Followers

Showing posts with label இரசியா. Show all posts
Showing posts with label இரசியா. Show all posts

Wednesday, 14 August 2024

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்


இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் மாதம் 6-ம் நாள் உக்ரேனியப் படையினர் ஒரு மிகத்துணிச்சலான படை நகர்வு ஒன்றை இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்தனர். 2022-ம் ஆண்டு பெப்ரவரி தொடங்கப்பட்ட இரசிய உக்ரேனின் போரில் 2022இன் இலையுதிர் காலத்தின் பின்னர் இரண்டு தரப்பினரும் சமரணிகள் (battalions) மூலமாகவே படை நகர்வுகளை செய்து வருகின்றனர். ஒரு சமரணியில் சிற நூற்றுக் கணக்கான படையினர் மட்டும் இருப்பார்கள். ஆனால் உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஐந்திற்கும் மேற்பட்ட படைத்தொகுதிகளை (Brigades) கொண்டு இந்த அதிரடித் தாக்குதலைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு படைத்தொகுதியில் ஆயிரம் படையினர் இருப்பார்கள்.

இரசியக் கண்ணில் மண் தூவல் 

உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் அனுப்பிய படையில் ஐந்து தரைப்படைத் தொகுதிகளும் ஒரு வான் தாக்குதல் தொகுதியும் கவச வண்டிகள் மற்றும் தாங்கிகள் அறுநூறும் பயன்படுத்தப்பட்டன. ஆளிலிவிமானங்கள் கண்காணிப்புப் பிரிவுகள் என்பவற்றையும் சேர்த்தால் மொத்தம் பத்தாயிரம் உக்ரேனியப் படையினர் கேர்ஸ்க் பிராந்தியத்தில் களமிறங்கினர். புதிய போர் முறைமைகளில் இரகசியமாக எந்த ஒரு படைநகர்வையும் செய்ய முடியாது என்பது போரியலாளர்களின் கருத்தாகும். கண்காணிப்பு விமானங்கள், வேவுவிமானங்கள், உளவு விமானங்கள், ஆளிலிவிமானங்கள், ஆகியவை மட்டுமல்ல செய்மதிகள் போன்றவையும் தொடர்ச்சியாக போர்முனிகளை அவதானித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் உக்ரேன் பத்தாயிரம் படையினர் தாங்கிகள் மற்றும் கவச வண்டிகளுடன் இரசியாவை அதிரவைக்கக் கூடியவகையில் நகர்த்தியமை உலகப் படைத்துறை ஆய்வாளர்களை வியக்க வைத்ததுடன் இரசியாவின் படைதுறையினர அதிர வைத்தது. 1.32 மில்லியன் படையினரைக் கொண்ட இரசியா 510,000 பேரை உக்ரேன் போரில் ஈடுபடுத்தியுள்ளது. 900,000 நிரந்தரப் படையினரைக் கொண்ட உக்ரேன் 500,000 படையினரை போர்முனைக்கு அனுப்பியுள்ளது. இரு நாடுக்ளுக்கும் இடையிலான 2295 கிமீ எல்லையில் எல்லையில் வலுக்குறைந்த புள்ளியைத் தெரிவு செய்வது இலகுவானது. ஆனால் எதிரியின் கண்காணிப்பைத் தவிர்த்து முன்னேறுவது மிகக் கடினமானது.



உக்ரேன் அனுப்பிய படைத்தொகுதிகள்

உக்ரேன் தனது ஊடறுப்பு போரை தொடங்கிய மூன்றாம் நாள் உக்ரேனின் 116வது இயந்திரமயமாக்கிய படைத்தொகுதி (Mechanized Brigade) வெளியிட்ட காணொலிப் பதிவில் உக்ரேனின் தங்கிகளும் கவச வண்டிகளும் தம் சொந்த நிலப்பரப்பில் பயணிப்பது போல் எதிர்ப்பின்றிப் பயணிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் உக்ரேனின் 99வது இயந்திரமயமாக்கிய சமரணி (Mechanized Battalion) மிகவும் துரிதமாக தாம் நகர்வதாக ஒரு காணொலியை வெளியிட்டனர். உக்ரேனின் படைத்துறையிலேயே அதன் 99வது இயந்திரமயமாக்கிய சமரணிதான் மிகத் துரிதமாக நகரக்கூடியது. உக்ரேன் இரசியாவின் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்த படைநகர்வை மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தது. ஊடுருவிய உக்ரேனியர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற இரசியாவின் Su-34 என்னும் நவீன போர் விமானம் ஒன்றை உக்ரேனியர்கள் சுட்டு வீழ்த்தினர். அவர்கள் தம்முடன் ஒரு சிறந்த விமான எதிர்ப்பு படைக்கலன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஊடுருவிய உக்ரேனியர்கள் காப்பரண்களை அமைத்து தங்கள் நிலையை வலுப்படுத்துவதுடன் தமது நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் வர முடியாதவாறு கண்ணிவெடிகளையும் விதைத்துள்ளனர். உக்ரேனியர்கள் பல இரசியர்களைப் போர்க்கைதிகளாக கைப்பற்றியுள்ளனர்.  28 கிராமங்களை உக்ரேனியர்கள் கைப்பற்றியதாக இரசியா சொல்கின்றது. 70 கிராமங்கள் என்கின்றனர் உக்ரேனியர்கள். 



உக்ரேனின் நோக்கங்கள் எவை?

ஆளணித் தட்டுப்பாடும் படைக்கலத் தட்டுப்பாடும் உக்ரேனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில் உக்ரேன் ஆறாயிரம் அல்லது பத்தாயிரம் படையினரைக் களத்தில் இறக்கியமை அதனால் துணிச்சனால முடிவுகளை எடுக்க முடியும் என்பதைக் கட்டுகின்றது. உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் சமச்சீரற்ற போரில் (Asymmetric Warfare) அது அவசியமான ஒன்றாகும். உக்ரேன் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஊடறுப்புச் செய்தமையின்:

முதன்மை நோக்கம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு மூக்கறுப்பது போல ஓர் அவமானத்தைக் கொடுப்பதாகும்.

இரண்டாவது நோக்கம் உக்ரேன் படையினரின் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் ஜேர்மன் முதலான நாடுகளின் கருத்தை மாற்றுவதாகும். மூன்றாவது நோக்கம் இரசியப் படையினரை விரக்தியடையச் செய்வது. நான்காவது நோக்கம் உக்ரேனுக்கு கருங்கடலில் நுழைவு மறுப்பு முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் கவனத்தை சிதறடித்தல்.

ஐந்தாவது நோக்கம் கேர்ஸ்க் பகுதியில்இரசியாவின் ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோக நிலையத்தை அழித்து இரசியாவிற்கு பொருளாதார இழப்பீட்டை ஏற்படுத்தல்.

ஆறாவது நோக்கம் இரசியாவின் ஒரு பகுதி நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பது எதிர்காலத்தில் இரசியாவுடனான பேச்சு வார்த்தையில் ஒரு பேரம் பேசும் வலுவை உருவாக்குதல்.



ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோகம்

 உக்ரேன் கைப்பற்றிய நிலப்பரப்பில் இரசியாவின் பெரிய எரிவாயு விநியோக நிலையத்தைக் கொண்ட Sudzha நகரும் அடங்கும். உக்ரேனியர்களால் அங்கிருந்து எரிவாயும் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முடியும். Gas Connect Austria என்ற நிறுவனம் தங்களுக்கு குழாய்கள் மூலமாக கிடைக்கும் எரிவாயுவில் தடங்கல் இல்லை என்றது. இரசியாவின் எரிவாயு உற்பத்தி நிறுவனமான Gazprom தாங்கள் இப்போதும் எரிவாயுவை விநியோகிக்கின்றோம் என்கின்றது. 

கனடா இரசியாவில் படைக்கலன் பாவிக்க அனுமதி

உக்ரேனுக்கு பன்னிரண்டு Leopard-2A4 போர்த்தாங்கிகளையும் பா கவச வண்டிகளையும் நூற்றுக் கணக்கான ரோந்து வண்டிகளையும் கனடா வழங்கியுள்ளது. Kirsk மாகாணத்தை உக்ரேன் ஊடுருவிய பின்னர் (2024-08-15) கனடா தனது படைக்கலன்களை உக்ரேனியப் படையினர் இரசிய நிலப்பரப்புகளிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. Kirsk ஊடுருவலுக்கு முன்னர் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தமது படைக்கலன்களை இரசியாவின் நிலப்பரப்பிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தன. 

