Followers

Sunday 31 October 2021

சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தால் கலங்கிப் போயுள்ளேன்!

 


Tamil Advocacy Group ஒழுங்கு செய்த முதலாவது கலந்துரையாடலில் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்ன ஒரு வாக்கியம்: ஈழத்தமிழர் தொடர்பாக India ஒரு role play பண்ணும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா தனது role ஐ play பண்ணும்

இரண்டாம் கலந்துரையாடலில் சொன்ன இரு வாக்கியங்கள்:

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் இந்தியாவை Involve பண்ண வைக்க வேண்டும்.இந்த 3 வாசகங்களைக் கேட்டதில்

இந்தியாவை மீறி வேறு யாரும் தமிழர்கள் பிரச்சனையைக் கையாள முடியாது

 இருந்து நான் கலங்கிப் போயிருக்கின்றேன்.

நேரு கொத்தலாவலை ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் India’s role எமக்குத் தெரியும்

சௌமியமூர்த்தி தொண்டமான் – ஜீஜீ பொன்னம்பலத்தை ஒன்றுபடமல் பிளவு படுத்தியதில் India’s role எமக்குத் தெரியும்.

தமிழ் மீனவர்களுக்கு பல வசதிகள் உள்ள கச்சதீவு தாரைவார்ப்பில் India’s role எமக்குத் தெரியும்.

1980களில் வேண்டுமென்றே பல போராளி அமைப்புகளை உருவாக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

விடுதலைப்புலிகளுக்கும் – ரெலோவிற்கும் இடையில் நடந்த மோதலில் India’s role எமக்குத் தெரியும்.

யாழ் மருத்துவமனைப் படுகொலை உட்பட்ட பல கொலைகளில் India’s role எமக்குத் தெரியும்.

படைக்கலன்களைக் கொடுங்கள் உங்களுக்கு நாம் பாதுகாப்பு என்ற தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் நடந்த இனக்கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2007-09 வரை நடந்த இனக்கொலைப் போரில் எத்தனை ஆயிரம் இந்தியப்படையினர் ரோல் பிளே பண்ணினார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.

அப்போரின் போது இந்தியக் கடற்படையினர் எமது கடற்பரப்பை சுற்றி நின்று பிளே பண்ணிய ரோல் எமக்குத் தெரியும்.

ரணில் தலைமை அமைச்சராகவும் சந்திரிக்கா அதிபராகவும் இருந்த வேளையில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வழங்க சிங்களம் முன்வந்த போது அதைக் குழப்ப ரணில் ஆட்சியைக் கலைத்து ஜேவிபியையும் இணைத்து மஹிந்தவை தலைமை அமைச்சர் ஆக்கியதில் India’s role எமக்குத் தெரியும்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் அழிப்பில் India’s role எமக்குத் தெரியும்.

மூன்று இலட்சம் அப்பாவிகள் கொலையில் India’s role எமக்குத் தெரியும்.

2009 போரின் பின்னர் ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் இலங்கையை கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையை பாராட்டும் தீர்மானமாக மாற்றி நிறைவேற்றியதில்  India’s role எமக்குத் தெரியும்.

அதன் பின்னர் இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் முன் வைக்கப்படும் தீர்மானங்களில் India’s role எமக்குத் தெரியும்.

சுரேஸ் பிரேமசத்திரன் இந்தியா role play பண்ணும், பண்ண வைக்க வேண்டும் என்கின்றார்.

எங்களுக்கு நன்மையளிக்க India’s role என்று எங்களுக்கு ரீல் விடுகின்றார் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன். பாவம் ஐயா நீங்கள்

இந்தியா இனியும் role play பண்ணி இன்னும் எத்தனை இலட்சம் தமிழர்களை இந்தியா பலியெடுக்கப் போகின்றதோ என்பதை எண்ணி நான் கலங்கிப் போயுள்ளேன்.

பிரம ஹத்தி பிடித்த இந்தியாவை role play வைக்க வேண்டும் என்பவர்களுக்கு சித்தப் பிரமை என்பது மட்டும் உண்மை.

இந்தியா role play பண்ணுவதென்றால் இன்னும் ஓர் அமைதிப்படை என்னும் பெயரில் கொலைவெறி நாய்களின் படையா? இன்னும் ஒரு மண்டையன் குழுவா? 

ஐயோ தமிழினம் தாங்காதய்யா!


Thursday 28 October 2021

சீன DF-41 மலை! இந்திய அக்னி-5 மடு!


சீனாவின் எப்பாகத்தையும் அணுக்குண்டுகளால் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணைகளை 2021 ஒக்டோபர் 27-ம் திகதி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ஒடிசாவி மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து வீசிப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்தியா தெரிவிக்கின்றது. அக்னி-5 ஆல் 1.1தொன் எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிச் செல்ல வல்லது. ஆனாலும் இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

கண்டம் விட்டு கண்டம் பாயுமா? (ICBM?)

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை (Inter-continental Ballistic Missiles) என வகைப்படுத்தப்பட்டுள்ள அக்னி-5 ஏவுகணை சீனாவிற்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றது, சீனாவை கலங்க வைத்துள்ளது, சீனாவை கரிசனை கொள்ள வைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை குறைந்தது 5500கிலோ மீட்டர் வரை பாயவேண்டும். ஆனால் அக்னி-5 5000கிலோ மீட்டர் தான் பாயக்கூடியது எனவும் கருதப்படுகின்றது. இந்து இதிகாசங்களில் அக்னி படைக்கலன் தேவர்களில் ஒருவரான அக்னிபகவானிற்கு உரியது. மகாபாரதப் போரின் 12-ம் நாள் போரில் அர்ச்சுனன் மன்னன் பகதத்தனை அக்னி அம்பு எய்து கொன்றான் எனக் கூறப்படுகின்றது.

அக்னி-5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையா?

அக்னி-5 தனது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகத்தில் பாயும் எனச் சொல்லப்படுகின்றது. அக்னி-5 ஏவுகணை 17.5மீட்டர் உயரமும் 2மீட்டர் விட்டம் கொண்ட குறுக்கு வட்டமும் கொண்டது. ஏவப்படும் போது அதன் எடை 49,000 முதல் 55,000கிலோ கிராம் வரை இருக்கும். இதை பார ஊர்திகளில் எடுத்துச் சென்று தெருக்களில் இருந்து ஏவலாம். நிலையான ஒரு ஏவுதளம் தேவையில்லாத ஏவுகணை என்பதால் அதை இலக்கு வைத்து எதிர்கள் தாக்குவது கடினமாகும். அக்னி-5 ஏவுகணைகளை இந்தியா 2013-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் 2016-ம் ஆண்டிலும் பரிசோதித்தித்து பின்னர் 2018இல் இரண்டு தடவை பரிசோதித்தது. அக்னி-5இல் கணினி, வழிகாட்டல் முறைமை ஆகியவையும் உள்ளன. இந்தியாவின் முதலாவது அக்னி-1 ஏவுகணை 700கிமீ பாயக்கூடியது. அக்னி-2 2000கிமீ, அக்னி-3 ஏவுகணையும் அக்னி-4 2500முதல் 3000கிமீ வரை பாயக்கூடியவை.

பல இலக்குகளைத்தாகும் அக்னி-6 MIRTV

Multiple Independently Targetable Re-entry Vehicle (MITRV) என்பது பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளை தாமாகவே அழிக்கக் கூடியவை. இந்தியா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அக்னி-6 ஏவுகணையில் பத்து அணுக்குண்டுகளை தாங்கிச் சென்று பத்து இலக்குகளைத் தாக்கும் வல்லமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் National Interest ஊடகம் இந்தியா இதை உருவாக்கும் வல்லமையைப் பெறும் என்று 2018இல் எதிர்வு கூறி இருந்தது. அக்னி-5 மூன்று மட்டங்களைக் கொண்டது அக்னி-6இல் நான்கு மட்டங்கள் இருக்கும்.

