Followers

Monday 26 October 2020

விமானம் தாங்கி கப்பல் போட்டியில் இந்தியா

கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளின் பாதுகாப்பிற்கு வலிமையான கடற்படை அவசியம். கடலோர வளங்களையும் கரையில் இருந்து 200 கிலோ மீட்டர் தூர கடற்பொருளாதார வளத்தையும் பாதுகாப்பதற்கும் கடற்போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் கடற்படை அவசியமானதாகும். முன்பு பிரித்தானியாவும் தற்போது அமெரிக்காவும் தமது கடற்படை வலிமை மூலமாகவே தம் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தின. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அதன் பொருளாதார வலிமையும் கடற்படை வலிமையுமே தூக்கி நிறுத்தின.

சீனாவினதும் அமெரிக்காவினதும் விமானம் தாங்கிக் கப்பல்கள்

சீனாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. முதலாவது இரசியாவிடமிருந்து வாங்கிய லியோனிங். மற்றது சீனாவே உருவாக்கிய ஷாண்டோங். சீனா மேலும் இரண்டு புதிய விமானம் தாங்கிக் கப்பல்களை சீனா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அவை அறுபதாயிரம் தொன் எடையுள்ள நடுத்தர அளவு விமானம் தாங்கிக் கப்பல்களாகும். சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 2023இல் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்காவின் பதினொரு விமானம் தாங்கிக் கப்பல்களும் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). விமானம் தாங்கிக் கப்பல்களின் தரவரிசை அவற்றின் எடை, தங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, அவற்றில் இருந்து விமானங்கள் கிளம்பிச் செல்லும் முறைமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். விமானம் தாங்கிக் கப்பல்களில் மிகச் சிறந்தவை மீக-விமானம் தாங்கிக் கப்பல்களாகும் (Super-Carriers). அவை:

1. ஒரு இலட்சம் தொன் அல்லது அறுபத்தி நான்காயிரம் மெட்ரிக் தொன் எடையுள்ளவை

2. தொண்ணூறு விமானங்களைக் கொண்டிருக்கும்.

3. மின்காந்த தொழில்நுட்பம் மூலம் குறைந்த அளவு தூரம் பறந்து விமானங்கள் வானில் பறக்கும்.

அமெரிக்காவின் மீக-விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் இரண்டு விமானங்கள் பறந்து செல்லக் கூடியவை.

பின் தங்கிய சீனா

சீனா தனது விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு இரசியாவின் எஸ்யூ-33 போர்விமானங்களை வாங்க முயற்ச்சித்த போது இரசியா அவற்றை விற்பனை செய்ய மறுத்து விட்டது. பின்னர் சீனா உக்ரேனிடமிருந்து அரைகுறையாக வடிவமைக்கப் பட்ட எஸ்யூ-33 விமானங்களை வாங்கி Reverse Engineering மூலம் உருவாக்கிய விமானங்கள் சரியாக வேலை செய்யவில்லை. Reverse Engineering மூலம் இயந்திரஙக்ளை உருவாக்குவது மிக மிக கடினமானது என்ற படியால் சீனாவால் சிறந்த போர் விமானங்களை உருவாக்க முடியவில்லை. அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனல் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியாவின் பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.



இந்தியவினதும் சீனாவினதும் கரையோரங்கள்

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. தென் சீனக் கடலின் தொண்ணூறு விழுக்காடு தன்னுடையது என உரிமை கொண்டாடும் சீனா பல நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொள்கின்றது.

மலபார் போர்ப்பயிற்ச்சி

இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பில் மலபார் போர்ப்பயிற்ச்சி முக்கிய பங்கு வகிக்கும். 1992இல் இருந்து அமெரிக்கா, இந்தியா, இணைந்து செய்து வந்த இப்போர்ப்பயிற்ச்சியில் 2015இல் ஜப்பான் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே இப்போர்ப்பயிற்ச்சியை சீனா ஐயத்துடனும் சினத்துடனும் பார்த்தது வருகின்றது. மலபார் போர்ப்பயிற்ச்சியில் இனி ஒஸ்ரேலியாவும் இணைந்து கொள்ளவிருக்கின்றது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து குவாட் என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவக்கி வருகின்றன. இது ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் என்பதை மலபார் போர்ப்பயிற்ச்சியில் ஒஸ்ரேலியாவும் இணைந்தமை எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிரான போர் ஏற்படும் போது இந்த மூன்று நாடுகளும் இந்தியாவிற்கு உதவக் கூடிய வகையில் ஒப்பந்தம் செய்தல் அவசியமானதாகின்றது.

அமெரிக்க தளங்களைப் பாவிக்கக் கூடியக இந்தியா

2016—ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் செய்து கொண்ட செயலாதார பரிமாற்ற ஒந்தக் குறிப்பணை(Logistics Exchange Memorandum of Agreement) இந்தியாவிற்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள அமெரிக்க படைத்தளங்களை பாவிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவின் கடற் போக்கு வரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவிற்கு வலிமை மிக்க கடற்படை தேவை. இந்தியாவின் இரண்டாவது வி/தா கப்பல் முப்பதினாயிரம் எடையுள்ள சிறிய வகை வி/தா கப்பலாகும்.. இந்தியா இரசியாவிடமிருந்து 2013இல் வாங்கி மேம்படுத்திய வி/தா கப்பலான விக்கிரமாதித்தியா 44,500 தொன் எடையுள்ளது. அமெரிக்காவிடமிருந்து மின் காந்தம் மூலம் விமானங்களை கப்பல்களில் இருந்து பறக்கவைக்கும் தொழில் நுட்பத்தை வாங்கும் அனுமதிய இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனா அத்தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல்

சீனா விரைவில் நான்கு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்ட ஒரு நாடாக உருவெடுப்பதால் இந்தியாவிற்கு மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் அவசியமானதாகின்றது. ஒரு விமானம் தாங்கிக் கப்பல் பராமரிப்பிற்காக மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். சீனா தனது நான்கு விமானம் தாங்கிக் கப்பல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக நகர்த்த முடியாது என்றாலும் இந்தியா அரபிக்கடல், இந்து மாக்கடல், வங்கக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க மூன்றாம் விமானம் தாங்கிக் கப்பல் அவசியமாகின்றது. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சீனாவினுடையவற்றிலும் பார்க்க சிறியதாகும். இந்தியக் கடற்படையினரும் மூன்றாவது கப்பலுக்கு நீண்ட காலமாக வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். விமானம் தாங்கிக் கப்பல் என்பது ஒற்றைக் கப்பல் அல்ல. அதற்கு என்று பல பரிவாரக் கப்பல்கள் அவசியம். ஒரு விமானம் தாங்கிக் கப்பலைச் சுற்றிவர நாசகாரிக் கப்பல்கள், நீர்மூழிகிக்கப்பல்கள், கரையோரக் கப்பல்கள் என்பன எப்போதும் இருக்க வேண்டும்.

சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை அழிப்பதற்கு என்று பலவகையான  ஏவுகணைகளையும் நீர்மூழ்கிக்கப்பல்களையும் தானுந்தி நீரடி ஏவுகணைகளையும் (Torpedoes) உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் இருந்து தனது விமானம் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான இடைமறிப்பு ஏவுகணைகளை இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற வேண்டியதும் அவசியமானதாகின்றது. அத்துடன் இரு நாடுகளும் இதில் இணைந்து பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கவும் வேண்டும்.

Friday 23 October 2020

குவாட்டில் (QUAD) இலங்கை இணையுமா?


