Followers

Tuesday 31 May 2022

அல் அக்சா பள்ளிவாசலில் கைஓங்கும் யூதர்களும் கையாலாகத அரபுக்களும்

 


2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இப்படி நடப்பதாக கூறுகின்றார்கள். இம் மூன்று மத்தினருக்கும் புனித இடமான ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரில் எப்போதும் போல் இல்லாத வகையில் இஸ்ரேலியர்களும் 2022 ஏப்ரலில் அரபுக்களும் மோதிக் கொண்டனர். ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் புனித இடமாகக் கருதப்படுகின்றது. இறை தூதர் நபி வர முன்னர் மட்டுமல்ல பரபிதா தன் ஒரே ஒரு குமாரரை புவியில் உள்ள பாவிகளை இரட்சிக்க அனுப்ப முன்னரே ஜெருசேலத்தில் பழைய நகர் யூதர்களின் புனித இடமாக இருந்து வருகின்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசேலம் உலகன் நடுப்புள்ளியாக இருந்ததாகத யூதர்கள் கருதுகின்றனர். யூதர்களின் புனித இடமான மலைக்கோவில் (Temple Mount) ஜெருசேலம் பழைய நகரில் உள்ளது.  இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் புவியில் இருந்து வானுலகம் நோக்கி பயணைத்த புனித இடம் ஜெருசேலம் எனச் சொல்கின்றனர். அவரகள் ஜெருசேலம் பழைய நகரில் அல் அக்சா என்னும் பள்ளிவாசலை உருவாக்கி அதை அவர்கள் மக்கா, மதினா போன்ற மிகப் புனிதமான இடமாக கருதுகின்றனர். யேசு நாதர் போதனை செய்த, சிலுவையில் அறையப்பட்ட, உயிர்த்து எழுந்த தலம் ஜெருசேலம் நகராகும். ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரைச் சுற்றி மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அங்கு கிருத்தவர்களுக்கு எனவும், ஆர்மினியர்களுக்கு எனவும் (அவர்கள் மரபுவழி கிருத்தவர்கள்) யூதர்களுக்கு எனவும் இஸ்லாமியர்களுக்கு எனவும் தனித்தனி நிலப்பரப்புக்கள் உள்ளன. 



1967 போர் வெற்றி ஊர்வலம்

யூதர்கள் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் தாம் வெற்றி பெற்றதையும் தங்களது புனித தலமாகிய கிழக்கு ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியதையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதை ஒட்டி அவர்கள் தங்கள் கொடியுடன் பழைய நகர் முழுவதும் ஊர்வலம் போவார்கள். போகும் போது பலஸ்த்தீனிய அரபுக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் அரபுக்கள் அழிக என கூச்சலிட்டுக் கொண்டு யூதர்கள் செல்வார்கள். கிழக்கு ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் இஸ்லாமியர்களின் நிலப்பரப்புக்களூடாக ஊர்வலம் செல்வார்கள். 2022 ஏப்ரல் 17-ம் திகதி உயிர்த்த ஞாயிறு நடந்த மோதலைத் தொடர்ந்து மே மாதம் 29-ம் திகதி யூதர்கள் ஊர்வலம் போகும் போது மோதல் கடுமையாக இருந்தது. 2022 மே மாதம் 29-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 150இற்கும் மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் காயமடைந்தனர். மூன்று யூத காவல் துறையினர் காயமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். அல் அக்சாவினுள் பலஸ்த்தீனியர்கள் நுழைய முடியாமல் இஸ்ரேலியர் தடுத்து நின்றனர். பலஸ்த்தீனியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஒரு இளம் பெண் கடுமையாகத் தாக்கப் படும் காணொலிவெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாத இஸ்ரேலியர்கள்

இஸ்ரேலின் தீவிரதேசியவாதக் கட்சியின் தலைவரான இதமர் பென் வீர் தலைமையில் பல தீவிரதேசியவாத யூதர்க்ள் 2021-05-29 ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சாவை ஆக்கிரமித்திருந்தனர். அல் அக்சாவின் அல் கிபிலி வணக்க மண்டபத்தில் அவர்கள் நிலை கொண்டுள்ள்னர். பலஸ்த்தீன செம்பிறைச் சங்கம் தமது அவசர நோயாளர் வண்டி காயமடைந்தவர்களை எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தீவிரவாத யூதர்கள் இஸ்லாமியர்களின் அல் அக்சா பள்ளிவாசலையும் மலைக் குவிமாடத்தையும் (Dome of the Rock) அகற்றிவிட்டு யூதர்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப் படவேண்டும் என அடம் பிடிக்கின்றனர். இஸ்ரேலியச் சட்டப்படியும் யூத தலைமை மத குருவின் கட்டளைப்படியும் யூதர்கள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையை நடத்தக் கூடாது. இருந்தும் 2022 மே மாதம் யூத தீவிரவாதிகள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையைச் செய்தனர்.

