) துல்லியமாக தாக்குவது கடினமானதாகும். லேசர் கதிர்கள் பிரபஞ்சத்திலேயே அதிக வேகத்தில் பணிப்பதால் அவை இலக்குகளை உடனடியாகவும் துல்லியமாகவும் தாக்கும். படைத்துறையில் Sensor-to-shooter time என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதவது எதிரி இலக்கை காணுதலுக்கும் அதன் மீது தாக்குதல் நவத்துவதற்கும் இடையில் உள்ள நேர இடைவெளி. சிறந்த கதுவிகளும் (ரடார்கள்) லேசர் கதிர் வீச்சும் அந்த நேர இடைவெளியை வெகுவாக குறைக்கும்.

2. மலிவானது. முன்னூறு டொலர்கள் செலவழித்து ஹமாஸ் அமைப்பு உருவாக்கும் ஆளில்லா போர் விமானத்தை தாக்கி அழிக்க இஸ்ரேலுக்கு $80,000 செலவில் உருவாக்கிய ஏவுகணை தேவைப்படுகின்றது. லேசர் கதிர் வீச்சுக்களை நூறு டொலர்களுக்கும் குறைவான செலவில் உருவாக்கலாம்.

3. மீள் நிரப்பல் தேவையில்லை. ஏவுகணைச் செலுத்தி ஒன்றில் இருபது ஏவுகணைகள் இருக்கும். அவற்றால் எதிரியின் இலக்குகளை தாக்கிய பின்னர் அவற்றில் ஏவுகணைகளை மீளவும் நிரப்ப பல நிமிடங்கள் எடுக்கும். லேசர் செலுத்திகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தால் அது தொடர்ச்சியாக லேசர் கதிர்களை எதிரியின் இலக்குகளை நோக்கி வீசிக் கொண்டே இருக்கும்.

லேசர் படைக்கலனிகளின் வகைகளும் வலிமையும்

1996இல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஆளில்லாவிமானங்களை அழிக்கும் லேசர் கதிர் வீசிகளை உருவாக்க தொடங்கின. இஸ்ரேல் தனியே உருவாக்கிய லேசர் படைக்கலன்கள் 100கிலோ வாட் வலிமையானவை. அமெரிக்கா உருவாக்கியவை 300 கிலோ வாட் வலிமையானவை. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.


அமெரிக்க கடல்-சார் பரிசோதனை

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக கப்பலான USS Portlandஇல் இருந்து High-energy lacer system மூலம் செலுத்தப்பட்ட லேசர் கதிர்கள் ஏடன் வளைகுடாவில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு இலக்கை அழித்துள்ளது. 2021 டிசம்பர் மாதம் 14-ம் திகதி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை கடற்போரில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்கர்கள் மார்தட்டுகின்றார்கள். USS Portlandஇன் கட்டளைத் தளபதி Laser weapon is redefining the war at sea என்றார். 2020 மே மாதம் அமெரிக்க கடற்கலன் ஒன்றில் இருந்து ஆளில்லா விமானத்தை லேசர் கதிர்கள் மூலம் அழிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த லேசர் கதிர்கள் 150 kilo watt வலுவுடையவை.

அமெரிக்கா பரிசோதிக்க தேர்வு செய்த இடம்

எரித்திரியா, யேமன், ஜிபுக்த்தி, சோமாலியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் நடுவே உள்ள ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா தனது புதிய கடல்-சார் லேசர் படைக்கலன்களை பரிசோதனை செய்துள்ளது. தீவிரவாதிகள் அமெரிக்காவின் பாரிய கடற்கலன்களை பல கூட்டங்களாக வரும் சிறு படகுகள் மூலம் செய்யும் தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தனது புதிய லேசர் படைக்கலனை உருவாக்கியுள்ளது. பரிசோதித்த இடமும் திவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்து மிக்க இடமாகும்.

பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கி பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 300கிலோ வாட் வலிமையான லேசர் படைக்கலன்கள் வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise missiles) மட்டுமே அழிக்க வல்லன. மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை அழிக்க மேலும் வலிமை மிக்க லேசர் கதிர்கள் உருவாக்க வேண்டும்.

சீனா வின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

2018-ம் ஆண்டு சீனா செய்த மொத்த மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைப் பரிசோதனைகள் பத்து ஆண்டுகளாக அமெரிக்கா செய்த பரிசோதைனைகளிலும் பார்க்க அதிகமானதாகும். அமெரிக்கா சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் படைத்தளங்களை வைத்திருப்பதைப் போல் சீனாவால் அமெரிக்காவைச் சுற்றிவர படைத்தளங்களை வைத்திருக்க முடியவில்லை. இதைச்  சமாளிக்க சீனா கண்ட ஒரே வழி மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளாகும். இத்துறையில் சீனாவின் மிகையான வளர்ச்சி அமெரிக்காவிற்கு படைத்துறைச் சமநிலையில் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதைச் சமாளிக்க அமெரிக்கா லேசர் கதிர் வீச்சை நம்பியுள்ளது. அதற்கான ஆய்வு வேலைகள் இரகசியமாகவும் துரிதமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. 2019-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய தனியான விண்வெளிப்படையணியில் லேசர் கதிர்வீசிகள் இணைக்கப்படும் போது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பெரும் சவால்களை எதிர் நோக்கும்.

முதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கையில் அவற்றில் லேசர் கதிர் மூலம் ஒரு துளை ஏற்படுத்தி அவற்றை செயலிழக்கச் செய்வது அமெரிக்காவின் நோக்கம் போல் இருக்கின்றது. லேசர் கதிர் வீசிகள் செய்மதிகளில், விமானங்களில், கடற்கலன்களைன் இணைக்கப்படவிருக்கின்றன. இறுதியில் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை கருக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா களமிறக்கும். அதன் மூலம் சீனாவிற்கான படைத்துறைச் சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக்கலாம். பின்னர் சீனா வேறு வழி தேடும்.

லேசர் கதிர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/03/blog-post.html

Monday, 28 June 2021

நேட்டோ புதிய திசையில் பயணிக்குமா?

 


1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும்ம வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் தற்போது ஐரோப்பியாவினதும் வட அமெரிக்காவினதும் 30 நாடுகளின் ஒரு பில்லியன் மக்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமையைப் பரப்பல் என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்து சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சீனாவினதும் இரசியாவினதும் ஒத்துழைப்பு என்றுமில்லாத அளவு வளர்ந்துள்ள நிலையில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு பெல்ஜியத் தலைநகரான பிரஸல்ஸ்ஸில் 2021 ஜூன் மாதம் 14-ம் திகதி நடைபெற்றது. தற்போதைய உலகச் சூழலுக்கு ஏற்ப நேட்டோ தன்னை மாற்றிக் கொள்ளும் என்றார் நேட்டோவின் தலைமை செயலர்.

அமெரிக்காவின் செல்வமும் பொதுவுடமைவாதமும்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. தமக்கு வேண்டாதவர்களான சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃபி போன்றவர்களை ஆட்சியில் இருந்து நேட்டோ அகற்றியது. இவர்கள் இருவரும் உலக நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை எதிர்த்தவர்கள்.

மேம்படுத்திய முன்னோக்கிய இருப்பு (Enhanced Forward Presence)

இரசிய எல்லையில் உள்ள நோட்டோ நாடுகளில் நேட்டோ நாடுகளின் படைகளை சிறிய அளவில் நிறுத்துதல் மேபடுத்திய முன்னோக்கிய இருப்பு எனப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியா ஆகக் கூடிய அளவில் 894 படையினரை நிறுத்தியுள்ளது. பெல்ஜியம் ஒருவரை மட்டும் நிறுத்தியுள்ளது. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகள் இரசிய எல்லையில் உள்ள சிறிய நாடுகளாகும். அவற்ற ஒரு சில மணித்தியாலங்களில் இரசியாவால் கைப்பற்ற முடியும். இம்மூன்று நேட்டோ நாடுகளிலும் கணிசமான அளவு இரசியர்கள் சோவியத் ஒன்றிய காலத்தில் குடியேறி வசிக்கின்றனர். அதனால் கிறிமியாவில் நடந்த து இந்த நாடுகளிலும் நடக்கலாம் என்ற அச்சம் 2014-ம் ஆண்டின் பின்னார் போலாந்து, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உருவாகியது.

 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் போலாந்து, ஹங்கேரி, அல்பேனியா போன்ற நாடுகளும் சோவியத் ஒன்றிய காலத்து கசப்பான அனுபவங்களை இன்னும் மறக்கவில்லை.

வளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.

உலக ஆதிக்கத்தில் உறுதியாக நிற்கும் இரசியா

2021 ஜூன் 25-ம் திகதி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் இரசியாவின் இரண்டு மிக்-31 போர்விமானங்கள் மத்திய தரைக்கடலில் போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதேவேளையில் பிரித்தானியாவின் HMS QUEEN ELIZABETH விமானம் தாங்கிக் கப்பL அமெரிக்க தயாரிப்பு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35களுடன் மத்திய தரைக்கடலில் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. உலகின் அதிவேக விமானங்களில் ஒன்றான மிக்-31 போர்விமானங்கள் தாங்கிச் சென்ற KNZHAL ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் வானில் இருந்து ஏவக்கூடிய எறியியல் ஏவுகணைகளாகும் (BALLISTIC MISSILES). இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்வீச்சினால் மட்டுமே அழிக்க முடியும். பிரித்தானியாவின் கடற்படைகளிடம் அவை இருப்பதாக தகவல் இல்லை. மத்தியதரைக்கடலில் இது நடப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர் கருங்கடலில் பிரித்தானியாவின் HMS Defender நாசகாரிப் போர்க்கப்பலுக்கும் இரசிய விமானப்படைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது. இரசியக் கடற் பிராந்தியத்தில் பிரித்தானிய நாசகாரி நுழைய முற்பட்ட போது அதன் மீது எச்சரிக்கை வேட்டுக்களும் அதன் பாதையில் குண்டுகளும் வீசப்பட்டதாக இரசியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து தவறுதலாக தெருவோரத்தில் விடப்பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய பத்திரங்களை கண்ட ஒருவர் அதை பிபிசியிடம் ஒப்படைத்தார். அதன் படி இரசியாவின் எதிர்வினைகளை அறியும் பொருட்டு கருங்கடலிற்கு பிரித்தானிய நாசகாரிக் கப்பல்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இரசியாவின் உறுதிப்பாட்டை உரத்துப் பறைசாற்றுகின்றன.  அமெரிக்காவின் ஆறவது கடற்படைப் பிரிவு உட்பட்ட நேட்டோவின் கடற்படைப் பிரிவான Maritime Group-2 உக்ரேனியக் கடற்படையினரும் இணைந்து ஜுன் 28 முதல் ஜூலை 10 வரை கிறிமியாவை ஒட்டிய கடற்பரப்பில் போர் பயிற்ச்சிகளை செய்கின்றன. இதில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரம் படையினர், 32 போர்க்கப்பல்கள், 40 போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேட்டோவும் சீனாவும்

