Followers

Tuesday 29 March 2022

உக்ரேன் போரால் உலகம் படும்பாடு

 


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது அரிது. கொரியப் போர், வியட்னாம் போர், ஈராக் போர் போன்றவை உலகின் மறுபகுதிகளில் செய்திகளாக மட்டுமே அடிபட்டன. ஆனால் உக்ரேன் மீது இரசியா தொடுத்த போருக்கு எதிராக நேட்டோ நாடுகள் தொடர்ச்சியாக எடுத்து வரும் பொருளாதார தடைகள் உலகெங்கும் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொவிட்-19 பெரும் தொற்றால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உக்ரேன் போரும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகை ஆட்டிப்படைக்கின்றது. எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் தவிக்கின்றன. சிதறிப்போயிருந்த உலக சரக்கு விநியோகச் சங்கிலி மேலும் சிதைவடைகின்றது. எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க டொலரில் வைத்திருந்த வைப்பீடுகளின் பெறுமதி தேயுமா என கரிசனை கொண்டுள்ளன.

மானம் இழக்கும் இரசியா

போரில் வெற்றி பெறுவதற்கு வான்படையின் வலிமை அவசியம் என்று புவிசார் அரசியல் கோட்டாளர்களின் ஒருவரான அலெக்சாண்டர் பி டி செவேர்ஸ்கி வான் வலிமையே போரை வெல்லும் என்றார். உக்ரேனிலும் பார்க்க பதினைந்து மடங்கு பெரிய இரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க, ஒன்பது ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான படையினரை ஒரு மாதத்தில் இரசியா உக்ரேனில் இழந்து விட்டது. சிறந்த ஒருங்கிணைப்பின்மை, வழங்கல் குறைபாடு, படையினரிடம் மன உறுதியின்மை, உகந்த உளவுத் தகவல் பெறமுடியாமை. எதிரியின் வலுவை மதிப்பிடத் தவறியமை என பல குற்றச் சாட்டுகள் இரசியப்படையினர் மீது சுமத்தப்படுகின்றது. உக்ரேன் போரில் இரசியா உலக அரங்கில் மானம் கெட்டு நிற்கின்றது. தன் எதிரிகளிடையே ஓர் உறுதியான ஒற்றுமையையும் அது உருவாக்கியுள்ளது.

கையாலாகாத நேட்டோவும் செல்லாக் காசான ஐநாவும்

உக்ரேனில் நடக்கும் போரின் நடுப்புள்ளி நேட்டோவாகும். உக்ரேன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த போது அது சுவீடன் போல் ஒரு நடுநிலை நாடாக இருப்பதே உகந்தது அல்லாவிடில் பேரழிவு ஏற்படும் என உக்ரேனுக்கு உண்மை நிலையை உணர வைக்காமல் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கான கதவு திறந்திருக்கின்றது என அதை ஊக்குவித்தது நேட்டோ. இப்போது உக்ரேனில் பெரும் சொத்தழிவும் உயிரிழப்புக்களும் நடக்கும் போது அதைத் தடுக்க முடியாமல் நிற்கின்றது நேட்டோ. ஐநா பாதுகாப்புச் சபையில் புட்டீனின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முடியவில்லை. பொதுச்சபையில் உக்ரேன் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் வெறும் காகிதம் மட்டுமே.

தூங்கிய ஜெர்மனியை இடறி எழுப்பிய புட்டீன்

தனது பொருளாதார வலிமையையும் புவிசார் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் குறைந்த அளவு நிதியை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிக் கொண்டு இரசியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து இரசியாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்து கொண்டு சிவனே என இருந்த ஜெர்மனி உக்ரேன் போரால் தனது பாதுகாப்பு செலவை அதிகரித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35A வாங்கவுள்ளது. மேலும் தன்னிடமுள்ள Eurofighter போர்விமானங்களை இலத்திரனியல் போர் புரியக் கூடிய வகையில் மேம்படுத்தவுள்ளது. இரசிய ஆக்கிரமிப்பிற்கு ஒரே பதில் நேட்டோ ஒற்றுமையும் படைவலிமையும் என்றது ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை. இரசியாவிற்கு அண்மையாக ஒரு வலிமை மிக்க அரசாக ஜெர்மனி உருவாகின்றது.

பாடம் கற்ற பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேண வேண்டும் இரசியாவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனப் போதித்து வந்தது. புட்டீனை 2022 பெப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்த பின்னர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உக்ரேன் நெருக்கடியை தான் மோசமாக்க மாட்டேன் என புட்டீன் தனக்கு உறுதிமொழி வழங்கியதென்றார். புட்டீன் ஒரு புரியாத புதிர் என அவர் பாடம் கற்றிருப்பார் என நம்பலாம். பிரான்ஸிடம் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி படைக்கலன்கள் உதவி முக்கியமாக போர்த்தாங்கிள் வழங்கும் படி கேட்ட போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுத்துவிட்டார். அவர் இரசியாவிற்கு அஞ்சுகின்றார் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியதுடன் பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்ஸனின் துணிச்சலைப் பாராட்டினார்.

ஒற்றைக் கம்பியில் நடக்கும் இந்தியா

காலத்தால் மாற்றமடையாத எச்சூழலிலும் நட்பும் உதவியும் செய்த இரசியா இந்தியாவின் சிறந்த நட்பு நாடு. படைக்கலன் கொள்வனவு, படைத்துறைத் தொழில்நுட்ப வழங்கல், எரிபொருள் வழங்கல், தேவையான போதெல்லாம் நிபந்தனையின்றி ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சார்பாக தன் இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவிப்பது போன்றவற்றை இரசியா செய்து வந்தது. அந்த இரசியாவைப் பகைக்க கூடாது. பகைத்தால் இரசியா, பாக்கிஸ்த்தான், சீனா ஆகியவற்றின் கூட்டு இந்தியாவிற்கு மோசமான ஆப்பு என்பதையும் இந்தியா அறியும். சீனாவை சமாளிக்கவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் முன்னேற்றமான நிலையை அடையவும், புதிய தொழில்நுட்பங்களைப் பெறவும் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசு இந்தியாவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்த்தி தெரிவித்துள்ளனர். இரசியா இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளது..

அணுக்குண்டைக் கொண்டுவா என்ற ஜப்பான்

அணுக்குண்டால் தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடாகிய ஜப்பான் உக்ரேனை புட்டீன் ஆக்கிரமித்தவுடன் தனது நாட்டில் அமெரிக்காவின் அணுக்குண்டுகளைக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றார் ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் சின்சோ அபே. இது சீனாவை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. ஜப்பானும் பிரித்தானியாவைப் போல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிழல் போல் தொடர்கின்ற ஒரு நாடு. இரசியாவை போரில் தோற்கடித்த ஒரே ஒரு ஆசிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் எல்லை முரண்பாட்டைக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜப்பான் தனது தெருவிளக்குகள், விளப்பரங்கள் ஆகியவற்றின் ஒளி அளவைக் குறைத்துள்ளது.

சீனாவின் காட்டில் மழை

இதுவரை காலமும் இரசியா தன்னை Batmanஆகவும் சீனாவை Robinஆகவும் பார்த்து வந்தது. உக்ரேனுக்குள் அனுப்பிய தனது படையினருக்கு போதிய உணவை வழங்க முடியாமல் சிரமப்படும் இரசியா சீனாவிடம் தயாரித்த உணவுகளை கொடுக்கும் படியும் ஆளிலிவிமானங்களையும் வழிகாட்டல் ஏவுகணைகளையும் அவசரமாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டது. இரசியாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை சீனா வாங்கப் போகின்றது. இரசிய நாணயம் வீழ்ச்சியடைவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிக்கும் சீனா இனி இரசியாவில் தவித்த முயல் அடிப்பது போல் பல சொத்துக்களை வாங்கக் காத்திருக்கின்றது. அமெரிக்க எதிர்பாளர்களின் வண்டியில் ஓட்டுனர் இருக்கையில் இப்போது சீனா.

கல்லாக் கட்டும் அமெரிக்கா

எங்கு நாடுகளிடையே போர் மற்றும் முறுகல்கள் நடக்கும் அங்கு தனது படைக்கலன்களை விற்கவும் படைத்தளங்களை அலைகின்ற அமெரிக்காவிற்கு உக்ரேன் போர் சிறந்த வாய்ப்பாகும். தன்னிடமுள்ள காலம் கடந்த படைக்கலன்களை உக்ரேனுக்கு உதவியாக பாதி பாதி என வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலன்களை வாங்குகின்றன. இரசியத் தாங்கிகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஏவுகணைகள் சிறப்பாக செயற்படுவது அமெரிக்காவிற்கு சிறந்த விளம்பரம்.

செல்வாக்கிழந்த அமெரிக்க அதிபர் புட்டீன்

அமெரிக்காவில் எரிபொருள் விலையேற்றமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பும் அமெரிக்கர் மத்தியில் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. 2022இன் இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் எல்லா மக்களவை தொகுதிகளிலும் மூன்றில் ஒரு மூதவை தொகுதிகளிலும் அவரது மக்களாட்சிக் கட்சி பின்னடைவைச் சந்திக்கலாம். அதனால் குடியரசுக் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலிமை பெற்றால் நினைத்தபடி ஆட்சி நடத்த முடியாத ஜோ பைடன் LAME DUCK President ஆவார்.

இலங்கையின் நிலையை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எனச் சொல்வதிலும் பார்க்க மாடேறி மிதித் தவன் மேல் பனை மரம் விழுந்தது போல் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை மீண்டும் எரியலாம்.


Sunday 27 March 2022

வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கையில் முதலிடலாமா?

