Followers

Friday 13 May 2022

அமெரிக்க கைப்பொம்மையான ரணில் சாதிப்பாரா?

 

நாணயத்தாள் அச்சடிக்க மறுக்கும் நடுவண் வங்கி ஆளுநர் நாட்டில் நிலைமை சீரடையாவிடில் பதவி விலகிவிடுவேன் என்கின்ற நிலையில்; அரச ஊழியர்களுக்கு 2022 மே மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில்; வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாட்டுடன் இலங்கை ரூபா தட்டுப்பாடும் மோசமாகின்ற நிலையில்; அவரது எதிரிகளால் நடுவண் வங்கிக் கொள்ளையர் எனவும் அண்டன் பாலசிங்கத்தான் நரி எனவும் விமர்சிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க இலங்கியின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டவர். பின்னர் தேசியப் பட்டியலால் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டவர்.

கூட்டுக் களவாணிகள்

மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார். ஆனால் ஆர்ப்பாட்டம் பெரும் கலவரமாக மாறியதுடன் அரசுக்கு எதிராக மக்கள் கொதித்துப் போயுள்ளனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ராஜபக்சேக்களுக்கும் இடையில் உள்ள பகிரங்க மற்றும் திரைமறைவு உறவுகளையும் 2015இல் இலங்கையில் நடந்த கடன்முறி விற்பனை ஊழலையும் வைத்துப் பார்க்கும் போது இரு தரப்பினரும் கூட்டுக் களவாணிகள் என துணிந்து சொல்லலாம். தடம் மாறி மேற்கு நாடுகளுக்கு உகந்த வகையில் கோத்தபாய ராஜபக்ச செயற்படும் வேளையில் ரணில் அவருடன் இணைந்து செயற்படலாம். அல்லது இருவரும் முரண்படலாம். இணைந்தால் கோத்தபாய தன் பதவியில் தொடரலாம். அல்லது அவரும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு தப்பி போக ரணில் ஆவன செய்யலாம். ராஜபக்சேக்களின் அடுத்த நகர்வுகளுக்காக ரணில் காத்திருக்கின்றார் என்பதை “ரணில் தான் கோட்டா கோ கம”வில் கை வைக்க மாட்டேன் எனச் சொல்லியது சுட்டிக் காட்டுகின்றது. ரணிலுக்கு சில மத தலைவர்கள் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். அதிகம் அரசியல் பேசும் கோட்டே நாகவிகாராதிபதி சோபித தேரர் இப்படிப்பட்ட தலைமை அமைச்சரை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றார். ரணில் மக்களை ஏமாற்றியவர் என்றார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை: நாடாளுமன்றத்தில் ஆதரவற்றவர் என்றார். ரணிலும் ராஜபக்சேக்களும் ஒருவரை ஒருவர் பாதுகாக்கக் கூடியவர்கள். அது இனி நடக்கலாம்.



அமெரிக்காவின் மக்களாட்சி இலங்கையில்!

தனி ஒருவர் வெற்றி பெற்ற கட்சித் தலைவரை இலங்கையின் தலைமை அமைச்சராக்கியவுடன் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என கொழும்பிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது அவர்களுக்கு உகந்தவர்கள் ஆட்சியில் இருப்பது என்பதை உறுதி செய்கின்றது. Singleஆக சிங்கமே வந்தாலும் சீர் செய்ய முடியாத இலங்கைப் பொருளாதாரச் சிக்கலை வாலறுந்த நரியின் நிலையில் இருக்கும் ரணில் சீர் செய்வதற்கு அமெரிக்காவின் “உதவி” பெரிதும் தேவைப்படும். அதற்கு ஈடாக இலங்கை பல கேந்திரோபாய விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வரும். அமெரிக்காவிற்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடியவர் ரணில். தாங்கள் பதவியில் இருப்பதற்காக எதையும் அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் ராஜபக்சேக்கள் இருக்கின்றனர். ரணில் பதவி ஏற்றவுடம் காலிமுகத்திடலில் “ரணில் வீட்டுக்குப் போ ஊர்” அமைக்கப்பட்டமை அமெரிக்கா எதிர்பார்திராத ஒன்றாகத்தான் இருக்கும். ரணில் இலங்கையின் தலைமை அமைச்சராக பதவியேற்றவுடன் கொழும்பு பங்குச் சந்தையின் சுட்டி 3%ஆல் அதிகரித்தமை இலங்கைக்கு பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றின் மூலமாக நிதி கிடைக்க அமெரிக்கா ஆவன செய்யும் என முதலீட்டாளரகளின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து தொடர்ச்சியாக இலங்கையில் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருதது. இலங்கை ரூபாவின் பெறுமதியும் அமெரிக்கடொலர்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது.  

