Followers

Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Tuesday, 16 January 2024

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

 


இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங் சென்றபோது இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயன்றன. இரண்டு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்றும் பெருந்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா இரண்டு நாடுகளையும் வல்லரசுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அப்போது சீனா தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகப்புச் சபையில் நிரந்தர உரிமை பெற்று வல்லரசாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்க்கும் ஒரே வல்லரசு நாடாக சீனா இருக்கின்றது.

இந்தியா பிராந்திய வல்லரசல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நாடு

பிராந்திய வல்லரசு என்ற பதத்தை தற்போது பல்கலைக்கழகங்களும் அரசறிவியலாளர்களும் பாவிப்பதை தவிர்த்து நடுவண் வல்லரசு என்ற பதத்தைப் பாவிக்கின்றனர். ஆனால் எம்மில் சிலர் இந்தியாவை வல்லரசு என அடிக்கடி சொல்கின்றனர். இந்தியா ஒரு படைவலிமை மிக்க நாடுதான். ஆனால் உலகிலேயே அணுக்குண்டு வைத்திருக்கும் இரண்டு போட்டி நாடுகளை அயல் நாடுகளாகக் கொண்டிருப்பதுடன் அவற்றுடன் தீர்க்க முடியாத எல்லைத் தகராற்றைக் கொண்ட நாடு இந்தியா. அதனால் அதன் பாதுகாப்பு மிகவும் வலிமை குறைந்ததாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியாவின் அரசியலமைப்பின் படி இந்தியாவிற்கு சொந்தமானதாக உள்ள பிரதேசங்களை சீனாவும் பாக்கிஸ்த்தானும் கைப்பற்றி வைத்திருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்தியாவிற்கு சொந்தமான 38,000சதுர கிலோ மீட்டரை சீனா கைப்பற்றியிருப்பதாக 2020இல் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிக்கப் பட்ட நாடாகிய இந்தியா ஒரு “பிராந்திய வல்லரசு” அல்ல. மேலும் இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவால ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கின்றது.

ஓங்கி அடித்த பெரியண்ணனான சீனா

1954-ம் ஆண்டு நேரு மாவோ சே துங் சந்திப்பின் பின்னர் சீனாவை இந்தியாவின் பெரியண்ணன் என விபரித்தார். ஆனால் 1962இல் சீனா தீபெத்தைக் கைப்பற்றியதுடன் இந்தியா மீதும் படையெடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் அரச பதிவுகள் வங்கிகளில் இருந்த பணங்களை எல்லாம் தீயிட்டுக் கொழுத்தி விட்டு இந்தியர்கள் தலை தெறிக்க ஓடினர். அதனால் இன்றும் அசாமில் யார் மண்ணின் மைந்தர்கள் என்ற பிரச்சனை இருக்கின்றது.

இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க முயலும் அமெரிக்கா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என சீனா சொல்கின்றது. இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது என சீனா கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவை மட்டுமல்ல இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 என்னும் பெயரில் இரண்டு நாடுகளினதும் வெறியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அடிக்கடி கூடி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்துவருகின்றனர். அதுமட்டுமல்ல அமெரிக்கா இந்தியாடுடனான உறவை தனது கேந்திரோபாய பங்காளியாக தரமுயர்த்தி உள்ளது.

தைவானை இந்தியா காப்பாற்றுமா?

தைவான் மீது சீனா ஓர் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்தால் சீனாவை திசை திருப்ப சீன எல்லையில் இந்தியப் படைகள் தம் நிலங்களை மீட்பது என்னும் பெயரில் ஒரு போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இந்த நம்பிக்கையில் தான் இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முழுக் கஷ்மீரையும் கைப்பற்றுவோம் என சூளுரைப்பார். ஆனால் கஷ்மீர் போர் என வரும் போது இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் மோத வேண்டி வரும்.

இந்திய சீன ஒத்துழைப்பு

இந்தியாவும் சீனாவும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஆகிய இரு முக்கிய அமைப்புக்களில் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவற்றில் இரசியாவும் இருக்கின்றது. இந்தியா அமெரிக்கா பக்கம சாயாமல் இருக்கும் படை சீனா நடந்து கொள்ள வேண்டும் என இரசியா எதிர்பார்க்கின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் படைத்துறை மேம்பாட்டையும் பார்க்கும் சீனர்கள் இந்தியா தக்கு சவால் விடக்கூடிய வல்லரசாக வளரும் என நம்புகின்றனர். அதனால் இந்தியா வளரக்கூடாது என அவர்கள் காய்களை நகர்த்தலாம். சீனாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணைக்கு அண்மையாக இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளில் இந்தியாவின் படைவலிமை அதிகரிப்பதும் சீனாவை கரிசனை கொள்ள வைக்கின்றது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியா தனது பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

பங்களாதேசம், இலங்கை, மால தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலானது. அத்துடன் இந்தியாவில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியிலும் பார்க்க அதிக அளவு இறக்குமதியை சீனாவில் இருந்து இந்தியா செய்கின்றது. இதை சமநிலைப்படுத்தக் கூடிய வகையில் சீனா தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியவின் நீண்ட நாள் கோரிக்கையை சீனா உதாசீனம் செய்கின்றது.

சீனா தன்னை சமமாக நடத்த வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கையில் சீனா தன்னை ஆசியாவின் தலைமை நாடாகப் பார்க்கின்றது. இந்த முரண்பாடு இல்லாமல் போக வாய்ப்பில்லை.


Tuesday, 6 December 2022

பாவம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

 


2022 டிசம்பர் மாதம் 3-ம் திகதி இலண்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கணேசலிங்கம் உரையாற்றியிருந்தார். பேராசிரியர் தனது உரையின் போது சொன்னார்: உலகளாவிய ரீதியில் சீனா தனது செல்வாக்கும் சீனா உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான காத்திரமான நகர்வுகளுக்கூடாக மேற்கொண்டு வருகின்றது.

 
இதற்கு ஆதாரமாக ஏப்ரல் மே பகுதியில் சீனக் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு பயணம் செய்தமையை பேராசிரியர் மேற்கோள் காட்டினார்.

உலக வரலாற்றின் எந்த ஒரு நாடும் உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவில்லை. இப்போதும் எந்த ஒரு நாட்டின் கட்டுப்பாட்டின் கீழும் உலகம் இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. சீனா எந்த ஒரு கட்டத்திலும் அப்படிச் சொல்லவில்லை. சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கமும் 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் சீனக் கனவு என்றார் அதன் அதிபர் ஜீ ஜின்பிங். சீனா உலகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயல்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறையோ பாதுகாப்புத்துறையோ சொல்லவில்லை. அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலான நாடாக சீனா மாறிவருகின்றது என்பதை அவர்கள் சொல்வதுண்டு. உலக அரசியல் மற்றும் படைத்துறை ஆய்வாளர்களும் அப்படி எழுதுவதில்லை. சீனாவிற்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள் “சீனா உலக ஒழுங்கை தனக்கு சாதகமாக மாற்ற முயல்கின்றது” என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்களாக இருக்கின்றார்கள். உலக ஒழுங்கை தனக்கு சாதகமாக மாற்றுவது வேறு உலகை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது வேறு. ஐயா பேராசிரியரே உங்கள் மாணவர்களுக்கு சீனா உலகை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயல்கின்றது எனப் போதிக்காதீர்கள்! தைவானை கைப்பற்றும் போரை ஆரம்பிக்க தயங்குகின்ற சீனாவால் எப்படி உலகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும்? உலகின் பல பகுதிகளிலுமுள்ள 800இற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைத்தளத்தை சீனா அழித்தால்தாலும் சீனாவால் உலகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியாது. அது ஓர் அணுக்குண்டுப் போரை உருவாக்கி “mUTUALLY ASSURED DISTRUCTION” கோட்பாட்டின் படி இரண்டு நாடுகளும் அழிந்துவிடும் ஐயா! நடுவண் ஆசிய நாடுகளையே சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இரசியா அனுமதிக்காது. மேற்கு ஐரோப்பா மீது சீனாவால் படையெடுக்க முடியாது. அணுக்குண்டுப் போரை அமெரிக்காவும் சீனாவும் தவிர்த்து அமெரிக்கா மீது சீனர்கள் படையெடுத்தால் ஒவ்வொரு அமெரிக்கர்களிடமும் ஒன்றிற்கு மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் பல தானியங்கித் துப்பாக்கிகள்! சிறிய நாடாகைய சுவிற்ச்சலாந்தையே எந்த ஒரு வல்லரசும் ஆக்கிரமிக்காத படி அதனது பூகோள அமைப்பு இருக்கின்றது என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து.  