 


நெசவு செய்யும் திறமைமிக்க தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் ஒரு நெசவுத்தறி போட கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் முன்வரலாம். இன்னொரு நெசவுத் தொழிலாளி தனது வருமானத்தில் தினமும் மது அருந்தி கைநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவரால் போதிய அளவு நெய்ய முடியாத நிலையில் அவரது வருமானம் குறைந்து உணவிற்கு திண்டாடும் போது அவர் தனக்கு கடன் தரச் சொல்லி கேட்டால் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இலங்கையும் இனக்கொலைப் போருக்கு அளவிற்கு மிஞ்சி கடன் பட்டு பின் பட்ட கடனுக்கு வட்டி கொடுக்க புதிய கடன் பட்டு விட்டு மேலும் கடன் பட முடியாத நிலையில் அங்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்று சொன்னால் இனக்கொலைக்கு உள்ளான இனத்தைச் சேர்ந்தவர்களை கேட்க முடியுமா? சொல்லுவார் சொல்ல கேட்ப்பார்க்கு மதியென்ன?

யோக்கியன் வாறான் செம்பை எடுத்து வை

எனக்கு தெரிந்த ஒருவர் இலங்கை நாணயம் பெறுமதி இழந்துள்ளமையால் அங்கு இப்போது முதலீடு செய்வது உகந்தது என எண்ணி முதலீடு செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தான் பாலமாக இருக்கத் தயார் என அறிவித்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். பாலமே இந்தளவு கேவலமானதாக இருக்கையில் அதை நம்பி பயணித்தால் என்ன நடக்குமோ என அவர் அஞ்சுகின்றார். 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டு அதற்கும் அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றாராம் சுமந்திரன். 2009 நடந்த போரின் போது மருத்துவமனைகளும் சட்ட பூர்வமான குண்டு வீச்சு இலக்கு எனச் சொல்லிய கோத்தபாய ராஜபக்ச கூட்டிய கூட்டத்தில் தான் சுமந்திரன் இந்தக் கருத்தை முன்வைத்தார். பாலம் மட்டும் கேவலமானதல்ல பாலம் சொல்லும் படகான 13 ஓட்டை மிகுந்தது அதை நம்பி யாரையா இறங்குவார்? புலிகள் இனச்சுத்தீகரிப்பு செய்தனர் ஆனால் சிங்களவர் இனக்கொலை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற யோக்கியரின் கூற்றை நம்பி யார் இலங்கையில் முதலீடு செய்வார்.

ஒரு நாளில் ஒரு இலட்சம் டொலர் இழப்பீடா?

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு ஒருவர் ஒரு மில்லியன் டொலரை முதலீடு செய்யும் போது முதலில் டொலரை ரூபாவாக மாற்றும் போது ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி மேலும் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தால் முதலிட்டவருக்கு ஒரு இலட்சம் டொலருக்கு மேல் இழப்பீடு ஏற்படும். தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இனி வீழ்ச்சியடைய இடமில்லை. இலங்கையில் செய்த முதலீட்டை இலகுவில் மீண்டும் வெளிநாட்டுக்கு கொண்டு வர முடியாது. இலங்கைப் பொருளாதாரம் இனி மீழவும் எழும் (Rebound) என யாரும் சொல்லாத நிலையில் நிதித்துறையில் அறிவில்லாத சுமந்திரன் எந்த ஒரு நிதி ஆலோசனையும் பெறாமல் எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்யும் முதலீட்டிற்கான பாலமாக தன்னை முன்னிறுத்த முடியும்?

தரம் தாழ்த்திய நிறுவனங்கள்

இலங்கையில் பொருளாதார சூழலை அடிப்படையாக வைத்து. S&P, Fitch, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கைய தரம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் இலங்கையின் தரத்தை மீளவும் உயர்த்த முன்னர் சுமந்திரன் ஏன் அங்கு முதலீடு செய்வது பற்றி சிந்திக்கின்றார்? பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுமந்திரனைச் சந்திக்கும் போது இலங்கைக்கு ஜீஎஸ்பி+ வரிச்சலுகையை நிறுத்தும் படி மேற்கு நாட்டு அரசுகளிடம் பரப்புரை செய்வது பற்றி பேசிய போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தான் செய்ய மாட்டேன் எனச் சொல்லிய சுமந்திரன், மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க போராடிய சுமந்திரன் இப்போது இலங்கைக்கான முதலீட்டு தரகராக செயற்படுகின்றாரா?

அரசியல் உறுதிப்பாடில்லாத இலங்கை

ஒரு நாட்டில் முதலீடு செய்வதாயின் அங்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இலங்கையில் பொருட்கள் விலை ஏற ஏற மக்கள் அரசுக்கு எதிராக போராடுவது அதிகரிக்கும். அத்துடன் 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அதற்கு எதிராக பௌத்த அமைப்புக்களும் பிக்குகளும் ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர். வலிமையற்று தலையெடுக்க முடியாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இனவாத தீயை மூட்டுவார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது ஆட்சியாளர்களை சுட்டுக் கொல்லவும் சிங்களவர்கள் தயங்க மாட்டார்கள். அதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இத்தகைய இடர்(Risk) மிகு சூழலில் எந்த முட்டாள் இலங்கையில் முதலீடு செய்ய பாலமாக இருப்பான்?

பணச்சலவைக்கு வழியா?

2009 ஆண்டில் நடந்த போரின் பின்னரும் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கையில் பெருந்தொகை பணத்தைக் கொள்ளை அடித்து வைத்திருந்தவர்கள் அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு வழியாக அது இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அதன் படி வெளிநாடு வாழும் இலங்கையர் ஒரு மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கி ஒன்றில் இலங்கையில் கொள்ளை அடித்தவர்களின் பெயரில் வைப்பிலிட்டால் அதற்கு உரிய இலங்கை ரூபாக்களை கொள்ளையர்கள் அந்த வெளிநாட்டுப் பேர்வழியின் பெயரில் இலங்கையில் வைப்பிலிடுவார்கள். ராஜபக்சேக்களின் வெளிநாட்டு சொத்து பற்றி இந்த இணைப்பில் காணலாம்:

https://www.theguardian.com/world/2015/mar/20/sri-lanka-says-mahinda-rajapaksa-officials-hid-more-than-2bn-in-dubai

விளடிமீர் புட்டீனினதும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக பொருளாதார தடை என்னும் பெயரில் அவர்களின் சொத்துக்களை முடக்குவது போல் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இப்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் அவர்களது பணத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இப்போது இன்னொரு முதலீட்டு அழைப்பு விடப்படுகின்றதா? அதற்கான தரகர் வேலையை பார்ப்பவர் யார்?

இலங்கை நடுவண் வங்கியும் மூலதனக் கணக்கும்

இலங்கை நடுவண் வங்கி இலங்கையில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையில் முதலிடுபவர்கள் தேவை ஏற்படும் போது அந்த முதலீட்டை வெளியே எடுத்து வர முடியாது. திரவத்தன்மை (liquidity) குறைந்த முதலீட்டை சுமந்திரனின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்ட்டு யாரும் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் அவர் முதலீட்டுக்கு?

இனக்கலவரம் என்று அவ்வப்போது தோற்றுவித்து தமிழர்கள் சொத்தை கொள்ளை அடிப்பதையும் அழிப்பதையும் சிங்களவர்கள் தங்கள் பொழுது போக்காக கொண்டுள்ளனர். தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க அறிவுகெட்ட சுமந்திரனால் முடியுமா? இலங்கை அரசு தமிழர்களின் முதலீட்டை அரசுடமையாக்க மாட்டாது என சிங்களத்தின் வால் பிடியான சுமந்திரனால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 

பழைய சத்தியஜித் ராயின் திரைப்படமொன்றில் ஒரு செல்வந்த வயோதிபர் கடும் நோய் வாய்ப்பட்டுவிட்டார். மருத்துவர் இனி ஆள் தப்பாது என்று சொல்லி விடுவார். அந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சோதிடரை அணுகுவார்கள் அவர் பார்த்துவிட்டு இவருக்கு ஆயுள் முடிந்து விட்டது ஆனால் ஒரு வழி இருக்கிறது என்றார். குடும்பத்தவர்கள் ஆவலுடன் என்ன எனக் கேட்கும் போது சோதிடர் சாதகத்தில் நல்ல மாங்கல்ய வலிமையுள்ள ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணின் பலனால் இவர் தப்புவார் என்பார்கள். அது போலத்தான் எந்த நேரமும் மண்டையைப் போடலாம் என்ற நிலையில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுமந்திரன் சொல்லும் அறிவுரை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் வாழ வழியற்று இருக்கும் ஏழைப் பெண்களல்ல.

Wednesday 23 March 2022

உக்ரேன் போரும் இந்திய அமெரிக்க உறவும்


அமெரிக்காவுடன் குவாட் அமைப்பில் இணைந்து நிற்கும் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் உக்ரேனை ஆக்கிரமித்த இரசியாவிற்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அதன் நான்காவது உறுப்பு நாடான இந்தியா நடுநிலை வகிக்கின்றது. இந்தியாவிற்கு பயணம் செய்த ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபியுமியோ கிஷிடா உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பு உலக ஒழுங்கின் அத்திவாரத்தை அதிர வைத்துள்ளமையால் அதற்கு எதிரான காத்திரமான கருத்து வெளிப்பாடு அவசியம் என்றார். இந்திய தலைமை அமைச்சருடன் இணையவெளியூடாக உரையாடிய ஒஸ்ரேலிய தலைமை அமைச்சர் ஸ்கொட் மொரிசனால் கூட இரசியா தொடர்பான இந்திய நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்க இந்திய உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது.

