Followers

Wednesday 29 September 2021

GSP+ வரிச்சலுகையும் இலங்கையும்

 


1971-ம் ஆண்டு நடந்த UNITED NATIONS CONFERENCE ON TRADE AND DEVELOPMENT (UNCTAD) இன் கூட்டதில் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உருவானதுதான் GSP எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Generalized System of Preferences அதாவது பொதுப்படுத்தப்பட்ட சலுகைகளின் முறைமை.

GSP என்பது ஒரு தரப்பான வரிச்சலுகையாகும். இரு தரப்பு வரிச்சலுகையில் இரண்டு நாடுகளும் வரிச்சலுகை வழங்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP என்னும் இறக்குமதி வரிச்சலுகையை வழங்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எந்தவிதமான வரிச்சலுகையையும் Generalized System of Preferences வழங்க வேண்டியதில்லை.

நாடுகளின் வருமான அடிப்படையில் GSP சலுகைகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு(வியட்நாம், இந்தோனேசியா) GSP சலுகையும் பாதிப்படையக்கூடிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்கு GSP+ சலுகையும் வழங்கப்படுகின்றன. இவை தவிர மிகக் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு (பாங்களா தேசம், ஆப்கானிஸ்த்தான்) EBA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Everything but Arms (படைக்கலன்களைத் தவிர எல்லாம்) என்னும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. அச்சலுகைகள் கிடைக்கும் நாடுகள் படைக்கலன்களைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் இறக்குமதி வரியின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். சிறந்த உட்கட்டுமானங்களையும் அரச உதவிகளையும் கொண்ட சீனாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளைக் குறைத்து மற்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியை அதிகரிப்பதே இச் சலுகைகளின் உள் நோக்கம் எனவும் கருதப்படுகின்றது.

ஆர்மினியா, பொலிவியா, கேப் வேர்டா, கிரிகிஸ்த்தான், மங்கோலியா, பாக்கிஸ்த்தான், மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு GSP+ சலுகை வழங்கப்படுகின்றன. ஆப்கானிஸ்த்தான், பங்களாதேசம் உள்ளிட்ட 49 நாடுகளுக்கு EBA வரிச்சலுகை வழங்கப்படுகின்றன.

GSP என்னும் இறக்குமதி வரிச்சலுகையின் நோக்கங்கள்:

1. வளரும் நாடுகளின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்

2. வறுமையைக் குறைத்தல்

2. பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்

3. நல்லாட்சியை ஏற்படுத்தல்

இலங்கைக்கான GSP+ 2017 மே மாதம் வழங்கப்பட்டது. அது 2023வரை நடைமுறையில் இருக்கும். அதனால் இலங்கை $500மில்லியன் பெறுமதியான நன்மையைப் பெற்றுள்ளது.

 

GSP வரிச்சலுகையின் நிபந்தனைகள்

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் போன்றவற்றில் பன்னாட்டு மரபொழுங்குகளைப்(conventions) பேணவேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இதற்கென 27 பன்னாட்டு மரபொழுங்குகளைப் பட்டியலிட்டுள்ளது. இதன் உள் நோக்கம் விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கை (Rule Based International Order) பேணுவதாகும்.

ஐரோப்பிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு

2021 ஜூன் மாதம் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளை மீறுவதாகவும் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டும் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் முடிவு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றம் எடுத்தது. அதன் அடிப்படையில் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியம் ஐவர் கொண்ட ஒரு குழுவை இலங்கைக்கு 2021 செப்டம்பர் 27-ம் திகதி அனுப்பியுள்ளது. அவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து இலங்கை அரச அதிபர், உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோரைச் சந்திக்கின்றார்கள். பின்னர் அவரகள் தமது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றத்திற்கு சமர்பிப்பர்.  மனித உரிமைக் கண்காணிப்பகம் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுத்துள்ளது.

GSP+வரிச்சலுகை ஓர் அரசுறவியல் கருவியா?

GSP+வரிச்சலுகை பெறும் துறைகளில் நான்கு இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். அது இலங்கையின் வேலைவாய்ப்பில் 15% ஆகும். அதில் 90% பெண்களாகும். 2010-ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது இலங்கைக்கான GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. குடிசார் உரிமைகள், அரசியல் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சித்திரவதை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறீசேன அதிபராக இருந்த போது மீளவும் வழங்கப்பட்டது. GSP+வரிச்சலுகை ஒரு அரசுறவியல் கருவியாகப் பாவிக்கப்படுகின்றது என கருத இடமுண்டு.

Soft Equity Research என்ற நிறுவனம் இலங்கைக்கான GSP+ இறக்குமதி வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்படவிருக்கும் விளைவுகள் பற்றிச் செய்த ஆய்வின் முடிவுகள்:

1. GSP+ ஏற்றுமதிச் செயற்பாட்டை அதிகரித்தது

2. GSP+ஐ இழப்பது பரந்த அளவிலான வெற்றிடத்தை ஏற்படுத்தாது.

3. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வருங்கால மேலதிக ஏற்றுமதியைப் பாதிக்கலாம்.

4. சிறு உற்பத்தியாளர்களின் இலாப வரம்பைக் குறைக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஆகக் கூடிய GSP+வரிச்சலுகை 9.4% ஆகும். இலங்கையினுடைய ரூபாவின் பெறுமதி அண்மைக் காலங்களாக 9.4% இலும் அதிக மாக தேய்மானம் அடைந்த நிலையில் டொலரின் மதிப்பில் இலங்கையில் உற்பத்திச் செலவு குறைந்துள்ளமையால் GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்படும் இழப்பு ஏற்கனவே ஈடு செய்யப்பட்டு விட்டது எனச் சொல்லலாம்.

GSP+வரிச்சலுகை நிறுத்தப்படும் போது இலங்கையின் ஏற்றுமதி பாதிக்கப்படும். ஏற்றுமதி குறையும் போது இலங்கையின் ரூபாவின் பெறுமதி குறைவடையும். அந்த வகையில் GSP+வரிச்சலுகை நிறுத்தப்படும் போது ஏற்படும் இழப்பீடு ஈடு செய்யப்படும். வெளிநாட்டு கொள்வனவாளர்களின் கொள்வனவு விலையில் பெரும் பாதிப்பு ஏற்படாது. 01/01/2019 ஒரு அமெரிக்க டொலர் ரூபா 180.66 ஆக இருந்ட்தது. 31/08/2021இல் அது ரூபா 198.98 ஆக இருக்கின்றது. இக்காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9%இற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.

GSP+வரிச்சலுகை பெறும் இலங்கை உற்பத்தியாளர்கள் GSP+வரிச்சலுகை நிறுத்தப்படுவதையிட்டு பெரிதும் கவலையடைந்துள்ளார்கள். Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யும் Boteju Industriesஇன் உரிமையாளர் Janaka Boteju GSP+வரிச்சலுகை நிறுத்தப்படுவது எமது நிறுவனத்திற்கு இறப்பு வீடு (It is like a funeral for us) போன்றது என்றார். தற்போது இலங்கை மக்கள் எதிர் கொள்ளும் நெருக்கடியை மனதில் கொண்டு உடனடியாக GSP+வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தாமல் கால அவகாசம் வழங்க வாய்ப்புண்டு.

GSP+வரிச்சலுகை நிறுத்தப்பட்டவுடன் இலங்கையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உடனடியாக தமது உற்பத்தியை தூக்கிக் கொண்டு போய் பங்களாதேசத்தில் வைத்துவிடும் என்பது போல் கருத்துத் தெரிவிப்பது சுத்த அபத்தமாகும். GSP+வரிச்சலுகை நிறுத்தினால் ஏற்படும் இழப்பை தமது உற்பத்தி செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் சமாளிக்கலாம். மூலப்பொருள்கள் வழங்குவோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களிடம் விலைக் குறைப்பைக் கேட்கலாம். ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கலாம். உற்பத்தி திறனை அபிவிருத்தி செய்யலாம். 2019 நவம்பரில் இலங்கை அரசு தனது வரி விதிப்பை குறைத்துள்ளது. 2010-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் GSP+வரிச்சலுகையை நிறுத்திய போது அதில் தொடர்புடைய எத்தனை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன?

Tuesday 28 September 2021

Evergrandeயின் வீழ்ச்சி சீனாவை வீழ்த்துமா?

 


ஒரு நாட்டில் உள்ள 300 பில்லியன் டொலர் கடன் பட்ட ஒரு தனியார் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் அது ஒரு பூகம்பமாக அமையும். ஆனால் சீனாவில் அது நிகழப்போவதில்லை. சீன அரசு தனது நாட்டு பொருளாதாரத்தையும் தனியார் நிறுவனங்களையும் தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. Evergrande Real Estate சீனாவில் இரண்டாவது பெரிய மெய்ப்பேட்டை(Real Estate) நிறுவனமாகும். உலகிலேயே அதிக கடன் பட்டுள்ள நிறுவனம் அதுவாகும். சீனாவில் 280இற்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300இற்கும் அதிகமான தொடர் மாடிகளை அது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் பிரபல காற்பந்தாட்டுக் கழகத்தையும் அது வாங்கி வைத்துள்ளது. Evergrande Real Estate இன் உரிமையாளர் சூ ஜியாயின் $10.6பில்லியன் உடமையுள்ள செல்வந்தர்.

இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சீனர்களுக்கு பாதிப்பு

1.6 மில்லியன் சீனர்கள் Evergrandeஇடமிருந்து வீடுகளை வாங்குவதற்காக முற்பணம் செலுத்தியுள்ளனர். 80,000 சீனர்கள் அதில் முதலீடு செய்துள்ளனர். சொந்த வீடு என்பது சீன நடுத்தர வர்க்க மக்களின் பெரும் கனவாகும். Evergrandeயின் நிதி நெருக்கடியில் சீன அரசு துரிதமாகச் செயற்படாமல் நிதானமாக நிற்கின்றது. Evergrandeஇன் உரிமையாளரகள், முதலீட்டாளரகள், கடன் கொடுத்தவர்கள் உரிய பாடம் கற்கட்டும் என சீன அரசு காத்திருக்கின்றது. அதேவேளை தமது சேமிப்புக்களை முதலீடு செய்த சேமிப்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சீன அரசு செயற்படுகின்றது. அவர்கள் கிளர்ச்சி செய்யத் தூண்டும் அல்லது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் செய்திகளை சீன அரசு தடை செய்து வருகின்றது.

