Followers

Monday 28 June 2021

நேட்டோ புதிய திசையில் பயணிக்குமா?

 


1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும்ம வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் தற்போது ஐரோப்பியாவினதும் வட அமெரிக்காவினதும் 30 நாடுகளின் ஒரு பில்லியன் மக்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமையைப் பரப்பல் என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்து சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சீனாவினதும் இரசியாவினதும் ஒத்துழைப்பு என்றுமில்லாத அளவு வளர்ந்துள்ள நிலையில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு பெல்ஜியத் தலைநகரான பிரஸல்ஸ்ஸில் 2021 ஜூன் மாதம் 14-ம் திகதி நடைபெற்றது. தற்போதைய உலகச் சூழலுக்கு ஏற்ப நேட்டோ தன்னை மாற்றிக் கொள்ளும் என்றார் நேட்டோவின் தலைமை செயலர்.

அமெரிக்காவின் செல்வமும் பொதுவுடமைவாதமும்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. தமக்கு வேண்டாதவர்களான சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃபி போன்றவர்களை ஆட்சியில் இருந்து நேட்டோ அகற்றியது. இவர்கள் இருவரும் உலக நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை எதிர்த்தவர்கள்.

மேம்படுத்திய முன்னோக்கிய இருப்பு (Enhanced Forward Presence)

இரசிய எல்லையில் உள்ள நோட்டோ நாடுகளில் நேட்டோ நாடுகளின் படைகளை சிறிய அளவில் நிறுத்துதல் மேபடுத்திய முன்னோக்கிய இருப்பு எனப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியா ஆகக் கூடிய அளவில் 894 படையினரை நிறுத்தியுள்ளது. பெல்ஜியம் ஒருவரை மட்டும் நிறுத்தியுள்ளது. எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகள் இரசிய எல்லையில் உள்ள சிறிய நாடுகளாகும். அவற்ற ஒரு சில மணித்தியாலங்களில் இரசியாவால் கைப்பற்ற முடியும். இம்மூன்று நேட்டோ நாடுகளிலும் கணிசமான அளவு இரசியர்கள் சோவியத் ஒன்றிய காலத்தில் குடியேறி வசிக்கின்றனர். அதனால் கிறிமியாவில் நடந்த து இந்த நாடுகளிலும் நடக்கலாம் என்ற அச்சம் 2014-ம் ஆண்டின் பின்னார் போலாந்து, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உருவாகியது.

 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் போலாந்து, ஹங்கேரி, அல்பேனியா போன்ற நாடுகளும் சோவியத் ஒன்றிய காலத்து கசப்பான அனுபவங்களை இன்னும் மறக்கவில்லை.

வளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.

உலக ஆதிக்கத்தில் உறுதியாக நிற்கும் இரசியா

2021 ஜூன் 25-ம் திகதி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் இரசியாவின் இரண்டு மிக்-31 போர்விமானங்கள் மத்திய தரைக்கடலில் போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதேவேளையில் பிரித்தானியாவின் HMS QUEEN ELIZABETH விமானம் தாங்கிக் கப்பL அமெரிக்க தயாரிப்பு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35களுடன் மத்திய தரைக்கடலில் ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. உலகின் அதிவேக விமானங்களில் ஒன்றான மிக்-31 போர்விமானங்கள் தாங்கிச் சென்ற KNZHAL ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் வானில் இருந்து ஏவக்கூடிய எறியியல் ஏவுகணைகளாகும் (BALLISTIC MISSILES). இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை லேசர் கதிர்வீச்சினால் மட்டுமே அழிக்க முடியும். பிரித்தானியாவின் கடற்படைகளிடம் அவை இருப்பதாக தகவல் இல்லை. மத்தியதரைக்கடலில் இது நடப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர் கருங்கடலில் பிரித்தானியாவின் HMS Defender நாசகாரிப் போர்க்கப்பலுக்கும் இரசிய விமானப்படைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது. இரசியக் கடற் பிராந்தியத்தில் பிரித்தானிய நாசகாரி நுழைய முற்பட்ட போது அதன் மீது எச்சரிக்கை வேட்டுக்களும் அதன் பாதையில் குண்டுகளும் வீசப்பட்டதாக இரசியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து தவறுதலாக தெருவோரத்தில் விடப்பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய பத்திரங்களை கண்ட ஒருவர் அதை பிபிசியிடம் ஒப்படைத்தார். அதன் படி இரசியாவின் எதிர்வினைகளை அறியும் பொருட்டு கருங்கடலிற்கு பிரித்தானிய நாசகாரிக் கப்பல்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இரசியாவின் உறுதிப்பாட்டை உரத்துப் பறைசாற்றுகின்றன.  அமெரிக்காவின் ஆறவது கடற்படைப் பிரிவு உட்பட்ட நேட்டோவின் கடற்படைப் பிரிவான Maritime Group-2 உக்ரேனியக் கடற்படையினரும் இணைந்து ஜுன் 28 முதல் ஜூலை 10 வரை கிறிமியாவை ஒட்டிய கடற்பரப்பில் போர் பயிற்ச்சிகளை செய்கின்றன. இதில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரம் படையினர், 32 போர்க்கப்பல்கள், 40 போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேட்டோவும் சீனாவும்