இந்திய அமெரிக்க உறவின் விரிசலின் ஆரம்பம் பாண்டூங்

1929-ச்ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி லாகூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தலைமை உரையாற்றிய ஜவகர்லால் நேரு இந்தியா ஒரு சமூகவுடமை (சோசலிச) நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். சுதந்திரமடைந்த இந்தியாவைச் நேரு ஒரு சமூகவுடமை நாடு போல ஆட்சி செய்தார். ஆனாலும் 1976-ம் ஆண்டு இந்தியாவின் அரசியலமைப்பிற்கான 46-வது திருத்தத்தில் முன்னுரையில்  மட்டும்தான் இந்தியா ஒரு மதசார்பற்ற சமூகவுடமைக் குடியரசு என்ற பதம் உட்புகுத்தப்பட்டது. இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா தலைமையிலான பொதுவுடமைவாத்ததிற்கு எதிரான அணியில் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. 1955 பாண்டூங் நகரில் நடந்த அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கும் மாநாட்டில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தில் பாக்கிஸ்த்தான் பங்கு பெறவில்லை. அமெரிக்க நிப்பந்தத்தையும் மீறி இந்தியா பங்கு பற்றியது. அதனால் அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு நெருக்க மடைந்தது. இந்திய அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது.

பாக்கிஸ்த்தானில் மையம் கொண்ட உறவுப் புயல்

கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்கா பல படைக்கலன்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருவது இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 1962-ம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா கேட்ட உதவியை அமெரிக்கா வழங்காமல் மட்டுப்படுத்தப் பட்ட உதவியை வழங்கியது. 1971ல் நடந்த பங்களாதேசப் போரில் இரசியா இந்தியாவிற்கு முழுமையான ஆதரவையும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு முழுமையான ஆதரவையும் வழங்கின. இந்தியா மீது தாக்குதல் தொடுக்க USS Enterprise என்ற விமானம் தாங்கிக் கப்பலுட்பட அமெரிக்காவின் ஏழாவது கடற்படை வங்காள விரிகுடா வந்த போது இந்தியவை அமெரிக்காவிடமிருந்து பாதுகாக்க இரசிய நீர்முழ்கிகள் அங்கு முன் கூட்டியே தயாராக இருந்தன. இந்தியா நோக்கி நகர்ந்த பிரித்தானிய கடற்படை அணியை இரசிய நீர்மூழ்கிகள் மத்திய தரைக் கடலில் வைத்தே தடுத்துவிட்டன. இதன் பின்னர் இரசிய இந்திய உறவு மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. இரசியாவின் உயர் தொழில்நுட்ப படைக்கலன்கள் முக்கியமாக அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதலில் இரசியா பெரும் பங்காற்றியது. இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பமும் இரசிய உதவியால் வளர்ந்தது. இரசிய மக்களிடயே இந்தியாமீதும் இந்திய மக்களிடையே இரசியாமீதும் பெரு விருப்பு உண்டு. 1971-ம் ஆண்டு இந்திய சோவியத் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது அமெரிக்க சீன பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு பதிலடியாகவே செய்யப்பட்டது.

காலம் கடந்து நிற்கும் இரசிய இந்திய உறவு

இந்தியாவிற்கு படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இரசியா வழங்குவதுடன் தேவை ஏற்படும் போதெல்லாம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்காக நிபந்தனை இன்றி தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தை இந்தியா பாவிக்கின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது சீனாவை இரசியாவிடமிருந்து பாதுகாப்பதற்கும் அமெரிக்க சீன உறவை வளர்ப்பதற்கும் பாக்கிஸ்த்தான் முக்கியமானது எனக் கருதினார். இந்திய இரசிய படைத்துறை ஒத்துழைப்பின் மகுடமாக இருப்பது பிரம்மோஸ் ஏவுகணைகள் ஆகும். இரண்டும் இணைந்து உருவாக்க முயன்ற ஐந்தாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி இடையில் நின்று போனது. 2000-ம் ஆண்டு பராக் ஒபாமா – ஹிலரி கிளிண்டன் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்பட்டது. இரு நாடுகளும் சீனாவின் வளர்ச்சியையிட்டு கொண்ட கரிசனைகள் அந்த உறவு மேம்பாட்டிற்கு வழி வகுத்தது.

அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம்

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய தொழில்நுட்பத்தின் பின்னடைவு உணரப்பட்டது. இரசிய தயாரிப்பு போர் விமானங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டின்மையும் உணரப்பட்டது. அங்கு நேரடியாக இந்தியாவிற்கு உதவ விரும்பாத அமெரிக்கா இஸ்ரேலுடாக இந்தியாவிற்கு உதவி வழங்கியது. GPS என்னும் இடம் அறி முறைமையை இந்தியா பயன்படுத்த இஸ்ரேலிய போர் நிபுணர்கள் நேரடியாக களத்தில் நின்று உதவி செய்தனர். இதன் பின்னர் இந்திய அமெரிக்க உறவு வளரத் தொடங்கியது. 2001-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியது. 2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் 2020இல் கையொப்பமிட்டன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும். விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து விமானங்களைப் பறக்க விடும் தொழில்நுட்பம், நீர்மூழ்கிகளை வேட்டையாடும் கப்பல்கள், உழங்கு வானூர்திகள் என பல படைக்கலன்களும் தொழில்நுட்பங்களும் 2000-ம் ஆண்டின் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. ஆண்டு தோறும் இந்தியாவிற்கு $6.2மில்லியன் பெறுமதியான படைக்கலன்களை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இது டொனால்ட் டிரம்பினுடைய ஆட்சியில் $3.4பில்லியன்களாக அதிகரித்தது.

அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டில் இல்லை.

இரசியாவின் எரிபொருள் இறக்குமதிக்கு ஒரு மாற்று வழி இருப்பது நல்லது. 2022 மார்ச் 16-ம் திகதி Indian Oil Corporation இரசியாவின் Rosenet Oil Coவிடமிருந்து மூன்று மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உலகச் சந்தை விலையிலும் 20% குறைவான விலைக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்தியாவி எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 4.5மில்லியன் பீப்பாய்களாகும். இந்திய ரூபாவிற்கும் இரசிய ரூபிளிற்கும் இடையிலான கொடுப்பனவு முறைமை உருவாக்கப்பட்டால் இந்தியா மேலும் அதிக எரிபொருளை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். உக்ரேனுக்கு எதிரான இரசியப் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தண்டனை விளைவிக்கக் கூடிய நடவடிக்கை எதையும் அமெரிக்கா எடுக்கவில்லை. எடுக்கவிருப்பதாக அறிவிக்கவும் இல்லை. உக்ரேன் போர் பற்றிய வரலாற்றுப் பதிவில் இந்தியாவைப் பற்றி என்ன எழுதப்படும் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது பற்ரி அமெரிக்கா ஏதும் கூறாமல் இருக்கின்றது.

இந்திய மக்கள் இரசியாவை விரும்பலாம்

வளர்முக நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மேற்கு நாடுகளில் ஏற்படும் பிரச்சனையையும் மேற்கு நாடுகள் வேறு விதமாக அணுகுகின்றன என வளர்முக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். மேலும் அவர்கள் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடையால் தாமது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நினைகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மேற்கு நாடுகள் நினைப்பது போல் புட்டீனைக் குற்றவாளியாக நினைக்கவில்லை. வளர்முக நாடுகள் கடன் அல்லது நிதி உதவி கேட்டால் பல நிபந்தனைகள் விதித்து காலத்தை இழுத்தடிக்கும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் உக்ரேனுக்கு $700மில்லியன் நிதியை வாரி வழங்கின. பன்னாட்டு நாணய நிதியம் வழமையான நியமங்களை ஒதுக்கி விட்டு $1.4 பில்லியன் அவசர நிதியை உக்ரேனுக்கு மேலும் வழங்கவுள்ளது. இப்படிப்பட்ட ஓரவஞ்சனையை வளர்முக நாடுகளில் வாழும் மக்களுக்கு மேற்கு நாடுகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இந்த நூற்றாண்டில் இந்தியா அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி வறுமைக் கோட்டின் கீழ் இருந்த பலரை நடுத்தர வர்க்கமாக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கப் பிரியர்களாகவும் அமெரிக்க ஆடம்பரத்தை விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்களில் அரசியல் சிந்தனை முற்போக்கானது. இந்துத்துவாவைப் பின்பற்றுபவர்கள் கிரிஸ்த்தவத்தின் மீது வெறுப்புடையவர்களாகவும் இருக்கின்றனர். SWIFT என்னும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கொடுப்பனவு தொடர்பாடல் முறைமையில் இருந்து இரசியாவை விலக்கிய படியால் இரசியா தனது உர ஏற்றுமதியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பல வளர்முக நாடுகளைப் பாதித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு நன்மையளிக்க இந்தியா இரசியாவிடமிருந்து உரம் வாங்குவது அவசியம். எரிபொருள் விலையேற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. அதைத் தவிர்க்க இந்தியா இரசியாவின் 20% கழிவு விலை எரிபொருள் வழங்கலைத் தட்டிக் கழிக்க முடியாது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று தேவை என்ற நிலை உள்ளது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு இல்லை என்றாலும் அதன் மிக வலிமை மிக்க படைத்துறை ஆசியப் பிராந்தியத்தின் படைத்துறை வலிமையை முடிவு செய்யும் ஒரு நாடாக வைத்திருக்கின்றது. அதனால் படைத்துறை நிபுணர்கள் இந்தியாவை ஒரு Balancing Power எனக் கருதுகின்றனர். இந்தியா இரசியாவுடனும் சீனாவுடனும் கூட்டுச் சேர்ந்தால் ஆசியப் பிராந்திய படைத்துறைச் சமநிலை அமெரிக்காவிற்கு எதிராக மாறும்.

இந்தியாவை ஒதுக்கி விட்டு அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் ஆதிக்க திட்டம் நிறைவேறாது. பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் சீனா வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க சீன ஒத்துழைப்பு இல்லாமல் போய் இரண்டும் பகை நாடுகளாகியுள்ளன. இந்தியாவும் பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் வளர்ச்சியடைந்த பின்னர் அமெரிக்க இந்திய உறவும் முறிந்து விடும். இந்தியா உக்ரேன் தொடர்பான நடு நிலையே இந்தியாவின் நீண்டகால நன்மைக்கு உகந்தது.

Sunday 20 March 2022

ஆட்டம் இழப்பாரா இம்ரான் கான்?