Evergrande தேய்ந்த வரலாறு

2017இல் Evergrande தனது கடனில் பெருமளவை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதன் கடன் அதன் சொத்தின் பெறுமதியில் 240%ஆக இருந்தது. அதை 70%ஆகக் குறைப்பதாக Evergrande முடிவு செய்தது. 2018இல் ஐரோப்பிய நடுவண் வங்கி Evergrande கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நிறுவனம் என்றது.  2020 மார்ச்சில் தனது கடன் பளுவை ஆண்டு தோறும் $23.3 பில்லியனால் (150பில்லியன் யூவானால்) குறைப்பதாக அறிவித்தது. Evergrande தனது கட்டிட விலைகளில் 30%ஐக் குறைத்தது. 2020 ஒக்டோபரில் Evergrande ஹொங் கொங் பங்குச் சந்தையில் தனது இரண்டாம் நிலைப் பங்குகளை விற்று $555மில்லியன்களைத் திரட்டியது. 2020 நவம்பரில் மேலும் தனது பங்குகளை விற்று $1.8பில்லியனைத் திரட்டியது. 2021 ஜூன் மாதம் Fitch நிறுவனம் Evergrandeஐ B+இலிருந்து Bஆக தரம் தாழ்த்தியது. 2021 ஜூன் முதல் ஓகஸ்ட் வரை Evergrandeயின் மாதாந்த விற்பனை அரைவாசியாகக் குறைந்தது.

கட்டிடக் குமிழி

ஒரு நாட்டில் கட்டிடங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அவற்றின் விலை அதிகரிக்கும். அதன் மூலம் இலாமீட்ட பல முதலீட்டாளர்கள் கடன்பட்டு கட்டிடங்களைக் கட்டுவாரகள், அளவிற்கு அதிகமாகக் கடன்பட்டு தேவைக்கு அதிகமான கட்டிடங்களைக் கட்டும் போது கட்டிய கட்டிடங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் அவற்றைக் கட்டியவர்கள் தாங்கள் பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் கடன் கொடுத்த வங்கிகள் நிதிநெருக்கடிக்கு உள்ளாகும். 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்த போது சீனாவையும் அது பாதித்தது. அதனால் தனது பொருளாதார வளர்ச்சி குறையாமல் இருக்க சீன அரசு தனது வங்கிகளுக்கும் மாகாண அரசுகளுக்கும் கட்டிடத்துறைக்கும் உட்கட்டுமானத் துறைக்கும் அதிக கடன் வழங்கும் படி அறிவுறுத்தியது. பல தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கடன் பட்டு கட்டிடங்களைக் கட்டின. தேவைக்கு அதிகமாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதில் Evergrande மிக அதிகமான கட்டிடங்களைக் கட்டியது. சீனாவெங்கும் பல தொடர் மாடி வீடுகளைக் கொண்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருந்து நகரங்களின் அழகைக் கெடுக்கின்றன. அப்படிப்பட்ட பல கட்டிடங்கள் வெடிவைத்து தகர்கப்படுவதும் சீனாவில் நடந்தன. சீனாவின் கட்டுமானத் துறை பற்றிய பிரச்சனை பற்றி அறிய கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்

சீனாவின் கட்டுமானப் பிரச்சனை

சீனாப் பொருளாதரத்தை Evergrande பாதிக்குமா?

சீனர்கள் தமது நாட்டில் உள்ள நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன என்றவுடன் தமது முதலீடுகளை தமது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில் சீன அரசு மூலதன வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வைஹ்ட்திருக்கின்றது. அதனால் 1997-1998இல் ஆசிய நாடுகளில் நடந்த நிதி நெருக்கடி போல் சீனாவில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் Goldman Sach என்ற அமெரிக்க நிறுவனம் சீனாவின் மெய்ப்பேட்டை(Real Estate) துறையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வீழ்ச்சி சீனாவின் பொருளாதார வளர்ச்சியை 1.4% 4.5% வரை குறைக்கும் என எதிர்வு கூறியுள்ளது.



ஒஸ்ரேலியா பாதிக்கப்படுமா?

1980களில் இருந்து சீனா தொடர்ச்சியாக 40ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியைடையும் போது ஒஸ்ரேலியா 1992இல் இருந்து தொடர்ச்சியாக பொருளாதார வளச்சியை அடைந்து வருகின்றது. சீனாவின் கட்டுமானத்துறைக்கு தேவையான இரும்புத்தாது ஒஸ்ரேலியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இரும்புத் தாதின் விலை 2021 மேயில் உச்சத்தைத் (ஒரு தொன் $240) தொட்டு பின்னர் கடும் வீழ்ச்சியைக் கண்டது. 2021 செப்டம்பர் 27-ம் திகதி ஒரு தொன் இரும்புத்தாதின் விலை $109. சீனா தனது உட்கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தி மட்டுப்படுத்தும் போது ஒஸ்ரேலியாவின் சீனாவிற்கான ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் அமெரிக்கா தனது உட்கட்டுமானங்களில் பெருமளவு செலவு செய்யவிருப்பதால் அமெரிக்காவிற்கான ஒஸ்ரேலியாவின் இரும்புத்தாது ஏற்றுமதி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதிகரிக்கும்.

  •  சீனாவின் கட்டிடத்துறை நெருக்கடி உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் பாதுகாக்க (Ring Fence) முடியும் என்ற கருத்து பொருளியலாளர்களால் பரவலாக முன் வைக்கப்படுகின்றது.

அயர்லாந்தும் ஸ்பெயிலும் 2008இன் பின்னர் நிதி நெருக்கடிக்கு உள்ளான போது அவற்றின் கட்டிடத்துறை உற்பத்தி மொத்த தேசிய உற்பத்தியில் 29விழுக்காடாக இருந்தது. தற்போது சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் 29விழுக்காடு கட்டிடத்துறையில் இருந்து வருகின்றது. ஆனால் சீனா தனித்துவமானது. சீனா Evergrande Real Estateஇன் முதலீட்டாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியைச் செய்யலாம். இரண்டு மில்லியனிலும் அதிகமான சீனர்களில் அதிருப்தியை சீனா சம்பாதிக்க விரும்பாது. ஆனால் சீனக் கட்டிடத்துறை பாதிப்படைவதை சீனா தவிர்க்க விரும்பாது. சீனாவில் வெற்றிடமாக இருக்கும் கட்டிடங்களை விரைவில் நிரப்பக் கூடியவகையில் சீனப் பொருளாதாரம் வளர்வதற்கான அறிகுறிகள் இல்லை. சீனா தற்போது பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க பொருளாதாரச் சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது. சீன அரசின் தற்போதைய தலையாய நோக்கம் பொதுச் செழுமை எனப்படும் எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் என்பதே.

சீனாவின் தற்போதைய பொருளாதார நோக்கங்கள் பற்றி அறிய கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:

https://www.veltharma.com/2021/09/blog-post.html

Saturday 25 September 2021

BITCOIN: சீனத் தலையிடி நுண்மிய நாணயங்களுக்கு பேரிடி


சீனா 2021 செப்டம்பர் 24-ம் திகதி தனது நாட்டில் பிட்கொயின் (Bitcoin) என பரவலாக அறியப்படும் நுண்மிய நாணயங்களை (Cryptocurrencies) உருவாக்குதலையும் (Mining) அதன் மூலம் கொடுப்பனவுகள் செய்வதையும் தடை செய்துள்ளது. உலகிலேயே அதிக அளவு நுண்மியநாணயங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன. இதனால் சீனா விதித்த தடையின் பின்னர் நுண்மிய நாணயங்களின் பெறுமதி விழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் முன்னணி மெய்ப்பேட்டை (Real Estate) நிறுவனமான Evergrande நிதி நெருக்கடியைச் சந்தித்த தலையிடிக்கு நடுவில் சீன அரசு நுண்மிய நணயங்களுக்கு தடை விதித்தது அவற்றிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. Evergrandeஇன் நிதி நெருக்கடியால் உலகெங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. பொதுவாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைக் காணும் போது பிட்கொயின் உட்பட எல்லா நுண்மிய நாணயங்களும் பெறுமானச் சரிவைச் சந்தித்துள்ளன.

நுண்மிய நாணயங்களின் வரலாறு

2008-ம் ஆண்டு Satoshi Nakamoto என்ற புனைபெயரின் பின்னால் இருக்கும் ஒரு நபர் அல்லது பல நபர்கள் நுண்மிய நாணயத்திற்கான(Cryptocurrency) தமது வெள்ளை அறிக்கையைச் சமர்பித்தனர். தமது நாணயத்தின் மூலம் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு நடுத்தரகர், இடையில் கட்டணம் அறவிடுவோர் என யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் கட்டணமின்றி கொடுப்பனவுகளைச் செய்ய முடியும் என அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்களே 2009இல் பிட்கொயின் (Bitcoin) எனப்படும் முதலாவது நுண்மிய நாணயத்தை அறிமுகப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பல நுண்மிய நாணயங்கள் உருவாக்கப்பட்டாலும் நுண்மியநாணயம் என்றால் பிட்கொயின் என்பது போன்றும் பிட்கொயின் என்றால் நுண்மிய நாணயம் என்பது போன்றும் தோற்றப்பாடு உள்ளது. நுண்மிய நாணயம் என்பது நடுவண் வங்கியில்லா நாணயமாகும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது டொலருக்கு ஏற்பட்ட சோதனை எல்லா உலக நாணயங்களையும் பாதித்தது. இந்த நெருக்கடியின் விளைவாகவே நுண்மியநாணயங்கள் உருவாகின.

விழுந்த டொலரும் எழுந்த நுண்மிய நாணயங்களும்

அமெரிக்க டொலரின் பெறுமதி கேள்விக்குறியான நிலையில் நுண்மியமிய நாணயங்களில் (Cryptocurrency) பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றது. உலகெங்கும் பல நுண்மியமிய நாணயங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் அதிகம் பேசப்படுவதும் பிட்கொயின்(Bitcoin) ஆகும். 2020-ம் ஆண்டு பின்கொயினின் பெறுமதி 13%இற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்க டொலர் சுட்டியின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது.