பேராசிரியர் கணேசலிங்கம் சொன்னார்:

அதே போன்று (உக்ரேன் விவகாரம் போன்று) தைவான் விவகாரமும் சமதளத்தில் உலகளாவிய அரசியலில் அதிகமான செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றது.

உக்ரேன் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. உக்ரேனும் இரசியாவும் பெருமளவு உணவு ஏற்றுமதி செய்கின்ற நாடுகள். இரசியா பெருமளவு எரிபொருள் ஏற்றுமதி செய்கின்ற நாடு. உக்ரேன் போர் இந்திய இரசிய உறவை மீளுறுதி செய்துள்ளது. அது இரசிய சீன உறவை நெருக்கமாக்கியுள்ளது. இருந்தும் இந்தியாவும் சீனாவும் இரசியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்ய மறுத்து வருகின்றன. தைவான் பிரச்சனை உலக அளவில் உக்ரேன் போருக்கு ஈடான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பேராசிரியர் சொல்வது முற்றிலும் தவறானதாகும். இதை உங்கள் மாணவர்களுக்கு போதிக்காதீர்கள் ஐயா! தைவானை சீனா தன்னுடன் இணைக்கும் போரை ஆரம்பித்தாலும் அது உலக மக்களுக்கான உணவு, உரம் மற்றும் எரிபொருள் போன்ற விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆக உலக குறைக்கடத்தி விநியோகம் மட்டும் பாதிக்கப்படலாம். அதற்கான மாற்று வழிகளை ஏற்கனவே அமெரிக்கா செய்யத் தொடங்கிவிட்டது.

பேராசிரியர் கணேசலிங்கம் சொன்னார்:

இரசிய மொழி பேசும் நிலப்பரப்பை இரசியா கருத்துக் கணிப்பு மூலம் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இதை பேராசிரியர் தொடும் போது அது தொடர்பான சரியான தகவலகளை அவர் சொல்ல வேண்டும். உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உக்ரேனியர்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். அங்கு கனிம வளங்கள் கண்டறியப் பட்ட பின்னர் சோவிய ஆட்சிக் காலத்தில் பெருமளவு இரசியர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். அதனால் அங்கு இரசியர்கள் பெரும்பான்மையினர் ஆக்கப்பட்டனர். அது இரசிய மொழி பேசும் நிலப்பரப்பு என்பது தவறான கருத்தாகும்.

அண்மையில் புது டில்லியில் நடந்த ஒரு சிறு கூட்டத்தில் தன்னை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவி விரிவுரையாளர் என அறிமுகப்படுதி கொண்ட ஒருவர் ஆங்கிலத்தில் உரையாற்றும் போது: “You know in தமிழ்நாடு சட்டசபை they made a தீர்மானம்” என்றார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பாவம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எனத் தோன்றுகின்றது.



உலக ஒழுங்கு என்பது உலகெங்கும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் முறைமை எனப்படுகின்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நாணய நிதியம் உட்பட்ட பல உலக அமைப்புக்கள், உலக ஊடகத்துறை, உலக படைத்துறைச் சமநிலை, உலகப் போக்குவரத்து போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகள் பலவற்றின் ஆதரவு எந்த வல்லரசுக்கு அதிகம் இருக்கின்றதோ அதற்கு சாதகமாக உலக ஒழுங்கு இருக்கும். 

உலக ஒழுங்கும் சீனாவும்

தற்போது உலக ஒழுங்கு  சீனாவிற்கு உகந்ததாக இல்லை. இதை மாற்றி அமைக்க சீனா எடுக்கும் முயற்ச்சிகள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்க குடியரசுத்தலைவரின் தேசிய பாதுகாப்புச் சபையின் இயக்குனர் Rush Doshi  2022இல் எழுதிய The Long Game என்னும் நூலில் Beijing is pursuing a "grand strategy" to displace American order" என மட்டும்தான் எழுதியுள்ளார். அமெரிக்காவை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றது என எழுதவில்லை. தற்போது இருக்கும் அமெரிக்கவிற்கு சாதகமான உலக ஒழுங்கில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சீனா இல்லை.  உலக அமைப்புக்களில் வாக்கெடுப்பு என்று வரும் போது இலங்கை தனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என சீனா விரும்புகின்றது. இந்தியா சீனாவைத் தாக்குவதற்கு என்று தஞ்சாவூரில் வைத்திருக்கும் விமானப்படைத்தளம் அமெரிக்காவின் தியாகோ காசியா படைத்தளம் ஆகியவற்றில் இருந்து சீனா மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்கும் போது அவற்றை முன் கூட்டியே அறியக் கூடிய கண்காணிப்பு நிலையங்கள் இலங்கையில் அமைக்க சீனா விரும்புகின்றது. கொழும்பில் சீனா அமைத்துள்ள தாமரைக் கோபுரம் அதற்கு பயன்படுத்தப்பட மாட்டாது எனச் சொல்ல முடியாது.

Monday, 17 October 2022

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் உரையின் தாற்பரியம்


2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனாவின் மக்கள் பெருமண்டபத்தில் ஆரம்பமான சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயம் (congress) வரலாற்று முக்கியத்துவமானதாக இருக்கின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 90மில்லியன் உறுப்பினர்கள் தெரிவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி கொள்கைகளை வகுக்கும் கூட்டம் பேராயம் (congress) எனப்படும்.
சீனப் பொதுவுடமைக் கட்சி, சீன அரசு, சீனப்படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களும் சீனாவின் பாட்டாளி வர்க்கத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை என்று பொதுவுடமைவாதிகள் சொல்கின்றனர். இவற்றில் அதிக அதிகாரம் கொண்டது பொதுவுடமைக் கட்சியே. தகுதிக்கு முன்னுரிமை கொடுத்தல், நடைமுறைக்கு ஏற்பட மாற்றங்களைச் செய்தல் போன்றவற்றால் பொதுவுடமைக் கட்சி சீனாவில் நிலைத்திருக்கின்றது.