2021 மோதலில் காசா நிலப்பரப்பில் கடும் தாக்குதல்

2021-ம் ஆண்டு மே மாதம் ரம்ழான் நோன்பு தொழுகையின் போது அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்து வரும் ஒலி யூதர்களின் போர் வெற்றிக் கூட்டத்தில் ஆற்றுகின்ற உரைக்கு இடையூறாக இருந்ததால் இஸ்ரேலிய காவல் துறையினர் அல் அக்சாவினுள் சென்று ஒலிபெருக்கியை உடைத்தனர். அப்போது இரு தரப்பு மோதல் உருவானது. பல்ஸ்த்தீனியர்கள் கற்களையும் இஸ்ரேலிய காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த மோதலால் சினமடைந்த கமாஸ் அமைப்பினர் தமது காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். அதனால் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படையினர் கடும் தாக்குதல்களை செய்தனர். பதினொரு நாட்கள் தொடர்ந்த மோதலில் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பல கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. 2022 நடக்கும் மோதலில் இதுவரை கமாஸ் அமைப்பினர் அமைதியாக இருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 2021-ம் ஆண்டு கமாஸிற்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் அது மீளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது கமாஸ் அமைப்பினர் தமது மக்களின் பொருளாதார நிலை மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும் கருத இடமுண்டு. இஸ்ரேல் இப்போது கமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் ஆளிலிவிமானங்களையும் எதிர் கொள்ளக் கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்கியுள்ளது. அவற்றிற்கு தேர்வுக் களம் அமைத்துக் கொடுக்க கமாஸ் அமைப்பினர் விரும்பவில்லையா? 



  • The International Union of Muslim Scholars இஸ்லாமிய நாடுகள் அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1967இல் நடந்த போரில் கிழக்கு ஜெருசேலத்தை ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 2019இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் போது அதை இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் கிழக்கு ஜெருசேலம் யூதர்களுக்கு சொந்தமானது அல்ல எனக் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி கிழக்கு ஜெருசேலம் ஓரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். பன்னாட்டு சட்டங்களின் படி ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆக்கிரமித்த நாடு குடியேற்றங்களைச் செய்ய முடியாது. பன்னாட்டு நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு இசுலாமியர்களின் புனித இடமாகிய அல் அக்சாவை இழிவுபடுத்தும் இஸ்ரேலுடன் உறவை எப்படி வளர்ப்பது என்பது பற்றி பல அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இசுலாமியர்களின் முப்பெரும் புனித இடங்களில் ஒன்றான அல் அக்சாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வழிபட முடியவில்லை. அரபு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளின் நகர்வுகளை நன்கு அவதானிக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவி அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு தமது நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றாமல் அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.

Tuesday 17 May 2022

சுவீடன் + பின்லாந்து: நேட்டோ விரிவாக்கத்தை துருக்கி தடுக்குமா?

 

“ஐரோப்பிய பாதுகாவலர்” மற்றும் “உடனடி பதிலடி” என்னும் இரு 2022 மே மாதம் 13-ம் திகதி போலாந்து உட்பட 14 நாடுகளிலும் “Exercise Hedgehog” என்னும் போர்ப்பயிற்ச்சியை இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ உறுப்பு நாடாகிய எஸ்தோனியாவிலும் இன்னும் ஓர் எல்லை நாடாகிய லித்துவேனியாவில் “இரும்பு ஓநாய்” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் ஜெர்மனியில் “Wettiner Heide” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் இருபது நாடுகள் இணைந்து செய்துள்ளன. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த மிக பெரிய அளவிலும் மிகப் பரந்த நிலப்பரப்பிலும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்துள்ளது. இது உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கு முன்ன்ரே திட்டமிடப்பட்டிருந்தது. இப்போர்ப்பயிற்ச்சிகளில் பின்லாந்தும் சுவீடனும் கலந்து கொண்டுள்ளன.

நேட்டோவிலும் வீட்டோ உண்டு

நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு நாடு புதிதாக இணைவதை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஒரு நாடு எதிர்த்தாலும் இணைய முடியாது. இதுவும் ஒரு வகை இரத்து (வீட்டோ) அதிகாரம் போன்றது. நேட்டோவில் யூக்கோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து உருவாகிய நாடாகிய மசிடோனியா இணைய முற்பட்ட போது கிரேக்கம் அதை தடுத்திருந்தது. கிரேக்கத்தில் மசிடோனியா என்ற பெயரில் ஒரு மாகாணம் உள்ளது அதே பெயருடன் இன்னும் ஒரு நாடு இருப்பதை கிரேக்கம் விரும்பவில்லை. அதனால் அந்த நாட்டின் வட மசிடோனியா என மாற்ற வேண்டும் என கிரேக்கம் வற்புறுத்தியது ஆனால் மசிடோனியா அதற்கு இணங்கவில்லை. மசிடோனியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது கிரேக்கம் தடுத்த படியால் வேறு வழியின்றி மசிடோனியா 2018இல் தன் பெயரை வட மசிடோனியா என மாற்றி நேட்டோவில் இணைந்து கொண்டது. வட மசிடோனியா முதற்தடவையாக 2022 மே 13-ம் திகதி ஆரம்பித்த நேட்டோ போர்ப்பயிற்ச்சியில் இணைந்து கொண்டது.