2019-ம் ஆண்டு நடந்த நேட்டோவின் மாநாட்டில் சீனாவுடன் ஒரு படைக்கலக் குறைப்பு ஒப்பந்தம் செய்வதாக முடிவெடுக்கப் பட்டது. ஆனால் அது தொடர்பான நகர்வுகள் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. 2021இல் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் மிக்க நாடாக கருதப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரை சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் பாயக்கூடியவையாக இருப்பதால் சீனாவை இட்ட கரிசனை அந்நாடுகளிடையே உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் சீனாவின் பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளமை பற்றி ஆராயப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பது பற்றியும் ஆராயப்பட்டது. 2021 பெல்ஜியாவின் தலைநகர் பிரஸஸ்ஸில் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் நேட்டோ

மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சிறந்த நட்பு நாடுகளாக தென் கொரியா, ஜப்பான், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் நேட்டோவைப் பொறுத்தவரை சீனாவைக் கையாள்வதற்கான சிறந்த சொத்துக்களாகும். இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டு வருவது சிரமம் என்பதை மேற்கு நாடுகள் உணர்ந்துள்ளன. அதே வேளை சீனாவின் சவால்களைச் சமாளிக்க இந்தியாவிற்கு மேற்கு நாடுகளின் நட்பு அவசியமாகின்றது. சீன இரசிய உறவின் வளர்ச்சி தவிர்க்க முடியாது என்ற நிலையில் இந்தியா நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்புரிமை உள்ள நாடாக இணையாமல் நேட்டோவின் கேந்திரோபாய பங்காளியாக இணைய வாய்ப்புண்டு.

வட துருவத்தில் உருகும் பனியால் உருவாகும் கடற்பாதையை இரசியா தனது கட்டுப்பாட்டிலும் தென் சீனக் கடலை சீனா தனது கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முனைவது உலகெங்கும் சுதந்திரமான கடற்போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என பல மேற்கு நாடுகளின் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றார்கள். சீனாவயும் இரசியாவையும் முக்கிய போட்டி நாடுகளாகவும் தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, ஒஸ்ரேலியா, வியட்நாம், தைவான், இந்தோனேசியா ஆகிய நாடுகளை பங்காளிகளாகவும் கொண்டு நேட்டோ தனது செயற்பாட்டை அத்லாண்டிக் மாக்கடலில் மட்டுப்படுத்தாமல் பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், வட கடல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய உலகளாவிய படைத்துறைக் கூட்டமைப்பாக நேட்டோ உருவெடுக்கலாம்.

Monday, 8 March 2021

அமெரிக்காவின் புதிய லேசர் படைக்கலன்கள்


தற்போதுள்ள லேசர் படைக்கலன்களிலும் பார்க்க ஒரு மில்லியன் மடங்கு வலிமையுள்ள லேசர் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. லேசர் படைகலன்கள் எதிரி இலக்குகளை ஒளியின் வேகத்தில் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஒளிக்கதிர்களை பாய்ச்சும். லேசர் படைக்கலன்கள் திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் (Directed Energy Weapons) (DEW) என்னும் வகையைச் சேர்ந்தவை. லேசர் கதிர், நுண்ணலை (Microwave), துணிக்கைக்கதிர் (Particles Beam) ஆகியவை திசைப்படுத்தப்பட்ட வலிமைப் படைக்கலன்கள் ஆகும்.

லேசர் என்பது என்ன?

லேசர் என்பது செறிவாக்கப்பட்ட ஒளிக்கதிர்கள். Light Amplification by Stimulated Emission of Radiation என்பதை அதன் முதலெழுத்துக்களைக் கொண்டு ஆக்கப்பட்ட சொல் LASER ஆகும். அவ்வகையில் லேசர் என்பது ஒளியை மிகையாக்கி தூண்டப்பட்ட கதிர்வீச்சு செய்யும் கருவியாகும். லேசர் ஓரியல்பான, ஒற்றை நிறமுடைய, திசைப்படுத்தப்பட்ட, மிகச்செறிவான ஒளிக்கதிராகு, பொதுவாக ஒளியில் ஏழு நிறங்கள் கலந்துள்ளன. ஆனால் லேசரில் ஒரு நிறம் மட்டுமே இருக்கும். எரியும் தீயில் அல்லது ஒளிரும் மின் குமிழில் இருந்து பல திசைகளிலும் ஒளி வீசப்படும். ஆனால் லேசர் கருவியில் இருந்து வரும் ஒளி ஒரு திசையில் மட்டும் செல்லும். மற்ற ஒளி மூலங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் பல் வேறுபட்ட அலைநீளங்களைக் (Wavelengths) கொண்டிருக்கும். ஆனால் லேசரில் இருந்து வரும் ஒளி ஒரே அலைநீளத்தைக் கொண்டது. மருத்துவம் உட்படப் பல பயந்தரு துறைகளின் லேசர் கதிர்கள் பாவிக்கப்படுகின்றன.


