Followers

Wednesday 19 October 2022

உக்ரேனைக் கலங்கடிக்கும் ஈரானிய ஆளிலிகள் (Drones)

 


உலகெங்கும் படைக்கலன்களை விற்பனை செய்யும் இரசியா உக்ரேனுக்கு எதிரான போருக்கு ஈரானிடமிருந்து ஆளிலி விமானங்களை (Drones) வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானியர்கள் கிறிமியா சென்று ஆளிலிகளை இயக்கும் பயிற்ச்சியை இரசியர்களுக்கு வழங்குகின்றனர். 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய ஆளிலிகளைப் பாவித்து உக்ரேனிடமுள்ள இரண்டு 122-mm self-propelled Howitzers ஏவுகணைச் செலுத்திகளையும் இரண்டு 152mm Howitzers ஏவுகணைச் செலுத்திகளையும் சில காலாட்படை வண்டிகளையும் இரசியா அழித்தது. இது ஈரானின் ஆளிலிகளை இரசியா தேர்வுக்கு உட்படுத்திய நிகழ்வாகும். ஈரானிய ஆளிலிகளி சிறப்பாக தாக்குதல்கள் செய்தமையைத் தொடர்ந்து இரசியா ஈரானிடமிருந்து 2400 Shaheds-136 (Kamikaze) ஆளிலிகளை வாங்குவதாக 2022 ஒக்டோபர் 11-ம் திகதி செய்திகள் வெளிவந்தன. Shaheds ஆளிலிகள் உக்ரேனிற்கு பல இழப்புக்களை 2022 ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி ஏற்படுத்தின. இரசியா ஏவிய 43 ஆளிலிகளில் 37 சுட்டு வீழ்த்தப்பட்ட்ன. ஆறு பல குடிசார் நிலைகள் மீது தாக்குதல் செய்தன. உக்ரேன் போரில் தமது ஆளிலிகள் பாவிக்கப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

ஆளிலிகள் இலக்கைத் தாக்கி தம்மையும் அழித்துக் கொள்வதால் அவை தற்கொலை ஆளிலிகள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது இது போன்ற வானூர்திகளை Kamikaze என அழைத்தனர்.

பறக்கும் புல் வெட்டிகள் – Flying Lawn Mowers

ஈரான் உற்பத்தி செய்த பதினொரு அடி நீளமான Shaheds-136 ஆளிலிகள் அதன் இரைச்சல் காரணமாக பறக்கும் புல்வெட்டிகள் (Lawn Mowers) என அழைக்கப்படுகின்றன.  இரசியர்கள் அவற்றை Mopeds என அழைக்கின்றனர். இவற்றின் இயந்திரம் double stroke engine என்பதால் இரைச்சல் அதிகம். இவை தன் இலக்கை நோக்கி புவியீர்ப்பு விசையுடன் தன் உந்து விசையையும் சேர்த்து அதிக வேகத்தில் மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்க வல்லது. இது 88 இறாத்தல் வரையிலான குண்டுகளைத் தாங்கி சென்று வெடிக்க வைக்கும். இதன் இரைச்சலும் குறைந்த வேகத்தில் பறப்பதும் அதை இலகுவாக அழிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இருபதினாயிரம் டொலர்கள் பெறுமதியான Shaheds ஆளிலிகள் இரசியாவைப் பொறுத்த வரை மலிவானவையாகும். அதனால் இரசியா அளவில் அதிகமான Shaheds ஆளிலிகளை இரசியா உக்ரேன் இலக்குகள் மீது ஏவுகின்றது. அதில் 85% உக்ரேனியர்களால் அழிக்கப்படுகின்றன. ஏனையவை தப்பிச் சென்று தம் இலக்குகளை அழிக்கின்றன. ஈரானின் Shaheds ஆளிலிகளின் இயந்திரம் double stroke engine என்பதால் சிறிய அளவு வெப்பத்தை மட்டும் உமிழ்கின்றது. அத்துடன் மிகக் குறைந்த உயரத்தில் அவை பறக்கின்றன. அதனால் ரடார்களுக்கு புலப்படாமல் அவை பறக்கின்றன. இரசியா Shahedஇன் ஆகப் பிந்திய வகையான Shahed-136ஐ பாவிக்கின்றது. இவற்றை இரசியா ஆக்கிரமித்த உக்ரேனிய நிலப்பரப்பில் இருந்து ஈரானியர்களே இயக்குகின்றனர் எனச் சொல்லப்படுகின்றது. ஈரானிய ஆளிலிகள் பொதுமக்கள் பவிக்கும் பூகோள இடமறி முறைமையை (Global Positioning System – GPS) பாவிக்கின்றன. அதனால் அவற்றின் செயற்பாட்டை குழப்புவது (Jamming) இலகுவானதாகும்.



