Followers

Friday 21 May 2021

இஸ்ரேலின் IRON DOME வான் பாதுகாப்பு முறைமை வெற்றி பெற்றதா?

 


2021 மே மாதம் 7-ம் திகதி இஸ்ரேலியப்படையினர் கிழக்கு ஜெருசேலத்தில் உள்ள புனித அல் அக்சா பள்ளிவாசலை களங்கப்படுத்தினர் என்பதற்காக இஸ்ரேல் மீது மே 10-ம் திகதி தமது எறிகணைகளை வீச ஆரம்பித்தனர். வழமை போல் இஸ்ரேலின் பதிலடி மிக மிக காத்திரமானதாக இருந்தது. ஹமாஸ் அமைப்பின் எறிகணை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பொறியியலாளர்கள் பலரது வதிவிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசி அவர்களில் பலரை கொன்றது ஹமாஸ் அமைப்பினரை நிச்சயம் அதிச்சிக்கு உளாக்கியிருக்கும். அவர்களின் வதிவிடங்களையும் நகர்வுகளையும் ஹமாஸ் அமைப்பினர் மிகவும் இரகசியமாக வைத்திருந்தனர். இஸ்ரேலின் உளவுத் தொழில்நுட்பம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இன்னொன்று அவர்கள் விசிய எறிகணைகளின் பெரும் பகுதியை இஸ்ரேலின் IRON DOME என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை இடைமறித்து அழித்துவிட்டது. 2011-ம் ஆண்டு இஸ்ரேல் அமெரிக்காவின் ஒன்றரை பில்லியன் டொலர் நிதியுதவியுடன் IRON DOME முறைமையை உருவாக்கியது. இஸ்ரேல் அந்த முறைமையில் செயற்படு திறன் பற்றிய தகவல்களை அமெரிக்காவுடன் பகிந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா நிதியுதவியை வழங்கியது. IRON DOME முறைமை செயற்படத் தொடங்கியவுடன் ஹமாஸ் வீசிய முதலாவது ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது.



புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையில் இரும்புக் கூரை (IRON DOME) என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும். இரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது

இனம் காண் நிலையம் (Radar Unit)

இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

கட்டுப்பாட்டகம் (Control Centre )

இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)

ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும். வீசப்படும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 2.2மடங்கு வேகத்தில் பாயும்.

2014-ம் ஆண்டு நடந்த ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் ஹமாஸ் அமைப்பினர் 4600இற்கும் அதிகமான எறிகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினர். அவற்றில் 90விழுக்காட்டை இஸ்ரேலின் IRON DOME முறைமை இடை மறித்து அழித்துவிட்டது. அதில் ஆறு இஸ்ரேலியர் மட்டும் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தனது எறிகணை எதிர்ப்பு முறைமையை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இஸ்ரேல் தற்போது பயன்படுத்தும் இரும்புக் கூரை(Iron Dome) என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரி வீசும் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் நான்கு முதல் எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து இனம் கண்டு இடைமறித்து தாக்கும். இடைமறித்து தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் தமிர் (Tamir) ஏவுகணைகள் ஒவ்வொன்றும் நூறு ஆயிரம் டொலர்கள் பெறுமதியானவை. ஒவ்வொரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் நூறு மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. இதனால் ஏற்படும் பெரும் செலவைக் குறைப்பதற்கு இரும்புக்கூரையின் மென் பொருள் செயற்பாட்டில் மதிநுட்பம் மிக்க மாற்றத்தை இஸ்ரேலியர்கள் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதன்படி எதிர் வீசும் எறிகணைகள் பாயும் திசை வேகம் ஆகியவற்றை துல்லியமாக ரடார் மூலம் கணிப்பிட்டு அவற்றில் எவை இஸ்ரேலியக் குடியிருப்புக்கள் மீது விழும் எவை கட்டாந்தரையில் விழும் என பிரித்தறிந்து குடியிருப்புக்கள் மீது விழும் எறிகணைகளை மட்டும் இடை மறித்து அழிக்க ஏவுகணைகள் வீசப்படும். ஹமாஸ் அமைப்பினர் இரும்புக்கூரை (Iron Dome) வீசக்கூடிய ஏவுகணைகளிலும் பார்க்க அதிகமான எறிகணைகளை விசுவதன் மூலம் தாங்கள் வீசும் மேலதிக எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்து தாக்குவதை உறுதி செய்ய முயல்கின்றனர். அதனால் இஸ்ரேல் தமது இரும்புக்கூரை (Iron Dome) ஒரேயடியாக எண்ணூறு ஏவுகணைகளை வீசக் கூடிய வகையில் மேம்படுத்தியுள்ளனர். தற்போது ஹமாஸ் அமப்பால் ஒரேயடியாக எண்ணூறு எறிகணைகளை வீச முடியாது. ஹமாஸின் தகவற்படி 2021 மே நடந்த மோதலில் ஐந்து நிமிடங்களுக்குள் 137 எறிகணைகள் வீசப்பட்டன. இந்த மோதலில் இஸ்ரேலில் சில கட்டிடங்களின் சில பகுதிகள் சிதைக்கப்பட்டன. ஆனால் காசா நிலப்பரப்பில் பல மாடித்தொடர்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

