Followers

Wednesday, 20 December 2023

அமெரிக்கப் பொறியில் இந்தியா அகப்பட்டதா?

 

 















2024 ஜனவரி 26-ம் திகதி நடக்கவுள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில் ஜோ பைடன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அத்துடன் மறுநாள் 27-ம் திகதி இந்தியாவில் நடக்கவுள்ள கோட் (QUAD) என்னும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடும் இந்தியாவில் நடக்கவிருந்தது. ஜோ பைடன் ஜனவரி 2024இல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள மாட்டார் என இப்போது எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியக் குடியரசு நாள் விழாவிற்கான புதிய முதன்மை விருந்தினரை சில வாரங்களுக்குள் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு உள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குடியரசு நாள் விழாவில் தன்னை ஓர் உலகம் மதிக்கும் உன்னதமானவராக காட்ட முடியாமல் போய்விடுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க உறவில் பிணக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. 

அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையில் இந்தியா!

சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்னும் அமெரிக்க குடிமகளை கொல்வதற்கு அமெரிக்காவில் செய்த முயற்ச்சியானது கனடா, வான்கூவரில் ஹர்திப் சிங் நிஜாரைக் கொன்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகும் என அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குற்றப் பத்திரிகையில் நிக்கில் குப்தா என்னும் இந்தியக் குடிமகனும் பெயர் குறிப்பிடாத ஓர் இந்திய அரச ஊழியரும் குர்பத்வந்த் சிங் பன்னுன்னைக் கொல்வதற்கு ஓர் அடியாளை அமர்த்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒளிக்க இடமில்லாமல் தலையாரி வீட்டில் ஒளித்த கதை

பாவம் குப்தா! பன்னுன்னைக் கொல்வதற்கு அவருக்கு ஓர் அடியாள் தேவைப்பட்டது. அந்த அடியாளைத் தேடிப்பிடிக்க ஒரு தரகரும் தேவைப்பட்டது. அவருக்கு அகப்பட்டது தரகர் அல்ல தரகர் போல் நடித்த அமெரிக்க உளவாளி. அந்தத் தரகர் ஏற்பாடு செய்த அடியாளும் அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர். அதனால் நிக்கில் குப்தா மாட்டிக் கொண்டார். கொலைக்கான கூலி ஒரு இலட்சம் டொலர், முற்பணம் பத்தாயிரம் டொலர். 2024 ஜூன் 9-ம் திகதி வழங்கப்பட்டது. ஆனால் குப்தா எப்படியோ செக் குடியரசுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அவரை நாடுகடத்தும் வேண்டுகோள் செக் குடியரசுக்கு விடுக்கப்பட்டதால் அவர் செக் குடியரசில் Prague விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது (ஜூன் 30-ம் திகதி) கைது செய்யப்பட்டார். அவரை ஒரு SUV வண்டியில் வைத்து மூன்று மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர். அவர் மீதான ஆட் கொணர்வு மனுவை அவரது குடும்பத்தினர் இந்திய நீதி மன்றத்தில் கொடுத்தனர். அது தங்களது நியாய ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற இந்திய நீதிமன்றம் மனுவை ஜனவர் 4-ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனது. நிக்கில் குப்தா இதை எழுதும் போது செக் குடியரசுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

கனாடாவில் கொலை மற்றும் அமெரிக்காவில் கொலை முயற்ச்சி ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் தனது தொடர்பை இந்தியா மறுத்துள்ளதுடன் அவை தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாகச் சொல்கின்றது. இந்தியாவிற்கு தொடர்பில்லை என்று விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே? இந்தியா தான் செய்யாத செயலுக்கு ஏன் விசாரணைக்கு ஒத்துக் கொள்கின்றது? அதற்கான விடை ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் தெரியும்.

அரசுறவு கொலை முயற்ச்சியை மறைக்குமா?

சீனாவிற்கு எதிரான கூட்டணி அமைப்பதில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் இருப்பதால் அமெரிக்கா தம்மை மதித்து நடக்க வேண்டும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அதனால் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைக்க மாட்டாது என இந்தியா நினைத்திருந்தது போலிருக்கின்றது. அமெரிக்கா தனது நீதித் துறை தனது கடமையைச் சரியாகச் செய்யும் என விட்டுவிட்டது. அமெரிக்காவில் சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுமை கொல்ல நடந்த முயற்ச்சி தொடர்பாக இந்தியா விசாரிப்பதாகச் சொன்னது காலத்தை இழுத்தடித்து அதைப் புதைக்கவா என அமெரிக்க மனித உரிமைச் செயற்ப்பாட்டாளர்கள் ஐயப்படுகின்றனர்.

கனடாமீது சீறிய ஜெய்ஷங்கர் அமெரிக்காவிற்கு அடக்கம்

கனடா ஹர்திப் சிங் நிஜார் கொலை தொடர்பான குற்றச் சாட்டை முன்வைத்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் பதில் கடுமையானதாக இருந்தது. அக்குற்றச் சாட்டு அபத்தமானது உள்நோக்கம் கொண்டது என்றார் ஜெய்ஷங்கர். கனடா தீவிரவாதிகளின் புகலிடம் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் குற்றச் சாட்டில் அவர் கடுமையான பதில் கொடுக்கவில்லை. கனடாவிற்கு எதிரான ஜெய்ஷங்கரின் கருத்து அமெரிக்காவை விசனமடைய வைத்திருக்கலாம்.

கனடாவோ அமெரிக்காவோ யோக்கியமான நாடுகளல்ல

1985இல் ரொறென்ரோவில் இருந்து இந்தியா சென்ற Air India விமானம் அயர்லாந்துக் கரையில் குண்டு வெடிப்பில் சிதறி அதில் பயணித்த 329 பேரும் கொல்லப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பாக கனடா நடந்து கொண்ட விதம் ஐயத்திற்கு இடமானது. அமெரிக்கா நீதிக்குப் புறம்பான வகையில் தான் பயங்கரவாதிகள் எனக் கருதும் பல்லாயிரக் கணக்கானவர்களை ஆளில்லா விமானங்களில் இருந்து குண்டுகளை வீசிக் கொன்றுள்ளது.

சதிக்கோட்பாடு

உக்ரேன் போரின் பின்னர் அமெரிக்கா இரசியாமீது விடுத்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. சினாவிற்கு எதிரான கூட்டணியில் இணைய இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பின்னணியில் அமெரிக்கா வெளிநாடுகளில் வாழும் சீக்கிய விடுதலைப் போராளிகள் பற்றிய இந்திய உளவுத்துறையின் நகர்வுகணை வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றதா? அதில் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் நோக்கில் நிக்கில் குப்தா எடுத்த முயற்ச்சிகளில் தனது உளவுத்துறையை புகுத்தி அவர்களையே அடியாளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பன்னுன் என்னும் பயங்கரவாதி



இந்தியா மீது பொருளாதாரத் தடை வருமா?

ஆ ஊ என்றால் பொருளாதாரத் தடைகளை மற்ற நாடுகளில் விதிக்கும் அமெரிக்கா தன்னாட்டில் வைத்து தனது குடிமகனை அந்நிய நாடு ஒன்று கொல்ல எடுத்த முயற்ச்சிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகின்றது? அமெரிக்கா உலகில் தனது ஆதிக்கத்தை பேணுவதற்கு “மனித உரிமை மீறல்”, “பன்னாட்டு நியம மீறல்” ஆகியவற்றை படைக்கலன்களாகப் பயன்படுத்துகின்றது.



No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...