BLOCKCHAIN என்னும் தொடர்பதிவேடுகள்


நுண்மிய நாணயங்கள் என்பது வெறும் எண்மியக் குறியீடுகள்(Digital Codes) மட்டுமே. அவை பெறுமதியுள்ள சொத்துக்கள் போல் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன. மற்ற சொத்துக்கள் போல் அவற்றின் பெறுமதியும் ஏறுவதும் உண்டு இறங்குவதும் உண்டு. பங்குகளின் பெறுமதியின் பின்னால் அவற்றின் நிறுவனங்களின் சொத்துக்கள், உற்பத்தித்திறன், மனித வளம் போன்றவை உண்டு. ஆனால் நுண்மிய நாணயங்களுக்கு அடிப்படையாக் சொத்துக்கள் இல்லை. Blockchain எனப்படும் தொடர்பதிவேட்டு தொழில்நுட்பம் மூலம் அவற்றின் கணக்குகள் பேணப்படுகின்றன. தொடர்பதிவேட்டு தொழில்நுட்பம் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அதன் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது என்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அந்த பதிவேடுகளைப் பராமரிக்கும் கணினித் தொகுதிகள் பெருமளவு மின்சாரத்தை பயன்படுத்துவதால் அது சூழல மாசுபடுத்துகின்றது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

நம்பிக்கையே நாணயம்

ஊழல் செய்வோர், போதைப்பொருள் விற்பனை செய்வோர், வரிஏய்ப்புச் செய்வோர், பயங்கரவாதிகள், கப்பம் கேட்போர் போன்றவர்களுக்கு நுண்மிய நாணயம் சிறந்த புகலிடமாக அமையும் என உலகின் பல அரசுகள் அச்சம் தெரிவித்தன. நாம் அன்றாடம் பாவிக்கும் காசு எனப்படும் நாணயங்கள் நடுவண் வங்கிகளால் வெளியிடப்படுபவை. நடுவண் வங்கிகள் மீதும் அவற்றின் பின்னால் உள்ள அரசுகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையே நாணயங்கள் உலகெங்கும் புழக்கத்தில் இருப்பதற்கு காரணமா அமைகின்றது. அந்த நம்பிக்கை கடந்த சில நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டவை. நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களை அகற்றி அவற்றின் இடத்தை தாம் பிடிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதுதான். ஏற்கனவே இணையவெளியில் நடக்கும் ஊடுருவல்கள், ஊழல்கள், திருட்டுக்கள் போன்றவற்றால் மக்களுக்கு அதன் மீது பெரும் அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களைப் போலியாக அச்சிடுவதும் உண்டு. கடன் அட்டை, வங்கி அட்டை, கைப்பேசிச் செயலிகள் மூலமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அந்த அட்டைகளையும் செயலிகளையும் வழங்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வர்த்தக நிறுவங்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும்.

பரிசோதனியில் ஈடுபட்ட JP MORGAN

JP MORGAN என்னும் நிதி நிறுவனம் Etherumஎன்னும் நுண்மிய நாணயம் பாவிக்கும் etherum technologyயை 2016-ம் ஆண்டில் இருந்து பரிசோதனைக்காக பவித்து வருகின்றது. இதற்காக அது டென்மார்க்கைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான செய்மதியையும் பாவித்துள்ளது. பாதுகாப்பன கொடுப்பனவுகளுக்காக இணையவெளிப் பதிவேடுகளையும் அது உருவாக்கியது. அந்த இணையவெளி தொடர்பதிவேடுகள் blockchain என அழைக்கப்ப்டுகின்றன. JP MORGAN அந்த தொடர்பதிவேட்டு தொழில்நுட்பத்தை Consensys என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

Teslaவின் ஏற்பும் மறுப்பும் பிட்கொயினின் ஏற்றமும் இறக்கமும்

Tesla என்னும் தானியங்கி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்றரை பில்லியன் டொலர்களுக்கு பிட்கொயின் (Bitcoin) என்னும் நுண்மிய நாணத்தை 2021 பெப்ரவரியில் வாங்கிய பின்னர் அதன் பெறுமதி பெருமளவில் அதிகரித்தது. ஒரு அலகு பிட்கொயின் $64,000களுக்கு இணயானது. தனது கார்களை வாங்க பிட்கொயின் மூலம் கொடுப்பனவைச் செய்யலாம் எனவும் Tesla அறிவித்தது. மூன்று மாதங்கள் கழித்து Tesla தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியது. Teslaஇன் பின்வாங்கலால் மற்ற நுண்மிய நாணயங்களான Ethereum, Binance Coin, Dogecoin, XRP, Litecoin ஆகிய நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பெருமளவில் வீழ்ச்சியடைந்தன. Tesla உரிமையாளரின் ஒரு டுவிட்டர் பதிவு பல மில்லியன் இழப்பீட்டை ஏற்படுத்தியது.

பொய்ச்செய்தியால் எழுந்த விழுந்த Litecoin

2021-09-13 திங்கட் கிழமை Global Newswire என்ற ஓர் ஊடகம் Walmart என்ற அமெரிக்க நிறுவனம் Litecoin என்ற நுண்நாணயத்தின் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் கொடுப்பனவைச் செய்யலாம் என்ற செய்தியைத் தவறுதலாக வெளியிட்டிருந்தது. அதனால் Litecoinஇன் பெறுமதி அதிகரித்தது. பின்னர் அரை மணித்தியாலத்தில் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.

எல் சல்வடோரின் பரிசோதனை

அமெரிக்காவின் டொலரையே தனது நாணயமாக கடந்த இருபது ஆண்டுகளாக வைத்திருக்கும் எல் சல்வடோர் நாடு அமெரிக்க டொலருடன் பிட்கொயின் என்னும் நுண்மிய நாணயத்தையும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் அதைப் பாவிப்பவர்களுக்கு $30 ஊக்கத்தொகையையும் வழங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிட்கொயினை வாங்கி விற்பனை செய்யும் போது ஈட்டும் இலாபத்திற்கு எல் சல்வடோரில் வருமான வரி விதிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது. எல் சல்வடோரின் தேசிய வருமானத்தில் இருபது விழுக்காடு வெளிநாடுகள்ல் வாழும் எல் சல்வடோரியர்கள் அனுப்பும் பணத்தில் இருந்து பெறப்படுகின்றது. அப்படி அனுப்ப்ப்படும் பணத்திற்கு வங்கிகள் கட்டணம் அறவிடும். அவர்கள் பிட்கொயின் மூலம் அனுப்பும் போது பெருமளவு கட்டணங்களைச் சேமிக்கலாம். ஆனால் பிட்கொயினை அறிமுகப் படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. ATM Machines மூலம் பிட்கொயின் கணக்கில் உள்ள நிதியில் இருந்து டொலர்களை பெற முடியாமல் அவை செயற்படாமல் இருந்தன. கைப்பேசிகளில் உள்ள Wallets செயலிகளுக்கு நிதி மாற்றம் செய்வதிலும் பல் சிக்கல்கள் இருந்தன. இதனால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். எல் சல்வடோர் அரசு 280மில்லியன் அமெரிக்க டொலரக்ளை பிட்கொயினில் முதலீடு செய்திருந்தது.  அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பிட்கொயினின் பெறுமதி குறைந்து அரசுக்கு மூன்று மில்லியன் டொலர் இழப்பீடு ஏற்பட்டது. எல் சல்வடோரின் மக்கள் தொகையில் அரைப்பங்கிற்கும் குறைவானவர்களே இணையவெளியைப் பாவிக்கும் வசதி கொண்டவர்கள். அங்கு எடுத்த கணக்கெடுப்பின் படி 70விழுக்காடு மக்கள் பிட்கொயின் என்னும் நுண்மிய நாணயத்தின் அறிமுகத்தை எதிர்க்கின்றார்கள். எல் சல்வடோரில் முப்பது விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர்.

Telsa தூக்கிப் போட்ட, எல் சல்வடோர் தூக்கி நிறுத்திய நுண்மிய நாணயத்தை சீனா மீண்டும் வீழ்த்தியுள்ளது.

Tuesday 21 September 2021

Money Printing: காசு அச்சிடுதல் என்பது என்ன?

 


இலங்கையின் நடுவண் வங்கியின் ஆளுநராக செப்டம்பர் 16-ம் திகதி (மீண்டும்) பொறுப்பேற்ற நிவாட் கப்ரால் முதல் செய்த வேலை 45.95பில்லியன் ரூபாக்களை அச்சிட்டதுதான். இலங்கை அரசின் திறைசேரிக்கு பணம் தேவைப்படும் போது அது தன் கடன்முறிகளை (Bonds) விற்பனை செய்யும். அரசு கடன் வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட கௌரமான பெயர்தான் கடன்முறி விற்பனை. கடன்முறிக்கு என ஒரு விலையும் வட்டி விழுக்காடும் கால எல்லையும் உள்ளன. அதை வாங்குபவர் அதிக விலை கொடுத்தும் வாங்காலம் அல்லது குறைந்த விலை கொடுத்தும் வாங்கலாம். முதலீட்டாளர்கள் யாரும் வாங்காத நிலையில் அரசின் கடன் முறிகளை நடுவண் வங்கி (Central Bank) வாங்கும். நடுவண் வங்கி வாங்குவதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசு உருவாக்குதல் மூலம் செய்யும். இதை நாணய அச்சிடுதல் என்பர். கொடுக்க வேண்டிய பணம் முழுவதையும் நடுவண் வங்கி காசாக அச்சடிக்காது. ஒரு பகுதி மட்டும் நாணயத் தாள்களாக அச்சிடப்படும். எனையவை நடுவண் வங்கியில் கணக்கு ஏடுகளில் செய்யப்படும் பதிவாக இருக்கும். நடுவண் வங்கியைப் பொறுத்தவரை அரசுக்கு கொடுத்த கடன் என்பது அதன் சொத்தாகவும் அது உருவாக்கிய பணம் கடனாகவும் அமையும்.

விற்க முடியாத கடன் முறி

2021 மார்ச் 30-ம் திகதி இலங்கை 45பில்லியன் ரூபா பெறுமதியான அரசின் கடன் முறிகளை விற்பனைக்கு விட்ட போது 10பில்லியன் ரூபா பெறுமதியான கடன் முறிகளை மட்டும் விற்பனை செய்ய முடிந்தது. பொதுவாக இலங்கை அரசின் கடன் முறிகளில் பெரும்பகுதியை பன்னாட்டு முதலீட்டாளர்கள் வாங்குவாரகள் இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடனில் 47% வெளிநாட்டு முதலீட்டாளர்களே வாங்குவார்கள். இலங்கை அரசின் கடன் மீளளிப்புத் திறனை கடன் மதிபீடு செய்யும் நிறுவனங்கள் தரம் தாழ்த்திய படியால் கடன் முறிகளை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் காசு அச்சிடும் சூழல் உருவானது.