இரசியாவின் எதிர்வினை

இரசியாவினுள் ஊடுருவிய உக்ரேனிய படையினர் நான்கு நாட்கள் கழித்து தங்ளுடைய இருப்பை வலுப்படுத்துவதிலும் காப்பரண்களை அமைப்பதிலும் அதிகம் ஈடுபட்டனர். மேலதிக படையினரையும் படைக்கலன்களையும் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு உக்ரேன் அனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன.  அவர்களின் நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் செல்ல முடியாதவாறு பதில் தாக்குதல்களைச் செய்தனர். தனியாக ஒரு வான் எதிர்ப்பு படையணியும் இணைந்து சென்றுள்ளது. இரசியாவால் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களைப் பாவித்து சில மணித்தியாலங்களுக்கும் அவர்களை சாம்பலாக்க முடியும். ஆனால் அதன் பின்னர் உக்ரேனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் உக்ரேனுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ வழங்கினால் போர் ஆளணி இழப்பு மிக்க ஒரு போராக மாறும். இரசியா தனது சிறப்பு படையணிகளை ஆளணி இழப்பைக் கருத்தில் கொள்ளாது கேர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பி உக்ரேனியர்களை விரட்டும் முயற்ச்சியில் ஈடுபடும். ஒரு வாரத்திற்கும் மேலாக இரசியா உக்ரேனியர்களை விரட்ட முடியாமல் இருக்கின்றனர். உக்ரேனின் ஊடுருவலின் வேகம் கொடுத்த ஆச்சரியத்திலும் பார்க்க இரசியாவின் பதிலடி மெதுவாக இருப்பது அதிக ஆச்சரியத்தைத் தருகின்றது.  

அணுக்குண்டு பாவிக்கப்படுமா?

உக்ரேன் கைப்பற்றிய பகுதியைச் சுற்றிவர உள்ள பகுதியில் உள்ள மக்களை இரசிய அரசு வெளியேறச் சொல்லியுள்ளது. உக்ரேன் கைப்பற்றிய பிரதேசத்திலும் பார்க்க மூன்று மடங்கு பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் இருந்து இரசியர்கள் இரசிய அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரசியா அணுக்குண்டு பாவிப்பதற்கு ஏதுவாக மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கலாம். 

உக்ரேனின் தாக்குதல் பற்றிய கருத்துகள்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இரசியாவை உக்ரேனியர்கள் ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

விளடிமீர் புட்டீன்: உக்ரேன் படையினர் இரசியாவில் நிலைகொண்டிருக்கும் வரை பேச்சு வார்த்தை இல்லை. 

நேட்டோ படைத்துறை அதிகாரி Christopher G Cavoli: உக்ரேனியர் ஒரு வலுவற்ற புள்ளியைக் கண்டறிந்து அதை துரிதமாக தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். உக்ரேனியர்களுடைய தாக்குதல் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றது. 

டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு மொத்தமாக 45 அமெரிக்கத் தயாரிப்பு F-16களை வழங்கவுள்ளன. நெதர்லாந்து 2024 ஜூலை இறுதியில் ஆறு F-16களை வழங்கியுள்ளது. அவை முப்பது ஆண்டுகள் பழைய விமான்ங்கள் என்றாலும் பல புதிய இலத்திரனியல் போர் முறைமைகள், ரடார்கள் போன்றவை பொருத்தப்பட்டிருப்பதுடன் பல புதிய தொலைதூர ஏவுகணைகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. உக்ரேன் போர் இனி தீவிரமானதாக மாறுவதுடன் இரசிய நிலப்பரப்பில் செய்யப் படும் தாக்குதல்களின் எண்ணிக்கையும் காத்திரமும் அதிகரிக்கும்.  


Monday, 22 May 2023

உக்ரேன் போரை F-16 போர்விமானங்கள் மாற்றுமா?

 

உக்ரேனுக்கு அமெரிக்காவின் நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 வழங்கப்படுவதை அமெரிக்கா தடுக்க மாட்டாது என அதன் உச்ச அதிகார நிலையமான வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. உக்ரேனுக்கு வல்லூறு என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட F-16 போர் விமானங்களை வழங்கும் நாடுகள் பெரும் இடர்களை எதிர் நோக்கும் என இரசியாவின் துணைப் பாதுகாப்பு சமைச்சர் அலெக்சாண்டர் குருக்ஷோ எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேன் போர் முனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்பட்ட அமெரிக்காவின் HIMARS செலுத்திகளில் இருந்து வீசப்படும் ஏவுகணைகளின் செயற்படு திறன் இரசியாவின் இலத்திரனியல் குழப்பிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரேன் தனக்கு நான்காம் தலைமுறைப் போர் விமானம் தேவை என்பதை நேட்டோ நாடுகளிடம் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தது. உக்ரேன் போர் 2022 பெப்ரவரி தொடங்கிய போது அது 145 போர் விமானங்களை வைத்திருந்தது. இதுவரை போரில் 45 விமானங்களை இழந்துவிட்டது. போலந்து, எஸ்தோனியா ஆகிய நாடுகள் தம்மிடமிருந்த MIG-29 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்கியிருந்தன. அமெரிக்காவிடமிருந்து F-16 போர் விமானங்களை வாங்கிய நாடுகள் அவற்றை இன்னொரு நாட்டுக்கு விற்பனை செய்வதாயின் அதை அமெரிக்காவின் முன் அனுமதியுடனேயே செய்ய முடியும்.

விமானங்களின் தலைமுறைகள்

போர்விமானங்கள் அவற்றின் தொழில்நுட்பத் தரங்களுக்கு ஏற்ப தலைமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறப்பவை முதலாம்தலைமுறை என்றும், ஒலியின் வேகத்தில் பறப்பவை இரண்டாம் தலைமுறை என்றும், ஒலியின் வேகத்திலும் இரண்டு மடங்கு அல்லது அதற்கு அதிக வேகத்தில் பறப்பவை நான்காம் தலைமுறை என்றும் சிலர் வகுத்துள்ளனர். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ரடாருக்கு புலப்படாதவையாகும். அமெரிக்கா தனது ஆறாம்தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவின் F-22 Raptor, F-35 Lightening ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். சீனா தனதுJ-20ஐயும் இரசியாதனது SU-35ஐயும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் என்கின்றன. திரண்ட மேற்கு (Collective West) நாடுகளின் போரியல் ஆய்வாளர்கள் அவற்றின் புலப்படாத்தன்மை போதியன அல்ல என்பதால் அவற்றை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானம் என்கின்றனர். F-16 போர்விமானம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. அவற்றின் புதிய வகைகள்

சாதனை படைத்த F-16

1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒன்றை இருக்கை ஒற்றைப் பொறி (இயந்திரம்) கொண்ட F-16 போர்விமானம் களம்பல கண்ட போர்விமானமாகும். இதுவரை 4500இற்கு மேற்பட்ட F-16 போர்விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு பட்ட மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அவை பற்பணிப் போர்விமாங்களாகும். பற்பணிப் போர்விமானமான F-16 வான் பாதுகாப்பு, வானில் இருந்து வானிற்கு தாக்குதல், வானில் இருந்து தரை/கடல் தாக்குதல், இலத்திரனியல் போர்முறைமை, எதிரியின் வான்பாதுகாப்பை அழித்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடியன. ஒலியிலும் பார்க்க இரு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய F-16 20மிமீ பீராங்கி குண்டுகளை எதிரியின் விமானத்தின் மீது பாய்ச்சக் கூடியது. உலக வரலாற்றில் 13மில்லியன் பறப்புக்களைச் செய்த விமானம் என்ற சாதனையை F-16 தனதாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன் உலகில் பல போர்களில் பரந்த அளவில் பாவிக்கப்பட்ட விமானமும் F-16தான். இதன் பற்பணிச் சிறப்பு அம்சங்களால் F-16ஐ வானில் பறக்கும் Swiss Army Knife என்பார்கள்.

அதிக F-16 வைத்திருக்கும் நாடுகள்.

உக்ரேனுக்கு F-16 போர் விமானங்களை இலவசமாக விநியோகிக்க கூடிய நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. எகிப்த்திடம் இருநூற்றி இருபது F-16கள் உள்ளன, துருக்கியிடம் இருநூற்றி எழுபது F-16கள் உள்ளன, இஸ்ரேலிடம் 362 F-16கள் உள்ளன. பாக்கிஸ்த்தானிடம் எண்பதிற்கும் அதிகமான F-16கள் உள்ளன. இவை எதுவும் உக்ரேனுக்கு F-16களை வழங்க மாட்டாது. அமெரிக்காவிற்கு வெளியே எனப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு F-16 போர் விமானங்கள் உள்ளன. F-16 A/Bஇல் இருவகை F-16 C/Dஇல் இருவகை F-16 E/F என ஏழிற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் உக்ரேனுக்கு போலந்திடமுள்ள F-16 C/Dவகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளன. போலந்திடம் 48 F-16 உள்ளன. போலந்தைப் போலவே எஸ்தோனியாவும் உக்ரேனுக்கு படைக்கலன்கள் வழங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றது. எஸ்தோனியா தேவை ஏற்படின் அமெரிக்காவிடமிருந்து F-16களை வாங்கி உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னிடமுள்ள F-16 விமானங்களை அகற்றிவிட்டு F-35 விமானங்களை பாவிக்க திட்டமிட்டுள்ள பெல்ஜியம் தன்னிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெல்ஜியத்திடம் எட்டுF-16 B, நாற்பத்தி எட்டு F-16 A ஆகியவை இருக்கின்றன. டென்மார்கிடம் முப்பது F-16, நோர்வேயிடம் அறுபத்தி நான்கு F-16கள் உள்ளன. இவற்றில் எத்தனை உக்ரேன் போரில் பாவிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளன எத்தனை அனுப்பப்படும் என்பவை பற்றி உறுதியாகச் செல்ல இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம்.

