Followers

Showing posts with label விமானம் தாங்கி. Show all posts
Showing posts with label விமானம் தாங்கி. Show all posts

Thursday, 20 January 2022

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் வலிமையற்றதா?

 


அமெரிக்க கடற்படைத் தளபதி ரோய் கிச்சினர் 2022 ஜனவரி 11-ம் திகதி நடந்த கடற்படையினரின் மாநாடு ஒன்றில் வெளியிட்ட தகவல் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிடம் லியோனிங், ஷண்டோங் என்னும் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. விமானம் தாங்கிக் கப்பலின் வலிமை 1. அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 2. அவ்விமானங்களின் வலிமை, 3. படைக்கலன்களின் அளவு 4. கப்பலின் இயங்கு வலிமை 5. அதை சுற்றிவரும் பரிவாரக் கப்பல்கள் போன்றவற்றில் தங்கியுள்ளன.

விமானம் தாங்கி - சிங்கிளாக வராத சிங்கம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரியின் விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

நீலத் தண்ணீர் கடற்படை

1980களின் ஆரம்பத்தில் இருந்து பொருளாதாரத்தில் மிகப்பாரிய வளர்ச்சியை ஆரம்பித்த சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்றுமதி செய்யவும் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் சீனாவும் தனது கடற்போக்குவரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப சீனா தனது கடற்படையை தற்போது எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உயர்த்தியுள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டும் வலிமையை முடிவு செய்ய மாட்டாது. கடற்படையின் தொழில்நுட்ப மேம்பாடும் மிக அவசியமானதாகும். 1990களின் சீனாவின் கடற்படை பழுப்புப் தண்ணீர் கடற்படை என்ற நிலையில் இருந்து நீலத் தண்ணீர் கடற்படை என்ற நிலைக்கு தற்போது உயர்ந்தது. நாட்டின் உட்புறத்தில் உள்ள கடல் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் செயற்படும் கடற்படையை பழுப்புப் தண்ணீர் கடற்படை (Brown Water Navy) எனவும் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் கூடிய கடற்படையை பசுமைத் தண்ணீர் கடற்படை (Green Water Navy) எனவும் உலகெங்கும் உள்ள ஆழக்கடல்கள் எல்லாவற்றிற்கும் சென்று ஆதிக்கம் செலுத்தக் கூடிய கடற்படையை நீலத் தண்ணீர் கடற்படை (Blue Water Navy) எனவும் அழைப்பர்.

அமெரிக்க சீன விமானம் தாங்கி கப்பல்கள்

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் வெறும் பயிற்ச்சிக் கப்பல் மட்டுமே என கிண்டல் செய்வோரும் உண்டு. லியோனிங் தாங்கிச் செல்லும் Shenjang J-15 போர்விமானங்களால் ஆகக் கூடியது 4000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். ஆனால் அமெரிக்காவின் விமானம் தாங்கிகளில் பாவிக்கப்பட்ட F/A-18 போர்விமானங்களால் 12,000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல முடியும். அமெரிக்காவின் நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பலில் 64 F/A-18 விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். லியோனிங்கில் 26 Shenjang J-15 போர்விமானங்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான ஷாண்டோங்கால் 44 Shenjang J-15 போர்விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். கடற்போரில் பயிற்ச்சியும் நேரடி அனுபவமும் பெற்ற ஒரு அட்மிரலின் தலைமையில்தான் விமானம் தாங்கிக் கப்பலும் அதன் பரிவாரக் கப்பல்களும் இயங்கும். எந்த ஒரு கடற்போர் அனுபவமும் இல்லாத சீனக் கடற்படையில் எவரையும் அட்மிரல் என அழைக்க முடியாது என சீனாவை சில படைத்துறை ஆய்வாளர்கள் கிண்டலடிப்பதும் உண்டு.