பல தரப்பட்ட லேசர் படைக்கலன்கள்

லேசர் படைக்கலன்கள் எதிரி இலக்குகளை சடுதியாகச் சூடாக்கி ஆவியாக மாற்றிவிடும். எதிரி இலக்குகளில் உள்ள இலத்திரனியல் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும். குறைந்த வலுவுள்ள லேசர் கதிர்கள் ஒருவரின் பார்வையை தற்காலிகமாக இழக்கச் செய்யும். பல நாட்டுப் படைத்தளங்கள் உள்ள ஜிபுக்தியில் அமெரிக்க விமானிகள் மீது சீனா லேசர் கதிர்களை வீசி அவர்களை தற்காலிகமாக பார்வையிழக்கச் செய்ததாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா சீனாவிடம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. நுண்ணலைக்கதிர்களும் பலதரப்பட்ட வலிமை நிலைகளில் பாவிக்கப்படுகின்றது. 2020-ம் ஆண்டு இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியா கைப்பற்றியிருந்த குன்றுகளின் உச்சியில் இருந்து இந்தியப்படைகளை நுண்ணலைக் கதிர்களை வீசி சீனா விரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. செய்மதிகளில் இருந்து வீசப்படும் துணிக்கைக் கதிர்கள் எதிரி வீசும் ஏவுகணைகளை வீசிய ஒரு சில் செக்கன்களுள் அழிக்கப் பாவிக்கப்படும்.



விமானம் தாங்கி கப்பல்களை எதிர்க்க ஹைப்பர் சோனிக்

அமெரிக்காவின் பெருவிமானம் தாங்கிக் கப்பல்களையும் அவற்றில் உள்ள ரடார்களால் இனம் காணக் கடினமான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையும் சீனாவினதும் இரசியாவினதும் படைத்துறையினர் கருத்தில் கொண்டனர். இரசியா 2020இலும் சீனா 2030இலும் தமது படைத்துறையை உலகின் முதற்றரமானதாக்கும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிச் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானம் தாங்கிகளை அவற்றின் பரிவாரங்களாக வரும் நாசகாரிகளையும் அவற்றில் உள்ளவிமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் தாண்டிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கின. சீனா தனது முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2017இல் பரிசோதித்தது. அதனால் 2018-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை ஹைப்ப்ர் சோனிக் ஏவுகணைகள் செல்லுபடியற்றதாக்கி விட்டன என படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறப்பவற்றை சுப்பர்சோனிக் என்றும் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவற்றை ஹைப்பர்சோனிக் என்றும் அழைப்பர். 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இரசியாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் துறையில் அமெரிக்காவை மிஞ்சிய நிலையில் இருந்தன. அமெரிக்காவின் தாட் மற்றும் பேற்றீயோற்றிக் என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் சீனாவினதும் இரசியாவினதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க முடியாத நிலை இருக்கின்றன. சீனா உருவாக்கியுள்ள  hypersonic glide vehicle (HGV) என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையினது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் அதை ஏவப்பட்டவரால் அதன் திசையை மாற்ற முடியும். அதனால் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்ற அசையும் இலக்குகளை அவற்றால் துல்லியமாகத் தாக்க முடியும். அமெரிக்கா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இயக்க செயற்கை நுண்ணறிவைப் (artificial intelligence) பாவிக்கவுள்ளது.  ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றால் மட்டுமே துரிதமாக இயக்கி துல்லியமாக இலக்கைத் தாக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

இரசியாவும் சீனாவும் தமது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதால் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கின்றது. ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் வரும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிர் கொள்ள ஒளியின் வேகத்தில் பாயும் லேசர் கதிர்களால் மட்டுமே முடியும். லேசர் கதிர்களை உருவாக்க பெரிய மின்தேக்கி வங்கி (capacitor bank) தேவைப்படும் அதிக அளவு மின்வலுவைச் சேமித்து வைத்திருக்க மின்தேக்கி வங்கிய பாவிக்கப்படுகின்றது. பல மின்தேக்கிகளை தொடர்ச்சியாகவோ சமாந்தரமாகவோ இணைத்து அதில் பெருமளவு மின்வலு சேமித்து வைக்கப்படும். லேசர் கதிகளை வீச சடுதியாக பெருமளவு மின்வலுத் தேவைப்படும். மின்தேக்கி வங்கிக்கு பெரிய இடம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவின் ஃபோர்ட் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல்களில் அதற்கு தேவையான இட வசதிகள் உள்ளன. காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் ஏவுக் ஆயிரம் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை இடை மறித்து அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் பெறுமதியான ஏவுகணையை வீச வேண்டியுள்ளது.

விமானங்களில் லேசர் படைக்கலன்கள்

விமானங்களில் பொருத்தக் கூடிய அளவிற்கு சிறிய லேசர் கதிர் பிறப்பாக்கிகளை அமெரிக்கா பல வழிகளில் முயற்ச்சி செய்வதாக 2015-ம் ஆண்டளவில் செய்திகள் வெளிவந்திருந்தன. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் இருந்து அமெரிக்க போர் விமாங்களைப் பாதுகாக்க அவை அவசியமாகும். அமெரிக்கா இரகசியமாக உருவாக்கி வைத்திருக்கும் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளும் நுண்ணலைப் பிறப்பாக்கிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும் எனவும் கருதப்படுகின்றது. 2021 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவின் விமானப் படையினர் விமானங்களில் லேசர் கதிர் பிறப்பாக்கிகளை பொருத்திப் பரிசோதித்தன. The Self-Protect High Energy Laser Demonstrator (SHiELD) என அவை அழைக்கப்படுகின்றன.