அமெரிக்கா உக்ரேனுக்கு F-16 வழங்க மாட்டாது?

ஜேர்மன் அதிபர் Olaf Scholz உக்ரேனுக்கு F-16 வழங்கும் திட்டம் தம்மிடமில்லை என்றார். G-7 மாநாட்டின் போது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேன் விமானிகளுக்கு F-16 செலுத்தும் பயிற்ச்சியை மட்டுமே குறிப்பிட்டார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் தம்மிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கலாம் என்ற பைடன் அமெரிக்கா உக்ரேனுக்கு F-16களை வழங்குவது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. F-16 போர் விமானங்களால் உக்ரேன் போரில் பாரிய மாற்றம் ஏற்படாது என பைடன் கருதுகிறார். இரசியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு முறைமை F-16களை இலகுவில் அடையாளம் காணக் கூடியவை. எஸ்-400ஐ அழிக்கக் கூடிய தொலைதூர ஏவுகணைகள் அல்லது ஆழ ஊடுருவும் அணிகள் உக்ரேன் போரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். F-16 Block 70 மிகவும் மேம்படுத்தப்பட்டவையாகும். அவை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். அவை இப்போது உக்ரேனுக்கு கிடைக்காது. உக்ரேனுக்கு F-16 போர் விமானங்கள் வழங்குதல் போரை மேலும் தீவிரமாக்கும் என சில நேட்டோ கூட்டமைப்பின் உறுப்புரிமை கொண்ட நாடுகள் கரிசனைச் கொண்டுள்ளன.


கிறிமியாவிற்கு ஆபத்து

F-16 போர்விமானங்கள் மிகத்தொலைவில் உள்ள இலக்குகளை அறிந்து கொள்ளக் கூடிய உணரிகளைக் கொண்டுள்ளன. இரசியாவின் SU-35 என்னும்புதிய விமானம் இரசியாவின் பழைய விமானமான MIG-29இலும் பார்க்க ஐந்து மடங்கு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியன. உக்ரேனிடம் 1991இற்கு முன்னர் (சோவியத் கால) உருவாக்கப்பட்ட MIG-29கள் உள்ளன. இரசியக் கடற்படையின் இதய நிலமாக கருதப்படும் கிறிமியாவின் எப்பகுதியிலும் உக்ரேனியர்களால் தாக்கக் கூடிய வலிமையை F-16 வழங்குகின்றது. இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான எஸ்-400, எஸ்-300 ஆகியவை இல்லாத இடங்களாகப் பார்த்து உக்ரேனியர்கள் தாக்கலாம். அல்லது எஸ்-300, எஸ்-400 ஐ அழிக்க வல்ல ஏவுகணைகளை அமெரிக்கா உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாக்கிப் பார்க்கலாம். சிரியப் போரில் இருந்து இரசியாவின் வான் பாதுகாப்பை உடைக்கும் வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றது. உக்ரேன் போரில் இரசிய இலக்குகளை இலகுவில் வீசி அழிக்கும் திறன் F-16 போர்விமானத்திடம் உண்டு. இரசியா ஆக்கிரமித்துள்ள உக்ரேனின் நிலப்பரப்புக்கள் மீது F-16 துல்லியமாகத் தாக்குதல் செய்யும். போலாந்து வழங்கும் என எதிர் பார்க்கப்படும் F-16இல் எல்லா புதிய ஏவுகணைகளை எடுத்துச் செல்லலாம். எந்த வகையான F-16, எத்தனை F-16 உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றது என்பதும் அவற்றுடன் எந்த வகையான ஏவுகணைகள் உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றன என்பதும் தான் உக்ரேனின் போரில் F-16 செய்யவிருக்கும் தாக்கத்தை முடிவு செய்யும். அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது F-16மூலம் செய்யும் தாக்குதல்களைப் போல் உக்ரேனால் இரசியாமீது தாக்குதல் செய்ய முடியாத அளவிற்கு இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை உன்னதமானவை.

விமானிகளின் திறன் விமானங்களையும் தாண்டி போர்முனையின் முடிவுகளைச் செய்யக் கூடியவை என்பதை இஸ்ரேலியப் வான்படையினர் பல தடவைகள் உறுதி செய்துள்ளனர். உக்ரேன் விமானிகளின் திறன் முக்கிய பங்கு வகிக்கும். F-16 போர் விமானங்களை ஓட்டும் பயிற்ச்சியை ஒரு தேர்ச்சி பெற்ற விமானிக்கு போதிக்கவே மூன்று மாதத்திற்கு மேல் எடுக்கும். உக்ரேன் தனது Spring Offensiveஇல் F-16 போர் விமானங்களை களத்தில் இறக்கி சண்டை செய்ய முடியாது Spring பருவகாலம் ஜூன் மூன்றாம் வாரத்துடன் முடிந்துவிடும். Summer Offensive?

Thursday, 11 May 2023

Spring Offensive: உக்ரேன் இரசியாவை விரட்டுமா?

 


2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா

2022 பெப்ரவரி தொடங்கிய  போரின் பின்னர் 2022 செப்டம்பரில் உக்ரேனின் நிலப்பரப்பில் 27%ஐக் கைப்பற்றியிருந்த இரசியா அதன் பின் பல இடங்களில் பின்வாங்கி தற்போது 18% நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கின்றது. உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்க்கீவ் மற்றும் தெற்குப் பதியில் உள்ள கேர்சன் ஆகிய இடங்களில் இரசியப் படையினரை உக்ரேன் பின்வாங்கச் செய்துள்ளது. சிறிய பாக்மூட் நகரை கைப்பற்ற இரசியாவின் கூலிப்படையினர் ஆறுமாதமாக முயற்ச்சி செய்தனர். 2023 மே 9-ம் திகதிக்கு முன்னர் அதை முழுமையாக கைப்பற்றி இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் மார்தட்டும் புட்டீனின் திட்டம் நிறைவேறமல் போய்விட்டது. மாறாக இரசியக் கூலிப்படையைன் தளபது தனது படை மக்மூட் நகரை இரசியப் படையினரிடும் கையளித்து விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். 2023 மே 10-ம் திகதி உக்ரேனியர்கள் மக்மூட் நகரின் மூன்று சதுர கிமீ நிலப்பரப்பில் இருந்து இரசியர்களைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.

சிறு தாக்குதல்கள் பெரும் நன்மை

இரசிய – உக்ரேன் போர் முனை அறுநூறு மைல் நீளமானதாக உள்ளது. அந்தளவு நீளமான போர் முனை உக்ரேனுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதில் எங்காவது சிறிய அளவில் உக்ரேனால் இரசியாவிற்கு அவமானம் ஏற்படக்கூடிய வகையில் தாக்குதல் செய்வது உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும். அத்தாக்குதல்களால் இரசிய அதிபர் புட்டீனின் நெருக்கமானவர்களிடையே உக்ரேன் மீதான சிறப்பு படை நடவடிக்கை மிகவும் விரயமானது, பயனற்றது, தொடர்ந்து நடத்த முடியாதது என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கலாம். புட்டீனின் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தினால் அவரின் எதிர்வினை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால் புட்டீனை இரசியர்களிடமிருந்து தனிமைப் படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.



சிறிதான வெற்றி விழா அணிவகுப்பு

2023 மே மாதம் இரசியா தனது 2-ம் உலகப் போர் வெற்றி அணிவகுப்பைச் செய்தது. வழமையாக பத்தாயிரம் முதல் பதினான்காயிரம் படையினருடன் செய்யப்படும் இந்த அணிவகுப்பு இம்முறை ஏழாயிரம் படையினருடன் செய்யப்பட்டது. அதைப் பார்வையிடப் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து ஒளிபரப்பை பார்க்க மக்கள் பணிக்கப்பட்டனர். தலைநகரைத் தவிர மற்ற பல இடங்களில் அணிவகுப்பு இரத்துச் செய்யப்பட்டது. உக்ரேனிய ஆழ ஊடுருவிகளுக்கு அஞ்சி இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம். அணிவகுப்பில் ஒரே ஒரு போர்த்தாங்கி மட்டும் பாவிக்கப்பட்டது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் SU-57 பங்கு பற்றியதாக காட்டப்பட்டவை கணினியால் உருவாக்கப்பட்ட அசைவுப்படங்கள் என சில நேட்டோ நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்தன.