Close Encounter

2021 ஏப்ரல் மாதம் தென்சீனக் கடலில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங்கிற்கு கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் அண்மையாகச் சென்ற அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலான USS Mustin லியோனிங்கின் செயற்படு திறன் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்தது. அமெரிக்க நாசகாரி லியோனிங்கை சாதரண ஒளிபடப் பதிவுக் கருவியால் படம் பிடித்துள்ளது. ஒரு வலிமை மிக்க விமானம் தாங்கியைச் சுற்றியுள்ள நாசகாரிக் கப்பல்கள் எதிரியின் கப்பல்களை விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்லாமல் தடுத்துவிடும். ஒரு தனி நாசகாரி எதியின் விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்வது அந்த விமானம் தாங்கியில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2021இன் ஆரம்பத்தில் லியோனிங்கை கண்காணிக்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் தமது USS Mustin என்னும் பற்பணி நாசகாரிக்கப்பலை ஈடுபடுத்தினர். USS Mustin என்பது Arleigh Burke-Class guided missile destroyer ஆகும். இந்த வகுப்பைச் சேர்ந்த நாசகாரிகள் Aegis Combat System என்னும் வலிமை மிக்க கணினிகளாலும் உயர் உணர் திறன் கொண்ட கதுவிகளாலும் (ரடார்கள்) இயங்கும் ஏவுகணைகளைக் கொண்டவை. அவ் ஏவுகணைகள் எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியவை.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்

இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும். சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலில் EMALS முறைமை இணைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியே வந்த ஒரு நாசகாரிக் கப்பல்களை எதிர் கொள்ள முடியாத சீனாவின் விமானம் தாங்கி கப்பல் Carrier Battle Group என அழைக்கப்படும் பல கப்பல்கள் சூழ ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுடன் வரும் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றின் விமானம் தாங்கி கப்பல்களை எப்படி எதிர் கொள்ளப்போகின்றது? சீனா விமானம் தாங்கி உற்பத்தித் துறை இப்போது தவழும் நிலையில்தான் இருக்கின்றதா?

Tuesday, 17 August 2021

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் புதிய விமானம் தாங்கிக் கப்பல்கள்

 


2021 ஓகஸ்ட் 8-ம் திகதி அமெரிக்கா தனது யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலின் வெள்ளோட்டதை நிறைவு செய்தது. இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலும் தனது வெள்ளோட்டத்தை ஓகஸ்ட் 4-ம் திகதி ஆரம்பித்தது. விமானம் தாங்கிக் கப்பல்களை முதலில் கடலில் இறக்கி பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படும். கடலில் பயணிக்கும் விதம் குண்டு வெடிப்பு அதிச்சியைத் தாங்கும் திறன், இயந்திரம் மற்றும் பல்வேறுகருவிகளின் செயற்பாடு போன்றவை தேர்வுக்கு உட்படுத்தப்படும். இந்தியா அமெரிக்காவிற்கும் பிரான்சையும் அடுத்து 1957-ம் ஆண்டில் இருந்தே விமானம் தாங்கிக் கப்பலைப் பயன் படுத்துகின்றது.

விமானம் தாங்கிக் கப்பல்களின் வகைகள்

ஒரு விமானம் தாங்கிக் கப்பலின் திறன் அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையிலும் திறனிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தனை விமானங்கள் அதிலிருந்து பறந்து செல்லும் போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. விமானம் தாங்கிக் கப்பல்களை மூன்றாக வகைப்படுத்தலாம்: 1. மீகை- விமானம் தாங்கிக் கப்பல்கள் (Super-carriers) இவை 100,000 தொன் எடையுள்ளவை. 90 விமானங்களைக் கொண்டவை. 2. நடுத்தர விமானம் தாங்கிக் கப்பல்கள். இவை 40,000 தொன் எடையுடவை. 40 விமானங்களைக் கொண்டவை. 3. தாழ்ந்த தரமான விமானம் தாங்கிக் கப்பல்கள் இவை விமானம் தாங்கிக் கப்பல் உற்பத்தியிலும் கடற்போரிலும் அனுபவமில்லாத நாடுகள் வைத்திருக்கும் கப்பல்கள். இரசியா கடற்போர் அனுபவம் குறைந்த நாடு. சீனா கடற்போர் அனுபவமில்லாத நாடு.

