Followers

Showing posts with label ஐரோப்பா. Show all posts
Showing posts with label ஐரோப்பா. Show all posts

Friday, 30 September 2022

புட்டீனின் குழாயடிச் சண்டை

 


இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் உள்ள வலிமை மிக்க பொருளாதாரப் படைக்கலனாக இரசியாவின் எரிவாயு இருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் தேவையில் 43% இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. அமெரிக்கா இதை கடுமையாக எதிர்த்து வந்தது. இரசியாவில் இருந்து பெறுவது மலிவானது என்பதால் அதன் அயல்நாடுகள் அங்கிருந்து பெறுவதை தவிர்க்க விரும்பவில்லை.

படைக்கலனாக எரிபொருள் விநியோகம்

2014 பெப்ரவரி 20-ம் திகதி இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர்  இரசியா இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்த பின்னர் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் இரசியா மீது பொருளாதார தடைகளை செய்தன. பின்னர் 2022 பெப்ரவை 24-ம் திகதி இரசியாவின் இரண்டாம் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் அந்த தடைகள் மேலும் விரிவாக்கப்பட்டன. 2022 பெப்ரவரி ஆக்கிரமிப்பின் பின்னர் நேட்டோ நாடுகளும் ஜப்பான் மற்றும் ஒஸ்ரேலியா போன்ற நாடுகளும் இரசியாவிற்கு எதிராக ஒற்றுமைப் பட்டன-. இந்த ஒற்றுமையைக் குலைக்க புட்டீன் இரசியாவின் எரிபொருள் வளத்தை அரசுறவியல் பகடைக் காயாக பயன் படுத்தினார். இரசியா மீது பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு எதிராக தனது எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தினார். அதனால் உலகில் எரிபொருள் விலை ஏறியதுடன் இரசியாவின் ஏற்றுமதி வருமானமும் அதிகரித்தது.

புட்டீனின் பதிலடிகள்

உக்ரேனுக்கு எதிரான போரை இரண்டு வாரங்களில் முடிக்க புட்டீன் போட்ட திட்டம் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களால் தவிடு பொடியானது. 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியா பெரும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியிருந்தது. இதன் பின்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் பல நகர்வுகளைச் செய்து வருகின்றார். இரசியப் படையினருக்கு ஆட் சேர்ப்பு, இரசியா ஆக்கிரமித்த உக்ரேனின் பிரதேசங்களை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் இரசியாவுடன் இணைத்தல் உக்ரேனின் உட்-கட்டுமானங்கள் மீது தாக்குதல் என அவரது நடவடிக்கைகள் விரிகின்றன.



Nord Stream – 1 & 2

தனது எரிவாயு விநியோகத்தின் உக்ரேனூடாக செல்லும் நிலத்தடிக் குழாய்களில் தங்கியிருப்பதை விரும்பாத இரசியா 2011-ம் ஆண்டு Nord Stream – 1 என்னும் பெயரில் 2011-ம் ஆண்டு போல்ரிக் கடலினூடாக ஒரு எரிவாயு விநியோகிக்கும் 1222கிமீ (759 மைல்) நீள குழாயை உருவாக்கியது. பின்னர் 2012 இல் Nord Stream – 1 குழாயையும் உருவாக்க தொடங்கியது. இத்திட்டங்களுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

புட்டீனின் எரிவாயுத் தாக்குதல்கள்

2022 ஜூலை 25-ம் திகதி இரசியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Gazprom ஜேர்மனிக்கு Nord Stream – 1இனூடாக் செல்லும் எர்வாயு விநியோகத்தை 20%ஆல் குறைத்தது. பின்னர் 2022 ஓகஸ்ட் 31-ம் திகதி பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்காக எரிபொருள் விநியோகம் நடைபெற மாட்டாது என இரசியா அறிவித்தது. 2022/23 குளிர்காலத்திற்கு தேவையான எரிவாயுக் கையிருப்பை ஜேர்மனியும் மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சேமிக்காமல் பண்ணவே இரசியா இந்த எரிவாயு விநியோகத்தை அவ்வப்போது தடுத்தது எனக் குற்றம் சாட்டப்பட்டது. உக்ரேன் போரில் 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை கடும் சினத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அவருடைய ஆதரவாளர்கள் அவர் போர் நடத்தும் முறை பற்றி தமது அதிருப்தியை தெரிவிப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.