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive)

உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன. உக்ரேன் செய்யவிருக்கும் தாக்குதலிற்கு “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) எனப் பெயரும் இட்டுள்ளனர். குளிர்காலம் முடிந்து இளவேனிற் காலத்தில் தாக்குதல் செய்யலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. குளிர்காலம் 2023 மார்ச் 20-ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஜூன் 21-ம் திகதிவரை இளவேனிற் காலம் தொடரும். சிலர் உக்ரேன் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடங்கி விட்டது என்பதற்கு:

1. மார்ச் – 23-ம் திகதி Zaorizhzhia குண்டுவெடிப்பு

2. மே 2-ம் திகதி கிறிமியாவில் எரிபொருள் களஞ்சியத்தின் மீது தாக்குதல்.

3. மே 3-ம் திகதி தென் கிழக்கு இரசியாவில் Bryansk பிரதேசத்தின் தொடருந்து நிலைகள்மீது எறிகணைத் தாக்குதலும் அங்குள்ள விமானத் தளத்தின் மீது ஆளிலித்தாக்குதலும்.

ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். வேறு சிலர் இவை முன்னேற்பாட்டுத் தாக்குதல்கள் மட்டுமே இரசியப் படைகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல் இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்கின்றனர்.

 

இரசியாவிற்கு அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive) ஐ தடுப்பதற்காக 2023 மே மாதம் 6-ம் திகதி உக்ரேனின் பல்வேறு நகரங்கள் மீது இரசியா பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றில் ஒரு மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணை ஒன்றை உக்ரேன் அமெரிக்காவின் patriotic என்னும் வான்பாதுகாப்பு முறைமை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் அறிவித்து உலகப் படைத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் வலிமை எந்த நாட்டிடமும் இல்லை என பரவலாக நம்பப்பட்டது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி மேல் உள்ளன எனவும் நம்பப்பட்டது. அந்த அதிச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா $1.2 பில்லியன் உதவியை உக்ரேனுக்கு வழங்கவுள்ளது என்ற செய்தி 2023 மே 9-ம் திகதி வெளிவந்தது. இது உக்ரேனின் நீண்ட கால வான் பாதுகாப்புக்கானது எனவும் அமெரிக்கா சொன்னது. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என நம்பிய புட்டீன் இதை எப்படி எதிர் கொள்ளப்போகின்றார்? அமெரிக்கா தனது புதிய படைக்கலன்களை உக்ரேன் போர்க்களத்தின் இரசியாவின் புதிய படைக்கலன்களுக்கு எதிராக பாவித்து தேர்வுக்கு உள்ளாக்குகின்றதா என்பது இரசியாவிற்கு இன்னும் ஒரு அதிர்ச்சி. இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்க patriotic சுட்டு வீழ்த்திய செய்தி மே  6ம் திகதி வெளிவந்தது

உக்ரேனின் “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) ஒரு பெரிய அதிரடித் தாக்குதலாக இருக்காது. இரசியர்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் சிறிய பல தாக்குதல்களாக இருக்கும்.

இப்போது எதிர்த்தாக்குதல் நடக்க மாட்டாது. எமது போர் வீர ர்களை போதிய படைக்கலன்களின்றி களத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றார் உக்ரேனிய அதிபர்.

தங்களிடம் பதில் தாக்குதல் பற்றிய விபரங்களைக் கேட்க வேண்டாம் என்றார் உக்ரேனிய துணைப்பாதுகாப்பு அமைச்சர்.

2023 ஏப்ரல் 28-ம் திகதி உக்ரேனில் பல இடங்களில் இரசியா தாக்குதல்களைச் செய்திருந்தது. உக்ரேனின் படைக்கலக் களஞ்சியங்கள் எங்கு இருக்கின்றன எனத் தெரியாத வகையில் குடிசார் உட்-கட்டுமானங்களுக்கு நடுவில் உக்ரேன் அவற்றை மறைத்து வைத்திருக்கின்றது. அவற்றை அழிப்பதற்கு இரசியா செய்யும் தாக்குதல்கள் பல அப்பாவி மக்களுக்கு உயிரிழப்புக்களையும் சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

உக்ரேனியர் தமது பதிலடியை எப்போது செய்வார்கள் என்பது கால நிலையில் பெரிதும் தங்கியுள்ளது என்றார் உக்ரேனியப் படைத்தளபதி. பனி உருகி சேறாக இருக்கும் போது படைக்கலன்களையும் வண்டிகளையும் நகர்த்துவது சிரமமாக இருக்கும். அதனால் இளவேனிற் காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

உக்ரேனின் தாக்குதல் Zaporizhzhiaவைக் கைப்பற்றி பின்னர் அங்கிருந்து கிறிமியாவிற்கான வழங்கற்பாதைகளைத் துண்டிப்பதாக அமையலாம் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.

Friday, 10 March 2023

இரசியாவின் Hypersonic ஏவுகணைகள் உக்ரேன் போரை மாற்றுமா?

 


2022 ஒக்டோபர் மாதம் 8-ம் திகதி இரசியா கிறிமியாவிற்கு அமைத்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இரசியா உக்ரேன் மக்களையும் குடிசார் உட்-கட்டுமான ங்கள் மீதும் பெருமளவு ஏவுகணைத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது. 2023 மார்ச் 9-ம் திகதி மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் (hypersonic) 81 ஏவுகணைகளை இரசியா உக்ரேனின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து வீசியது. அவற்றில் 34 வழிகாட்டல் (cruise) ஏவுகணைக்ளை இடைமறித்து அழித்துவிட்டதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. இரசியா Kinzhal Hypersonic Missilesகளை இடை மறித்து அழிக்கும் ஆற்றல் உக்ரேனிடம் இல்லை. அவற்றை இரசியா பெருமளவில் பாவித்தால் அது போரின் உக்கிரத்தை அதிகரிக்கும் என்கின்றார் அமெரிக்காவின் முன்னாள் வான்படைத் தளபதி Colonel Jeff Fisher.


இரசியாவிடம் ஏவுகணைக் கையிருப்பு போதியதா?

இரசியாவிற்கான குறைக்கடத்திகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உதிரிப்பாகங்கள் ஏற்றுமதிமீது மேற்கு நாடுகள் தடை விதித்ததை தொடர்ந்து இரசியாவின் தொழில்நுட்பம் மிக்க படைக்கலன்களை உற்பத்தி செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பை நாளை தனக்கும் இது நடக்கலாம் என்ற கரிசனையுடன் இருக்கும் எஸ்த்தோனியா நாட்டின் உளவுத்துறை 2023 ஜனவரியில் இரசியாவிடமுள்ள ஏவுகணைக் கையிருப்பு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில்முடிந்துவிடும் என அறிவித்திருந்தது. இதை ஏற்க மறுத்த சில படைத்துறை ஆய்வாளர்கள் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு இன்னும் ஓராண்டுக்கு நின்று பிடிக்கலாம் என்றனர்.

2023 மார்ச் மாதம் 9-ம் திகதி இரசியா உக்ரேன் மீது:

1) KH-101/KH-55 வழிகாட்டல் ஏவுகணைகள் இருபத்தியெட்டு

2) கடலில் இருந்து Kalibr ஏவுகணைகள் இருபது

3) KH-22 வழிகாட்டல் ஏவுகணைகள் ஆறு

4) KH-31 கப்பல்களை அழிக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இரண்டு

5) KH-22 கப்பல்களை அழிக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் ஆறு

6) KH-59 தரையில் இருந்து தரைக்கு வானுக்கு ஏவும் ஏவுகணைகள் ஆறு

ஆகியவை உள்ளிட்ட எண்பத்தியொரு ஏவுகணைகளை வீசியுள்ளது.

உக்ரேனின் தரையில் உள்ள இலக்குகளுக்கு கடல் இலக்குகளுக்கான ஏவுகணிகள் வீசப்பட்டமை இரசியாவிடம் போதிய ஏவுகணைகள் கையில் இருப்பில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.


இரசியாவிடம் எந்த அளவு படைக்கலன்களும் சுடுகலன்களும் கையிருப்பில் உள்ளது என்பது பற்றியோ அல்லது அவற்றை உற்பத்தி செய்யும் திறனின் அளவு பற்றியோ இரசியாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பனிப்போர்க் காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட படைக்கலன்களையும் சுடுகலன்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.

உக்ரேனியப் பாதுகாப்புத்துறையின் கணிப்பின்படி:

1) KH-55 ஏவுகளைகள் உக்ரேன் போரின் முன்னர் 300 இருந்தன அவற்றில் அரைவாசி பாவிக்கப்பட்டு விட்டன.