குவாட் என்னும் பெயரில் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. ஒன்று குவாட் குழு. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவற்றைக் கொண்ட வர்த்தகக் கூட்டமைப்பு. மற்றது குவாட் பாதுகாப்பு உரையாடல் என்னும் பெயர் கொண்டது. இது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஒஸ்ரெலியா ஆகைய நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா கேந்திரோபாய அமையம் ஆகும். இதை ஆங்கிலத்தில் Quadrilateral Security Dialogue என்றும் சுருக்கமாக QUAD என்றும் அழைப்பர். 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைய விரும்புவதால் அதை QUAD+ எனவும் அழைக்கின்றனர். இது சீனாவை அடக்க உருவாகவிருக்கும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பின் முன்னோடி. சீனாவின் நடுத்தர காலக் கொள்கை ஆசியாவில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கமும் உலக அரங்கில் அமெரிக்காவினதும் சீனாவினதும் இருதுருவ ஆதிக்கமும் எனவும் நீண்ட காலக் கொள்கை உலகில் சீனாவின் ஒரு துருவ ஆதிக்கம் எனவும் கருதப்படுகின்றது. இதைத் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை நெருங்கிச் சென்ற இரசியா தனது நெருக்கத்தை நிறுத்தி சீனாவிற்கான தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் நிறுத்தியுள்ளது.

இலங்கை உலக அரங்கில் பகிரங்க கொள்கை ஒன்றையும் திரைமறைவுக் கொள்கை ஒன்றையும் வைத்திருக்கின்றது. தன்னுடைய திருவோட்டை நிரப்புவதற்கு ஏற்ப அவ்வப்போது தன் கொள்கையை திரித்துக் கொள்ளும். இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுடைய அரசுறவியலாளர்கள் கொழும்பு சென்றால் அவருக்கு பதின்ம வயதுப் பெண்கள் (சிலருக்கு ஆண்கள்) உட்பட பரிமாறி அவர்களை நன்கு விருந்தோம்பும். இதையறியாமல் சில தமிழ் அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இலங்கை சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை வைத்திருக்கின்றது மற்ற உலக நாடுகளை தனது அறிஞர்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கையாள்கின்றது எனப் பிதற்றுவார்கள்.

சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சீனாவை தங்களது எல்லாச்சூழலிலும் உதவும் நண்பனாகப் பார்க்கின்றனர். இந்திய இந்துக்களை இந்தியாவில் பௌத்த மதத்தை ஒழித்துக் கட்டியவர்களாவே பார்க்கின்றனர். தாராண்மைவாதம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் இலங்கையில் பராமரிக்கப் பட்டு வந்தது. ரணிலின் தில்லுமுல்லுக்களால் அது இலங்கையில் இப்போது படுதோல்வியடைந்துள்ளது. உலக அரங்கிலேயே ஓரம் கட்டப்பட்ட தாராண்மைவாதம் இனி ஒரு புதிய வடிவத்தில் வரமுயற்ச்சிக்கலாம். இந்தியா சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு தன்மீது இருக்கும் பகைமையை நீக்க கடந்த சில ஆண்டுகளாக பெரு முயற்ச்சி செய்கின்றது. அது இன்னும் வெற்றியளிக்க வில்லை. இந்தியாவை ஏமாற்றும் கலையில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் விற்பன்னர்களாக இருக்கின்றார்கள். சிங்கள பொதுவுடமைவாத தீவிரவாதிகளையும் தமிழ்பிரிவினைவாதிகளையும் அழிப்பதில் இந்தியா கூலி வாங்காத கூலிப்படையாக இலங்கைக்காக செயற்பட்டது. இலங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா அதைச் செய்யவில்லை தனது பிராந்திய நனலைக் கொண்டே செய்தது என்பதை சிங்கள பௌத்த பேரினவாதிகள் நன்கறிவர்.

சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவானது போல் இந்த நூற்றாண்டில் ஆசியாவில் இரு படைத்துறைக் கூட்டமைப்புக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் சீனாவும் வட கொரியாவும் கம்போடியாவும் இருக்கும். மற்றதில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து, வியட்னாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகியவை உட்பட மேலும் ஒரு சில நாடுகள் இருக்கும். சுவீடன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் இல்லாமல் இருந்தன. அது போல் ஆசியாவிலும் பல நாடுகள் இருக்க முடியும். தற்போதைய சூழலில் பிலிப்பைன்ஸ் என்ன செய்யும் என சொல்ல முடியாமல் இருக்கின்றது. ஆனால் அங்கு உள்ள அமெரிக்கப் படைத்தளம் தற்போதைக்கு அகற்றப்பட மாட்டாது. அமெரிக்கா தலைமையிலான சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பு தற்போது குவாட் என அழைக்கப்பட்டாலும் அது வேறு பெயரைப் பெறும். குவாட் என்பது நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு பேச்சு வார்த்தை அமைப்பு மட்டுமே.

இலங்கை எந்தக் கூட்டமைப்பில் சேரும் எனற கேள்விக்கான விடை அது எதிலும் சேராது ஆனால் சீனாவுக்கு எதிராக எந்த ஒரு நகர்வையும் செய்ய மாட்டாது. எந்தச் சூழலிலும் இலங்கைக்கு ஆதரவாக ஐநா பொதுச் சபையில் இலங்கைக்காக இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும் ஒரு நாட்டின் நட்பு இலங்கைக்கு அவசியம். பொதுநலவாய நாடுகள், ஐநா துணை அமைப்புக்கள் போன்றவற்றில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். இலங்கை சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் சீனா இலங்கையில் உள்ள பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பயன்படுத்தி தனக்கு ஏதுவான ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை பாயும். சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி அது சிங்கப்பூருக்கு செய்யும் ஏற்றுமதியிலும் பார்க்க குறைவானது. இலங்கை சீனா தலைமையிலான படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்க்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி அதன் மொத்த ஏற்றுமதியில் 75%இலும் அதிகமானதாகும். அந்த நாடுகள் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். ஆகையால் இலங்கை எந்த ஒரு படைத்துறைக் கூட்டமைப்பிலும் சேரமாட்டாது.

சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் போட்டியில் இலங்கை சீனா பக்கம் நிற்கும். அப்போது அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கும். எமக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும். சர்வதேசம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியா எனது நண்பன் என்பவையெல்லாம் மனப்பால் மட்டுமே.

இலங்கையும் அமெர்க்காவும் Status of Forces Agreement (SOFA) செய்தாலும் ஆதற்கு இணையான வசதிகளை இலங்கை சீனாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.


Sunday 18 October 2020

பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஒளிரும் இரசியா

 


இரசிய நடுவண் வங்கி ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலையின்கீழ் 2021இன் ஆரம்பத்தில் இருந்து 2023இறுதி வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் மசகு ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை இருபத்தைந்து டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. கொவிட்-19 தொற்று நோயின் மோசமான இரண்டாவது அலைத்தாக்குதல், புவிசார் அரசியல் குழப்பங்கள், முன்னணி நாடுகளிடையேயான வர்த்தகப் போர், நாடுகளின் கடன் பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இரசிய நடுவண் வங்கி தனது எதிர்வு கூறலைச் செய்துள்ளது. 

பொருளாதார வளரச்சி

மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளாலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல சவால்களை இரசியப் பொருளாதாரம் எதிர் கொண்ட போதும் பல மேற்கத்தைய பொருளியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரசியப் பொருளாதாரம் உறுதியாக இருக்கின்றது. இரசிய நிதியமைச்சர் இரசியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தி 2020இல் 4விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் எனத் தெரித்தார். பன்னாட்டு நாணய நிதியமும் இரசியப் பொருளாதாரம் 2020இல் 4.1விழுக்காட்டால் சுருங்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை 2021இல் 2.8விழுக்காட்டால் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அது 2019இல் 4.5 விழுக்காடாக இருந்த இரசியாவின் பணவீக்கம் 2020இல் 3.7 விழுக்காடாகத் தணியும் எனவும் கருதுகின்றது. 2020 ஜூலையில் உலக வங்கி இரசியாவின் பொருளாதாரம் 6விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறிய போது இரசிய நடுவண் வங்கி தனது வட்டி வீதத்தை 4.25 விழுக்காடாகக் குறைந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது மிகக்குறைந்த வட்டி விழுக்காடாகும். அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் இரசியப் பொருளாதர வளர்ச்சி எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டது.