உக்ரேனுக்கு பின்னடைவு

அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கிய M-31 HIMARS M-142 HIMARS என்ற High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய தொலைதூர பல் குழல் ஏவுகணைச் செலுத்திகள் ஆகும். இவற்றை உக்ரேன் பாவித்து உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கீவ் பகுதியிலும் தென் பகுதியில் உள்ள கேர்சன் பகுதியிலும் இரசியப் படைகள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உக்ரேனியப் படைகள் 8500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை மீளக் கைப்பற்றிக் கொண்டன. இரசியப் படைகள் இவ் ஏவுகணைச் செலுத்திகள் மீது ஈரானிய உற்பத்தி ஆளிலிகள் மூலம் தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து உக்ரேனியப் படைகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது. உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் அப்பாவிப் பொதுமக்களின் இலக்குகள் மீதும் உட்-கட்டுமானங்கள் மீதும் பெரும் சேதம் ஏற்படுத்தின என உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. குளிர் காலத்திற்கு முன்னர் உக்ரேனின் எரிபொருள் சேமிப்பு நிலைகள் மீது ஈரானிய ஆளிலிகளால் தாக்குதல் செய்து உக்ரேனியர்களுக்கு பெரும் பாதிப்பை இரசியா ஏற்படுத்தலாம்.

உக்ரேனின் எப்பாகத்தையும் தாக்கலாம்.

அண்மைக் காலங்களின் போர் முனையில் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஆளிலிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2020-ம் ஆண்டு நடந்த அஜர்பையான் – ஆர்மீனியப் போரிலும் உக்ரேன் போரின் ஆரம்பத்திலும் துருக்கிய தயாரிப்பு ஆளிலிகள் எதிரிக்கு கடும் சேதத்தை விளைவித்தன. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட உக்ரேனை ஈரானிய ஆளிலிகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமானதாக அமையும் என படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரானின் Shahed-136 ஆளிலிகள் தாழமாகப் பறப்பதாலும் அவற்றை ரடார்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கின்றது. இரசியாவின் மொஸ்க்கோ நகரத்தில் இருந்து கொண்டே உக்ரேனின் எப்பாகத்தையும் Shahed-136 ஆலிலிகளால் தாக்க முடியும். தற்போது உக்ரேன் பாவிக்கும் சோவியத் ஒன்றியகால தயாரிப்பான S-300 வான் பாதுகாப்பு முறைமையால் தாழப்பறக்கும் ஆளிலிகளை இனம் கண்டு அழிக்க முடியாது.

உக்ரேனுக்கு உதவிகள் கிடைக்கும்

உக்ரேனில் ஈரானிய ஆளிலிகளும் இரசிய ஏவுகணைகளும் பெரும் சேதம் விளைவிப்பதால் அவற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க SAMP-T System புதிய வான்பாதுகாப்பு முறைமைகளை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வழங்க வேண்டும் என உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி அறிவித்திருந்தார். SAMP-T System பிரான்சும் இத்தாலியும் இணைந்து உற்பத்தி செய்த வான் பாதுகாப்பு முறைமையாகும். பிரான்ஸ் தனது வான்படைத் தளங்களை எதிரிகளின் பல்வேறு ஏவுகணைகள், விமானங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்கு SAMP-T Systemகளைப் பாவிக்கின்றது. SAMP-T System தரையில் இருந்து பார ஊர்தி மூலம் நகர்த்தப்படும் 30 ஏவுகணைக் கொண்ட முறைமையாகும். அந்த ஏவுகணைகள் இரண்டரை செக்கண்ட்களில் ஒலியிலும் பார்க்க 4.5மடங்கு வேகத்தைப் பெறக் கூடியது. பிரான்சும் இத்தாலியும் இவற்றை உக்ரேனுக்கு வழங்கவிருக்கின்றன.  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிகாவின் Phalanx Weapon Systemஐ உக்ரேனுக்கு வழங்குவதைத் துரிதப்படுத்தும் படி அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அது ஈரானிடமிருந்து படைக்கலன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் உக்ரேன் போரில் அதிகம் தலையிடுவதும் அதன் படைக்கலன்கள் சிறப்பாகச் செயற்படுவதையும் இஸ்ரேல் கவனித்துக் கொண்டிருக்கின்றது.

Monday 17 October 2022

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் உரையின் தாற்பரியம்


2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனாவின் மக்கள் பெருமண்டபத்தில் ஆரம்பமான சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயம் (congress) வரலாற்று முக்கியத்துவமானதாக இருக்கின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 90மில்லியன் உறுப்பினர்கள் தெரிவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி கொள்கைகளை வகுக்கும் கூட்டம் பேராயம் (congress) எனப்படும்.
சீனப் பொதுவுடமைக் கட்சி, சீன அரசு, சீனப்படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களும் சீனாவின் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை என்று பொதுவுடமைவாதிகள் சொல்கின்றனர். இவற்றில் அதிக அதிகாரம் கொண்டது பொதுவுடமைக் கட்சியே. தகுதிக்கு முன்னுரிமை கொடுத்தல், நடைமுறைக்கு ஏற்பட மாற்றங்களைச் செய்தல் போன்றவற்றால் பொதுவுடமைக் கட்சி சீனாவில் நிலைத்திருக்கின்றது.