பணம் உருவாக்கல் கடன்படுதலாகும்

நடுவண் வங்கி அரச முறிகளை வாங்குவதற்கு தனியார் வங்கிகளுக்கு கடன் கொடுப்பதும் உண்டு. தான் வாங்கிய கடன் முறிகளை விற்பனை செய்வதும் உண்டு. ஒரு நடுவண் வங்கி உருவாக்கும் பணம் அது நாட்டு மக்களிடம் படும் கடனாகும். எனது கையில் இலங்கை காசு ஆயிரம் ரூபா இருந்தால் அது நடுவண் வங்கி எனக்குக் கொடுக்க வேண்டிய கடனாகும்.  நடுவண் வங்கியிடம் இருந்து அரச திறைசேரி பெற்ற கடன் பணத்தை அரசு செலவு செய்யும் போது அது பல்வேறுவழிகளில் பொதுமக்களைச் சென்றடையும். பொதுமக்கள் அப்பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்கும் போது நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் அரசுக்கு வரி மூலமாக வருமானம் கிடைக்கும்.

பணம் உருவாக்கல் விலைவாசியை அதிகரிக்கும்

இலங்கையில் நடுவண் வங்கி உருவாக்கும் மேலதிக பணம் நாட்டு மக்களின் கைகளில் மேலதிக வருமானமாகப் போய் இப்போது சேர்வதில்லை. மாறாக ஏற்கனவே அரசு செய்து கொண்டிருக்கும் கொடுப்பனவுகளை தொடர்ந்து செய்வதற்காக இலங்கை அரசு கடன் படுகின்றது. மக்கள் கைகளில் மேலதிக பணம் சேராத படியால் மேலதிக கொள்வனவு இல்லை. நாட்டில் மேலதிக உற்பத்தி இல்லை. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைந்திருப்பதால் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மக்கள் கைகளுக்கு செல்லும் பணத்தை கொண்டு முன்பு வாங்கியவற்றிலும் பார்க்க குறைந்த அளவு பொருட்களையே மக்கள் வாங்குகின்றனர். பெருந்தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டுள்ள படியாலும் உரம் மற்றும் கிருமி நாசினி தட்டுப்பாட்டாலும் மக்கள் வாங்கும் உணவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி தொடர்ச்சியாக ஏறி அவசிய உணவுப் பொருட்களுக்கு இலங்கை மக்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டிய அல்லது வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண உருவாக்கம் விலைவாசியை அதிகரிக்கின்றது. விலைவாசி அதிகரித்தால் நாணயப் பெறுமதி குறையும். அதை சமாளிக்க நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி வரும். பணவீக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது நடுவண் வங்கி மேலும் பணத்தை உருவாக்குதலை வயிற்றோட்டத்திற்கு பேதிமருந்து கொடுப்பதற்கு ஒப்பிடுவார்கள்.

அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing)

நடுவண் வங்கி நாணயத் தாள்களை அச்சிடாமல் இலத்திரனியல் மூலமாக நிதி ஒதுக்கத்தைச் செய்து அதை வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும். அதைக்கொண்டு திறைசேரியின் கடன் முறிகள் வாங்கப்படும். இதை அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) என்பார்கள். இதைச் செய்யும் போது நீண்டகால கடன்களுக்கான வட்டிவிழுக்காடு குறைக்கப்படும்.

அரச பொருளாதார நடவடிக்கை

அரசு உற்பத்தித் துறையில் ஈடுபட்டு மக்கள் கொள்வனவு செய்யக் கூடிய பொருட்களை மேலதிகமாக உற்பத்தி செய்வது ஒரு தீர்வாக அமையலாம். அமெரிக்கா உட்கட்டுமானத்திற்கு இரண்டு ரில்லியன் டொலர்களை ஒதுக்குவதும் அதற்காகத்தான். 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள அமெரிக்கா அளவுசார் தளர்ச்சி என்னும் (Quantitative Easing) பெயரில் பண உருவாக்கத்தில் ஈடுபட்டது. பெருந்தொற்றுக்குப் பின்னர் பொது முடக்கத்தால் உற்பத்தித்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணத்தை மேலதிகமாக உருவாக்கியபோது அமெரிக்காவில் விலைகள் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டது. அதனால் வட்டி விழுக்காடு அதிகரித்தல் அவசியமானது.

கண்காணிக்கப்பட வேண்டிய பணப்புழக்கம்

நடுவண் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை கண்காணிக்க வேண்டும். நடுவண் வங்கியால் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் முடியும் குறைக்கவும் முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசி, வட்டி விழுக்காடு ஆகியவறைக் கருத்தில் கொண்டு நடுவண் வங்கி பணப்புழக்கத்தை முடிவு செய்ய வேண்டும். அளவிற்கு மிஞ்சிய பணத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டால் விலைவாசி ரில்லியன் விழுக்காடு கணக்கில் ஏறி பணம் செல்லாக்காசாகிவிடும் என்பதற்கு ஜிம்பாப்பேயில் 2008-2009இல் நடந்தவை சிறந்த உதாரணமாகும். அதோபோன்று ஆர்ஜெண்டீனா தொடர்ச்சியாக பல மிகைபணவீக்கத்தைக் கண்டது. வெனிசுவேலா கண்டுகொண்டிருக்கின்றது.

தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் இழந்த நடுவண் வங்கி

ஒரு பாராளமன்ற உறுப்பினர் இலங்கை நடுவண் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றமை நட்ப்பொழுங்கிற்கு மாறானதாகும். மேலும் அவரது நியமனத்துடன் நடுவண் வங்கியின் ஆளுநர் அமைச்சரவைத் தகுதியுள்ள அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். தனித்துவமாக இயங்க வேண்டியதாகக் கருதப்படும் நடுவண் வங்கி இப்போது ஓர் அரச திணைக்களம் ஆகிவிட்டது. இவர் முன்பு இலங்கை நடுவண் வங்கியின் ஆளுநராக இருந்த போது தன் கணக்கியல் புலமையால் கணக்கு விட்டு நமல் ராஜ்பக்சே அமெரிக்கா சென்றபோது அவருக்கு தேவையான ஆடம்பரச் செலவுகளை ஏற்பாடு செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் முன்பு ஆளுநராக இருந்த போது முறையற்ற முறையில் நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி இவரது நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றால் இவர் ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவராக திகழ்கின்றார். இவரது செயற்பாடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பார்க்க மீண்டும் ராஜபக்சேக்கள் தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

சிலர் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்றும் சிலர் அடையப் போகின்றது என்றும் கூறுகின்றார்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) இணையத் தளத்தில் “நாடுகள் வங்குரோத்தடைவதில்லை” (Countries Don’t Go Bankrupt) என ஒரு கட்டுரையும் உண்டு. அதற்குக் காரணம் நடுவண் வங்கிகளால் பணத்தை உருவாக்க முடியும் என்பதாகும்.

Sunday 19 September 2021

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம்

 


இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனைக்கு சீனாவின் கடன் பெறிதான் காரணம் என “ஜெய் ஹிந்த்” கும்பல்களின் Youtube Channels கூச்சலிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றிய பொருளாதாரம் ஆய்வுகளை செய்வதாயின் பொருளியல் கோட்பாடுகள் மேற்கோள் காட்டப்பட வேண்டும், அது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து மேற்கோள் காட்டப்படவேண்டும், புள்ளிவிபர ஆதாரங்கள் கொடுக்கப்படவேண்டும். இவற்றில் ஒன்று கூட இல்லாமல் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு சீனாதான் காரணம், சீனக் கடன் பொறிதான் காரணம் என “ஜெய் ஹிந்த்” நிபுணரகள்(?) குற்றம் சாட்டுகின்றனர். போதாக் குறைக்கு செப்டம்பர் -15 ஜூனியர் விகடன்(பெயரிலும் ஆங்கிலக் கலப்பு) சஞ்சிகையில் ஒரு கட்டுரையும் வெளிவந்துள்ளது. 

ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பற்றி பொருளியல் சொல்வது:

மொத்த உற்பத்தி=கொள்வனவு+முதலீடு+அரச செலவு+(ஏற்றுமதி-இறக்குமதி)

இங்கு கடன் இல்லை. ஆனால் ஒரு அரசு கடன் பட்டு செலவு செய்யும் போது பொருளாதார உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் இலங்கை அரசு கடன்பட்டு 30 ஆண்டுகள் போர் செய்தது.

கடனால் பிரச்சனை அல்ல கடன் பட முடியாததால் பிரச்சனை

2021 ஏப்ரல் மாத நிலவரப்படி இலங்கை பட்டுள்ள மொத்தக் கடனில் 47% முதலீட்டுச் சந்தைகளிடமிருந்தும், 9% உலக வங்கியிடமிருந்தும், 22% ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தும், 10% ஜப்பானிடமிருந்தும், 10% சீனாவிடமிருந்தும், 3% இந்தியாவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. இதில் சீனக் கடன் மட்டும் எப்படி இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது? இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை பற்றி அல் ஜசீரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் இலங்கையின் தற்போதைய நடுவண் வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால், பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஹர்ஷா குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மூவரில் எவரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு சீனாதான் காரணம் எனச் சொல்லவில்லை. நிஷான் டி மெல் இலங்கை 2019இன் இறுதியில் (பொருளாதாரத்தை தூண்டுவதற்காக) பாரிய வரிக்குறைப்பைச் செய்தபடியால் இலங்கையின் கடன் படு திறனை பன்னாட்டு அமைப்புக்கள் தரம் தாழ்த்தின என்றும் அப்படித் தரம் தாழ்த்திய படியால் இலங்கை உலக முதலீட்டுச் சந்தையில் கடன் பெற முடியாமல் போனதால் இலங்கையில் வெளிநாட்டுச் செலவாணித் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றார். அப்படிப் பார்க்கும் போது கடன் பட்டதால் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்படவில்லை, கடன் பட முடியாமல் போனதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 


 

போரால் சீரழிந்த இலங்கைப் பொருளாதாரம்

அரசு கடன் பட்டு 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது. இந்த உள்நாட்டுப் போரால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஒஸ்ரேலியாவின் The University of Queenslandஇன் School of Economics ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை உள்நாட்டுப் போர் இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியது என்று முடிவு செய்துள்ளது.