கட்சிக் கட்டமைப்பு



பேராயத்தினர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூடி நானூறு வரையிலான நடுவண் குழு உறுப்பினரை தெரிவு செய்வர். நானூறு உறுப்பினர்களும் politburo என்னும் 25 பேர் கொண்ட அரசியற்குழுவை தெரிவு செய்வர். அரசியற்குழு தனது நிலையியற் குழுவைத் தெரிவு செய்யும். தெரிவுக் குழுவின் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் இருப்பார். நடுவண் குழுவே பொதுச் செயலாளரைத் தெரிவு செய்யும். அரசுத் தலைவர்: (Head of the State) இவரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பேராயம் தெரிவு செய்யும். இது இரண்டாவது அதிகார மையமாகும். Politburo: அரசியல்குழு என்பது பொதுவுடமைக் கட்சியின் கொள்கை உருவாக்கும் அமைப்பாகும். 25 உறுப்பினர்கள். பொதுச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது நடுவண் குழுவால் தெரிவு செய்யப்படும். Politburo Standing Committee: அரசியல் குழுவின் நிலையியல் குழு. இது அரசியல் குழுவால் தெரிவு செய்யப்படும். 

ஆயுட்கால அதிகாரம்

20வது பேராயத்தில் பொதுச் செயலாளரின் பதவிக்கால எல்லையான பத்து ஆண்டுகள் இல்லாமல் செய்யப்படும். அதன் படி சீனாவின் அதிகாரமிக்கவராக ஜீ ஜின்பிங் தொடர்ந்து பதவி வகிப்பார். ஒஸ்ரேலியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கெவின் ரட் அவர்க்ள் நீண்ட ஆயுளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த 69 வயதான ஜீ ஜின்பிங் இன்னும் 15 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என எதிர்வு கூறியுள்ளார். சீனாவின் அரசுத் தலைவராகவும் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் படைத்துறையின் உச்சத் தளபதியாகவும் பதவி வகித்து வந்த ஜீ ஜின்பிங் பொதுச்செயலாளராகவும் தளபதியாகவும் தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளார். உலக அமைதி, உலக பொருளாதாரம் ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் குழப்பமடைந்துள்ள நிலையில் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் ஆற்றிய உரை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது.

தைவானும் கொவிட்-19ம் 

தைவானை சீனாவுடன் இணைப்பது அண்மைக் காலங்களாக ஜீ ஜின்பிங்கின் முதன்மை கொள்கையாக இருக்கின்றது. தைவானை சீனாவுடன் இணைப்பதை மீளவும் உறுதி செய்தார் ஜீ. அமைதியான வழிகளில் இணைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்படும் என்ற ஜீ அது சரிவராது போனால் படை நடவடிக்கை மூலம் இணைக்க மாட்டேன் எனச் சொல்ல மாட்டேன் என்றார். ஆனால் எப்போது இணைப்பது என்பது பற்றி ஜீ ஏதும் சொல்லாத படியால் உடனடி போர் அபாயம் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். கொவிட்-19 பெருந்தொற்றை தைவான் மிகச் சிறப்பாக கையாண்டு உலகை வியக்க வைத்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக ஜீ சீனாவில் எடுத்த மிக இறுக்கமான நடவடிக்கைகள் சீனாவிலேயே அதிருப்தியைக் கிளறியுள்ளது. ஜீ தனது உரையில் கொவிட்-19இற்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

பொருளாதாரம் 

கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனா பெரும் சவால்களை எதிர் கொண்டதை சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது பேராயத்தில் உரையாற்றும் போது ஏற்றுக் கொண்ட ஜீ ஜின்பிங் சீனாவின் பல நகரங்களில் இளையோர் வேலையின்மை 20%இற்கு மேல் இருப்பதைப் பற்றி வாய் திறக்கவில்லை. வீழ்ச்சியடைந்து செல்லும் கட்டிடங்களின் விலை சீனப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கையில் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது பற்றியும் ஜீ வாய் திறக்கவில்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி உள்நாட்டுக் மக்களின் கொள்வனவையும் உயர்-தொழில்நுட்ப மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டாதாக இருக்கும் என்றார் ஜீ. அவர் பீஜிங்கில் உயர்-தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பற்றி உரியாற்றுகையில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒடுக்கக் கூடிய நகர்வுகள் வாசிங்டனில் எடுக்கப்படுகின்றது. சீனாவின் இளையோருக்கு போதிய வேலைவாய்ப்பை வழங்க சீனப் பொருளாதாரம் குறைந்தது 7%ஆவது வளர வேண்டும் ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி 2022-ம் ஆண்டு சீனப் பொருளாதாரம் 3.2% மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீயின் உரையில் உணவு உற்பத்தியின் தன்னிறைவு அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 20வது பேராயம் நடை பெறுவதால் 2022இன் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரம் வெளியிடுவதை சீன அரசு தாமதப் படுத்தியுள்ளது. 

பாதுகாப்பு

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த ஜீ ஜின்பிங்கின் உரையில் அதிக தடவைகள் இடம்பெற்ற வார்த்தை பாதுகாப்பு ஆகும். சீனா அச்சுறுத்தப்படுவதாக காட்ட முயன்ற ஜீ அதை தன்னால் மட்டும் காப்பாற்ற முடியும் எனக் கட்ட முயன்றார். பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு போக வேண்டும் என்றார் ஜீ ஜின்பிங்.

வெளியுறவு

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட சீனாவிற்கு உலக அரங்கில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜீ ஜின்பிங் 20வது பேராயத்தில் அதை கோடிட்டு காட்டினார். தனி ஒரு நாடு உலக ஆதிக்கத்தை செலுத்துவதையும் பனிப்போர் மனப்பாங்கையும் ஜீ தனது உரையில் மறுதலித்திருந்தார்.

தன் பதவிக் காலத்தை தன் ஆயுள்வரை நீடிக்க முயலும் ஜீ ஜின்பிங் இனித்தான் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

Monday, 26 September 2022

சீன அதிபரி ஜீ ஜின்பிங்கை சிறையிலடைத்த பொய்-ஹிந்த்

 


சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கு எதிராக படையினர் புரட்சி செய்து அவரை சிறையில் அடைத்து விட்டதாக பல இந்திய ஊடகங்கள் 2022 செப்டம்பர் 24-ம் திகதி செய்தி வெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவில் ஒரு பெரிய குழப்ப நிலை என்பது Too good to be true. ஆனால் சீனாவைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்கள் அப்படி ஒரு செய்திகளை வெளிவிடவில்லை. அது மட்டுமல்ல உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகளை முந்தியடித்து வெளிவிடுவதை வழமையாக கொண்ட பிரித்தானிய Daily Mail, அமெரிக்க Washington Post ஆகியவை ஜீ ஜின்பிங்க் கைது பற்றி ஏதும் செய்திகளை வெளிவிடவில்லை.



பொய் சொல்லும் ஜெய் ஹிந்த் கும்பல்

ஜெய் ஹிந்த் என தமது உரையாடல்களை முடிக்கும் இந்திய youtube channels பொய்ச் செய்திகளை வெளியிடத் தயங்காதவரகள், மேஜர் மதன்குமார் என்பவர் பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தைப் பற்றிய கலந்துரையாடலில் உலகில் தனது சொந்த நாட்டு மக்கள் மேல் விமானத்தில் இருந்து குண்டுகளை வீசிய ஒரே நாடு பாக்கிஸ்த்தான் எனப் பொய்யுரைத்தார். இந்தியா 1966இல் மிஸ்ரோம் மக்கள் மீது குண்டு வீசியமையையும் இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியுடன் இலங்கை விமானப் படையினர் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமையையும் ஒரு வாக்கியத்தில் மதன் குமார் மறைக்க முயன்றார். இன்னும் ஒரு youtube channel இல் B-21 Raider போர் விமானங்களை இந்தியா உற்பத்தி செய்வதாக புரட்டினார். ஆனால் அவை அமெரிக்காவின் விமானங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய youtube channels பார்த்தால் இன்னும் சில நாட்களில் சீனா தன் படைக்கலன்களுடன் இந்தியாவிடம் சரணடைந்து விடுபது போலத் தோன்றும். ஈழ விடுதலையையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப் படுத்துவதற்கு அவர்களுக்கு கூலி கிடைக்கின்றதா என எண்ணத்தோன்றும். 

