Followers

Showing posts with label புவிசார் அரசியல். Show all posts
Showing posts with label புவிசார் அரசியல். Show all posts

Tuesday, 16 January 2024

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

 


இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங் சென்றபோது இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயன்றன. இரண்டு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்றும் பெருந்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா இரண்டு நாடுகளையும் வல்லரசுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அப்போது சீனா தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகப்புச் சபையில் நிரந்தர உரிமை பெற்று வல்லரசாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்க்கும் ஒரே வல்லரசு நாடாக சீனா இருக்கின்றது.

இந்தியா பிராந்திய வல்லரசல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நாடு

பிராந்திய வல்லரசு என்ற பதத்தை தற்போது பல்கலைக்கழகங்களும் அரசறிவியலாளர்களும் பாவிப்பதை தவிர்த்து நடுவண் வல்லரசு என்ற பதத்தைப் பாவிக்கின்றனர். ஆனால் எம்மில் சிலர் இந்தியாவை வல்லரசு என அடிக்கடி சொல்கின்றனர். இந்தியா ஒரு படைவலிமை மிக்க நாடுதான். ஆனால் உலகிலேயே அணுக்குண்டு வைத்திருக்கும் இரண்டு போட்டி நாடுகளை அயல் நாடுகளாகக் கொண்டிருப்பதுடன் அவற்றுடன் தீர்க்க முடியாத எல்லைத் தகராற்றைக் கொண்ட நாடு இந்தியா. அதனால் அதன் பாதுகாப்பு மிகவும் வலிமை குறைந்ததாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியாவின் அரசியலமைப்பின் படி இந்தியாவிற்கு சொந்தமானதாக உள்ள பிரதேசங்களை சீனாவும் பாக்கிஸ்த்தானும் கைப்பற்றி வைத்திருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்தியாவிற்கு சொந்தமான 38,000சதுர கிலோ மீட்டரை சீனா கைப்பற்றியிருப்பதாக 2020இல் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிக்கப் பட்ட நாடாகிய இந்தியா ஒரு “பிராந்திய வல்லரசு” அல்ல. மேலும் இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவால ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கின்றது.

ஓங்கி அடித்த பெரியண்ணனான சீனா

1954-ம் ஆண்டு நேரு மாவோ சே துங் சந்திப்பின் பின்னர் சீனாவை இந்தியாவின் பெரியண்ணன் என விபரித்தார். ஆனால் 1962இல் சீனா தீபெத்தைக் கைப்பற்றியதுடன் இந்தியா மீதும் படையெடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் அரச பதிவுகள் வங்கிகளில் இருந்த பணங்களை எல்லாம் தீயிட்டுக் கொழுத்தி விட்டு இந்தியர்கள் தலை தெறிக்க ஓடினர். அதனால் இன்றும் அசாமில் யார் மண்ணின் மைந்தர்கள் என்ற பிரச்சனை இருக்கின்றது.

இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க முயலும் அமெரிக்கா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என சீனா சொல்கின்றது. இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது என சீனா கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவை மட்டுமல்ல இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 என்னும் பெயரில் இரண்டு நாடுகளினதும் வெறியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அடிக்கடி கூடி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்துவருகின்றனர். அதுமட்டுமல்ல அமெரிக்கா இந்தியாடுடனான உறவை தனது கேந்திரோபாய பங்காளியாக தரமுயர்த்தி உள்ளது.

தைவானை இந்தியா காப்பாற்றுமா?

தைவான் மீது சீனா ஓர் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்தால் சீனாவை திசை திருப்ப சீன எல்லையில் இந்தியப் படைகள் தம் நிலங்களை மீட்பது என்னும் பெயரில் ஒரு போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இந்த நம்பிக்கையில் தான் இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முழுக் கஷ்மீரையும் கைப்பற்றுவோம் என சூளுரைப்பார். ஆனால் கஷ்மீர் போர் என வரும் போது இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் மோத வேண்டி வரும்.

இந்திய சீன ஒத்துழைப்பு

இந்தியாவும் சீனாவும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஆகிய இரு முக்கிய அமைப்புக்களில் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவற்றில் இரசியாவும் இருக்கின்றது. இந்தியா அமெரிக்கா பக்கம சாயாமல் இருக்கும் படை சீனா நடந்து கொள்ள வேண்டும் என இரசியா எதிர்பார்க்கின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் படைத்துறை மேம்பாட்டையும் பார்க்கும் சீனர்கள் இந்தியா தக்கு சவால் விடக்கூடிய வல்லரசாக வளரும் என நம்புகின்றனர். அதனால் இந்தியா வளரக்கூடாது என அவர்கள் காய்களை நகர்த்தலாம். சீனாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணைக்கு அண்மையாக இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளில் இந்தியாவின் படைவலிமை அதிகரிப்பதும் சீனாவை கரிசனை கொள்ள வைக்கின்றது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியா தனது பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

பங்களாதேசம், இலங்கை, மால தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலானது. அத்துடன் இந்தியாவில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியிலும் பார்க்க அதிக அளவு இறக்குமதியை சீனாவில் இருந்து இந்தியா செய்கின்றது. இதை சமநிலைப்படுத்தக் கூடிய வகையில் சீனா தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியவின் நீண்ட நாள் கோரிக்கையை சீனா உதாசீனம் செய்கின்றது.

சீனா தன்னை சமமாக நடத்த வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கையில் சீனா தன்னை ஆசியாவின் தலைமை நாடாகப் பார்க்கின்றது. இந்த முரண்பாடு இல்லாமல் போக வாய்ப்பில்லை.


Thursday, 14 December 2023

உலக அரசியலில் அயோக்கித்தனத்தைப் புகுத்திய கிஸ்ஸிங்கர்

 


உயர்ந்த கல்விமானாக இருந்து வெற்றீகரமான அரசுறவியலாளராக (இராசதந்திரியாக) மாறிய ஹென்றி கிஸ்ஸிங்கர் உலக அரசியலில் அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதியாக்கியவர். 2023 நவம்பர் 29-ம் திகதி அவர் காலமானார். அவர் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட மக்களாட்சியின் விழுமியங்களை காலின் கீழ்ப்போட்டு மிதிக்கத் தயங்காதவர். இவரின் உலக அரசியல் சிந்தனையின் வழிவந்தவர்களால் தான் தமிழ் ஈழத்தில் மூன்று இலட்சம் உயிர்களைப் பலியெடுக்கப்பட்டன. இவருக்குப் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் அவரது மாணக்கர்கள், அவருக்கு கீழ் பணிபுரிந்தவரகள், அல்லது அந்த இருதரப்பினரின் வழிவந்தவர்கள் ஆகும்.