செலவு மிக்க வி/தா கப்பல்கள்

1988இல் இரசியா 70விமானங்கள் தாங்கிச் செல்லக்கூடிய 85,000 தொன் எடையுள்ள அணுவலுவில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை கட்ட முடி செய்திருந்தது. ஆனால் அதைப் பின்னர் கைவிட்டது. அதில் இரசியா சந்திக்கவிருக்கும் நிதிப் பிரச்சனை தொழில்நுட்பப் பிரச்சனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் கைவிடப்பட்டது. சீனாவிடம் லியோனிங் என்னும் விமானம் தாங்கி கப்பல் உள்ளது. அது மேலும் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் ஐ.எஸ்.எஸ் விக்ராந்த 23,000 கோடி ரூபாக்களில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலிற்கான மொத்தச் செலவு $12.8பில்லியன்.

அரசுறவில் பெரும் பங்கு வகிக்கும் விமானம் தாங்கிகள்

அமெரிக்கா 11 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர்: ஒரு விமானம் தாங்கிக் கப்பல் 100,000 தொன் அரசுறவுக்கு ஈடானது. (An aircraft carrier is 100,000 of diplomacy)

இரண்டும் தேறின

2021 ஓகஸ்ட் மாதம் உள்ள கணக்கின்படி உலகில் 41 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அதில் 11 அமெரிக்காவிற்கு சொந்தமானது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்கும் பாரிய அளவிலானவை. ஒவ்வொன்றும் 80விமானங்களைக் காவிச்செல்ல வல்லவை. அமெரிக்காவின் USS GERALD FORD கப்பலுக்கு அருகில் மூன்று தடவை குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது வெடிப்பு 3.9ரிக்டர் அளவுகோல் பூமி அதிச்சிக்கு ஈடானது. Kochin Shipyard Ltd என்னும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்தியாவின் விக்ராந்தை உற்பத்தி செய்துள்ளது. அதற்கான கடற் கடற்தேர்வுகளில் அது தேறியுள்ளதாக இந்தியக் கடற்படை அறிவித்தது. விக்ராந்த் வெடிப்புக்கு உள்ளாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதா எனத் தகவல் இல்லை.



மலையும் மடுவும்

262மீட்டர் நீளம் 62மீட்டர் அகலம். 14அடுக்குகள், 2300 அறைகள் கொண்டது விக்கிரந்த். அதில் 1700பேர் செயற்படுவர். விக்ராந்தின் மிதப்பு வேகம் 18கடல் மைல்கள். அதி உயர் வேகம் 28கடல் மைல்கள்.அமெரிக்க ஃபோர்ட் வகை விதா கப்பல்களில் 25 அடுக்குகள், வேகம் 30கடல் மைல்கள். அது 4539ஆளணிகளையும் 2700 அறைகளையும் கொண்து. ஃபோர்ட் கப்பல்கள் குறைந்த அளவு ஆட்கள் தேவைப்படும் அளவிற்கு பல தானியங்கி முறைமைகளைக் கொண்டுள்ளது.

விமானங்கள் கப்பலில் இருந்து பல்வேறு வழியில் கிளம்பிச்செல்லும்:

1. catapult-based launch system (CATOBAR)- பாரம் குறைந்த விமானங்கள்

2. Short Take-Off, Barrier Assisted Recovery (STOBAR)

3. Short Take-Off and Landing (STOL)

4. Vertical take-off and short landing (VSTOL)

விக்கிராந்த்தில் STOBAR முறைமை உண்டு. ஃபோர்ட்டில் VSTOL முறைமை செயற்படுகின்றது. அத்துடன் மின்காந்த உந்து முறைமையும் பாவிக்கப்படுகின்றது. விக்கிராந்தில் மிக்-29கே அல்லது தேஜஸ் போன்ற நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் பயன்படுத்தப்படலாம். ஃபோர்ட்டில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஈடுபடுத்தப்படும். நான்காம் தலைமுறைப் போர்விமானத்திற்கும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்திற்கும் உள்ள வித்தியாசம் பழைய விரல்விட்டு சுழற்றும் தொலைப்பேசிக்கும் தற்போது உள்ள ஐ-போனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றது. விக்ராந்த் டீசல் மூலம் தன் வலுவைப் பெறுகின்றது. ஃபோர்ட் அணுவலுவால் இயக்கப்படுகின்றது. விக்ராந்த தொடர்ச்சியாக 6000மைல்கள் பயணிக்கும். ஃபோர்ட் பயணிக்கும் தூரத்திற்கு வரையறை இல்லை அது இருபது ஆண்டுகள் கடலில் பயணிக்கலாம்.