ஆளில்லா விமானங்க்ளுக்கு எதிராக லேசர் கதிர்கள்

பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா போர் விமானங்களை வலிமை மிக்க ஒரு படை நிலைமீது அல்லது விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது தாக்குதல் செய்யும் பாது அவற்றின் மீதுள்ள விமான எதிர்ப்பு படைக்கலன்களால் எல்லாவற்றையும் அழிக்க முடியாத நிலை ஏற்படும். அதில் ஒரு சில ஆளில்லா விமானம் தன் இலக்கை தாக்கும். இத்தகையக குளவித் தாக்குதல் முறைமையை எதிர் கொள்ள லேசர் கதிர்களும் நுண்ணலை கதிர்களும் பாவிக்கப்படுகின்றன. தற்போது ஆளில்லா விமானங்களை இரு நூறு டொலர் செலவு செய்து உருவாக்க முடியும். ஒரு தீவிரவாத அமைப்பால் பல நூறு ஆளில்லா விமானங்களை தாக்குதலுக்கு அனுப்பும் போது அவை ஒவ்வொன்றையும் ஒரு இலட்சம் பெறுமதியான ஏவுகணைகளால் தாக்கி அழிப்பது செலவு மிக்கதாகும். அவற்றை லேசர் கதிர்களால் அழிப்பது செலவு குறைந்ததாகும்.

உத்திசார் லேசர் படைக்கலன்கள் (Tactical Laser Weapons)

பொதுவாக லேசர் கதிர்களும் நுண்ணலைக் கதிர்களும் எதிரி இலக்குகளை கருக்கி சாம்பலாக்கும் அல்லது ஆவியாக்கும். ஆனால் அமெரிக்கா உருவாக்கியுள்ள Tactical Ultrashort Pulsed Laser (UPSL) எதிரியின் ஏவுகணைகள் உட்பட பல படைக்கலன்கள் மீது வீசப்படும் போது அவற்றின் மின்காந்த மற்றும் மின்னணு போன்றவற்றால் செயற்படும் கருவிகளை செயற்படாமல் செய்துவிடும்.

அமெரிக்கா மட்டுமல்ல சீனாவும் இரசியாவும் லேசர் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சில வகைப்படைக்கலன்களை உருவாக்கியும் விட்டன.


Monday, 5 October 2020

அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்தியாவின் பாதுகாப்பு

 


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் ஒரு நாடு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும். சீனா சிறிது சிறிதாக இந்தியாவின் நிலப்பரப்பை படைக்கலன்களைப் பாவிக்காமல் இரகசியமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனப் போரியல் நிபுணர் “போர்க்கலையின் உச்சம் எனப்படுவது போர் செய்யாமல் எதிரியை விழுத்துவது” என்றார். சீனா கைப்பற்றிய இந்திய நிலங்களை ஒரு போரால் மட்டுமே இந்தியாவால் மீளக் கைப்பற்ற முடியும். ஆனால் போர் தொடுத்தால் பல விதத்திலும் பெரும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும். சீனாவும் இந்தியாவும் அணுக்குண்டை தாம் முதலில் பாவிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டன. அணுக்குண்டு பாவிக்காமல் போர் செய்தாலும் இரு நாடுகளும் பெரும் ஆளணி இழப்புக்களை, உட்கட்டுமான அழிவுகளை, பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதுடன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளி ஆகிய தளங்களில் உக்கிரமாக நடக்கும்.

பொருளாதார வலிமை மிக்க சீனா

இந்தியாவின் வான் படையினரும் தரைப்படையினரும் சீனா இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை தடுக்கும் முயற்ச்சியில் வெற்றியடைந்தாலும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல் வேறுபட்ட ஏவுகணைகளை சமாளிப்பது இந்தியாவிற்கு முடியாத காரியமாகலாம். சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க இரண்டரை மடங்காக இருக்கின்றது. சீனாவிடமிருக்கும் 3.4ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கையிருப்பு இந்தியாவினதிலும் பார்க்க எட்டு மடங்காகும். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேன்மை மிக்கதாக அமைந்தது. 2008இன் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையதாக இருந்தது. அதே போல 2020-ம் ஆண்டு கொவிட்-19 தொற்றுநோயின் பின்னர் பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தேய்வடையும் போது சீனாவினுடைய பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றது. 2008இன் பின்னர் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது போல் 2020இன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டாகத்தான் இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் வளரும் போது அதற்கு உரிய மரியாதை உலக அரங்கில் செலுத்தப்பட வேண்டும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 2017-ம் ஆண்டே சீனா உலக மேடையை முழுமையாக எடுக்க வேண்டும் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் Road & Belt Initiative மூலம் உலக ஆதிக்கத்தின் மையப்புள்ளியை அத்லாண்டிக்கில் இருந்து பசுபிக்கிற்கு மாற்ற நினைக்கின்றது என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர். 