உல்லாசப் பயணத்துறை

அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவற்றிற்கு எதிராக இலங்கையில் ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் ஆர்ப்பாட்டங்களை ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னணி சமூகவுடமைக் கட்சி போன்ற முற்போக்கு முகமூடி அணிந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இலங்கையின் பெரிய பல்கலைக்கழக மாணவர் அமைப்பான Inter University Students Federation மூலம் தங்கள் சொத்துக்களாக மாற்றும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் ரணிலால் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தை இல்லாமல் செய்ய முடியாது. ரணில் தலைமை அமைச்சராக பொறுபேற்ற வேளையில் ஒஸ்ரேலியாவும் சிங்கப்பூரும் தமது நாட்டு குடிமக்களை இலங்கைக்கு தேவையில்லாமல் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. ஏற்கனவே பல மேற்கு நாடுகள் இப்படியான அறிவுறுத்தல் விடுத்துள்ள வேளையில் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வராமல் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டு வரும் உல்லாசப் பயணத் துறை தலையெடுக்க முடியாது.

அமெரிக்க நகர்வுகள் வெற்றியளிக்குமா?

அமெரிக்கா தனது இந்தோ பசுபிக் கேந்திரோபாய நலனகளுக்கு ராஜபக்சேக்களின் ஆட்சி உகந்ததல்ல என்பதால் அவர்களுக்கு எதிரான காலி முகத்திடல் ஆர்பாட்டத்தை திரைமறைவில் ஆரம்பித்து வைத்ததா என்ற கேள்விக்கான விடையை அப்போராட்டத்திற்கு எதிராக வன் முறை பாவிக்க கூடாது என வன்முறை பாவிக்க முன்னரே அமெரிக்காவின் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையும் கொழும்பிற்கான அமெரிக்க தூதுவர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்துக்களும் பதில் சொல்கின்றன. இலங்கையில் அமெரிக்க முகவர்களாக செயற்படும் பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜெகான் பெரேராவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பது அப்பதிலை உறுதிப்படுத்துகின்றன. ராஜபக்சேக்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அல்லது அவர்கள் அமெரிக்காவிற்கு அடங்கி சேவகம் செய்யத் தொடங்கிய பின்னர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் போய்விடக் கூடாது அதை ஏணியாக வைத்து தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னணி சமூகவுடமைக் கட்சி ஆகியவை எடுக்கும் முயற்ச்சிகளை ரணில் முறியடிக்க அமெரிக்கா எந்த வகையில் உதவப் போகின்றது? சீனா எந்த அளவில் ஜேவிபி மற்றும் முன்னணி சமூகவுடமைக் கட்சி ஆகியவற்றின் பின்னால் நிற்கப் போகின்றது? அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவிற்கு எதிராக இலங்கையில் தொடர்ந்து ஒன்று பட்டு செயற்படுமா? இவை போன்ற கேள்விகளுக்கான விடையில் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. அவ்விடைகள் கிடைக்க இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம்.

அமெரிக்காவிற்கு ரணில் கொடுக்க வேண்டியவை

அமெரிக்காவுடன் ராஜ்பக்சேக்கள் ஏற்கனவே The Acquisition and Cross-Servicing Agreement (ACSA) என்ற பத்தாண்டு ஒப்பந்தத்தை 2007இல் செய்தனர். அதை ரணிலும் மைத்திரியும் நாடாளுமனறத்திற்கு அறிவிக்காமல் 2017இல் மேலும் நீடித்தனர். இப்போது அமெரிக்கா இலங்கையுடன் SOFA எனப்படும் STATUS OF FORCES AGREEMENTஐ செய்ய தீவிர முயற்ச்சி எடுக்கின்றனர். இவ் ஒப்பந்தம் செய்தால் அமெரிக்கப்படைகள் சுங்க மற்றும் குடிவரவுக் கட்டுப்பாடுகளின்றி கடவுட்சீட்டின்றி இலங்கைக்கு வரலாம். அது மட்டுமல்ல அமெரிக்கா மக்தள விமான நிலையத்தை தனது ஆளிளி போர்விமானங்களுக்கு பயன்படுத்த முயல்கின்றது.

கட்சியைக் கட்டியெழுப்பலாம்

ஆறுதடவை இலங்கையின் தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரம சிங்கவிற்கு என ஒரு சாதனைப் பட்டியைல் இல்லை. ரணிலின் வாழ் நாள் சாதனை எனச் சொல்லப் போனால் அவர் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை 2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் செல்லாக் காசாக்கியதுதான். அக்கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் இனி மீண்டும் வந்து அவரது கட்சியில் இணைவார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவாரா?

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...