2) Kinzhal Ballistic ஏவுகணைகள் 42 இருந்தன. அவற்றில் 16 பாவிக்கப்பட்டு விட்டன. மேலும் 16 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

3) கடலில் இருந்து கடலுக்கு ஏவப்படக்கூடிய Onyx ஏவுகணைகளையும் இரசியா உக்ரேனின் தரையில் உள்ள இலக்குகள் மீது ஏவப்பட்டுள்ளன.

4) KH-22, KH-32 ஆகிய ஏவுகணைகள் உக்ரேனுக்கு எதிராக இரசியா போர் ஆரம்பிக்க முன்னர் 370 இருந்தன. அவற்றில் 250 பாவிக்கப் பட்டு விட்டன. KH-35 ஏவுகணைகள் போருக்கு முன்னர் 500 கையிருப்பில் இரசியாவிடம் இருந்தன. போரின் போது மேலும் 360 உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 504 பாவிக்கப்பட்டுவிட்டன.

2022இன் பிற்பகுதியில் உக்ரேனின் பாதுகாப்புத்துறையின் மேற்படி கணிப்புக்கள வெளிவிடப்பட்டன. பின்னர் பல ஏவுகணைளை இரசியா பவித்துள்ளது. மேலும் ஏவுகணைகளை இரசியா உற்பத்தி செய்திருக்கலாம். உக்ரேனின் கணிப்புக்கள் முழுமையாக நம்பக் கூடியவை அல்ல.

உக்ரேனிய உளவுத்துறையின் கணிப்பீட்டின் படி ஒவ்வொரு தாக்குதலிலும் இரசியா 80 ஏவுகணைகளை வீசுகின்றன. அவை பலதரப்பட்ட ஏவுகணைகளின் கலவையாக உள்ளன. இரசியாவால் ஒரு மாதத்திற்கு 50 வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise Missiles) உற்பத்தி செய்ய முடியும். இரசியாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் உற்பத்தி குறைக்கடத்தி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பரில் இரசியா தொடர்ச்சியாகப் பாவிக்கக் கூடிய Kalibrஏவுகணைகள் உள்ளன என அறிவித்தது.

இரசியா ஈரானிடமிருந்தும் ஏவுகணைகளை வாங்குகின்றது.

அமெரிக்காவின் லேசர் படைக்கலன்கள்

ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை இரசியாவும் சீனாவும் உற்பத்தி செய்யத் தொடங்கியதில் இருந்து அவற்றை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க தொழில்நுட்பம் வளர்ச்சி நிலையில் உள்ளது என்று சொல்லப்படுகின்ற வேளையில் சிலர் ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை எதிர்க்கக் கூடிய நிலையில் அமெரிக்கா இருக்கின்றது என்கின்றனர். அமெரிக்காவின் ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை எதிர்க்கும் படைக்கலன்கள் லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் அசையும் இலக்குகளை அழிக்கக் கூடியவை. லேசர் கதிர்கள் ஒளியின் வேகத்தில் பாய்வதால் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இலகுவில் அழிக்கும் என்கின்றனர். அதை அமெரிக்கா உக்ரேன் போர்க்களத்தில் இரகசியமாக தேர்வுக்காக பயன் படுத்துமா?

ஹப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் படைக்கலன்கள் அழிக்குமா என்பது பற்றிய விபரம் அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://veltharma.blogspot.com/2021/12/blog-post_20.html

KINZHAL HYPERSONIC MISSILES

இரசியாவிடமுள்ள ஏவுகணைகளில் பயங்கரமானவை Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளாகும். இவை ஒலியின் வேகத்திலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. உக்ரேன் போரின் ஆரம்பத்தின் போது உக்ரேனின் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கீழ் படைக்கலக் களஞ்சியம் ஒன்றின் மீது Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை இரசியா வீசியிருந்தது. ஆனால் அதிக அளவிலான அதாவது ஆறு Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் மார்ச் 9-ம் திகதி பாவிக்கப்பட்டுள்ளன. உக்ரேன் புதிய வகைப் படைக்கலன்களை பெற்றுக் கொண்டு மார்ச் மாத இறுதியில் இரசியப் படையினர் மீது கடும் தாக்குதல்களைச் செய்யும் திட்டத்துடன் இருக்கின்றது. அதை முன் கூட்டியே முறிக்கும் நோக்கத்துடன் மார்ச் 9-ம் திகதித் தாக்குதல் அமைந்துள்ளது. Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் மிகவும் வேகமாகச் செல்வதாலும் தனது பறப்புப் பாதையை மாற்றிக் கொண்டு செல்லக் கூடியவை என்பதாலும் அவற்றை இடைமறித்து தாக்கி அழிக்க முடியாது. இடைமறிப்பு தாக்குதலை முறியடிக்க பெருமளவு ஏவுகணைகளை வீச வேண்டும் அல்லது ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை வீச வேண்டும். அமெரிக்காவின் Newsweek  சஞ்சிகை அமெரிக்காவின் Patriot ஏவுகணை எதிர்ப்பு முறைமை உக்ரேனுக்கு துரிதமாகப் போய்ச் சேர்ந்தால் Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை முறியடிக்கலாம் என உக்ரேன் படையினர் சொன்னதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் Patriot ஏவுகணை எதிர்ப்பு முறைமை சவுதியாவில் இருந்தும் யேமனில் செயற்படும் போராளிக் குழுக்கள் சவுதி மீது வீசிய சாதாரண ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை.

கலினின்கிராட்டில் Kinzhal வைத்து மிரட்டும் இரசியா

Kinzhal ஏவுகணைகள் 1250 மைல்கள் தூரம்வரை பாயக் கூடியவை. தாங்கிச் செல்லக் Kinzhal ஏவுகணைகள் பலவற்றை இரசியா Mig-31 போர்விமானங்களில் பொருத்தி தனக்கு சொந்தமான கலிலின்கிராட் நிலப்பரப்பில் நிறுத்தி வைத்துள்ளது. போலாந்திற்கும் எஸ்தோனியாவிற்கும் இடையில் உள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இருந்து Mig-31 போர்விமானங்களால் ஐரோப்பாவின் எப்பகுதியையும் அணுக்குண்டுகளால் Kinzhal மூலம் தாக்க முடியும். உக்ரேன் போரில் நேட்டோப்படைகள் நேரடியாகத் தலையிட்டால் ஐரோப்பாமீது அணுக்குண்டுகளை வீசுவேன் என்ற மிரட்டலுடன் விளடிமீர் புட்டீன் உக்ரேன் மீதான தாக்குதலை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார். 

KINZHALஇன் குறைபாடுகள்

Kinzhal ஏவுகணைகள் வீசப்பட முன்னர் அது தாக்க வேண்டிய இலக்கின் ஆயங்கள் (coordinates) பற்றிய தகவல் அதில் பதிவேற்றப்படும். அது பாய்ந்து கொண்டிருக்கையில் ஏற்படும் இடையீடுகளால் அதன் பாய்ச்சல் பாதையில் ஏற்படும் சிறு மாற்றம் அதை அதன் இலக்கில் இருந்து பெருமளவு தூரத்தில் விழச்செய்யும். அதனால் Kinzhal ஏவுகணைகளால் துல்லியமாகத் தாக்க முடியாமல் போய்விடும். செய்மதிகள் மூலம் அவை அவதானிக்கப்படலாம்.  Kinzhal ஏவுகணைகள் உக்ரேனில் பெரும் சொத்தழிவை ஏற்படுத்தலாம் ஆனால் உக்ரேன் படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த முடியாது. விளடிமீர் புட்டீன் உக்ரேன் போரை படையினரும் படைக்கலங்களையும் மோதவிடும் போராக நடத்தாமல் உக்ரேனிய அப்பாவிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கும் போராக நடத்துகின்றார்.

இரசியாவின் ஏவுகணைத் தட்டுப்பாடு இரசிய சீன உறவை நெருக்கமாக்கலாம். இரசியாவை சீனாவின் பக்கத்துணை (Side kick) ஆக்கலாம்.