கட்சிக் கட்டமைப்பு



பேராயத்தினர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி நானூறு வரையிலான நடுவண் குழு உறுப்பினரை தெரிவு செய்வர். நானூறு உறுப்பினர்களும் politburo என்னும் 25 பேர் கொண்ட அரசியற்குழுவை தெரிவு செய்வர். அரசியற்குழு தனது நிலையியற் குழுவைத் தெரிவு செய்யும். தெரிவுக் குழுவின் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் இருப்பார். நடுவண் குழுவே பொதுச் செயலாளரைத் தெரிவு செய்யும். அரசுத் தலைவர்: (Head of the State) இவரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பேராயம் தெரிவு செய்யும். இது இரண்டாவது அதிகார மையமாகும். Politburo: அரசியல்குழு என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கை உருவாக்கும் அமைப்பாகும். 25 உறுப்பினர்கள். பொதுச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது நடுவண் குழுவால் தெரிவு செய்யப்படும். Politburo Standing Committee: அரசியல் குழுவின் நிலையியல் குழு. இது அரசியல் குழுவால் தெரிவு செய்யப்படும். 

ஆயுட்கால அதிகாரம்

20வது பேராயத்தில் பொதுச் செயலாளரின் பதவிக்கால எல்லையான பத்து ஆண்டுகள் இல்லாமல் செய்யப்படும். அதன் படி சீனாவின் அதிகாரமிக்கவராக ஜீ ஜின்பிங் தொடர்ந்து பதவி வகிப்பார். ஒஸ்ரேலியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கெவின் ரட் அவர்க்ள் நீண்ட ஆயுளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த 69 வயதான ஜீ ஜின்பிங் இன்னும் 15 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என எதிர்வு கூறியுள்ளார். சீனாவின் அரசுத் தலைவராகவும் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் படைத்துறையின் உச்சத் தளபதியாகவும் பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் பொதுச்செயலாளராகவும் தளபதியாகவும் தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளார். உலக அமைதி, உலக பொருளாதாரம் ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் குழப்பமடைந்துள்ள நிலையில் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் ஆற்றிய உரை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது.

தைவானும் கொவிட்-19ம் 

தைவானை சீனாவுடன் இணைப்பது அண்மைக் காலங்களாக ஜீ ஜின்பிங்கின் முதன்மை கொள்கையாக இருக்கின்றது. தைவானை சீனாவுடன் இணைப்பதை மீளவும் உறுதி செய்தார் ஜீ. அமைதியான வழிகளில் இணைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்படும் என்ற ஜீ அது சரிவராது போனால் படை நடவடிக்கை மூலம் இணைக்க மாட்டேன் எனச் சொல்ல மாட்டேன் என்றார். ஆனால் எப்போது இணைப்பது என்பது பற்றி ஜீ ஏதும் சொல்லாத படியால் உடனடி போர் அபாயம் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். கொவிட்-19 பெருந்தொற்றை தைவான் மிகச் சிறப்பாக கையாண்டு உலகை வியக்க வைத்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக ஜீ சீனாவில் எடுத்த மிக இறுக்கமான நடவடிக்கைகள் சீனாவிலேயே அதிருப்தியைக் கிளறியுள்ளது. ஜீ தனது உரையில் கொவிட்-19இற்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

பொருளாதாரம் 

கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனா பெரும் சவால்களை எதிர் கொண்டதை சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயத்தில் உரையாற்றும் போது ஏற்றுக் கொண்ட ஜீ ஜின்பிங் சீனாவின் பல நகரங்களில் இளையோர் வேலையின்மை 20%இற்கு மேல் இருப்பதைப் பற்றி வாய் திறக்கவில்லை. வீழ்ச்சியடைந்து செல்லும் கட்டிடங்களின் விலை சீனப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கையில் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது பற்றியும் ஜீ வாய் திறக்கவில்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி உள்நாட்டுக் மக்களின் கொள்வனவையும் உயர்-தொழில்நுட்ப மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டாதாக இருக்கும் என்றார் ஜீ. அவர் பீஜிங்கில் உயர்-தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றி உரியாற்றுகையில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒடுக்கக் கூடிய நகர்வுகள் வாசிங்டனில் எடுக்கப்படுகின்றது. சீனாவின் இளையோருக்கு போதிய வேலைவாய்ப்பை வழங்க சீனப் பொருளாதாரம் குறைந்தது 7%ஆவது வளர வேண்டும் ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி 2022-ம் ஆண்டு சீனப் பொருளாதாரம் 3.2% மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீயின் உரையில் உணவு உற்பத்தியின் தன்னிறைவு அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 20வது பேராயம் நடை பெறுவதால் 2022இன் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரம் வெளியிடுவதை சீன அரசு தாமதப் படுத்தியுள்ளது. 

பாதுகாப்பு

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த ஜீ ஜின்பிங்கின் உரையில் அதிக தடவைகள் இடம்பெற்ற வார்த்தை பாதுகாப்பு ஆகும். சீனா அச்சுறுத்தப்படுவதாக காட்ட முயன்ற ஜீ அதை தன்னால் மட்டும் காப்பாற்ற முடியும் எனக் கட்ட முயன்றார். பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு போக வேண்டும் என்றார் ஜீ ஜின்பிங்.

வெளியுறவு

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட சீனாவிற்கு உலக அரங்கில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் அதை கோடிட்டு காட்டினார். தனி ஒரு நாடு உலக ஆதிக்கத்தை செலுத்துவதையும் பனிப்போர் மனப்பாங்கையும் ஜீ தனது உரையில் மறுதலித்திருந்தார்.