துள்ளும் துருக்கி

பெரிய போர்ப்பயிற்ச்சியை நேட்டோப் படைகள் ஒரு புறம் நடத்திக் கொண்டிருக்க மறு புறம் பல ஆண்டுகளாக இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான முறுகலில் நடு நிலை வகித்துக் கொண்டிருந்த சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்துள்ளன. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் முறைசாரா மாநாடு (informal meeting) 2022 மே 15-ம் திகதி நடைபெற்றது. அங்கு உரையாற்றிய நேட்டோவின் ஒரே ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியின் வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு பின்லாந்தும் சுவீடனும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் துருக்கியின் ஏற்றுமதிக்கு அவர்கள் விடுத்துள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தான் எந்த நெம்பு கோலையும் பாவிக்கவில்லை எனவும் யாரையும் பயமுறுத்தவில்லை எனவும் கூறியதுடன் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கு பின்லாந்தும் சுவீடனும் வழங்கும் ஆதரவை பகிரங்கப் படுத்துவதாகவும் வெளிப்படுத்தினார். சுவீடனில் பெருமளவு குர்திஷ் மக்கள் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். இந்தியா தமிழர்கள் எங்கு விடுதலை பற்றி பேசும்போது அவர்களுக்கு எதிராக இரகசியமாகச் செயற்படுவது போல் அல்லாமல் துருக்கி உலகின் எப்பகுதியிலும் குர்திஷ் மக்கள் தமது விடுதலைச் செயற்பாட்டை முன்னெடுத்தால் துருக்கி அங்கு பகிரங்கமாகத் தலையிடுவது வழக்கம். ஈராக்கில் உள்ள அரபுக்கள் அங்குள்ள குர்திஷ் மக்களின் விடுதலைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையிலும் பார்க்க அதிக நடவடிக்கையை துருக்கி எடுப்பதுண்டு. சிரியாவிலும் இதே நிலைமை தான். உக்ரேனுக்கு இரசியாவிற்கு எதிரான போரில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை துருக்கி வழங்கி வருகின்றது. உக்ரேனின் கடற்பகுதிகளை இரசியா கைப்பற்றினால் கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கம் ஓங்குவது துருக்கிக்கும் அச்சுறுத்தல் என்பதை துருக்கி நன்கு உணரும். ஆனால் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதை துருக்கி கடுமையாக எதிர்க்கின்றது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவதைத் தடுத்து தனது வேண்டுகோளை கிரேக்கம் நிறைவேற்றியது போல் துருக்கியும் தனது காய்களை நகர்த்த முயல்கின்றது. ஆனால் துருக்கியி தனது கோரிக்கையில் உறுதியாக நிற்க மாட்டாது என நம்பப்படுகின்றது.

கங்கணம் கட்டுமா ஹங்கேரி?

1999-ம் ஆண்டு போலாந்து செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் ஹங்கேரியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. ஹங்கேரி இரசியாவில் இருந்து மலிவு விலையில் எரிவாயு வாங்க விரும்புகின்றது. அதற்கான விதிவிலக்கு தனக்கு வழங்கப் பட்டால் மட்டுமே சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் இணைய அனுமதிப்பேன் என ஹங்கேரி தன் காய்களை நகர்த்துகின்றது. நேட்டோ நாடுகளில் இரசியாவுடன் நல்ல உறவை ஹங்கேரி பேணி வந்தது. ஆனாலும் உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பது ஹங்கேரிக்கும் ஆபத்தானது.

உக்ரேன் போரின் பின்னர் மேற்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன என மேற்கு ஊடகங்கள் மார் தட்டிக் கொண்டிருக்கையில் துருக்கியும் ஹங்கேரியும் அந்த ஒருமைப் பாட்டை குலைக்குமா என 2022 மே மாதம் 21-ம் திகதிக்கு முன்னர் தெரிய வரும்.

Friday 13 May 2022

அமெரிக்க கைப்பொம்மையான ரணில் சாதிப்பாரா?

 

நாணயத்தாள் அச்சடிக்க மறுக்கும் நடுவண் வங்கி ஆளுநர் நாட்டில் நிலைமை சீரடையாவிடில் பதவி விலகிவிடுவேன் என்கின்ற நிலையில்; அரச ஊழியர்களுக்கு 2022 மே மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில்; வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாட்டுடன் இலங்கை ரூபா தட்டுப்பாடும் மோசமாகின்ற நிலையில்; அவரது எதிரிகளால் நடுவண் வங்கிக் கொள்ளையர் எனவும் அண்டன் பாலசிங்கத்தான் நரி எனவும் விமர்சிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க இலங்கியின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டவர். பின்னர் தேசியப் பட்டியலால் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டவர்.

கூட்டுக் களவாணிகள்

மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார். ஆனால் ஆர்ப்பாட்டம் பெரும் கலவரமாக மாறியதுடன் அரசுக்கு எதிராக மக்கள் கொதித்துப் போயுள்ளனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ராஜபக்சேக்களுக்கும் இடையில் உள்ள பகிரங்க மற்றும் திரைமறைவு உறவுகளையும் 2015இல் இலங்கையில் நடந்த கடன்முறி விற்பனை ஊழலையும் வைத்துப் பார்க்கும் போது இரு தரப்பினரும் கூட்டுக் களவாணிகள் என துணிந்து சொல்லலாம். தடம் மாறி மேற்கு நாடுகளுக்கு உகந்த வகையில் கோத்தபாய ராஜபக்ச செயற்படும் வேளையில் ரணில் அவருடன் இணைந்து செயற்படலாம். அல்லது இருவரும் முரண்படலாம். இணைந்தால் கோத்தபாய தன் பதவியில் தொடரலாம். அல்லது அவரும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு தப்பி போக ரணில் ஆவன செய்யலாம். ராஜபக்சேக்களின் அடுத்த நகர்வுகளுக்காக ரணில் காத்திருக்கின்றார் என்பதை “ரணில் தான் கோட்டா கோ கம”வில் கை வைக்க மாட்டேன் எனச் சொல்லியது சுட்டிக் காட்டுகின்றது. ரணிலுக்கு சில மத தலைவர்கள் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். அதிகம் அரசியல் பேசும் கோட்டே நாகவிகாராதிபதி சோபித தேரர் இப்படிப்பட்ட தலைமை அமைச்சரை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றார். ரணில் மக்களை ஏமாற்றியவர் என்றார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை: நாடாளுமன்றத்தில் ஆதரவற்றவர் என்றார். ரணிலும் ராஜபக்சேக்களும் ஒருவரை ஒருவர் பாதுகாக்கக் கூடியவர்கள். அது இனி நடக்கலாம்.