ஜேன்மனியில் பிறந்த யூதர்

1923-ம் ஆண்டு ஜேர்மனியின் ஃபேர்த் நகரில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூத குடும்பத்தில் பிறந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் அங்கு நிலவிய அடக்குமுறைக்குத் தப்பி அமெரிக்கா நியூயோர்க் நகரில் குடியேறி அங்கு முன்னணிப் பல்கலைக்கழகத்த்தில் கற்றுத்தேர்ந்து அமெரிக்கப்படையில் இணைந்து மொழிபெயர்ப்பாளராகவும் உளவாளியாகவும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின் போது செயற்பட்டார். 1947இல் மீளவும் அமெரிக்கா சென்று மேற்படிப்பை மேற்கொண்டு ஹாவார்ட் பலகலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுத்துறையில் 1957இல் இருந்து பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்கர்கள் ஒழுக்கவாதத்தை ஒதுக்கிவிட்டு நடைமுறைக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும் என்பது அவரது போதனை. அவரது கொடூரமான கொள்கைகளை வெறுத்த பல மாணவர்கள் அவரை விட்டு வெளியேறினர்.

அரசியல் உரையாற்றுவதற்கும் நூல்கள் எழுதுவதற்கும் கட்டணமாகப் பெரும் தொகை பெறுபவர் கிஸ்ஸிங்கர் அவரது ஒரு நூலுக்கான் முற்பணமாக ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் கிஸ்ஸிங்கள் ஜோன் எஃப் கென்னடியின் ஆட்சிக்கு பகுதி நேர ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் ரிச்சர்ட் நிக்ஸனின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியவர்

1901 முதல் 1905 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா ஒரு நல்ல அயல்நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். அவருக்குப் பின்னர் 1914 முதல் 1921 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த வூட்ரு வில்சன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை உயர்குறிக்கோள், அறம், ஆகியவற்றின் அடிப்படையில் மக்களாட்சியை பரப்பும் வகையில் வரையறை செய்யப்பட வேண்டும் என்றார். இந்த கொள்கைகளை மாற்றி அயோக்கியத்தனமான வெளியுறவுக் கொள்கைகளை யதார்த்தவாதம் என்னும் பெயரில் முன்னெடுத்தவர் ஹென்றி கிஸ்ஸிங்கர். அவரது கொள்கை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அவை மாறுவதறகன அறிகுறிகள் ஏதும் இல்லை.

கறுப்பின மக்களை வெறுத்த கிஸ்ஸிங்கர்

கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராகப் பணியாற்றிய போது நைஜீரியாவிற்கான அமெரிக்க தூதுவராகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆபிரிக்க அலுவர்களுக்கான துணைச் செயலராகவும் இருந்த Donald Easum கிஸ்ஸிங்கர் ஆபிரிக்க நாடுகளின் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் மதிப்பதில்லை என்றும் ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றும் எழுதியுள்ளார். தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பின மக்களின் ஆட்சி அமைவதை கிஸ்ஸிங்கர் விரும்பவில்லை. அதற்காக பல சதி நடவடிக்கைகள் செய்தார்.

வியட்நாம் இனக்கொலை சிலி ஆட்சி மாற்றம்

கண்மூடித்தனமான Carpet Bombingஐ வியட்னாமில் மேலும் தீவிரப்படுத்தும் படி ரிச்சர்ட் நிக்சனுக்கு ஒரு புறம் ஆலோசனை வழங்கிவிட்டு மறுபுறம் அமைதிப்புறா போல் தோற்றத்தை மாற்றி வியட்னாமியர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தி பல அமெரிக்க உயிரழப்புக்களைக் கொடுத்த வியட்னாம் போரை நிறுத்தினார். கம்போடியா தரைமட்டமாகியதற்கும் கிஸ்ஸிங்கரே காரணமாகும். சிலியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகவுடமைவாதி சல்வடோர் அலெண்டேயை ஆட்சியில் இருந்து அகற்றியவர். ஹென்றி கிஸ்ஸிங்கர். பொதுவுடமைவாதம், சமூகவுடமைவாதம் போன்றவற்றைப் பின்பற்றுபவர்கள் எந்த ஒரு நாட்டிலும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அமெரிக்காவின் கொள்கையை கொடூரமான முறையில் முன்னெடுத்தவர் கிஸ்ஸிங்கர்.

வங்க இனக்கொலை

பங்களாதேசத்தில் இனக்கொலை செய்த பாக்கிஸ்த்தான் சர்வாதிகாரி ஏ. எம் யஹியா கானின் ஆட்சிக்கு எல்லாவகையிலும் உதவியர் ஹென்றி கிஸ்ஸிங்கர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாடு என்பதற்காக பாக்கிஸ்த்தானிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கிஸ்சிங்கர். இந்திரா காந்தியை பெட்டை நாய் எனவும் இந்தியர்களை வேசிமகன்கள் எனவும் அழைத்தார் என்ற குற்றச்சாட்டு கிஸ்ஸிங்கர் மீது முன்வைக்கப்படுகின்றது.  பாக்கிஸ்த்தானில் ஆட்சியில் இருந்த மற்றும் இருக்கின்ற அயோக்கியர்களுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கின்ற நாடாக இன்றும் இருப்பது அவரது சிந்தனைப் பள்ளியின் அடையாளமே. பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் 2023 ஓகஸ்ட்டில் சிறையிலடைக்கப்பட்டார்.

குர்திஷ் மக்களைக் கால்வாரியவர்

1970களில் ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் தன் உறவை வளர்த்ததுடன் அங்கிருந்து பெருமளவு படைக்கலன்களையும் வாங்கினார். இதனால் சினமடைந்த கிஸ்ஸிங்கர் ஈராக்கில் வாழும் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டினார். ஆனால் 1979இல் ஈரானில் மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மதவாதிள் ஆட்சியைக் கைப்பற்றிய போது ஈரானுக்கு எதிராக ஈரக்கின் சதாம் ஹுசேய்னை கிஸ்ஸிங்கர் தூண்டினார். அதற்காம சதாமின் வேண்டுகோளிற்கு இணங்க குர்திஷ் மக்களுக்கு உதவி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது. குர்திஷ் மக்களை கைவிடுவது சரியான செயல் அல்ல என கிஸ்ஸிங்கரின் உதவியாளர் சொன்னபோது அவரது பதில் நான் நடத்துவது மறைமுக அரசுறவியல் கிருத்துவ பரப்புரையகமல்ல (underground diplomacy not missionary) என்றார் கிஸ்ஸிங்கர். பின்னர் குர்திஷ் மக்கள் தடைசெய்யப்பட்ட படைகலன்களால் கொடூரமாக அழிக்கப்பட்டனர்.

கிஸ்ஸிங்கர் சூ என் லாய் சந்திப்பும் நோபல் பரிசும்

1971-ம் ஆண்டு கிஸ்ஸிங்கர் சீனத் தலைமை அமைச்சர் சூ என் லாயை தான் இரகசியமாகச் சந்தித்ததாக அறிவித்த போது அவரது பெயர் உலகப் புகழ் பெற்றது. அப்போது சோவியத் ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து கொண்டிருந்தது. சீனாமீது ஓர் அணுக்குண்டுப் போரைத் தொடுக்க சோவியத் ஒன்றியம் தயாராக வருகின்றது என்ற செய்தியை அடிப்படையாக வைத்து சீனா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் உறவை வளர்க்க முன்வந்தது. அமெரிக்காவுடன் கடும் போட்டியில் இருந்த சீனாவையும் சோவியத் ஒன்றையத்தையும் பிரித்து வைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை கிஸ்ஸிங்கர் பயன்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாக்க ஷாங்காய் உரையாடல் என்னும் பெயரில் ஒப்புக்கொண்டன. 1972இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அல் ஜசீரா இணையத்தளத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரு போர்க்குற்றவாளி கிஸ்ஸிங்கர் என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை ஹின்றி கிஸ்ஸிங்கர் இறப்புச் செய்தி வெளிவந்தவுடன் பதியப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவரது சிந்தனைப் பள்ளி மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் அறியாதவர்களே ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் பரிகார நீதி பெற்றுத்தரும் என நம்புகின்றனர். 