உலகில் இஸ்ரேல் மட்டுமே மிகச்சிறந்த எறிகணை எதிர்ப்பு முறமையைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் அதிக கவனம் செலுத்துகின்றன. அவை எதிரியின் ஏவுகணைகள் குண்டு வீச்சு விமானங்களை தொலைவில் வைத்தே இடைமறித்து அழிக்கக் கூடியவை. இரசியாவின் எஸ்-400 தற்போது உள்ள வான் பாதுகாப்பு முறைமைகளில் மிகச் சிறந்ததாகும். அதற்கு அடுத்த படியாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய David’s Sling (தாவீதின் கவண்) என்ற வான்பாதுகாப்பு முறைமை இருக்கின்றது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக David’s Slingஐ பாவிக்கத் தேவையில்லை. ஆனால் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடன் மோதும் போது David’s Slingஐ இஸ்ரேல் பாவிக்கும். உலகில் வான் பாதுகாப்பு முறைமையை அதிகம் பாவிக்கும் நாடாக இஸ்ரேல் இருக்கின்றது.

1948-ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் நடந்த எல்லா போர்களிலும் மோதல்களிலும் இஸ்ரேலியர்களின் கை ஓங்கி இருப்பதற்கு அவர்களது மதிநுட்பமே காரணம்.

மேலதிக தகவல்களுக்கு:-

https://www.veltharma.com/2014/08/blog-post_11.html

Wednesday 19 May 2021

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா?

 


ஹமாஸ் அமைப்பு இருந்து செயற்படும் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் செய்யும் உக்கிரமான தாக்குதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் செய்வதற்கான முன்னேற்பாடாகவும் பார்க்கப்படுகின்றது. 2021 ஏப்ரல் இறுதியில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறையான மொசாட்டின் அதிபர், இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையின் உளவுத்துறை தலைமை அதிகாரி, இஸ்ரேலின் ஈரானிய கேந்திரோபாய வகுப்பாளரான விமானப் படைத் தளபதி ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் சென்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் இயக்குனர் உட்பட பல அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் பல பேச்சு வார்த்தைகளை நடத்ததினர்.