தன் பதவிக் காலத்தை தன் ஆயுள்வரை நீடிக்க முயலும் ஜீ ஜின்பிங் இனித்தான் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

Sunday 9 October 2022

புட்டீனிற்கு பிறந்த நாள் பரிசாக கிறிமியா பாலம் தீயிடப்பட்டதா?

 


கிறிமியாவிற்கு இரசியாவில் இருந்து 2018-ம் ஆண்டு கேர்ச் நீரிணையின் குறுக்கே $3.7பில்லியன் செலவில் 2018-ம் ஆண்டு பெரும் ரவாரத்துடன் கட்டிய பாலம் அவரது பிறந்த நாள் பரிசாக 2022 ஒக்டோபர் 8-ம் திகதி சனிக்கிழமை தீயிடப் பட்டது என உக்ரேனின் படைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவி-த்துள்ளார். கிறிமியா பாலம், கேர்ச் நீரிணைப் பாலம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் 19கிமீ (12மைல்) நீளமான பாலம் ஐரோப்பாவிலேயே பெரிய பாலமாகும். அதை தீப்பிடிக்க வைத்த தாக்குதலுக்கு உக்ரேன் உரிமை கோராவிட்டாலும் உக்ரேனில் பல தரப்பினரும் தம் சமூக வலைத்தளப் பதிவுகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். “பாலம் ஆரம்பம்; சட்டவிரோதமானதெல்லாம் அழிக்கப்படவேண்டும், களவாடப் பட்ட தெல்லாவற்றையும் உக்ரேன் திரும்பப் பெறவேண்டும்; ஆக்கிரமிப்பாளரகள் வெளியேற்றப்பட வேண்டும்” என உக்ரேனிய அதிகாரி ஒருவரின் டுவிட்டர் பதிவு கூறுகின்றது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரு பாலம் கட்டும் முயற்ச்சி மேற் கொள்ளப்பட்டது.



பயங்கரவாதம் என்ற புட்டீனின் பயங்கர பதிலடியா?

கிறிமியா பாலத்தை சேதப்படுத்தியமையை பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்தார் விளடிமீர் புட்டீன். அவர் சொன்ன மறுநாள் 2022-10-10 திங்கட் கிழமை உக்ரேனின் ஏழுக்கு மேற்பட்ட நகரங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரேன் தலைநகர் கீவ் பல குண்டுவெடிப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல் உக்ரேனின் மேற்குப் புறத்தில் போலாந்து எல்லையில் உள்ள அதாவது இரசியாவில் இருந்து ஆகக் கூடிய தொலைவில் உள்ள நகரங்கள் மீதும் நடைபெற்றுள்ளது. மேற்குப் பிராந்திய நகரமான Lviv நகர் மீடு நடந்த குட்ண்டுத்தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்புக்கள் வேண்டுமென்றே தெரிவு செய்யப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் குடியிருக்கும் பல தொடர் மாடிக் கட்டிடங்கள் மீதான தாக்குதல் பாரதூரமான போர்க்குற்றமாகும்.

தாக்குதல் நடந்த வித்தில் முரண்பாடு

கேர்ச் பாலத்தின் மீது சென்ற வெடி குண்டு நிரப்பிய வண்டியை வெடிக்க வைத்து பாலம் சேதப்படுத்தப் பட்டதாக இரசியா சொல்கின்றது. ஆனால் பாலத்தின் கீழ் ஆட்கள் இயக்கிய அல்லது ஆளில்லா படகு ஒன்றை பாலத்தின் மேல் எரிபொருள் தாங்கிச் செல்லும் ஏழு வண்டிகள் சென்று கொண்டிருக்கையில் வெடிக்கச் தீ மூட்டப்பட்டதாக மேற்கு நாட்டு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பாலத்தின் உள்ள உருக்குகளை உருகச் செய்யும் அளவிற்கு தீயினால் வெப்பம் அதிகரிக்கும் படி தாக்குதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.



உக்ரேனுக்கு சிரமம் கொடுக்க கட்டப்பட்ட பாலம்

கிறிமியாவில் நிலை கொண்டுள்ள இரசியப் படையினருக்கான வழங்கல்களை துரிதமாகச் செய்வதற்கு கட்டப்பட்ட பாலம் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதில் இருந்தே தாக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. குளிர்காலம் தொடங்குகின்ற நேரம் பார்த்து அது தகர்க்கும் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. கொத்தளிப்பான கால நிலையில் கிறிமியாவிற்கான வழங்கல்களை இலகுவாகச் செய்வதற்கு மட்டும் அப்பாலம் கட்டப்படவில்லை. வேண்டு மென்றே கடல் மட்டத்தில் இருந்து 30மீட்டர் உயரத்தில் அதைக் கட்டி கேர்ச் நீரிணை மூலம் உக்ரேனின் பெரிய கப்பல்கள் செல்வதை இரசியா தடுத்தது.