 

 

மசகு எண்ணெயின் விலை பீப்பா ஒன்றிற்கு முப்பது டொலராகக் குறைந்தாலும் இரசியாவின் பொருளாதாரம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு இரசிய அரச நிதியத்திடம் நிதி இருக்கின்றது அதற்கு முன்னர் இரசிய அரசு அறிவித்திருந்தது. 2020 ஒக்டோபர் 14-ம் திகதி உலகச் சந்தையில் எரிபொருள் விலை 42 டொலராக இருந்தது.

அரச நிதி

2020 ஜனவரியில் இரசிய அதிபர் புட்டீன் இரசிய உட்கட்டுமானங்களிலும் சமூகத் திட்டங்களிலும் நான்கு ரில்லியன் ரூபிள்களைச் செலவு செய்வதாக உறுதியளித்திருந்தார். இரசியப் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அரச நிதியை சமாளிக்க அடிப்படை வருமான வரியை 2021இல் 13விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்க இரசிய அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இரசிய அரச வருமானம் அறுபது பில்லியன் ரூபிளால் அதிகரிக்கும். இரசியாவின் வருமானவரி விதிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பிடுங்கி வறிய மக்களுக்கு உதவிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இரசிய அரசின் நிதிப்பற்றாககுறை 2020இல் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.1விழுக்காடாகவும் 2021இல் 2.4 விழுக்காடாகவும் 2022இல் ஒரு விழுக்காடாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசியாவில் முதலீடுகள்

ஐநாவின் அங்ராட்டின் அறிக்கையின் படி 2019-ம் ஆண்டு இரசியாவில் வெளிநாட்டு முதலிடு 31.7பில்லியன் டொலர்களாகும். இது 2018இன் 13பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வளர்ச்சியாகும். ஐக்கிய இராச்சியம்சைப்பிரஸ்லக்சம்பேர்க்நெதர்லாந்துபஹாமாஸ்அயர்லாந்துபெர்மூடா ஆகிய நாடுகள் இரசியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இரசியாவின் கனிம வளம் மற்றும் இணையவெளி போன்றவற்றில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படுகின்றன. இரசியாவின் ஆர்க்டிக் எரிபொருள் ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் விதித்துள்ளன. இரசிய அரச நிதியமும்இரசிய நேரடி முதலீட்டு நிதியமும் ஐக்கிய அமீரகத்தின் நிதியம் ஒன்றுடன் இணைந்து முகங்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. சீன இந்தத்த் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது.

பிராந்தியப் பிரச்சனைகள்

இரசிய அரசு பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெலரஸில் தேர்தலை எதிர்த்து மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்கின்றனர்அஜர்பைஜானும் ஆர்மேனியாவும் மோதிக் கொள்கின்றனகஜகஸ்த்தானில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இரசியா முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான பெலரஸ்கஜ்கஸ்த்தான்ஆர்மேனியாஅஜர்பைஜான்கிரிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதரக் கூட்டமைப்பு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போட்டியாக உருவாக்கியுள்ளது. 180மில்லியன் மக்களைக் கொண்ட அந்த பொருளாதாரக் கூட்டமைப்பு மிகப் பெரிய நாடாகிய இரசியாவுடன் பல மிகச் சிறிய நாடுகளை இணைக்க முயல்கின்றது. இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் என்பது மட்டுமல்ல முதலாம் உலகப் போரிற்கு முன்னர் துருக்கியால் ஆளப்பட்ட நாடுகள். இந்த நாடுகளில் துருக்கியும் தன் ஆதிக்கத்தை செலுத்த முயல்கின்றது. துருக்கியினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் தற்போது மாறியுள்ளன.

இரசியாவின் படைக்கல ஏற்றுமதி

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா இருக்கின்றது. 2019-ம் ஆண்டு இரசியா 13பில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது 2018இலும் பார்க்க இரண்டு பில்லியன் டொலர் அதிகமாகும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி பல சவால்களைச் சந்திக்கின்றது. சீனா தனது உள்நாட்டு படைக்கல உற்பத்தியை அதிகரிக்கின்றது. இந்தியாவும் அதையே செய்வதுடன் அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்குகின்றது. கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகில் பல நாடுகள் சிக்கன் நடவடிக்களை 2021-ம் ஆண்டு மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். சிக்கன நடவடிக்கை என வரும் போது பல நாடுகள் தமது படைக்கலன் கொள்வனவை குறைக்கும். இது இரசிய படைக்கலன் ஏற்றுமதியையும் பாதிக்கும்.

இரசியாவின் அரச நிதியம் 2020இன் ஆரம்பத்தில் 124பில்லியன் டொலர்களாக இருந்தது. கொவிட்-19 தொற்று நோயல் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க செய்த செலவால் 2020இன் இறுதியில் அது 95பில்லியன்களாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டில் இருந்து அது அதிகரிக்கத் தொடங்கலாம். ஆகையால் இரசியா தனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளும்.வ்

Tuesday 13 October 2020

அமெரிக்கா சீனா இடையிலாதைவான் போர்-2021


2016-ம் ஆண்டு தைவான் சுதந்திரமான நாடு என்ற கொள்கையுடைய சாய் இங் வென் அதன் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து சீனா தைவானை தனது ஒரு மாகாணம் என வலியுறுத்துவது அதிகரித்தது. 2019 ஜனவரியில் அமைதியான வழியில் அல்லது அது முடியாதவிடத்து ஒரு போர் மூலமாகாவேனும் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் சூளுரைத்தார். அதன் பின்னர் தைவான் வான்பரப்புக்கு சீன விமானங்களும் அதன் கடற்பரப்பினுள் சீனப் போர்க்கப்பல்களும் அத்து மீறுவது அடிக்கடி நடக்கின்றது. 2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது.



தைவானின் முக்கியத்துவம்

சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்தே ஆக வேண்டும். 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும். 2021-ம் ஆண்டு சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சி செய்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.


சீனத் தாக்குதல்கள்

சீனா தைவானைக் கைப்பற்ற முன்னர் நான்கு பெரும் தாக்குதல்களைச் செய்ய வேண்டும். முதலாவது அமெரிக்க செய்மதிகளை ஏவுகணைகள் மூலம் அழிப்பதுடன் இணையவெளித் தாக்குதல் மூலம் அமெரிக்கப்படையினரின் தொடர்பாடல்களை நிர்மூலம் செய்ய வேண்டும். இரண்டாவது சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சீனப் பொருளாதாரதரத்தின் இதயமான கைத்தொழிற்பேட்டைகளை இலக்கு வைத்து தைவான் தனது மண்ணில் நிறுத்தி வைத்துள்ள ஏவுகணை நிலைகளை அழிக்க வேண்டும். மூன்றாவது அமெரிக்கா பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், ஜப்பான் கடல் ஆகியவற்றில் சீனாவை இலக்காகக் கொண்டு வைத்துள்ள பல படைத்தளங்களை அழிக்க வேண்டும். நான்காவதாக தைவான் நீரிணையில் உள்ள அமெரிக்க கடற்படையை அழிக்க வேண்டும். இறுதி நகர்வாக சீனா பெருமளவு படையினரை தனது கடற்கலன்கள் மூலம் 161கிமீ நீளமான தைவான் நீரிணையைக் கடந்து தைவானில் தரையிறக்கி தைவானைக் கைப்பற்ற வேண்டும்.