ஓர் அரசின் வரவிலும் பார்க்க செலவுகள் அதிகரிக்கும் போது அது கடன் படும். இலங்கை அரசின் வரவிலும் பார்க்க செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது 1980களின் ஆரம்பத்தில் இருந்துதான். 1970களில் பொருளாதார வளர்ச்சியில் உலகம் பார்த்து வியந்த நாடுகளாக ஹொங் கொங், வட கொரியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் இருந்தன. அவற்றைப் பார்த்துத்தான் அப்போதைய சீன அதிபர் Deng Xioaping அமெரிக்காவின் நட்பு நாடுகள் திறந்த பொருளாதாரத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியடைவதைச் சுட்டிக் காட்டி சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். 1977-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தன இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாகவும் அமெரிக்க நட்பு நாடாகவும் மாற்றி இலங்கையும் சிங்கப்பூரைப் போல் முன்னேற்ற முயற்ச்சித்தார். அதற்காக திருக்கோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பும் வசதியையும் சிலாபத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Ultra low wave தொடர்பாடல் வசதியையும் கொடுக்க இணங்கினார். இதை விரும்பாத இந்திரா காந்தியின் இந்திய அரசு அப்போது கைத்துப்பாக்கிகளுடனும் கைக்குண்டுகளுடனும் இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராளிகளை இந்தியாவிற்கு அழைத்து போர்ப்பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கினார். இதனால் இலங்கையில் ஓர் உள்நாட்டுப் போர் உருவாகியது. அதற்காக இலங்கை அரசு படைத்துறைக்கு பெருமளவு செலவு செய்தது. இலட்சக் கணக்கானோர் இலங்கைப் படையில் சேர்க்கப்பட்டனர். இலங்கையின் செலவு வரவிலும் பார்க்க பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. போதாக் குறைக்கு 1987இல் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை தமிழர்களின் ஒரு இலட்சம் வீடுகளை அழித்து இலங்கைக்கு பெரும் இழப்பீடு ஏற்படுத்தியது. இலட்சக் கணக்கானோர் இலங்கையில் இருந்து வெளியேறினர். அதனால் இலங்கையின் மொத்தக் கொள்வனவு குறைந்தது. இலங்கைப் பொருளாதாரம் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தது. இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்களின் கைகள் ஓங்கியிருந்த நிலையில் தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு ஓர் இடைக்கால தன்னாட்சி அரசைக் கொடுக்க முன்வந்தார். தமிழர்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பொறுக்க முடியாத இந்தியா ரணிலை சந்திரிக்கா பண்டாரநாயக்கா மூலமாக பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சேயை தலைமை அமைச்சராக்கியது. பின்னர் இந்தியாவும் இணைந்து தமிழர்களின் போராட்ட வலுவை 2009இல் அழித்தது. 2009இல் இலங்கை அரசைக் கடனாளியாகவும் தமிழர்கள் ஒரு கையிறு நிலையையும் இந்தியாதான் உருவாக்கியது.

1980களில் இலங்கையில் அமெரிக்க தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக இந்தியா செய்த சதியால்தான் இலங்கையின் கடன்பளு அதிகரித்தது. அதனால் இப்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“சீனக் கடன் பொறி” என்பது சீனாவின் BELT & ROAD INITIATIVEஐ குழப்ப மேற்கு நாடுக்ள் உருவாக்கிய பதமாகும். அது இப்போது “ஜெய் ஹிந்த்” கும்பல்கள் கொறிக்கும் பொரியாக மாறிவிட்டது. தமிழர்களைப் பொறுத்தவரை தமிழர்களை இனக்கொலை செய்ய மறைமுகமாக உதவி செய்த சீனாவும் நேரடியாக உதவி செய்த இந்தியாவும் அயோச்க்கிய நாடுகளே.

செப்டம்பர் -15 ஜூனியர் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த. ஈழத்தவர் எழுதிய கட்டுரையில் இந்தியச் சதியை மறைத்தமை கவலைக்குரியது.

Saturday 18 September 2021

AUKUS: ஆங்கில முக்கூட்டணிக்கு சீனா அஞ்சுமா?

 


 ஒஸ்ரேலியா(A), பிரித்தானியா(UK),  அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து இந்த மூன்று ஆங்கிலம் பேசும் நாடுகளின் கூட்டணியை AUKUS என அழைக்கின்றனர். மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்கள் 2021 செப்டம்பர் 15-ம் திகதி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கலந்துரையாடி இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த மூன்று நாடுகளின் கூட்டணி இணையவெளிப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, துளிமத் தொழில்நுட்பம் (Quantum Technology), கடல் நீரடிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதாகவும் இணையவெளிக் கலந்துரையாடலில் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த மூன்று நாடுகளுடன் கனடாவும் நியூசிலாந்தும் இணைந்து ஐந்து கண்கள் (Five Eyes) என்னும் உளவுக் கூட்டமைப்பை அமைத்துள்ளன. 

"ஜெய்ஹிந்த்" கும்பல்களின் உளறல்

AUKUS ஒத்துழைப்பு பற்றிய செய்தி வந்தவுடன் "ஜெய்ஹிந்த்" கும்பல்கள் தங்கள் youtube Channelsகளில் "சீனா அச்சம்", "கலக்கத்தில் சீனா" என்ற தலைப்பில் உளற ஆரம்பித்துவிட்டன. AUKUS சீனாவிற்கு எதிரான கூட்டணியா என்ற கேள்விக்கு அதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கவில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும் கடற்பரப்பில் மூன்று நாடுகளின் படைத்துறையை ஒருங்கிணைப்பதே தமது நோக்கம் என்றனர். ஒஸ்ரேலியாவை சீன அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது இந்த AUKUS ஒத்துழைப்பின் முக்கிய நோக்கம் என்று சொல்லலாம். ஒஸ்ரேலியாவிற்காக இந்த மூன்று நாடுகளும் உருவாக்கவிருக்கும் அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் தென் சீனக் கடல்வரையும் பயணிக்க வல்லன. டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலும் பார்க்க அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் வேகமாகப் பயணிக்க வல்லன, நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்க வல்லன, புலப்படுவதற்கு கடினமானவை. 

சீனாவின் எதிர்வினை

AUKUS உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் மூன்று நாடுகளையும் தங்கள் பனிப்போர்க்காலத்து கருத்தியல் தப்பெண்ணங்களை கைவிட வேண்டும் என்றார். மேலும் அவர் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவற்றிற்கிடையிலான நல்லெண்ணங்களை வளர்க்க வேண்டுமே தவிர மூன்றாம் நாடு ஒன்றை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றார். "கலக்கத்தில் சீனா" என்பதிலும் பார்க்க கரிசனை கொண்ட சீனா என்பதே பொருத்தமாக இருக்கும் என்பதை சீனத் தூதுவரின் கருத்தில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.

UNDERSEA FIBRE OPTIC CABLES கடலடி ஒளியிழை வடம்

கடலடியில் வைக்கப்பட்டுள்ள ஒளியிழை வடம் மேற்கு நாடுகளின் குடிசார் மற்றும் படைத்துறைத் தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றை துண்டிக்காமலும், ஒற்றாடல் செய்யாமலும் இருக்க அவற்றுக்கான பாதுகாப்பு அவசியமாகும். அவற்றைப் பாதுகாப்பதற்கு சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுகின்றது. அதற்கான ஒத்துழைப்பு AUKUS இன் நோக்கங்களில் ஒன்றாகும் .

போட்டிக் களமாகும் ஆசிய-பசுபிக் பிராந்தியம்

தனது Queen Elizabeth விமானம் தாங்கிக் கப்பலை தென் சீனக் கடலூடாக ஜப்பானுக்கு அனுப்பி ஜப்பானுடன் ஒரு போர் ஒத்திகையை பிரித்தானியக் கடற்படை செய்தது. ஆசிய-பசுபிக் என்னும் பெரும் கடற்பரப்பில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் AUKUS கூட்டணி உருவாகியுள்ளது. அதன் முதற்பணியாக அணுவலுவில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதாகும். சீனாவில் இருந்து 7448கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒஸ்ரேலியாவில் 1.2மில்லியன் சீனர்கள் வாழ்கின்றார்கள். சீனா கடந்த சில ஆண்டுகளாக ஒஸ்ரேலியாவை தன் பிடிக்குள் கொண்டு வர பல வழிகளில் முயல்கின்றது. ஒஸ்ரேலியா சீனாவிற்கு 150மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியை சீனாவிற்கு 2020இல் செய்திருந்தது. ஒஸ்ரேலியா ஆகக் கூடிய ஏற்றுமதியை அதாவது மொத்த ஏற்றுமதியில் 39%ஐ சீனாவிற்கே செய்கின்றது.  சீனர்களின் குடிவரவும் உல்லாசப் பயணமும், சீன முதலீடும் ஒஸ்ரேலியாவில் கற்கும் சீன மாணவர்களும் ஒஸ்ரேலியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்தன. கொவிட்-19 தொற்று நோய் சீனாவில் இருந்து உருவாகியதா என்பது தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒஸ்ரேலியா பகிரங்கமாக அறிவித்தமை சீன ஒஸ்ரேலிய உறவை மோசமாக்கியது. அதைத் தொடர்ந்து சீனா ஒஸ்ரேலியா மீது பல பொருளாதார மிரட்டல்களை ஒஸ்ரேலியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மீதான தடை என்னும் பெயரில் விடுத்தது. 

தற்போது உள்ள அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கையைப் பார்ப்போமானால் அமெரிக்கா-68, இரசியா-29, சீனா-12, பிரித்தானியா-11, பிரான்ஸ்-8, இந்தியா-1.

நியூசிலாந்து ஏன் இல்லை?