ஹைப்பர்சோனி பிரம்மோஸ்-2

இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கும் பிரம்மோஸ்-2 ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஏழு மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளாகும். ஆனால் அவற்றின் பாய்ச்சல் தூரம் 1000கிமீ மட்டுமே. தரையில் இருந்து 14கிமீ செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து பின்னர் இலக்கை நோக்கி ஏறக்குறைய 90பாகை செங்குத்தாக விழும் (Deep-Dive) பிரம்மோஸ்-2 ஏவுகணை உலகில் உள்ள வழிகாட்டல் ஏவுகணைகளில் (Cruise Missiles) வேகம் கூடியது எனக்கருதப்படுகின்றது. மலைகளிற்குள்ளும் பாறைகளுக்கு உள்ளும் உள்ள இலக்குகளை பிரம்மோஸ்-2 நிர்மூலம் செய்யக் கூடியது. செங்குத்தாக விழக்கூடிய வகையில் அவற்றை உருவாக்கியது ஒரு சிறந்த உபாயமாக கருதப்படுகின்றது. அதனால் பிரம்மோஸ்-2 ஒரு செலவு குறைந்த ஏவுகணையாகும். இரசியாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய SU-31-MKI என்னும் பற்பணி-வானாதிக்க போர்விமானத்தில் பிரம்மோஸின் இன்னொரு வகை எவுகணைகள் பொருத்தக் கூடியதாக இருப்பது இந்தியாவிற்கு மேலதிக வலுவைக் கொடுக்கின்றது. ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை தாங்கிய SU-31-MKI விமானங்கள் 122ஐக் கொண்ட 222 Sqadron என்னும் பெயர் கொண்ட விமானப்படையணி சீனாவைத் தாக்குவதற்கென தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

சீனாவின் கிழக்குக் காற்று என்னும் பொருளுடைய DongFeng ஏவுகணைகள் நான்கு தலைமுறையாக உருவாக்கப்படுகின்றது அதன் நான்காம் தலைமுறை DongFeng-41 (DF-41) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாய்ச்சல் தூரத்தில் இது உலகின் இரண்டாவது வலிமை மிக்க ஏவுகணையாகும்.  அதன் பாய்ச்சல் தூரம் 12,000கிமீ முதல் 15,000கிமீ அக்னி-5இன் பாச்சல் துரத்திலும் இரண்டு மடங்கிலும் அதிகமானது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையான DF-41 இன் வேகம் ஒலியிலும் பார்க்க 25மடங்கு ஆகும். இது ஆறு முதல் பத்து வரையிலான அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளைத் தாக்க வல்லது. இதன் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கக் கூடிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை.  அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஒரு விண்வெளிப்படையை (Space Force) அமைத்தால் மட்டுமே சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் Centre for Strategy and Technologyயின் இயக்குனர் ராஜ்ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் இந்தியாவைக் காப்பாற்றுவாரா?

சீனா 2021 ஓகஸ்ட் மாதம் பரிசோதித்த உலகைச் சுற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் அமெரிக்கா என்னும் அம்மியே ஆடிப்போயுள்ள போது இந்தியக் கடுதாசி?

Monday 25 October 2021

ஏவூர்திகளில்(Rockets) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இணைக்கும் சீனா

 


சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படி எதிர்கொள்வது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் சீனா இன்னும் ஒரு படி மேல் போய் உலகத்தை பகுதியாகச் சுற்றிவந்து இலக்குகளைத் தாக்கும் ஹப்பர்சோனிக் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுர்தியை (Rocket) பரிசோதித்துள்ளது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. சீனா 2021 ஜூலை மாதம் செய்த பரிசோதனையை ஒக்டோபர் மதம்தான் பிரித்தானிய நாளிதளான Financial Timesஆல் பகிரங்கப்படுத்தியது. அமெரிக்க இணையவெளி ஊடகம் ஒன்று சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எப்படித் தவிர்ப்பது எனத் தெரியாமல் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இருப்பதாக பெண்டகனைச் சேர்ந்த Robert Wood என்பவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. அதேவேளை அமெரிக்கா ஒக்டோபர் 21-ம் திகதி அமெரிக்காவின் கடற்படையும் தரைப்படையும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதித்ததாக அமெரிக்கப்பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்தது.  

Mach பெறுமானம்

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை ஹைப்பர்சோனிக் என அழைப்பர், பறக்கும் விமானம், பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது. சீனாவின் செய்கை படைக்கலப் போட்டியை உருவாக்கும் என சில அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட வேறு சில அதை மறுத்துள்ளன.


Fractional Orbital Bombardment System என்பது என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஊக்கி ஏவூர்தி (Booster Rocket), நழுவு வண்டி (Glide Vehicle) என இருபகுதிகளைக் கொண்டது. குண்டைக் கொண்ட Glide Vehicleஐத்தாங்கியபடி Booster Rocket நிலத்தில் இருந்து கிளம்பி மேல் நோக்கிய பாதையில் 62மைல்களுக்கு மேல் பயணித்து விண்வெளிவரை சென்று குண்டைக் கொண்ட Glide Vehicleஐ மேலும் மேல் நோக்கு உந்தித் தள்ளிவிடும் மிக உயரச் சென்ற Glide Vehicle புவியீர்ப்பினாலும் தன் உந்துவலுவாலும் கீழே விழும்போது ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குக்கு மேற்பட்ட வேகத்தில் தரையில் தனது இலக்கை நோக்கி பாயும். குண்டு இல்லாமலே ஒரு நழுவு வண்டி (Glide Vehicle) பூமியில் மோதுகையில் அதன் மிதமிஞ்சிய வேகத்தால் பாரிய சேதம் ஏற்ப்படும். அதில் குண்டுகள் அல்லது அணுக்குண்டு இணைக்கப்பட்டால்…..? இப்போது ஏவூர்தி மேல் நோக்கியப் பயணித்து பூமியை பகுதியாகச் சுற்றிவரும் போது மிகத் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கலாம்.  பூமியை சுற்றி ஏவூர்திகள் (Rockets) ஒரு வட்டப்பாதையில் அல்லது நீள்வட்டப்பாதையில் வலம் வரும். பூமியை முழுமையாகச் சுற்றாமல் பூமியின் ஒரு பகுதிக்கு மேலால் மட்டும் ஏவூர்தி சுற்றுவதை பகுதிச் சுற்று (Fractional Orbit) என்பர். இந்தப் பகுதிச் சுற்றை குண்டு வீச்சுக்கு பாவிப்பதை 1960களில் சோவியத் ஒன்றியம் உருவாக்கியது. அதன் மூலம் குண்டுகளை தொலைவில் உள்ள இலக்கின் மீது வீசுவதை பகுதிச் சுழல்தடக் குண்டுவீசல் (Fractional Orbital Bombardment System என அழைப்பர். சீனா அதே போன்ற ஏவூர்தியை ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கச் செய்யும் பரிசோதனையை 2021 ஓகஸ்ட் மாதம் செய்தது. அதில் குண்டுகள் ஏதும் பொருத்தப்படவில்லை. சீனாவின் அடுத்து வரும் பரிசோதனைகள் அதில் குண்டுகளையும் அணுக்குண்டுகளையும் இணைத்துச் செய்யப்படலாம். நீண்ட பயணம் என்பது சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் முக்கிய பகுதியாகும். அப்பெயரையே சீனா தனது புதிய ஏவூர்ந்திக்கு இட்டுள்ளது. சீனா நீண்ட பயணம் (Long March) என்னும் பெயரில் ஒரு ஏவூர்தியை (Rocket) விண்வெளியில் 2021 ஜூலை 27-ம் திகதி ஏவியது. அது ஒலியிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயக்கூடியது. அது பூமியை பகுதியாகச் சுற்றிவந்து தனது இலக்கின் மீது அணுக்குண்டை வீசக் கூடியது எனச் சொல்லப்படுகின்றது.

Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள்

ஹைப்பர் சோனிக் வழிகாட்டல் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசனையும் தன்னிடமுள்ள எரிபொருளையும் பாவித்து தனது உந்து வலுவைப் பெற்றுக் கொள்ளும். இவற்றை காற்று சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பார்கள். ஏவூர்திகள் வளிமண்டலத்திற்கும் மேலே செல்வதால் அவை தமக்கு தேவையான ஒட்சிசனை திண்ம வடிவத்தில் காவிக்கொண்டு செல்ல வேண்டும். Glider Vehicle எனப்படும் மிதவை வண்டிகள் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பல நாடுகள் உற்பத்தி செய்ய முயல்கின்றன. அதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன.  அவற்றில் இரசியாவும் சீனாவும் ஒரு படி முன்னேறி அணுக்குண்டுகளை காவிச் செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒதுக்கிய நிதியை அதிகரித்துள்ளது. 2021இல் ஒதுக்கிய நிதி $3.2பில்லியன் 2020இல் $3.8பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு முகவரகம் மேலதிகமாக $247.9மில்லியன் நிதியைக் கோரியுள்ளது.  சீனா உருவாக்கியுள்ள பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment – FBO) முறைமை மூலம் செலுத்தப்படும் ஏவூர்ந்து(Rocket) சீனாவில் இருந்து புறப்பட்டு தென்துருவத்தின் மேலாகப் பாய்ந்து அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் இடைமறிப்பு ஏவுகணைகளைத் தவிர்த்து தனது இலக்கின் மீது குண்டு வீசலாம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை வடதுருவத்தில் உள்ள அலாஸ்கா பனிப்பரப்பில் உள்ளது. சீனா பரிசோதித்த பகுதியான சுழல்தட குண்டுவீச்சு எதிர்பார்த்த இலக்கை துல்லியமாக தாக்காமல் 24மைல் தொலைவில் விழுந்ததாக Financial Times தெரிவித்திருந்தது. அதன் படி அதனால் அசைந்து கொண்டிருக்கும் ஓர் அமெரிக்க விமானம் தாங்கியை துல்லியமாக தாக்க முடியாமல் போகலாம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தமது இலக்கில் இருந்து 520அடிகள் மட்டும் தவறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது


.அமெரிக்காவின் Aegis Combat System

Massachusetts Institute of Technologyஐச் சேர்ந்த அணுப்படைக்கலன்கள் நிபுணரான டேவிட் ரைட் சீனா ஏற்கனவே அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமை முறியடிக்கும் திறனைப் பெற்றுள்ளது என்றார். சீனா அமெரிக்காவை மிஞ்சுவது மட்டும் போதாது மிதமிஞ்சிய நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பூமியைச் சுற்றிப் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குகின்றது எனக் கருதப்படுகின்றது. அமெரிக்கா தனது Aegis Combat System என்னும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் முறைமைகளை தனது நாசகாரிக் கப்பல்களில் பொருத்தி உலகக் கடற்பரப்பெங்கும் மிதக்க விட்டுள்ளது. இவற்றையும் மிஞ்சும் வகையில் சீனா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சிதான் அதன் பகுதியான சுழல்தட குண்டுவீச்சு (Fractional Orbital Bombardment முறைமையாகும்.