Thursday, 23 February 2023

ஓராண்டுப் போரின் பின்னரும் தளராத உக்ரேனும் வளராத புட்டீனும்



இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார்செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார்ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்வேதியியல் குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட சிரியாவைப் பாதுகாத்தார்எகிப்தை மீண்டும் தன் பக்கம் இழுத்தார்; குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் கோலகலமாக அரங்கேற்றினார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைய முயன்ற உக்ரேனைத் தடுக்கும் முயற்ச்சியில் அவர் ஆப்பிழுத்த குரங்கு போல் ஆனாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



புவிசார் அரசியல் போட்டி

2004-ம் ஆண்டில் இருந்து நேட்டோ நாடுகளும் இரசியாவும் உக்ரேனில் யார் ஆட்சியில் இருப்பது என்பது தொடர்பாக திரைமறைவு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இரசிய ஆதரவு விக்டர் யனுக்கோவிச்சிற்கு எதிராக உக்ரேனிய மக்களை கிளர்ச்சி செய்யப்பண்ணி அவரை உக்ரேனை விட்டு விரட்டுவதில் நேட்டோ நாடுகளின் சதி இரசியச் சதியை வெற்றி கொண்டது. இரசியா தலைமையிலான யூரே ஏசியன் பொருளாதார ஒன்றியத்தில் உக்ரேனும் ஓர் உறுப்பு நாடாக இருப்பது அவசியம் என்பதாலும் இரசியாவின் கடற்படைக்கு கிறிமியா அவசியம் என்றபடியாலும் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் உக்ரேன் மீது 2014 போர் தொடுத்து கிறிமியாவைக் கைப்பற்றியதுடன் உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கினார். இதன் பின்னரும் உக்ரேன் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் முயற்ச்சி தொடர்ந்த படியால் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரண்டாம் படையெடுப்பை நடத்தினார். உக்ரேன் மீதான புட்டீனின் 2022 படையெடுப்பு 2014 படையெடுப்பைப் போல் இலகுவானதாக அமையவில்லை. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரேனியப் படையினருக்கு 2014இன் பின்னர் தீவிர பயிற்ச்சி வழங்கியிருந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களையும் வழங்கியிருந்தனர்.  



பிழையாகிப் போன திட்டங்கள்

உக்ரேன் மீது சிறப்புப் படை நடவடிக்கை என்னும் பெயரில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் செய்யும் ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும் போது புட்டீன் போட்ட பல திட்டங்கள் பிழைத்துப் போயின என்று மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து கொண்டிருந்தாலும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக இரசியாவால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற புட்டீனின் நம்பிக்கை வீண் போகவில்லை. 2022 பெப்ரவரி ஆரம்பமான உக்ரேன் போரில் ஒரு இலட்சம் படையினரைப் பலிகொடுத்தும் தனது போர்த்தாங்கிகளில் அரைவாசியை இழந்தும் இரசியவால் காத்திரமான வெற்றி எதையும் பெற முடியவில்லை. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரை இழந்தும் மின்சார உற்பத்தியில் 40% சிதைந்தும் பல்லாயிரக் கணக்கான வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு எதிராக உறுதியாகப் போராடிக் கொண்டிருப்பதால் எத்தரப்பு போரில் வெல்லும் எப்போது போர் முடியும் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது.



புட்டீன் எண்ணிய எண்ணமெங்கே?

ஆகக் கூடியது இரு வாரங்களில் அல்லது ஆகக் குறைந்தது மூன்று நாட்களில் முடிக்க புட்டீன் திட்டமிட்ட உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கை ஓராண்டாகியும் அவரது இலக்கு எட்டப்படவில்லை. இரசியாவின்று கடுமையான இழப்பை ஏற்படுத்துவதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. 142,860 இரசியப் படையினரைக் கொன்றதாகவும் மூன்று இலட்சம் இரசியப்படையினரைக் காயப்படுத்தியதாகவும் உக்ரேனியர்கள் சொல்கின்றனர். மேலும் உக்ரேனியர்கள் இரசியாவிற்கு ஏற்படுத்திய இழப்புக்கள்:

போர் விமானங்கள் 298

உலங்கு வானூர்திகள் 287

போர்த்தாங்கிகள் 3310

கவச வண்டிகள் 6545

சேணேவிகள் (Artilleries) 2327

பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் 469

படகுகள் 18

எரிபொருள் தாங்கிகளும் மற்ற ஊர்திகளும் 5196

விமான எதிர்ப்பு குண்டுச் செலுத்திகள் 243

ஆளிலி விமானங்கள் 2016

வழிகாட்டல் ஏவுகணைகள் 873

 


ஒராண்டு இறுதியில் உக்ரேன் சென்ற ஜோ பைடன்

20-02-2023 அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேனுக்கு ஒரு பயணத்தை செய்திருந்தார். உக்ரேனிய மக்களையும், படையினரையும் உற்சாகப் படுத்தும் நோக்கமாக அவர் தனது பயணத்தை மேற் கொண்டிருக்கலாம். மேலும் 500மில்லியன் டொலர் உதவி உக்ரேனுக்கு கிடைக்கவிருக்கின்றது. ஹிமார்ஸ் ஏவுகணைச் செலுத்திகள், ஜவலின் ஏவுகணைகள், சுடுகலன்கள் என பல தரப்பட்டவற்றை உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் உக்ரேன் தற்போது வற்புறுத்தும் F-16 போர் விமானங்கள் வழக்கப்படவில்லை. ஏற்கனவே 700 போர்த்தாங்கிகள் கவச வண்டிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட சேணேவிகள் (Artilleries), ஐம்பதிற்கு மேற்பட்ட மேம்பட்ட ஏவூர்தி செலுத்திகள் (Rocket Launchers) போன்றவற்றை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியதாக உக்ரேனில் வைத்து அமெரிக்கத் தலைவர் ஜோ பைடன் சொன்னார்.



உக்ரேனை இரசியா கைப்பற்றினால் போலந்து, ஹங்கேரி, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல். அத்துடன்  உலகின் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் இரசியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். இதனால் இந்த நாடுகள் உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்குகின்றன. 

புட்டீனின் சரியான கணிப்பீடுகள்

1. தன்னால் பொருளாதாரத் தடைக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியும்.

2. இரசியர்கள் தனக்கு ஆதரவாக நிற்பார்கள் என புட்டீன எதிர்பார்த்தது நடக்கின்றது. இரசிய மக்களின் 80% ஆதரவு அவருக்கு உள்ளது. இது எந்த ஒரு முன்னணி நாட்டுத் தலைவருக்கும் இல்லாத ஆதரவு.



உண்மை அறிய முடியாத போர்

உக்ரேன் போரின்போது:

1. பொய் தாராளமாகச் சொல்லப்படுகின்றது.

2. இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு.

3. உக்ரேனியப் பொருளாதாரம் 2022இல் 30% வீழ்ச்சி. 30% மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

4. உணவும் பொருள் விலையும் எரிபொருள் விலையும் உலகில் அதிகரித்துள்ளது.

5. இரசியாவில் இருந்து முளைசாலிகளும் முதலீட்டாளர்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

புட்டீன் வெற்றி பெற்றால்

1. மேற்கு நாடுகள் என அழைக்கப்படும் வட அமெரிக்க மற்றும் மேர்கு ஐரோப்பிய நாடுகளும் நிலை நிறுத்த முயலும் விதிசார் உலக ஒழுங்கிற்கு பேரிழப்பு

2. தேர்தல் மூலம் வெற்றி பெறும் தன்முனைப்பு ஆட்சியாளர்களுக்கு பெரும் ஊக்கம்.

3. சீனா தைவானைக் கைப்பற்ற ஊக்குவிக்கப்படலாம்

4. அணுக்குண்டுகளை வைத்துக் கொண்டு மிரட்ட நினைப்பவர்களுக்கு ஊக்கம்.

5. இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுக்க மாட்டாத நிலையில் உள்ளர்.

6. போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.

7. எத்தரப்பு வெற்றி பெறும் என்று சொல்ல முடியாத நிலை

8. எப்போது போர் முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாத நிலை.

9. இரசியாவிடம் படைக்கலன் தட்டுப்பாடு மோசமடைகின்றது. 2023 ஜூன் மாதம் போர் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதைத் தவிர்க்க சீனாவை புட்டீன் மனம் மாறச்செய்து சீனாவிடமிருந்து படைக்கலன்களை இரசியா வாங்க வேண்டும்.

10. நேட்டோ நாடுகளின் சுடுகலன் தட்டுப்பாடு உருவாகின்றது. அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கருங்கடல் தானிய முன்னெடுப்பு (Black Sea Grain Initiative)

உக்ரேன் போரில் இத்தனை விடாப்பிடிகளுக்கும் நடுவில் இரண்டு நாடுகளும் உணவு ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவில் இருந்தும் உக்ரேனில் இருந்தும் கருங்கடலூடாகச் செல்லும் உணவுக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் பங்களிப்புடன் செய்து கொண்ட பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொண்டன.  உக்ரேனும் இரசியாவும் துருக்கி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடாக பேச்சு வார்த்தைகள் பலவற்றை நடத்தி வருகின்றன.

உக்ரேனியர்களுக்கு கிடைத்த தன்னம்பிக்கை

பெலரஸ் நாட்டிலிருந்து உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி ஆட்சி மாற்றம் செய்யும் நோக்கத்துடன் முன்னேறிய இரசியப் படையினரை தாம் விரட்டியதாக உக்ரேனியர்கள் பெருமையடைவதுடன் போரில் தம்மால் இரசியாவைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அறுபது கிலோ மீட்டர் நீளமான போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் கொண்ட இரசியாவின் பெரும் படையணி 2022 மார்ச் மாதம் உக்ரேனின் வட பகுதியில் இருந்து பின்வாங்கியது. இரண்டு வாரங்களுக்குள் உக்ரேன் போரை முடித்து விடலாம் என நம்பிய இரசியர்களுக்கு ஏமாற்றத்தையும் பலநாட்கள் உக்ரேனியப் படையினர் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என எதிர்பார்த்த நேட்டோ நாடுகளுக்கு வியப்பையும் உக்ரேனியர்கள் கொடுத்தனர். உக்ரேனின் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் குடிசார்-கட்டுமானங்களில் மீதும் புட்டீன் நடத்தும் அட்டூழியத் தாக்குதல்கள் அவரை ஒரு போர்க்குற்றவாளியாக்கி விட்டது. 

