Followers

Showing posts with label ராஜபக்சே. Show all posts
Showing posts with label ராஜபக்சே. Show all posts

Thursday, 14 July 2022

இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுமா?


அரசியலமைப்பு நெருக்கடி:
அரசியலில் ஏற்படும் முதன்மையான நெருக்கடிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தினிற்குள் அல்லது கடந்த கால முன்மாதிரிகளை வைத்துக் கொண்டோ தெளிவான தீர்வு கொண்டுவர முடியாத நிலையை அரசியலமைப்பு நெருக்கடி என்பார்கள். அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் போது அரசு செயற்பட முடியாத நிலை உருவாகும்.

அரசியலமைப்பு நெருக்கடி உருவாகும் சூழல்கள்:

1, ஒரு நெருக்கடிக்கான தீர்வு அரசியலமைப்பில் இல்லாதபோது

2. அரசியலமைப்பின் வாசகங்களுக்கான வியாக்கியாங்களில் முரண்பாடு நீதித்துறையில் ஏற்படும்போது.

3. அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது.

4. அரச நிறுவனங்கள் செயற்பட முடியாத போது. உதாரணமாக அரசமைப்பின் படி தேர்தல் நடத்த வேண்டிய நேரத்தில் அதை நடத்த முடியாத நிலை ஏற்படுதல்.

அரசியலமைப்பு நெருக்கடிக்கான உதாரணங்கள்

1. உலக அரசியல் வரலாற்றில் பல அரசியலமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டதுண்டு. தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் வாக்களிக்க முடியாமல் அதன் அரசியலமைப்பு தடை செய்திருந்தது. கலப்பின மக்களும் வாக்களிக்க முடியாது என 1950இல் சட்டம் மாற்றப்பட்டதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. அதை அரசு ஏற்க மறுத்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

2. 1975இல் ஒஸ்ரேலியாவின் தொழிற்கட்சி தலைமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது ஆளுநர் நாயகம் தாராண்மைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை தலைமை அமைச்சராக நியமித்தார். அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

3. ஐக்கிய அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குடியரசுத் தலைவர் செயற்படும் போது அரசியலமைப்பு நெருக்கடி அடிக்கடி ஏற்படுவது உண்டு.  

4. 2007-ம் ஆண்டு உக்ரேனிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் கலைத்தமையை நாடாளுமன்றம் ஏற்க மறுத்த போது பிணக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் விட்ட போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்ப்பட்டது.


இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல்

குடியரசுத் தலைவராக 2019இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச 2022 ஜூலை 9-ம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து நாட்டில் இருந்து வெளியேறி விட்டார். தனது வாயால் தான் பதவி விலகுவதாக அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என முதலில் அறிவித்த இலங்கை நாடாளுமன்ற அவைத்தலைவர் (சபாநாயகர்) மஹிந்த யாப்பா அபேவர்த்தன பின்னர் அவர் கடிதத்தில் கையொப்பமிட்டார் என்றார். ஆனால் 2022 ஜூலை 14ம் திகதை காலை 10 மணியளவில் வெளிவந்த செய்திகளின் படி குடியரசுத் தலைவர் அவைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை. பொதுவாக குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்லும் போது தலைமை அமைச்சர் தற்காலிக குடியரசுத் தலைவராக பதவி ஏற்கலாம். குடியரசுத் தலைவர் வெளிநாடு சென்றார் என்பது கூடிய முறைப்படி அறிவிக்காத நிலையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தார். பின்னர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் இன்னொரு உறுப்பினரான பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவும் ரணிலின் பதவி ஏற்றல் செல்லுபடியற்றது என்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்கவும் ரணிலை குடியரசுத் தலைவராக ஏற்கவில்லை. இவர்கள் பாதுகாப்புத்துறையினர், காவற்துறையினர் உட்பட அரசைச் சேர்ந்தவரகள் ரணிலின் உத்தரவிற்கு இணங்க செயற்படக்கூடாது எனப் பகிரங்க அறிக்கை விட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் ஆளும் மக்கள் முன்னணியின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினரகள் ரணிலை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி (மைத்திரிபால சிரிசேன), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவாக இல்லை. இத்தனை பிரச்சனைகளினதும் நடுவண் புள்ளியாகிய மக்கள் எழுச்சியை செய்தவர்களில் முதன்மையானவர்களாகிய அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ரணில் பதவி ஏற்பை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த அமைப்பும் மற்ற கிளர்ச்சிக்காரர்களும் தலைமை அமைச்சரின் அரச வதிவிடமான அலரி மாளிகையை தங்கள் வசமாக்கியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச தான் இருக்கும் போது உள்ள குழப்பத்திலும் பார்க்க தான் போன பின்னால் அதிக குழப்பம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டிருக்கலாம். தனது பதவிலகல் கடிதத்தை சமர்ப்பிக்காமல் விட்டால் தான் தனது பதவிக் காலம் முடியமுன்னர் நாடு திரும்பி மீண்டும் பதவி ஏற்கலாம் என்ற எண்ணத்துடனும் அவர் செயற்ப்பட்டிருக்கலாம். 