ஈரானின் யூரேனிய உற்பத்தி

இஸ்ரேலியக் குழுவினரின் முக்கிய நோக்கம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் பேச்சு வர்த்தையில் ஈரானின் யூரேனியப்  கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு மட்டுமே நடை முறையில் இருக்குமா என்பதை அறிந்து கொள்வதுதான். ஜோ பைடனின் அமெரிக்க நிர்வாகம் ஈரானின் தொலைதூர ஏவுகணை உற்பத்தியை 2023வரைக்கும் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் குழாய்களை 2025வரைக்கும் கட்டுப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டுள்ளது. ஜோ பைடனின் அதிகாரிகள் ஈரானால் இஸ்ரேலுக்கு ஆபத்து என்பதை நம்பாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எடுத்து விட்டு பின்னர் தேவை ஏற்படும் போது மீண்டும் பொருளாதாரத் தடையை விதிப்போம் என மிரட்டுவது அமெரிக்காவின் அரசுறவியல் நகர்வுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகின்றார்கள். ஆனால் அந்த நம்பிக்கை இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இல்லை.

இஸ்ரேல் அழிக அமெரிக்கா ஒழிக.

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹு “எமது நெருங்கிய நண்பர்களுக்கு ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம். எம்மை அழித்தொழிக்க நினைக்கும் ஈரானுடன் செய்யப்படும் எந்த உடன்படிக்கையும் எம்மைக் கட்டுப்படுத்தாது. எம்மை அழிக்க விரும்புபவர்களின் திட்டங்களை செயற்படுத்தாமல் தடுக்கும் தடுக்கும் ஒப்பந்தங்கள் மட்டுமே எம்மைக் கட்டுப்ப்படுத்தும்.” இஸ்ரேலில் இருந்து எழுந்த இந்த வீர வசனங்களுடன் யூதர்கள் கிழக்கு ஜெருசேலத்தில் அராபியர்கள் அழிக என்ற் கோசத்துடன் ஊர்வலம் போனார்கள். அவர்கள் மீது அரேபியர்களான பலஸ்த்தீனியர்கள் தாக்குதல் நடத்த அங்கு பெரும் கலவரம் மூண்டது. இதனால் பலஸ்த்தீனியப் பிரதேசமான காச நிலப்பரப்பில் இருந்து செயற்படும் ஹமாஸ் அமைப்பினர் ஈரானிடமிருந்து பெற்ற ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நத்தினர். இஸ்ரேலின் பதிலடி வழமை போல் காத்திரமாக இருந்தது. இஸ்ரேலிய விமானங்களின் குண்டு வீச்சில் பல ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் அழிக அமெரிக்கா ஒழிக என்பது ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் வாசகமாகும். அமெரிக்காவை ஒழிக்க ஈரானால் முடியாது. ஆனால் ஈரான் தனது ஏவுகணைகளை மேம்படுத்திக் கொண்டிருப்பதும் அணுக்குண்டை உருவாக்க முயலவதும் இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தானதாகும். ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியுடன் தொடர்புபட்ட விஞ்ஞானிகளைக் கொல்வதையும் ஈரானின் யூரேனிய பதப்படுத்தல் நிலையங்களை சேதப்படுத்துவதையும் இஸ்ரேல் வழமையாகக் கொண்டுள்ளது.

விலகிய டிரம்ப் இணைய முயலும் பைடன்

ஈரான் தற்போது வலுக்குறைந்த நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் ஈரானின் வலிமை அதிகரிக்கும். பராக் ஒபாமா ஈரானுடன் ஒப்பந்தம் செய்து பொருளாதார தடைகளை நீக்கினால் ஈரானில் மிதவாதிகள் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள் என நம்பினார். அவர் நினைத்தது நடக்கவில்லை. இஸ்ரேலிற்கு பல வகையிலும் சார்பாக நடந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செய்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தார். அத்துடன் ஈராக்கில் வைத்து ஈரானின் படைத்தளபதி சுலைமானியையும் கொன்றார். ஈரானினர் அதற்குப் பழிவாங்காமல் நல்ல பிள்ளை போல் நடந்து அமெரிக்க ஆட்சி மாற்றம் வரும் வரை காத்திருந்தனர். அவர்கள் நம்பிய படி 2021 ஜனவரியின் ஆட்சிக்கு வந்த அதிபர் ஜோ பைடன் ஈரானுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார்.

அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து சதி?

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றுடன் ஒன்று ஈரான் தொடர்பாக முரண்படுவது போல் பாசாங்கு செய்வதும் அவர்களின் கேந்திரோபாயமாகவும் இருக்கலாம். அமெரிக்காவும் ஈரானும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில் இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்து அதன் யூரேனிய உற்பத்தி நிலையத்தை முற்றாக அழிக்கலாம். ஈரானுக்கு சினம் வரும் போது முதலில் அது செய்வது சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் ஹோமஸ் நீரிணையை மூட முயல்வதுமாகும். சவுதி அரேபியா ஈரானுடன் அமைதிப் பேச்சு வார்த்தை  நடத்த தொடங்கி விட்டது. அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு ஹோமஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்காவுடன் அங்கு ஈரானால் முரண்பட முடியாது. பாக்கிஸ்த்தானிய தலைமை அமைச்சர் இம்ரான் கான் 2021 மே மாதம் 7-ம் திகதி சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்தார். அவருக்கு முன்னர் பாக்கிஸ்த்தானிய படைத்துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். பாக்கிஸ்த்தான் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் உறவை வளர்க்க பாவிக்கப்படுகின்றார். 2016-ம் ஆண்டில் யேமனில் உள்ள ஈரானுக்கு ஆதரவான தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சவுதி அரேபியாவுடன் இணைய பாக்கிஸ்த்தான் மறுத்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பல பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொள்ளும் பாக்கிஸ்த்தான் இப்போது சவுதி அரேபியாவுடன் உறவைச் சீர் செய்ய விரும்புகின்றது

அரசுறவுகளில் வலிமையடைந்த இஸ்ரேல்

இஸ்ரேல் ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன் போன்ற அரபு நாடுகளுடன் புதிதாக அரசுறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சிரியா நீண்ட உள்நாட்டுப் போரில் களைப்பும் சலிப்பும் அடைந்துள்ளது. அது ஈரானுக்கு பெரும் உதவிகளைச் செய்ய முடியாது. இரசியா அதிபர் புட்டீன் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுக்கு உதவி செய்தால் அவர் தனது நாட்டில் மரபுவழி கிருத்தவர்களின் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இவற்றால் புவிசார் அரசியல் நிலைமை ஈரானுக்கு சாதகமாக உள்ளது. இந்த நிலையில் ஈரான் மீது ஒரு போரை இஸ்ரேல் தொடுக்கலாம்.