சிஐஏயின் பத்து விழுக்காடு தள்ளுபடி

அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏயின் இயக்குனர் பில் பேர்ண்ஸ் இரசிய jஉளவுத்துறைப் பொறுப்பாள சேர்கி நருஸ்க்கின்னை 2022 நவம்பரில் இரசியத் தலைநகர் மொஸ்க்கோவில் சந்தித்து உக்ரேன் போரை முடிவிற்கு கொண்டுவர பேச்சி வார்த்தை நடத்தினார். அவரது பயணத்தில் உக்ரேன் தொடர்பாக தாங்கள் உக்ரேன் இல்லாமல் பேச முடியாது என்பதால் இரசியா அணுக்குண்டுகளைப் பாவித்ஹ்டால் அமெரிக்காவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றிப் பேசினோம் என்றார் சிஐஏ இயக்குனர் பில் பேர்ண்ஸ். ஆனால் அவர் இரசியா உக்ரேனின் நிலப்பரப்பில் 10%ஐ வைத்துக் கொண்டு போரை நிறுத்துவதை அமெரிக்கா விரும்புவதாக இரசியாவிடம் அவர் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இரசியா அதற்கு தயாராக இல்லை. முழு டொன்பாஸ் பிரதேசமும் கிறிமியா குடா நாடு இரசியாவிற்கு சொந்தமானது என்பதே இரசியாவின் இறுக்கமான நிலைப்பாடாக இருக்கின்றது.

மழுங்குமா புட்டீனின் எரிபொருள் படைக்கலன்?

இரசியப் பொருளாதாரம் புட்டீன் உக்ரேன் மீது தொடுத்த போரினால் பாதிப்படையாமல் உலக எரிபொருள் விலை அதிகரிப்பு கை கொடுத்தது. 2022இறுதி 2023ஆரம்ப மாதங்களில் உலக குளிர்கால நிலை எதிர்பார்த்ததிலும் பார்க்க மிதமானதாக இருந்தது. அத்துடன் மக்கள் வீட்டில் இருந்து பணிசெய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் 2023உலக எரிபொருள் விலை பெரிதளவில் அதிகரிக்காமல் நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் பணவீக்கம் சீர் செய்யப்பட வாய்ப்புண்டு. உக்ரேன் தோற்கடிக்கப் பட முடியாத நாடு என நேட்டோ நாடுகள் நம்புகின்றன. புட்டீனை அடக்க உக்ரேன் சிறந்த போர் முனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. 2022இல் இரசியாவின் பொருளாதாரம் 2.2%ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023இல் 0.3% மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனுக்கு தொடர்ச்சியான் உதவிகள்

நேட்டோ நாடுகள் தாம் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களின் தரத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் படைக்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரசியப் படையினரால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் புட்டீன் 2023 பெப்ரவரி 21-ம் திகதி ஆற்றிய உரையில் அவர் உக்ரேனைக் கைப்பற்றும் முயற்ச்சியில் பின்வாங்கப் போவதில்லை என மார் தட்டியுள்ளார். ஆனால் உக்ரேன் போர்க்கள சூழல் அவருக்கு உகந்ததாக இல்லை. ஆப்கானிஸ்த்தானில் பத்து ஆண்டுகளில் சோவியத் படையினருக்கு ஏற்பட்ட இழப்பிலும் பார்க்க உக்ரேனில் ஓராண்டுப் போரில் இரசியாவிற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.  நேட்டோ நாடுகள் இனி உக்ரேனை தமது புதிய படைக்கலன்களை பாவிக்கும் தேர்வுக் களமாக மாற்றினால் இரசியா கிறிமியாவையும் இழக்கும் நிலை ஏற்படலாம். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் மஹ்மூட் நகரைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இரசியாவின் கூலிப்படைகள் அளவிற்கு அதிக உயிரழப்பை சந்தித்துள்ளன. இரசியக் கூலிப்படையின் தளபதி இரசியாவின் படைத்தளபதி மீது குற்றம் சுமத்துகின்றார். கூலைப்படைத் தளபதியின் கைகள் ஓங்குவது புட்டீனிற்கே உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம். கூலிப்படைத் தளபதி புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்ச்சிக்கலாம். புட்டீனைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் அவருக்கான ஆதரவைப் பேணுவார்கள் எனச் சொல்ல முடியாது. இரசிய மக்களின் பெரும்பகுதியினர் புட்டீனிற்கு ஆதரவாக தற்போது உள்ளனர். போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் அந்த ஆதரவுத் தளம் வலிமை இழக்கின்றது. சீன அதிபர் 2023 மார்ச் மாதம் இரசியாவிற்கு செய்யவிருக்கும் பயணத்தில் இரசியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்ய இணங்காவிடில் புட்டீனின் நிலை வலிமை மிகவும் குறையலாம்

அணுக்குண்டு மிரட்டல்

புட்டீன் அடிக்கடி விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல் உலகின் பெரும்பகுதி அழிவை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் அதை அவர் கைவிடவில்லை. இந்திய சீன ஆட்சியாளர்கள் இந்த அணுக்குண்டு மிரட்டலையும் போர் நீடிப்பதையும் விரும்பவில்லை. உலக அரங்கில் புட்டீனுக்கு காத்திரமான ஆதரவுத் தளம் இல்லை. தனது எல்லையில் நேட்டோ நாடு இருக்கக் கூடாது என போரை புட்டீன ஆரம்பித்தார். ஆனால் இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட  சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணையவிருக்கின்றன. முன்னாள் உளவாளியான புட்டீன் அரசுறவியலாளராக வளரவில்லை.

Friday, 3 February 2023

உக்ரேனுக்கு கிடைக்குமா 4-ம் தலைமுறைப் போர்விமானங்கள்?


உக்ரேன் போரில் தரையில் இருந்து வானிற்கு வீசப்படும் ஏவுகணைகள் (SAM – Surface to Air Missiles) அதிக அளவில் பாவிக்கப்படுவதுடன் இரு தரப்பினரிடமும் அவை அதிக அளவி கையிருப்பில் உள்ளன. இரு தரப்பினரும் தமது போர் விமான இழப்புக்களை தவிர்க்க முயல்வதால் விமானப் பாவனை குறைந்த ஒரு போர்க்களமாக உக்ரேன் இரசியப் போர்க்களம் பார்க்கப்படுகின்றது. இரசியாவிடம் உயர்ந்த விமானங்களும் சிறந்த விமானைகளும் இருந்த போதிலும் இரசியாவிடம் உரிய விமானப் பராமரிப்பு முறைமை இல்லை. இதனால் இரசியாவால் அதிக அளவு போர் விமான ங்களை உக்ரேனுக்கு எதிராக இரசியாவால் பாவிக்க முடியவில்லை.

இரசிய வானூர்திகளுக்கு சவாலான பிரித்தானிய Starstreak ஏவுகணைகள் பற்றி இந்த இணைப்பில் அறியலாம்:

https://puviarasiyal.blogspot.com/2022/04/starstreak.html

உயிரிழப்பு RISK இரசியாவிற்கு RUSK சாப்பிடுறமாதிரி

 உக்ரேனியப் படையினரைத் திணறடிக்கக் கூடிய வகையில் அதிக அளவு தரைப்படையினரை புட்டீன் உக்ரேனுக்கு எதிராக களமிறக்கிக் கொண்டிருக்கின்றார். 1853-ம் ஆண்டில் இருந்து 1856வரை நடந்த கிறிமியாப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் 1950முதல் 1953 வரை நடந்த கொடியாப் போரிலும் இரசியா அதிக அளவு உயிரிழப்பைச் சந்தித்தது. உயிரிழப்பை பெரிதாக பொருட்படுத்தாமல் அதிக அளவு படையினரை களத்தில் இரசியா இறக்கக் கூடியது. 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பமான உக்ரேன் போரில் 2022 டிசம்பர் வரை கடுமையாகக் காயப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இரசியப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானது எனச் சொல்லப்படுகின்றது. இரசியக் குடியரசுத் தலைவர் புட்டீன் மூன்று இலட்சம் உயிரிழப்பு வரை செல்லத் தயாராக இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவை புதிய தரமான போர்த்தாங்கிகள்