ஊதிப் பெரிதாக்கும் மேற்கு ஊடகங்கள்

வெறுவாயை மென்று கொண்டிருந்த மேற்கு நாட்டு ஊடகங்களுக்கு 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து உக்ரேனியர்கள் தொடச்சியாக உச்சக்கட்டமாக அவல்களை ஊட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் 2022 ஒக்டோபர் 8-ம் திகதி மொஸ்க்கோ நேரம் காலை ஆறுமணிக்கு உக்ரேன் பாலத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. புட்டீனின் பொக்கிசம் அழிக்கப்பட்டது; கிறிமியாவிற்கான வழங்கல் துண்டிக்கப்பட்டது; புட்டீனிற்கு பேரிடி போன்று எல்லாம் மேற்கு நாட்டு ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. சிரியாவிற்கு பெரும் படை நகர்வை துரிதமாகச் செய்த இரசியாவினால் 19கிமீ தொலைவில் உள்ள கிறிமியாவிற்கு வான் வழியாகவும் கடல் வழியாகவும் வழங்கல்களை செய்வது முடியாத செயல் அல்ல. சிறு பகுதி மட்டும் சேதமாக்கப்பட்ட பாலத்தை திருத்தி ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அதனூடாக பாரம் குறைந்த வண்டிகளை இரசியா ஓட வைத்துள்ளது. ஆனால் தம்பட்டமடிப்பதில் விருப்பமுடைய இரசிய அதிபருக்கு பாலம் தீப்பிடித்தமை ஓர் இடுகுறி இழப்பீடாகும். இரசிய மக்களுக்கு மூடி மறைக்க முடியாத இழப்பாக இது இருக்கின்றது. கிறிமியாப் பாலத்தை 2018இல் திறந்து வைத்துவிட்டு புட்டீன் தானே ஒரு பார ஊர்தியை அதன் மேலாக ஓட்டிச் சென்றார். இரசியாவின் கடற்படையின் இதயமான செவஸ்டோபோல் தளத்தை மேலும் வலுவாக்கியது என அப்போது புட்டீன் சூளுரைத்திருந்தார்.

வலிமையான பாதுகாப்பு

கேர்ச் பாலத்தை பாதுகாக்க இரசியாவின் பெருமை மிக்க S-400 ஏவுகணை எதிர்ப்பு,  செய்மதிக் கண்காணிப்பு, வேவு விமானம், ஈருடக கப்பல்கள், கதுவிகள் (ரடார்கள்) பயிற்றப்பட்ட டொல்பின்கள், நீரடி நீச்சல் கவலாளிகள், படகுகள் என இருபது வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2022 ஓகஸ்ட் மாதத்தில் செவஸ்டோபோலில் உள்ள கடற்படைத் தலைமையகம் மீது உக்ரேன் ஆளிலிகள் (Drones) மூலம் தாக்குதல் செய்யப்பட்டது. அதே மாதம் கிறிமியாவில் உள்ள இரசியாவின் சாக்கி விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட இரசிய விமானங்கள் வெடித்துச் சிதற வைக்கப்பட்டன. இத்தாக்குதல்களுக்குப் பிறகு கிறிமியாவில் இருந்து பலர் கிறிமியாப் பாலத்தினூடாக தப்பி இரசியாவிற்கு ஓடியிருந்தனர். அப்போது அப்பாலத்தினூடாக ஒரு நாளுக்கு 38,000 கார்கள் பயணித்திருந்தன.

இரசியாவிற்கு எதிராக பயங்கரமான திட்டமா?

ஒரு புறம் உக்ரேனின் வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள இரசியப் படையினரை வெளியேற்றுவதில் ஆரம்பித்து பின்னர் லுகான்ஸ்க், மாரியப்போல் ஆகிய பிரதேசங்களில் இருந்தும் இரசியப் படையினரை அகற்றி கிறிமியா நோக்கி உக்ரேன் படையினர் முன்னேறுவது ஒரு திட்டம். மறு திட்டமாக கேர்சன் பகுதியை கைப்பற்றி கிறிமியாவை நோக்கி முன்னேறுவது. அதற்கு வசதியாக கிறிமியாவிற்கான வழங்கல்களை துண்டிக்க வேண்டும் என்பதற்காக கிறிமியா பாலத்தை தகர்க்கும் முயற்ச்சியில் உக்ரேனியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பார ஊர்தி போக்குவரத்துக்கு என்றும் தொடருந்து போக்குவரத்துக்கு என்றும் இரண்டு தனிப் பாலங்களில் பார ஊர்தி பாலம் மட்டும் சேதமடைந்துள்ளது. மீளவும் திருத்தியமைக்க ஆறுமாதம் எடுக்கக்கூடிய வகையில் இரண்டு பாலங்களும் சேதமாக்கப்பட்டால் மட்டுமே இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படும்.

இரசியா உக்கிரமான பதிலடி கொடுக்குமா?

உக்ரேனின் வட கிழக்குப் பகுதி கார்க்கீவ் பிரதேசத்தில் 2022 செப்டம்பரில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து இரசியால் உக்ரேனின் உட்-கட்டுமான ங்கள் மீது தாக்குதல் நடத்தி குடிமக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியது. அது போல் கிறிமியா பாலத்தின் மீதான தாக்குதலுக்கு இரசியா கடுமையான பழிவாங்கல் நடவடிக்கையை ஏற்படுத்தும். புட்டீனின் ஆதரவாளர்கள் கொடூரமான பதிலடி கொடுக்கும் படி அவரை வற்புறுத்துடவதாக செய்திகள் வெளிவருகின்றன. உக்ரேனும் அதற்கு தயாராகுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இரசியாவில் தலைகள் உருளுமா?