வலிமையடையும் இஸ்ரேலிய வான்படை

இஸ்ரேல் தனது வான்படையின் வலிமையை அதிகரிக்க ஈரான் தனது வான்பாதுகாப்பை அதிகரித்தது. ஈரான் இரசியாவிடமிருந்து எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கியது. இதனால் இஸ்ரேலிடமுள்ள F-15 மற்றும் F-16 போர் விமான ங்கள் மூலம் ஈரானில் தாக்குதல் செய்ய முடியாத நிலை உருவாகியது. அதனால் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக F-35 புலப்படா போர் விமானங்களை பாவிக்க வேண்டும். ஆனால் F-3ன் ஆகக்கூடிய பறப்புத் தூரம் 650மைல்களாகும். இஸ்ரேலில் இருந்து ஈரானின் தூரம் ஆயிரம் மைல்களுக்கும் அதிகமானது. 2021 ஏப்ரலின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தப்பான உடன்படிக்கை மேற்காசியாவில் ஒரு மோசமான போரை உருவாக்கும் என்றார். மேலும் அவர் தமது போர் விமானங்களால் ஈரான் வரை சென்று தாக்குதல் நடத்த முடியும் என்றார். 2019-ம் ஆண்டு இஸ்ரேலின் அமெரிக்கத் தயாரிப்பு F-35 புலப்படாப் போர் விமானங்கள் ஈரானின் வான் எதிர்ப்பு முறைமைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஈரானுக்கு மேலாகப் பறந்து சென்று வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஈராக் அணுக்குண்டு உற்பத்தி செய்வதை தடுக்க இஸ்ரேல் 1981-ம் ஆண்டு அதன் ஆய்வு நிலையங்கள் மீது வான் தாக்குதல் நடத்தி அழித்தது. F-35 விமானங்களின் எரிபொருள் கொள்கலன்களின் அளவைக் கூட்ட இஸ்ரேல் பலவழிகளில் முயற்ச்சி செய்தது. அத்துடன் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் முயற்ச்சியிலும் ஈடுபட்டது. மூன்றாவது தெரிவு சவுதி அரேபியாவில் எங்காவது எரிபொருளை நிரப்புவதாகும். இஸ்ரேல் இந்த மூன்று வகைகளையும் பாவிக்கும் நிலையில் உள்ளது என்ற படியால்தான் F-35 ஈரான் வரை பறந்து சென்று வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் போர் விமானங்களை தனக்கு ஏற்றவாறு மேம்படுத்துவதில் கைதேர்ந்தது என்பதை பல தடவை நிரூபித்துள்ளது. பராக் ஒபாமா பதவில் இருந்த போது இஸ்ரேலுக்கு நிலத்துக்குக் கீழ் துளைத்துச் சென்று அழிக்கக் கூடிய ஐம்பத்தி ஐந்து காப்பரண் அழி குண்டுகள் (GBU 28 Bunker buster) வழங்கியிருந்தார். அவை ஈரானின் பாறைகளுக்கு கீழ் இருக்கும் யுரேனியப் பதப்படுத்தும் நிலைகளை அழிக்கக் கூடியவை.

ஈரான் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய நிலையை அடைய முன்னரே அதை அழிக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. ஈரானைத் தாக்கும் போது லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஈரான் மீதான தாக்குதலும் அது அடுத்த சில பத்தாண்டுகள் தலைஎடுக்காத படி அமைய வேண்டும். அதற்கு இஸ்ரேலுக்கு அவசியம் தேவைப்படும் அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்குமா?

Tuesday 11 May 2021

எண்மிய நாணயத்தில் அமெரிக்காவை முந்தும் சீனா

 

எண்மிய நாணயம் என்பது இலத்திரனியல் வடிவத்தில் உள்ள பணமாகும். 2014-ம் ஆண்டு சீனா தனது பன்னாட்டு நிதி சுதந்திரத்திற்கும் உலகப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கும் எண்மிய நாணயம் அடித்தளமாக அமையும் என முடிவு செய்தது. எண்மிய நாணயத்தை சீனா நான்கு நகரங்களில் பரீட்சார்த்தமாக பாவனைக்கு விட்டுள்ளது. அதன் மூலம் உலகில் முதலில் எண்மிய நாணயத்தை அறிமுகம் செய்த நாடு என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டது. அமெரிக்காவின் நடுவண் வங்கியான இணைப்பாட்சி ஒதுக்கம் (Federal Reserve) அமெரிக்காவின் மசாச்சுசெட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தனது எண்மிய நாணயத்தை அறிமுகம் செய்ய முயல்கின்றது. சீனாவின் முயற்ச்சி தடையின்றி தொடரும் போது அமெரிகாவின் முயற்ச்சிக்கு சில எதிர்ப்புக்கள் அங்குள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து கிளம்பியுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையும் எண்மிய நாணயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை.

கடன் அட்டை முட்டுக்கட்டை

விசா, மஸ்டர் கார்ட் ஆகிய கடன் அட்டை நிறுவனங்கள் எண்மிய நாணயத்தின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகளை செய்வது பற்றி ஆய்வுகள் செய்து முடிக்கும் வரை எண்மிய நாணய அறிமுகத்தை தாமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க நடுவண் வங்கி எண்மிய நாணயம் தொடர்பான தொழில்நுட்பத்தில் மிகவும் உன்னத நிலையை முதலில் அடைய வேண்டும் என நினைக்கின்றது. முறைகேடுகள் நடந்தால் எண்மிய நாணயத்தின் மீதான நம்பிக்கை இல்லாமற் போய் அதன் செயற்பாடே இல்லாமல் போய்விடும் என்பது அமெரிக்க நடுவண் வங்கியில் கரிசனையாகும்.