ஹென்றி கிஸ்ஸிங்கர் பற்றிய முந்தையய கட்டுரையைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்:

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

வல்லரசு நாடுகளின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி பற்றி கிழ் உள்ள இணைப்பில் காணலாம். 

Wednesday, 24 May 2023

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (1969-73) வெளியுறவுத் துறைச் செயலாளராகவும் (1973-1977) பணியாற்றிய ஹென்றி கிஸ்ஸிங்கர் 2023 மே மாதம் 27-ம் திகதி தனது நூறாவது வயதை நிறைவு செய்கின்றார். அவர் விரும்பத்தகாத ஒருவராக இருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல கற்றுக் கொள்ள வேண்டிய பலவற்றைக் கொண்டதாகவும் இருக்கின்றது. வியட்னாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னின்றமை, சோவியத் ஒன்றியத்தையும் சீனாவையும் பிரித்து உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டமை அவரது பெரும் சாதனைகளாகும்.

குர்திஷ் மக்களின் காலை வாரியவர்

உலக அரசியலை அதன் சரியான பரிமாணத்தில் உணர்ந்து கொள்ள அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய அறிதல் உதவும் என நிச்சயமாகச் சொல்லலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ஒரு கலாநிதி அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு தனிநாடு பெற்றுக் கொடுக்கும் என்றார். அதை நான் மறுத்து துருக்கி இருக்கும் வரை அது நடக்காது என்றேன். என்னை பேசவிடாமல் பண்ணினார்கள். ஹென்றி கிஸ்ஸிங்கரின் வாழ்க்கை வரலாறு நான் அறிந்திருந்த படியால் நான் சொன்னது சரியாகப் போனது. 1972-ம் ஆண்டு சதாம் ஹுசேன் ஆட்சியில் அவர் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணினார். பெருமளவு படைக்கலன்களையும் சோவியத்திடம் இருந்து வாங்கினார். அப்போது அவரது ஆட்சிக்கு எதிராக ஈராகில் வாழும் குர்திஷ் மக்களுக்கு ஹென்றி கிஸ்ஸிங்கர் படைக்கலன்களை வழங்கி அவர்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தனர். 1979இல் ஈரானில் மதவாத ஆட்சி தொடங்கிய பின்னர் ஈராக்கில் சதாமின் ஆட்சிக்கு ஈரானால் ஆபத்து என்பதால் அமெரிக்காவிற்கும் சதாமிற்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அப்போது குர்திஷ் போராளிகளைக் கொல்ல கிஸ்ஸிங்கர் சதாமிற்கு உதவினார். கிஸ்ஸிங்கரின் உதவியாளர் குர்திஷ் மக்களுக்கு நாம் செய்தது தவறு என்ற போது கிஸ்ஸிங்கர் சொன்ன பதில் இதுதான்: Underground diplomacy இது Christian Missionary அல்ல; சரி பிழை பார்க்க முடியாது. அன்று இந்தியாவும் இன்று அமெரிக்காவும் இதையே எமக்கு செய்கின்றது. குர்திஷ் மக்களை அமெரிக்கா கால் வாருவது கிஸ்ஸிங்கருடன் முடியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கவும் அமெரிக்கா குர்திஷ் மக்களைப் பாவித்தது.

வாழ்க்கை வரலாறு

ஜேர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து அவரது குடும்பத்தில் பலர் கொல்லப்பட்ட பின்னர் 15வயதில் ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி அமெரிக்கப் படையில் இணைந்து ஹிட்லருக்கு எதிராகப் போராடியதுடன் அவரது ஜேர்மனிய மொழியறிவால் அமெரிக்காவின் உளவுத்துறையிலும் பணியாற்றியவர். முன்னாள் போர்வீரர்களுக்கான சலுகையைப் பாவித்து ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் எம் ஏ பட்டத்தையும் கலாநிதி பட்டத்தையும் பெற்றார். ரிச்சர்ட் நிக்சனுக்கு தேர்தல் ப்ரப்புரையின் போது வெளியுறவுத்துறை ஆலோசகராக செயற்பட்டு பின்னர் அவரது ஆட்சியிலும் அவருக்குப் பின்னர் ஜெரால்ட் போர்ட்டின் ஆட்சியிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் செயற்பட்டவர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல அரசுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். டிரம்பின் ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். அவர் எழுதிய நூல்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவு பற்றியது. அரசியில் இருந்தவர் செயற்கை நுண்ணறிவு பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கின்றார். அரசியலில் ஆழமான அறிவு பெற வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி அறிந்து வைத்தால் மட்டும் போதாது. தொழில் நுட்பங்களைப் பற்றியும் படைக்கலன்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நாம் கிஸ்ஸிங்கரின் வாழ்க்கையில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

இந்திரா காந்தியை வெறுத்தவர்.

ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவை வெறுப்பவராகவும் குறிப்பாக இந்திராகாந்தியை வெறுப்பவராகவும் இருந்தவர். பங்களா தேச விடுதலையின் போது அவரது அரசுறவியல் நுட்பங்களை இந்திராகாந்தி முறியடித்தார். இந்தியா மீது போர் தொடுக்க இந்தோனோசியா, பிரித்தானியா, ஜோர்தான், ஆகிய நாடுகளை ஒன்று திரட்டினார். இந்தியாவிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த சீனா மறுத்தது. இரசியா அமெரிக்காவுடன் போருக்கு தயாரானது. அதனால் கிஸ்ஸிங்கர் தனது இந்தியாவிற்கு எதிரான போர் முயற்ச்சியைக் கைவிட்டார். கிஸ்ஸிங்கர் பாக்கிஸ்த்தானிற்கு கேந்திரமுக்கியத்துவம் கொடுத்தார். அவர் எழுதிய World Order என்ற நூலில் இலங்கை கேத்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கின்றது எனக் குறிப்பிடவில்லை.

கிஸ்ஸிங்கரின் தீய செயல்கள்

1969இல் கிழக்கு திமோரில் நடந்த இனக்கொலைக்கு கிஸ்ஸிங்கர்தான் காரணம் என நம்பப்படுகின்றது.  

1969இல் கம்போடியாமீது மோசமான குண்டு வீச்சு செய்யப்பட்டமைக்கு பின்னால் நின்றவர் கிஸ்ஸிங்கர்.

1973-ம் ஆண்டு சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சல்வடோர் அலெண்டேயை சதிமூலம் பதவியில் இருந்து அகற்றுவதில் முன்னின்றவர் கிஸ்சிங்கர்.