அமெரிக்காவின் மக்களாட்சி இலங்கையில்!

தனி ஒருவர் வெற்றி பெற்ற கட்சித் தலைவரை இலங்கையின் தலைமை அமைச்சராக்கியவுடன் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என கொழும்பிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது அவர்களுக்கு உகந்தவர்கள் ஆட்சியில் இருப்பது என்பதை உறுதி செய்கின்றது. Singleஆக சிங்கமே வந்தாலும் சீர் செய்ய முடியாத இலங்கைப் பொருளாதாரச் சிக்கலை வாலறுந்த நரியின் நிலையில் இருக்கும் ரணில் சீர் செய்வதற்கு அமெரிக்காவின் “உதவி” பெரிதும் தேவைப்படும். அதற்கு ஈடாக இலங்கை பல கேந்திரோபாய விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வரும். அமெரிக்காவிற்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடியவர் ரணில். தாங்கள் பதவியில் இருப்பதற்காக எதையும் அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் ராஜபக்சேக்கள் இருக்கின்றனர். ரணில் பதவி ஏற்றவுடம் காலிமுகத்திடலில் “ரணில் வீட்டுக்குப் போ ஊர்” அமைக்கப்பட்டமை அமெரிக்கா எதிர்பார்திராத ஒன்றாகத்தான் இருக்கும். ரணில் இலங்கையின் தலைமை அமைச்சராக பதவியேற்றவுடன் கொழும்பு பங்குச் சந்தையின் சுட்டி 3%ஆல் அதிகரித்தமை இலங்கைக்கு பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றின் மூலமாக நிதி கிடைக்க அமெரிக்கா ஆவன செய்யும் என முதலீட்டாளரகளின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து தொடர்ச்சியாக இலங்கையில் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருதது. இலங்கை ரூபாவின் பெறுமதியும் அமெரிக்கடொலர்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது.  

உல்லாசப் பயணத்துறை

அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவற்றிற்கு எதிராக இலங்கையில் ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் ஆர்ப்பாட்டங்களை ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னணி சமூகவுடமைக் கட்சி போன்ற முற்போக்கு முகமூடி அணிந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இலங்கையின் பெரிய பல்கலைக்கழக மாணவர் அமைப்பான Inter University Students Federation மூலம் தங்கள் சொத்துக்களாக மாற்றும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் ரணிலால் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தை இல்லாமல் செய்ய முடியாது. ரணில் தலைமை அமைச்சராக பொறுபேற்ற வேளையில் ஒஸ்ரேலியாவும் சிங்கப்பூரும் தமது நாட்டு குடிமக்களை இலங்கைக்கு தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. ஏற்கனவே பல மேற்கு நாடுகள் இப்படியான அறிவுறுத்தல் விடுத்துள்ள வேளையில் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வராமல் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டு வரும் உல்லாசப் பயணத் துறை தலையெடுக்க முடியாது.

அமெரிக்க நகர்வுகள் வெற்றியளிக்குமா?

அமெரிக்கா தனது இந்தோ பசுபிக் கேந்திரோபாய நலனகளுக்கு ராஜபக்சேக்களின் ஆட்சி உகந்ததல்ல என்பதால் அவர்களுக்கு எதிரான காலி முகத்திடல் ஆர்பாட்டத்தை திரைமறைவில் ஆரம்பித்து வைத்ததா என்ற கேள்விக்கான விடையை அப்போராட்டத்திற்கு எதிராக வன் முறை பாவிக்க கூடாது என வன்முறை பாவிக்க முன்னரே அமெரிக்காவின் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையும் கொழும்பிற்கான அமெரிக்க தூதுவர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்துக்களும் பதில் சொல்கின்றன. இலங்கையில் அமெரிக்க முகவர்களாக செயற்படும் பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜெகான் பெரேராவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பது அப்பதிலை உறுதிப்படுத்துகின்றன. ராஜபக்சேக்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அல்லது அவர்கள் அமெரிக்காவிற்கு அடங்கி சேவகம் செய்யத் தொடங்கிய பின்னர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் போய்விடக் கூடாது அதை ஏணியாக வைத்து தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னணி சமூகவுடமைக் கட்சி ஆகியவை எடுக்கும் முயற்ச்சிகளை ரணில் முறியடிக்க அமெரிக்கா எந்த வகையில் உதவப் போகின்றது? சீனா எந்த அளவில் ஜேவிபி மற்றும் முன்னணி சமூகவுடமைக் கட்சி ஆகியவற்றின் பின்னால் நிற்கப் போகின்றது? அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக இலங்கையில் தொடர்ந்து ஒன்று பட்டு செயற்படுமா? இவை போன்ற கேள்விகளுக்கான விடையில் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. அவ்விடைகள் கிடைக்க இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம்.