கடலில் விழுமா சீனா?

சீனாவின் எரிபொருள் தேவையில் 87விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் 77 நாட்களுக்கு பாவிக்கக் கூடிய எரிபொருளை மட்டும் இருப்பில் வைத்திருக்க முடியும். சீனாவின் எரிபொருள் வழங்கலைத் துண்டிக்க சீனாவிற்கு எதிராக இந்தியாவால் இரண்டு கடல் முற்றுகைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து செய்யும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சீனக் கப்பல்கள் மலக்காய் நீரிணையூடாக பயணிப்பதைத் தடுத்தல்.  இரண்டாவது பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தையும் அதை ஒட்டியுள்ள கரையோரப் பிரதேசங்களை முற்றுகையிட வேண்டும். அதனால் சீனாவிற்கு செல்லும் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருள்கள் செல்வதையும் சீனாவில் இருந்து அதன் ஏற்றுமதிகள் உலகெங்கும் செல்வதையும் இந்தியா தடுக்க வேண்டும். இதற்கு பாக்கிஸ்த்தானின் கடற்படையை முற்றாக அழிக்க வேண்டும். அதனால் பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான போரில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும். ஆகையால் இரண்டாவது முற்றுகை தரைப்போரில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம். அந்தமான் நிக்கோபார் தீவில் இந்தியாவின் கடற்படை வலிமை சீனக் கடற்படை மலாக்கா நீரிணையை தாண்டி வர முடியாதபடி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். ஒஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவில் {Cocos (Keeling) islands} இந்தியா துரிதமாகப் படைக்கலன்களை குவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். உலக அரங்கில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக களம் இறங்கும் முடிவை எடுக்கச் செய்தால் இந்து மாக்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படைக்கு பிரெஞ்சுக் கடற்படை உதவி செய்யும் நிலை உருவாக்கலாம்.

படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு நிலையில் இந்தியாவின் நிலங்களை சிறிது சிறிதாக சீனா அபகரிப்பதை தடுப்பதற்கு இந்தியா தன்னை படைக்கல அடிப்படையிலும் அரசுறவியல் அடைப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் சீனாவிலும் வலிமையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா தன் படைத்துறை வலிமை  சீனாவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியா பல பொருளாதார தியாகங்களைச் செய்ய வேண்டும்.ன்ச்அரசுறவியல் அடிப்படையில் இந்தியா தன்னை வலிமைப்படுத்தச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். இந்திய சீனப் போர் நடக்கும் போது பாக்கிஸ்த்தானும் நேரடியாக போரில் இறங்கலாம் அல்லது இந்தியாவிற்கு பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீனாவிற்கு சாதகமாக போரைத் திருப்ப முயலலாம். இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிப்பதை நிறுத்த இந்தியாவின் படைத்துறை சீனாவிலும் வலிமையானதாக இருக்க வேண்டும் அல்லது இந்தியா சீனாவிற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட படியால் எந்த ஒரு நாடும் அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஜப்பான் அடிக்கடி வலியுறுத்தும் குவாட் என்னும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியாவைக் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா காட்டி வந்த தயக்கம் அந்தப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதே வேளை தென் கொரியாவும் வியட்னாமும் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன.

இரசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் இணைந்த படைக்கல உற்பத்தியும்

இரசியாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். அதனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்குதல் செய்வதை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும். சீன பல புதிய படைக்கலன்களை இரசியாவிடமிருந்தே வாங்குகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து புதிய படைக்கல உற்பத்தியில் ஈடுபட வேண்டும் அப்படி உற்பத்தி செய்யும் படைக்கலன்களை ஒரு நாட்டின் அனுமதியின்றி மற்ற நாடு எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இந்த அடிப்படியிலேயே செய்யப்பட்டது. இரசிய தொழில்நுட்பங்களை இரசியாவிடமிருந்து வாங்கும் படைக்கலன்களில் இருந்தே சீனா பெறுகின்ற படையால் இது சீனாவை படைக்கல உற்பத்தியில் பின்னடைவைச் சந்திக்க வைக்கும். உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரசியா முன்வந்துள்ளது. அதை சீனாவிற்கு விற்பனை செய்வதும் தடைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு முறைமைகளை இரசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

அரசுறவியல் மேம்பாடு

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் நடக்கும் போது அமெரிக்காவும் ஜப்பானும் மேலும் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கச் செய்யும் அளவிற்கு இந்திய அரசுறவுகள் மேம்பட்டவையாக இருக்க வேண்டும். சீனாவுடன் போர் செய்யும் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரும் அளவிற்கு சீனாவிற்கு நட்பு நாடுகள் இல்லை என்பது இந்தியாவிற்கு வாய்ப்பானதாகும். வியட்னாம் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகின்றன. வியட்னாமுடனான ஒத்துழைபு சீனாவை ஆத்திரப் படுத்தும் என இந்தியா இதுவரை தயக்கம் காட்டியது.

இந்தியாவில் அமெரிக்கப் படைத்தளம்.