இந்தியாவிற்கு விக்ராந்த்அவசியம் தேவை

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கி கப்பலாக விகிரமாதித்தியா வரவுள்ளது. அமெரிக்கா ஃபோர்ட் போன்று மேலும் பத்து கப்பல்களை உருவாக்கவுள்ளது.

அமெரிக்காவின் ஃபோர்ட் வகை வி/தா கப்பல்களிற்கு முந்திய தலைமுறைக் கப்பல்களான நிமிட்ஸ் வகைக் கப்பல்களை அழிக்க்க் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை சீனா உருவாக்கியது. அவற்றைத் தடுக்க அமெரிக்கா தனது வி/தா கப்பல்களை பாதுகாக்கும் ஆழி பேர்க் வகை நாசகாரக் கப்பல்களில் சிறந்த ரடார்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் இணைத்துள்ளது. அதனால் சீனா பாரிய எண்ணிக்கையில் குளவித் தாக்குதல் பாணியில் அமெரிக்க வி/தா கப்பல்களில் மீது தாக்குதல் செய்யும் திட்டத்துடன் உள்ளது. அதை முறியடிக்க அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவிக்கவுள்ளது. ஆனால் பாவம் இந்தியாவின் விக்ராந்த் சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு நின்று பிடிக்குமா?

காளி அம்மாள் காப்பாற்றுவாளா?

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும். 

Monday, 26 October 2020

விமானம் தாங்கி கப்பல் போட்டியில் இந்தியா

கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு வலிமையான கடற்படை அவசியம். கடலோர வளங்களையும் கரையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூர கடற்பொருளாதார வளத்தையும் பாதுகாப்பதற்கும் கடற்போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படை அவசியமானதாகும். முன்பு பிரித்தானியாவும் தற்போது அமெரிக்காவும் தமது கடற்படை வலிமை மூலமாகவே தம் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தின. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அதன் பொருளாதார வலிமையும் கடற்படை வலிமையுமே தூக்கி நிறுத்தின.

சீனாவினதும் அமெரிக்காவினதும் விமானம் தாங்கிக் கப்பல்கள்

சீனாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. முதலாவது இரசியாவிடமிருந்து வாங்கிய லியோனிங். மற்றது சீனாவே உருவாக்கிய ஷாண்டோங். சீனா மேலும் இரண்டு புதிய விமானம் தாங்கிக் கப்பல்களை சீனா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அவை அறுபதாயிரம் தொன் எடையுள்ள நடுத்தர அளவு விமானம் தாங்கிக் கப்பல்களாகும். சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 2023இல் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்காவின் பதினொரு விமானம் தாங்கிக் கப்பல்களும் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). விமானம் தாங்கிக் கப்பல்களின் தரவரிசை அவற்றின் எடை, தங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, அவற்றில் இருந்து விமானங்கள் கிளம்பிச் செல்லும் முறைமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். விமானம் தாங்கிக் கப்பல்களில் மிகச் சிறந்தவை மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). அவை:

1. ஒரு இலட்சம் தொன் அல்லது அறுபத்தி நான்காயிரம் மெட்ரிக் தொன் எடையுள்ளவை

2. தொண்ணூறு விமானங்களைக் கொண்டிருக்கும்.

3. மின்காந்த தொழில்நுட்பம் மூலம் குறைந்த அளவு தூரம் பறந்து விமானங்கள் வானில் பறக்கும்.

அமெரிக்காவின் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் இரண்டு விமானங்கள் பறந்து செல்லக் கூடியவை.

பின் தங்கிய சீனா

சீனா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு இரசியாவின் எஸ்யூ-33 போர்விமானங்களை வாங்க முயற்ச்சித்த போது இரசியா அவற்றை விற்பனை செய்ய மறுத்து விட்டது. பின்னர் சீனா உக்ரேனிடமிருந்து அரைகுறையாக வடிவமைக்கப் பட்ட எஸ்யூ-33 விமானங்களை வாங்கி Reverse Engineering மூலம் உருவாக்கிய விமானங்கள் சரியாக வேலை செய்யவில்லை. Reverse Engineering மூலம் இயந்திரஙக்ளை உருவாக்குவது மிக மிக கடினமானது என்ற படியால் சீனாவால் சிறந்த போர் விமானங்களை உருவாக்க முடியவில்லை. அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனல் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியாவின் பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.