அமெரிக்காவின் இரண்டு தீவுச் சங்கிலிகள்.


யொக்கோசுக்கா, ஒக்கினோவா ஆகிய ஜப்பானியத் தீவுகள், தென் கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் தீவுகள் ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. ஜப்பானியத் தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவுக் கூட்டம், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மீது சீன கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் ஆனால் முற்றாக அழிக்க முடியாது. சீனாவிற்கு சீனாவைச் சுற்றியே ஒரு நுழைவுமறுப்பு/இடமறுப்பு (Anti-access/Area denial) தடையைப் போடவே இந்த இரண்டு சங்கிலிகளையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் முதற்கட்ட தாக்குதல்

அமெரிக்காவைப் பொறுத்தவரை போர் இரண்டு கட்டங்களாக இருக்கும். முதற்கட்டத்தில் அமெரிக்க கடற்படையும் வான் படையும் சீனாமீது பதில் தாக்குதல் செய்யும் போது நடக்கும் போரில் சீனாவின் கடற்படை முற்றாக அழிக்கப்படும். ஒரு போர் என்று வரும்போது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் ஒரு மணித்தியாலம் கூட நின்று பிடிக்காது என்பது நிபுணர்களின் கணிப்பு. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மீது சீனா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசும். போரில் அமெரிக்கா ஈடுபடுத்தும் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களில் இரண்டை சீனா அழித்துவிடும் முன்றாவது சேதங்களுடன் விலகிச் செல்லும். சீனாவின் ஏவுகணைத் தளங்களை இந்த மோதலின் போது அமெரிக்கா இனம் கண்டு கொள்ளும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் சீனாவை நோக்கிப் பாயும் அவற்றில் பல சீனாவின் ரடார்களுக்கு பெரிய விமாங்களைப் போல் தோற்றமளித்து ஏமாற்றக் கூடியவை. ஆளில்லாப் போர்விமானங்கள் மீது சீன செய்யும் தாக்குதல்களை வைத்து அவற்றைத் தொடர்ந்து வரும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் சீனாவின் வான் பாதுகாப்பு முறைமையை முற்றாக அழித்து விடும். அதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ், குவாம் தீவு, ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் உள்ள அமெரிக்கப் படைக்கலங்கள் பெரும் அழிவைச் சந்தித்திருக்கும். அமெரிக்காவின் ஹவாய் தீவு மற்றும் மேற்குக்கரை ஆகியவற்றிலும் சீனா தாக்குதல் செய்திருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்காவில் குடிசார் சேவைகள் பல சீனாவின் இணையவெளித்தாக்குதலால் செயலிழந்து இருக்கும். உலகெங்கும் உள்ள பல அமெரிக்கப் படைத்தளங்களில் சீனாவின் தொலைதூர ஏவுகணைகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். அமெரிக்கப் பொருளாதார உற்பத்தி நிலைகள் பல செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்கா பெரிய இழப்பைச் சந்தித்து சீனாவின் தாக்குதல் திறனை அழிக்கும். அமெரிக்கப் படைகள் உலகப் பந்து எங்கும் பரந்து இருப்பதால் எல்லாவற்றையும் சீனாவால் அழிக்க முடியாது. சீனாவின் படைத்தளங்கள் யாவும் உலகப் பந்தைப் பொறுத்தவரை சிறு பகுதியில் மட்டுமே இருக்கின்றது.



மறைந்திருந்து வரும் F-35B

பொதுவாக விமானப் படைத்தளங்கள் பெரிய ஓடுபாதைகளுடன் இருக்கும் அவற்றை இனம் காண்பது எதிரிகளுக்கு இலகுவானதாக அமையும். ஆனால் அமெரிக்காவின் F-35B போர் விமானங்கள் குறுகிய தூரம் மட்டும் தரையில் ஓடி வானில் கிளம்ப வல்லன. அத்துடன் தரை இறங்கும் போது உலங்கு வானூர்தி போல் செங்குத்தாக இறங்க வல்லன அவற்றை அகலமான தெருவில் இருந்து வானில் பறக்க வைக்க முடியும். அதனால் விமானத் தளங்களில் இல்லாமல் வேறு மறைவிடங்களில் வைத்திருக்க முடியும். சீனாவைச் சுற்றவர உள்ள அமெரிக்கப் படை நிலைகளில் உள்ள பல போர் விமானங்கள் சீனத் தாக்குதலில் இருந்து தப்பி சீனாவை தாக்கச் செல்லும் போது அவற்றை சீனாவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும். அவற்றின் குண்டு வீச்சுக்களால் எஞ்சியுள்ள சீன படை நிலைகள் அழிக்கப்படும். F-35B போர் விமானங்களைச் தைவானிற்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலிமை அடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே தைவான் அவற்றை வாங்க விரும்பியது. ஆனால் சீனாவை அது கடும் சினப்படுத்தும் என்பதால் அது தவர்க்கப்பட்டது. அமெரிக்க சீன முரண்பாடு மோசமடையும் போது அது நடக்கலாம்.

அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தாக்குதல்

ஜப்பானியத் தீவுகளை சீனா தாக்குதல் செய்தபடியால் ஜப்பான் ஒரு தாக்குதல் போரை சீனாவிற்கு எதிராக செய்யக் களமிறங்கும். அதே போலவே தென் கொரியாவும் களமிறங்கும். ஒஸ்ரேலியா அமெரிக்காவிற்கு துணை நிற்கும். பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றை சீனாவிற்கு எதிராக களமிறக்கும். இந்தியா சீன எல்லைகளை நோக்கி படைகளை நகர்த்துவதன் மூலம் சீனாவின் கவனத்தை ஐதாக்கும். இந்திய விமானத் தளங்களில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களில் இருந்து பெருமளவு போர் விமானங்கள் வந்து இறங்கும். கொல்கத்தா துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படை நிலை கொள்ளும். தென் சீனக் கடலில் சீனா நிர்மானித்த செயற்கைத் தீவுகளை ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து குண்டுகள் வீசி அழிக்கும். சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி முற்றாகத் தடைபடும். பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகம் அமெரிக்க முற்றுகைக்கு உள்ளாகும். இரண்டாம் கட்டப் போர் சீனாவைத் திக்கு முக்காடச் செய்யும் படைநகர்வுகள் அதிகம் நடக்கும் தாக்குதல் நடக்காது. சீன மண்ணில் எந்த ஓர் அந்நியப் படையும் கால் வைக்க முடியாது. சீனா மீதான தாக்குதலைத் மேலும் தொடர்ந்தால் சீனா அணுக்குண்டைப் பாவிப்பேன் என மிரட்டும். அந்த நிலையில் போர் நிறுத்தப்படும்.

இரசியாவும் மற்ற நாடுகளும்

அமெரிக்க சீனப் போரின் ஆரம்பத்தில் இருந்தே இரசியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தும். சீனாவிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கும். ஆனால் போரில் இறங்காது. சீனாவிற்கான படைக்கலன் விற்பனையையும் இரகசியமாகவே மேற்கொள்ளூம். சீன மக்களுக்குத் தேவையான அதிதியாவசியத் தேவைகளை இரசியா தரைப்பாதையூடாக பகிரங்கமாக வழங்கும். இந்த சூழலை இரசியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்கலாம். வட கொரியா சீனாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கும் ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் செய்யாது. வியட்னாம் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும். வியட்னாம் சீன எல்லையில் தனது படைகளை நகர்த்தி சீனாமீதான அழுத்தத்தை அதிகரிக்கும். திபெத்தில் ஒரு மக்கள் எழுச்சியும் நடக்கும். இந்தியாவில் உள்ள திபெத்தியப் போராளிகள் சீனப் படைகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். நிலைமை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமைந்தால் இந்தியா சீனா கைப்பற்றிய தனது நிலங்களை மீட்கும் நகர்வுகளை மேற்கொள்ளும். தைவான் தன்னிடம் எஞ்சியுள்ள ஏவுகணைகளை சீனாவின் பொருளாதார நிலைகள் மீது ஏவும்.