ஆசிய பசுபிக் பிரந்திய ஒத்துழைப்பில் பசுபிக் பிராந்தியத்தின் இன்னொரு முக்கிய நாடாகிய நியூசிலாந்து ஏன் இல்லை என்ற கேள்வியும் எழுகின்றது. நியூசிலாந்து மக்கள் அணுக்குண்டுகளை எதிர்ப்பவர்கள். நியூசிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் அணுக்குண்டுகள் தாங்கிய அமெரிக்க கப்பல்களும் விமானங்களும் நியூசிலாந்திற்கு வரக்கூடாது என நியூசிலாந்து 1985இல் தடை விதித்தபின்ன முடிவிற்கு வந்தது. நியூசிலாந்து விலகியிருப்பதற்கு அல்லது தவிக்கப்பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம். இன்னும் ஓர் ஆங்கிலக் குடும்ப நாடாகிய கனடா அதன் பூகோள் இருப்பிடம் காரணமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

இலாபம்தான் அமெரிக்காவின் இலக்கு

சீனாவை சமாளிக்க அமெரிக்கா தனது படைகளை ஒஸ்ரேலியாவில் குவிப்பதிலும் பார்க்க ஒஸ்ரேலியாவிற்கு தனது படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது அமெரிக்காவிற்கு இலாபகரமான ஒன்றாகும். சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது கடற்படை வலிமையை ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை விஞ்சும் வகையில் விரிவு படுத்தியும் புதுமைப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளால் சீனாவைத் தனித்து சமாளிக்க முடியாது என்ற நிலையில் சீனாவிற்கு எதிராக பல கூட்டணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

1. அமெரிக்க இந்தியக் கூட்டணி

சீனாவின் படைவலு பெருகி வருவதால் அச்சம் கொண்ட இந்தியா அமெரிக்காவுடன் LEMOA என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. தனது நாட்டிலோ அல்லது அயல்நாடுகளிலோ வல்லரசு நாடுகளின் படையினர் இருக்கக் கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement (LEMOA) என்ற ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன் படி அமெரிக்கப் படையினர் இந்தியாவில் உள்ள படைத்தளங்களை தேவை ஏற்படும் போது பாவிக்கலாம்.  அதே போல் இந்தியாவும் அமெரிக்காவின் படைத்தளஙகளை தமக்கு தேவை ஏற்படும் போது பாவிக்கலாம். 

குவாட்(QUAD) ஒன்று கூடாத கூட்டணி

சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நாடுகளான ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதற்கான உரையாடல் ஒன்று முன்னாள் ஜப்பானிய அதிபர் சின்சே அபேயால் தொடக்கி வைக்கப்பட்டது.  முதலில் இந்தியா அதில் இணைந்தால் சீனாவை அது சினம் கொள்ளவைக்கும் என தயங்கியது. ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் செய்யும் வர்த்தகம் பாதிக்கப்படும் என கரிசனை கொண்டு தயங்கியது. சீனா இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து செய்யும் அத்து மீறல்களாலும் ஒஸ்ரேலியாவில் சீனாவின் மறைமுகத் தலையீடுகளாலும் இரு நாடுகளும் அந்த உரையாடலில் பங்கேற்றன. இதை ஒரு படைஅதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செய்யும் மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்து கொண்டது. ஆனாலும் இது ஒரு பாதுகாப்பு உரையாடல் மட்டுமாக இருக்கின்றது. ஒரு படைத்துறைக் கூட்டணியாக உருவாகவில்லை. 

ஒன்று போனால் ஒன்று வரும்

ஒஸ்ரேலியாவிற்கு தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் உருவாக்குவதாக 2016இல் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த வருமான வாய்ப்பு தமக்கு கிடைக்காததால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏமாற்றமடைந்திருந்தன. பிரான்ஸால் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை மட்டும் உருவாக்க முடியும். தற்போது அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை வைத்திருக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒஸ்ரேலியாவிற்கு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஒத்துக் கொண்டமையினால் ஒஸ்ரேலியாவிற்கு பிரான்ஸ் உருவாக்க இருந்த 12 நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டுளது. பிரான்ஸ் தனக்கு துரோகமிழைக்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி தன் சினத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்ஸின் முதுகில் குத்திவிட்டார்கள் என்றார். பிரான்ஸும் தென் சீனக் கடலுக்கு தன் கடற்படையை அனுப்பியிருந்தது. தனது ஆட்சேபனையாக அமெரிக்காவில் கடற்படையுடன் நடக்கவிருந்த ஒரு நிகழ்வையும் பிரான்ஸ் இரத்துச் செய்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஒஸ்ரேலியாவிற்குமான தனது தூதுவர்களை உரையாடலுக்காக அழைத்துள்ளது. இது இத்துடன் முடியுமா அல்லது பிரான்ஸின் சினம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான நட்பைப் பாதிக்குமா, நேட்டோ ஒத்துழைப்பை பாதிக்குமா, ஐரோப்பிய ஒன்றியமும் பிரான்ஸைப் பின்பற்றுமா போன்ற கேள்விகளுகான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சீனா பிரான்ஸிற்கு தன் நட்புக்கரத்தை நீட்டலாம். 

புதிய AUKUS கூட்டணியால் சீனாவை அடக்க முடியாது. அது  உலக ஆதிக்கத்திற்கான தனது பாதையில் அமைதியான எழுச்சி என்னும் போர்வையில் தொடர்ந்து பயணிக்கும். 

Friday 17 September 2021

ஆளில்லா போர் விமானங்களின் தோற்றமும் பயன்பாடும்

 


முதலாவது ஆளில்லா விமானம் 1783இல் உருவாக்கப்பட்டது. 1898இல் முதலாவது வானலை மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டது. அதைப் பறக்கவிட்டபோது நம்பமுடியாத பார்வையாளர்களில் சிலர் அது பயிற்றுவிக்கப்பட்ட குரங்குகளால் இயக்கப்படுவதாக நம்பினர். முதலாம் உலகப் போரில் 1915-ம் ஆண்டளவில் பிரித்தானியர்கள் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் எதிரியின் படைநிலைகளைப் படம் பிடித்தனர். 1935இல் நவீன ஆளில்லா விமானம் DeHaviland DH82B Queen Bee என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1937இல் அமெரிக்க கடற்படையினர் தமது ஆளில்லா விமானத்தை உருவாக்கினர். 1973இல் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை உருவாக்கி அதை 1982இல் நடந்த போரில் சிரிய வான்படைக்கு எதிராக வெற்றீகரமாகப் பயன்படுத்தியது. அதனால் திருப்தியடந்த அமெரிக்கா தனது ஆளில்லா விமான உற்பத்தியை அதிகரித்தது. பின்னர் அமெரிக்கா 1996இல் முழுமையான படைக்கலன் தாங்கிய தாக்குதல் ஆளில்லா விமானத்தை உருவாக்கியது. 2010இல் திறன்பேசிகள் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டன. 2013இல் அமெரிக்காவில் பொதிகளை விநியோக்கிக்கும் நிறுவனங்கள் ஆளில்லா விமானங்களை பாவிக்கத் தொடங்கின.

புலப்படா ஆளில்லா விமானங்கள்

அமெரிக்கா ரடார்களுக்கு புலப்படாத (Stealth) ஆளில்லா விமானங்களை உருவாக்கியது. லொக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் அந்த விமானத்திற்கு RQ-170 Sentinel எனப் பெயரிடப்பட்டது. அவற்றில் ஒன்று ஈரானை வேவுபார்க்கச் சென்றபோது அங்கு பழுதடைந்து தரையிறங்கியது. அதை சீனர்கள் இணையவெளியூடாக ஊடுருவி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தரையிறக்கினர் எனச் சொல்லப்பட்டது. ரடார்களுக்கு புலப்படாத ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தை அறிய அப்படிச் செய்யப்பட்டது. என்பதை ஈரானும் சீனாவும் மறுத்திருந்தன.

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்

2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா ஆளில்லா போர்விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல்கள் பல நடத்தின. பராக் ஒபாமாவிற்கு இச்செயல் மிகவும் பிடித்திருந்தது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ உலகெங்கும் பல இரகசிய ஆளில்லா போர்விமானத் தளங்களை வைத்திருக்கின்றது. அவற்றில் இருந்து ஆபிரிக்காவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் பல தாக்குதல்கள் செய்தன. அவற்றால் பல அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அல் கெய்தா, ஐ எஸ் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பிரித்தானியாவின் படைத்தளங்களில் இருந்து சென்ற பல ஆளில்லாப் போர் விமானங்கள் 3500மைல்கள் பறந்து சென்று ஆப்கானிஸ்த்தானில் தாக்குதல் நடத்தின.

ஈரான்

2014இல் ஈரான் தற்கொலை ஆளில்லா விமானங்களை உருவாக்கியது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் கடல், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகள் மீது மோதி அவை வெடிக்கச் செய்யப்படும். இவற்றின் பறப்புத்தூரம் 200கிலோ மீட்டர்களாகும். அவை பறக்க வல்ல ஆகக் கூடிய உயரம் 4500 மீட்டர். Shaher-129 என்னும் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய ஆளில்லா விமானத்தை ஈரான் 2005-ம் ஆண்டு உருவாக்கியது. அமெரிக்காவின் MQ-1 Predator ஆளில்லா விமானங்களை ஒத்தவையான Shaher-129ஆல் கண்காணிப்பையும் தாக்குதலையும் செய்யலாம். 2021-ம் ஆண்டு ஈரான் உருவாக்கிய காசா என்னும் ஆளில்லாப் விமானம் 13குண்டுகளை ஒரேயடியாக தாங்கிச் செல்லக் கூடியது.