அமெரிக்காவிற்கு ரணில் கொடுக்க வேண்டியவை

அமெரிக்காவுடன் ராஜ்பக்சேக்கள் ஏற்கனவே The Acquisition and Cross-Servicing Agreement (ACSA) என்ற பத்தாண்டு ஒப்பந்தத்தை 2007இல் செய்தனர். அதை ரணிலும் மைத்திரியும் நாடாளுமனறத்திற்கு அறிவிக்காமல் 2017இல் மேலும் நீடித்தனர். இப்போது அமெரிக்கா இலங்கையுடன் SOFA எனப்படும் STATUS OF FORCES AGREEMENTஐ செய்ய தீவிர முயற்ச்சி எடுக்கின்றனர். இவ் ஒப்பந்தம் செய்தால் அமெரிக்கப்படைகள் சுங்க மற்றும் குடிவரவுக் கட்டுப்பாடுகளின்றி கடவுட்சீட்டின்றி இலங்கைக்கு வரலாம். அது மட்டுமல்ல அமெரிக்கா மக்தள விமான நிலையத்தை தனது ஆளிளி போர்விமானங்களுக்கு பயன்படுத்த முயல்கின்றது.

கட்சியைக் கட்டியெழுப்பலாம்

ஆறுதடவை இலங்கையின் தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரம சிங்கவிற்கு என ஒரு சாதனைப் பட்டியைல் இல்லை. ரணிலின் வாழ் நாள் சாதனை எனச் சொல்லப் போனால் அவர் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை 2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் செல்லாக் காசாக்கியதுதான். அக்கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் இனி மீண்டும் வந்து அவரது கட்சியில் இணைவார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவாரா?

Tuesday 10 May 2022

இரசிய நாணயம் ரூபிளின் பெறுமதி உயர்ந்தது எப்படி?

 


2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகளை விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பியதால் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதனால் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி நாற்பது விழுக்காட்டால வீழ்ச்சியடைந்து 2022 மார்ச் 7-ம் திகதி ஒரு அமெரிக்க டொலருக்கு 139 ரூபிள் என ஆனது. பின்னர் ரூபிளின் பெறுமதி முன்பு இருந்த நிலைக்கு மீளவும் உயர்ந்து 2022 மார்ச் மாதம் உலகில் சிறந்த பெறுமதி வளர்ச்சி அடைந்த நாணயமாக அடையாளமிடப்பட்டது.

இறந்த பூனையா பதுங்கிய புலியா

நிதிச் சந்தையில் ஒரு நாணயத்தின் அல்லது பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு மீளவும் சற்று உயர்ந்து அதைத் தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதுண்டு. அந்த இடைக்கால மீள் உயர்ச்சியை இறந்த பூனையில் விழிப்பு என்பர். ஆனால் இரசிய ரூபிள் புலி போலச் சற்று பதுங்கிப் பாய்ந்துள்ளது. 2022 மே மாதம் 9-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாளில் உரையாற்றுகையில் ரூபிளின் பெறுமதி எழுச்சியடைந்தது. அமெரிகாவின் Wall Street Journal 2022 மார்ச்சில் இந்த ஆண்டு ரூபிளின் பெறுமதி தாழ்ந்த நிலையில் இருக்கும் என எதிர்வு கூறியிருந்தது. இரசியப் பொருளாதார நிபுணர்கள் பிரித்தானிய Economist சஞ்சிகையின் BigMac Index முறைமையை ஆதரமாக வைத்து ஒரு அமெரிக்க டொலர் 23 இரசிய டொலருக்கு ஈடானது என்கின்றார். 2022 மே மாதம் 68 ரூபிளாக இருக்கின்றது. அதன் படி ரூபிளின் பெறுமது உண்மையான பெறுமதியிலும் பார்க்க குறைந்த மதிப்பில் உள்ளது. ரூபிளின் பெறுமதி தாக்குப் பிடிப்பதால் வட்டி விழுக்காடு 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இரசிய எரிவாயுவிற்கு உடனடி மாற்றீடு இல்லை

இரசியா மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத் தடைகளில் பெரும்பான்மையானவை இரசியா டொலர், யூரோ போன்ற நாணயங்கள் பெற்முடியாமல் இருக்கவே செய்யப்பட்டிருந்தன. இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெரிய அளவில் அதிகரித்தது. உலகின் முன்னணி எரிபொருள் கொள்வனவு நாடுகளான சீனாவும் இந்தியாவும் இரசியாவில் இருந்து தமது எரிபொருள் கொள்வனவை அதிகரித்தன. இந்த இரண்டு காரணிகளாலும் இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தது. அதன் மூலம் இரசியாவிற்கு தேவையான வெளிநாட்டுச் செலவாணி தங்கு தடையின்றிக் கிடைத்தது. பல ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் இருந்து எரிவாயுவை தொடர்ந்தும் வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க வழமையிலும் பார்க்க அதிக எரிபொருளை வாங்கின.