அமெரிக்கா தைவானை அங்கீகரிக்கும் நிலையை நோக்கி நகர்கின்றது. 2020 ஒக்டோபர் ஆரம்பதில் அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் ஐம்பது பேர் அமெரிக்கா தைவானுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அமெரிக்கவிலும் தைவானிலும் அமெரிக்கா தைவானில் படைத்தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. சீனா தைவானைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகரும் போது தைவானை அமெரிக்கா ஒரு தனிநாடாக அங்கீகரித்து அங்கு தனது படைத்தளத்தை அமைக்க வேண்டி வரும்.

2021-ம் ஆண்டு தைவானைக் கைப்பற்றக் கூடிய அளவு வலிமை சீனாவிடம் இருக்காது. அமெரிக்காவை போர் தவிர்ந்த வேறு அரசுறவியல் நடவடிக்கைகள் மூலம் இரண்டு சங்கிலித் தீவுக் கூட்டங்களில் குறைந்தது அரைப் பங்கு தீவுகளில் இருந்தாவது அமெரிக்காவை வெளியேற்றி அங்கு சீனா படைத்தளங்கள் அமைத்த பின்னரே சீனாவால் தைவானைக் கைப்பற்றுவது பற்றி யோசிக்கலாம்.

Sunday 11 October 2020

தன் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராத வட கொரிய அதிபர்

 


வட கொரியாவின் பொதுவுடமைவாதத்தை கொள்கையாகக் கொண்ட தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழா 10/10/2020 சனிக்கிழமை பாரிய படை அணிவகுப்புடனும் பலவித படைக்கலன் காட்சிப்படுத்தலுடனும் கிம் இல் சங் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. 2017-ம் ஆண்டின் பின்னர் ஒரு படை அணிவகுப்பு நடந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் மேடைக்கு வரும்போது வாணவேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. வட கொரிய மக்கள் அவர் நீடூழி வாழ்க என கண்ணீர் மல்க குரல் எழுப்புவதை தொலைக்காட்சிகள் காண்பித்தன. வழமைக்கு மாறாக இந்த முறை படை அணிவகுப்பு இரவில் நடந்தது.

மிரட்டல் இல்லாத உரை

தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவில் 25 நிமிட உரையாற்றிய கிம் ஜொங் உன் தனது உரையில் அமெரிக்காவைப் பற்றியோ அதன் அதிபர் டிரம்பைப் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை என்பதுடன் அவர் எந்த ஒரு மிரட்டலையும் விடுக்கவில்லை. உலகெங்கும் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு தன் ஆறுதலையும் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர் விரவில் குணமடைய வேண்டும் என கிம் ஜொங் உன் செய்தி அனுப்பியிருந்தார். வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது மக்களுக்காக பணிபுரிந்த படையினரை அதிபர் பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தனது நாட்டுப் படைக்கலன்கள் தற்பாதுகாப்பிற்காக மட்டுமே; நாம் எந்த ஒரு முற்கூட்டிய தாக்குதல்களையும் மேற்கொள்ள மாட்டோம்; ஆனால் எமது பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் போது எமது முழு வலுவையும் நாம் பாவிப்போம் என்றார்.



மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜொங் உன்

கொவிட்-19 தொற்று நோயால் சீன எல்லையை மூடியமை, சூறாவளி, வெள்ள பெருக்கு, பொருளாதாரத் தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரிய மக்களிடம் கிம் ஜொங் உன் மன்னிப்பு கேட்டார். கண்ணீரை அடக்கிக் கொள்ள அவர் அப்போது முயற்ச்சிப்பது போலிருந்தது. வட கொரியாவின் பொருளாதாரப் பிரச்சனைக்கு தான் காரணமல்ல வட கொரியாவின் எதிரிகள்தான் காரணம் என அவர் தனது மக்களுக்கு காட்ட முயன்றார் என சில விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



விம்பத்தை மாற்ற முயற்ச்சி

பொதுவாக வட கொரியா வெளிவிடும் காணொலிக் கீற்றுகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றை மறைமுகமாக உள்ளடக்கி இருக்கும். ஆனால் வட கொரியா அண்மையில் ஆங்கில மொழியில் வெளிவிட்ட காணொலிக் கீற்றி சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. வட கொரியாவின் மென்மையான பகுதியையும் செழிப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பன்னாட்டு அரங்கில் வட கொரியாவிற்கு இருக்கும் குளப்படிகாரன் என்ற விம்பத்தை மாற்றும் முயற்ச்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.



மிகப் பெரிய ஏவுகணை

75-ம் ஆண்டு விழாவில் எல்லாவற்றிற்கும் மேலாக கவனிக்கப்பட்டது அங்கு காட்சிப்படுத்தப் பட்ட உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை. 22சில்லுகள் கொண்ட ஒரு நீண்ட பார ஊர்தி அதைத் தாங்கிச் சென்றது. அது இதுவரை ஏவிப்பரிசோதிக்கப்படவில்லை. வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் (solid fuel) மூலம் இயங்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகளிலும் பார்க்க திண்ம எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைகள் துரிதமாக நகர்த்தப்படக் கூடியவை. வட கொரியா 2017-ம் ஆண்டு பரிசோதித்த Hwasong -14 என்னும் கண்ட விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை 13,000கிமீ (8100மைல்) தூரம் 150கிலோ(330இறாத்தல்) எடையுள்ள அணுக்குண்டைத் தாங்கிக் கொண்டு பாயக் கூடியது. அதனால் அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்க முடியும். தற்போது காட்சிப் படுத்தியது அதிலும் பெரிய தோற்றத்தைக் கொண்டது.

கருத்து வெளியிடாத தென் கொரியா

2020-10-10 சனிக்கிழமை வட கொரியா காட்சிப் படுத்திய ஏவுகணை பற்றி தென் கொரியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே வட கொரியா மேலும் வலிமையுள்ள ஏவுகணைகளை உருவாக்குவதாக தென் கொரியா தெரிவித்திருந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வட கொரியா தொடர்ந்து மேம்படுத்தப் பட்ட ஏவுகணைளை உருவாக்குவது ஏமாற்றமளிக்கின்றது என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தலை கருத்தில் கொண்டாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் வேளையில் ஏவுகணைப் பரிசோதனை எதையும் நடத்தி டொனால்ட் டிரம்பை சங்கடத்திற்க்கு உள்ளாக்கவோ ஆத்திரப்படுத்தவோ கிம் ஜொங் உன் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது.. ஒரே ஒரு கட்சியும் ஆளும் கட்சியுமான தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்வின் போதோ அல்லது அதற்கு ஓரிரு நாட்களின் முன்னதாகவோ பெரிய ஏவுகணைப்பரிசோதனையைச் செய்து உலகின் கவனத்தை கிம் ஜொங் உன் அவகளால் தன்பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதை வைத்து தன் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கக் கூடியவகையில் வட கொரியாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்பதை கிம் ஜொங் உன் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் வட கொரியா தனது ஏவுகணைகளை மேம்படுத்துவதைக் கைவிடாமல் இருக்கின்றது. பல அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் தொலைதூர ஏவுகணை தற்போது இருக்கும் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பத்தால் இடைமறிப்பதற்கு கடினமானதாகவிருக்கும். வட கொரியாவின் அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது.  அமெரிக்காவின் எந்தப் பாகத்திலும் அணுக்குண்டுகளை வீசக் கூடிய ஏவுகணைகள வைத்திருக்கும் வட கொரியா அமெரிக்காவை மிரட்டும் தன் முயற்ச்சியை மனம் தளராமல் தொடர்கின்றது.

