Followers

Sunday, 18 October 2020

பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஒளிரும் இரசியா

 


இரசிய நடுவண் வங்கி ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலையின்கீழ் 2021இன் ஆரம்பத்தில் இருந்து 2023இறுதி வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் மசகு ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை இருபத்தைந்து டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. கொவிட்-19 தொற்று நோயின் மோசமான இரண்டாவது அலைத்தாக்குதல், புவிசார் அரசியல் குழப்பங்கள், முன்னணி நாடுகளிடையேயான வர்த்தகப் போர், நாடுகளின் கடன் பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இரசிய நடுவண் வங்கி தனது எதிர்வு கூறலைச் செய்துள்ளது. 

பொருளாதார வளரச்சி

மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளாலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல சவால்களை இரசியப் பொருளாதாரம் எதிர் கொண்ட போதும் பல மேற்கத்தைய பொருளியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரசியப் பொருளாதாரம் உறுதியாக இருக்கின்றது. இரசிய நிதியமைச்சர் இரசியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தி 2020இல் 4விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் எனத் தெரித்தார். பன்னாட்டு நாணய நிதியமும் இரசியப் பொருளாதாரம் 2020இல் 4.1விழுக்காட்டால் சுருங்கும் என எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை 2021இல் 2.8விழுக்காட்டால் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அது 2019இல் 4.5 விழுக்காடாக இருந்த இரசியாவின் பணவீக்கம் 2020இல் 3.7 விழுக்காடாகத் தணியும் எனவும் கருதுகின்றது. 2020 ஜூலையில் உலக வங்கி இரசியாவின் பொருளாதாரம் 6விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறிய போது இரசிய நடுவண் வங்கி தனது வட்டி வீதத்தை 4.25 விழுக்காடாகக் குறைந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது மிகக்குறைந்த வட்டி விழுக்காடாகும். அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் இரசியப் பொருளாதர வளர்ச்சி எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டது.

 

 

மசகு எண்ணெயின் விலை பீப்பா ஒன்றிற்கு முப்பது டொலராகக் குறைந்தாலும் இரசியாவின் பொருளாதாரம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்கு இரசிய அரச நிதியத்திடம் நிதி இருக்கின்றது அதற்கு முன்னர் இரசிய அரசு அறிவித்திருந்தது. 2020 ஒக்டோபர் 14-ம் திகதி உலகச் சந்தையில் எரிபொருள் விலை 42 டொலராக இருந்தது.

அரச நிதி

2020 ஜனவரியில் இரசிய அதிபர் புட்டீன் இரசிய உட்கட்டுமானங்களிலும் சமூகத் திட்டங்களிலும் நான்கு ரில்லியன் ரூபிள்களைச் செலவு செய்வதாக உறுதியளித்திருந்தார். இரசியப் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அரச நிதியை சமாளிக்க அடிப்படை வருமான வரியை 2021இல் 13விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்க இரசிய அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பின் மூலம் இரசிய அரச வருமானம் அறுபது பில்லியன் ரூபிளால் அதிகரிக்கும். இரசியாவின் வருமானவரி விதிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பிடுங்கி வறிய மக்களுக்கு உதவிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இரசிய அரசின் நிதிப்பற்றாககுறை 2020இல் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.1விழுக்காடாகவும் 2021இல் 2.4 விழுக்காடாகவும் 2022இல் ஒரு விழுக்காடாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசியாவில் முதலீடுகள்

ஐநாவின் அங்ராட்டின் அறிக்கையின் படி 2019-ம் ஆண்டு இரசியாவில் வெளிநாட்டு முதலிடு 31.7பில்லியன் டொலர்களாகும். இது 2018இன் 13பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வளர்ச்சியாகும். ஐக்கிய இராச்சியம்சைப்பிரஸ்லக்சம்பேர்க்நெதர்லாந்துபஹாமாஸ்அயர்லாந்துபெர்மூடா ஆகிய நாடுகள் இரசியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன. இரசியாவின் கனிம வளம் மற்றும் இணையவெளி போன்றவற்றில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்படுகின்றன. இரசியாவின் ஆர்க்டிக் எரிபொருள் ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் விதித்துள்ளன. இரசிய அரச நிதியமும்இரசிய நேரடி முதலீட்டு நிதியமும் ஐக்கிய அமீரகத்தின் நிதியம் ஒன்றுடன் இணைந்து முகங்களை இனம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. சீன இந்தத்த் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது.

பிராந்தியப் பிரச்சனைகள்

இரசிய அரசு பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெலரஸில் தேர்தலை எதிர்த்து மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்கின்றனர்அஜர்பைஜானும் ஆர்மேனியாவும் மோதிக் கொள்கின்றனகஜகஸ்த்தானில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இரசியா முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான பெலரஸ்கஜ்கஸ்த்தான்ஆர்மேனியாஅஜர்பைஜான்கிரிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதரக் கூட்டமைப்பு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போட்டியாக உருவாக்கியுள்ளது. 180மில்லியன் மக்களைக் கொண்ட அந்த பொருளாதாரக் கூட்டமைப்பு மிகப் பெரிய நாடாகிய இரசியாவுடன் பல மிகச் சிறிய நாடுகளை இணைக்க முயல்கின்றது. இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் என்பது மட்டுமல்ல முதலாம் உலகப் போரிற்கு முன்னர் துருக்கியால் ஆளப்பட்ட நாடுகள். இந்த நாடுகளில் துருக்கியும் தன் ஆதிக்கத்தை செலுத்த முயல்கின்றது. துருக்கியினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் தற்போது மாறியுள்ளன.

இரசியாவின் படைக்கல ஏற்றுமதி

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா இருக்கின்றது. 2019-ம் ஆண்டு இரசியா 13பில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது 2018இலும் பார்க்க இரண்டு பில்லியன் டொலர் அதிகமாகும். இரசியாவின் படைக்கல ஏற்றுமதி பல சவால்களைச் சந்திக்கின்றது. சீனா தனது உள்நாட்டு படைக்கல உற்பத்தியை அதிகரிக்கின்றது. இந்தியாவும் அதையே செய்வதுடன் அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்குகின்றது. கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகில் பல நாடுகள் சிக்கன் நடவடிக்களை 2021-ம் ஆண்டு மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும். சிக்கன நடவடிக்கை என வரும் போது பல நாடுகள் தமது படைக்கலன் கொள்வனவை குறைக்கும். இது இரசிய படைக்கலன் ஏற்றுமதியையும் பாதிக்கும்.

இரசியாவின் அரச நிதியம் 2020இன் ஆரம்பத்தில் 124பில்லியன் டொலர்களாக இருந்தது. கொவிட்-19 தொற்று நோயல் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க செய்த செலவால் 2020இன் இறுதியில் அது 95பில்லியன்களாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டில் இருந்து அது அதிகரிக்கத் தொடங்கலாம். ஆகையால் இரசியா தனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளும்.வ்

No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...