  

ச்

பாக்கிஸ்த்தானின் நாடாளுமன்றமாகிய தேசிய சபையில் தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2022 மார்ச் 28-ம் திகதி விவாதிக்கப்ச்படவுள்ளது. பாக்கிஸ்த்தானின் ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் அதன் படைத்துறையும் உளவுத்துறையும் மிக்கிய பங்கு வகிக்கின்றன. பாக்கிஸ்த்தானின் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கைக்கும் அதன் ஆட்சியாளர்களின் இருப்பிற்கும் தொடர்புண்டு. இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்பிய சுல்ஃபிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்காவைக் கடுப்பேத்திய இம்ரான்

இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்த்தானில் களம் அமைத்து அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தாக்குதல்களை நடத்தி வந்தது. பாக்கிஸ்த்தானில் சிஐஏ வைத்திருந்த தளம் 2011இல் வெளியேற்றப்பட்டது. 2020இல் அமெரிக்கா சடுமென ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் அமைக்க சிஐஏ விரும்பியது. அங்கிருந்து அல் கெய்தாவினர் உட்பட பல தீவிர வாத அமைப்புக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த முக்கியமாக ஆளிலிவிமானத் தாக்குதல் நடத்த சிஐஏ விரும்பியது. ஆனால் இம்ரான் கான் அதற்கு மறுத்து விட்டார். இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளால் ஒரு படையணியாக மாறிவிட்ட சிஐஏயிற்கு பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. 2021 ஏப்ரலில் சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பேர்ன் பாக்கிஸ்த்தான் சென்றிருந்த வேளையில் அவரைச் சந்திக்கக் இம்ரான் கான் மறுத்திருந்தார். 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனை ஆக்கிரமிக்க 25-ம் திகதி இம்ரான் கான் திட்டமிட்டபடி தனது இரசியப் பயணத்தை மேற் கொண்டு அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்து உரையாடினார்.

படைத்துறையுடன் பகைமை

பாக்கிஸ்த்தானின் படைத்துறையினரின் ஆதரவுடன் தான் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு படைத் துறையினருடன் நல்லுறவு இல்லை எனவும் சொல்லப்படுகின்றது. இம்ரான் கானின் தகவற் துறை அமைச்சர் ஃபவார்ட் சௌத்திரி நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அவர்களது PTI கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு மில்லியன் பேர் அங்கு திரண்டிருப்பார்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அவர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என மிரட்டியிருந்தார்.

களமிறங்கிய அமெரிக்க மனித உரிமை அமைப்பு

எங்காவது ஆட்சியில் இருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வேண்டப்படாதவர்களாக மாறும் போது அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் அங்கு களமிறங்குவது வழக்கம். இம்ரான் கானிற்கு எதிராகவும் அமெரிக்காவின் மனித உரிமைக் கண்காணிப்பகம் (HRW) செயற்படுகின்றடு. அது இம்ரான் கானின் கட்சியினர் மேல் மிரட்டல், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களாட்சி முறைமைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அது எந்தக்காலத்தில் அங்கு நடந்ததோ தெரியவில்லை!

யோக்கியவான் இம்ரான்

தன்னை பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்படி ஆலோசனைகள் வழங்கினார்கள் ஆனால் கையூட்டு கொடுத்து ஆட்சியை தக்கவைப்பது தன் கொள்கையல்ல என்றார் இம்ரான் கான். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தாம் நடுநிலை வகிப்பதாக பாக்கிஸ்த்தானியப் படையினர் தெரிவித்தமையை இம்ரான் கான் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர்கள் நல்லோர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதே அல்லாவின் ஆணை என்கின்றார் இம்ரான். அத்துடன் நிற்கவில்லை உணர்ச்சியற்ற மிருகங்கள் மட்டுமே நடுநிலை வகிக்கும் என்றார் இம்ரான். தனக்கு எதிராக திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக மீண்டும் தன்னிடம் வருவார்கள் என்றார் இம்ரான் கான்.

சிதறிக் கிடக்கும் உதிரிக் கட்சிகள்

இம்ரான் கானை எதிர்த்து நிற்பவர்கள் பாக்கிஸ்த்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷரிஃப், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜர்தாரி, ஜமியத் உலெமா ஐ இஸ்லாம் கட்சியின் தலைவர் ரஹ்மான் ஆகியோராகும். முஸ்லிம் லீக் கட்சியிடம் 64 உறுப்பினர்களும், பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியிடம் 43 உறுப்பினர்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்ற தமது வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டுள்ளனர். இம்ரான் கானின் PTI இடம் 116 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருபது பேர் கட்சி மாறியுள்ளனர். ஏனைய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 120 உறுப்பினர்கள் உள்ளனர். இம்ரான் கான் பதவியில் தொடர்வதற்கு பல்வேறு மாநிலக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க வேண்டும். இம்ரான் கான் தமது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என அவரது கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இம்ரான் கானின் ஆளும் PTI கட்சியில் 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அறுதிப் பெரும்பான்மைக்கு 175 உறுப்பினர்கள் தேவை கூட்டணி  மேற்பட்ட ஆளும் கட்சியான இம்ரான் கானின் PTI என அழைக்கபடும் Tehriik-e-Insaf கட்சியின் நாடாளுமனற உறுப்பினரள் இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என முடிவு செய்தமை அவரது ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. ஆனாலும் அவரது கட்சி வேறு ஒருவரை தலைமை அமைச்சராக்கி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆட்சி மாற்றம் நம்பிக்கையில்லா பிரேரணைகள் மூலம் பாக்கிஸ்த்தானில் நடப்பதில்லை. படையினர் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் வழமை. பாக்கிஸ்த்தான் எதிர் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவில் அங்கு மக்களாட்சிக்கு விரோதமான செயல் நடப்பது நாட்டுக்கு உகந்தது அல்ல என படையினர் உணர்ந்துள்ளார்கள்.

Saturday 19 March 2022

உக்ரேனுக்கு அமெரிக்கா செய்யும் உதவி ஆபத்தானது

 

தனது எதிரிகளுக்கு எதிராக போராட அமெரிக்கா மூன்றாம் பேர்வழிகளைத் தூண்டி விடுவது உண்டு. அண்மைக் காலத்தில் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் போராளிகளைத் தூண்டி விட்ட அமெரிக்கா அவர்களை சிரிய தாங்கிகள் தாக்கும்போது புதிய தர தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையோ துருக்கிய விமானங்கள் தாக்கும் போது அவர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையோ வழங்கவில்லை. பழைய தாங்கி எதிர்ப்பு படைக்கலன்களை மட்டுமே அமெரிக்கா வழங்கியது. ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படையினருக்கு எதிராக போராடிய இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு Stinger missilesகளை வாரி வழங்கியது. இரசியர்களால் அழிக்கப்படும் உக்ரேனியர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கல உதவியையே அமெரிக்கா செய்கின்றது. இது உக்ரேனியர்களுக்கு பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாட் செல்ல செல்ல இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் தாக்குதல்கள் கொடூரமானவையாகிக் கொண்டு போகின்றன. எண்பதுகளில் இந்தியாவும் ஈழவிடுதலைப் போராளிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படைகலன் வழங்கலைச் செய்தது.

அமெரிக்கா கொடுக்கும் MANPAD (MAN PORTABLE AIR DEFENCE)

உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்கும் Stinger missiles என்பவை MANPAD (MAN PORTABLE AIR DEFENCE) என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளாகும். தனி ஒரு படைவீரன் தன் தோளில் வைத்து செலுத்தக் கூடிய அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணை இது. 1981-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Stinger missiles இன்று வரை பல நாடுகளில் சேவையிலுள்ளன. இவை Tactical Weapons என்ற வகையிலும் அடங்குபவையாகும். Tactical Weapons என்பவற்றின் முக்கிய தன்மை அவை குறுகிய தூரம் வரை செயற்படக்கூடியவை. அவற்றின் தாக்கமும் நடுத்தரமானவை. இவற்றின் தாக்குதூரம் 3500 மீட்டர் (11500 அடி). Stinger missilesஇன் பாய்ச்சல் வேகம் மணிக்கு 2,400 கிமீ (1,500) அதாவது ஒலியிலும் இரண்டு மடங்கு வேகம்.

Stinger missilesகளுக்கு எட்டாத இரசிய விமானங்கள்

இரசியா உக்ரேனில் பெரும்பாலும் Su-25, Su-30, Su-34, ஆகிய விமானங்களையே உக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்துகின்றது. Su-25 விமான ங்கள் 16,000 அடி உயரத்திலும் Su-30 விமானங்கள் 17,300 மீட்டர் (56,800அடி) உயரத்திலும் Su-34 விமானங்கள்1 7,300 மீட்டர் (56,800அடி) உயரத்திலும் பறக்க வல்லன. இந்த விமானங்கள் உயரப் பறக்கும் போது அவற்றை அமெரிக்காவின் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்த முடியாது. இரசிய விமான ங்கள் தாழப் பறந்து தாக்குதல் செய்யும் போது மட்டும் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்த முடியும். அதுவும் மெதுவாகப் பறக்கும் போது மட்டும். இரசிய விமானங்கள் கண்ணுக்கு தெரியும் போது பல Stinger missilesகளை ஏவும் போது மட்டும் ஒன்றாவது இரசிய விமானத்தில் சிறு சேதம் விளைவித்து அதனை தரையிறங்கச் செய்ய முடியும். சில சமயம் விழுத்த முடியும். இரசிய உலங்கு வானூர்திகளை உக்ரேனியர்கள் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரேனுக்கு சோவியத் ஒன்றிய கால எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், Osa, Tunguska ஆகிய பழைய வான் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க நேட்டொ நாடுகள் முடிவு செய்தன. இவற்றிற்கு எதிராக இரசியா நாலாம் தலைமுறையிலும் மேம்பட்ட Su-35, ஐந்தாம் தலைமுறை Su-58 போன்ற விமானங்களை களமிறக்கி தன் வானதிக்கத்தை நிலை நாட்டும்.  இதனால் உக்ரேன் Anti-Access, Area Denial (A2/AD) நிலையை தன் வான்பரப்பில் உருவாக்க முடியாது. Anti-Access, Area Denial (A2/AD) என்பதை “இது நம்ம ஏரியா உள்ளே வராதே” என சுலபமாக விளக்கலாம்.