கொல்கத்தாவில் அமெரிக்க கடற்படைத்தளமும் வான்படைத்தளமும் அமைத்தால் இந்திய சீனப் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமையும். ஜப்பானும் தென் கொரியாவும் தமது நாடுகளில் அமெரிக்கப் படைத்தளஙக்ளை அமைக்க அனுமதித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலோ உலக அரங்கின் அவற்றின் தனித்துவமான கொள்கைகளிலோ விட்டுக்கொடுப்புக்களை பெரிதாகச் செய்வதில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு பகுதியான சில்கிரி இணைப்புப் பாதையை சீனாவல் அசைக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தலம். அமெரிக்காவின் F-35 போவிமானங்கள் ஐம்பதையாவது இந்தியா வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப் படவேண்டும்.

பல் துறைப் படைக்கலன்கள்

ஆழ்கடலில் செயற்படக் கூடிய கடற்படை, அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் முனை அனுபவம் கொண்ட படைத்துறை, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் படைக்கலன்களை வாங்கக் கூடிய ஒரே நாடு என்ற நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக இருக்கின்றன. சீனாவின் மிகப் பெரிய பின்னடைவு பல ஆண்டுகளாக போர் முனை அனுபவம் இல்லாத படைத்துறை என்பதே. இந்திய சீனப் போர் என ஒன்று வரும்போது இந்தியாவின் செய்மதிகளை சீனா அழித்து இந்தியப்படையினரைன் தொடர்பாடல்களை சிதைக்கலாம். பதிலுக்கு இந்தியாவும் சீனச் செய்மதிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். இணையவெளித்தாக்குதல் பலவற்றை சீனா செய்யலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியைப் பெறவேண்டும். சுவீடனின் Gripen E fighter விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்தவை என நிருபணமானவை. சீனாவின் உளவு விமானங்களை இந்தியா செயலிழக்கச் செய்வதற்கு Gripen E fighter வாங்க வேண்டும். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுநிலைகளையும் போரின் ஆரம்பத்திலேயே இந்தியா அழிக்கும் அளவிற்கான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறவேண்டும். அவற்றை அழிக்க தரையில் இருந்தும் வானில் இருந்தும் பெருமளவு ஏவுகணைகளை போர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்தியா வீச வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை இந்தியாவிற்கு இரகசியமாக வழங்க அமெரிக்கா தயங்காது. இந்திய சீனப் போர் என்று ஒன்று வந்தால் சீனாவின் பொருளாதார நிலைகளை இந்தியா துவம்சம் செய்யும் என்ற உணர்வை சீனாவிற்கு இந்தியா ஏற்படுத்த வேண்டும். சீனா இந்தியாவிற்கு ஆறுபது பில்லியன் டொலருக்கும் அதிமான ஏற்றுமதியை இந்தியாவிற்கு செய்கின்றது.

இந்தியா மீதான அச்சத்தை சீனாவிற்கு ஏற்படுத்துவது இலகுவான ஒன்றல்ல. அதே வேளை அது இயலாத ஒன்று அல்ல. இப்போதிருக்கும் இந்தியாவையிட்டு சீனா கலவரப்படவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவையிட்டு சீனா அச்சமடைந்துள்ளது. இந்தியா தனது தற்போதைய நிலையை மாற்றாவிடில் அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு சீனாவிடமிருந்து பல பிரச்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

Monday, 27 July 2020

இந்தியா வாங்கிக் குவிக்கும் படைக்கலன்கள்

கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் சீனாவுடன் ஏற்பட்ட முறுகலுக்குப் பின்னர் இந்தியா புதிதாக ஐந்தரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கல கொள்வனவை செய்யவுள்ளதுடன் பிரான்சிடமிருந்து செய்யும் ரஃபேல் பற்பணி விமானக் கொள்வனவையும் துரிதப் படுத்தியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு கொள்வனவுச் சபையின் சிறப்புக் கூட்டம் 2020 ஜூலை 15-ம் திகதி நடைபெற்றது. இந்தியத் தரைப்படை தனது பீஷ்மா போர்த்தாங்கிகளில் (T-90 Bhishma Tanks) பொருத்துவதற்கெ1512 கண்ணிவெடிகளை அகழ்ந்து எடுக்கும் கருவிகளை வாங்குகின்றது. சீனாவுடனான எல்லையைக் கண்காணிப்பதற்கு இந்திய தனது உள்ளூர்த் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. Igla-S என்கின்ற வான் பாதுகாப்பு முறைமையையும் அவசரமாக வாங்குகின்றது. மேலும் இந்தியாவின் அவசரக் கொள்வனவில் இரசியாவிடமிருந்து புதிய 21 மிக்-29 ஜெட் விமானங்களும் ஏற்கனவே வாங்கிய 59 விமானங்களை மேம்படுத்துதலும் அடங்கும். லடாக் பிரதேச முறுகலின் பின்னர் அவசர தேவை அடிப்படையில் இந்தியா பல படைக்கலன்களைக் கொள்வனவு செய்வதால் வழமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு தவிர்க்கலாம். அமெரிக்காவிடமிருந்து வாங்கிய CH-47 Chinook heavy-lift helicopters என்னும் உலங்கு வானூர்திகளை லடாக் பிரதேசத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

ரஃபேல் கொள்வனவு

பாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்கும் இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I  ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா முன்பு கடைப்பிடித்தது. அதனால் பிரான்சிடமிருந்து தனக்குத் தேவையான பற்பணி விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதன் பின்னணியில் பல அரசியற் பிரச்சனைகள் இந்திய உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்தியா இரசியாவிடமிருந்து புதிய பன்னிரண்டு Su-30MKI போர்விமானங்களையும் 1.53பில்லியன் டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இரசியா தாமதப் படுத்திய எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா தற்போது துரிதப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலிடமிர்ந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Spike anti-tank guided missiles) இந்தியா வாங்குகின்றது. இந்தியாவின் கொள்வனவுப் பட்டியலில் ஜேர்மனியில் இருந்து வாங்குக் 72000 துமுக்கி துப்பாக்கிகளும் (sig 716 rifle) அடங்கும்.