புட்டீனின் ஆதரவாளர்களாக இருப்பவரகள் இரசியத் தேசியவாதிகள், செஸ்னியன் தலைவர் ரம்ஜான் கடிரோவ், இரசிய கூலிப்படை உரிமையாளர் யெவ்கெனி ப்ரிகொஜின் ஆகியோர் ஆகும். இந்த ஆதரவாளர்கள் உக்ரேன் போரில் இரசியாவின் பின்னடைவிற்கு இரசியத் தளபதி கேர்ணல் ஜெனரல் அலெக்சாண்டர் லப்பின் மீது குற்றம் சுமத்துகின்றனர். அவர் பதவி விலக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்காக இரசியாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி ஷொய்கு தற்கொலை செய்யவேண்டும் என இரசியா கைப்பற்றிய கேர்சன் பிரதேசத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட Kirill Stremousov பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.



Tuesday 4 October 2022

இந்தியா உற்பத்தி செய்த முதல் தாக்குதல் உலங்கு வானூர்தி


இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு High-Altitude Combat Helicopter தாக்குதல் உலங்கு வானூர்தி 2022-10-03 திங்கட் கிழமை பறக்க விடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி இந்தியாவிற்கு தேவையான எல்லா எல்லா பாதுகாப்பு படைக்கலன்களையும் உபகரணங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் முயற்ச்சியின் ஒரு பெரிய படி என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமைப்பட்டுக் கொண்டார். உக்கிரம் என்னும் பொருள் பட இத் தாக்குதல் உலங்கு வானுர்திக்கு Prachand எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2010இல் இதற்கான முதல் வடிவம் உருவாக்கி தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டது. Prachand வானூர்திகள் இந்தியாவில் தேஜஸ் விமானங்களைப் போல் Light Combat Aircraft வகையை சார்ந்தது. இதுவரை இந்தியப் படையினருக்கு தேவையான தாக்குதல் உலங்கு வானூர்திகளை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது. 

உலகின் மிக உயர எல்லையில் செயற்படும் திறன்
சீன எல்லையில் மிகவும் உயரமான இடத்தில் செயற்படக்கூடிய வகையில் Prachand என்னும்  High-Altitude Combat Helicopter வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 
இந்திய உலங்கு வானூர்தியின் தன்மைகள்:
1. 5.8 தொன் எடை
2. இரட்டை இயந்திரம்
3. எதிரியின் ரடாரக\ளால் கண்டறியக் கடினமான புலப்படாத்தன்மை (Stealth Features)
4. இரவிலும் தாக்குதல் செய்யக் கூடியது
5. எதிரியின் தாக்குதலை தாக்குப் பிடிக்க கூடிய கவசப் பாதுகாப்பு (Armoured Protection)
6. தீவிரவாதிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயற்படக் கூடியது
இந்திய அரசு Prachand உலங்கு வானூர்தியின் உற்பத்தியை HAL என சுருக்கமாக அழைக்கப்படும் Hindustan Aeronautics Ltd இடம் ஒப்படைத்திருந்தது. இந்தியப் பாதுகாப்புத் துறை முதலில் 15 Prachandஇற்கான உற்பத்தி வேண்டுதலைசெய்துள்ளது. அவற்றின் மொத்தப்பெறுமதி 39பில்லியன் ரூபாக்களாகும். 

அமெரிக்க போயிங் நிறுவனத்தின் Apache உலங்கு வானூர்திகள் 1890குதிரைவலுக் கொண்டவை. இந்தியாவின் Prachandஇன் வலிமை 1430 மட்டுமே. Apache இன் உயர் வேகம் 295கிமி/மணி Prachandஇன் வேகம் 280. Prachand 6500கிமீ உயரத்தில் பறந்து 700கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இனம் காணக் கூடியது. ஆனால் Apache 6400கிமீ உயரம் மட்டும்வரை பறந்து 480கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இனம் காணக் கூடியது. 


Prachand என்னும்  High-Altitude Combat Helicopter இன் இயந்திரங்கள் பிரான்சின் Safran SA நிறுவனத்தால் உருவாக்கப் பட்டவையாகும். அதனால் இந்தியாவின் Prachand ஒரு முழுமையான உள்ளூர் உற்பத்தி எனச் சொல்ல முடியாது.  2017-ம் ஆண்டில் இருந்து உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இந்தியாவிற்கு தேவையான படைக்கலன்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் நிலையை அடைய இந்தியா மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.



Monday 3 October 2022

காங்கிரசுத் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி மல்லிகை சூடுவாரா?

