Followers

Thursday, 28 October 2021

சீன DF-41 மலை! இந்திய அக்னி-5 மடு!


சீனாவின் எப்பாகத்தையும் அணுக்குண்டுகளால் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணைகளை 2021 ஒக்டோபர் 27-ம் திகதி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ஒடிசாவி மாநிலத்தின் கடற்பரப்பில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து வீசிப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்தியா தெரிவிக்கின்றது. அக்னி-5 ஆல் 1.1தொன் எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிச் செல்ல வல்லது. ஆனாலும் இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

கண்டம் விட்டு கண்டம் பாயுமா? (ICBM?)

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை (Inter-continental Ballistic Missiles) என வகைப்படுத்தப்பட்டுள்ள அக்னி-5 ஏவுகணை சீனாவிற்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றது, சீனாவை கலங்க வைத்துள்ளது, சீனாவை கரிசனை கொள்ள வைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகணை குறைந்தது 5500கிலோ மீட்டர் வரை பாயவேண்டும். ஆனால் அக்னி-5 5000கிலோ மீட்டர் தான் பாயக்கூடியது எனவும் கருதப்படுகின்றது. இந்து இதிகாசங்களில் அக்னி படைக்கலன் தேவர்களில் ஒருவரான அக்னிபகவானிற்கு உரியது. மகாபாரதப் போரின் 12-ம் நாள் போரில் அர்ச்சுனன் மன்னன் பகதத்தனை அக்னி அம்பு எய்து கொன்றான் எனக் கூறப்படுகின்றது.

அக்னி-5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையா?

அக்னி-5 தனது பாய்ச்சலின் இறுதிக் கட்டத்தில் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகத்தில் பாயும் எனச் சொல்லப்படுகின்றது. அக்னி-5 ஏவுகணை 17.5மீட்டர் உயரமும் 2மீட்டர் விட்டம் கொண்ட குறுக்கு வட்டமும் கொண்டது. ஏவப்படும் போது அதன் எடை 49,000 முதல் 55,000கிலோ கிராம் வரை இருக்கும். இதை பார ஊர்திகளில் எடுத்துச் சென்று தெருக்களில் இருந்து ஏவலாம். நிலையான ஒரு ஏவுதளம் தேவையில்லாத ஏவுகணை என்பதால் அதை இலக்கு வைத்து எதிர்கள் தாக்குவது கடினமாகும். அக்னி-5 ஏவுகணைகளை இந்தியா 2013-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் 2016-ம் ஆண்டிலும் பரிசோதித்தித்து பின்னர் 2018இல் இரண்டு தடவை பரிசோதித்தது. அக்னி-5இல் கணினி, வழிகாட்டல் முறைமை ஆகியவையும் உள்ளன. இந்தியாவின் முதலாவது அக்னி-1 ஏவுகணை 700கிமீ பாயக்கூடியது. அக்னி-2 2000கிமீ, அக்னி-3 ஏவுகணையும் அக்னி-4 2500முதல் 3000கிமீ வரை பாயக்கூடியவை.

பல இலக்குகளைத்தாகும் அக்னி-6 MIRTV

Multiple Independently Targetable Re-entry Vehicle (MITRV) என்பது பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளை தாமாகவே அழிக்கக் கூடியவை. இந்தியா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் அக்னி-6 ஏவுகணையில் பத்து அணுக்குண்டுகளை தாங்கிச் சென்று பத்து இலக்குகளைத் தாக்கும் வல்லமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் National Interest ஊடகம் இந்தியா இதை உருவாக்கும் வல்லமையைப் பெறும் என்று 2018இல் எதிர்வு கூறி இருந்தது. அக்னி-5 மூன்று மட்டங்களைக் கொண்டது அக்னி-6இல் நான்கு மட்டங்கள் இருக்கும்.

ஹைப்பர்சோனி பிரம்மோஸ்-2

இந்தியா இரசியாவுடன் இணைந்து உருவாக்கும் பிரம்மோஸ்-2 ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஏழு மடங்கு வேகத்தில் பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளாகும். ஆனால் அவற்றின் பாய்ச்சல் தூரம் 1000கிமீ மட்டுமே. தரையில் இருந்து 14கிமீ செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து பின்னர் இலக்கை நோக்கி ஏறக்குறைய 90பாகை செங்குத்தாக விழும் (Deep-Dive) பிரம்மோஸ்-2 ஏவுகணை உலகில் உள்ள வழிகாட்டல் ஏவுகணைகளில் (Cruise Missiles) வேகம் கூடியது எனக்கருதப்படுகின்றது. மலைகளிற்குள்ளும் பாறைகளுக்கு உள்ளும் உள்ள இலக்குகளை பிரம்மோஸ்-2 நிர்மூலம் செய்யக் கூடியது. செங்குத்தாக விழக்கூடிய வகையில் அவற்றை உருவாக்கியது ஒரு சிறந்த உபாயமாக கருதப்படுகின்றது. அதனால் பிரம்மோஸ்-2 ஒரு செலவு குறைந்த ஏவுகணையாகும். இரசியாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய SU-31-MKI என்னும் பற்பணி-வானாதிக்க போர்விமானத்தில் பிரம்மோஸின் இன்னொரு வகை எவுகணைகள் பொருத்தக் கூடியதாக இருப்பது இந்தியாவிற்கு மேலதிக வலுவைக் கொடுக்கின்றது. ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை தாங்கிய SU-31-MKI விமானங்கள் 122ஐக் கொண்ட 222 Sqadron என்னும் பெயர் கொண்ட விமானப்படையணி சீனாவைத் தாக்குவதற்கென தமிழ்நாட்டின் தஞ்சாவூர் விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தியாவின் அக்னி சீனாவின் காற்றுக்கு ஈடாகாது.

சீனாவின் கிழக்குக் காற்று என்னும் பொருளுடைய DongFeng ஏவுகணைகள் நான்கு தலைமுறையாக உருவாக்கப்படுகின்றது அதன் நான்காம் தலைமுறை DongFeng-41 (DF-41) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாய்ச்சல் தூரத்தில் இது உலகின் இரண்டாவது வலிமை மிக்க ஏவுகணையாகும்.  அதன் பாய்ச்சல் தூரம் 12,000கிமீ முதல் 15,000கிமீ அக்னி-5இன் பாச்சல் துரத்திலும் இரண்டு மடங்கிலும் அதிகமானது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையான DF-41 இன் வேகம் ஒலியிலும் பார்க்க 25மடங்கு ஆகும். இது ஆறு முதல் பத்து வரையிலான அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளைத் தாக்க வல்லது. இதன் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கக் கூடிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை.  அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஒரு விண்வெளிப்படையை (Space Force) அமைத்தால் மட்டுமே சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் Centre for Strategy and Technologyயின் இயக்குனர் ராஜ்ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் இந்தியாவைக் காப்பாற்றுவாரா?

சீனா 2021 ஓகஸ்ட் மாதம் பரிசோதித்த உலகைச் சுற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் அமெரிக்கா என்னும் அம்மியே ஆடிப்போயுள்ள போது இந்தியக் கடுதாசி?

No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...