ரூபிளில் மட்டும் எரிவாயு வங்கலாம்

ரூபிளின் பெறுமதியை தக்க வைக்க இரசியா எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் முக்கியமானது. இரசியாவில் இருந்து வாங்கும் எரிபொருளுக்கு இரசிய ரூபிளில் கொடுப்பனவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டமையே. அதற்கு முன்னர் பெரும்பாலும் அக்கொடுப்பனவுகள் யூரோவிலும் டொலரிலும் செய்யப்பட்டன. இந்த உத்தரவால் எரிபொருள் இறக்குமதியாளர்கள் டொலர், யூரோ போன்றவற்றை விற்று ரூபிள் வாங்க வேண்டிய நிலை உருவானது. ரூபிளை பலர் பெருமளவில் வாங்கியதால் அதன் பெறுமதி அதிகரித்தது. 2018-ம் ஆண்டு அப்போதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெர்மனி தன் எரிபொருள் தேவைக்கு இரசியாவில் பெருமளவு தங்கியிருப்பது அதன் பாதுகாப்பிற்கு பாதகமானது எனச் சொன்ன போது ஜெர்மனியர் சிரித்தார்கள்.

வட்டி அதிகரிப்பு

எந்த ஒரு நாடும் தன் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடியாமல் இருக்க அதன் வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும். அதை இரசியா தாராளமாகச் செய்தது. இரசிய வட்டி விழுக்காடு 20ஆக அதிகரிக்கப்பட்டது. அது ரூபிளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் அதை விற்பனை செய்யாமல் தடுத்தது. அதனால் ரூபிளின் பெறுமதி மீள் எழுச்சியடைந்தது.

அதிரடியான உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் இரசியர்கள் தங்கள் வருவாயில் எண்பது விழுக்காட்டை ரூபிளுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவு இரசியாவில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு வர்த்தகம் புரியும் இரசிய நிறுவனங்கள் தங்கள் டொலர் மற்றும் யூரோ போன்ற நாணயங்களை விற்று ரூபிளை வாங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதனால் ரூபிளின் பெறுமதி அதிரித்தது.

தடுக்கப்பட்ட விற்பனை

பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இரசியாவின் அரச கடன் முறிகளிலும் இரசியப் பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்திருந்தனர். அவர்களின் கடன்முறிகளையும் பங்குகளையும் விற்பனை செய்வதை இரசியா தடை செய்தது. இதனால் அவர்கள் ரூபிளில் இருக்கும் சொத்துக்களை விற்று டொலை வாங்குவது தடுக்கப்பட்டது. உக்ரேன் போர் தொடங்கியவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம் முதலீட்டை விற்பனை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்காமல் தடுத்தமை ரூபிளின் வீழ்ச்சியைத் தடுத்தது.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

என்ற வள்ளுவன் வக்கு மகளிருக்கு மட்டுமல்ல நாணயத்திற்கும் பொருந்தும். இரசியாவின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் பாதுகாக்கப்படும் போதே து நிறைவானதும் நிரந்தரமானதுமான பெறுமதியாக இருக்கும். இரசிய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் செயற்கையாக ரூபிளிற்கு உலகச் சந்தையில் வாங்கப்படுவதை அதிகரித்தும் விற்கப்படுவதை குறைப்பதாகவும் உள்ளன. உக்ரேன் போருக்கு முடிவு கொண்டு வந்து இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்பட்டால் இரசிய நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து நிலைத்து நிற்கும். பொருளாதாரத் தடை தொடர்ந்தால் இரசியா ஒரு நாளுக்கு $900மில்லியன்களைத் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருந்தால் இரசியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற்ற்றுக் கொள்ளும். உலகெங்கும் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் மாற்று எரிபொருள்களும் உருவாக்கப்படும். அதனால் ரூபிளின் பெறுமதியை செயற்கையாக உயர்ந்த நிலையில் பேண முடியாமல் போவதுடன் ஒரு கட்டத்தில் ரூபிளின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்து இரசியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம். 14% வட்டியும் வெளி நாட்டு முதலீட்டு தடையும் உள்நாட்டில் முதலீட்டைக் குறைக்கும். 14% வட்டி தொடர்ந்து பேண முடியாது.ச் அது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இரசியாவில் இளையோர் தொகை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதுடன் பல இளையோர் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அது இரசியப் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. இரசியா தனது பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சி நிலையில் வைத்திருக்க வேண்டும். 

Wednesday 4 May 2022

சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது புட்டினிற்கு பாதகமாகும்.

 

நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகியவை நோர்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசமான ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த நோர்டிக் நாடுகளும் அமெரிக்காவும் கனடாவும் இரசியாவுடன் போட்டியிடுகின்றன. எரிபொருள் வளம், கனிம வளம் கடலுணவு ஆகியவை நிறைந்த ஆர்க்டிக் கண்டத்தில் புவி வெப்பமாவதால் பனி உருகி கடற்போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும் அது உருவாகி வருகின்றது.