உலக கண்காணிப்பு

உலகக்கடற்பரப்பு முழுவற்றையும் கண்காணிக்கக்கூடிய வகையில் MQ4C Triton என்னும் ஆளில்லா விமானங்களை 2014இல் உருவாக்கியது. தொடர்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய MQ4C Triton விமானங்களில் உயர்தர உணரிகளும் ஒளிப்பதிவுக் கருவிகளும் பொருத்தப்பட்டன. மற்ற அமெரிக்கப் போர் மற்றும் வேவு விமானங்களுடன் தொடர்பாடல்களை இவை செய்ய வல்லன. இதனால் உலகெங்கும் உள்ள அமெரிக்க கடற்படைக்கலன்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறியக் கூடிய வல்லமையை அமெரிக்கப் படையினர் பெற்றனர்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பன்னாட்டு நிறுவனத்தின் மாநாட்டில் 2021 செப்டம்பர் 12-ம் திகது உரையாற்றிய இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெனி காண்ட்ஸ் ஈரானிய நிபுணர்கள் ஈராக், யேமன், லெபனான் ஆகிய நாடுகளில் செயற்படும் போராளிகளுக்கு ஆளில்லா விமானப் பயிற்ச்சி வழங்குவதாக குற்றம் சாட்டினர். ஈரானின் கஷான் படைத்தளத்தில் இந்தப் பயிற்ச்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

2021 மே மாதம் காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆளில்லா விமானத்தைப் பாவித்தனர். அதே வேளை சிரியாவில் இருந்தும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

2021 ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஓமானின் கடற்கரை ஓரத்தில் Mercer Street என்னும் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் செய்யப்பட்டது. கப்பலில் பணிபுரிந்த இருவர் கொல்லப்பட்ட அத் தாக்குதல் ஈரானின் வேலை என இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.

யேமனில் செயற்படும் ஹூதி போராளிகள் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் விமான நிலையங்கள் போன்றவற்றில் பல தாக்குதல்களை நடத்தினர்.  2005இல் இருந்து பல தீவிரவாத அமைப்புக்களும் ஆளில்லா விமானங்களைப் பாவிக்கத் தொடங்கின. அதில் முன்னோடியாக லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு திகழ்ந்தது. ஆனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பால் காத்திரமான இழப்புக்களைச் செய்ய முடியவில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                                         பல்-திரளப்போர் முறை (multi-domain warfare) 

தாக்குதல் போர்விமானங்களும் ஆளில்லாப் போர் விமானங்களும் இணையவெளிப்படையினரும் இணைந்து செயற்படுவது பல்-திரளப் போர்முறையாகும். முதலில் எதிரியின் பிரதேசத்தினுள் ஆளில்லாப் போர் விமானங்கள். பறந்து சென்று தாக்குதலில் ஈடுபடும். சில ஆளில்லாப் போர் விமானங்கள் எதிரியின் ரடார்களுக்கு பெரிய போர்விமானம் போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் சமிக்ஞைகளை வெளியிடும். எதிரி இந்த விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் போது எதிரியின் விமான எதிர்ப்பு முறைமைகளின் இருப்பிடத்தை கட்டுப்பாட்டகத்திற்கு அறிவித்து விடும். பின்னர் அந்த இடங்களில் புலப்படா போர் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தும். எதிரியின் தாக்குதல் நிலைகளில் உள்ள கணினிகளின் செயற்பாடுகளை போர் விமாங்களில் உள்ள கணினிகள் இணையவெளிப் போர் மூலம் செயலிழக்கச் செய்யும். உரையாடல் மூலமும் கையசைவுகள் மூலமும் படையினரால் ஆளில்லா விமானங்களை இயக்கும் முயற்ச்சியில் 2020இன் ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் வெற்றி கண்டனர். விமானங்களும் ஆளில்லா விமானங்களும் செயற்கை நுண்ணறிவை பாவித்து தாமாகவே மனித தலையீடின்றி தமக்குள் தொடர்பாடலை ஏற்படுத்தி நிலைமைக்கு ஏற்ப தமது பறப்புக்களை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பமும் பாவனைக்கு வந்து விட்டன.

தலிப்பன்களை தலையெடுக்க வைத்த ஆளில்லா விமானங்கள்

தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றுவதற்கு Piram Qul என்ற தஜிக் போர்ப்பிரபுவைக் கொன்றே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. அவரை தற்கொலைத் தாக்குதலாளிகள் மூலமாக கொல்லும் போது அவருடன் பல பொதுமக்களையும் கொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அவரை வேறுவிதமாக கொல்ல தலிபான்கள் முடிவு செய்தனர். தலிபான்கள் தங்கள் ஆளில்லாப் போர் விமானப் படையணியை 2019இல் பல இயந்திரவியல் படித்த இளையோரைக் கொண்டு உருவாக்கியிருந்தனர். அவர்கள் தமக்குத் தேவையான ஆளில்லா விமானங்களை சீனாவின் விவசாயப் பண்ணைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஆளில்லா விமானங்களை வாங்கி அதை பாக்கிஸ்த்தானுடாக ஆப்கானிஸ்த்தானுக்கு கடத்தினர். கிருமி நாசினி தெளிக்கும் பகுதியை அவர்கள் குண்டு வீசும் பகுதியாக மாற்றினர். அவர்கள் தலிபான்களின் உளவுப் பிரிவின் மூலம் போர்ப்பிரபு Piram Qul இருக்கும் இடத்தை அறிந்து கொண்டிருந்தனர். அவர் 2021 மே மாதம் 2-ம் திகதி கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் வானத்தைப் போல நீல நிறம் பூசிய ஆளில்லா விமானத்தை அங்கு அனுப்பி அதிலிருந்து வீசப்பட்ட குண்டின் மூலம் அவரைக் கொன்றனர். அதைத் தொடர்ந்து ஆப்கான் அரச படையினரின் பல சோதனைச் சாவடிகளை தலிபான்கள் தமது ஆளில்லா விமானங்கள் மூலம் அழித்தனர். அதன் பின்னர் பல பிரதேசங்கள் தலிபான்கள் வசம் வீழ்ந்தன. யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்கப் படைகள் விலகிக் கொண்டிருக்கையில் ஆப்கானிஸ்த்தான் தலிபானகளின் வசமானது.

ஆர்மீனிய அஜர்பைஜான் போர்

Bayraktar TB2 என்ற துருக்கி உருவாக்கிய ஆளில்லாப்போர் விமானங்கள் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் 2020இல் நடந்த போரின் திசையை மாற்றியது. இரசியப் படையினரின் வழிக்காட்டலுடனும் உதவியுடனும் ஆர்மீனியர்கள் போரிட்டனர். உலகப் புகழ் பெற்ற இரசிய போர்த்தாங்கிகள், கவச வாகனங்கள் மட்டுமல்ல அவர்களின் வான் படைத்தளங்கள், வான் பாதுகாப்பு முறைமைகள், ஆட்டிலறி நிலைகள் போன்ற பலவற்றை துருக்கியின் Bayraktar TB2 ஆளில்லாப் போர்விமானங்கள் அழித்தன. அந்தப் போரில் அஜர்பையான் வானாதிக்கம் செய்ய Bayraktar TB2 உதவின.

இக்கட்டுரையின் தொடர்ச்சியாக சீனா, இரசியா, இந்தியா ஆகியவற்றின் ஆளில்லாப் போர்விமானங்கள் பற்றியும் ஆளில்லா விமானங்களில் செயற்கை விவேகம் போன்ற புதிய தொழில் நுட்பம் உள்ளடக்கப் பட்டவை பற்றியும் தகவல்கள் உள்ளடக்கப்படும்.

Thursday 9 September 2021

தலிபான்களின் காபந்து அரசு தேறுமா?



அமெரிக்கா தலைமையிலான அந்நியப் படையினர் வெளியேறி மூன்று வாரங்களின் பின்னர் தலிபான் அமைப்பு 2021 செப்டம்பர் 7-ம் திகதி ஆப்கானிஸ்த்தானுக்கான காபந்து அரசை அறிவித்துள்ளது. மூன்று வார தாமதம் உள்ளக இழுபறியா அல்லது நன்கு சிந்திக்க வேண்டி இருந்ததாலா என்பது பற்றி அறிய முடியவில்லை. அமெரிக்க சஞ்சிகை ஒன்று அதை all-Male அரசு என விபரித்துள்ளது. ஒரு நாளேடு பழைய தலிபான் போன்ற புதிய தலிபான்களைப் பாருங்கள் என்றது. முன்னைய ஆப்கான் அரசின் மகளின் விவகார அமைச்சர் ஹ்பீபா சராபி தலிபான்கள் மாறிவிட்டார்கள் என மேற்கு நாடுகள் நம்பியமை தவறு தான் சுட்டிக் காட்டியது உண்மையாகி விட்டது என்றார். இந்திய ஊடகம் ஒன்று தலிபான்களின் காபந்து அரசில் பாக்கிஸ்த்தானின் முத்திரை நன்கு பதிந்துள்ளது என்கின்றது.

அரசின் முக்கிய உறுப்பினர்கள்

தலிபான்கள் அறிவித்த காபந்து அரசின் தலைமை அமைச்சர் பொறுப்பில் உள்ள முல்லா முகம்மத் ஹசன் அக்குண்ட் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட ஒருவராவார். அத்துடன் அமெரிக்க குற்றத் தடுப்பு பிரிவான எஃப்.பி.ஐயால் தேடப்படும் ஒருவருமாவார். தலிபானின் உயர் அவையான ரெக்பாரி சுராவின் தலைமைப் பதவியை அவர் நீண்டகாலமாக வகித்திருந்தார். 1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்த்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் துணைத் தலைமை அமைச்சராகவும் அக்குண்ட் பணியாற்றினார். அவரது துணைத் தலைமை அமைச்சராக தலிபான்கள் சார்பில் அமெரிக்காவுடன் கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சு வார்த்தை நடத்திய முல்லா பரதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் மற்ற துணை தலைமை அமைச்சர் அப்துல் சலாம் கனாஃபியும் ஐக்கிய நாடுகள் சபையால் தடைவிதிக்கப்பட்டவர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை: பெண்ணங்கு இல்லை

கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பதில் வல்லவரான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் நாடுகளை அங்கீகரிப்பது தமது சபையின் பணியல்ல, அது உறுப்பு நாடுகளின் வேலை என்றார். ஆனால ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் பிரமிளா பற்றன் பெண்களுக்கு காபந்து அரசில் இடம் கொடுக்காமயை சுட்டிக்காட்டி அது புதிய அரசு பெண்களையும் சிறுமிகளையும் எப்படிக் கையாளப் போகின்றது என்பதை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது என்றார்.