அமெரிக்காவின் விண்வெளிப்படை

அமெரிக்கா 2020-ம் ஆண்டு தனக்கு என ஒரு விண்வெளிப்படையை உருவாக்கியது. அதற்கு என பல சிறிய குறைந்த உயரத்தில் செயற்படும் Black Jacket எனப்படும் பல செய்மதிகளை உருவாக்கியது. அவற்றை ஒன்றிணைக்க Pitboss என்னும் மென்பொருளையும் உருவாக்கியுள்ளது. Black Jacket இன் முக்கிய பணி உலகெங்கும் அமெரிக்காவிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளைக் கண்காணிப்பதாகும். அமெரிக்காவின் விண்வெளிப்படைக்கும் சீனாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கும் இடையிலான போட்டிச் செய்திகளை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள்

அமெரிக்காவின் படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை ஊடகங்களிற் சிலவற்றையும் படைத்துறை ஆய்வாளரகள் சிலரையும் தமது கைக்குள் வைத்திருப்பது வெளிப்படையான ஒன்று. அவர்கள் அமெரிக்காவின் எதிரிகளின் படை வலிமையையும் அவர்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தையும் மிகைப்படுத்தி எழுது அமெரிக்காவை பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒருக்கத் தூண்டுவார்கள். அமெரிக்காவின் படைக்கல உற்பத்தியில் பெரும்பகுதி தனியார் துறையினரிடம் உள்ளன. அதேவேளை பாதுகப்புச் செலவு அதிகரித்தால் அமெரிக்கா தம்மீது அதிக வரியை சுமத்தும் என அஞ்சும் செல்வந்தர்கள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்ற செய்தியை விரும்புவதால் அவர்களுக்கு சார்பான ஊடகங்களும் ஆய்வாளர்களும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவூர்தி பரிசோதனையால் ஆபத்து எல்லை என எழுதுகின்றனர்.

பிரித்தானிய நாளிதழான Financial Times வெளியிட்ட செய்தியை மறுத்த சீனா தான் பர்சோதித்தது மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடம் என்கின்றது. சீனாவைச் சுற்றவர அமெரிக்கா பல படைத்தளங்களை வைத்துள்ளது. அவற்றில் இருந்து பல அணுக்குண்டுகளை அமெரிக்காவால் சீனா மீது வீச முடியும். சீனாவில் இருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் குறைந்த தொலைவில் கூட அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ளன. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவிற்கு இன்னும் நெருக்கமாகச் சென்று புலப்படா விமானங்கள் மூலம் அணுக்குண்டுகளை சீனா மீது வீசலாம். இவற்றை மிஞ்சக் கூடிய வகையில் சீனா செயற்படுகின்றது.

Saturday 23 October 2021

சீனா ஒரு வளர்முக நாடா?

 


சென்ற நூற்றாண்டின் இறுதிவரை சீனா தனது படை வலிமையை இரகசியமாகவே வைத்திருந்தது. அமெரிக்காவும் இரசியாவும் தங்கள் படைவலிமையை பகிரங்கப்படுத்தி “எங்கிட்டே மோதாதே” என்ற செய்தியை ஒன்றிற்கு ஒன்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சீனா தனது படைவலிமையை இரகசியமாக வைத்திருந்து “என் வலிமை உனக்குத் தெரியாது, எங்கிட்டே வச்சுக்காதே” என்ற அமைதியான செய்தியை வெளிவிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் சீனா தனது “பொதுவுடமை” ஆட்சி எனப்படும் ஆளுமையில் தன்னாட்டு இளையோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது வலிமையை பகிரங்கப்படுத்த தொடங்கியது. சீனாவின் பாரிய நீர்மூழ்கிகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பரிசோதனைகள், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானங்கள் இரகசியமாக மேற்கொள்ள முடியாதவை ஆகும்.

வளர்முக நாடாக இருக்க சீனா விரும்புகின்றது

தொழில்நுட்பம் வர்த்தகம். உள் நாட்டுப் போக்குவரத்து, நகர கட்டுமானம் போன்றவற்றில் பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க சீனா முன்னேறியிருந்தாலும் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகவே முன்னிலைப்படுத்துகின்றது. உலக வங்கியினதும் ஐக்கிய நாடுகளினதும் கட்டளைவிதிகளின் படி சீனா ஒரு வளர்முக நாடாக கருதப்படுகின்றது. சீன அரசும் தன்னை ஒரு வளர்முக நாடாக கருதப்படுவதையும் அடையாளப்படுத்தப்படுவதையும் விரும்புகின்றது. ஆனால் எது வளர்முக நாடு எது வளர்ச்சி அடைந்த நாடு என பகுத்து அறிவதில் ஒரு ஒருமித்த உடன்பாடு இல்லை. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடா என முடிவு செய்வதில் அதன் பொருளாதார உற்பத்தி, தனிநபர் வருமானம், குடிமக்கள் சராசரி வாழும் காலம், கல்வி நிலைமை போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.

உலக வங்கியின் நிலை

உலக வங்கி வளர்முக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற பாகுபாட்டைப் பயன்படுத்தாமல் 1. உயர் வருமானம். 2. உயர்-நடுத்தர வருமானம். 3. குறை-நடுத்தர வருமானம். 4. குறைந்த வருமானம் என நாடுகளைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது ஜீஎஸ்பி வரிச் சலுகை வழங்குவதில் இதையே பாவிக்கின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை அதன் மக்கள் தொகையால் பிரிக்க வருவதை தனிநபர் வருமானமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உலக வங்கி நாடுகளைத் தரம் பிரிக்கின்றது. அந்த வகையில் சீனாவின் தனிநபர் வருமானம் $10,410 ஆகும். அதனால் சீனா உயர்-நடுத்தர வருமான நாடாக உலக வங்கியால் பார்க்கப்படுகின்றது.

ஐநாவின் மனித மேம்பாட்டு சுட்டி (Human Development Index – HDI)



மனித மேம்பாட்டுச் சுட்டி மக்களின் வருமானம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, பாதுகாப்பு, சூழல் மாசு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. ஐநாவின் கணிப்பின்படி இச்சுட்டிப்பட்டியலில் நோர்வே உச்சத்தில் இருக்கின்றது அமெரிக்கா 17-ம் இடத்தில் இருக்க இலங்கை-72. சீனா-85, இந்தியா-131, பங்களாதேசம்-133, பாக்கிஸ்த்தான்-154 ஆகிய நிலைகளில் இருக்கின்றன.

சமமற்ற வருமானப் பங்கீடு

சீனாவின் பல்வேறு பிரதேசங்களைப் பார்க்கும் போது அவற்றினிடையேயான ஏற்றத்தாழ்வு மோசமாக இருக்கின்றது. சீனாவின் கரையோரமாக அமைந்த கிழக்குப் பிராந்தியம் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் உள்ளகப் பிரதேசங்கள் வளர்ச்சி குன்றுதலாக இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தொகையில் 80விழுக்காட்டினர் நகரப்புறங்களில் வாழுகின்றனர். ஆனால் சீனாவி அது 60% மட்டுமே. சீனா தொழில்துறையில் பெரு வளர்ச்சி கண்டாலும் அதன் உற்பத்தித் துறையில் பெரும்பகு கீழ்-முனை உற்பத்தியாக (low-end manufacturing) இருக்கின்றது.