பின்லாந்தும் இரசியாவும்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அதற்கு முன்னரும். பின்லாந்தை அடிக்கடி இரசியா ஆக்கிரமித்ததுண்டு. இரசியாவின் ஆட்சியின் கீழ் பின்லாந்து இருந்ததும் உண்டு. 2022இன் ஆரம்பத்தில் இரசியாவின் எல்லையைக் கொண்டுள்ள எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய மூன்று போல்ரிக் நாடுகள் மட்டுமே நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இரசியா எஸ்த்தோனியாவுடன் 294கிலோ மீட்டர் எல்லையையும், லத்வியாவுடன் 214கிலோ மீட்டர் எல்லையையும் கொண்டுள்ளது. இரசியாவின் வெளிநில மாநிலமான கலினின்கிராட்டுடன் லித்துவேனியா 275கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளது. இம் மூன்று நாடுகளின் மொத்த எல்லை 783கிமீ நீளமானது. இவற்றிலும் பார்க்க நீண்ட எல்லையை இரசியா பின்லாந்துடன் கொண்டுள்ளது. பின்லாந்தும் இரசியாவும் 1340கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் வரை நேட்டோப்படைகள் மேற்படி மூன்று நாடுகளில் நிலை கொண்டிருக்கவில்லை. அம்மூன்று சிறிய நாடுகளையும் இரசியா ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் அவை தமது நாடுகளில் நேட்டோப் படையினர் இருக்க வேண்டும் என வேண்டின. அந்த நாடுகளில் நேட்டோ படையினரை பெருமளவில் நிலை கொள்ள வைத்தால் அது இரசியாவைக் கரிசனை கொள்ள வைக்கும் என்பதால் ஆயிரம் படையினர் மட்டுமே ஒவ்வொரு நாடுகளிலும் நிறுத்தப்பட்டன. அதே வேளை அங்கு பெரிய படைக்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டன.

பின்லாந்திற்கு சுதந்திரம் கொடுத்த புரட்சி

பின்லாந்தை இரசியப் பேரரசு ஆக்கிரமித்திருந்த வேளையில் நடந்த 1917 ஒக்டோபர் பொதுவுடமைப் புரட்சியின் போது பின்லாந்து இரசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் சோவியத் ஒன்றியத்திடமிருந்து பல நெருக்குவாரங்கள் பின்லாந்தின் மீது செய்யப்பட்டது. 1939இல் பின்லாந்தின் ஹங்கோ குடாநாட்டை தனது கடற்படைக்கு தளம் அமைக்க குத்தகைக்கு தரும்படி சோவியத் ஒன்றியம் வற்புறுத்தியதை பின்லாந்து மறுத்திருந்தது. அதனால் 1939-குளிர்காலப் போர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. வலிமை மிக்க சோவியத் படையினருக்கு எதிராக பின்லாந்து மக்கள் தீரமாக போராடினர். உலக நாடுகள் அமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. 1940-ம் ஆண்டு இரு நாடுகளும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஹங்கோ குடாநாடு முப்பது ஆண்டுகள் இரசியாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பதிலா இரசியா தனது எல்லையை 25கிலோ மீட்டர் பின் நகர்த்தியதுடன். கரெலியா பிரதேசத்தின் ஒரு பகுதியையும் பின்லாந்திற்கு விட்டுக் கொடுத்தது. 1941முதல் 1944வரை இரண்டாம் உலகப் போரின் போது பின்லாந்து ஜேர்மனியுடன் இணைந்து போர் செய்து ஹங்கோ குடாநாட்டை மீளக் கைப்பற்றிக் கொண்டது.

பின்லாந்தின் படை வலிமை

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக நிலப்பரப்பும் குறைந்த மக்கள் தொகையும் கொண்ட பின்லாந்தில் படைக்கு கட்டாயமாக ஆட் சேர்க்கும் முறை உள்ளது. பதினெட்டு வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் கட்டாயம் படைப்பயிற்ச்சி பெறவேண்டும். பின்லாந்தில் 19,000 படையினரும் 3,000 சிறப்பு எல்லைக் காவல் படையினரும் உள்ளனர். ஆனால் பின்லாந்தில் உள்ள கட்டாயப் படைப் பயிற்ச்சியால் அது எந்த நேரத்திலும் 280,000படையினரை போரில் ஈடுபடுத்தக் கூடிய நிலையில் உள்ளது. அத்துடன் பயிற்ச்சி பெற்ற மேன்படையினர் (Reserve Force) பல இலட்சம் பேரையும் பிலாந்தால் போரில் ஈடு படுத்த முடியும். 2023-ம் ஆண்டு பின்லாந்து பாதுகாப்பு செலவிற்கு அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 2.3%ஐ ஒதுக்கவுள்ளது. இது மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவாகும். 

நடுநிலை எடுத்த சுவீடன் மாறுகின்றது

சுவீடனின் 170 ஆண்டுகால வரலாற்றில் சுவீடனின் ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடையேயான மோதலில் நடுநிலை வகிப்பவர்களாக இருந்தனர். ஆனாலும் இரசியா மீதான நெப்போலியனின் படையெடுப்பை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். சுவீடனும் பின்லாந்தைப் போலவே இரசியாவுடன் பல போர்களில் ஈடுபட்டது. 1790-ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர் சுவீடனின் எல்லையை இரசியா மதிப்பதாக ஒத்துள் கொள்ளப்பட்டது. ஜெர்மன் இரசியாமீது தொடுத்த போர் பின்லாந்தை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. அதற்கு முன்னர் நெப்போலியன் இரசியாவிற்கு எதிராக செய்த போர் சுவீடனை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. உலகின் 13வது பெரிய படைக்கல ஏற்றுமதி நாடாக சுவீடன் இருக்கின்றது.  சுவீடனின் Jas 39 Gripen விமானம் உலகின் முன்னணி போர்விமானங்களில் ஒன்றாகும். அதன் போர்விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்து விளங்குபவை. நேட்டோவில் சுவீடன் இணைவது இரசியாவிற்கு எதிரான நேட்டோவின் படைவலுவை அதிகரிக்கச் செய்யும்.