சீனாவின் அரைகுறை வரவேற்பு. பொன்னொன்று கண்டேன்

ஆப்கானிஸ்த்தானில் மூன்று வாரங்கள் சட்ட அடிப்படையிலான ஆட்சியின்மையை முடிவிற்கு கொண்டு வந்தமையை வரவேற்பதாக சீனா அறிவித்துள்ளது. அதன் வரவேற்பு புதிய அரசையும் உள்ளடக்கியதாக தெரியவில்லை. ஆனால் புதிய அரசு அமைந்தமைக்கு “China attaches great important” என்ற சீனாவின் சொற்தொடரில் வரவேற்பையோ பாராட்டுதலையோ காணவில்லை. ஆனால் காபந்து அரசு அமைய முன்னரே தலிபான்களுடன் தாம் சிறந்த உறவை விரும்புவதாக சீனா அறிவித்து விட்டது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்கள் மீது நீண்ட காலமாக கண்வைத்திருக்கும் சீனா அதில் முடங்கிப் போயிருக்கும் தமது முதலீடு முதலீட்டைப் பிணை எடுப்பதையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது.

காத்திருக்கும் இரசியா

புதிய காபந்து அரசு தொடர்பாக புது டில்லியில் உள்ள இரசிய அரசுறவியலாளரிடம் ஊடகர்கள் கேள்வி எழுப்பிய போது இரசியா காந்திருந்து செயற்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் இரசியா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மேற்கு நாடுகளின் எதிர்வினை

ஐரோப்பிய ஒன்றியம் தன் புதிய ஆப்கான் அரசு தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது. ஆப்கானிஸ்த்தானுக்கான அங்கீகாரத்தையும் மனிதநேய உதவிகள் பற்றியும் கருத்தில் கொள்வதற்கு உகந்த வகையில் ஆப்கான் அரசு அங்குள்ள பல்வேறு சமூகத்தினரையும் மதத்தினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பீட்டர் ஸ்டனோ கருத்து வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்த்தானுக்கு பலதரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் அவசியமான ஒன்றாகும் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரையும் பெண்களையும் உள்ளடக்கிய அரசியலின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்துகின்றது. அமெரிக்கா புதிய ஆப்கான் அரசின் உறுப்பினர் சிலரின் கடந்த காலச் செயற்பாடுகளும் அவர்களின் தொடர்புகளும் தம்மைக் கரிசனைக்கு உள்ளாக்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் கருத்தில் கண்டனம் கலந்திருக்கவில்லை. அமெரிக்கா தலிபான்களின் சொற்களிலும் பார்க்க செயல்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்யும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜேர்மனியில் கூட்டம்

2021 செப்டம்பர் 08-ம் திகதி அமெரிக்காவும் ஜேர்மனியும் இணைந்து ஆப்கானிஸ்த்தானை எப்படிக் கையாள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை ஜேர்மனியின் ரம்ஸ்ரின் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் நடத்தின. ஜேர்மன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளின்கென் ஆகியோர் சந்தித்து அது தொடர்பாக உரையாடினார்கள். ஆப்கானிஸ்த்தானுக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு படையினரை ஜேர்மனி கடந்த 20 ஆண்டுகளில் அனுப்பியிருந்தது. இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இக்கூட்டம் ஆப்கானிஸ்த்தான் எதிர்காலத்தை மாற்றியமைக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆப்கானிஸ்த்தானின் காபந்து அரசு அமைந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அனஸ் ஹக்கானி அமெரிக்காவின் குவாட்டனாமோ சித்திரவதைக் கூடம் உட்பட பல சிறைகளைக் கண்டவர். அவர் கஷ்மீர் பிரச்சனையில் தாம் தலையிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தலிபான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இந்திய ஊடகங்கள் உட்பட பன்னாட்டு ஊடகங்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக அனஸ் ஹக்கானி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் தமது எதிரிகளுக்கு இந்தியா உதவி செய்தமையை தாம் மறந்து இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கு நாடுகள் போல் ஆப்கானிஸ்த்தானுடனான உறவில் பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதால் தலிபான்கள் இந்தியாவுடனான உறவை விரும்புகின்றார்கள் என்பது மட்டுமல்ல இந்தியாமீது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிக விருப்புக் கொண்ட ஆப்கானிஸ்த்தானின் பஷ்ரூன் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தலிபான்களில் பெரும்பான்மையானவர். இந்தியா இதை எழுதும் வரை இந்தியா புதிய ஆப்கான் அரசைப்பற்றி கருத்து வெளியிடவில்லை. இந்தியாவின் தாமதத்தை “கேந்திரோபாய காத்திருப்பு” என இந்திய அரசு ஆதரவாளரகளும் “துணிச்சலான முடிவெடுக்க முடியாமை” என இந்திய அரசை கடுமையாக விமர்ச்சிப்பவர்களும் கூறுகின்றனர். தலிபான்களின் இஸ்லாமியக் கோட்பாடு இந்தியாவின் டில்லிக்கு வடக்கே உள்ள தியோபந்த் என்னும் சிறு நகரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உருவானது. தியோபந்தி இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடினவர்கள். பஷ்ரூன் இனத்தினர் பலர் இந்தி சினிமாத்துறையில் சிறந்து விளங்குவதால் இந்தி சினிமாப் படங்களை ஆப்கானிஸ்த்தானில் வாழும் பஷ்ரூன்கள் விரும்பிப்பார்ப்பதால் அவர்கள் இதயங்களில் இந்தியாவிற்கு ஓர் இடம் உண்டு.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையா?

தலிபான்கள் காபந்து அரசை அறிவித்தற்கு முதல் நாள் அதாவது செப்டம்பர் 6-ம் திகதி தலிபான்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தானிய ஆளில்லா விமானங்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியவுடன்ச் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் இந்தியாவின் வெளியுறவுத் துறைப் பிரச்சனை மட்டுமல்ல அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சனையுமாகும். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியவுடன் கஷ்மீர் மக்கள் அங்குள்ள இந்தியப் படையினரைப் பார்த்து ஒரு நாள் நீங்களும் இப்படி வெளியேறுவீர்கள் என்றனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் உலகெங்கும் உள்ள இஸ்லாமியப் போராளி அமைப்புக்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கஷ்மீர் போராளிகள் அதற்கு விதிவிலக்கல்ல. மோடியின் செப்டம்பர் – 6-ம் திகதிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டதாக தகவல் இல்லை ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்த்தானில் இந்தியா செய்த முன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டைப் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கலாம்.

சர்ச்சைக்குரிய சிராயுதீர்ன் ஹக்கானி

பல நாடுகளும் பார்த்து முகம் சுளிப்பது உள்துறை அமைச்சர் சிராயுதீர்ன் ஹக்கானியையே. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி அமைப்பின் தலைவரான சிராயுதீர்ன் ஹக்கானியும் அமெரிக்க சட்ட நிறைவேற்றுப் பிரிவால் தேடப்படும் ஒருவராவர். ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானின் உளவுத் துறையும் படைத்துறையும் வளர்த்தெடுத்தன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த அமைப்பின் தலைவர் சிராயுதீர்ன் ஆவர்.

பாக்கிஸ்த்தான் உண்மையைச் சொல்லாது என்பதால் அதன் கருத்தை கருத்தில் எடுக்கத் தேவையில்லை. மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்களைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்த்தான் இருப்பதாலும் அங்குள்ள உட்கட்டுமான உட்கட்டுமான முதலீட்டு வாய்ப்பாலும் பல நாடுகளின் முதலீட்டாளர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றார்கள் என்பது புதிய ஆப்கான் காபந்து அரசு தொடர்பாக யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்து தெரிய வருகின்றது. அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்த்தானின் 9.5பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் இடை நிறுத்தி வைத்திருக்கும் உதவித் தொகைகளையும் கருத்தில் கொண்டு தலிபான்கள் தமது காபந்து அரசை அமைக்கவில்லை என்பது அந்த அரசில் தீவிரப்போக்குடையோரை உள்ளடக்கியதில் இருந்து தெரிய வருகின்றது.

Tuesday 7 September 2021

இஸ்ரேலின் சிறையில் இருந்து தப்பிய பலஸ்த்தீனியப் போராளிகள்



பலஸ்த்தீனிய இஸ்லாமிய புனிதப் போர் அமைப்பினர் ஐந்து பேரும் அக்சா மாவீரர் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜகாரியா ஜுபெய்தி ஆகியோர் இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக்க ஜிபோவா சிறையில் இருந்து 2021 செப்டம்பர் 5-ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தப்பி ஓடினார்கள். அவர்கள் சுரங்கம் வெட்டி அதனூடாக தப்பி ஓடினார்கள் எனப்படுகின்றது. ஜகாரியா ஜுபெய்தி Intifada என்னும் கல்லெறி போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் என்பது மட்டுமல்ல பல தற்கொலைத் தாக்குதல்களுக்கு உபாயங்கள் வகுத்தவரும் ஆவர். 1976-ம் ஆண்டு பிறந்த ஜுபெய்தி இஸ்ரேலிய அரசால் மிகவும் தேடப்பட்டவராக இருந்தவர். பின்னர் 2007-ம் ஆண்டு இஸ்ரேலின் பொதுமன்னிப்பு உடன்பட்டு தனது படைக்கலன்களை பலஸ்த்தீனிய தேசிய அதிகார சபையிடம் கையளித்தவர். ஆனால் அவருக்கு வழங்கிய மன்னிப்பை 2011 டிசம்பரில் இரத்துச் செய்தது.

தப்பி ஓடியவர்களில் நால்வர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள். ஜகாரியா ஜுபெய்தியின் மீதும் மற்றொருவர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 1998-ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்த்தீனியர்கள் தப்பி ஓடியுள்ளனர். மொனடேல் யக்கூப் நபீட் , யக்கூப் காசிம், யக்கூப் முகம்மது கத்ரி, நயீம் கமாம்ஜீ, மக்மூட் அப்துல்லா ஆடா, என்பன ஜகாரியா ஜிபெய்தியுடன் தப்பிச் சென்ற மற்றக் கைதிகளின் பெயர்கள் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடைய கழிப்பறையில் இருந்து சுரங்கம் தோண்டுவதற்கு வெளியார் உதவி கிடைத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.



இஸ்ரேலின் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து பலஸ்த்தீனிய போராளிகள் தப்பிச் சென்றது இஸ்ரேலுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல் என பல போராளி அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இது மன உறுதியுடன் தொடர்ச்சியாகப் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தமக்கு தருவதாக பல போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களைப் போல் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். காசா நிலப்பரப்பில் ஹமாஸ் போராளிகள் இனிப்பு பரிமாறினர்.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் இந்த சிறைத் தப்பி ஓட்டத்தை ஒரு கடுமையான நிகழ்வு (Serious Incident) என்றார். உண்மையில் இது இஸ்ரேலுக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...