இரண்டு ரஃபேல் படையணிகள்

ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலட்தில் உள்ள அம்பாலா ராணுவ விமான தளம் போய்ச் சேருகின்றன. ஆனால் அவை போருக்குத்தயார் நிலைக்கு வர 2 மாதங்கள் எடுக்கலாம். ஏற்கனவே இந்திய விமானிகளுக்கு பிரான்சில் வைத்து ரஃபேல் போர்விமானங்களை பறக்கும் பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் முப்பத்தியிரண்டு ரஃபேல் விமானங்களைக் கொண்ட இரண்டு விமானப்படையணியை இந்தியா உருவாக்கவுள்ளது. ஒரு படையணி ஹரியானாவில் அம்பாலாவிலும் மற்றது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானத் தளத்திலும் நிலைகொள்ளவுள்ளன. இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் வரும் அம்பாலா விமானத்தளம் சீன எல்லையில் இருந்தும் பாக்கிஸ்த்தான் எல்லையில் இருந்தும் சம தொலைவில் உள்ளது. ஹசிமாரா விமானத் தளம் இந்தியாவின் ஏழு வட கிழக்கு மாநிலங்களை இந்தியப் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கோழிக்கழுத்து என அழைக்கப்படும் சில்குரி பாதையை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். இது பங்களாதேசத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையில் உள்ள குறுகிய பாதையாகும். அத்துடன் இரு விமானத் தளங்களும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.

ரஃபேல் விமானத்தில் பொருத்தக் கூடிய ஏவுகணைகள்:

1. MBDA Scalp ஏவுகணைகள் (Air To Ground Cruise Missile). பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய இந்த MBDA Scalp ஏவுகணைகள் 5.1 மீட்டர் நீளமும் 450 கிலோகிராம் எடை 1000கிமீ/வினாடி தூரம் 560 கிலோ மீட்டர். 

2. Meteor ஏவுகணைகள் Air To Air Missile இவை தற்போது உள்ள வானில் இருந்து வானிற்கு தாக்குதல் செய்யக் கூடிய மிகச்சிறந்த ஏவுகணைகளாகும். Meteor ரக ஏவுகணைகள் : 3.7 மீட்டர்  190 கிலோக எடையும் கொண்டவை. இவை ஒலியிலும் பார்க்க நான்கு மடங்கு (Mach4) வேகத்தில் சென்று, 100 கிலோ மீட்டர் வரை உள்ள எதிரி போர் விமானங்களை தாக்கும் வலிமையுள்ளவை.

3. இரசியாவும் இந்தியாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள். பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.  ரஃபேல் விமானங்களும் அவற்றில் பொருத்தப்படவுள்ள ஏவுகணைகளும் இந்திய எல்லையில் பறந்து கொண்டே ரஃபேல் விமாங்களால் னபாகிஸ்தானில் உள்ள பல இலக்குகளை அழித்துவிட முடியும். அதே போலவே சீனாவின் பல பிரதேசங்கள் ரஃபேலின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

இந்தியாவிற்கு என தனித்துவமான ரஃபேல்


பதின் மூன்று ரஃபேல் விமானக்கள் இந்தியாவிற்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் குளிரான கால நிலையில் விமானம் மேலெழும்பக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை India Specific Enhancements (ISE) என அழைக்கப்படுகின்றன. இமயமலைக்கு அண்மையாக உள்ள கஷ்மீர் பிரதேசத்தின் புவி அமைப்பைக் கருத்தில் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இமய மலைச் சாரலில் இருந்து விமானங்களை தரையில் இருந்து எழும்பச் செய்வதில் சீனா பெரும் பின்னடைவு நிலையில் உள்ளது.

சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்

சீனா அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானங்களின் இரகசியங்களை இணையவெளி ஊடுருவல் மூலம் அபகரித்து தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இப்போது சீனா ஜே-20-பி என ஒரு மேம்படுத்தப்பட்ட போர்விமானங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றது. ரஃபேல் விமானங்கள் புலப்படாத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் சீனாவின் ஜே-20 போர்விமானங்களும் ஜே-31 போர் விமானங்களினதும் புலப்படாத் தனமை கேள்விக்குறியாகவே உள்ளது. சீன பாதுகாப்புத் துறை ஊடகங்கள் தமது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை இந்தியாவின் ரஃபேல் விமானங்களால் எதிர் கொள்ள முடியாது என மார்தட்டுகின்றன. ஒரு போர் நடக்கும் போது மட்டும் ரஃபேல் எந்த அளவுக்கு சீனாவிற்கு அச்சுறுத்தலானது என அறிய முடியும். விமானிகளின் போர் முனை அனுபவம் எனப்பார்க்கும் போது இந்திய விமானிகள் சிறப்பான நிலையில் இருக்கின்றனர்.

சீனாவை அச்சப்பட வைக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும்.

 


இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...