Followers

Tuesday 16 January 2024

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

 


இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங் சென்றபோது இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயன்றன. இரண்டு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்றும் பெருந்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா இரண்டு நாடுகளையும் வல்லரசுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அப்போது சீனா தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகப்புச் சபையில் நிரந்தர உரிமை பெற்று வல்லரசாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்க்கும் ஒரே வல்லரசு நாடாக சீனா இருக்கின்றது.

இந்தியா பிராந்திய வல்லரசல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நாடு

பிராந்திய வல்லரசு என்ற பதத்தை தற்போது பல்கலைக்கழகங்களும் அரசறிவியலாளர்களும் பாவிப்பதை தவிர்த்து நடுவண் வல்லரசு என்ற பதத்தைப் பாவிக்கின்றனர். ஆனால் எம்மில் சிலர் இந்தியாவை வல்லரசு என அடிக்கடி சொல்கின்றனர். இந்தியா ஒரு படைவலிமை மிக்க நாடுதான். ஆனால் உலகிலேயே அணுக்குண்டு வைத்திருக்கும் இரண்டு போட்டி நாடுகளை அயல் நாடுகளாகக் கொண்டிருப்பதுடன் அவற்றுடன் தீர்க்க முடியாத எல்லைத் தகராற்றைக் கொண்ட நாடு இந்தியா. அதனால் அதன் பாதுகாப்பு மிகவும் வலிமை குறைந்ததாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியாவின் அரசியலமைப்பின் படி இந்தியாவிற்கு சொந்தமானதாக உள்ள பிரதேசங்களை சீனாவும் பாக்கிஸ்த்தானும் கைப்பற்றி வைத்திருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்தியாவிற்கு சொந்தமான 38,000சதுர கிலோ மீட்டரை சீனா கைப்பற்றியிருப்பதாக 2020இல் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிக்கப் பட்ட நாடாகிய இந்தியா ஒரு “பிராந்திய வல்லரசு” அல்ல. மேலும் இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவால ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கின்றது.

ஓங்கி அடித்த பெரியண்ணனான சீனா

1954-ம் ஆண்டு நேரு மாவோ சே துங் சந்திப்பின் பின்னர் சீனாவை இந்தியாவின் பெரியண்ணன் என விபரித்தார். ஆனால் 1962இல் சீனா தீபெத்தைக் கைப்பற்றியதுடன் இந்தியா மீதும் படையெடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் அரச பதிவுகள் வங்கிகளில் இருந்த பணங்களை எல்லாம் தீயிட்டுக் கொழுத்தி விட்டு இந்தியர்கள் தலை தெறிக்க ஓடினர். அதனால் இன்றும் அசாமில் யார் மண்ணின் மைந்தர்கள் என்ற பிரச்சனை இருக்கின்றது.

இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க முயலும் அமெரிக்கா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என சீனா சொல்கின்றது. இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது என சீனா கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவை மட்டுமல்ல இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 என்னும் பெயரில் இரண்டு நாடுகளினதும் வெறியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அடிக்கடி கூடி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்துவருகின்றனர். அதுமட்டுமல்ல அமெரிக்கா இந்தியாடுடனான உறவை தனது கேந்திரோபாய பங்காளியாக தரமுயர்த்தி உள்ளது.

தைவானை இந்தியா காப்பாற்றுமா?

தைவான் மீது சீனா ஓர் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்தால் சீனாவை திசை திருப்ப சீன எல்லையில் இந்தியப் படைகள் தம் நிலங்களை மீட்பது என்னும் பெயரில் ஒரு போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இந்த நம்பிக்கையில் தான் இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முழுக் கஷ்மீரையும் கைப்பற்றுவோம் என சூளுரைப்பார். ஆனால் கஷ்மீர் போர் என வரும் போது இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் மோத வேண்டி வரும்.

இந்திய சீன ஒத்துழைப்பு

இந்தியாவும் சீனாவும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஆகிய இரு முக்கிய அமைப்புக்களில் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவற்றில் இரசியாவும் இருக்கின்றது. இந்தியா அமெரிக்கா பக்கம சாயாமல் இருக்கும் படை சீனா நடந்து கொள்ள வேண்டும் என இரசியா எதிர்பார்க்கின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் படைத்துறை மேம்பாட்டையும் பார்க்கும் சீனர்கள் இந்தியா தக்கு சவால் விடக்கூடிய வல்லரசாக வளரும் என நம்புகின்றனர். அதனால் இந்தியா வளரக்கூடாது என அவர்கள் காய்களை நகர்த்தலாம். சீனாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணைக்கு அண்மையாக இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளில் இந்தியாவின் படைவலிமை அதிகரிப்பதும் சீனாவை கரிசனை கொள்ள வைக்கின்றது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியா தனது பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

பங்களாதேசம், இலங்கை, மால தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலானது. அத்துடன் இந்தியாவில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியிலும் பார்க்க அதிக அளவு இறக்குமதியை சீனாவில் இருந்து இந்தியா செய்கின்றது. இதை சமநிலைப்படுத்தக் கூடிய வகையில் சீனா தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியவின் நீண்ட நாள் கோரிக்கையை சீனா உதாசீனம் செய்கின்றது.

சீனா தன்னை சமமாக நடத்த வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கையில் சீனா தன்னை ஆசியாவின் தலைமை நாடாகப் பார்க்கின்றது. இந்த முரண்பாடு இல்லாமல் போக வாய்ப்பில்லை.


No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...