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதனால் பல வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவை ஒரு வளர்முக நாடாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்புரிமை உள்ள நாடுகளை அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகள் என வகைப்படுத்தவில்லை. உறுப்பு நாடுகள் தாமே தமது நிலையை முடிவு செய்து கொள்ளலாம். அதனால் சீனா தன்னை ஒரு வளர்முக நாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு நாடு தன்னை வளர்முக நாடாகப் பிரகடனப் படுத்தியமையை மற்ற நாடுகள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். உலக வர்த்தக் நிறுவனத்தின் விதிகளைப் பின்பற்றுவதில் வளர்முக நாடுகளுக்கு இருக்கும் சலுகைகளை பாவிப்பதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்தியது. 2019 ஜூலையின் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் சீனாவின் வளர்முக நாடு நிலையை இல்லாமற் செய்யும்படி தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சீனா தனது நிலையை மாற்ற மறுத்தது. 2020இல் அமெரிக்கா உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற குரலும் அமெரிக்காவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அமெரிக்கா டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சீனாமீது தொடுத்த வர்த்தகப் போர் தனது வர்த்தக விதிமுறைகளுக்கு மாறானது என உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்தது,

2021 செப்டம்பரில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியக்கதிரிலிருந்து மின் பிறப்பாக்கும் தகடுகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் முடிவிற்கு எதிராக சீனா கொடுத்த ஆட்சேபனை தொடர்பாக உலக வர்த்தக நிறுவனம் தனது முடிவை வெளியிட்டது. அது சீனாவின் ஆட்சேபனையை நிராகரித்தது.

சீனாவிற்கு எதிரான உ.வ.நி இன் முடிவு

2021 ஒக்டோபர் 20 முதல் 22-ம் திகதி வரை நடந்த உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டத்தில் சீனாவின் கைத்தொழில் கொள்கை சமமான போட்டியை பாதிக்கின்றது என அமெரிக்கா தெரிவித்தது. மற்ற மேற்கு நாடுகள் சீனா தனது சந்தையை மேலும் தாராளமயப்படுதல் செய்ய வேண்டும் என்றன. இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தில் சமநிலை இல்லை என்றது. சமமான போட்டியை உருவாக்குதல், தாராளமான சந்தையை(திறந்த சந்தை) ஏற்படுத்தல், உற்பத்தித் துறைக்கு தேவையற்ற அரச உதவிகளைத் தடுத்தல் போன்றவை உலக வர்த்தக நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும். ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தில் உரையாற்றிய சீனப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உ.வ.நி இன் முடிவை கடுமையாக ஆட்சேபித்த சீனா தன்னை தவறாக கையாள்வதாக தெரிவித்தது.

பொய்யர் கூட்டம்

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பன்னாட்டரங்கில் எந்த அளவு பொய்களை சொல்லும் என்பதை ஒவ்வொரு ஈழக் குடிமகனும் நன்கறிவான். சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை மிகைப்படுத்தி பொய் சொல்கின்றது. சினா பொதுவுடமை ஆட்சி என்னும் பெயரில் நடத்தும் அரச முதலாளித்துவ ஆட்சி சிறப்பாக நடக்கின்றது என்பதைக் காட்ட சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியை உயர்த்திக் காட்டுகின்றது. அதேவேளைகளில் மற்றநாடுகளின் உழைப்பை சுரண்டுவதற்காக சீனா தன்னை ஒரு வளர்முக நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது.

Sunday 17 October 2021

Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவில் முன்னேறியசீனா

 


செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா பின் தங்கியதால் சீனா முன்னேறிவிட்டது என்ற செய்தி பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் மென்பொருள் பிரிவின் முதன்மைப் பதவியில் இருந்த நிக் சைலன் அமெரிக்கா போதிய நிதியை மென்பொருள் துறைக்கு ஒதுக்கவில்லை என்பதை ஆட்சேபித்து தன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அமெரிக்க மென்பொருள்துறைக்கு போதிய நிதி ஒதுக்காத நிலையில் சீனா அதற்கென பெருமளவு நிதியை ஒதுக்கியபடியால் அமெரிக்காவை விட சீனா செயற்கை நுண்ணறிவில் முன்னணியில் இருக்கின்றது என்பது நிக் சைலனின் குற்றச் சாட்டாகும்.

சீனாவிற்கு வாய்ப்பான அதன் மக்கள் தொகை

அமெரிக்காவின் மக்கள் தொகை 339மில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1,433 மில்லியனாகவும் உள்ளன. சீனா தனது நாட்டு மக்கள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் திரட்டி கையாள்கின்றது. ஓர் அமெரிக்கக் குடிமகனின் எல்லாத் தகவல்களையும் அரசு திரட்டி வைத்திருப்பதை அமெரிக்க மக்கள் தமது சுதந்திரத்தையும் அடிப்படை உரிமையையும் பாதிப்பதாக கருதுகின்றார்கள். சீனாவின் அதிக மக்கள் தொகை இருப்பதால் அரசு திரட்டும் தகவல்களும் அதிகமாக உள்ளன. அவற்றை கணினி மயப்படுத்தி தரவு நிரல்படுத்துவதற்கு உயர்தர மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சீனா சென்ற Microsoft

சீனா செயற்கை நுண்ணறிவு வளர்வதற்கு சிறந்த களமாக உள்ளபடியால் 2018-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான மென்பொருள்களை உருவாக்க தாம் விரும்புவதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது. 2019இல் Microsoft நிறுவனம் சீன படைத்துறையின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்வறிவு மேம்படுத்தலில் செயற்பட்டது. அவற்றில் சீனாவின் சிறுபான்மையினரைக் கண்காணிப்பது முதன்மையானதாக இருந்தது. அதனால் அமெரிக்க முதவை உறுப்பினர்(செனட்டர்) Ted Cruz அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைக்கு உதவக் கூடாது என தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். ஆனால் தாம் வெட்டு விளிம்பு (Cutting-Edge) தொழில்நுட்ப விரிவாக்கத்தில் உலகெங்கும் ஒத்துழைப்பதாக Microsoft தெரிவித்தது. Microsoft நிறுவனம் உருவாக்கிய Environmental Mapping தொழில்நுட்பம் சீனாவின் செயற்கை நுண்ணறிவின் மூலமான பொதுமக்கள் கண்காணிப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. சீனாவெங்கும் பொருத்தப்பட்டுள்ள 200மில்லியன்களுக்கும் அதிகமான கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் முகங்கள் மூலம் மனிதர்களை இனம் காணும் (Facial Recognition) மென்பொருள்கள் இணைக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஒருவர் தலைமறைவானால் அவரை ஒரு சில நிமிடங்களுக்குள் அந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் கண்டு பிடித்துவிடும்.

Microsoft ஐப் போல பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து பல தொழில்நுட்பங்களில் செயற்படுகின்றன. சீன அரசு தனது நாட்டில் இருந்து பல மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கின்றது. சில அமெரிக்கப் பலகலைக்கழங்கள் சீன அரசுடன் இணைந்து ஆய்வுகள் செய்கின்றன. அப்பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கு தேவையான நிதி அமெரிக்காவில் இருந்து கிடைக்காமையினால் அவை சீனாவை நாடுகின்றன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இவற்றிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சீனாவின் 5G & 6G அலைக்கற்றை தொழில்நுட்பம்

சீனாவின் OPPO நிறுவனம் “6G AI-Cube Intelligent Networking” என்னும் தலைப்பில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் எப்படி செயற்கை நுண்ணறிவைப் பாவித்து 6G அலைக்கற்றை உருவாக்குவது என்பது பற்றி விளக்கியுள்ளது. 4G இலும் பார்க்க 5G ஆயிரம் மடங்கு விரைவாகச் செயற்படும். 5Gஇலும் பார்க்க 6G ஆயிரம் மடங்கு வேளையில் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 6G தொழில்நுட்பத்தை கைப்பேசிகளில் செயற்படுத்துவதற்கு அவை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட படிமுறைகளை(Algorithms) உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும்.

ஹுவாவேயின் தானியங்கி மகிழூர்ந்துகள் (Autonomous Cars)

ஹுவாவே நிறுவனம் மற்ற நாடுகளை விட 5G தொழில்நுட்பத்தில் முந்தியமை அமெரிக்கர்களை பொறாமைக்கும் சினத்திற்கும் உள்ளாக்கியது. அதனால் அமெரிக்கா சீனா மீது ஒரு தொழில்நுட்பப் போரைத் தொடுத்து சீனாவிற்கு குறைகடத்திகளை (Semiconductors) ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. உலகிலேயே அதிக குறைகடத்திகளை உற்பத்தி செய்யும் தைவானையும் சீனாவிற்கான ஏற்றுமதியைத் தடைசெய்யும்படி வலியுறுத்தியது. ஹுவாவே வர்த்தக அடிப்படையில் 6G தொழில்நுட்பத்தை 2030அளவில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. அது செயற்கை நுண்ணறிவையும் 5G தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தானியங்கி வண்டிகளை உருவாக்கவிருக்கின்றது. ஹுவாவேயின் Intelligent World 2030 என்னும் அறிக்கையில் 2030-ம் ஆண்டு சீனாவின் மகிழூர்ந்துகளில் 20% தானியங்கிகளாக இருக்கும் என எதிர்வு கூறுகின்றது. ஹுவாவே நிறுவனம் சீனாவின் மகிழூர்ந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தானியங்கி மகிழூர்ந்துகளை உற்பத்தி செய்யவிருக்கின்றது. தற்போது சீனா மகிழூந்துகளை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளது. 2030இல் நிலைமை மாறலாம்.