பனிப்போரில் நடுநிலை

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவான பனிப்போரில் சுவீடனும் நேட்டோ பின்லாந்தும் நடுநிலை வகித்து கொண்டன. இருந்தும் சோவியத் ஒன்றியம் தம்மை ஆக்கிரமிக்கலாம் என்ற கரிசனையும் தமது நாடுகளிற்கும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” வரலாம் என்ற அச்சத்துடனும் இருந்தனர். அதனால் அவர்கள் தற்போது மூன்று வல்லரசுகள் உட்பட முப்பது நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்புடன் அதிகம் ஒத்துழைத்தனர். 1990களில் இருந்து சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பினுடன் கூட்டுப் போர்ப்பயிற்ச்சி உட்பட பலச் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

மனம் மாறிய ஜெர்மனி

உக்ரேன் மீது 2022 பெப்ரவரியில் செய்த படையெடுப்பில் இரசியாவிற்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகளில் ஒன்று இரசியாவிற்கு எதிராக ஜெர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையாகும். நேட்டோ விரிவாக்கத்திற்கு ஜெர்மனி ஆதரவு கொடுத்தால் அது இரசியாவிலிருந்து ஜெர்மனி பெறும் எரிவாயு, இரசியாவிற்கான ஜெர்மனியில் மகிழூர்ந்து ஏற்றுமதி போன்றவற்றை பாதிக்கும் என கரிசனை கொண்டிருந்த ஜெர்மனி தனது படைத்துறைச் செலவை அதிகரித்தது. உக்ரேனுக்கு அனுப்ப மறுத்திருந்த படைக்கலன்களை அனுப்பியது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதை ஜெர்மனி ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது. 2022 மார்ச் 3-ம் திகதி ஜெர்மன் அதிபர் Olaf Scholz பின்லாந்தினதும் சுவீடனினதும் தலைமை அமைச்சர்களான Sanna Marin மற்றும் Magadalena Anderson ஆகியோர்  அருகிருக்க ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

பின்லாந்து திசைமாறும் முடிவெடுக்கலாம்

பின்லாந்தின் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் அரசுக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னர் பின்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் இணைவது தொடர்பாக 2022 மே மாதம் 13-ம் திகதி முடிவெடுப்பார்கள். அதே போல் 2022 மே மாதம் 12-ம் திகதி சுவீடனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். இரண்டு நாடுகளினதும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் அவர்களது நாடுகள் இணைவதை விரும்புகின்றார்கள். பின்லாந்தின் மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பும் பெரும்பான்மையானவர்கள் நேட்டோவில் இணைவதை விரும்புகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றன. இரசியாவுடன் 830 மைல் எல்லையைக் கொண்ட பின்லாந்தால் நேட்டோவிற்கு பயன் தரக் கூடிய வகையில் பல உளவுத் தகவல்களை இரசியாவில் இருந்து திரட்ட முடியும். இதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதிலும் பார்க்க பின்லாந்து நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கு சாதகமாகவும் இரசியாவிற்கு பாதகமாகவும் அமையும். ஒன்பது இலட்சம் படையினரைக் கொண்ட பின்லாந்திடம் ஜெர்மனியிடம் இருப்பதலும் பார்க்க அதிக எண்ணிக்கையிலான போர்த்தாங்கிகள் உள்ளன.

மிரட்டும் புட்டீன்

தனது எல்லையில் இருக்கும் நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணையக்கூடாது என உறுதியுடன் இருக்கின்றார். உக்ரேன் நேட்டோவில் இணையக் கூடாது என்பதற்காக அதன் மீது படையெடுத்த புட்டீன் நேட்டோவில் பின்லாந்தும் சுவீடனும் இணைவதை எதிர்க்க புட்டீன் பலவகையான மிரட்டல்களைச் செய்கின்றார். 2022 மார்ச் 2-ம் திகதி இரசியாவின் இரண்டு Su-27 போர்விமானங்களையும் இரண்டு Su-24 போர்விமானங்களையும் சுவீடனின் வான்பரப்புக்குள் அத்து மீறிச் சென்றன. சுவீடனின் விமானங்கள் அவற்றின் அலைவரிசையை குழப்பி திருப்பி அனுப்பின.

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவது இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான படைவலு நிலைமையை இரசியாவிற்கு பாதகமாக்கும். இரசியா மீதான நேட்டோவின் தாக்கும் திறனை பெருமளவில் அதிகரிக்கும். இரசியாவின் எல்லையில் உள்ள நாடு ஒன்று நேட்டோவில் இணைவது இரசியாவிற்கு அச்சுறுத்தலை அதிகரிக்கும். அதே வேளை அந்த புதிய நேட்டோ உறுப்பு நாட்டில் நேட்டோ படையினர் தளம் அமைப்பது இரசியாவிற்கான அச்சுறுத்தலை பன்மடங்காக்கும். சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தாலும் அந்த இரு நாட்டிலும் நேட்டோ படைகள் தளம் அமைக்க மாட்டாது எனச் சொல்லலாம். நேட்டோவின் ஆரம்பகால உறுப்பு நாடான நோர்வே இரசியாவின் சினத்திற்கு உள்ளாகாமல் இருக்க தனது நாட்டில் நேட்டோ படைத்தளம் அமைக்கப்படுவதை தவிர்த்து வருகின்றது.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...