1974இல் சைப்பிரஸுக்கு எதிராகவும் துருக்கிக்கு ஆதரவாகவும் சதி செய்தார் கிஸ்ஸிங்கர்.

1980இல் ஈரான் ஈராக் போருக்கு தூபமிட்டவர் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

1981இல் பங்களா தேசம் விடுதலையடைவதை கடுமையாக எதிர்த்தவர் கிஸ்ஸிங்கர்.

உக்ரேன் – இரசியாப் போர்

2023 ஜனவரியில் நடந்த DAVOS மாநாட்டில் காணொலி மூலமாக கிஸ்ஸிங்கர் உரையாற்றும் போது உக்ரேன் – இரசியப் போர் பற்றி சொன்னவை:

1. இரசியாவிற்கு எதிராக தாக்குப் பிடிப்பதிலும் மேற்கு நாடுகளை ஒன்றுபடுத்துவதிலும் உக்ரேன் வெற்றியடைந்துள்ளது.

2. உக்ரேன் குடியரசுத் தலைவரையும் அதன் மக்களையும் நான் பாராட்டுகின்றேன்.

3. 2022 பெப்ரவரிக்குப் பின்னர் இரசியா ஆக்கிரமித்த உக்ரேன் பிரதேசங்களில் இருந்து இரசியா வெளியேற வேண்டும் ஆனால் அதற்கு முன்னர் ஆக்கிரமித்த கிறிமியாவில் இருந்து அது வெளியேறத்தேவையில்லை.

4. உக்ரேனுக்கு நேட்டோவில் இணைய உரிமையுண்டு.

கிஸ்ஸிங்கரின் பேட்டி

கிஸ்ஸிங்கரின் 100வது பிறந்த நாளை ஒட்டி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை அவரது பேட்டியை “எப்படி மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பது” என்னும் தலைப்பில் பிரசுரித்துள்ளது. நூறுவயதிலும் புத்தி கூர்மை சற்றும் குறையாமல் இருக்கின்றார் என்றது அந்த சஞ்சிகை.  அவரது பேட்டியில் கூறியுள்ளவற்றில் முக்கியமானவை:

·         சீனாவைச் சமாளிக்க அமெரிக்காவிற்கு இந்தியா அவசியம்.

·         ஜப்பான் ஐந்து ஆண்டுகளுக்குள் அணுக்குண்டு உற்பத்தி செய்யும்.

·         ஆசியாவின் வலு ஈடாக்கலுக்கு அமெரிக்காவிற்கு பிரான்சும் பிரித்தானியாவும் உதவ வேண்டும். 

·         உலக மேம்பாட்டிற்கு சிறந்த தலைமைகள் அவசியம். முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர்களான Franklin Roosevelt, John F Kennedy, பிரான்சின் Chares de Gaulle, ஜேர்மனியின் Otto Von Bismarck ஆகியோர் சிறந்த ஆளுமைகள்.

·         சீன அமெரிக்க முறுகலை செயற்கை நுண்ணறிவு மேலும் தீவிரப்படுத்தும்.

·         அமெரிக்கா கீழ்முகமாகச் செல்வதாக சீனர்கள் நம்புகின்றார்கள்.

·         அமெரிக்கா தன்னை அடக்கப்பார்க்கின்றது என சீனா நினைக்கின்றது.

·         உலகின் முதன்மை நிலையில் இருக்கும் அமெரிக்காவை அந்த நிலையில் இருந்து வீழ்த்த சீனா முயல்கின்றது என அமெரிக்கா நினைக்கின்றது.

·         முதலாம் உலகப் போரின் முன்னர் இருந்தது போன்ற பெருவல்லரசுகள் மோதும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

·         சினாவின் வலயத்தினுள் இரசியா விழுந்து கொண்டிருக்கின்றது.

·         தனது கணிப்புக்கள் தவறானது என புட்டீன் இறுதியில் உணர்ந்து கொள்வார்.

·         அமெரிக்கா போன்ற நாடுகள் நியதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு என்பது பற்றிச் சொல்லுவது சீனர்களைச் சினமடைய வைக்கின்றது.

·         சீனர்கள் காள் மாக்ஸை பின்பற்றுவதிலும் பார்க்க கொன்ஃபியூசியசை அதிகம் பின்பற்றுகின்றனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்கின்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

Friday, 10 March 2023

இரசியாவின் Hypersonic ஏவுகணைகள் உக்ரேன் போரை மாற்றுமா?

 


2022 ஒக்டோபர் மாதம் 8-ம் திகதி இரசியா கிறிமியாவிற்கு அமைத்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இரசியா உக்ரேன் மக்களையும் குடிசார் உட்-கட்டுமான ங்கள் மீதும் பெருமளவு ஏவுகணைத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது. 2023 மார்ச் 9-ம் திகதி மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் (hypersonic) 81 ஏவுகணைகளை இரசியா உக்ரேனின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து வீசியது. அவற்றில் 34 வழிகாட்டல் (cruise) ஏவுகணைக்ளை இடைமறித்து அழித்துவிட்டதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. இரசியா Kinzhal Hypersonic Missilesகளை இடை மறித்து அழிக்கும் ஆற்றல் உக்ரேனிடம் இல்லை. அவற்றை இரசியா பெருமளவில் பாவித்தால் அது போரின் உக்கிரத்தை அதிகரிக்கும் என்கின்றார் அமெரிக்காவின் முன்னாள் வான்படைத் தளபதி Colonel Jeff Fisher.


இரசியாவிடம் ஏவுகணைக் கையிருப்பு போதியதா?

இரசியாவிற்கான குறைக்கடத்திகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உதிரிப்பாகங்கள் ஏற்றுமதிமீது மேற்கு நாடுகள் தடை விதித்ததை தொடர்ந்து இரசியாவின் தொழில்நுட்பம் மிக்க படைக்கலன்களை உற்பத்தி செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பை நாளை தனக்கும் இது நடக்கலாம் என்ற கரிசனையுடன் இருக்கும் எஸ்த்தோனியா நாட்டின் உளவுத்துறை 2023 ஜனவரியில் இரசியாவிடமுள்ள ஏவுகணைக் கையிருப்பு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில்முடிந்துவிடும் என அறிவித்திருந்தது. இதை ஏற்க மறுத்த சில படைத்துறை ஆய்வாளர்கள் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு இன்னும் ஓராண்டுக்கு நின்று பிடிக்கலாம் என்றனர்.

2023 மார்ச் மாதம் 9-ம் திகதி இரசியா உக்ரேன் மீது:

1) KH-101/KH-55 வழிகாட்டல் ஏவுகணைகள் இருபத்தியெட்டு

2) கடலில் இருந்து Kalibr ஏவுகணைகள் இருபது

3) KH-22 வழிகாட்டல் ஏவுகணைகள் ஆறு

4) KH-31 கப்பல்களை அழிக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இரண்டு

5) KH-22 கப்பல்களை அழிக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் ஆறு

6) KH-59 தரையில் இருந்து தரைக்கு வானுக்கு ஏவும் ஏவுகணைகள் ஆறு

ஆகியவை உள்ளிட்ட எண்பத்தியொரு ஏவுகணைகளை வீசியுள்ளது.