செயற்கை நுண்ணறிவால் சிஐஏ முகவர்களை அழித்த சீனா

அமெரிக்காவின் மருத்துவத்துறையில் சீனா ஊடுருவி தகவல் திருட்டு செய்வதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. பின்னர் சீனாவில் செயற்படுக் கொண்டிருந்த சிஐஏ முகவர்களுடன் எந்த தொடர்பையும் சிஐஏயால் மேற்கொள்ள முடியாதிருந்தது. பின்னர் அவர்கள் கொல்லப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கலாம் என்ற செய்தி வெளிவந்தது. இவற்றை வைத்துப் பாருக்கும் போது ஒரு செயல்முறை நடந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது: 1. மருத்துவத் தகவலை செயற்கை நுண்ணற்வின் மூலம் வடிகட்டி சீனாவில் பணிபுரியும் அமெரிக்கர்களின் படங்களை சீனா பெற்றுக் கொண்டிருக்கலாம். 2. சீனா தனது செயற்கை நுண்ணறிவு மூலம் முகம் மூலம் இனங்காணும் முறைமை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தையும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். 3. அவர்களை கைது செய்து விசாரித்து அவர்களை தண்டித்திருக்கலாம்.

ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலை

கணினிகளின் செயற்கை நுண்ணறிவு கணினிகள் தாமாக கற்றறிந்து (Machine Learning) தம் அறிவை வளர்க்கின்றன. இது தொடர்ச்சியாக வளரும் போது முடிவில்லா அறிவை கணினிகள் பெற்றால் அது ஓரிமை (Singularity) என்னும் ஆபத்தான நிலையை எட்டலாம். ஒரு செயற்பாடு முடிவிலி பெறுமானத்தை ஏட்டும் நிலையை ஓரிமை (Singularity: A point at which a function takes an infinitive value) எனப்படும்.

Monday 11 October 2021

சீனாவின் இரண்டு உதாரணங்களும் மூன்று செங்கோடுகளும்

 



சீனாவின் முன் இரண்டு உதாரணங்கள் எப்போதும் மின்னிக் கொண்டே இருக்கும். ஒன்று அமெரிக்காவிற்கு படைத்துறையி சவாலாக விளங்கிய சோவியத் ஒன்றியம் மற்றது அமெரிக்கா கரிசனை கொள்ளுமளவிற்கு பொருளாதாரப் பெருவல்லரசாக எழுச்சியடைந்த ஜப்பான். சோவியத் ஒன்றியம் தன் வரவுக்கு மிஞ்சிய அளவில் படைத்துறைச் செலவை செய்து அமெரிக்காவிற்கு போட்டியாக, சில துறைகளில் அமெரிக்காவை மிஞ்சக்கூடிய அளவிற்கு, படைக்கலன்களை உருவாக்கியது. ஜப்பான் தனது நாட்டின் தனியார் துறையை கட்டுப்பாடின்றி கடன் படுவதை கண்காணிக்காமல் விட்டது.

கோபுரத்தை அழிக்கச் சென்று சாய்ந்த சோவியத் கோபுரம்

பொருளாதாரப் பிரச்சனை மீது அதிக கவனம் செலுத்தாத சோவியத் ஒன்றியம் செலவு மிக்க ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தை அமைத்தது. அது 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் வரை செல்லும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமைத்த தொலைதொடர்புக் கோபுரம் சோவியத் ஒன்றியத்தை உளவு பார்க்க உருவாக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் படை எடுத்தது. இதுவும் சோவியத் ஒன்றியம் என்ற கோபுரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது.

சீனாவின் அமைதியான எழுச்சி 

சோவியத்தின் உதாரணத்தை கருத்தில் கொண்ட சீனா தனது வளர்ச்சிக்கு அமைதியான எழுச்சி எனப் பெயரிட்டுக் கொண்டது, அதன் படி மற்ற நாடுகளில் ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஆக்கிரமிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டது. சீனா தனது உளவுத்துறைக்கு பெரும் செலவைச் செய்யவில்லை. சீனா தனது ஒரே ஒரு பெரிய அயல் நாடாகிய இந்தியாவிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க தீபெத்தை 1950இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தனக்கு கவசமான தீபெத்தை இந்தியா ஆக்கிரமிக்கலாம் என்ற ஐயத்தில் இந்தியா மீது 1962இல் போர் தொடுத்தது. அசாம் மாநிலத்தை சீனா கைப்பற்றிய போது இந்தியர்கள் வங்கிகளில் உள்ள நாணயத்தாள்களைக் கூட எரித்துவிட்டு தலை தெறிக்க ஓடினார்கள். தான் ஆக்கிரமித்த இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை கைவிட்ட சீனா அக்சாய் சின் என்னும் பகுதியை மட்டும் தன்வசம் இன்றுவரை வைத்திருக்கின்றது. அக்சாய் சின் தீபெத்தையும் உய்குர் மாகாணத்தையும் இணைக்கின்ற பிரதேசமாகும். அது இந்தியா வசம் இருந்தால் இரண்டிலும் தீவிரவாதிகளை இந்தியா வளர்த்து விடலாம் என்பதை இந்தியா கருத்தில் கொண்டு அக்சாய் சின் பிரதேசத்தை வைத்திருக்கின்றது. அதற்கு அச்சுறுத்தல் வராமல் இருக்க அந்த எல்லைப் பகுதியை எப்போதும் கொதிநிலையில் சீனா வைத்திருக்கின்றது. 1979இல் வியட்னாமுடன் சீனா ஒரு எல்லைப் போர் செய்தது. போரால் பொருளாதாரம் சீரழியும் என்பதால் சீனா போர்களைத் தவிர்த்து வருகின்றது.

தைவான் போரைத் தவிர்த்த சீனா

தைவானின் அதிபராக இருந்த லீ தெங் குயீயை அவர் கல்வி கற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் உரையாற்ற அழைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக 1995இல் தைவானைக் கைப்பற்ற சீனா பெரும் படை நகர்த்தலைச் செய்தது. அதைத் தடுக்க அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் USS Nimitz என்ற விமானம் தாங்கிக் கப்பலையும் அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப் பிரிவையும் தைவான் நீரிணைக்கு அனுப்பினார். தைவானைக் கைப்பற்றுவதென்றால் அமெரிக்காவுடன் போர் புரிய வேண்டும் என உணர்ந்த சீனா பொருளாதாரப் பேரழிவைக் கொண்டுவரக்கூடிய போரைத் தவிர்த்தது. அமெரிக்காவின் இரண்டு கடற்படைப் பிரிவுகளை அழிக்கக்.கூடிய வலிமை அப்போது சீனாவிடம் இருக்கவில்லை.

ஜப்பானிடமிருந்து சீனா கல்லாதும் கற்றதும்

சீனாவும் ஜப்பானும் மன்னராட்சி நாடுகளாக இருந்தன. பின்னர் ஜப்பான் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சியாக மாறி மக்களாட்சியை ஏற்படுத்திக் கொண்டது. சீனா அப்படிச்செய்யாமல் இருந்தபடியால் அங்கு பொதுவுடமைப் புரட்சி ஏற்பட்டது. ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஏற்றுமதியைச் செய்து உலகப் பொருளாதார வல்லரசாக 1980களின் உருவானது. 1980களின் பிற்பகுதியில் பல அமெரிக்க நிறுவனங்களையும் சொத்துக்களையும் ஜப்பானிய நிறுவனங்கள் வாங்கின. அதை இரண்டாவது பேர்ள் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbour Attack) என அமெரிக்க தேசியவாதிகள் விபரித்தனர். பின்னர் அமெரிக்காவின் டொலருக்கு எதிராக ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி பெருமளவில் அதிகரித்தது. ஆனாலும் ஜப்பானிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெருமளவு கடன் பட்டு தமது ஏற்றுமதியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தன. அதனால் ஜப்பானியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவை இன்றுவரை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.