வான் வலிமையே போரை வெல்லும்

புவிசார் அரசியல் கோட்பாடுகளில் முக்கியமான கோட்பாடான வான்வலுக் கோட்பாட்டை முன்வைத்த அலெக்சாண்டர் பி டி செவெர்ஸ்கி 1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது. 2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும். 3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும். அந்த அடிப்படையில் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என்பது உண்மை. உக்ரேனியர்கள் உறுதியாப் போராடுகின்றார்கள், தீரத்துடன் போராடுகின்றார்கள் எனக் உசுப்பி விடும் மேற்கு நாடுகள் இரசியா கைப்பற்றிய இடங்களில் இரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்கள் இதுவரை கைப்பற்றவில்லை என்பதை பறைசாற்றுவதில்லை. உக்ரேனின் வான்பரப்பில் இரசிய விமான ங்கள் செயற்பட முடியாத வகையில் உக்ரேனியர்களுக்கு படைக்கலன்களை நேட்டோ நாடுகள் வழங்காமல் உக்ரேனியர்களால் இரசியப் படையினரின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. உக்ரேனியர்கள் தாம் இரசியாவின் 77 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்கின்றார்கள். ஆனால் 12 விமான ங்கள் மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக சார்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனியர்களிடமுள்ள ஏவுகணைகளைப் பொறுத்தவரை இது ஒரு சாதனைதான்.

வான் மேன்மை (AIR SUPERIORITY) விமானங்கள்
வான்மேன்மை, வானாதிக்கம், வான்மீயுயர் நிலை

வான் போரில் AIR SUPERIORITY, AIR DOMINANCE and AIR SUPREMACY முக்கியமானவையாகும். வான் மேன்மை (AIR SUPERIORITY) எதிரியின் எந்தவித தடையுமின்றி விமானங்கள் ஒரு குறித்த வான் பரப்பில் ஒரு நாட்டின் வான்படை செயற்படுவதாகும். வானதிக்கம் (AIR DOMINANCE) ஒரு நாட்டின் விமானங்கள் எதிரியின் விமானங்களிலும் மேம்பட்டவையாக இருந்து குறித்த வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதாகும். வான் மீயுயர்நிலை (AIR SUPREMACY) எதிரியின் விமானங்கள் அழிக்கப்பட்டு அல்லது செயற்பட முடியாத நிலையின் ஒரு நாட்டின் விமானங்கள் எந்தவித தடங்கலுமின்றி செயற்படுவது. அமெரிக்காவின் புதிய ஏவுகணைகளால் மட்டும்தான் உக்ரேனிய வான்பரப்பில் இரசியவிமானங்களின் வான்மேன்மை இல்லாமற் செய்ய முடியும். ஐரோப்பிய போர்விமானங்களான Dassault Mirage III, SEPECAT Jaguar, Panavia Tornado, Dassault Mirage 2000, Dassault Rafale, Saab JAS 39 Gripen, Eurofighter Typhoon ஆகிய விமானங்களும். Meteor ஏவுகணைகளும் உக்ரேனுக்கு வழங்கப்பட்டால் மாத்திரம் உக்ரேனால் தனது வான்பரப்பை பாதுகாக்க முடியும். இவற்றை உக்ரேனுக்கு அனுப்பினால் புட்டீன் சினமடைவார் என அஞ்சி நேட்டோ நாடுகள் ஒதுங்கி இருந்து கொண்டு வலிமையற்ற படைக்கலன்களை உக்ரேனுக்கு அனுப்புகின்றன. அவற்றை நம்பி போராடும் உக்ரேனியர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.

இரசிய வான்படை தரம் தாழ்ந்ததா?

David Axe என்ற வான் போர் ஆய்வு நிபுணர்:

1. இரசிய வான் படை ஒரு பரந்த வான்பரப்பை கட்டுப்படுத்தக் கூடியவகையில் உருவாக்கப்படவில்லை.

2. இரசியர்களுக்கு வான்கலன்கள் பறக்கும் பீராங்கிகள் மட்டுமே

3. இரசிய வான்படை வான்படை அல்ல

4. 2014-ம் ஆண்டின் பின்னர் இரசியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடையால் இலத்திரனியல் உபகரணங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் வழிகாட்டல் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

5. வானில் இருந்து தரக்கு வீசும் குண்டுகளுக்கு இலத்திரனியல் வழிகாட்டுதல் இல்லாத படியால் இரசிய விமானங்கள் உயரத்தையும் வேகத்தையும் குறைத்து பறக்க வேண்டியுள்ளது. அதனால் அவற்றை எதிரியால் இலகுவாக சுட்டு விழுத்தலாம். போர் விமானங்கள் முகில்களுக்கும் கீழே பறப்பது மிகவும் ஆபத்தானது.

மேற்கு நாட்டு படைத்துறை விமர்சகர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் இரசியா சீனா போன்றவற்றின் படைக்கலன்களை உயர்த்தி மதிப்பிட்டு அவற்றால் அமெரிக்காவிற்கு ஆபத்து எனக் கூச்சலிடுபவர்கள். இவர்கள் படைத்துறை உற்பத்தி நிறுவனங்களால் தூண்டி விடப்படுபவர்கள். இரண்டாம் வகையினர் எதிரியை தாழ்வாக எடை போட்டு தம் வாசகர்களை மகிழ்விப்பவர்கள்

நேட்டோ கொடுத்துக் கொண்டிருக்கும் மட்டுப்படுத்தப் பட்ட உதவி இல்லாவிடில் உக்ரேனியர்கள் இரசியாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரலாம். நேட்டோ நாடுகள் கொடுக்க வேண்டிய உதவியைக் கொடுக்காமல் குறைந்த வலுவுடைய உதவி செய்கின்ற படியால் உக்ரேனியர்கள் போரைத் தொடர்ந்து நடத்தி இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

Thursday 17 March 2022

உக்ரேன் போரில் சீனா இரசியாவிற்கு உதவுமா?

 


உக்ரேனில் நடக்கும் போரில் சீனாவிடம் இரசியா படைத்துறை உதவியைக் கோரியுள்ளதாக முதலில் அமெரிக்க நாளிதழான Washington Post அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன் சீனாவின் வெளியுறவுத் துறை ஆணையகத்தின் இயக்குனர் ஜாங் ஜீச்சியுடன் ரோம் நகரில் 2022-03-14-ம் திகதி உக்ரேன் போர் தொடர்பாகப் ஏழு மணித்தியாலம் பேச்சு வார்த்தை நடத்தினார். சீனாவின் South China Morning Post ஜேக் சலைவன் சீனா இரசியாவிற்கு படைத்துறை உதவிகளையோ மற்ற உதவிகளையோ செய்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரசியா தம்மிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என சீன அதிகாரிகள் சொல்லி வருகின்றனர்.

ஒன்றும் தெரியாத பாப்பாவாம் சீனா

சீனாவிற்கு முன் கூட்டியே உக்ரேன் மீது இரசியா படையெடுக்கும் என்பது தெரியும் என்றும் சீனாவின் வேண்டுதலின் பேரில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடியும் வரை இரசியா தனது படையெடுப்பை பின் போட்டிருந்தது என்றும் Washington Post செய்திகள் வெளியிட்டிருந்தது. இதை அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கடுமையாக மறுத்ததுடன் சீனாவிற்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போரைத் தவிர்க்க சீனா முயற்ச்சித்திருக்கும் என்றார். 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியா உக்ரேன் எல்லையில் தனது படையினரைக் குவிக்கத் தொடங்கியது உலகறிந்தது. இரசியா சீனாவிடம் உதவி கேட்கவில்லை என்றால் புட்டீனும் ஜின்பிங்கும் 2022 மார்ச் 15-ம் திகதி ஒரு அவசர இணையவெளி உரையாடலில் என்ன பேசியிருப்பார்கள்?

ரோம் நகரில் மரதன் பேச்சு வார்த்தை

2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரசியா படையெடுத்ததில் இருந்து தான் நடுநிலை வகிப்பதாக சீனா அறிவித்துக் கொண்டிருக்கின்றது. 2022 மார்ச் 14-ம் திகதி அமெரிக்க சீன அதிகாரிகளிடையே உக்ரேன் போர் தொடர்பாக ஏழு மணித்தியாலப் பேச்சு வார்த்தை ரோம் நகரில் நடை பெற்றது. இரசியா சீனாவிடம் உதவி கேட்டது உண்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ரோம் நகரப் பேச்சு வார்த்தை சீனா இரசியாவிற்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காகவே நடை பெற்றது என்பது உண்மை. உக்ரேனில் இருந்து வரும் செய்திகள் இரசியப் படையினர் உண்ண உணவின்றி உக்ரேனியர்களிடம் உணவு கேட்டதாக சொல்கின்றன. இரசியர்கள் இரண்டு நாட்களில் போரை முடிக்கும் திட்டத்துடன் மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் மட்டும் எடுத்துச் சென்றனர். இரசியாவிற்கு தயாரித்த உடன் உணவுகளை (Ready-to-eat meals) அவசரமாக அனுப்பும் படி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது உண்மையாக இருக்கலாம்.