 


காங்கிரசு கட்சியின் தலைவர் தேர்வு 2022 ஒக்டோபர் மாதம்17-ம் திகதி நடைபெறவுள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த தலைமைப் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி (அவருக்கு விருப்பமில்லாமலே) போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2019இல் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியடைந்தது. அதைக் சாட்டக வைத்து ராகுல் தன் மீது திணிக்கப்பட்ட தலைமைப் பதவில் இருந்து விலகினார். ஒக்டோபர் 17ம் திகதி நடக்க விருக்கும் தேர்தலில் சோனியா குடும்பத்தின் சொற்படி ஆடக்கூடிய 71 வயதான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என்று கூறப்படுகின்றது. காங்கிரசுக் கட்சியின் உடைப்பூர் பிரகடனம் ஒருவருக்கு ஒரு பதவி தான் எனக் கூறுகின்றது. ஆனாலும் கட்சியின் தலைவராகவும் ராஜஸ்த்தான் முதல்வராகவும் தானே இருக்க வேண்டும் என அசோக் கெலாட் வலியுறுத்தினார். அது முடியாத போது பதவியை ராஜினாமா செய்தாலும் தனது ஆதரவாளர் மட்டுமே முதல்வர் ஆக வேண்டும் என்று அசோக் கெலாட் வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்த்தான் மாநிலத்தில் உட்பூசல் உச்சம் தொட்டது

அசோக் கெலாட் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வராகவும் தேசிய தலைவராகவும் இருக்கட்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரசு சட்டமன்ற உறுபினர்கள் தெரிவித்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி 90 எம்எல்ஏக்கள் மாநில சட்ட மன்றப் பதவியில் இருந்து செய்ய போவதாக காங்கிரசுக் கட்சியை மிரட்டினார்கள். இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். அசோக் தனது காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் தன் கடும் சவாலாக இருப்பவருமான சச்சின் பைலட் தனக்கு பின் முதல்வராக கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவில் ஆக சதிஸ்கர் மாநிலத்திலும் ராஜஸ்த்தான் மாநிலத்திலும் மட்டுமே சோனியாவின் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்த்தான் மாநில சட்ட சபைத் தேர்தலின் முன்னர் யார் முதலமைச்சர் என்ற போட்டி அசோக் கெலாட் என்பவருக்கும் சச்சின் பைலட் என்பவருக்கும் இடையில் நடந்தது. சோனியா காந்தி தனக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடிய அசோக் கெலாட்டை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார். தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரசு கூட்டணி நூறு இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 73 இடங்களைக் கைப்பற்றியது. அசோக் கெலாட் முதலமைச்சரானார். 2019இல் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சோனியாவின் காங்கிரசுக் கட்சி தலைமையிலான கூட்டணி ராஜஸ்த்தானில் 25 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. அடுத்த ராஜஸ்த்தான் சட்ட மன்றத் தேர்தல் 2023இல் நடக்கவிருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி மண்கவ்வாமல் இருக்க அசோக் கெலாட்டை தன் கட்சியில் தலைவராக்கும் முயற்ச்சியை சோனியா கைவிட்டார். காங்கிரசுக் குஞ்சுகளைத் தூக்க மேலிருந்து அமித் ஷா என்ற கழுகு பார்த்துக் கொண்டிருப்பது சோனியாவிற்கு தெரியும். 

மல்லிகை சூடிய சோனியா

தன் குடும்பத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவரான எண்பது வயதான மல்லிகார்ஜூன் கார்கேயை கங்கிரசின் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா நிறுத்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் காங்கிரசு தலைமை பதவி வேட்பளராக போட்டியிடுகின்றார். மல்லிகார்ஜுன கார்கேயை சோனியா நிறுத்தினாலும் G-23 குழுவினர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர். அதன் முன்னணி உறுப்பினர்களாகிய மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிரிதிவிராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் அவரது வேட்பாளர் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளனர். கர்நாடாகா மாநிலத்தில் பிரபல அரசியல்வாதியான மல்லிகார்ஜூண் கார்கே 1972இல் இருந்து தொடர்ந்து பத்து தடவை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். 2019இல் அவர் தோல்வியடைந்த பின்னர் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

3G இற்கு எதிராக G-23

2022இல் காங்கிரசுக் கட்சிக்கு சோனியாவின் குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் திவிரமாகப் பரப்புரை செய்த தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியடைந்தது. 2019 நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் இழந்தது. காங்கிரசுக் கட்சியின் 3Gs எனப்படும் சோனியா ஜீ, ராகுல் ஜீ, பிரியங்கா ஜீ ஆகியவர்கள் மீது விசனமடைந்த பல முன்னணி உறுப்பினர்கள் 23 பேர் ஒன்று கூடி காங்கிரசுக் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதினர். அந்த தலைவர்கள் G-23 என அழைக்கப்படுகின்றனர். அந்த குழுவின் முன்னணி உறுப்பினர்களாகிய குலாம் நபி அசாத் கபில் சிபல் ஆகிய இருவரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தே விலகிவிட்டனர்.

தனித்து விடப்பட்டரா சசி தரூர்?