2019-ம் ஆண்டு நடந்த நேட்டோவின் மாநாட்டில் சீனாவுடன் ஒரு படைக்கலக் குறைப்பு ஒப்பந்தம் செய்வதாக முடிவெடுக்கப் பட்டது. ஆனால் அது தொடர்பான நகர்வுகள் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. 2021இல் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் மிக்க நாடாக கருதப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரை சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் பாயக்கூடியவையாக இருப்பதால் சீனாவை இட்ட கரிசனை அந்நாடுகளிடையே உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் சீனாவின் பொருளாதாரம், படைத்துறை, தொழில்நுட்பம் ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளமை பற்றி ஆராயப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் அதிகரிப்பது பற்றியும் ஆராயப்பட்டது. 2021 பெல்ஜியாவின் தலைநகர் பிரஸஸ்ஸில் நடந்த மாநாட்டில் சீனா ஒரு அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் நேட்டோ

மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சிறந்த நட்பு நாடுகளாக தென் கொரியா, ஜப்பான், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் நேட்டோவைப் பொறுத்தவரை சீனாவைக் கையாள்வதற்கான சிறந்த சொத்துக்களாகும். இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டு வருவது சிரமம் என்பதை மேற்கு நாடுகள் உணர்ந்துள்ளன. அதே வேளை சீனாவின் சவால்களைச் சமாளிக்க இந்தியாவிற்கு மேற்கு நாடுகளின் நட்பு அவசியமாகின்றது. சீன இரசிய உறவின் வளர்ச்சி தவிர்க்க முடியாது என்ற நிலையில் இந்தியா நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்புரிமை உள்ள நாடாக இணையாமல் நேட்டோவின் கேந்திரோபாய பங்காளியாக இணைய வாய்ப்புண்டு.

வட துருவத்தில் உருகும் பனியால் உருவாகும் கடற்பாதையை இரசியா தனது கட்டுப்பாட்டிலும் தென் சீனக் கடலை சீனா தனது கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முனைவது உலகெங்கும் சுதந்திரமான கடற்போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என பல மேற்கு நாடுகளின் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றார்கள். சீனாவயும் இரசியாவையும் முக்கிய போட்டி நாடுகளாகவும் தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, ஒஸ்ரேலியா, வியட்நாம், தைவான், இந்தோனேசியா ஆகிய நாடுகளை பங்காளிகளாகவும் கொண்டு நேட்டோ தனது செயற்பாட்டை அத்லாண்டிக் மாக்கடலில் மட்டுப்படுத்தாமல் பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், வட கடல் ஆகியவற்றையும் உள்ளடக்கிய உலகளாவிய படைத்துறைக் கூட்டமைப்பாக நேட்டோ உருவெடுக்கலாம்.

Sunday 6 June 2021

புதிய பரிமானம் பெறும் வான் போர்

 

ஆளில்லா விமான தொழில்நுட்ப வளர்ச்சி போர்விமான உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்றது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இயந்திர கற்கை (Machine learning) ஆகியவற்றை விமானப் பறப்பில் பாவிக்கும் போதும் இணையவெளி போர் முறைமையை போர் விமானங்களில் உள்ளடக்கும் போதும் வான் போர் முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போர்விமானம் தரையில் இருந்து கிளம்பும் போதும் பின்னர் தரையிறங்கும் போதும் மட்டும் விமானியின் செயற்பாடுகள் விமானத்திற்கு இப்போது தேவைப்படுகின்றது. வானில் கிளம்பிய பின்னர் விமானம் தானாகவே நிலைமையை உணர்ந்து செயற்படுகின்றது. விமானி குண்டு வீச்சுக்களில் அதிக கவனம் இப்போது செலுத்த முடியும்.