சீனாவின் மூன்று செங்கோடுகள்

ஜப்பானிய தனியார் துறையினர் அதிக கடன் பட்டது போல் சீனத் தனியார் துறையினரும் அதிக கடன் பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலும் சீனாவில் தொடர்ச்சியாக கட்டிடங்களின் விலைகள் ஏறிக் கொண்டிருந்த படியால் கட்டிடத் துறையினரால் அதிக கடன் படக் கூடியதாக இருந்தது. உலகிலேயே அதிக கடன் பட்ட கட்டிடம் கட்டும் நிறுவனங்களில் 80% சீனாவில் உள்ளன. இதனால் சீன நடுவண் வங்கியான சீன மக்கள் வங்கியும் சீனாவின் கட்டிடத் துறை அமைச்சும் இணைந்து கட்டிடத்துறையில் உள்ள நிறுவனங்களுக்கு 2020இல் மூன்று நிபந்தனைகளை விதித்தன. அவை மூன்று செங்கோடுகள் என அழைக்கப்படுகின்றன:

1. ஒரு நிறுவனத்தின் கடன் அதன் சொத்துக்களின் பெறுமதியின் 70%ஐத் தாண்டக் கூடாது.

2. நிறுவனத்தின் மூலதனத்திலும் (Equity) பார்க்க அதன் கடன் குறைவானதாக இருக்க வேண்டும்.

3. நிறுவனத்தின் காசுக்கையிருப்புக்கும் குறுங்காலக் கடனுக்கும் உள்ள விகிதம் ஒன்றாக இருக்க வேண்டும் அதாவது சமனாக இருக்க வேண்டும்.

சீனா இந்த மூன்று செங்கோடுகளை அறிமுகம் செய்தமைக்கு முக்கிய காரணம் வீடமைப்புக் குமிழி உருவாகக் கூடாது என்பதற்காகவே. ஒரு நாட்டில் தொடர்சியாக வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு போக அந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் அதிக கடன் பட்டு அதிக வீடுகளைக் கட்டிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் நாட்டில் அளவிற்கு அதிகமாக வீடுகள் கட்டப்படும். அவற்றை வாங்க யாரும் இல்லாத நிலை ஏற்படும். அப்போது வீட்டு விலைகள் பெருமளவு வீழ்ச்சியடையும். அதை வீடமைப்புக் குமிழி என அழைக்கப்படுகின்றது. கட்டிடங்களையும் வீடுகளையும் கட்டிய நிறுவனங்கள் பட்ட கடனை அடைக்க முடியாமல் போகும். அதனால் வங்கிநொடிப்பு (Bankrupcy) நிலையை அடையும். அந்த கட்டிட நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் அவற்றில் பங்குகளை வாங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள். அது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படும். நிலைமை மோசமானால் பல வங்கிகள் கூட வங்கிநொடிப்பு நிலையை அடையலாம்.

சீனாவின் செங்கோட்டை மீறிச் செயற்பட்டதால் Evergrande என்னும் கட்டிட நிறுவனம் 2021 செப்டம்பரில் பெரும் கடன் நெருக்கடியை சந்தித்துள்ளது. அது வங்கிநொடிப்பு நிலையை அடையும் இடரை எதிர் நோக்குகின்றது. சீன அரசின் செங்கோட்டைத் தாண்டிய Evergrande நிறுவனத்திற்கு சீன அரசு நிதி உதவி செய்து அதை மீட்க மாட்டாது எனக் கருதப்படுகின்றது. சீனாவின் முன்னணி கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் முப்பதின் அரைப்பங்கு நிறுவனங்களுக்கு மேற்பட்டவை சீன அரசின் மூன்று செங்கோடுகளையும் தாண்டி நிதி நெருக்கடியில் உள்ளன என்று இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகை ஆய்வு செய்து கட்டுரை ஒன்றைப் பிரசுரித்துள்ளது.

சீனர்கள் நீண்ட காலத் திட்டமிடுவதில் வல்லவர்கள். சீன நிறுவனங்கள்?

Thursday 7 October 2021

Strategic Autonomy: ஐரோப்பிய நாடுகளின் கேந்திரோபாய தன்னாளுமை

 


மேற்கு ஐரோப்பா என்பது சிறிய நாடுகளின் கூட்டமாகும். அதில் பெரிய நாடாகிய ஜேர்மனியின் மக்கள் தொகை எட்டுக் கோடியாகும். அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை 19 கோடியாகும். அது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையின் குறைவானது. மேற்கு ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உள்ள நாடுகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாக கருதலாம். தங்களது சிறுமை என்னும் வலிமையற்ற நிலையைத் தவிர்க்க பல ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரம் மற்றும் அரசியல் கூட்டமைப்பிலும் இணைந்துள்ளன.

கேந்திரோபாய தன்னாளுமை

ஒரு நாடு தனது பாதுகாப்பிற்கும் உலக அரங்கில் அதனது செயற்பாட்டிற்கும் வேறு நாடுகளில் தங்கியிருக்காமல் இருப்பதை கேந்திரோபாய தன்னாளுமை (Strategic Autonomy) எனச் சொல்லலாம். ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை முன்பு பிரித்தானியா கடுமையாக எதிர்த்தது. பிரான்ஸ் அதை தீவிரமாக ஆதிரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என ஒரு படை வேண்டும் என பிரான்ஸ் செயற்படுகின்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த காலத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய தன்னாளுமை வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. டிரம்ப் அமெரிக்கா ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவு செய்யக் கூடாது என்ற கொள்கையுடையவர். சீனாவிலும் பார்க்க வலிமையான பொருளாதாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் படைத்துறைக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை.



ஒதுக்கப்பட்டதாக உணரும் ஐரோப்பா

மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியதும் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து AUKUS என்ற படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது கேந்திரோபாய தன்னாளுமை (strategic autonomy) பற்றி தீவிரமாக சிந்திக்க வைத்தன. ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுத்த போது அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளின் படைகளும் வெளியேறியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியது. அப்போது கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐரோப்பாவிற்கான பாதுகாப்பின் தேவை முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று அதிகரித்திருக்கின்றது என்றார். மேலும் அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒவ்வொன்றும் ஐயாயிரம் படையினரைக் கொண்ட துரித பதிலிறுப்பு படையணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார். ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் தனது டுவிட்டர் பதிவில் அதை ஆதரித்திருந்தார். நேட்டோ படையினர் ஒரு நிபந்தனையற்ற படை விலக்கலை ஆப்கானிஸ்த்தானில் இருந்து செய்வதை தான் விரும்பவில்லை என்றார் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென் ஸ்ரொலென்பேர்க்.

கேந்திரோபாய தன்னாளுமையும் ஐரோப்பிய ஒன்றியமும்

ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேந்திரோபாய தன்னாளுமை என்பது ஒரு கொள்கை நோக்கமாக (Policy Objective) 2016-ம் ஆண்டில் இருந்து இருக்கின்றது. கொள்கை நோக்கம் என்பது கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்ற விளைவுகளாகும். (A policy objective is a desired outcome that the policy makers wish to achieve). 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தனது உலகளாவிய கேந்திரோபாயத்தை வகுத்துக் கொண்டது (European Union Global Strategy). அதன் ஒரு பகுதிதான் கேந்திரோபாய தன்னாளுமையாகும்.

தனித்துவமான பிரான்ஸ்

பிரான்ஸ் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருப்பதை விரும்புவதில்லை. தனக்குத் தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்து கொள்கின்றது. பிரான்ஸ் உற்பத்தி செய்யும் போர்விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. 2011-ம் ஆண்டு இரசியாவே பிரான்ஸிடமிருந்து இரண்டு உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை வாங்கும் ஒப்பந்தம் செய்தது. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமைக்கு ஆட்சேபனையாக அந்தக் கப்பல்களை இரசியாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் நிறுத்தியது. பிரான்ஸும் கிரேக்கமும் ஒன்றை ஒன்று பாதுகாக்கும் ஒப்பந்தம் செய்ததுடன் பிரான்ஸிடமிருந்து மூன்று பில்லியன் யூரோக்களுக்கு மூன்று Frigate வகைப் போர்க்கப்பல்களை கிரேக்கம் வாங்கும் ஒப்பந்தமும் கைச்சாத்திட்டன. பல ஐரோப்பிய படைத்துறை ஆய்வாளரகள் இது ஐரோப்பாவின் கேந்திரோபாய தன்னாளுமையின் முதற்படி என்கின்றனர்.

இரசியாவின் அச்சுறுத்தல்

மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்னும் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவற்றின் தோழமை நாடுகளான நோர்வே, பிரித்தானியா, சுவிற்சலாந்து ஆகியவையும் அடங்கும். புவியியல் அடிப்படையில் பார்க்கும் போது போலாந்து, ஹங்கேரி, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகும். இரசியாவால் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கரிசனை கொண்ட ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்து செயற்படுகின்றன. இரசியாவைப் பொறுத்தவரை தனக்கு என ஒரு கவசப் பிராந்தியம் அவசியம் என நினைக்கின்றது. அந்த கவசப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளான ஜோர்ஜியா, உக்ரேன் போன்ற நாடுகள் நேட்டோ கூட்டமைப்பிலோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைவதை கடுமையாக எதிர்க்கின்றது. இரசியா தன் கவசப் பிராந்தியமான போல்ரிக் பிரதேச நாடுகள் மூன்றும் ஏற்கனவே இரண்டிலும் இணைந்தமை இரசியாவைப் பொறுத்தவரை மிகவும் கரிசனைக்கு உள்ள ஒன்றாகும்.