உக்ரேனின் தரையில் உள்ள இலக்குகளுக்கு கடல் இலக்குகளுக்கான ஏவுகணிகள் வீசப்பட்டமை இரசியாவிடம் போதிய ஏவுகணைகள் கையில் இருப்பில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.


இரசியாவிடம் எந்த அளவு படைக்கலன்களும் சுடுகலன்களும் கையிருப்பில் உள்ளது என்பது பற்றியோ அல்லது அவற்றை உற்பத்தி செய்யும் திறனின் அளவு பற்றியோ இரசியாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பனிப்போர்க் காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட படைக்கலன்களையும் சுடுகலன்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.

உக்ரேனியப் பாதுகாப்புத்துறையின் கணிப்பின்படி:

1) KH-55 ஏவுகளைகள் உக்ரேன் போரின் முன்னர் 300 இருந்தன அவற்றில் அரைவாசி பாவிக்கப்பட்டு விட்டன.

2) Kinzhal Ballistic ஏவுகணைகள் 42 இருந்தன. அவற்றில் 16 பாவிக்கப்பட்டு விட்டன. மேலும் 16 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

3) கடலில் இருந்து கடலுக்கு ஏவப்படக்கூடிய Onyx ஏவுகணைகளையும் இரசியா உக்ரேனின் தரையில் உள்ள இலக்குகள் மீது ஏவப்பட்டுள்ளன.

4) KH-22, KH-32 ஆகிய ஏவுகணைகள் உக்ரேனுக்கு எதிராக இரசியா போர் ஆரம்பிக்க முன்னர் 370 இருந்தன. அவற்றில் 250 பாவிக்கப் பட்டு விட்டன. KH-35 ஏவுகணைகள் போருக்கு முன்னர் 500 கையிருப்பில் இரசியாவிடம் இருந்தன. போரின் போது மேலும் 360 உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 504 பாவிக்கப்பட்டுவிட்டன.

2022இன் பிற்பகுதியில் உக்ரேனின் பாதுகாப்புத்துறையின் மேற்படி கணிப்புக்கள வெளிவிடப்பட்டன. பின்னர் பல ஏவுகணைளை இரசியா பவித்துள்ளது. மேலும் ஏவுகணைகளை இரசியா உற்பத்தி செய்திருக்கலாம். உக்ரேனின் கணிப்புக்கள் முழுமையாக நம்பக் கூடியவை அல்ல.

உக்ரேனிய உளவுத்துறையின் கணிப்பீட்டின் படி ஒவ்வொரு தாக்குதலிலும் இரசியா 80 ஏவுகணைகளை வீசுகின்றன. அவை பலதரப்பட்ட ஏவுகணைகளின் கலவையாக உள்ளன. இரசியாவால் ஒரு மாதத்திற்கு 50 வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise Missiles) உற்பத்தி செய்ய முடியும். இரசியாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் உற்பத்தி குறைக்கடத்தி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பரில் இரசியா தொடர்ச்சியாகப் பாவிக்கக் கூடிய Kalibrஏவுகணைகள் உள்ளன என அறிவித்தது.

இரசியா ஈரானிடமிருந்தும் ஏவுகணைகளை வாங்குகின்றது.

அமெரிக்காவின் லேசர் படைக்கலன்கள்

ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை இரசியாவும் சீனாவும் உற்பத்தி செய்யத் தொடங்கியதில் இருந்து அவற்றை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க தொழில்நுட்பம் வளர்ச்சி நிலையில் உள்ளது என்று சொல்லப்படுகின்ற வேளையில் சிலர் ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை எதிர்க்கக் கூடிய நிலையில் அமெரிக்கா இருக்கின்றது என்கின்றனர். அமெரிக்காவின் ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை எதிர்க்கும் படைக்கலன்கள் லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் அசையும் இலக்குகளை அழிக்கக் கூடியவை. லேசர் கதிர்கள் ஒளியின் வேகத்தில் பாய்வதால் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இலகுவில் அழிக்கும் என்கின்றனர். அதை அமெரிக்கா உக்ரேன் போர்க்களத்தில் இரகசியமாக தேர்வுக்காக பயன் படுத்துமா?

ஹப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் படைக்கலன்கள் அழிக்குமா என்பது பற்றிய விபரம் அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://veltharma.blogspot.com/2021/12/blog-post_20.html

KINZHAL HYPERSONIC MISSILES

இரசியாவிடமுள்ள ஏவுகணைகளில் பயங்கரமானவை Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளாகும். இவை ஒலியின் வேகத்திலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. உக்ரேன் போரின் ஆரம்பத்தின் போது உக்ரேனின் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கீழ் படைக்கலக் களஞ்சியம் ஒன்றின் மீது Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை இரசியா வீசியிருந்தது. ஆனால் அதிக அளவிலான அதாவது ஆறு Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் மார்ச் 9-ம் திகதி பாவிக்கப்பட்டுள்ளன. உக்ரேன் புதிய வகைப் படைக்கலன்களை பெற்றுக் கொண்டு மார்ச் மாத இறுதியில் இரசியப் படையினர் மீது கடும் தாக்குதல்களைச் செய்யும் திட்டத்துடன் இருக்கின்றது. அதை முன் கூட்டியே முறிக்கும் நோக்கத்துடன் மார்ச் 9-ம் திகதித் தாக்குதல் அமைந்துள்ளது. Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் மிகவும் வேகமாகச் செல்வதாலும் தனது பறப்புப் பாதையை மாற்றிக் கொண்டு செல்லக் கூடியவை என்பதாலும் அவற்றை இடைமறித்து தாக்கி அழிக்க முடியாது. இடைமறிப்பு தாக்குதலை முறியடிக்க பெருமளவு ஏவுகணைகளை வீச வேண்டும் அல்லது ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை வீச வேண்டும். அமெரிக்காவின் Newsweek  சஞ்சிகை அமெரிக்காவின் Patriot ஏவுகணை எதிர்ப்பு முறைமை உக்ரேனுக்கு துரிதமாகப் போய்ச் சேர்ந்தால் Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை முறியடிக்கலாம் என உக்ரேன் படையினர் சொன்னதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் Patriot ஏவுகணை எதிர்ப்பு முறைமை சவுதியாவில் இருந்தும் யேமனில் செயற்படும் போராளிக் குழுக்கள் சவுதி மீது வீசிய சாதாரண ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை.

கலினின்கிராட்டில் Kinzhal வைத்து மிரட்டும் இரசியா

Kinzhal ஏவுகணைகள் 1250 மைல்கள் தூரம்வரை பாயக் கூடியவை. தாங்கிச் செல்லக் Kinzhal ஏவுகணைகள் பலவற்றை இரசியா Mig-31 போர்விமானங்களில் பொருத்தி தனக்கு சொந்தமான கலிலின்கிராட் நிலப்பரப்பில் நிறுத்தி வைத்துள்ளது. போலாந்திற்கும் எஸ்தோனியாவிற்கும் இடையில் உள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இருந்து Mig-31 போர்விமானங்களால் ஐரோப்பாவின் எப்பகுதியையும் அணுக்குண்டுகளால் Kinzhal மூலம் தாக்க முடியும். உக்ரேன் போரில் நேட்டோப்படைகள் நேரடியாகத் தலையிட்டால் ஐரோப்பாமீது அணுக்குண்டுகளை வீசுவேன் என்ற மிரட்டலுடன் விளடிமீர் புட்டீன் உக்ரேன் மீதான தாக்குதலை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார். 

