Followers

Wednesday 24 May 2023

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (1969-73) வெளியுறவுத் துறைச் செயலாளராகவும் (1973-1977) பணியாற்றிய ஹென்றி கிஸ்ஸிங்கர் 2023 மே மாதம் 27-ம் திகதி தனது நூறாவது வயதை நிறைவு செய்கின்றார். அவர் விரும்பத்தகாத ஒருவராக இருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல கற்றுக் கொள்ள வேண்டிய பலவற்றைக் கொண்டதாகவும் இருக்கின்றது. வியட்னாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னின்றமை, சோவியத் ஒன்றியத்தையும் சீனாவையும் பிரித்து உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டமை அவரது பெரும் சாதனைகளாகும்.

குர்திஷ் மக்களின் காலை வாரியவர்

உலக அரசியலை அதன் சரியான பரிமாணத்தில் உணர்ந்து கொள்ள அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய அறிதல் உதவும் என நிச்சயமாகச் சொல்லலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ஒரு கலாநிதி அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு தனிநாடு பெற்றுக் கொடுக்கும் என்றார். அதை நான் மறுத்து துருக்கி இருக்கும் வரை அது நடக்காது என்றேன். என்னை பேசவிடாமல் பண்ணினார்கள். ஹென்றி கிஸ்ஸிங்கரின் வாழ்க்கை வரலாறு நான் அறிந்திருந்த படியால் நான் சொன்னது சரியாகப் போனது. 1972-ம் ஆண்டு சதாம் ஹுசேன் ஆட்சியில் அவர் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணினார். பெருமளவு படைக்கலன்களையும் சோவியத்திடம் இருந்து வாங்கினார். அப்போது அவரது ஆட்சிக்கு எதிராக ஈராகில் வாழும் குர்திஷ் மக்களுக்கு ஹென்றி கிஸ்ஸிங்கர் படைக்கலன்களை வழங்கி அவர்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தனர். 1979இல் ஈரானில் மதவாத ஆட்சி தொடங்கிய பின்னர் ஈராக்கில் சதாமின் ஆட்சிக்கு ஈரானால் ஆபத்து என்பதால் அமெரிக்காவிற்கும் சதாமிற்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அப்போது குர்திஷ் போராளிகளைக் கொல்ல கிஸ்ஸிங்கர் சதாமிற்கு உதவினார். கிஸ்ஸிங்கரின் உதவியாளர் குர்திஷ் மக்களுக்கு நாம் செய்தது தவறு என்ற போது கிஸ்ஸிங்கர் சொன்ன பதில் இதுதான்: Underground diplomacy இது Christian Missionary அல்ல; சரி பிழை பார்க்க முடியாது. அன்று இந்தியாவும் இன்று அமெரிக்காவும் இதையே எமக்கு செய்கின்றது. குர்திஷ் மக்களை அமெரிக்கா கால் வாருவது கிஸ்ஸிங்கருடன் முடியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கவும் அமெரிக்கா குர்திஷ் மக்களைப் பாவித்தது.

வாழ்க்கை வரலாறு

ஜேர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து அவரது குடும்பத்தில் பலர் கொல்லப்பட்ட பின்னர் 15வயதில் ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி அமெரிக்கப் படையில் இணைந்து ஹிட்லருக்கு எதிராகப் போராடியதுடன் அவரது ஜேர்மனிய மொழியறிவால் அமெரிக்காவின் உளவுத்துறையிலும் பணியாற்றியவர். முன்னாள் போர்வீரர்களுக்கான சலுகையைப் பாவித்து ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் எம் ஏ பட்டத்தையும் கலாநிதி பட்டத்தையும் பெற்றார். ரிச்சர்ட் நிக்சனுக்கு தேர்தல் ப்ரப்புரையின் போது வெளியுறவுத்துறை ஆலோசகராக செயற்பட்டு பின்னர் அவரது ஆட்சியிலும் அவருக்குப் பின்னர் ஜெரால்ட் போர்ட்டின் ஆட்சியிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் செயற்பட்டவர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல அரசுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். டிரம்பின் ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். அவர் எழுதிய நூல்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவு பற்றியது. அரசியில் இருந்தவர் செயற்கை நுண்ணறிவு பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கின்றார். அரசியலில் ஆழமான அறிவு பெற வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி அறிந்து வைத்தால் மட்டும் போதாது. தொழில் நுட்பங்களைப் பற்றியும் படைக்கலன்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நாம் கிஸ்ஸிங்கரின் வாழ்க்கையில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

இந்திரா காந்தியை வெறுத்தவர்.

ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவை வெறுப்பவராகவும் குறிப்பாக இந்திராகாந்தியை வெறுப்பவராகவும் இருந்தவர். பங்களா தேச விடுதலையின் போது அவரது அரசுறவியல் நுட்பங்களை இந்திராகாந்தி முறியடித்தார். இந்தியா மீது போர் தொடுக்க இந்தோனோசியா, பிரித்தானியா, ஜோர்தான், ஆகிய நாடுகளை ஒன்று திரட்டினார். இந்தியாவிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த சீனா மறுத்தது. இரசியா அமெரிக்காவுடன் போருக்கு தயாரானது. அதனால் கிஸ்ஸிங்கர் தனது இந்தியாவிற்கு எதிரான போர் முயற்ச்சியைக் கைவிட்டார். கிஸ்ஸிங்கர் பாக்கிஸ்த்தானிற்கு கேந்திரமுக்கியத்துவம் கொடுத்தார். அவர் எழுதிய World Order என்ற நூலில் இலங்கை கேத்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கின்றது எனக் குறிப்பிடவில்லை.