லிபிய மும்மர் கடாஃபியின் கருத்து

“ஐரோப்பாவில் ஐம்பது மில்லியன் இஸ்லாமியர்கள் வாழுகின்றார்கள். இன்னும் சில பத்து ஆண்டுகளின் கத்தியின்றி இரத்தமின்றி அவர்கள் அல்லாவின் கிருபையால் ஐரோப்பாவைக் கைப்பற்றுவார்கள்” என்றால் லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி. ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவாமல் இருக்க அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகளின் ஒத்துழைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. உளவுத்துறையிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கேந்திரோபாய தன்னாளுமை தேவைப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை உணர்ந்த போலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த பாதுகாப்புத்துறை உற்பத்தி $113 பில்லியன்களாகும். அமெரிக்காவின் வான்பாதுகாப்புத்துறையின் உற்பத்தி மட்டும் $697 பில்லியன்களாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பாதுகாப்பை உறுதிய் செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் போலாந்து தனது நாட்டில் அமெரிக்கா படைத்தளம் அமைக்க வேண்டும் என அமெரிக்காவை வேண்டிக் கொண்டதுடன் அதற்கான செலவின் பெரும் பகுதியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. ஜேர்மனியில் இருந்து தனது படையினரில் 12,000 பேரை விலக்க முடிவு செய்த அமெரிக்காவிற்கு இது நல்வாய்ப்பாகவும் அமைந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு இல்லாவிடில் இரசியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய மூன்று சிறிய போல்ரிக் நாடுகளையும் இரசியாவால் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கைப்பற்ற முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக உள்ளன. மேலும் நான்கு நாடுகள் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் உள்ள துருக்கி, அல்பேனியா, மொண்டிநீக்ரோ, வட மசடோனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இரு அமைப்புகளினதும் தலைமைச் செயலகம் பிரஸல்ஸில் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முழுமையான அரசியல் ஒன்றியமாவதை (Political Union) அமெரிக்கா பகிரங்கமாக எதிர்க்கின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸைத் தவிர மற்ற நாடுகள் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வல்லமை இல்லாமல் இருக்கின்றன. பிரான்ஸும் உலங்கு வானூர்திகளுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பக் கூடியது. தற்காலத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், லேசர் படைக்கலன்கள், விண்வெளிப் படையணிகள் போன்றவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இல்லை. பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வலிமையான படைகளைக் கொண்டவை. மற்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெயரளவில் சில படைகளை வைத்திருக்கின்றன. பெல்ஜியம், போர்த்துக்கல், ஒஸ்ரியா, பல்கேரியா, ஹங்கேரி, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பார்க்க இரசியாவின் வலயத்தில் உள்ள சிறிய நாடாகிய பெலரஸ் படைவலிமை மிக்கதாகக் கருதப்படுகின்றது. Nuclear Triad எனப்படும் தரை, வான் கடலடியில் இருந்து அணுப்படைகலன்களை வீசக்கூடிய நாடுகளாக இந்தியா, சீனா, இரசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன. முன்பு பிரான்ஸ் இந்த வல்லமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இல்லாத சுவீடன் சிறந்த படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றது.

கிரேக்கம்

நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்புரிமை உள்ள நாடாகும். ஆனால் துருக்கி கிரேக்கத்திற்கு சொந்தமான கடற்பரப்பை தனது கடற்பரப்பு என உரிமை கொண்டாடுவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் உள்ளது. கிரேக்கம் முதலில் தனது பாதுகாப்பிற்கு சைப்பிரஸுடனும் இஸ்ரேலுடனும் ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்தது. பின்னர் சைப்பிரஸுடனும் எகிப்த்துடனும் இன்னும் ஓரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் செய்தது. இந்த ஒப்பந்தங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கேந்திரோபாய தன்னாட்சி இல்லாமையை எடுத்துக் காட்டுகின்றது. பிரான்ஸுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்வதற்கு கிரேக்கம் பிரான்ஸிடமிருந்து 24 ரஃபேல் விமானங்களையும் மூன்று போர்க்கப்பல்களையும் வாங்க வேண்டியிருந்தது.

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின்றி நேட்டோ இருப்பது கடினமான ஒன்று என்றார் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென் ஸ்ரொலென்பேர்க்.

Wednesday 6 October 2021

Pandora: வருமானவரிப் புகலிடங்கள்



வெளிநாடுகளில் முறைகேடாகப் பணமுதலீடு செய்து சொத்துக் குவித்தவர்களின் பட்டியலை, சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists (ICIJ) `பண்டோரா பேப்பர்ஸ்' எனும் பெயரில் வெளியிட்டிருக்கிறது. உலகின் முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களான பிபிசி, தி கார்டியன், இந்தியாவின் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' முதலிய 150 ஊடகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் புலனாய்வில் பன்னிரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான திடுக்கிடும் ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

வருமானவரிப் புகலிடங்கள்.

ஒரு நாட்டிலோ அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலோ வருமானவரி குறைவானதாகவும் இரகசியம் பேணும் சட்டங்களும் இருந்தால் அது வருமானவரிப் புகலிடமாகும். அவை மட்டும் போதாது அந்த நாட்டில் ஒரு நீண்டகால அடிப்படையில் அரசியல் உறுதிப்பாடு இருப்பதும் நிதித் துறையில் அரச தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். பனாமாவில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies ) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனை வரி போன்றவற்றை பனாமா அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. பனாமாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் அல்லது தனிப்பட்டவர்களின் பெயர்கள் கொடுக்கத் தேவையில்லை, தங்கள் நடவடிக்கைகள் பற்றிப் பதிவுகள் வைத்திருக்க வெண்டும் என்ற அரச கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய பதிவுகளை வெளிநாட்டு வருமான வரித் துறையினருக்கு வெளிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. உலக வெளிப்படைத் தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாத படியால் அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்பவர்களின் நிதி நிலைமை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லை.

வருமானவரிப் புகலிடங்களின் செயற்பாடு

மிகவும் சட்ட பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் ஒரு நாடோ அல்லது ஒரு நாட்டின் ஒரு புகுதியோ வருமானவரிப் புகலிடமாக இருக்க முடியும். இருப்பதும் உண்டு. உதாரணத்திற்கு கிரேப்ஸ் என்னும் நிறுவனம் அமெரிக்காவில் கைப்பேசிகளை நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தையில் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் நூறு டொலர் இலாபத்திற்கு அமெரிக்காவில் வரி கட்ட வேண்டும். மாறாக அந்த கைப்பேசிகளை வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்துள்ள கிரேப்ஸ் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கு 101டொலர்களுக்கு விற்று இலாபமாகக் கிடைக்கும் ஒரு டொலருக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். பின்னர் வருமான வரிப் புகலிட நாட்டில் இருந்து உலகெங்கும் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்து கிடைக்கும் 99 டொலர் இலாபத்திற்கு வருமானவரி கட்டாமலோ அல்லது அமெரிக்காவிலும் பார்க்க மிகக் குறைந்த வருமான வரியையோ கட்டலாம். இவை சட்டபூர்வமான வர்த்தகமாகும். ஆனால் அமெரிக்கா இப்படி ஒரு வருமானவரிப் புகலிட நாடு இருப்பதை விரும்பாது. அது அமெரிக்காவின் வருமான வரி மூலம் திரட்டும் நிதியைக் குறைக்கின்றது. ஆனால் நடைமுறையில் ஊழல் செய்வோர்க்கும் சட்ட விரோதமாகப் பணம் சேர்ப்போர்க்கும் தஞ்சமடையும் இடமாகப் பல வருமானவரிப் புகலிடங்கள் செயற்படுகின்றன. வெளி நாட்டு நிறுவனம் ஒன்று ஒரு வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்யும் நிறுவனத்தை shell company என அழைப்பர். இது வர்த்தக நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாமல் நிதிப் பரிமாற்றங்கள் செய்வதற்கும் அல்லது எதிர்கால திருகுதாள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வைத்திருக்கப்படும். வருமானவரிப் புகலிடங்களிற்குப் போகும் நிதி பின்னர் உலகின் முன்னணி நிதிச் சந்தைகளான New York, London, Zurich, Geneva, Frankfurt, and,  Singapore, Hong Kong, and Dubai ஆகியவற்றைப் போய்ச் சேரும்.