எண்மிய நாணயங்களும் நுண்மிய நாணயங்களும்

கடந்த பத்து ஆண்டுகளாக Bitcoin, Ethereum, Litecoin போன்ற நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) உலகெங்கும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் பெறுமதிகள் பல மடங்காக உயர்ந்தும் உள்ளன. 2020இல் பேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்னும் பெயரில் ஒரு நுண்மிய நாணயத்தை அறிமுகம் செய்ய முயன்றது. பேஸ்புக் உரிமையாளரை அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை அது தொடர்பாக விசாரணை செய்த போது சீனா எண்மிய நாணயத்தை (Digital Currency) அறிமுகம் செய்வதில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது என்றார் அவர். நுண்மிய நாணயங்கள் எந்த ஒரு அரசினதோ அல்லது நடுவண் வங்கினதோ உத்தரவாதம் இல்லாதவையாகும். எண்மிய நாணயங்கள் நடுவண் வங்கிகளால் அறிமுமக் செய்யப்படும் இலத்திரனியல் நாணயங்களாகும். தற்போது நடைமுறையில் உள்ள நாணய முறைமையை நுண்மிய நாணயங்கள் இல்லாமற் செய்துவிடும் என்ற கரிசனையால் நடுவண் வங்கிகள் எண்மிய நாணயங்களை உருவாக்குகின்றன.  நுண்மியநாணயங்கள்(cryptocurrency) என்பவை தனியார் நிறுனவங்கள் உருவாக்கிய இலத்திரன் நாணயங்களாகும். அவற்றின் பின்னணியில் எந்த ஒரு அரசோ அல்லது நடுவண்வங்கியோ இல்லை. ஆனால் எண்மிய நாணயங்கள் அரசுகளாவும் அவற்றின் நடுவண் வங்கிகளாலும் உருவாக்கி முகாமை செய்யப்படுபவை. சீன நடுவண் வங்கி நுண்மிய நாணயத்தை உருவாக்கி முதலில் அரச வங்கிகளுக்கு வழங்கும். பின்னர் அவை தமக்கிடையேயான பணப்பரிமாற்றங்களுக்கும் Alipay, Wechat போன்ற கைப்பேசி பணப்பரிமாற்ற நிறுவனங்களின் கொடுப்பனவுகளுக்கும் வங்கிகளின் வாடிக்கையாளர்களிற்கு இடையிலேயான கொடுப்பனவுகளுக்கும் பாவனைக்கு அனுமதிக்கும். ஒரு நுண்மிய நாணயங்களின் பாவனை அதிகரிக்கும் போது அந்த நாட்டின் நாணயப்பாவனையை அந்த நாட்டின் நடுவண் வங்கியால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். நாட்டின் வட்டி வீதத்தை முடிவு செய்வதும் கடினமாக அமையும். அதனால் பல நாடுகள் நுண்மிய நாணயத்தை தடை செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல நாடுகள் நுண்மிய நாணயத்தை தடை செய்துள்ளன. அது எண்மிய நாணயத்தின் அறிமுகத்தை இலகுவாக்கும்.