இந்தியவினதும் சீனாவினதும் கரையோரங்கள்

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. தென் சீனக் கடலின் தொண்ணூறு விழுக்காடு தன்னுடையது என உரிமை கொண்டாடும் சீனா பல நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொள்கின்றது.

மலபார் போர்ப்பயிற்ச்சி

இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பில் மலபார் போர்ப்பயிற்ச்சி முக்கிய பங்கு வகிக்கும். 1992இல் இருந்து அமெரிக்கா, இந்தியா, இணைந்து செய்து வந்த இப்போர்ப்பயிற்ச்சியில் 2015இல் ஜப்பான் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இப்போர்ப்பயிற்ச்சியை சீனா ஐயத்துடனும் சினத்துடனும் பார்த்தது வருகின்றது. மலபார் போர்ப்பயிற்ச்சியில் இனி ஒஸ்ரேலியாவும் இணைந்து கொள்ளவிருக்கின்றது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து குவாட் என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவக்கி வருகின்றன. இது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் என்பதை மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்தமை எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிரான போர் ஏற்படும் போது இந்த மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு உதவக் கூடிய வகையில் ஒப்பந்தம் செய்தல் அவசியமானதாகின்றது.

அமெரிக்க தளங்களைப் பாவிக்கக் கூடியக இந்தியா

2016—ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் செய்து கொண்ட செயலாதார பரிமாற்ற ஒந்தக் குறிப்பணை(Logistics Exchange Memorandum of Agreement) இந்தியாவிற்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள அமெரிக்க படைத்தளங்களை பாவிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவின் கடற் போக்கு வரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவிற்கு வலிமை மிக்க கடற்படை தேவை. இந்தியாவின் இரண்டாவது வி/தா கப்பல் முப்பதினாயிரம் எடையுள்ள சிறிய வகை வி/தா கப்பலாகும்.. இந்தியா இரசியாவிடமிருந்து 2013இல் வாங்கி மேம்படுத்திய வி/தா கப்பலான விக்கிரமாதித்தியா 44,500 தொன் எடையுள்ளது. அமெரிக்காவிடமிருந்து மின் காந்தம் மூலம் விமானங்களை கப்பல்களில் இருந்து பறக்கவைக்கும் தொழில் நுட்பத்தை வாங்கும் அனுமதிய இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனா அத்தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல்

சீனா விரைவில் நான்கு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்ட ஒரு நாடாக உருவெடுப்பதால் இந்தியாவிற்கு மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் அவசியமானதாகின்றது. ஒரு விமானம் தாங்கிக் கப்பல் பராமரிப்பிற்காக மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். சீனா தனது நான்கு விமானம் தாங்கிக் கப்பல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக நகர்த்த முடியாது என்றாலும் இந்தியா அரபிக்கடல், இந்து மாக்கடல், வங்கக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல் அவசியமாகின்றது. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சீனாவினுடையவற்றிலும் பார்க்க சிறியதாகும். இந்தியக் கடற்படையினரும் மூன்றாவது கப்பலுக்கு நீண்ட காலமாக வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். விமானம் தாங்கிக் கப்பல் என்பது ஒற்றைக் கப்பல் அல்ல. அதற்கு என்று பல பரிவாரக் கப்பல்கள் அவசியம். ஒரு விமானம் தாங்கிக் கப்பலைச் சுற்றிவர நாசகாரிக் கப்பல்கள், நீர்மூழிகிக்கப்பல்கள், கரையோரக் கப்பல்கள் என்பன எப்போதும் இருக்க வேண்டும்.

சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை அழிப்பதற்கு என்று பலவகையான  ஏவுகணைகளையும் நீர்மூழ்கிக்கப்பல்களையும் தானுந்தி நீரடி ஏவுகணைகளையும் (Torpedoes) உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் இருந்து தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற வேண்டியதும் அவசியமானதாகின்றது. அத்துடன் இரு நாடுகளும் இதில் இணைந்து பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கவும் வேண்டும்.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...