பெரும் வங்கிகளின் குழந்தைகள்

பல வருமானவரிப் புகலிடங்களை உருவாக்கிய சிற்பிகள் HSBC, UBS, Credit Suisse, Citigroup, Bank of America, RBS, Barclays, Lloyds, Standard Chartered, JPMorgan Chase, Wells Fargo, Santander, Credit Agricole, ING, Deutsche Bank, BNP Paribas, Morgan Stanley, and Goldman Sachs ஆகிய முன்னணி வங்கிகள் ஆகும். 1970களில் இருந்து இந்த முன்னணி வங்கிகள் தமது பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களின் வருமானங்களிற்கான வரிகளில் இருந்து தப்ப உதவி செய்து பெரும் வருவாயை ஈட்டியுள்ளன. வெறும் நாணயங்களை மட்டுமல்ல தங்கம் போன்ற உலோகங்கள், ஓவியங்கள், பழைய வாகனங்கள், புகைப்படங்கள், உல்லாசப் படகுகள், எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றின் வர்த்தக மூலம் வருமானங்கள்  மறைக்கப்படுவதும் உண்டு.

பினாமிகள்

வருமானவரிப் புகலிடத்தில் அரசியல்வாதிகள் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்குரிய நண்பர் அல்லது உறவினர் தேவை. அதாவது பினாமி தேவை. ஒரு அரசியல்வாதி தன் நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை தனது பினாமியின் பெயரில் ஒரு இரகசியம் பேணும் வருமானவரிப் புகலிட நாட்டில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதனால் அந்தப் பினாமி நிறுவனம் பெரும் நிதியைத் திரட்டும். பின்னர் இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்னும் முகமூடியுடன் இந்தியாவிற்கு வரும். அந்த முதலீட்டுக்கு வரிவிலக்கும் வழங்கப்படும்.

பணச் சலவையும் வருமானவரிப் புகலிடமும்.

உலகில் அதிக அளவு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்த பிராந்தியமாக ஹொங் கொங் இருக்கின்றது. பிரித்தானியாவின் முடிக்குரிய பிராந்தியாமான வேர்ஜின் தீவுகள் இரண்டாம் இடத்திலும் பனாமா நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பனாமாவில் தற்போது 350,00இற்கும் அதிகமானா நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பனாமாவில் சட்ட விரோத நிதிகளை சட்டபூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். பனாமா புவியியல் ரீதியாக உலகின் பெருமளவு போதைப் பொருள் உற்பத்தி செய்யும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் உலகில் முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கின்றது. பனாமா ஊடகவியலாளர் ஒருவர் பணச் சலவை என்று வரும் போது எமது நாட்டில் நன்றாக நனைத்து துவைத்துக் காய வைத்துக் கொடுப்போம் என்றார். சிறந்த வருமானவரிப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். பனாமாவில் வருமான வரி தொடர்பாகவும் சட்டம் தொடர்பாகவும் வல்லுனர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் செய்து பிழைப்பு நடத்துகின்றன. பணச்சலவைக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டமைப்பான நிதி நடவடிக்கைப் பணிப் படை { Financial Action Task Force (FATF)} பனாமா நாட்டை தனது சாம்பல் நிறப்பட்டியலில் சேர்த்துள்ளது. இலகுவாக வர்த்தக நிறுவனங்களைப் பதிவு செய்தல், நடவடிக்கைப் பதிவேடுகள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் இன்மை போன்றவை பனாமாவை இந்தப் பட்டியலில் வைத்திருக்கின்றது. அனாமதேய சமூக அமைப்பு (anonymous society) என வகைப்படுத்தி பனாமாவில் பெயர்கள் வெளிவிடாமல் நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். அப்படிப் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், சொத்துக்கள் பற்றிய விபரம் யாருக்கும் வெளிவிடப்படமாட்டாது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் (Corporations) தமது கணக்குகளை சட்டப்படி ஆய்வு செய்யத் தேவையில்லை. வாருமானவரித் துறைக்கு தமது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைக்களுக்கு பனாமாவில் வரி கட்டத் தேவையில்லை.

ரோனி பிளேயர்

பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ரோனி பிளேயரும் அவரது துணைவியாரும் இலண்டன் நகரின் நடுப்பகுதியில் உள்ள 6.5மில்லியன் பவுண்கள் பெறுமதியான ஒரு கட்டிடத்தை வாங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரித்தானியாவில் வாங்கி இருந்தால் அதற்கான முத்திரைக் கட்டணமாக மூன்று இலட்சத்து பன்னிரண்டாயிரம் பவுண்களுக்கு மேல் செலவழித்திருக்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளராக இருக்கும் நிறுவனத்தை வருமானவரிப் புகலிட நாடு ஒன்றில் வாங்கினார்கள். விற்பனையாளர்கள் பாஹ்ரேன் அரசுடன் தொடர்புள்ளவர்கள். அவர்கள் பிரித்தானியாவில் மூலதன ஆதாய வரியை தவிர்ப்பதற்காக அப்படி விற்பனை செய்ததாக செர்ரி பிளேயர் தெரிவித்துள்ளார். அக்கட்டிடத்தின் உரிமம் உள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர்களாக பிளேயார் தம்பதிகள் இப்போது இருக்கின்றார்கள். இந்த நடவடிக்கையில் எந்த ஒரு பிரித்தானியச் சட்டமும் மீறப்படவில்லை. ஆனால் அவர்கள் முத்திரைக் கட்டணத்தை தவிர்த்துள்ளார்கள்.

இலஞ்சம் கொடுக்க சிறந்தவழி

ஒரு நாட்டின் அமைச்சருக்கு  இலஞ்சம் கொடுக்கும் போது அவரும் பிடிபடாமல் இலஞ்சம் கொடுப்பவரும் பிடிபடாமல் இருக்க வருமான வரிப்புகலிடம் சிறந்த வழி வகுக்கின்றது. பிரித்தானியாவில் அல்லது அமெரிக்காவில் ஆடம்பர வீட்டை வைத்திருக்கும் (பனாமா போன்ற நாடுகளில்) நிறுவனத்தை குறித்த அமைச்சர் பெயருக்கு மாற்றி விடுவார்கள்.  நைஜீரியாவின் எரிபொருள் துறை அமைச்சருக்கு இப்படி பெருமளவு இலஞ்சத்தை உலக எரிபொருள் நிறுவனங்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. உலகின் எல்லா முன்னணிச் செல்வந்தர்களுக்கும் வருமானவரிப் புகலிடம் கொடுக்கும் நாடுகளில்/பிராந்தியங்களில் பெருமளவு சொத்துக்கள் இருக்கின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் கொங்கோ நாட்டில் பல நூறு மில்லியன்களைத் திருடி வருமான வரிப்புகலிடங்களில் வைத்திருக்கின்றார். அவரை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை. 

பொருளாதார தடை தவிர்ப்பு

அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஏழுக்கும் மேற்பட்ட இரசிய பெருஞ்செல்வந்தர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் தமது சொத்துக்களைத் திரட்டி வைத்திருக்கின்றனர். பணச்சலவை செய்வதற்கு அதாவது சட்ட விரோத செல்வத்தை சட்டபூர்வமான செல்வமாக மாற்றுவதற்கு சிறந்த இடம் வருமான வரிப்புகலிட நாடுகளாகும். படைக்கலன் கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், மனிதர்களைக் நாடுகளுக்கு நாடு கடத்துபவர்கள் தமது சட்ட விரோத செல்வத்தை வருமான வரிப்புகலிட நாடுகளில் வைத்திருக்கின்றனர். 

மூலதன ஆதாய வரி தவிர்ப்பு

பிளேயர் தம்பதிகள் செய்தது போல் பிரித்தானியாவில் உள்ள 1500 கட்டிடங்கள் விற்பனை செய்யப்பட்டு மூலதன ஆதாய வரி மற்றும் முத்திரைக் கட்டணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கட்டார்(கத்தார்) அரச குடும்பம் பிரித்தானியாவில் £18.5 மூலதன வரியை தவிர்த்துள்ளது. ஜோர்தான் நாட்டு அரசர் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களை புகலிட நாட்டு நிறுவனங்கள் மூலம் வாங்கியுள்ளார்.

இந்தியர்கள் மட்டும் சளைத்தவர்களா?

இந்தியாவின் துடுப்பாட்ட சாதனையாளர் சச்சின் டென்டுல்கர், தொழிலதிபர்கள் கிரண் மஜூம்தார் ஷா, அனில் அம்பானி எனப்பல இந்தியர்கள் பண்டோரா பத்திரங்களில் உள்ளனர். அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் வருமானவரிப் புகலிடங்களில் உள்ளன. ஆனால் அவர் ஒரு கடனாளியாக தன்னைக் காட்டி தனக்கு சொத்து ஏதும் இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளார். பாக்கிஸ்த்தான் மட்டும் சும்மாவா? இம்ரான் கான் உட்பட பல அரசியல்வாதிகள் தொடர்பான பண்டோரா பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.  

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...