தமிழர்களைப் பொறுக்கி என அழைக்கும் சுப்பிரமணியன் சுவாமி தன் பதிவை நீக்கி விட்டார்.:



ஜின்பிங்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்

சீனாவின் புரட்சி நடந்தமைக்கு ஆதாரமாக சீனாவில் இருந்து 6,000 விமானப் பறப்புக்கள் இரத்து செய்யப்பட்டன என்பதை முதலாவது ஆதாரமாக முன்வைத்துள்ளன. சீனாவில் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டன என்றன. சீனாவில் போர் ஒத்திகை நடக்கும் போது விமானப் பறப்புகள் இரத்துச் செய்யப்படுவதுண்டு. சீன விமானச் சேவைகளின் இணையத்தளங்களில் பறப்பு இரத்துப் பற்றி பெரிதாக எதுவும் இருந்திருக்கவில்லை. SCO மாநாடு முடிய முன்னரே ஜீ ஜின்பிங் உட்பட பல சீனப் பிரதிநிதிகள் உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினர் என்பது இரண்டாவது ஆதாரமாக முன் வைக்கப்படுகின்றது. 2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடக்கவிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் அம்மாநாட்டிற்கான ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் அவசரமாக நாடு திரும்பினர். முன்றவது ஆதாரமாக சீனாவில்  படையினர் நடமாட்டம் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும் காணொலிகள் வெளிவந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. Republic என்ற இந்திய ஊடகம் சீனாவில் 80கிலோ மீட்டர் நீளமான பார ஊர்தி படை வண்டிகள் தலைநகர் பீஜிங்கை நோக்கி நகர்வதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அக்காணொலி ஒரு சில செக்கண்டுகள் மட்டுமே காட்டப்பட்டன். 80கிமீ என்பது போலிச் செய்தி. இந்திய ஊடகங்கள் முன் வைக்கும் நான்காவது ஆதாரம் சீன அதிபர் எங்குள்ளார் என்பது பற்றி எந்த ஒரு சீன ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை என்பதாகும். 69 வயதான ஜீ ஜின்பிங்க் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சீனர்கள் தம்மைத் தனிமைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதையே அவரும் கடைப்பிடித்தார். சில இந்தியர்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் சீனப் படைத்தளபதி லி கியோமிங் விரைவில் சீன அதிபராகுவார் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் Newsweek சஞ்சிகையின் இணையத்தளம் சீனா அதிபர் கைதுச் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வலம் வருகின்றன என்றது.

பொய்யாக முன்வைத்த “பின்னணி”

ஜின்பிங் தைவானைக் கைப்பற்ற அவசரப்படுகின்றார் ஆனால் சீனப் படைத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் ஜின்பிங்குடன் படையினருக்கு பிணக்கு அதனால் அவர்கள் உஸ்பெக்கிஸ்த்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் ஜின்பிங்கை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் என்ற வகையிலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. 2022 ஒக்டோபர் 10-ம் திகதி நடக்கவிருக்கும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் ஜீ ஜின்பிங் மூன்றாவது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் அவர் இறக்கும் வரை சீன அதிபராக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதை பல பொதுவுடமைக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது. ஊழலை ஒழிக்கவும் ஜக் மா உட்படப் பல செல்வந்தர்கள் அளவிற்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பதை தடுக்கவும் ஜீ ஜின்பிங்க் கடுமையாக செயற்பட்டார். அதனால் அவருக்கு பொதுவுடமைக் கட்சியில் எதிரிகள் அதிகரித்துள்ளனர். ஊழல் செய்தவர்கள் பலரை ஜின்பிங் சிறையில் அடைத்துள்ளார். கொவிட்-2019 பெருந்தொற்று நோய்க்கு எதிராக சுழிய-பொறுமைக் கொள்கையை (Zero-Tolerance policy) ஜின்பிங் கடைப்பிடிப்பதால் சீனாவின் உற்பத்தித் துறையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல உற்பத்தியாளர்கள் ஜின்பிங் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர்.

மோடியின் கேடி வால்பிடிகள்

சில மோடி ஆதரவாளர்கள் மோடியைச் சந்தித்த வெளிநாட்டுத்தலைவரகள் பதவி இழக்கும் அளவிற்கு அவரிடம் அதிசய சக்தி உள்ளது எனக் கதை அளந்தனர். டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன் ஆகியோரின் வரிசையில் ஜீ ஜின்பிங்கும் இணைந்துள்ளார் என்றனர். டுவிட்டரில் சில இஸ்லாமியர்களுக்கும் சில இந்துக்களுக்கும் கடும் மோதல் நடப்பது வழமை. ஜீ ஜின்பிங் என போலிச் செய்தி வெளியிட்ட இந்துக்களை இஸ்லாமியர்கள் கழுவி ஊற்றுகின்றார்கள். ஜின்பிங் கைது செய்யப்பட்டதாக பொய்யாஅ செய்தி வெளியிட்ட youtube பதிகளை அதன் மொக்கை இரசிகர்கள் "ஆகா அற்புதமான ஆய்வு" என தொடர்ந்தும் வழமையான புளுகித் தள்ளி பின்னூட்டமிடுதலை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.  பல டுவிட்டர் பதிவுகள் இந்திய டுவிட்டர் பதிவுகளை கிண்டல் செய்தன:



உண்மையில் பொதுவுடமைக் கட்சியில் ஜீ ஜின்பிங்கின் எதிரிகளாக கருதப்படுபவர்களை தூக்கிலிட்டும் சிறையிலடைத்தும் தன் இருப்பை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றார். சீனாவை எப்படி முன்னேற்றி உலகின் முதல்தர நாடாக்குவது என்ற கனவுடன் சீனர்கள் செயற்படுகின்றார்கள். பாவம் இந்தியர்கள் மனுதர்ம சாஸ்த்திரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த நாடு எப்போ சீரழியும் என்ற கனவுடன் அலைகின்றார்கள். 

உலக நாடுகளின் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்கும். நாணயங்களின் பெறுமதி குறையும் பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் சரியும். அப்படி ஏதும்  நடக்கவில்லை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கவில்லை. 

பொதுவுடமைச் சர்வாதிகாரிகள் தங்கள் நாட்டில் படையினர் அதிகாரப் போட்டியில் தனித்து ஈடுபடாதவாறு பொதுவுடமைக் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் படையினரை வைத்திருப்பார்கள். இது முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் தற்போதைய சீனாவிலும் உள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது படையினரால் ஏதும் செய்ய முடியவில்லை. இதை அறியாதவர்கள் பலர் youtube channels நடத்தி மக்களிடையே அறியாமையை பரப்புகின்றார்கள். 

Wednesday, 6 July 2022

தைவான்: ஒரு சீனா ஒரே பொய்

 


அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றார். இது அமெரிக்காவின் நிலைப்பாடல்ல என்றார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன். அமெரிக்கா தைவான் தொடர்பாக வெளியில் சொல்வது வேறு அதன் செயற்பாடு வேறு. சீன ஆட்சியாளர்கள் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர். ஆனால் தைவான் எல்லா வகையிலும் ஒரு தனிநாடாகவே செயற்படுகின்றது.