KINZHALஇன் குறைபாடுகள்

Kinzhal ஏவுகணைகள் வீசப்பட முன்னர் அது தாக்க வேண்டிய இலக்கின் ஆயங்கள் (coordinates) பற்றிய தகவல் அதில் பதிவேற்றப்படும். அது பாய்ந்து கொண்டிருக்கையில் ஏற்படும் இடையீடுகளால் அதன் பாய்ச்சல் பாதையில் ஏற்படும் சிறு மாற்றம் அதை அதன் இலக்கில் இருந்து பெருமளவு தூரத்தில் விழச்செய்யும். அதனால் Kinzhal ஏவுகணைகளால் துல்லியமாகத் தாக்க முடியாமல் போய்விடும். செய்மதிகள் மூலம் அவை அவதானிக்கப்படலாம்.  Kinzhal ஏவுகணைகள் உக்ரேனில் பெரும் சொத்தழிவை ஏற்படுத்தலாம் ஆனால் உக்ரேன் படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த முடியாது. விளடிமீர் புட்டீன் உக்ரேன் போரை படையினரும் படைக்கலங்களையும் மோதவிடும் போராக நடத்தாமல் உக்ரேனிய அப்பாவிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கும் போராக நடத்துகின்றார்.

இரசியாவின் ஏவுகணைத் தட்டுப்பாடு இரசிய சீன உறவை நெருக்கமாக்கலாம். இரசியாவை சீனாவின் பக்கத்துணை (Side kick) ஆக்கலாம்.

Saturday, 26 February 2022

உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்


புவிசார் அரசியல் என்பது நிலப்பரப்புக்கள், கடற்பரப்புகள், வான்வெளி, விண்வெளி, வளங்கள், அரசுகள், தலைமைத்துவ ஆளுமைகள், அரசற்ற அமைப்புக்கள், நாகரீகங்கள், மக்கள், பொருளாதாரம், படைவலிமை ஆகியவற்றிடையேயான செயற்பாடுகள் பற்றிய கேந்திரோபாயத்தை பகுப்பாய்வு செய்வதாகும். அரசியல் புவியியல் (Plitical Geography) நிலவியல் (Anthropogeography) ஆகியவற்றில் இருந்து புவிசார் அரசியல் உருவானது. இங்கு நிலம் என்பது அளவு மட்டும் சார்ந்ததல்ல தரமும் சார்ந்ததாகும். புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்

2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பார்கள்.” என்பது அவரது கோட்பாடு. 193இனக்குழுமங்களைக் கொண்ட இரசியாவில் 146மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்திலும் அதிகமாக இருப்பதாலும் குடிவரவாளரகளின் தொகையிலும் பார்க்க குடியகல்வாளர்களின் தொகை அதிகரிப்பதாலும் இரசியாவின் மக்கள் தொகை குறைந்து செல்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவின் நிலப்பரப்பு உலகின் மிகப் பெரியதாக உள்ளது. அதனால் Friedrich Ratzelஇன் கோட்பாடு உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கான உட்பார்வையைக் தரவில்லை.

Sir Halford John Macinderஇன் இதயநிலக் கோட்பாடு

Halford Mackinder புவியியல் சுழற்ச்சி மையத்தின் வரலாறு என்னும் தலைப்பில் 1904இல் எழுதிய கட்டுரையில் அவர் உலகப் புவிசார் அரசியல் ஆசிய-ஐரோப்பிய பெருங்கண்டத்தின் இதயநிலத்தில் தங்கியுள்ளது என்றார். உலகத்தை ஐம்பெரும் பகுதிகளாகப் பிரித்தார்:

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland): உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.

கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலகத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது Halford Mackinder முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது. பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, போலாந்து, இரசியா, சிலோவாக்கியா, பெலரஸ், மொல்டோவா, உக்ரேன், எஸ்த்தோனியா, லத்வியா, எஸ்த்தோனியா, ஜோர்ஜியா ஆகியவை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளாகும். இவற்றில் பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா, போலந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருக்கின்றன. உக்ரேனும் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முற்பட்ட போது இரசியா அவற்றின் மீது படையெடுத்து அங்கு பிரிவினைகளை உருவாக்கி புதிய நாடுகளை உருவாக்கியுள்ளது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த 1914-1918இல் நடந்த முதலாம் உலகப் போர் இதய நிலத்திற்கான போட்டியை முடிவுக்கு கொண்டுவராது என்றும் அவர் அப்போதே எதிர்வு கூறியிருந்தார். இன்று அது மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் இரசியா மறுதரப்பாகவும் இருந்து கொண்டு போட்டி நகர்வுகளில் ஈடுபடுகின்றன. அதன் ஒரு பகுதியே இரசியா 2022 பெப்ரவரியில் 24-ம் திகதி உக்ரேன் மீது செய்த ஆக்கிரமிப்பாகும்.

கடல்வலிமைக் கோட்பாடு

அமெரிக்கரான Alfred Thayer Mahan ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது. உக்ரேன் தனது கடற்படையின் வலிமையை பெருக்காமல் விட்டதுடன் தன்னிடம் இருந்த கடற்கலன்களை விற்பனை செய்து தனது பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்தது. உக்ரேனிடம் வலிமையான கடற்படை இல்லாத படியால் அது உலகின் அதியுயர் கேந்திரோபாய நிலப்பரப்பில் ஒன்றான கிறிமியாவை 2014இல் இழந்தது. இன்று (26-02-2022) ஓரிரு நாட்களில் இரசிய போர்த்தாங்கிகள் அதன் தலைநகரிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

Nicholas Spykmanஇன் வளையநிலக் கோட்பாடு

Nicholas Spykman வளைய நிலத்தை ஆள்பவன்தான்தான் உலகத்தை ஆள்வான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி. Nicholas Spykman இன் கோட்பாட்டின் முக்கிய அம்சம் கடல் போக்குவரத்திற்கான  அண்மையாக நாடுகள் இருக்க வேண்டும் என்பதாகும். இரசியாவின் குளிர்மையற்ற கடல் உக்ரேனை ஒட்டியே அமைந்திருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா பிரதேசத்தில் உள்ள இரசியக் கடற்படைத்தளம் இரசியாவின் எதிரியின் கைக்களுக்குப் போனால் அது இரசியாவின் வல்லரசு என்ற நிலையைக் கேள்விக் குறியாக்கும். உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்தால் கிறிமியாவை இரசியா இழக்கும் ஆபத்து ஏற்படும். அதைத் தவிர்க்கவே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது.