Tuesday 6 October 2020

ஆர்மேனிய அஜர்பைஜானியப் போர்

 


2020-09-27-ம் திகதி ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் போர் ஆரம்பித்துள்ளது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதற்கான போர் இதுவாகும். இப்போர் இந்த இரு நாடுகளுக்கும் ஆதரவு கொடுக்கும் வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே முறுகலை உருவாக்கும். அதனால் இரு சிறிய நாடுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் என இப்போரை ஒதுக்கிவிட ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். ஆர்மேனியாவில் கிருத்தவர்களும் அஜர்பைஜானில் துருக்கிய மொழி பேரும் இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர் என்பதால் நிலைமை மேலும் சிக்கலாகின்றது.

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியின் வரலாறு

ஆர்மேனியா முன்பு ஈரானின் ஒரு பகுதியாக இருந்தது. ஈரானிடமிருந்து இரசியா அதைக் ச்கைப்பற்றி சோவியத் ஒன்றிய நாடாக்கியது. நகர்னோ கரபார்க் மலைப்பகுதி மக்களில் பெரும்பான்மையினர் ஆர்மேனியர்கள். இருந்தும் அது அஜர்பைஜானுடன் 1921-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் திகதி இரசியப் பொதுவுடமைக் கட்சி நகர்னோ கரபார்க் மலைப்பகுதி ஆர்மேனியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது. ஆனால் மறுநாள் ஜோசப் ஸ்டாலின் தலையிட்டு அது அஜர்பைஜானுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவை மாற்றினார். அப்பிராந்தியத்தின் 94விழுக்காடு மக்கள் தொகையினர் ஆர்மினியர்களாக இருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரை ஆர்மேனியர்கள் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இரு நாடுகளிடையே மோதலை தேவை ஏற்படும் போது உருவாக்கலாம் என்ற சதித்திட்டம் இருந்ததாக நம்பப்படுகின்றது. பின்பு தொடர்ச்சியான குடியேற்றத்தால் ஆர்மேனியர்களின் தொகை 76விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்து அஜர்பைஜான் தனிநாடாகிய போது நகர்னோ கரபார்க் மலைப்பகுதி அஜர்பைஜானின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதன் படியே ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற நாடுகளும் அஜர்பைஜானை அங்கீகரித்திருந்த படியால் இன்று வரை உலகச் சட்டத்தின் படி அஜர்பைஜானுக்கே அந்தப் பிராந்தியம் சொந்தமானதாகும்.

தனிநாட்டுப் பிரகடனமும் போரும்

நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் வாழும் ஆர்மேனியர்கள் தொடர்ச்சியாக அஜர்பைஜான் அரசால் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கப்பட்டும் கலாச்சார அடிப்படையில் அடக்கப்பட்டும் வந்த படியால் அவர்கள் ஆர்மேனியாவுடன் இணைய விரும்பினர். 1988இல் தமது பிரதேசத்தை தனி நாடாகப் பிரகடனம் செய்தனர். அஜர்பைஜானியப் படைகள் அங்கு தலையிட்டதைத் தொடர்ந்து ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் போர் மூண்டது. ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் 1988-1992வரை நடந்த போரில் ஆர்மேனியா நகர்னோ கரபார்க் மலைப்பகுதியையும் மேலும் நிலப்பரப்புக்களையும் ஆர்மேனியா கைப்பற்றியது. முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. 1994இல் இருந்து இரசியா தலையிட்டதால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆர்மேனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் நகர்னோ கரபார்க் மலைப்பகுதி தன்னாட்சி உள்ள பிரதேசமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் எரிபொருள் உற்பத்தியால் செல்வம் திரட்டிய அஜர்பைனான் தன் படைவலுவையும் பெருக்கிக் கொண்டது. இப்போது தான் இழந்ததை மீளக் கைப்பற்ற முயல்கின்றது. இரண்டு நாடுகளும் இரசியாவிடமிருந்து படைக்கலன்களைக் கொள்வனவு செய்கின்றன. இரண்டு நாடுகளுடனும் இரசியா பொருளாதாரத் தொடர்புகளை வைத்துள்ளது. ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உண்டு.

அஜர்பைஜானிற்கு துருக்கி ஆதரவு

அஜர்பைஜானிற்கும் துருக்கிக்கும் இடையில் கலாச்சார மற்றும் வரலாற்று அடிப்படையிலான தொடர்புகள் உள்ளன. துருக்கியும் பாக்கிஸ்த்தானும் அஜர்பைஜானிற்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியர்கள் 1500பேரை துருக்கி அஜர்பையானிற்கு கூலிப்படைகளாக அனுப்பியுள்ளது. போரின் போது கொல்லப்பட்ட 50 சிரியர்களின் உடலங்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அஜர்பைஜான் படைகள் ஆளில்லாப் போர் விமானங்களின் உதவியுடன் முன்னேறியுள்ளன. அவற்றை துருக்கி வழங்கியிருக்கலாம். துருக்கிய விமானங்கள் வேவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆர்மேனியாவின் விமான எதிர்ப்பு நிலைகளை தாக்கி அழித்த அஜர்பைஜான் ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது ஆட்டிலறி நிலைகளை அழிக்கத் தொடங்கியுள்ளன. துருக்கிய F-16 போர் விமானம் ஆர்மேனியாவின் SU–25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மேனியா குற்றம் சாட்டுகின்றது.



ஆர்மேனியாவிற்கு இரசியா ஆதரவு வழங்க வேண்டியுள்ளது

இரசியாவின் Collective Security Treaty Organization என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் ஆர்மேனியாவும் உறுப்புரிமையுடையது. 1992 கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் இரசியா, ஆர்மேனியா, கஜகஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. அந்த உடன்படிக்கையின் படி ஆர்மேனியா மீது தொடுக்கப்படும் தாக்குதலை மற்ற நாடுகள் தம்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதி ஆர்மீனியாவைப் பாதுகாக்க வேண்டும். ஆர்மேனியாவில் இரசியப் படைத்தளமும் உள்ளது. உடன்படிக்கையின் படி இரசியா ஆர்மேனியாவிற்கு உதவி செய்யாது போனால் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மற்ற நாடுகள் இரசியாமீது வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும். அது இரசியாவின் பிராந்திய நலன்களைப் பாதிக்கும்.

இருதலைக் கொள்ளி எறும்பாக ஈரான்

ஈரானுடன் 27மைல் நீள எல்லையைக் கொண்ட ஒரே கிருத்தவ நாடு ஆர்மேனியா. ஈரானின் ஒரு பகுதியாக இருந்த ஆர்மேனியாவின் கிருத்த மக்கள் பலர் இப்போதும் ஈரானில் வசிக்கின்றனர். பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட அஜர்பைஜானியர்களும் ஈரானில் வசிக்கின்றனர். இஸ்ரேலிடம் அதிக படைக்கலன்களை வாங்கிக் குவிக்கும் அஜர்பைஜானுடன் ஈரான் தொடர்பு வைப்பது ஈரான் உலகில் உருவாக்க முயலும் தனது விம்பத்திற்கு ஆபத்து. அஜர்பைஜான் இஸ்ரேலிடம் வாங்கிய ஆளில்லா விமானங்கள் ஈரனுக்கு அடிக்கடி அத்து மீறிப்பறக்கின்றன.  அஜர்பைஜானைப் பாவித்து இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரானை வேவு பார்ப்பதாக ஈரான் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. ஈரானியப் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் ஆர்மேனிய அஜர்பைஜானியப் போரில் ஈரான் பெரிதாக ஈடுபடாது. அஜர்பைஜானூடாக ஈரான் தனது சபாஹர் துறைமுகத்தில் இருந்து இரசியாவிற்கு ஒரு தொடரூந்து பாதையையும் அமைக்க முயல்கின்றது. இது போன்ற காரணங்களால் ஈரான் யாருக்கு ஆதரவளிப்பது எனத் தடுமாறுகின்றது. 