சீனாவின் ஐநா உறுப்புரிமை தைவானிடம்

1945 ஒக்டோபரில் ஐக்கியநாடுகள் சபை உருவான போது சீனாவும் அதில் ஓர் உறுப்பு நாடாகியது. அது பொதுவுடமை சீனா உருவாக முன்னர் இருந்த மக்கள் சீனக் குடியரசாகும். அதன் ஒரு பகுதியாக தைவானும் இருந்தது. 1949 ஒக்டோபரில் பொதுவுடமைவாதிகள் மாவோ தலைமையில் மக்கள் சீனக் குடியரசை உருவாக்கிய போது தைவான் ஒரு தனிநாடாகியது. அமெரிக்கா தைவானில் ஆட்சியில் இருப்பவர்கள் தான் உண்மையான சீன ஆட்சியாளர்கள் என்றும் தைவான் அரசுதான் சீனக் குடியரசு என்றும் அந்தக் குடியரசு தான் ஐக்கிய நாடுகள் சபையில் முழுச் சீனாவிற்குமான உறுப்புரிமை உடையது என்றும் அடம் பிடித்தது. 1943-ம் ஆண்டு எகிப்தில் நடந்த முதலாவது கெய்ரோ மாநாட்டில் உலகப் போரின் பின்னரான ஆசிய அரசுகள் பற்றி முடிவு செய்த போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட தைவான சீனக் குடியரசின் ஒரு பகுதியாக ஒத்துக்கொள்ளப்பட்டது. அது பொதுவுடமைப் புரட்சிக்கு முன்னரான நிலைப்பாடு.

கேந்திரோபாயத் தெளிவின்மையா (Strategic Ambiguity) கேந்திரோபாய பொய்யா?

தைவான் தொடர்பான நிலைப்பாட்டை “கேந்திரோபாயத் தெளிவின்மை” (Strategic Ambiguity) என்னும் பெயரிட்டு குழப்பமான ஒன்றாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள். 1972-ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனும் சீனத் தலைவர் மாவோ சே துங்கும் சந்திக்கும் வரை தைவான் சீனக் குடியரசு எனவும் சீனா மக்கள் சீனக் குடியரசு எனவும் அழைக்கப்பட்டன. 1979இல் சீன அமெரிக்க உறவைப் புதுப்பித்தல் (Détente)செய்த போது சீனாவிற்கு அமெரிக்கா காட்டிய இரட்டை முகத்தில் இருந்து கேந்திரோபாய தெளிவின்மை செயற்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை விருப்பமின்றி ஒத்துக் கொண்டார். நிக்சன் எதை ஒத்துக் கொண்டார் என்பதற்கும் அப்போதைய சீன ஆட்சியாளர்கள் அதை எப்படி புரிந்து கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உண்டு என 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கர் சொல்லி வருகின்றார்கள். நிக்சனும் மாவோவும் பேச்சு வார்த்தை நத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தைவான் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை தைவானை சீனக் குடியரசு என அழைத்து வந்த அமெரிக்க தைவான் பாதுகாப்புச் சட்டத்தில் “தைவானை ஆளும் அதிகாரப்பட்டயங்கள் (Governing Authorities of Taiwan) எனக் குறிப்பிட்டது. 1979இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவை தன் நட்பு நாடாக்குவதற்காக அமெரிக்கா சொன்ன பொய் “ஒரே சீனா”. அந்த ஒரே சீனாவில் தைவான் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் “கேந்திரோபாயத் தெளிவின்மை”

இரண்டாம் உலகப் போரின் முன்னர்


இரு விமானம் தாங்கி கப்பல்களுக்கு அஞ்சிய சீனா!

பொதுவுடமைச்(?) சீனாவின் சிற்பியாகிய மாவோ சே துங்கின் குறிக்கோள் ஹொங் கொங்கும் தைவானும் சீனாவின் பிரிக்க முடியாத பகுதிகள் என்பதாகும். ஆனால் இன்றுவரை சீனாவால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்யும் என்பது போல அமெரிக்காவில் இருந்து கருத்து வெளியிடப்படுவது ஆண்டு தோறும் வலுவடைந்து கொண்டு போகின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும்.

தைவான் வேறு சீனா வேறு என்கின்றது அமெரிக்கா

The American Enterprise Institute என்ற அமெரிக்க வலதுசாரிக் கருத்துக் கலம் வரலாற்று ஆய்வு ஒன்றைச் செய்து தைவான் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என ஒரு நூலை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த நூல் சீனா தைவானை ஆட்சி செய்த காலத்திலும் பார்க்க நீண்ட காலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளை ஆட்சி செய்தன என்கின்றது. கிங் கோமரபு (Qing Dynasty) தைவானை இரண்டு நூற்றாண்டுகளுக்கு (1683 – 1895) மேல் ஆட்சி செய்தது. கிங் கோமரபின் பிடியில் இருந்த சீனாவுடன் ஜப்பானியர்கள் 1894இல் போரை ஆரம்பித்தனர். 1895இல் முடிந்த முதலாம் சீன-ஜப்பான் போரில் ஜப்பான் தைவானையும் சீனாவின் காற்பங்கு நிலப்பரப்பையும் கைப்பற்றியது. கிங் கோமரபு ஆட்சியாளர்கள் உண்மையான ஹன் சீனர்கள் அல்ல அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனம் சொல்கின்றது. கிங் கோமரபிற்கு முன்னர் தைவானை டச்சுக்காரர்களும் போர்த்துக்கேயர்களும் ஆண்டனர். பொதுவுடமை சீனாவைப் பற்றி பல நூல்களை எழுதிய Edgar Snow என்பவருக்கு மாவோ சே துங் 1936இல் வழங்கிய பேட்டியில் மாவோ தைவானை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடவில்லை என்கின்றது The American Enterprise Institute.



சீனாவால் தைவானைக் கைப்பற்ற முடியாதாம்

சிலர் தைவான் தீவைக் கைப்பற்றக் கூடிய வலிமையான கடற்படை ஒரு போதும் சீனர்களிடம் இருந்ததில்லை என்கின்றனர். 23.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானைக் கைப்பற்ற போர் அனுபவம் இல்லாத சீனப்படையினர் எத்தனை பேர் தேவைப்படுவார்கள் என்ற கேள்விக்கு நூறு தைவானியர்களுக்கு ஒரு சீனப் படை வீரர் என்ற கணக்குப் படி பார்த்தால் 240,000 சீனப் படையினர் தேவைப்படுவார்கள். அவர்களையும் அவர்களுக்கு தேவையான போர்த்தாங்கிகள், ஆட்டிலெறிகள், துப்பாக்கிகள், சுடுகலன்கள், உணவுகள் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நூறு மைல்கள் தூரம் கடலைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு தேவையான தரையிறக்க கப்பல்கள் (Landing Vessels) சீனாவிடம் இல்லை என்ற விவாதத்தை சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். சீனாவிடம் உள்ள எட்டு தரையிறக்க கப்பல்கள் மூலம் ஐம்பதினாயிரம் படையினரையும் ஆயிரம் போர்த்தாங்கிகளை மட்டும் தரையிறக்க முடியும் என்பது அவர்களது கருத்து. பகுதி பகுதியாக படையினரை இறக்கினால் மிகப்பெரும் அழிவை சீனப் படையினர் சந்திக்க வேண்டிவரும். சீனா தனது தரை, வான், கடல் நிலைகளில் இருந்து குண்டுகளை வீசி தைவானை தரைமட்டமாக்கிய பின்னர் படையெடுத்தால் சீனா தைவானின் தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாது. தைவானியர்களின் கரந்தடிப் போரை சீனா எதிர் கொள்ள வேண்டிவரும். தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் களமிறங்கினால் நிலைமை மோசமாக இருக்கும். இவை உண்மையாயின் சீனா தொடர்ந்தும் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என வாயளவில் (பொய்) சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது சீனாவும் தைவான் மீது படை எடுக்கும் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.