நாகரீக கோட்பாடு

Samuel Phillips Huntington (1927- 2008) 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். 1. மேற்கு நாடுகள், 2. லத்தின் அமெரிக்க நாடுகள், 3. இஸ்லாமிய நாடுகள், 4. சீனா, 5. இந்து, 6. மரபு வழியினர், 7. ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப் படுத்தியுள்ளார். இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் உள்ளன. இரசிய உட்பட பலகிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம் பிறந்து வளர்ந்த தொட்டிலாக உக்ரேன் தலைநகர் கருதப்படுகின்றது. அதனால் உக்ரேன் இரசியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்கின்றார் இரசிய அதிபர் புட்டீன். இங்கு இரசிய-உக்ரேனிய கலாச்சார முரண்பாட்டிலும் பார்க்க கலாச்சார ஒற்றுமையே ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றது.

அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக் கோட்பாடு

இரசியாவில் பிறந்து இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவரான அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி முன் வைத்த வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனை இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வழங்கியிருந்தன. ஆனால் வலிமை மிக்க இரசிய வான்படையை எதிர்கொள்ளக் கூடிய படைக்கலன்களை வழங்கவில்லை. அதனால் இரசியாவின் வான்வலிமையால் உக்ரேனில் முன்னேறியது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலைத் தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை நிர்மூலமாக்கக் கூடிய வானில் இருந்து வீசும் எறியியல் ஏவுகணைகளையும் (Kh-47M2 Kinzhal 'Dagger' hypersonic ballistic missile.) அவற்றை வீசக் கூடிய MiG-31 போர் விமானங்களையும் இரசியாவிற்கு சொந்தமான கலின்னின்கிராட் பகுதியில் இரசியா நிறுத்தி வைத்துவிட்டு புட்டீன் உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இரசியாவின் இந்த வான் வலிமையால் நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட அசைத்தால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையை இரசியா உருவாக்கி விட்டது.

மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்-சோனிக்) ஏவுகணைகளின் உற்பத்திக்கு முற்பட்ட மேற்படி கோட்பாடுகளுக்கும் அப்பால் இரசியாவை மேற்கு நாடுகளால் கைப்பற்றி ஆள முடியாது. அதே போல் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் இரசியாவால் கைப்பற்ற முடியாது. இரசியாவின் படைவலிமை அதன் எல்லையை முடிவு செய்யும். உக்ரேனை அதன் நீப்பர் நதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள டொன்பாஸ் பிரதேசத்தைக் கைப்பற்றி ஒரு தனி நாடாக்குவது அல்லது இரசியாவுடன் இணைப்பது இரசியாவால் இயலுமான ஒன்று. டொன்பாஸ் பிரதேசத்தில் இருந்து கிறிமியா வரை செல்லும் கரையோரப்பகுதியைக் கைப்பற்றி இரண்டையும் தரை வழியாக இணைப்பதையும் இரசியாவால் செய்ய முடியும். அது கிறிமியாவை இரசியாவிடமிருந்து பிரிக்க முடியாத பிரதேசமாக்கி இரசியக் கடற்படையை வலிமை மிக்கதாக்கும். இரசியா அதியும் தாண்டி முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று தற்போது நேட்டோவில் இருக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க முயன்றால் உலகம் போரழிவைச் சந்திக்கும்.

 (தொடரும்)

Tuesday, 18 January 2022

இலங்கையில் சீனா மறைமுக படைத்தளம் அமைக்குமா?

 


சீனாவின் அரசுறவியல்(Diplomatic) நகர்வுகள் எப்போது தொலைநோக்கமும் உள்நோக்கமும் கொண்டவையாகவும் நீண்ட கால அடிப்படையில் செய்யப்படுபவையாகவும் இருக்கும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக சீனா செய்யும் நகர்வுகள் ஐயத்திற்கு இடமானவையாக இருக்கின்றன. சிறிது சிறிதாக இலங்கையை தனது முழுமையான பிடிக்குள் சீனா கொண்டுவர முயல்வது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது போல் செயற்பட்டாலும் இலங்கையை இந்தியா தனித்து கையாள முடியாது என்பதாலும் இலங்கையை இந்தியாவை தனித்து கையாள்வதை அமெரிக்கா விரும்புவதில்லை என்றபடியாலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபட்டு இலங்கையை சீனாவின் பிடிக்குள் செல்வதற்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றன. இருந்தும் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் இன்னும் இல்லை.

இலங்கை சீன உறவு

SWRD பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது 1957 பெப்ரவரியில் இலங்கையில் சீனத் தூதுவரகம் திறக்கப்பட்டது. அதில் இருந்து இரு நாடுகளுக்குமிடையில் ஒரு முறைசார் உறவு ஆரம்பமானது. இரு தரப்பு வர்த்தகங்கள் அப்போது முக்கிய பங்கு வகித்தது. சீனாவிற்கு இலங்கையில் இருந்து இரப்பரும் இலங்கைக்கு சீனாவில் இருந்து அரிசியும் விற்பனை செய்யப்பட்டன. இலங்கையில் சீனா தனது பொதுவுடமைவாதத்தை பரப்ப காத்திரமான முயற்ச்சி எடுத்ததில்லை. ரொஹண விஜயவீர தலைமையில் இலங்கையில் செய்த பொதுவுடமைப் புரட்சிக்கு சீனா உதவி செய்யவில்லை. அது உதவி செய்திருந்தால் விஜயவீரா தலைமையில் நடந்த புரட்சியின் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கலாம். தோழர் சண்முகதாசனின் சீன சார்பு பொதுவுடமைக் கட்சியில் ஒரு முண்னணி உறுப்பினராக தோழர் விஜயவீர இருந்திருந்தார். சிங்களவர்கள் இலங்கையின் எல்லாச்சூழலில் நட்பாக இருக்கும் நாடாக சீனாவைப் பார்க்கின்றனர். 1983இல் இருந்து 2009வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கைக்கு சீனா பேருதவி செய்தது. அதன் பின்னர் உலக அரங்கில் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு ஏற்படும் நெருக்கடிகளை எதிர் கொள்ள சீனாவைப் போல் வேறு எந்த நாடும் நேரடியாக உதவி செய்வதில்லை. 2019-ம் ஆண்டு இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையை எந்த ஒரு நாடும் மிரட்ட நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஆரம்பப்புள்ளியாக அம்பாந்தோட்டை?