விலகி இருந்து இரசிக்கும் அமெரிக்கா

ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் நடக்கும் போரானது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் நிகராளிப் போர்(Proxy war) என அமெரிக்கா கருதுகின்றது. சிரியப் போரின் இறுதிக் கட்டத்தில் இரசியாவும் துருக்கியும் ஒன்றாக நின்று சிலகாலம் ஒத்துழைத்தது. அமெரிக்காவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் சிரியாவிலும் லிபியாலும் இரண்டு நாடுகளும் முரண்படத் தொடங்கின பிரான்சில் ஆர்மேனியர்கள் வாழ்கின்றனர். பிரான்ஸ் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றது. பிரான்சும் துருக்கியும் நேட்டோ உறுப்பு நாடுகள் என்பதால் நேட்டோ கூட்டமைப்பு விலகி நிற்கின்றது. அமெரிக்கா தனது நலன்கள் அங்கு பாதிப்படையவில்லை என்பதால் இந்தப் போரில் அக்கறை காட்டவில்லை. இதனால் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்த யாரும் இல்லை எனற நிலை உருவாகியுள்ளது.  

தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor)

இது பன்னிரண்டுக்கு மேற்பட்ட எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து மத்திய ஆசியாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கஸ்பியன் கடலூடாகவும் துருக்கியூடாகவும் கருங்கடலூடாகவும் எரிபொருள் வழங்கும் திட்டத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் இத்திட்டத்திற்கு தென் எரிவாயுத் தொடர்புப்பாதை (Southern Gas Corridor) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அஜர்பைஜான், தேர்க்மேனிஸ்த்தான், கஜகஸ்த்தான், ஈராக் உட்படப் பல நாடுகளில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதன் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் தமது எரிபொருள் தேவைக்கு தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் பெரும்பகுதி எரிபொருள் அஜர்பைஜானுக்கு சொந்தமான கஸ்பியன் கடற்படுக்கையில் இருந்து பெறப்படுகின்றது. இத்திட்டத்தை ஆர்மேனியா அஜர்பைஜான் போர் மூலம் குழப்புவது இரசியாவிற்கு நன்மையளிக்கக் கூடியது. இரசியாவின் நேர்ட்ஸ்றீம் குழாய்க்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து பிரச்சனை கொடுப்பதற்கு இரசியா பழிவாங்குகின்றது எனச் சொல்லலாம். அஜர்பைஜான் நாள் ஒன்றிற்கு ஏழு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யையும் 780மில்லியன் கனவடி எரிவாயுவையும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அஜர்பைஜானில் இருந்து செல்லும் குழாய்கள் ஆர்மேனியாவிற்கு அண்மையில் உள்ள பிரதேசங்களூடாகச் செல்கின்றன.


ஐக்கிய நாடுகள் சபை ஆர்மேனியப்படைகள் நகர்னோ கரபார்க் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. துருக்கி தலையிட்டு போர் நிலைமையை அஜர்பைஜானுக்கு சாதகமாக மாற்றியதால் இரசியா ஆர்மேனியாவிற்கு ஆதரவாக செயற்பட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. அல்லது இரசியாவின் மற்ற நட்பு நாடுகள் இரசியாமீது ஐயம் கொள்ள முனையலாம். பொருளாதார அடைப்படையிலும் படைத்துறை அடிப்படையிலும் துருக்கி அகலக் கால் வைப்பதை இரசியா விரும்பலாம். இரசியா ஆர்மேனிய நிலங்களை தான் பாதுகாத்துக் கொண்டு பிரச்சனைக்குரிய நகர்னோ கரபார்க் மலைப்பகுதியில் ஆர்மேனியா தனது முழு வலுவையும் பாவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அது போரைத் தீவிரப்படுத்தும்.

Monday 5 October 2020

அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்தியாவின் பாதுகாப்பு

 


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் ஒரு நாடு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும். சீனா சிறிது சிறிதாக இந்தியாவின் நிலப்பரப்பை படைக்கலன்களைப் பாவிக்காமல் இரகசியமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனப் போரியல் நிபுணர் “போர்க்கலையின் உச்சம் எனப்படுவது போர் செய்யாமல் எதிரியை விழுத்துவது” என்றார். சீனா கைப்பற்றிய இந்திய நிலங்களை ஒரு போரால் மட்டுமே இந்தியாவால் மீளக் கைப்பற்ற முடியும். ஆனால் போர் தொடுத்தால் பல விதத்திலும் பெரும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும். சீனாவும் இந்தியாவும் அணுக்குண்டை தாம் முதலில் பாவிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டன. அணுக்குண்டு பாவிக்காமல் போர் செய்தாலும் இரு நாடுகளும் பெரும் ஆளணி இழப்புக்களை, உட்கட்டுமான அழிவுகளை, பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதுடன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளி ஆகிய தளங்களில் உக்கிரமாக நடக்கும்.

பொருளாதார வலிமை மிக்க சீனா

இந்தியாவின் வான் படையினரும் தரைப்படையினரும் சீனா இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை தடுக்கும் முயற்ச்சியில் வெற்றியடைந்தாலும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல் வேறுபட்ட ஏவுகணைகளை சமாளிப்பது இந்தியாவிற்கு முடியாத காரியமாகலாம். சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க இரண்டரை மடங்காக இருக்கின்றது. சீனாவிடமிருக்கும் 3.4ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கையிருப்பு இந்தியாவினதிலும் பார்க்க எட்டு மடங்காகும். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேன்மை மிக்கதாக அமைந்தது. 2008இன் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையதாக இருந்தது. அதே போல 2020-ம் ஆண்டு கொவிட்-19 தொற்றுநோயின் பின்னர் பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தேய்வடையும் போது சீனாவினுடைய பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றது. 2008இன் பின்னர் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது போல் 2020இன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டாகத்தான் இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் வளரும் போது அதற்கு உரிய மரியாதை உலக அரங்கில் செலுத்தப்பட வேண்டும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 2017-ம் ஆண்டே சீனா உலக மேடையை முழுமையாக எடுக்க வேண்டும் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் Road & Belt Initiative மூலம் உலக ஆதிக்கத்தின் மையப்புள்ளியை அத்லாண்டிக்கில் இருந்து பசுபிக்கிற்கு மாற்ற நினைக்கின்றது என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர். 

கடலில் விழுமா சீனா?