எப்போதும் இல்லாத பதட்டம் இரசியாவில்

இரசியாவில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் 2022 பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடங்கிய பின்னர் வெளியேறியபடி உள்ளனர். அவர்களின் கருத்துப் படி இரசியாவில் எப்போதும் இல்லாத பதட்டம் நிலவுகின்றது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கண்காணிக்கப்படுகின்றனர். அரச ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். ஒரு தொலைக்காட்டி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் அச்சேவையின் ஆசிரியர் ஒருவர் போர் வேண்டாம் என்ற பதாகையைப் பிடித்தபடி நின்றார். இரசிய உளவுத்துறையைச் சேர்ந்த இரண்டு முன்னணி அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வருகின்றன. விளடிமீர் புட்டீன் குழம்பிப் போகாமல் இருக்கச் செய்ய சீன அதிபர் ஜீ ஜின்பிங்கினால் மட்டுமே முடியும்.

இரசியாவின் பிரச்சனைகள்

இரசியா பல உயர் தொழில்நுட்ப படைக்கலன்களை உருவாக்கினாலும் நிதித்தட்டுப்பாட்டால் அவற்றை போதிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில்லை. அமெரிக்காவிடம் எழுநூறுக்கு மேற்பட்ட F-35 போர் விமானங்கள் உள்ளன. அதற்க்கு ஈடான Su-35 போர் விமானங்கள் இரசியாவிடம் 103 மட்டுமே உள்ளன. இரசியாவின் Su-57 பதின்நான்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இரசியாவின் உலகிற் சிறந்த போர்த்தாங்கியான T-14 Armata போர்த்தாங்கிகள் 2300 உற்பத்தி செய்வதாக திட்டமிடப் பட்டிருந்தும் நூறிலும் குறைவான தாங்கிகளே தற்போது இரசியாவிடம் உள்ளன. இதனால் உக்ரேன் போர்க்களத்தில் இரசியா பல பற்றாக்குறைகளை எதிர் கொள்கின்றது:

1. போதிய அளவு புதிய வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை

2. விமானங்கள் இலக்கைத் தெரிவு செய்யும் Targeting Pods தட்டுப்பாடு

3. போதிய அளவு ஆளிலிப் போர் விமானங்கள் இல்லை

இவற்றை சீனாவிடமிருந்து இரசியா பெற முயற்ச்சிக்கலாம். சீனாவின் படைக்கல இறக்குமதியில் 80% இரசியாவில் இருந்தே பெறப்படுகின்றது. இரசியாவில் தங்கியிருக்கும் சீனா இரசியாவின் வேண்டு கோளை அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொடுக்க மறுக்குமா? சீனா ஆளிலிப் போர் விமானங்களையும் தயாரித்த உடன் உணவுகளையும் (Ready-to-eat meals) வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரத் தடையில் இருந்து இரசியாவை சீனா மீட்குமா?

இரசியாவிற்கு சீனாவிடமிருந்து தேவைப்படும் பேருதவி நேட்டோ நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இரசியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பை தணிப்பதே. சீனாவைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையுச்ம் வர்த்தகக் கொள்கையும் உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என்பது போன்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு சீனாவிற்கு மிகவும் பாதகமானதாகும். அதனால் சீனா இரசியாவிடமிருந்து உலகச் சந்தை விலையிலும் குறைவான விலைக்கு எரிபொருளை வாங்கும். அதுவே இரசியாவிற்கு காத்திரமான உதவியாக அமையும். அடுத்த படியாக இரசியாவிற்கு நிதி தேவைப்படும் போது சீனாவிடமிருந்து கடன் வாங்க வேண்டும். இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணியை சீனாவில் வைப்பிலிட வேண்டும். இரசியாவின் வெளிநாட்டு செலவாணியை சினாவில் வைப்பிலிடும் போது சீன நாணயத்தின் பெறுமதி குறையும். அதனால் சீனாவில் விலைவாசி அதிகரிக்கும். உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு வருவது சீனாவின் பெரும் விருப்பம் என்பது மறுக்கப்பட முடியாது. உக்ரேனில் புட்டீன வெற்றியடையாமல் போரை முடிக்க மாட்டார். ஒரு துரித வெற்றியை புட்டீன் பெறுவதற்கு சீனா உதவி செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு நல்லது. அது சீனாவிற்கும் நல்லது. 2022 பெப்ரவரியில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொள்ளச் சென்ற விளடிமீர் புட்டீன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையில் வரையறையற்ற பங்காண்மை நிலவும் என தெரிவித்தனர்.

சீனாமீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடை விதிக்குமா?

உக்ரேன் போரில் இரசியாவிற்கு நேட்டோ நாடுகள் கொடுக்கும் பிரச்சனையில் இரசியாவை மீட்க சீனா உதவி செய்தால் சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதாரத் தடையாக இருக்கலாம். ஏற்கனவே இரசியாமீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அமெரிக்கப் பொருளாதாரம் உட்பட உலகப் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரப் போர் என்பது அடி வாங்கினவனிலும் பார்க்க அடித்தவனுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளன.

உக்ரேன் போர் தொடங்க முன்னரே உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் உலக ஒழுங்கைப் பொறுத்தவரை China will be in the driving seat என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். சீனாவின் காட்டில் மழை என்பது உண்மை.

Monday 14 March 2022

புட்டீனின் 22 ஆண்டுத் தயாரிப்பு வீண் போகுமா?

 


2022 பெப்ரவரி 24-ம் திகதி புட்டீன் உக்ரேனுக்கு படைகளை அனுப்பியது கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக செய்த தயாரிப்பின் முதற் கட்ட நடவடிக்கையாகும். அதன் காரணத்தை 2022 டிசம்பர் மாதம் 23-ம் திகதி ஊடக மாநாட்டில் விளக்கியிருந்தார்.

·         அவர் கூறியதன் முக்கிய பகுதி: “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என 90களில் எமக்குச் சொன்னார்கள். ஆனால் என்ன? எம்மை எமாற்றினார்கள். வெளிப்படையாக எம்மை வஞ்சித்தார்கள். ஐந்து அலைகளாக நேட்டோ விரிவாக்கம் நடந்தது. அவர்கள் (நேட்டோ) இப்போது உருமேனியாவிலும் போலாந்திலும் இருக்கின்றார்கள், எங்கள் வாசற்படியில் அமெரிக்கா அணுக்குண்டுகளுடன் நிற்கின்றது”

வரலாற்று நிகழ்விற்கு பிழையான பொருள்விளக்கம்

புட்டீன் உக்ரேன் எல்லையில் இலட்சக்கணக்கான படையினரைக் குவித்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்த பின்னர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் அண்டனி பிலின்கன் சொன்னது: “வரலாறு தொடர்பாக நாம் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.” மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் சொல்லும் கருத்துக்கள்:

1. நேட்டோ எந்த அளவு விர்வாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக் எந்த ஓர் உடன்படிக்கையும் செய்யப்படவில்லை.

2. நேட்டோவில் புதிதாக இணைந்து கொள்ளும் நாடுகளை இணைந்து கொள்ளும் படி நிர்ப்பந்திக்கப்படுவதில்லை.

3. நேட்டோ விரிவாக்கம் எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது.

2014 ஆக்கிரமிப்பு போல் 2022இல் இல்லை

அரை-மக்களாட்சி பரப்பியவாதியாக (semi-democratic populist) புட்டீன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு எதிரானவர்கள் இருப்பதை விரும்பாத புட்டீன் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்காக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அவருக்கு எதிரானவர்கள் ஐயத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டனர். ஊடகங்கள் அவரை எதிர்த்து எழுத தயங்குகின்றன. உக்ரேன் போர் பற்றிய உண்மையான நிலையை இரசியர்கள் அறிய முடியாத நிலையில் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு புட்டீன் உக்ரேனின் ஒரு பகுதியா இருந்த கிறிமியாவைக் கைப்பற்றிய போது இரசியர்கள் அதை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். புட்டீனின் செல்வாக்கும் இரசியர்கள் இடையே பெரிதும் அதிகரித்தது. ஆனால் 2022இல் நிலை அப்படியல்ல.

முதற்கனவு

1999 மார்ச் மாதம் 3-ம் திகதி விள்டிமீர் புட்டீன் உக்ரேன் தலைமை அமைச்சராக பதவியேற்ற போதே இரசியா இழந்த கௌரவத்தை மீளக் கட்டி எழுப்புவதாக உறுதி பூண்டார். 1998-ம் ஆண்டு இரசிய பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பட்ட கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு உலக வங்கியிடமும் பன்னாட்டு நாணய நிதியத்திடமும் கடன் வாங்கி நெருக்கடியைச் சமாளித்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியாவை ஒரு பொருட்டாக மதிக்காத நிலை ஏற்பட்டது. அதுவும் புட்டீனை பெரிதும் பாதித்திருந்தது. பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து இரசியாவை மீட்ட பின்னர் புட்டீனின் மதிப்பு இரசியர்களிடையே உயர்ந்தது. அவர் தேர்தல்களில் இலகுவாக வெற்றியீட்டினார். ஆனால் மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தலில் ஊழல், எதிர்க்கட்சிகளை அடக்கினார் என செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருந்தன. 2020-ம் ஆண்டு இரசியாவை உலகின் படைத்துறையின் முதல் தர நாடாக்க வேண்டும் என்ற 20 ஆண்டுத் திட்டத்தை 2020- ஆண்டு தீட்டினார். மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவது அவரது திட்டத்தின் மணிமகுடமாக அமைந்தது. விமானப்படை, செய்மதிகளை படைத்துறைக்கு பாவித்தல், நீமூழ்கிகளை புதுமைப் படுத்துதல், உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குதல் ஆகியவையும் அடங்கும்.