சீனாவின் பரீட்சார்த்த நடவடிக்கை

தற்போது பாவிக்கப்படும் கடுதாசி நாணயத் தாள்களை முதலில் அறிமுகப்படுத்தியது சீனாவே. அதே போல் எண்மிய நாணயத்தின் முன்னோடியாக சீனாவும் திகழவிருக்கின்றது. சீனாவின் சுழௌ நகரில் வாழும் 181,000 பேருக்கு சீனாவின் நடுவண் வங்கியான மக்கள் வங்கி ஆளுக்கு 55யுவான்கள் எண்மிய நாணயத்தை அவர்களின் கைப்பேசியில் உள்ள பணப்பை செயலியில் வைப்பிலிட்டு அவற்றை செலவு செய்யும்படி பணித்தது. இந்த நடவடிக்கை பின்னர் ஐந்து இலட்சம் பேருக்கு சீனாவின் பதினொரு பிராந்தியங்களுக்கு 2021 ஏப்ரலில் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பங்கு பற்றும் விற்பனையாளர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டன. ஹொங் கொங்கிற்கும் பிரதான சீனாவிற்கும் இடையிலான கொடுப்பனவுகளிலும் எண்மிய நாணயப் பயன்படுத்தப்பட்டது. நுண்மிய நாணயங்கள் பயன்படுத்தும் BLOCKCHAIN என்னும் கணக்குப் பதிவேட்டு மென்பொருளையே சீன மக்கள் வங்கி தனது எண்மிய நாணயங்களுக்கு சிறிய மாற்றத்துடன் பயன்படுத்துகின்றது. 2022 ஏப்ரல் மாதத்தின் முன்னர் சீனா முழுவதும் எண்மிய நாணயம் அறிமுகப்படுத்தப்படும். ஐக்கிய அமீரகம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் சீனாவின் எண்மிய நாணய முறைமையில் இணையவிருக்கின்றன. சீனாவின் எண்மிய நாணய அறிமுகத்தின் வெற்றி அதில் எத்தனை நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வருகின்றன என்பதில் தங்கியுள்ளது.

மேற்கு நாடுகளின் நடுவண் வங்கிகளின் தயக்கம்

அமெரிக்காவின் Federal Reserve, பிரித்தானியாவின் Bank of England ஐரோப்பிய ஒன்றியத்தின் Eruopean Central Bank ஆகிய நடுவண் வங்கிகள் எண்மிய நாணயங்களை அறிமுகப் படுத்த விருப்பம் கொண்டுள்ள வேளையில் அதன் பயன்பாட்டின் போது பாவனையாளரின் தகவல்களின் இரகசியத்தன்மைகளைப் பேணுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதால் அவற்றில் நகர்வுகள் மெதுவாக நடைபெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தமது எண்மிய நாணய அறிமுகம் 2026-ம் ஆண்டு வரை இழுபடலாம் என்கின்றது. பிரித்தானிய நடுவண் வங்கியும் திறைசேரியும் இணைந்து எண்மிய நாணயம் தொடர்பாக ஒரு பணிக்குழுவை 2021 ஏப்ரலில் நியமித்துள்ளன.

அமெரிக்க டொலருக்கு சவாலாக சீன எண்மிய நாணயம்.

அமெரிக்கா பல நாடுகள் மீதும் தனிப்பட்டவர்கள் மீதும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை சீனாவின் எண்மிய நாணயம் வலிவிழக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகெங்கும் நடக்கும் சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை அமெரிக்கா கண்காணித்து வருகின்றது. சீனாவின் எண்மிய நாணயம் உலகெங்கும் பாவனைக்கு வரும் போது அமெரிக்காவின் கண்காணிப்பில் மண் தூவப்பட்டுவிடும். அமெரிக்கா தனது டொலர் கொடுப்பனவு முறைமைகள் மூலம் பல நாடுகளைமீது பொருளாதார மிரட்டல்களைச் செய்வது போல் சீனாவும் தனது எண்மிய நாணயம் உலகில் பெருமளவு பாவனைக்கு வந்த பின்னர் செய்ய முடியும். சீனா ஒரு எண்மிய பட்டுப்பாதையையும் (Digital Belt and Road) உருவாக்கலாம். அமெரிக்க டொலர் தற்போது 120இற்கும் மேற்பட்ட நாடுகளின் பன்னாட்டு கொடுப்பனவு நாண்யமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