2022 ஜூலை 14-ம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு (பிரித்தானிய நேரம்) கோத்தபாய மின்னஞ்சல் மூலம் தன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக செய்தி வந்தது. அங்கும் ஒரு குழப்பம். மின்னஞ்சல் மூலமான பதவி விலகல் கடிதம் அரசியலமைப்பில் இல்லை. அதற்கான முன்மாதிரியும் இல்லை. அவர் வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் உள்ள இலங்கையின் தூதுவரகத்தில் பதவி விலகல் கடிதத்தை வழங்குவது ஏற்புடையதாக இருக்கலாம். பிரித்தானிய நேரம் 16:47இற்கு பிரித்தானிய கார்டியன் பத்திரிகையின் இணையச் செய்தியின் படி சிங்கப்பூரில் இருந்து பதவி விலகல் கடிதம் விமான மூலம் அவைத் தலைவருக்கு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்த பின்னர் ஜூலை 15-ம் திகதி அவைத்தலைவர் பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என அறியக் கூடியதாக உள்ளது. 

அரசியலமைப்பு நெருக்கடி மட்டுமல்ல இரத்தக்களரி

கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவராக இருக்கும் வரை அவருக்கான அரசுறவியல் கவசம் (Diplomatic Immunity) பல நாடுகளில் கிடைக்கும். அதனால் அவர் தனக்கும் தனது உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை பதவி விலகல் கடிதம் சம்ர்ப்பிக்க மாட்டர் என்றே தோன்றுகின்றது. நாடாளுமன்ற அவைத்தலைவர் அபேவர்த்தன பதில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நிலையில் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட அதிபர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான கடிதம் இல்லாத சூழலில் அவர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான சட்ட ஆதாரங்களைத் தான் தேடுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதம் இல்லாமல் அவர் பதவி விலகினார் என்பதை அபேகுணவர்த்தனவோ அல்லது சட்ட மா அதிபரோ உறுதிப்படுத்தாவிடில் இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. அதை “போராட்டம்” (அரகலய) என்னும் பெயரில் கிளர்ச்சி செய்பவர்களை மேலும் சினப்படுத்தலாம். வெளிநாடுகளின் ஆதரவுடன் ரணிலை பதவியில் தக்க வைக்க படையினர் முயன்றால் இரத்தக் களரி ஏற்பட வாய்ப்புண்டு.


Sunday, 5 June 2022

திருத்த முடியாத சிங்களத்தின் இருபத்தோராம் திருத்தம்


இலங்கையில் அரசியலமைப்பு யாப்பு மக்களுக்காக எழுதப்படாமல் தனிப்பட்டவர்களுக்காக எழுதப்படுவதும் திருத்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு யாப்பு பிரித்தானிய குடியேற்றவாத்த த்தை புதிய குடியேற்றவாதமாக மாற்றுவதற்கு 1947இல் எழுதப்பட்டது. 1972இல் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கைக் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு யாப்பை பயன்படுத்தினார். 1978இல் ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜயவர்த்தன தன்னை அதிகாரம் மிக்க ஆட்சியாளராக மாற்ற ஓர் அரசியலமைப்பு யாப்பை உருவாக்கினார். தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத்தலைவராக்கினார்.