ஆறு தலைமுறைகள்

போர்விமானங்கள் இதுவரை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளன. முதலில் விமானங்களின் வேகங்களை அடிப்படையாக வைத்து புதிய தலைமுறைகள் உருவாகின. இரண்டாம் உலகப் போரில் பாவிக்கப்பட்ட முதலாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறப்பவை. 1953-1955 வரை நடந்த கொரியப் போரில் பாவிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியின் வேகத்தில் பறக்கக்கூடியவை. அவற்றால் வானில் இருந்து மற்ற போர்விமானங்கள் மீது ஏவுகணைகளை ஏவ முடியும். மூன்றாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடியவை. அவற்றில் சிறந்த கதுவிகள் (ரடார்கள்) பொருத்தப்பட்டிருக்கும். தாக்குதல் விமானம், குண்டு விச்சு விமானம், வானாதிக்க விமானம், வேவு பார்க்கும் விமானம், கண்காணிப்பு விமானம் என தனித்தனியாக போர்விமானங்கள் உற்பத்தி செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் இவை யாவற்றையும் ஒரு விமானம் செய்யக்கூடியவையாக உருவாக்கப் பட்டன. அவை பற்பணி (Multi-role) போர்விமானங்கள் என அழைக்கப்பட்டன அவையே நான்காம் தலைமுறைப் போர்விமாங்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளும் அவற்றில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பறப்புத்திறன், திசைதிருப்பும் திறன் போன்றவை தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டன. எதிரியின் கதுவிகளுக்கு (ரடார்களுக்கு) புலப்படாமல் எதிரியின் வான்பறப்பை ஊடறுத்துச் செல்லக் கூடிய F-117 போர்விமானங்கள் 1983-ம் ஆண்டளவில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து B-2 என்னும் புலப்படா விமானம் உருவாக்கப்பட்டது. சதாம் ஹுசேய்னுக்கு எதிராக அவை 1991இல் குண்டுகளை வீசிய போது அவை எங்கிருந்து வருகின்றன எப்படி வருகின்றன என உணர முடியாமல் இருந்தது. அதையிட்டு இரசியாவும் சீனாவும் அதிகம் கரிசனை கொண்டன. F-22 போர்விமாங்கள் முழுமையான புலப்படாத்தன்மையும் சிறந்த இலத்திரனியல் செயற்பாடும் கொண்டவையாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டன அவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமாங்களாகும். இப்போது பல நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமாங்களை உருவாக்குகின்றன. அதிலும் அமெரிக்கா ஒரு படி முன்னேறி 2020-ம் ஆண்டு தனது ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தை உருவாக்கியுள்ளது. இரசியா, சீனா, இந்தியா, பிரித்தானியா, துருக்கி போன்ற நாடுகள் ஆறாம் தலைமுறைப் போர்விமாங்களை உற்பத்தி செய்யும் முயற்ச்சியில் இறங்கியுள்ளன.

அமெரிக்காவ்ன் ஆறாம் தலைமுறை விமானம்

நாலாம் தலைமுறையையும் கைவிடாத அமெரிக்கா

அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள் எந்த ஒரு வான் சண்டையில் சுட்டு விழுத்தப்படாதவை எனற சாதனை படைத்தவை. 40 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்த விமானங்கள் இப்போது மேம்படுத்தப்பட்டு F-15EX என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றால் முப்பதினாயிரம் இறாத்தல் எடியுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்ல முடியும். நான்காம் தலைமுறையைச் சார்ந்த F-15EX போர் விமானங்களை இயக்குவது ஐந்தாம் தலைமுறை F-35 போர் விமானங்களை இயக்குவதிலும் பார்க்க மலிவானதாகும்.

பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

2018-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர் விமான உற்பத்தி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. விமான இயந்திர உற்பத்தியில் நீண்ட அனுபவம் கொண்ட பிரித்தானியா அமெரிக்காவின் F-35 போர் விமானங்களிற்கு தேவையான மென்பொருளை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகித்தது. அதனால் அடுத்த தலைமுறை விமானங்களுக்கு தேவையான இலத்திரனியல் போர்முறைமைகள உருவாக்குவதில் பிரித்தானியா உலகில் முன்னணியில் உள்ளது. Tempest எனப்படும் பிரித்தானியாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியில் இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. மேலும் சில நட்பு நாடுகளை இந்த உற்பத்தியில் இணைத்தால் உற்பத்திச் செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் எப்பாகத்திலும் தாக்கக் கூடிய B-21 Raider


அமெரிக்கா 2022-ம் ஆண்டு களமிறக்கும் B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி எந்த எதிரியின் ரடார்களுக்கும் புலப்படாமல் உலகின் எந்தப் பாகத்திலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. திடீர்த்தாக்குதலாளி என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த வகை விமானங்கள் ஆறாம் தலைமுறையை சார்ந்தவை. Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்தன்மை, சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.