முள்ளம் பன்றிக் கோட்பாடு

ஒரு முள்ளம்பன்றி சிறிதாக இருந்தாலும் அதன் எதிரிகள் அதைத் தொட்டால் அதன் முள்ளுகள் குத்தும். அப்படியாக இருக்கக் கூடிய மாதிரி தைவானை வைத்திருக்கும் திட்டத்தை 2008-ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கியது. அத்திட்டத்தின் படி அமெரிக்கா போர் விமானங்கள் மற்றும் படைத்தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்கள்,  கணினியால் இயங்கும் கண்ணி வெடிகள் போன்றவற்றை தைவானிற்கு வழங்கியது. உக்ரேன் போரில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து தைவானின் படையினரை மாற்றி அமைக்க அமெரிக்கா முயல்கின்றது. அத்துடன் தைவானிற்கு மேலதிக படைக்கலன்களை விற்று பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. சமச்சீரற்ற போர் முறைப் பயிற்ச்சியையும் அதற்குரிய படைக்கலன்களையும் தைவான் பெற வேண்டும் என அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 1979 தைவான் உறவுச் சட்டம் அமெரிக்கா தைவானிற்கு தற்காப்பு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்கின்றது. தாக்குதற் படைக்கலன்கள் இல்லாமல் சீனாவை தைவானியர்கள் எதிர் கொள்ள வேண்டும்.

தற்காப்பு படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டு உக்ரேனியர்கள் படும் பாட்டை தைவானியர்கள் அவதானித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இரசியாவின் இழப்புக்களை சீனர்களும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Sunday, 3 April 2022

உக்ரேனில் இரசியாவின் திணறல் சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

 


உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 

வளம் மிக்க சீனா

உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.

இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது

உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை  தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.

ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?

உன்னிப்பாக அவதானிக்கும் சீனா

உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு

அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.

வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.

Wednesday, 23 March 2022

உக்ரேன் போரும் இந்திய அமெரிக்க உறவும்


அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் இணைந்து நிற்கும் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் உக்ரேனை ஆக்கிரமித்த இரசியாவிற்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அதன் நான்காவது உறுப்பு நாடான இந்தியா நடுநிலை வகிக்கின்றது. இந்தியாவிற்கு பயணம் செய்த ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபியுமியோ கிஷிடா உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பு உலக ஒழுங்கின் அத்திவாரத்தை அதிர வைத்துள்ளமையால் அதற்கு எதிரான காத்திரமான கருத்து வெளிப்பாடு அவசியம் என்றார். இந்திய தலைமை அமைச்சருடன் இணையவெளியூடாக உரையாடிய ஒஸ்ரேலிய தலைமை அமைச்சர் ஸ்கொட் மொரிசனால் கூட இரசியா தொடர்பான இந்திய நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்க இந்திய உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது.

இந்திய அமெரிக்க உறவின் விரிசலின் ஆரம்பம் பாண்டூங்

1929-ச்ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி லாகூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தலைமை உரையாற்றிய ஜவகர்லால் நேரு இந்தியா ஒரு சமூகவுடமை (சோசலிச) நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். சுதந்திரமடைந்த இந்தியாவைச் நேரு ஒரு சமூகவுடமை நாடு போல ஆட்சி செய்தார். ஆனாலும் 1976-ம் ஆண்டு இந்தியாவின் அரசியலமைப்பிற்கான 46-வது திருத்தத்தில் முன்னுரையில்  மட்டும்தான் இந்தியா ஒரு மதசார்பற்ற சமூகவுடமைக் குடியரசு என்ற பதம் உட்புகுத்தப்பட்டது. இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா தலைமையிலான பொதுவுடமைவாத்ததிற்கு எதிரான அணியில் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. 1955 பாண்டூங் நகரில் நடந்த அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கும் மாநாட்டில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தில் பாக்கிஸ்த்தான் பங்கு பெறவில்லை. அமெரிக்க நிப்பந்தத்தையும் மீறி இந்தியா பங்கு பற்றியது. அதனால் அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு நெருக்க மடைந்தது. இந்திய அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது.

பாக்கிஸ்த்தானில் மையம் கொண்ட உறவுப் புயல்

கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்கா பல படைக்கலன்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருவது இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 1962-ம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா கேட்ட உதவியை அமெரிக்கா வழங்காமல் மட்டுப்படுத்தப் பட்ட உதவியை வழங்கியது. 1971ல் நடந்த பங்களாதேசப் போரில் இரசியா இந்தியாவிற்கு முழுமையான ஆதரவையும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு முழுமையான ஆதரவையும் வழங்கின. இந்தியா மீது தாக்குதல் தொடுக்க USS Enterprise என்ற விமானம் தாங்கிக் கப்பலுட்பட அமெரிக்காவின் ஏழாவது கடற்படை வங்காள விரிகுடா வந்த போது இந்தியவை அமெரிக்காவிடமிருந்து பாதுகாக்க இரசிய நீர்முழ்கிகள் அங்கு முன் கூட்டியே தயாராக இருந்தன. இந்தியா நோக்கி நகர்ந்த பிரித்தானிய கடற்படை அணியை இரசிய நீர்மூழ்கிகள் மத்திய தரைக் கடலில் வைத்தே தடுத்துவிட்டன. இதன் பின்னர் இரசிய இந்திய உறவு மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. இரசியாவின் உயர் தொழில்நுட்ப படைக்கலன்கள் முக்கியமாக அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதலில் இரசியா பெரும் பங்காற்றியது. இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பமும் இரசிய உதவியால் வளர்ந்தது. இரசிய மக்களிடயே இந்தியாமீதும் இந்திய மக்களிடையே இரசியாமீதும் பெரு விருப்பு உண்டு. 1971-ம் ஆண்டு இந்திய சோவியத் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது அமெரிக்க சீன பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு பதிலடியாகவே செய்யப்பட்டது.

காலம் கடந்து நிற்கும் இரசிய இந்திய உறவு

இந்தியாவிற்கு படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இரசியா வழங்குவதுடன் தேவை ஏற்படும் போதெல்லாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்காக நிபந்தனை இன்றி தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தை இந்தியா பாவிக்கின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது சீனாவை இரசியாவிடமிருந்து பாதுகாப்பதற்கும் அமெரிக்க சீன உறவை வளர்ப்பதற்கும் பாக்கிஸ்த்தான் முக்கியமானது எனக் கருதினார். இந்திய இரசிய படைத்துறை ஒத்துழைப்பின் மகுடமாக இருப்பது பிரம்மோஸ் ஏவுகணைகள் ஆகும். இரண்டும் இணைந்து உருவாக்க முயன்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி இடையில் நின்று போனது. 2000-ம் ஆண்டு பராக் ஒபாமா – ஹிலரி கிளிண்டன் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்பட்டது. இரு நாடுகளும் சீனாவின் வளர்ச்சியையிட்டு கொண்ட கரிசனைகள் அந்த உறவு மேம்பாட்டிற்கு வழி வகுத்தது.

அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம்

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய தொழில்நுட்பத்தின் பின்னடைவு உணரப்பட்டது. இரசிய தயாரிப்பு போர் விமானங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டின்மையும் உணரப்பட்டது. அங்கு நேரடியாக இந்தியாவிற்கு உதவ விரும்பாத அமெரிக்கா இஸ்ரேலுடாக இந்தியாவிற்கு உதவி வழங்கியது. GPS என்னும் இடம் அறி முறைமையை இந்தியா பயன்படுத்த இஸ்ரேலிய போர் நிபுணர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவி செய்தனர். இதன் பின்னர் இந்திய அமெரிக்க உறவு வளரத் தொடங்கியது. 2001-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியது. 2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் 2020இல் கையொப்பமிட்டன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும். விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து விமானங்களைப் பறக்க விடும் தொழில்நுட்பம், நீர்மூழ்கிகளை வேட்டையாடும் கப்பல்கள், உழங்கு வானூர்திகள் என பல படைக்கலன்களும் தொழில்நுட்பங்களும் 2000-ம் ஆண்டின் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. ஆண்டு தோறும் இந்தியாவிற்கு $6.2மில்லியன் பெறுமதியான படைக்கலன்களை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இது டொனால்ட் டிரம்பினுடைய ஆட்சியில் $3.4பில்லியன்களாக அதிகரித்தது.

அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டில் இல்லை.

இரசியாவின் எரிபொருள் இறக்குமதிக்கு ஒரு மாற்று வழி இருப்பது நல்லது. 2022 மார்ச் 16-ம் திகதி Indian Oil Corporation இரசியாவின் Rosenet Oil Coவிடமிருந்து மூன்று மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உலகச் சந்தை விலையிலும் 20% குறைவான விலைக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்தியாவி எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 4.5மில்லியன் பீப்பாய்களாகும். இந்திய ரூபாவிற்கும் இரசிய ரூபிளிற்கும் இடையிலான கொடுப்பனவு முறைமை உருவாக்கப்பட்டால் இந்தியா மேலும் அதிக எரிபொருளை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். உக்ரேனுக்கு எதிரான இரசியப் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தண்டனை விளைவிக்கக் கூடிய நடவடிக்கை எதையும் அமெரிக்கா எடுக்கவில்லை. எடுக்கவிருப்பதாக அறிவிக்கவும் இல்லை. உக்ரேன் போர் பற்றிய வரலாற்றுப் பதிவில் இந்தியாவைப் பற்றி என்ன எழுதப்படும் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது பற்ரி அமெரிக்கா ஏதும் கூறாமல் இருக்கின்றது.

இந்திய மக்கள் இரசியாவை விரும்பலாம்

வளர்முக நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மேற்கு நாடுகளில் ஏற்படும் பிரச்சனையையும் மேற்கு நாடுகள் வேறு விதமாக அணுகுகின்றன என வளர்முக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். மேலும் அவர்கள் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடையால் தாமது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நினைகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கு நாடுகள் நினைப்பது போல் புட்டீனைக் குற்றவாளியாக நினைக்கவில்லை. வளர்முக நாடுகள் கடன் அல்லது நிதி உதவி கேட்டால் பல நிபந்தனைகள் விதித்து காலத்தை இழுத்தடிக்கும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் உக்ரேனுக்கு $700மில்லியன் நிதியை வாரி வழங்கின. பன்னாட்டு நாணய நிதியம் வழமையான நியமங்களை ஒதுக்கி விட்டு $1.4 பில்லியன் அவசர நிதியை உக்ரேனுக்கு மேலும் வழங்கவுள்ளது. இப்படிப்பட்ட ஓரவஞ்சனையை வளர்முக நாடுகளில் வாழும் மக்களுக்கு மேற்கு நாடுகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இந்த நூற்றாண்டில் இந்தியா அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி வறுமைக் கோட்டின் கீழ் இருந்த பலரை நடுத்தர வர்க்கமாக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கப் பிரியர்களாகவும் அமெரிக்க ஆடம்பரத்தை விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்களில் அரசியல் சிந்தனை முற்போக்கானது. இந்துத்துவாவைப் பின்பற்றுபவர்கள் கிரிஸ்த்தவத்தின் மீது வெறுப்புடையவர்களாகவும் இருக்கின்றனர். SWIFT என்னும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவு தொடர்பாடல் முறைமையில் இருந்து இரசியாவை விலக்கிய படியால் இரசியா தனது உர ஏற்றுமதியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பல வளர்முக நாடுகளைப் பாதித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு நன்மையளிக்க இந்தியா இரசியாவிடமிருந்து உரம் வாங்குவது அவசியம். எரிபொருள் விலையேற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. அதைத் தவிர்க்க இந்தியா இரசியாவின் 20% கழிவு விலை எரிபொருள் வழங்கலைத் தட்டிக் கழிக்க முடியாது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று தேவை என்ற நிலை உள்ளது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு இல்லை என்றாலும் அதன் மிக வலிமை மிக்க படைத்துறை ஆசியப் பிராந்தியத்தின் படைத்துறை வலிமையை முடிவு செய்யும் ஒரு நாடாக வைத்திருக்கின்றது. அதனால் படைத்துறை நிபுணர்கள் இந்தியாவை ஒரு Balancing Power எனக் கருதுகின்றனர். இந்தியா இரசியாவுடனும் சீனாவுடனும் கூட்டுச் சேர்ந்தால் ஆசியப் பிராந்திய படைத்துறைச் சமநிலை அமெரிக்காவிற்கு எதிராக மாறும்.

இந்தியாவை ஒதுக்கி விட்டு அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் ஆதிக்க திட்டம் நிறைவேறாது. பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் சீனா வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க சீன ஒத்துழைப்பு இல்லாமல் போய் இரண்டும் பகை நாடுகளாகியுள்ளன. இந்தியாவும் பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க இந்திய உறவும் முறிந்து விடும். இந்தியா உக்ரேன் தொடர்பான நடு நிலையே இந்தியாவின் நீண்டகால நன்மைக்கு உகந்தது.

Thursday, 17 March 2022

உக்ரேன் போரில் சீனா இரசியாவிற்கு உதவுமா?

 


உக்ரேனில் நடக்கும் போரில் சீனாவிடம் இரசியா படைத்துறை உதவியைக் கோரியுள்ளதாக முதலில் அமெரிக்க நாளிதழான Washington Post அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன் சீனாவின் வெளியுறவுத் துறை ஆணையகத்தின் இயக்குனர் ஜாங் ஜீச்சியுடன் ரோம் நகரில் 2022-03-14-ம் திகதி உக்ரேன் போர் தொடர்பாகப் ஏழு மணித்தியாலம் பேச்சு வார்த்தை நடத்தினார். சீனாவின் South China Morning Post ஜேக் சலைவன் சீனா இரசியாவிற்கு படைத்துறை உதவிகளையோ மற்ற உதவிகளையோ செய்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரசியா தம்மிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என சீன அதிகாரிகள் சொல்லி வருகின்றனர்.