சீனாவின் எரிபொருள் தேவையில் 87விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் 77 நாட்களுக்கு பாவிக்கக் கூடிய எரிபொருளை மட்டும் இருப்பில் வைத்திருக்க முடியும். சீனாவின் எரிபொருள் வழங்கலைத் துண்டிக்க சீனாவிற்கு எதிராக இந்தியாவால் இரண்டு கடல் முற்றுகைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து செய்யும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சீனக் கப்பல்கள் மலக்காய் நீரிணையூடாக பயணிப்பதைத் தடுத்தல்.  இரண்டாவது பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தையும் அதை ஒட்டியுள்ள கரையோரப் பிரதேசங்களை முற்றுகையிட வேண்டும். அதனால் சீனாவிற்கு செல்லும் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருள்கள் செல்வதையும் சீனாவில் இருந்து அதன் ஏற்றுமதிகள் உலகெங்கும் செல்வதையும் இந்தியா தடுக்க வேண்டும். இதற்கு பாக்கிஸ்த்தானின் கடற்படையை முற்றாக அழிக்க வேண்டும். அதனால் பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான போரில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும். ஆகையால் இரண்டாவது முற்றுகை தரைப்போரில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம். அந்தமான் நிக்கோபார் தீவில் இந்தியாவின் கடற்படை வலிமை சீனக் கடற்படை மலாக்கா நீரிணையை தாண்டி வர முடியாதபடி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். ஒஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவில் {Cocos (Keeling) islands} இந்தியா துரிதமாகப் படைக்கலன்களை குவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். உலக அரங்கில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக களம் இறங்கும் முடிவை எடுக்கச் செய்தால் இந்து மாக்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படைக்கு பிரெஞ்சுக் கடற்படை உதவி செய்யும் நிலை உருவாக்கலாம்.

படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு நிலையில் இந்தியாவின் நிலங்களை சிறிது சிறிதாக சீனா அபகரிப்பதை தடுப்பதற்கு இந்தியா தன்னை படைக்கல அடிப்படையிலும் அரசுறவியல் அடைப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் சீனாவிலும் வலிமையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா தன் படைத்துறை வலிமை  சீனாவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியா பல பொருளாதார தியாகங்களைச் செய்ய வேண்டும்.ன்ச்அரசுறவியல் அடிப்படையில் இந்தியா தன்னை வலிமைப்படுத்தச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். இந்திய சீனப் போர் நடக்கும் போது பாக்கிஸ்த்தானும் நேரடியாக போரில் இறங்கலாம் அல்லது இந்தியாவிற்கு பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீனாவிற்கு சாதகமாக போரைத் திருப்ப முயலலாம். இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிப்பதை நிறுத்த இந்தியாவின் படைத்துறை சீனாவிலும் வலிமையானதாக இருக்க வேண்டும் அல்லது இந்தியா சீனாவிற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட படியால் எந்த ஒரு நாடும் அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஜப்பான் அடிக்கடி வலியுறுத்தும் குவாட் என்னும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியாவைக் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா காட்டி வந்த தயக்கம் அந்தப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதே வேளை தென் கொரியாவும் வியட்னாமும் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன.

இரசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் இணைந்த படைக்கல உற்பத்தியும்

இரசியாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். அதனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்குதல் செய்வதை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும். சீன பல புதிய படைக்கலன்களை இரசியாவிடமிருந்தே வாங்குகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து புதிய படைக்கல உற்பத்தியில் ஈடுபட வேண்டும் அப்படி உற்பத்தி செய்யும் படைக்கலன்களை ஒரு நாட்டின் அனுமதியின்றி மற்ற நாடு எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இந்த அடிப்படியிலேயே செய்யப்பட்டது. இரசிய தொழில்நுட்பங்களை இரசியாவிடமிருந்து வாங்கும் படைக்கலன்களில் இருந்தே சீனா பெறுகின்ற படையால் இது சீனாவை படைக்கல உற்பத்தியில் பின்னடைவைச் சந்திக்க வைக்கும். உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரசியா முன்வந்துள்ளது. அதை சீனாவிற்கு விற்பனை செய்வதும் தடைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு முறைமைகளை இரசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

அரசுறவியல் மேம்பாடு

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் நடக்கும் போது அமெரிக்காவும் ஜப்பானும் மேலும் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கச் செய்யும் அளவிற்கு இந்திய அரசுறவுகள் மேம்பட்டவையாக இருக்க வேண்டும். சீனாவுடன் போர் செய்யும் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரும் அளவிற்கு சீனாவிற்கு நட்பு நாடுகள் இல்லை என்பது இந்தியாவிற்கு வாய்ப்பானதாகும். வியட்னாம் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகின்றன. வியட்னாமுடனான ஒத்துழைபு சீனாவை ஆத்திரப் படுத்தும் என இந்தியா இதுவரை தயக்கம் காட்டியது.

இந்தியாவில் அமெரிக்கப் படைத்தளம்.

கொல்கத்தாவில் அமெரிக்க கடற்படைத்தளமும் வான்படைத்தளமும் அமைத்தால் இந்திய சீனப் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமையும். ஜப்பானும் தென் கொரியாவும் தமது நாடுகளில் அமெரிக்கப் படைத்தளஙக்ளை அமைக்க அனுமதித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலோ உலக அரங்கின் அவற்றின் தனித்துவமான கொள்கைகளிலோ விட்டுக்கொடுப்புக்களை பெரிதாகச் செய்வதில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு பகுதியான சில்கிரி இணைப்புப் பாதையை சீனாவல் அசைக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தலம். அமெரிக்காவின் F-35 போவிமானங்கள் ஐம்பதையாவது இந்தியா வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப் படவேண்டும்.

பல் துறைப் படைக்கலன்கள்

ஆழ்கடலில் செயற்படக் கூடிய கடற்படை, அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் முனை அனுபவம் கொண்ட படைத்துறை, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் படைக்கலன்களை வாங்கக் கூடிய ஒரே நாடு என்ற நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக இருக்கின்றன. சீனாவின் மிகப் பெரிய பின்னடைவு பல ஆண்டுகளாக போர் முனை அனுபவம் இல்லாத படைத்துறை என்பதே. இந்திய சீனப் போர் என ஒன்று வரும்போது இந்தியாவின் செய்மதிகளை சீனா அழித்து இந்தியப்படையினரைன் தொடர்பாடல்களை சிதைக்கலாம். பதிலுக்கு இந்தியாவும் சீனச் செய்மதிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். இணையவெளித்தாக்குதல் பலவற்றை சீனா செய்யலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியைப் பெறவேண்டும். சுவீடனின் Gripen E fighter விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்தவை என நிருபணமானவை. சீனாவின் உளவு விமானங்களை இந்தியா செயலிழக்கச் செய்வதற்கு Gripen E fighter வாங்க வேண்டும். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுநிலைகளையும் போரின் ஆரம்பத்திலேயே இந்தியா அழிக்கும் அளவிற்கான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறவேண்டும். அவற்றை அழிக்க தரையில் இருந்தும் வானில் இருந்தும் பெருமளவு ஏவுகணைகளை போர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்தியா வீச வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை இந்தியாவிற்கு இரகசியமாக வழங்க அமெரிக்கா தயங்காது. இந்திய சீனப் போர் என்று ஒன்று வந்தால் சீனாவின் பொருளாதார நிலைகளை இந்தியா துவம்சம் செய்யும் என்ற உணர்வை சீனாவிற்கு இந்தியா ஏற்படுத்த வேண்டும். சீனா இந்தியாவிற்கு ஆறுபது பில்லியன் டொலருக்கும் அதிமான ஏற்றுமதியை இந்தியாவிற்கு செய்கின்றது.

இந்தியா மீதான அச்சத்தை சீனாவிற்கு ஏற்படுத்துவது இலகுவான ஒன்றல்ல. அதே வேளை அது இயலாத ஒன்று அல்ல. இப்போதிருக்கும் இந்தியாவையிட்டு சீனா கலவரப்படவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவையிட்டு சீனா அச்சமடைந்துள்ளது. இந்தியா தனது தற்போதைய நிலையை மாற்றாவிடில் அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு சீனாவிடமிருந்து பல பிரச்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...