2018இல் பெருமைப்ப்ட்ட புட்டீன்

புட்டீனின் இருபதாண்டுத் திட்டம் வெற்றியுடன் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது என்பதை உலகத்திற்கும் இரசியரகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் 2018 மார்ச் முதலாம் திகதி புட்டீன் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை ஆற்றினார். இரசியாவின் பொருளாதார வெற்றி படைத்துறை முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி காணொலியுடன் அவர் விளக்கினார். புட்டீனின் உரையும் காணொலியும் புதிய ஐ-போனை அப்பிள் முதலில் அறிமுகம் செய்வது போல இருந்தது எனச் சொல்லப்பட்டது. அவர் அதில் முன்வைத்தவைகளில் முக்கியமானவை:

1. உலகின் எப்பாகத்திலும் அணுக்குண்டை வீசக் கூடிய அணுவலுவில் இயங்கும் ரடார்களுக்குப் புலப்படாத, எதிரிகளால் இடைமறிக்க முடியாத வழிகாட்டல் ஏவுகணை.

2. அமெரிக்கப் பாதுகாப்பை முறியடிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் நீரடி ஏவுகணைகள் (nuclear torpedo that could outsmart all American defences). Status-6 Nuclear Torpedo என்னும் பெயருடைய இந்த நீரடி ஏவுகணைகளைப்போல் அமெரிக்காவிடம் இல்லை என்றார் புட்டீன்.

3. ஹைப்பர்சோனிக் வழுக்கி வாகனங்கள் (Avengard Hypersonic Glide Vehicles). இவை வழமையான விண்வெளிக்குச் செல்லும் ஏவுகணைகளில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிர்ந்து ஏவப்படும் ஏவுகணையாகும். புவியீர்ப்பு விசையாலும் தன் உந்து சக்தியாலும் அது ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் தன் இலக்கை நோக்கிப் பறந்து செல்லும். அது செல்லும் பாதையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமை இருந்தால் அவற்றைத் தவிர்த்துக் கொண்டு செல்ல வல்லது.

புட்டீனின் நம்பிக்கை வீணாகவில்லை

இவை மட்டுமல்ல இரசியாவின் S-400, S-500 போன்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் அமெரிகாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் சிறந்தவை, புட்டீன் இறுதியாக புட்டீன் 2021 நவம்பரில் இரசியாவின் எதிரிகளின் செய்மதிகளை அழிக்கும் ஏவுகணையைப் பரிசோதித்தார். எதிரிகளின் செய்மதிகளை அழிப்பதன் மூலம் தன்னால் எதிரிகளின் பல படைக்கலன்களை குருடாக்க முடியும் என முழங்கினார் புட்டீன். உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கும் போது உக்ரேனுக்கு ஆதரவாக இரசியாவின் படைவலிமைக்கு அஞ்சி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் நாடுகள் களமிறங்க மாட்டாது என புட்டீன் உறுதியாக நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகாத வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவாக தாம் இரசியாவிற்கு எதிராகப் போர் புரியப் போவதில்லை என உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நேட்டோ போட்ட கணக்கு வேறு

2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் வகையில் அரசியலமைப்பை மாற்றியதில் இருந்து புட்டீன் உக்ரேனுக்கு பாடம்புகட்ட முடிவு செய்தார். கொவிட் பெருந்தொற்று நோயால் அது தாமதமாகியது. 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியப் படைகள் உக்ரேன் எல்லையில் குவிக்கப்பட்டன. அப்போது வலிமை மிக்க படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்காமல் ஒரு கேந்திரோபாயக் காத்திருப்பைச் செய்தன. புட்டீனின் வேண்டுகோள்கள் நிபந்தனைகள் போன்றவற்றிற்கு நேட்டோ நாடுகளும் உக்ரேனும் இணங்காமல் இருந்தன. புட்டீன் 2021 இறுதியில் மேலும் படைகளை உக்ரேன் – இரசிய எல்லைக்கு அனுப்பியதுடன். பெலரஸ் மற்றும் மோல்டோவாவிலும் இரசியப் படைகளைக் குவித்தார். அதற்கும் உக்ரேன் மசியாத நிலையில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகள் உக்ரேனை ஆக்கிரமித்தன. அதன் பின்பு உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் தமது படைக்கலன்களை பெருமளவில் அனுப்பின. இரசியாவை உக்ரேனுக்குள் செல்ல விட்டு உக்ரேனியர்கள் மூலமாக அவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொள்வது நேட்டோவின் கேந்திரோபாய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு இரசியாவால் கிறிமியாவைக் கைப்பற்றியது போல் 48 மணித்தியாலங்களுக்குள் உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி உக்ரேன அரசை வழிக்கு கொண்டு வருவது அல்லது அங்கு ஆட்சி மாற்றத்திற்கு வழிசெய்வது என்ற இரசியாவின் உத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இரசியாவிற்கும் கிறிமியாவிற்கும் இடையில் ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவதைல் இரசியப் படையினர் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளனர். Mariupol நகரில் 2022 மார்ச் 14-ம் திகதி கடும் சண்டை நடைபெறுகின்றது. அந்த நகரைச் சுற்றி வளைத்த இரசியப் படையினர் அங்கிருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கும் ஒரு பாதையைத் திறந்துள்ளனர். அந்த நகர் கைப்பற்றியவுடன் கிறிமியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஒரு தரைவழிப்பாதை உருவாக்கப்படும். அத்துடன் உக்ரேனின் கிழக்குப் பகுதி அஜோவ் கடல், கருங்கடல் ஆகியவற்றுடனான தொடர்பு துண்டிக்கப்படும்.

இரசிய வெற்றி பத்து விழுக்காட்டிலும் குறைவு

உக்ரேனியர்கள் வீரமாகப் போராடுகின்றார்கள் என மேற்கு நாட்டு ஊடகங்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தாலும் இரசியப் படையினர் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். அவரகள் கைப்பற்றிய நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்களால் மீளக் கைப்பற்ற முடியவிலை என்பது தான உண்மை. முழு உக்ரேனையும் கைப்பற்ற இன்னும் ஓராண்டிற்கு மேல் எடுக்கலாம். அதுவும் புட்டீன பேரழிவு விளைவிக்க கூடிய படைக்கலன்களைப் பாவித்தே செய்ய முடியும். போர் நீண்ட காலம் இழுபட்டு இரசியப் பொருளாதாரம் சிதைவடைவதை நேட்டோ நாடுகள் விரும்பலாம். போலாந்தினூடாக உக்ரேனியப் படையினருக்கு தொடர்ந்து நேட்டோ நாடுகள் படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கலாம்.

போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் இரசியாவிற்கு தோல்வி என்றே சொல்ல வேண்டும். புட்டீன் 22 ஆண்டுகளாக திட்டமிட்ட சோவியத் ஒன்றியம்-2.0 நிறைவேறாமல் போகுமா?

இரசிய – உக்ரேனிய இணையவெளிப் போர்

 


இணையவெளிப் போர் வல்லரசுகளாக இஸ்ரேல், அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. வட கொரியா மற்றும் ஈரானிடம் வலிமை மிக்க இணையவெளிப் படைப்பிரிவுகள் உள்ளன. கணினிகளுக்குள் தீங்குநிரல்(Malware) புகுத்துதல். கணினிச்சேவை நிறுத்தம், தரவு அழித்தல், தரவு திருடுதல், தரவுகளைப் பணயக் கைதிகள் போலாக்கி பணம் பறித்தல், இரு கணினிகள் அல்லது கணினித் தொகுதிகளிடையே இருந்து அவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாடலைத் துண்டித்தல், திசைமாற்றல் அல்லது திரிபுபடுத்தல் எனப் பலவகையான இணைய வெளித் தாக்குதல்கள் உள்ளன. பிரித்தானியாவின் Lloyds Insurance நிறுவனம் சராசரியாக ஓர் இணையவெளித் தாக்குதலால $54 மில்லியன் இழப்பீடு ஏற்படுகின்றது என மதிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிக்க முன்னரும் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னரும் இரு நாடுகள் மீதும் கடுமையான இணைய்வெளித் தாக்குதல்கள் நடந்தன. ஜோர்ஜியாவில் பல கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் நாடாளுமன்றம், வெளியுறவுத்துறை அமைச்சு, பல ஊடகங்கள், தனியார் நிறுவனங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டு இரசியப் படைகள் உக்ரேனிய அரச மற்றும் மின்சார வழங்கல் கணினிகள் மீது இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டன. 2022 ஜனவரி 10,13, 14-ம் திகதிகளில் உக்ரேனிய அரசுக்கு சொந்தமான கணினித் தொகுதிகளில் இணையவெளியூடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2022 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இரசியாவில் பல் வேறுபட்ட கணினித் தொகுதிகளில் தாக்குதல்கள் நடக்கின்றன. உக்ரேனில் இணையச் சேவை வழங்குனர் (Internet Service Producer) Triolan மீது இரு தடவை தாக்குதல் நடத்தப்பட்டது. SpaceXஇன் நிறுவனர் Elon Musk தனது செய்மதி மூலமான Starlink என்னும் இணையச் சேவையை உக்ரேன் மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றார்.

உக்ரேனின் தொடருந்து சேவை மீது தாக்குதல்

புட்டீனின் ஆக்கிரமிப்புப் போரால் அயல் நாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களைத் தடுப்பதற்காக உக்ரேனின் தொடருந்து சேவையின் கணினித் தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு போரில் பல இணையவெளித் தாக்குதல் குழுக்களுக்கும் இரசிய ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்டுத்தப்பட்டுள்ளது என்கின்றது. அது இரசியாவை Cyber Gangland என விபரித்துள்ளது. உக்ரேன் மீது செய்யப்படும் தாக்குதலால் இரசியாவின் இணையவெளித் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா அறிந்து கொண்டிருக்கின்றது.