வெட்டுமுனைத் தொழில்நுட்பம் (cutting-edge technology)

செயற்கை நுண்ணறிவு, தொடர் பேரேட்டுத் தொழில்நுட்பம் (blockchain technology) இலத்திரனியல் கொடுப்பனவு முறைமை ஆகிய மூன்றும் எண்மிய நாணய அறிமுகத்திற்கு தேவையான முக்கிய அடிப்படைகளாகும். இவை சீனாவில் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. சீனாவில் இலத்திரனியல் நாணயக் கொடுப்பனவு முறைமை மேம்பட்ட நிலையிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக கொடுப்பனவுகள் நடப்பதாகவும் உள்ளது. Alipay, Wechat போன்ற சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கைப்பேசிகள் மூலமும் இணையவெளி மூலமும் பெருமளவு கொடுப்பனவுகளைச் செய்கின்றன. சீனாவின் கைப்பேசிப் பாவனையாளர்களில் எண்பது விழுக்காட்டினர் கைப்பேசி மூலமான கொடுப்பனவுகளைச் செய்கின்றனர்.

பன்னாட்டு கொடுப்பனவு முறைமைகளில் அமெரிக்க ஆதிக்கம்

பன்னாட்டு வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவுகளில் பெரும்பாலானவை அமெரிக்க வங்கிகளினூடாகவே நடக்கின்றன. பன்னாட்டு கொடுப்பனவுகளுக்கான Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) என்னும் அமைப்பும் அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் உருவாக்கிய Treasury’s Terrorist Finance Tracking Program (TFTP) என்ற அமைப்பும் உலக கொடுப்பனவுகள் சட்டத்திற்கு உட்பட நடப்பதை உறுதி செய்கின்றன. தீவிரவாத அமைப்புக்களினதும் போதைப்பொருள் உற்பத்தியாளர்களினதும் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இவை உறுதியாக இருக்கின்றன. அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிந்து ஈரானை SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட்டது. சீன எண்மிய நாணயத்தின் பயன்பாடு உலகெங்கும் பரவி எண்மிய பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமை ஒன்றை சீனா உருவாக்குமானால் அமெரிக்க டொலர் உலக கொடுப்பனவில் செய்யும் ஆதிக்கம் பெருமளவு குறைக்கப்படும்.

உலக நாணயமாக சீன ரென்மின்பி

சென்ற நூற்றாண்டில் சீனா தனது ரென்மின்பி நாணயத்தை உலக நாணயமாக்குவது பற்றி ஆராய்ந்தது. அதற்கு தேவையான வெளிப்படைத்தன்மை சீனாவில் தற்போது இருக்கும் சீனாவில் இல்லை. அப்படி ஒரு வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் ஆட்சிக்கு பெரும் சவாலாக அமையும். சீன நாணயம் உலக நாணயமாக்குவதற்கு அதை தடைகளின்றி இலகுவில் வாங்கவும் விற்கவும் முடியுமான நிலை உருவாக வேண்டும். தனது நாணயத்தின் பெறுமதியின் அசைவு தொடர்பாக கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா விரும்பவில்லை. இதனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் முயற்ச்சியைக் கைவிட்டது. ஆனாலும் அமெரிக்க டொலர் உலக நாணயமாக இருப்பதை சீனா விரும்பவில்லை. ஏற்கனவே சீனா ரென்மின்பி, யுவான் என இரண்டு பெயரில் தனது நாணயத்தை வைத்திருக்கின்றது.

தனது மக்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் விரும்பும் சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்களுக்கு எண்மிய நாணயத்தைப் பாவிக்கும் மக்களின் வரவு செலவு தொடர்பான உடனடித் தகவல்களை எண்மிய நாணயப் பாவனை வழங்கிக் கொண்டிருக்கும். அதை அமெரிக்க அரசால் அமெரிக்க மக்களிடம் செய்ய முடியுமா?

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...