கிஸ்ஸிங்கரின் தீய செயல்கள்

1969இல் கிழக்கு திமோரில் நடந்த இனக்கொலைக்கு கிஸ்ஸிங்கர்தான் காரணம் என நம்பப்படுகின்றது.  

1969இல் கம்போடியாமீது மோசமான குண்டு வீச்சு செய்யப்பட்டமைக்கு பின்னால் நின்றவர் கிஸ்ஸிங்கர்.

1973-ம் ஆண்டு சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சல்வடோர் அலெண்டேயை சதிமூலம் பதவியில் இருந்து அகற்றுவதில் முன்னின்றவர் கிஸ்சிங்கர்.

1974இல் சைப்பிரஸுக்கு எதிராகவும் துருக்கிக்கு ஆதரவாகவும் சதி செய்தார் கிஸ்ஸிங்கர்.

1980இல் ஈரான் ஈராக் போருக்கு தூபமிட்டவர் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

1981இல் பங்களா தேசம் விடுதலையடைவதை கடுமையாக எதிர்த்தவர் கிஸ்ஸிங்கர்.

உக்ரேன் – இரசியாப் போர்

2023 ஜனவரியில் நடந்த DAVOS மாநாட்டில் காணொலி மூலமாக கிஸ்ஸிங்கர் உரையாற்றும் போது உக்ரேன் – இரசியப் போர் பற்றி சொன்னவை:

1. இரசியாவிற்கு எதிராக தாக்குப் பிடிப்பதிலும் மேற்கு நாடுகளை ஒன்றுபடுத்துவதிலும் உக்ரேன் வெற்றியடைந்துள்ளது.

2. உக்ரேன் குடியரசுத் தலைவரையும் அதன் மக்களையும் நான் பாராட்டுகின்றேன்.

3. 2022 பெப்ரவரிக்குப் பின்னர் இரசியா ஆக்கிரமித்த உக்ரேன் பிரதேசங்களில் இருந்து இரசியா வெளியேற வேண்டும் ஆனால் அதற்கு முன்னர் ஆக்கிரமித்த கிறிமியாவில் இருந்து அது வெளியேறத்தேவையில்லை.

4. உக்ரேனுக்கு நேட்டோவில் இணைய உரிமையுண்டு.

கிஸ்ஸிங்கரின் பேட்டி

கிஸ்ஸிங்கரின் 100வது பிறந்த நாளை ஒட்டி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை அவரது பேட்டியை “எப்படி மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பது” என்னும் தலைப்பில் பிரசுரித்துள்ளது. நூறுவயதிலும் புத்தி கூர்மை சற்றும் குறையாமல் இருக்கின்றார் என்றது அந்த சஞ்சிகை.  அவரது பேட்டியில் கூறியுள்ளவற்றில் முக்கியமானவை:

·         சீனாவைச் சமாளிக்க அமெரிக்காவிற்கு இந்தியா அவசியம்.

·         ஜப்பான் ஐந்து ஆண்டுகளுக்குள் அணுக்குண்டு உற்பத்தி செய்யும்.

·         ஆசியாவின் வலு ஈடாக்கலுக்கு அமெரிக்காவிற்கு பிரான்சும் பிரித்தானியாவும் உதவ வேண்டும். 

·         உலக மேம்பாட்டிற்கு சிறந்த தலைமைகள் அவசியம். முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர்களான Franklin Roosevelt, John F Kennedy, பிரான்சின் Chares de Gaulle, ஜேர்மனியின் Otto Von Bismarck ஆகியோர் சிறந்த ஆளுமைகள்.

·         சீன அமெரிக்க முறுகலை செயற்கை நுண்ணறிவு மேலும் தீவிரப்படுத்தும்.

·         அமெரிக்கா கீழ்முகமாகச் செல்வதாக சீனர்கள் நம்புகின்றார்கள்.

·         அமெரிக்கா தன்னை அடக்கப்பார்க்கின்றது என சீனா நினைக்கின்றது.

·         உலகின் முதன்மை நிலையில் இருக்கும் அமெரிக்காவை அந்த நிலையில் இருந்து வீழ்த்த சீனா முயல்கின்றது என அமெரிக்கா நினைக்கின்றது.

·         முதலாம் உலகப் போரின் முன்னர் இருந்தது போன்ற பெருவல்லரசுகள் மோதும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

·         சினாவின் வலயத்தினுள் இரசியா விழுந்து கொண்டிருக்கின்றது.

·         தனது கணிப்புக்கள் தவறானது என புட்டீன் இறுதியில் உணர்ந்து கொள்வார்.

·         அமெரிக்கா போன்ற நாடுகள் நியதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு என்பது பற்றிச் சொல்லுவது சீனர்களைச் சினமடைய வைக்கின்றது.

·         சீனர்கள் காள் மாக்ஸை பின்பற்றுவதிலும் பார்க்க கொன்ஃபியூசியசை அதிகம் பின்பற்றுகின்றனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்கின்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...