திருத்தங்கள் நாட்டை திருத்தவில்லை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் முறைமையை ஒழிப்பேன் என சூளுரைத்துக் கொண்டு 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதை நிறைவேற்றாமல் அதிபரின் அதிகாரங்களை இலங்கை அரசியல் யாப்பின் 17-ம் திருத்தம் மூலம் குறைத்தார். 2001-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச 18-ம் திருத்தத்தின் மூலம் தன் அதிகாரங்களை அதிகரித்தார். 2015-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேன குடியரசுத் தலைவராகவும் கூட்டாக ஆட்சியைக் கைப்பற்றினர். ரணில் தலைமை அமைச்சரான தனது அதிகாரஙகளை அதிகரிப்பதற்காகவும் மைத்திரியை ஓரம் கட்டுவதற்காகவும் 19-ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறலை அதிகரித்தது என்று சொல்லப்பட்டாலும் ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கை நடுவண் வங்கியின் கடன் முறி விற்பனையில் பெரும் ஊழல் நடந்தது. 2019இல் கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவரது கட்சியான இலங்கை மக்கள் முன்னணி 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் 2020இல் இலங்கை அரசியலமைப்பின் 20-ம் திருத்தத்தை நிறைவேற்றினர். அதனால இலங்கை அவரகளது பிடிக்குள் போய்விட்டது என்ற குற்றம் சாட்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பரவலாக முன்வைக்கப்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பு யாப்பு அவ்வப்போது தனிப்பட்டவர்களுக்கு ஏற்ப திருத்தப்பட்டமையால் நாட்டில் ஊழல், திறமையற்ற ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் பேரினவாதம் இரண்டறக் கலந்திருப்பதாலும் நாடு தொடர்ச்சியாக சீரழிந்து கொண்டிருக்கின்றது.

கொலையாளிகளைத் தேடும் சிங்களம்

இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தேர்தலில் இனக்கொலையை சிறப்பாகச் செய்பவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். 2019 குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் உதிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களே முடிவு செய்தன. அது தேர்தல் முடிவை மாற்ற திட்டமிட்டுச் செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்கள் என ஐயம் வெளிவிடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை ஆலோசகரான சகல இரத்நாயக்க கோத்தபாய ராஜபக்சவை “சேர்” (Sir) என அழைப்பதை அவருடன் பணிபுரிபவர்கள் நகைத்த போது கோத்தபாய விடுதலைப் புலிகளை அழித்தவர் என்பதால் அவர் மரியாதைக்கு உரியவர் என சகல இரத்நாயக்க பதிலளித்தார். ஓர் இனம் இனைக்கொலையாளி எனக் குற்றம் சாட்டுபவரை மற்ற இனம் மதிப்புக்குரியவராக உயர்த்திக் கொண்டிருப்பதால் அவரது தகைமை, திறமை, நேர்மை போன்றவற்றிற்கு அப்பால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். முன்னாள் இலங்கை குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜயவர்த்தன தமிழர்களுக்கு தீங்கிழைப்பவர்களை சிங்களவர்கள் மதிப்பார்கள் எனப் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

21இற்கு திசை திருப்பும் ரணில்

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் பெரும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த நிலையில் மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சுப் பதவியில் இருந்து விலக ரணில் விக்கிரமசிங்கேயை தலைமை அமைச்சராக 2022 மே மாதம் அவரது அரசியல் எதிரியாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்ச நியமித்தார். நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு, அரசியல் சீர்திருத்தம் என்பவற்றை முதன்மை கொள்கையாக முன்வைத்து ரணில் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற பின்னர் மேற்கு நாடுகளில் இருந்தும் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமிருந்தும் கடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காலிமுகத்திடலில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை இலங்கை வர்த்தக சபை, சட்டவாளர் சபை, சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஆகியவை காலிமுகத் திடல் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைப்புக்களாக கருதப்படுகின்றது. ரணில் தலைமை அமைச்சராகிய பின்னர் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தின் வலிமை குறைந்து விட்டதாகவும் சில செய்திகள் வெளிவருகின்றன.