சீனா இலங்கை மீது செய்த கேந்திரோபாய நகர்வு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அது செய்த முதலீடு ஆகும். அமெரிக்காவின் கடற்படை வலிமையை தனது நீர்மூழ்கிக் கப்பல் படை மூலம் எதிர் கொள்ளும் சீனாவின் கேந்திரோபாயத்திற்கு அமைய அம்பாந்தோட்டை துறைமுகம் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டது. சீனா மியன்மாரின் சிட்வே, பங்களா தேசத்தின் சிட்ட கொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களில் சீனா செய்த முதலீடு முத்துமாலைத் திட்டம் என அழைக்கப்படுகின்றது. அவற்றின் பூகோள அமைப்பைப் பார்த்த போது அது இந்தியாவின் கடற்பாதுகாப்பின் கழுத்துக்கான சுருக்குக் கயிறு போல் தோற்றமளித்தது. சீனா அம்பாந்தோட்டை துறைமுகம் இரு தரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வர்த்தக நோக்கங்களைக் கொண்டது என தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

இந்தியாவிற்கு மிக அருகில் சீனா

கொழும்புத் துறைமுகத்தின் அதிக இலாபகரமான Colombo International Container Terminal (CICT) என்னும் தெற்கு முனையம் சீனாவின் China Merchant Holding நிறுவனத்திற்கு 2011இல் விற்பனை செய்யப்பட்டது. முதலில் சீன நிறுவனத்திற்கு 50%, Aiken Spence நிறுவனத்திற்கு 35% எனவும், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு 15% எனவும் பன்னாட்டு முனையத்தின் உரிமை பகிரப்பட்டது. பின்னர் சீன நிறுவனம் Aiken Spence இடமிருந்து 35% உரிமத்தையும் பெற்றுக் கொண்து. சீனா அங்கு இலத்திரனியல் முறைமையிலான கப்பல் மற்றும் கொள்கலன் கையாளலை அறிமுகம் செய்தது. தெற்காசியாவில் உள்ள ஒரே ஓர் ஆழ்கடல் துறைமுகமாக Colombo International Container Terminal இருக்கின்றது. இந்திய வர்த்தக கொள்கலன் போக்குவரத்தில் 70% கொழும்பு துறைமுகத்தினூடாக நடக்கின்றது. சீனா உருவாக்கிய செயற்கைதீவாகிய கொழும்பு துறைமுக நகரமும் அதில் அமைந்துள்ள தாமரைக் கோபுரமும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அதிலிருந்து உளவு நடவடிக்கைகளையும் மற்றும் உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சீனாவால் இந்தியாவிற்கு எதிராக செய்ய முடியும். கூடாங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து புது டில்லி வரை தாமரைக் கோபுரத்தில் உச்சியின் நின்று அவதானிக்க முடியும். சீனாவால் யாழ் குடாநாட்டுக் கரையோரத்திலும் ஒரு சிறிய செயற்கைத் தீவை அமைக்க முடியும். அதிலும் ஒரு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம். அப்படி ஒரு தீவு அமைவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும்.

இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க வழி தேடும் சீனா

சீனா தன் அயல் நாடுகளின் வான்பரப்புக்களுள் அடிக்கடி தன் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு வலிமையையும் பொறுமையையும் சோதிப்பதுண்டு. அதே போல அயல் நாட்டுக் கடற்பரப்புக்குள் தனது கடற்படைக்கலன்களையும் மீன்பிடிப்படகுகளையும் சீனா அடிக்கடி அனுப்புவதுண்டு. இந்தியாவிற்கு அதனுடனான எல்லையில் பல சிறு ஆக்கிரமிப்புக்களை சீனா செய்வதுண்டு, இந்தியாவிற்கு சொந்தமான பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளதாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு வான்பரப்பில் சீனா தொல்லை கொடுப்பது குறைவு. இந்திய சீன எல்லை கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் அங்கு விமானங்களுக்கு இடர்மிகு சூழல் நிலவுவதால் சீனா அங்கு தொல்லை கொடுப்பதை தவிர்க்கலாம். இந்தியாவிற்கு கடல் மூலம் தொல்லை கொடுக்க சீனாவிற்கு சிறந்த இடம் இலங்கை தான். ஆனால் இலங்கையில் சீனா ஒரு பகிரங்க படைத்தளத்தை அமைப்பது ஆபத்தானது. அப்படிப்பட்ட தளங்கள் இருந்தால் அவற்றின் மீது இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். கடல், வான், தரை ஆகிய நிலைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். 2021 டிசம்பரில் சீனா மியன்மாரிற்கு (பர்மா) இரண்டு மிங் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியிருந்தது. சீனா ஏற்கனவே பாவித்த அந்த நீர்மூழ்கிகள் டீசலில் இயங்குபவை. இந்த வகை நீர்மூழிகளை ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு வழங்கியது அதுவே முதற்தடவை. 2017-ம் ஆண்டு பங்களாதேசம் இரண்டு நீமூழ்கிகளை சீனாவிடமிருந்து $203மில்லியன்களுக்கு வாங்கியது. 2021 நவம்பரில் சீனா PNS Turghril என்னும் இரண்டு உயர்தரப் போர்க்கப்பல்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கியது. ஏற்கனவே சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான் எட்டு நீர்மூழ்கிகளை வாங்கியிருந்தது. பாக்கிஸ்த்தான் எட்டு Frigate கப்பல்கள் ஐந்து Corvette கப்பல்கள் எட்டு நீர்முழ்கிக் கப்பல்களை ஒரு குறுகிய காலப்பகுதியில் தனது கடற்படையை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் வாங்கியமை உலகத்தை வியக்க வைத்தது.

இரகசியப் படைத்தளஙகள்

ஒரு வல்லரசு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளத்தை பகிரங்கமாக அமைக்கலாம். யாருக்கும் தெரியாமல் இரகசிய படைத்தளங்களையும் அமைக்கலாம். மறைமுகப் படைத்தளங்களை அமைக்கலாம். சீனாவின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத்துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் ஆகியவற்றில் இரகசியமாக படைக்கலன்களை சீனாவால் வைத்திருக்க முடியும். பெரிய கொள்கலன்கள் உள்ளே ஏவுகணைச் செலுத்திகளையும் ஆளிலிப் போர் விமானங்களையும் மறைத்து வைத்திருக்கலாம். தேவை ஏற்படின் துரிதமாக பொருத்தக் கூடிய பல பெரிய படைக்கலன்களையும் சீனாவால் இலங்கையில் வைத்திருக்க முடியும். இந்தியாவின் உளவுத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே இவற்றை இனம் கண்டு அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

மறைமுகப் படைத்தளங்கள்

இலங்கையில் சீனா மறைமுகமான படைத்தளத்தை அமைக்க செய்யக் கூடியவை:

1.இலங்கைக்கு பலவிதமான படைக்கலன்களை சீனா விற்பனை செய்தோ அல்லது உதவியாக வழங்கியோ இலங்கையின் பல்வேறு இடங்களில் நிறுத்தலாம். நாசகாரிக் கப்பல்கள், சேமக்கப்பல்கள் (corvette), நீர்முழ்கிக் கப்பல்கள் வேவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள், இலத்திரனியல் போர் விமானங்கள் போன்றவை இவற்றில் அடக்கப்படலாம்.

2. மேற்படி கப்பல்களையும் விமானங்களையும் இயக்குவதற்கு இலங்கைப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதற்கும் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான ஆளணிகள் என்னும் போர்வையில் சீனப்படையினர் இலங்கையில் தங்கலாம்.

3. இந்தியாவுடனான போர் என்று வரும் போது மேற்படி கப்பல்களும் விமானங்களும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக திடீர்த்தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

இலங்கையில் சீனா பகிரங்க படைத்தளங்களை அமைப்பதிலும் பார்க்க இரகசிய மற்றும் மறைமுக படைத்தளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

Thursday, 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...