இரசிய தொலைக்காட்சிச் சேவைகள் மீது தாக்குதல்

இரசிய கணினித் தொகுதிகள் மீது Distributed Denial of Service (DDoS) பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல கணினித் தொகுதிகள் மூலம் எதிரியின் கணினிக்கு அளவிற்கு அதிகமான தரவுகளைச் செலுத்துவது Distri.uted Denial of Service எனப்படும். அவை மட்டுமல்ல பல ஊடுருவல்களும் செய்யப்பட்டன. 2022 மார்ச் இரண்டாம் வாரம் Russia 24, Channel One, Moscow24 ஆகிய தொலைக்காட்சி சேவைகளை ஊடுருவியவர்கள் உக்ரேனில் நடக்கும் கொடுமைகளை இரசிய மக்களுக்கு ஒளிபரப்பினர். உக்ரேனில் நடக்குப் போர் தொடர்பாக இரசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை இரசிய அரசு விதித்துள்ளது. அவற்றில் இரசிய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோள்களும் விடுக்கப்பட்டன. இரசியாவின் விண்வெளி முகவரகம் மூடப்படும் அளவிற்கு அதன் மீது இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டன. இதனால் இரசியா செய்மதி மூலம் உளவு திரட்டுதல் பாதிக்கப் பட்டுள்ளது. இரசியாவின் வலைத்தளம் ஒன்றில் தாக்குதல் செய்து அதில் உள்ளவற்றை அகற்றி விட்டு அங்கு போரில் கொல்லப்பட்டவரகளின் கல்லறைகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இரசியா மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணையவெளித் தாக்குதலைச் சமாளிக்க சீனாவின் Huawei நிறுவனத்தின் சேவையை இரசியா அவசரமாகப் பெற்றுள்ளது. இரசியாவின் செய்தி தணிக்கைப் பணிமனை மீது தாக்குதல் செய்யப்பட்டு அங்குள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்திகளைக் கொண்ட 340,000 கோப்புக்களை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கள் இரசியானின் Bashkortostan மாநிலத்துடன் தொடர்புபட்டன.

அமெரிக்காவும் பங்கு பெறுகின்றதா?

இரசியாவிற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்ற ஐயம் உண்டு. அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை 2018இல் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திருடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுகளை செயற்பட வைக்க முடியும்.

எங்காவது போர் நடந்தால் அங்கு தனது படையினரை இஸ்ரேஸ் அனுப்ப முயற்ச்சிக்கும். உதவி என்னும் போர்வையில் நேரடி களமுனை அனுபவத்தை தனது படையினருக்கு வழங்குவதே இஸ்ரேலின் நோக்கம். உக்ரேன் – இரசிய இணைய வெளிப்போரிலும் அது நடக்கலாம்.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்கும் அணி இணைவெளிப் படைப்பிரிவாகத்தான் இருக்கும்.

Friday 11 March 2022

உக்ரேனில் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளதா?


Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது. தனியார் படை என்பது கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட “கௌரவப் பெயராகும்”. சிரியா, லிபியா, ஆப்கான் போர்க்களங்களில் பெருமளவு தனியார் படையினர் அமெரிக்காவாலும் இரசியாவாலும் பாவிக்கப்பட்டனர். ஈழப்போரிலும் வெளிநாடுகளின் கூலிப்படைகள் செயற்பட்டன.  

கூலிப்படை வரலாறு

ஆரம்பத்தில் படையினருக்கான பின்புல வழங்கல் செய்தல், படையினருக்கான ஆபத்து பகுப்பாய்வு செய்தல், உளவு, வேவு போன்றவற்றில் தனியார் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உலகெங்கும் தற்போது உள்ள தனியார் படை அமைப்புக்களில் 70% அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூலிப்படைத்துறையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவின் சீல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற Erik Prince என்பவர். இவரது தனியார் படை Blackwater என்னும் பெயரில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அது ஆப்கானிஸ்த்தானில் செயற்பட்டது. இவரது படைப்பிரிவு பத்து பில்லியன் டொலர் கூலிக்காக உக்ரேனில் உள்ள வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பயிற்ச்சியளிக்கின்றது என அமெரிக்காவின் Time சஞ்சிகை 2021 ஜூலை 7-ம் திகதி செய்தி வெளியிட்டது. 2020 பெப்ரவரி 23-ம் திகதி Erik Prince உக்ரேன் தலைநகருக்கு சென்று உக்ரேனிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரேனிய படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கி ஒரு தனியார் படைப்பிரிவை அவர் உருவாக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 2022 மார்ச் 24-ம் திகதி உக்ரேனில் ஆரம்பித்த போரில் Erik Princeஇன் படையினரின் செயற்பாடுகள் மர்மமாக உள்ளன. இரசியாவின் மிகப்பிரபலமான விமான ங்களில் ஒன்றான Su-24 தாக்குதல் போர்விமானத்தை உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரேனியர்களிடமிருக்கும் Stinger போன்ற MANPAD ஏவுகணையால் Su-24ஐ சுட்டு வீழ்த்துவதற்கு போதிய பயிற்ச்சி தேவை. அவ் ஏவுகணைகள் தாழப்பறக்கும் விமானங்களை மட்டும் சுட்டு வீழ்த்த வல்லன. ஒலியிலும் வேகமாக பயணிக்கக்  கூடிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நீண்ட பயிற்ச்சியும் அனுபவமும் தேவை.

Erik Prince முன் வைத்த கோரிக்கையை பைடன் நிராகரித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் எச்சந்தர்ப்பத்திலும் தமது படையை உக்ரேனுக்கு அனுப்பமாட்டேன் என அடிக்கடி சொல்கின்றார். Erik Prince அமெரிக்கா 2022இல் சேவையில் இருந்து நீக்கவிருக்கும் நாற்பத்தேழு F-16 போர்விமானங்களை வைத்து ஒரு தனியார் படையணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டார் எனவும் 2022 மார்ச் 4-ம் திகதி பிரித்தானிய நாளிதழான Daily Mailஇற்கு தெரிவித்திருந்தார். F-16ஐ உக்ரேனில் களமிறக்குவது புட்டீனை பெரும் சினப்படுத்தும் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சுட்டு விழுத்தப்படாத விமானம் என்னும் பெருமையைக் கொண்டிருந்த F-16 விமானம் 2019 இந்திய பாக் மோதலில் இந்தியாவிடமிருந்த MiG-21 Bison விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது. அதை உக்ரேனில் உறுதி செய்யப்படுவதை F-16 உற்பத்தியாளர்கள் விரும்ப மாட்டர்கள். தான் 2021இன் இறுதியில் முன்வைத்த திட்டத்தை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டிருந்தால் உக்ரேனில் இன்று இத்தகைய இழப்பு நடந்திருக்காது என்கின்றார் Erik Prince. புட்டீன் உக்ரேனில் உள்ள நாஜிகளை இல்லாமற் செய்யப் படை அனுப்புகின்றேன் எனச் சொன்னது Erik Prince பயிற்றுவித்துக் கொண்டிருந்த திவிர வலதுசாரிப் படைப்பிரிவைத்தான். இவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதாகும்.

உக்ரேனிய கூலிப்படை

உக்ரேனுக்குள் இரசியப் படையினர் புகுந்தவுடனே உக்ரேனிய அதிபர் வெளிநாட்டில் வாழும் உக்ரேனியர்களும் உக்ரேனை விரும்புபவர்களும் உக்ரேனுக்காக போராட விரும்புகின்றார்கள் என அறிவித்தார். அவர்களை வைத்து “International Legion of Territorial Defence of Ukraine” என்னும் பெயர் கொண்ட படையணியை தான் உருவாக்கப் போவதாகவும் சொன்னார். இது அவர் ஒரு தனியார் படையை (கூலிப்படையை) உருவாக்கப் போகின்றார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. உலகெங்கும் உள்ள வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளும் நாஜிவாதிகளும் உக்ரேனைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் அங்கு களமிறங்கி உள்ளனர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தமது நாட்டுக்கு திரும்பி ஆபத்தான வகையில் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஒரு சதிக் கோட்பாடும் உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஆபத்து என்பதால் அந்த நாடுகள் அவர்களை உக்ரேன் போர்முனைக்கு அனுப்பி கொல்ல முயற்ச்சிக்கின்றார்கள் என்பதே அச்சதிக் கோட்பாடு.

இரசியா சிரியாவில் கூலிப்படை திரட்டியது

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் பாரிய கட்டிடங்களுக்குள் நின்று போர் செய்யும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அவர்களை இரசியா தனியார் படையாக சேவைக்கு அமர்த்தி உக்ரேனில் களமிறக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை சிரியாவின் deiresso24.net என்ற இணையத்தளம் வெளியிட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனும் வெளியிட்டது. 2022 மார்ச் 6-ம் திகதி அமெரிக்க Wall Street Journal இரசியா நகர்சார் போரில் அனுபவமுள்ள சிரியப் படையினரை நாள் ஒன்றிற்கு $200முதல் $300 வரையிலான கூலிக்கு ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் உக்ரேன் போரில் ஈடுபடுத்த ஆள் சேர்ப்பதாக செய்தி வெளியிட்டது.ச்

புட்டீனின் கூலிப்படை

இரசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் இரசிய அதிபரின் நெருங்கிய நண்பருமான Yevgeniy Prigozhin  என்பவர் Wagner Group என்ற தனியார் படைப்பிரிவை வைத்திருக்கின்றார். இரசிய தனியார் படையினரின் வருமானம் அரச படையினரின் வருமானத்திலும் பார்க்க 7 மடங்கு அதிகமாகும். Yevgeny Prigozhin இற்குச் சொந்தமான Evro Polis நண்பரின் சிரியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் 25விழுக்காடு உரிமம் பெற்றுள்ளது. சிரியாவில் தனியார் படையினரைப் பயன்படுத்தியமைக்கு இவருக்கு வழங்கப்பட்ட கூலியா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. உக்ரேனிய அதிபர் விலோடிமீர் ஜெலென்ஸ்கியை கொல்லும் பணியின் Yevgeniy Prigozhin யின் Wagner Group களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் GB News தெரிவித்துள்ளது.

இரசியாவின் கை உக்ரேனில் மேலும் ஓங்கும் போது நேட்டோ நாடுகள் அதிக நிதியை உக்ரேனுக்கு வழங்கும். அந்த நிதியைப் பாவித்து உக்ரேன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் படையினரை போரில் ஈடுபடுத்தும். 


இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...