ஒன்றும் தெரியாத பாப்பாவாம் சீனா

சீனாவிற்கு முன் கூட்டியே உக்ரேன் மீது இரசியா படையெடுக்கும் என்பது தெரியும் என்றும் சீனாவின் வேண்டுதலின் பேரில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடியும் வரை இரசியா தனது படையெடுப்பை பின் போட்டிருந்தது என்றும் Washington Post செய்திகள் வெளியிட்டிருந்தது. இதை அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கடுமையாக மறுத்ததுடன் சீனாவிற்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போரைத் தவிர்க்க சீனா முயற்ச்சித்திருக்கும் என்றார். 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியா உக்ரேன் எல்லையில் தனது படையினரைக் குவிக்கத் தொடங்கியது உலகறிந்தது. இரசியா சீனாவிடம் உதவி கேட்கவில்லை என்றால் புட்டீனும் ஜின்பிங்கும் 2022 மார்ச் 15-ம் திகதி ஒரு அவசர இணையவெளி உரையாடலில் என்ன பேசியிருப்பார்கள்?

ரோம் நகரில் மரதன் பேச்சு வார்த்தை

2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரசியா படையெடுத்ததில் இருந்து தான் நடுநிலை வகிப்பதாக சீனா அறிவித்துக் கொண்டிருக்கின்றது. 2022 மார்ச் 14-ம் திகதி அமெரிக்க சீன அதிகாரிகளிடையே உக்ரேன் போர் தொடர்பாக ஏழு மணித்தியாலப் பேச்சு வார்த்தை ரோம் நகரில் நடை பெற்றது. இரசியா சீனாவிடம் உதவி கேட்டது உண்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ரோம் நகரப் பேச்சு வார்த்தை சீனா இரசியாவிற்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காகவே நடை பெற்றது என்பது உண்மை. உக்ரேனில் இருந்து வரும் செய்திகள் இரசியப் படையினர் உண்ண உணவின்றி உக்ரேனியர்களிடம் உணவு கேட்டதாக சொல்கின்றன. இரசியர்கள் இரண்டு நாட்களில் போரை முடிக்கும் திட்டத்துடன் மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் மட்டும் எடுத்துச் சென்றனர். இரசியாவிற்கு தயாரித்த உடன் உணவுகளை (Ready-to-eat meals) அவசரமாக அனுப்பும் படி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது உண்மையாக இருக்கலாம்.

எப்போதும் இல்லாத பதட்டம் இரசியாவில்

இரசியாவில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் 2022 பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடங்கிய பின்னர் வெளியேறியபடி உள்ளனர். அவர்களின் கருத்துப் படி இரசியாவில் எப்போதும் இல்லாத பதட்டம் நிலவுகின்றது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கண்காணிக்கப்படுகின்றனர். அரச ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். ஒரு தொலைக்காட்டி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் அச்சேவையின் ஆசிரியர் ஒருவர் போர் வேண்டாம் என்ற பதாகையைப் பிடித்தபடி நின்றார். இரசிய உளவுத்துறையைச் சேர்ந்த இரண்டு முன்னணி அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வருகின்றன. விளடிமீர் புட்டீன் குழம்பிப் போகாமல் இருக்கச் செய்ய சீன அதிபர் ஜீ ஜின்பிங்கினால் மட்டுமே முடியும்.

இரசியாவின் பிரச்சனைகள்

இரசியா பல உயர் தொழில்நுட்ப படைக்கலன்களை உருவாக்கினாலும் நிதித்தட்டுப்பாட்டால் அவற்றை போதிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில்லை. அமெரிக்காவிடம் எழுநூறுக்கு மேற்பட்ட F-35 போர் விமானங்கள் உள்ளன. அதற்க்கு ஈடான Su-35 போர் விமானங்கள் இரசியாவிடம் 103 மட்டுமே உள்ளன. இரசியாவின் Su-57 பதின்நான்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இரசியாவின் உலகிற் சிறந்த போர்த்தாங்கியான T-14 Armata போர்த்தாங்கிகள் 2300 உற்பத்தி செய்வதாக திட்டமிடப் பட்டிருந்தும் நூறிலும் குறைவான தாங்கிகளே தற்போது இரசியாவிடம் உள்ளன. இதனால் உக்ரேன் போர்க்களத்தில் இரசியா பல பற்றாக்குறைகளை எதிர் கொள்கின்றது:

1. போதிய அளவு புதிய வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை

2. விமானங்கள் இலக்கைத் தெரிவு செய்யும் Targeting Pods தட்டுப்பாடு

3. போதிய அளவு ஆளிலிப் போர் விமானங்கள் இல்லை

இவற்றை சீனாவிடமிருந்து இரசியா பெற முயற்ச்சிக்கலாம். சீனாவின் படைக்கல இறக்குமதியில் 80% இரசியாவில் இருந்தே பெறப்படுகின்றது. இரசியாவில் தங்கியிருக்கும் சீனா இரசியாவின் வேண்டு கோளை அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொடுக்க மறுக்குமா? சீனா ஆளிலிப் போர் விமானங்களையும் தயாரித்த உடன் உணவுகளையும் (Ready-to-eat meals) வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரத் தடையில் இருந்து இரசியாவை சீனா மீட்குமா?

இரசியாவிற்கு சீனாவிடமிருந்து தேவைப்படும் பேருதவி நேட்டோ நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இரசியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பை தணிப்பதே. சீனாவைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையுச்ம் வர்த்தகக் கொள்கையும் உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என்பது போன்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு சீனாவிற்கு மிகவும் பாதகமானதாகும். அதனால் சீனா இரசியாவிடமிருந்து உலகச் சந்தை விலையிலும் குறைவான விலைக்கு எரிபொருளை வாங்கும். அதுவே இரசியாவிற்கு காத்திரமான உதவியாக அமையும். அடுத்த படியாக இரசியாவிற்கு நிதி தேவைப்படும் போது சீனாவிடமிருந்து கடன் வாங்க வேண்டும். இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணியை சீனாவில் வைப்பிலிட வேண்டும். இரசியாவின் வெளிநாட்டு செலவாணியை சினாவில் வைப்பிலிடும் போது சீன நாணயத்தின் பெறுமதி குறையும். அதனால் சீனாவில் விலைவாசி அதிகரிக்கும். உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு வருவது சீனாவின் பெரும் விருப்பம் என்பது மறுக்கப்பட முடியாது. உக்ரேனில் புட்டீன வெற்றியடையாமல் போரை முடிக்க மாட்டார். ஒரு துரித வெற்றியை புட்டீன் பெறுவதற்கு சீனா உதவி செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு நல்லது. அது சீனாவிற்கும் நல்லது. 2022 பெப்ரவரியில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொள்ளச் சென்ற விளடிமீர் புட்டீன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையில் வரையறையற்ற பங்காண்மை நிலவும் என தெரிவித்தனர்.

சீனாமீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடை விதிக்குமா?

உக்ரேன் போரில் இரசியாவிற்கு நேட்டோ நாடுகள் கொடுக்கும் பிரச்சனையில் இரசியாவை மீட்க சீனா உதவி செய்தால் சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதாரத் தடையாக இருக்கலாம். ஏற்கனவே இரசியாமீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அமெரிக்கப் பொருளாதாரம் உட்பட உலகப் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரப் போர் என்பது அடி வாங்கினவனிலும் பார்க்க அடித்தவனுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளன.

உக்ரேன் போர் தொடங்க முன்னரே உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் உலக ஒழுங்கைப் பொறுத்தவரை China will be in the driving seat என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். சீனாவின் காட்டில் மழை என்பது உண்மை.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...