இரசியா பெருமளவு தரைப்படையினரை களத்தில் இறக்கும் போது உக்ரேன் படையினரின் உயிரிழப்பை மிக குறைக்கக் கூடிய வகையிலும் இரசியப் படையினரின் உயிரிழப்பை மிக அதிகரிக்கக் கூடிய வகையிலும் உக்ரேனியர்கள் போர் புரிந்தால் தான் அவர்கள் மேலும் நிலப்பரப்புக்களை இழக்காமல் தடுக்க முடியும் அத்துடன் இழந்த நிலப்பரப்பை மீளக் கைப்பற்றவும் முடியும். போலாந்து கொடுத்த பழைய சோவியத் ஒன்றிய காலத்து T-75 போர்த்தாங்கிகளை சிறப்பாக திருத்தி அவற்றைப் பாவித்து 2022 செப்டம்பரில் உக்ரேனியர்கள் வியக்கத்தக்க வகையில் துரிதமாக உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கீவ் பிரதேசத்தை மீளக் கைப்பற்றினர். அதன் பின்னர் தம்மிடம் போதிய போர்த்தாங்கிகள் அதிலும் புதிய தரமான போர்த்தாங்கிகள் இருந்தால் இரசியப் படையினரைத் தோற்கடிக்க முடியும் என உக்ரேனியப் படையினர் நம்புகின்றனர். அதற்கு ஆதரவாக நேட்டோ நாட்டுப் படைத்துறை நிபுணர்களும் கருத்துக்களை வெளியிட்டனர். அதன் விளைவாக ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது லெப்பார்ட்-2 சலெஞ்சர்-2, M1 Abrams ஆகிய போர்த்தாங்கிகளை அனுப்பினர். அவை தரத்தில் உயர்ந்தவையாக இருந்தாலும் எண்ணிக்கையில் போதுமானவையாக இல்லை என்பதுடன் அவற்றை அனுப்பி பயிற்ச்சி பெற மூன்று மாதங்கள் எடுக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

உக்ரேனியர்களின் அடுத்த வேண்டுகோள்

புதிய தர போர்த்தாங்கிகளைப் பெற்றுக் கொண்ட உக்ரேனியப் படையினர் மகிழ்ச்சியில் மிதக்கையில் உக்ரேனிய வான் படையினர் தமக்கு ஆகக் குறைந்தது நான்காம் தலைமுறைப் போர்விமானங்களாவது வேண்டும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் F-16 போர் விமானங்கள் வேண்டும் என்கின்றனர். அமெரிக்கப் படைத்துறையினர் அதை ஆதரிக்கின்றனர். ஆனால் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் F-16 உக்ரேனுக்கு வழங்கப்பட மாட்டாது என்றார். உக்ரேன் போரில் அமெரிக்கா முதலில் இல்லை எனச் சொல்லப்பட்ட படைக் கலன்கள் எல்லாம் பின்னர் வழாங்கப்படுவது வழமையாக இருக்கின்றது. ஏற்கனவே அமெரிக்கா உக்ரேனியர்களுக்கு F-16 ஓட்டுவதற்கான பயிற்ச்சிகளை வழங்க ஆரம்பித்து விட்டனர் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் தலைமுறைப் போர்விமானங்களாவன: அமெரிக்காவின் F-15, F-16 பிரான்ஸின் ரஃபேல், ஐரோப்பாவின் யூரோ ஃபட்டர், இந்தியாவின் தேஜஸ், சீனாவின் J-20 ஆகியவை சிறந்த நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் என்றாலும் F-16 நீண்டகாலமாக பாவனையில் உள்ளதும் பல போர் முனைகளைக் கண்ட போர்விமானமாகும். அமெரிக்கா தற்போது ஐந்தாம் தலைமுறை F-35, B-21 போர்விமானங்களை அதிகரித்து F-16ஐ குறைக்கவிருக்கின்றது.

F-16 இரசியாவிற்கு எதிராக சாதிக்குமா?

2015 நவம்பரில் துருக்கியின் F-16 விமானம் இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானத்தை சிரிய துருக்கி எல்லையில் வைத்து சுட்டுவீழ்த்தியது. துருக்கி சுட்டு வீழ்த்திய இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானங்கள் 23மில்லி மீட்டர் துப்பாக்கிகள் மூன்று பொருத்தப்பட்டவை. அத்துடன் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழிகாட்டி ஏவுகணைகளையும் கொண்டவை. தேவை ஏற்படின் தொலைக்காட்சி வழிகாட்டி ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லக் கூடியவை. அதில் சிறந்த ரடார் வசதிகளும் உண்டு. இப்படிப் பட்ட இரசிய விமானத்தை அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து இரு விமானிகள் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்க முற்பட்ட வேளையில் துருக்கிக்கு ஆதரவான சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களில் ஒருவரை ஜெனிவா உடன்படிக்கைக்கு மாறாகச் சுட்டுக் கொன்றனர். இரசியாவின் Su-35, SU-57 ஆகிய போர் ளுக்கு எதிராக விமானங்கஅமெரிக்காவின் F-16 விமானங்கள் சிறப்பாக செயற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் Su-35, SU-57 இரசியாவிடம் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. SU-57 பத்து என்றும் SU-35 110 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதை இரசியா பெருமளவில் பயன் படுத்துவதும் இல்லை. ஒரு Su-35ஐ உக்ரேனியர் சுட்டு வீழ்த்தியதுடன் அதன் விமானியையும் கைப்பற்றினர். இரசிய Su-57ஐ பயன்படுத்தினால் அதை அமெரிக்கர்கள் எப்படியாவது சுட்டி வீழ்த்தி அவற்றின் இரகசியங்களைப் பெற அமெரிக்கர்கள் முயல்வது நிச்சயம் என்பதால் இரசியா அவற்றைப் பாவிக்க தயக்கம் காட்டுகின்றது. மற்ற இரசியப் போர் விமானங்களை F-16 விமானங்கள் புதிய வானில் இருந்து வானிற்கு வீசும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த முடியும் F-16 விமானங்களின் புதிய வடிவமான F-16V விமானங்கள் உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும்.

இரசிய வான் பாதுகாப்பும் F-16

இரசியாவின் முதன்மை வான்பாதுகாப்பாக இருப்பது எதன் S-400 முறைமை. அதனால் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களை இனம் கண்டு அழிக்க முடியும். அது இதுவரை ஒரு முறையான போர்க்களத்தில் தேர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை, சிரியாவில் அது பாவிக்கப்பட்டது. சிரியப் போரின் போது லெபனானுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் படைக்கலங்களை எடுத்துச் செல்ல முயன்ற போதெல்லாம் இஸ்ரேலின் F-16 அங்கு தாக்குதல் நடத்தின. துருக்கியின் F-16ஐ கிரேக்கத்திடமிருக்கும் இரசியாவிடமிருந்து வாங்கிய S-300 வான் பாதுகாப்பு முறைமை இலகுவில் இனங் காண்பதாக துருக்கி அறிவித்துள்ளது. உக்ரேன் – இரசிய எல்லையைத் தாண்டி உக்ரேனியர்களால் F-16 வானூர்தியை கொண்டு செல்ல முடியாது. ஆனால் உக்ரேனுக்குள் இருக்கும் இரசிய வான் பாதுகாப்பு முறைமைகளை அமெரிக்காவின் HIMARS பல்குழல் ஏவுகணைச் செலுத்துகள் மூலம் அழித்த பின்னர் உக்ரேனில் உள்ள இரசியப் படை நிலைகளை F-16 மூலம் குண்டுகளை வீசி அழித்து தாங்கிகள் மூலம் இரசியப்படையினரைப் பின்வாங்கச் செய்யலாம். அமெரிக்கா தொலைதூர தாக்குதல் படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்க் முன் வந்திருப்பதால் உக்ரேன் எல்லைக் அண்மையாக உள்ள இரசிய வான் பாதுகாப்பு முறைமைகளை மேலும் இரசியா எல்லையில் இருந்து விலக்கும் என எதிர்பாக்கலாம். 

பிரான்ஸ் தனது போர் விமானங்களை அனுப்புவதை தவிர்க்க மாட்டாது என அறிவித்துள்ளது. உக்ரேனுக்கு புதிய போர்த்தாங்கிகளை வழங்க முடியாத பிரான்ஸ் தனது நிலையை உலக அரங்கில் நிலை நாட்ட உக்ரேனுக்கு போர்விமானங்களை அனுப்ப முயலலாம். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்ற நேட்டோ நடுகளை F-16களை அனுப்ப அனுமதிக்கலாம். அவற்றை ஈடுகட்ட அந்த நாடுகள் அமெரிக்காவின் F-35 வாங்கும். அதனால் அமெரிக்க படைத்துறை உற்பத்தியாளர்களின் இலாபம் அதிகரிக்கும்.

இன்னும் ஓராண்டுக்குள் F-16 உட்பட்ட பல நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் உக்ரேனுக்கு வழங்கப்படும்.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...