இரசியாவின் ஐந்தாம்/ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள்

இரசியாவின் எஸ்-யூ-35 அதன் முதலாவது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகும். அதைத் தொடர்ந்து எஸ்-யூ-57 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை இரசியா உருவாக்கியது. நிதிப் பற்றாக்குறையால் அதிக அளவு எஸ்-யூ-57 உற்பத்தி செய்யப்படவில்லை என்கின்றனர் மேற்கு நாட்டு ஆய்வாளர்கள். ஆனால் இரசியா தனது ஆறாம் தலைமுறைப் போர்விமானமான மிக்-41 போர்விமான ங்களை உற்பத்தி செய்யும் முயற்ச்சியில் இறங்கிவிட்டது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் 1. முழுமையான புலப்படாத் தன்மை. 2. மிகச்சிறந்த இலத்திரனியல் செயற்பாடு. 3. இணையவெளிப் போர் முறைமை, 4. லேசர் படைக்கலன்கள் 5. செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

சீனாவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

விமான இயந்திர உற்பத்தி துறையில் பிந்தங்கியிருக்கும் சீனா உருவாக்கிய J-20 மற்றும் J-31 போர்விமானங்கள் முறையே அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர்விமானங்களின் தொழிநுட்பங்களை சீனா இணையவெளி வழியே திருடி உருவாக்கப் பட்டவை என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்க்ப்படுகின்றன. அவற்றை சீன கடுமையாக மறுத்தாலும் அந்த சீனப் போர் விமானங்கள் இன்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் அல்ல என பல போரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். சீனா இப்போது இரசிய விஞ்ஞானிகளின் உதவியுடன் தனது ஆறம் தலைமுறைப் போர்விமான உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.

களமிறங்கும் துருக்கி

இதுவரை உள்நாட்டில் பெரியா போர்விமானத்தை உற்பத்தி செய்யாத துருக்கியும் ஆறாம் தலைமுறைப் போர் விமான உற்பத்தியில் இறங்கியுள்ளது. ஆரம்பத்தில் துருக்கியின் ஆறாம் தலைமுறைப் போர் விமானத்திற்கு பிரித்தானியாவின் BAE நிறுவனம் இயந்திரம் வழங்குவதாக இருந்தது. அதன் உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என BAE அறிவித்ததால் துருக்கி உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. துருக்கியின் ஆளில்லாப் போர் விமானங்கள் 2020-ம் ஆண்டு நடந்த ஆர்மீனிய-அஜர்பைஜான் போரில் சிறப்பாக செயற்பட்டு பல இரசிய தயாரிப்பு தாங்கிகளை அழித்தபடியால் துருக்கிக்கு உள்நாட்டு உற்பத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால் ஆளில்லா போர்விமான இயந்திர உற்பத்திக்கும் முழுமையான புலப்படாத் தன்மை கொண்டா ஆறாம் தலைமுறை போர்விமான இயந்திர உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி மிகப் பாரியது.

ஒரு படி மேலே செல்லும் அமெரிக்கா தொடரும் சினா

நாம் இதுவரை பார்த்தவை வான்வெளியில் செயற்படும் விமானங்கள். அமெரிகாவின் X-37B எனப்படுவது விண்வெளியில் பூமியை சுற்றிப்பறக்க வல்லது. அமெரிக்கா உருவாக்கிய இந்த விமானம் இதுவரை இரகசியமான நான்கு மிக நீண்ட தூரப்பறப்புக்களை இனம்தெரியாத படைக்கலன்களுடன் மேற்கொண்டுள்ளது. இரசியப் படைத்துறை நிபுணர்கள் அவை அணுக்குண்டுகளை தாங்கிச் சென்றன என்கின்றார்கள். இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ முறியடிக்க இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டிருக்கலாம். 2019இல் அமெரிக்கா தனது தரைப்படை, கடற்படை, கடல்சார்படை, வான்படை என்பவற்றிற்கு மேலாக விண்வெளிப்படை ஒன்றை உருவாக்கியிருந்தது. X-37B விமானம் ஒரு மீளப்பாவிக்கக் கூடிய விண்வெளி ஓடமாகும் (Space Shuttle). இது சூரியவலுவில் இயங்கக் கூடியது. இது உலங்கு வானூர்தி போல ஓடுபாதையில் ஓடாமல் செங்குத்தாக மேல் எழும்பக்கூடியது. தரையிறங்கும் போது மட்டும் அதற்கு ஓடுபாதை தேவை. சீனாவும் அமெரிக்காவின் X-37B விண்வெளி ஓடம் போன்றை ஒன்றை உருவாக்கி பரீட்சித்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை இணையவெளி ஊடுருவல் மூலம் சீனா திருடியதாக அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால வான் போரில் புலப்படாத்தன்மை, இணையவெளித்தாக்குதல், லேசர் படைக்கலன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

 


இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...