காங்கிரசுக் கட்சியின் அதிருப்தியாளர் குழுவான G-23இல் ஒருவரான சசி தரூரிற்கு ஆதரவாக அந்தக் குழுவினரே இல்லை. G-23 குழுவின் முக்கிய கோரிக்கை காங்கிரசுக் கட்சியின் எல்லாப் பதவிகளிற்கும் உரியவர்கள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைமை (சோனியா குடும்பம்) சுட்டு விரல் காட்டுபவர்களை தேர்ந்தெடுக்க கூடாது என்பதே. திருவானந்தபுரம் தொகுதி நாடாளுமன்ன மக்களவை உறுப்பினராக சசி தரூர் காங்கிரசுக் கட்சியின் துடிப்பு மிக்க செயற்பாட்டாளர். தனக்கு G-23 குழுவின் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றார் தரூர். அவர் தனது தேர்தல் நடவடிக்கையை அம்பேத்கார் பௌத்த மதத்தை தழுவிய இடமாகிய நாக்பூரில் உள்ள தீக்‌ஷபூமி நினைவிடத்தில் ஆரம்பித்துள்ளார். அவர் காங்கிரசுக் கட்சியின் மூன்று ஜீக்களையும் சந்தித்து தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்ததுடன் அம்மூவரையும் சந்தித்த பின்னர் கட்சி அதிகார பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்பதை கட்சி (அதாவது மூன்று ஜீ) தன்னிடம் சொன்னதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். போட்டியில் இருந்து விலகுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது தன்னைப் போட்டியிட வைத்தது கட்சியின் பொதுச் செயற்பாட்டாளர்கள் என்றும் தன் ஆதரவாளர்களுக்கு தான் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார் சசி தரூர். வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதற்கான கடைசி நாள் ஒக்டோபர் 8-ம் திகதியாகும். கட்சியில் அதிகாராம் கீழ் மட்டத்திற்கு பரவலாக்கப் படவேண்டும் என்பது சசியின் கொள்கை. அதிகாரப் பரவலாக்கம் என்பது (காந்தியின் பெயரை தம்முடன் ஒட்டி வைத்திருக்கும்) நேரு குடும்பத்திற்கு பிடிக்காத கெட்ட வாசகமாகும். பிரித்தானியாவில் பழமைவாதக் (Conservative) கட்சி தலைமைத் தேர்தலில் நடப்பது போல் தானும் மல்லிகார்ஜூண் கார்கேயும் பொது விவாதத்தில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சசி தரூர் சிறப்பாகச் செய்யக் கூடியவர். உலக அரங்குகளிலேயே உரையாற்றி பலரையும் வியக்க வைத்தவர் அவர். கட்சி மக்களாட்சிப் படி நடக்கின்றது மூன்று ஜீக்களின் கட்டளைப்படி இயங்கவில்லை எனக் காட்ட சோனியாவுடன் சேர்ந்து சசி தரூர் நாடகமாடுகின்றாரா என்ற கேள்வியும் உண்டு.

G-23 சுருங்கி G-4 ஆகியதா? 

G-23 குழுவில் பங்கு பெற்ற மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிரிதிவிராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் ஆனந்த் சர்மா வீட்டில் ஒரு கூட்டத்தை நடத்தினர். திக்விஜய சிங் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் போட்டியிடாமல் தமது G-23 உள்ள சசி தரூரை ஆதரிக்காமல் மல்லிகார்ஜூணை ஆதரிக்கின்றார்கள். மல்லிகார்ஜூண் காங்கிரசுக் கட்சியில் தற்போது G-23 என்ற குழு இல்லை எல்லோரும் ஒன்று பட்டு விட்டோம் என்கின்றார்.

அடுத்த போட்டி?

காங்கிரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மல்லிகார்ஜூண் கார்கே மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். இப்போது காங்கிரசுக்கு இன்னும் ஒரு தலைவலி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை அது தேர்ந்தெடுக்க வேண்டும். மல்லிகார்ஜூண் சோனியாவிற்கு தன் கீழ்ப்படிவைக் காட்ட சோனியாவே யார் எதிர்க்கட்சித்தலைவர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வதே சிறந்த மக்களாட்சிப் பண்பாகும். இந்தியாவில் அதெல்லாம் கிடையாது.

சோனியாவின் தந்திரம்

கட்சித் தலைவருக்கு பிரித்தானிய பழமைவாதக் (Conservative) கட்சியப் போல் போட்டி அடிப்படையில் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும் என்பது காங்கிரசுக் கட்சியில் உள்ள சிலரின் வேண்டுகோளாக இருந்தது. அந்த அடிப்படையிலேயே G-23 என்ற குழு செயற்பட்டது. இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க காங்கிரசுக் கட்சியை தமது குடும்பக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது சோனியாவின் முதன்மை நோக்கம், அதற்காக தன் மகன் ராகுலை கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரையிலான நடைப்பயணத்திற்கு அனுப்பி விட்டு காங்கிரசுக் கட்சியில் தனக்கு கீழ்ப்படிவுள்ள ஒருவரை தலைவராக்க அதுவும் போட்டி அடிப்படையில் தெரிவு செய்து தலைவராக்க முயல்கின்றார். சசி தரூர் மல்லிகார்ஜூண் கார்கே போட்டி அவரது நாடகமே. அவர் மல்லிகார்ஜூணையே அவர் வெற்றி பெற வைப்பார். எண்பது வயதான அவரால் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே நின்று பிடிக்க முடியும். அந்த சில ஆண்டுகளுக்குள் ராகுலை கட்சித் தலைமைக்கு தயார் படுத்தலாம் என சோனியா அம்மையார் கனவு காண்கின்றார். ஆனால் ராகுலும் அரசியல் முதிர்ச்சி வரவே வராது. ஈழ வினை வந்து வாட்டும்.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...