குடியரசுத் தலைவர் பதவியை ஒழிக்க முடியுமா?

ரணில் விக்கிரமசிங்கவால் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்களுக்கான விலையை குறைக்க முடியாது என்ற சூழலில் மக்களைத் திசைதிருப்பவும் தனது அதிகாரத்தை கூட்டி படிப்படியாக ராஜபக்சேக்களை ஓரம் கட்டவும் இலங்கை அரசியல் யாப்பிற்கான 21-ம் திருத்தத்தை கொண்டு வர முயல்கின்றார். அவரது கை இலங்கை அரசியலில் ஓங்குவதை விரும்பாத அவரது அரசியல் எதிரியான மக்கள் வலிமைக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு 21-ம் திருத்தத்தை முன் வைத்துள்ளார். ரணில் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை குறைக்க முயல்கின்றார். சஜித் குடியரசுத் தலைவர் பதவியையே ஒழித்துக் கட்ட முயல்கின்றார். சஜித் தன்னால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால் அப்பதவியை ஒழிக்க முயல்கின்றார். இறப்பதற்கு முன்னர் தான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அவாவில் ரணில் அதை ஒழிக்க மறுக்கின்றார். கோத்தபாய ராஜபக்சவும் குடியரசுத் தலைவர் பதவியை ஒழிப்பதை எதிர்க்கின்றார்.

இரட்டைக் குடியுரிமைப் பிரச்சனை

21-ம் திருத்தத்தின் படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவோ குடியரசுத்தலைவராகவோ பதவி வகிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவதில் ரணிலும் சஜித்தும் முனைப்பு காட்ட கோத்தபாயவின் மக்கள் முன்னணிக் கட்சியினர் பலர் அதை எதிர்க்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்பு தனிப்பட்டவர்களைச் சுற்றியே சுழலுகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

கோத்தாவிற்கு அமைச்சுப்பதவி பிரச்சனை

கோத்தபாய ராஜ்பக்ச தன் குடியரசுத் தலைவர் பதவியுடன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்றார். குடியரசுத் தலைவர் அமைச்சுப் பதவியை வகிக்க கூடாது என சஜித் மற்றும் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் கருதுகின்றனர். ரணில் கோத்தபாயாவைச் சமாளிக்க வேண்டி இருப்பதால் அதில் அதிக முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரணிலிடம் பாதுகாப்பு அமைச்சுப் பதவி இருந்தால் அவரால் இலகுவாக கோத்தபாயாவை ஓரம் கட்டலாம்.

தலைமை அமைச்சரின் அதிகாரம்

தலைமை அமைச்சரான ரணில் தலைமை அமைச்சருக்கே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் 21-ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார். தற்போது தலைமை அமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது. அது ரணிலின் கையில் வந்தால் அவர் தனது பக்கம் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ரணில் மனுஷ நாணயக்காரா, ஹரின் பெர்னாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாசவின் மக்கள் வலிமைக் கட்சியில் இருந்து தன் பக்கம் கவர்ந்துள்ளார். மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாயவின் அதிகாரங்களை தேர்தலில் தோல்வியடைந்து பின் கதவால் நாடாளுமன்றத்திற்கு வந்த ரணிலுக்கு தாரைவார்க்கக் கூடாது என கோத்தபாயவின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20-ம் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து நான்கரை ஆண்டுகளின் பின்னரே அதை குடியரசுத் தலைவர் கலைக்க முடியும். ரணில் அந்தக் கால எல்லையை 21-ம் திருத்தத்தின் மூலம் இரண்டரை ஆண்டுகளாக குறைக்க முயல்கின்றார். அதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்துவிட்டு தேர்தலை நடத்தி தான் அதிகாரம் மிக்க ஒருவராக வரவேண்டும் என்பது ரணிலின் கனவு.

சிங்களவர்கள் எத்தனை தடவை அரசியலமைப்பை மாற்றினாலும் அவர்களால் ஒரு நேர்மையான, திறமையான ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதில்லை என்பதை இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருந்தும் வரை திருத்தங்கள் பயன் தரமாட்டாது. 

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...