புட்டீனின் குழாயடித் தாகுதல்களா?

2022 செப்டம்பர் 26-ம் திகதி நோர்வேயில் இருந்து டென்மார்க் ஊடாக போலாந்து வரை எரிவாயு விநியோகிக்கும் குழாய் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில் Nord Stream – 1 மற்றும் Nord Stream – 2 குழாய் சேதப் படுத்தப்பட்டது. இது அமெரிக்காவினதும் உக்ரேனினதும் வேலை என இரசியா குற்றம் சாட்டுகின்றது. அது இரசியாவின் வேலை என அமெரிக்காவும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. இலையுதிர் காலத்தின் முதலாம் வாரத்திலேயே இந்த எரிபொருள் விநியோகத்திற்கான தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களை யார் சேதப்படுத்தினார் என்பதற்கான ஆதாரம் எதையும் யாரும் முன் வைக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் குளிர்கால எர்பொருள் தேவைக்கான பாதுகாப்பின் வலிமை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சேதங்களால் மூன்று இடங்களை எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வாயு போல்ரிக் கடற்பரப்பில் இருப்பதால் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகுப் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன.

மாறி மாறிக் குற்றச் சாட்டுகள்

உக்ரேனும் போலந்தும் இரசியாவே Nord Stream குழாய்களை சேதப்படுத்தியது என்கின்றன. டென்மார்க் தலைமை அமைச்சர் Mette Frederiksen குழாய்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் ஒரு விபத்தி என நம்ப முடியாது என்றார். Nord Stream – 2இனூடாக விநியோகம் செய்ய முன்னரே உக்ரேன் மீதான இரசியாவின் இரண்டாவது ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டபடியால் அதுனூடாக ஒரு போதும் எரிவாயு விநியோகம் செய்யவில்லை. இரசியாவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் Nord Stream – 1 உருவாக்கும் போது செய்த ஒப்பத்தத்தின் படி இரசியா எரிவாயுவை விநியோகிக்கும் கடப்பாடு கொண்டுள்ளது. அதை மீறினால் பன்னாட்டு சட்ட நடவடிக்கை மேலும் பொருளாதாரத் தடை போன்றவற்றை மேற்கு நாடுகள் செய்யலாம். சேதப்படுத்தப் பட்ட குழாயால் விநியோக செய்ய முடியாது என்னும்போது இரசியாவிற்கு எதிரான நகர்வுகளைச் செய்ய முடியாது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கன் ஆரம்ப தகவல்களின் படை வேண்டுமென Nord Stream குழாய்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்றார்.

உக்ரேனுடான எரிவாயு விநியோகத்தை தடுக்க சதியா?

2019-ம் ஆண்டு இரசியாவும் உக்ரேனும் 40பில்லியன் கன மீற்றர் எரிவாயு உக்ரேனூடாக நிலத்தடி குழாய்கள் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் உக்ரேன் 2024-ம் ஆண்டு வரை $7பில்லியன் வருமானத்தைப் பெற அவ் ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இரசியாவின் Gazprom நிறுவனம் தற்போது நாளொன்றிற்கு 42.4 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவை உக்ரேனூடாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகின்றது. இது உக்ரேனூடாக செல்லும் குழாய்கள் மூலம் அனுப்பக் கூடிய எரிவாயுவின் அளவின் 17% மட்டுமே!

இந்த எரிவாயு அனுப்புதலுக்கு உக்ரேனின் Naftogaz என்னும் நிறுவனம் இரசியாவின் Gazprom நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வில்லை என தீர்ப்பாயம் ஒன்றில் முறையிட்டுள்ளது. இரசிய Gazprom மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு எரிபொருள் விநியோகம் செய்யாமல் இருப்பதற்கே  வேண்டுமென்றே திட்டமிட்டு செய்வதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றது.

குளிர்காலப் போட்டி நகர்வுகள்

குளிர் காலத்தின் முன்னர் இரசியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் முயல்கின்றன. 155-மில்லி மீட்டர் Howitzers பல்குழல் ஏவூர்தி செலுத்திகள், GMLR ஏவூர்திகள், M-31 HIMARS மற்றும் M-142 HIMARS பல்குழல் ஏவூர்தி செலுத்திகள் போன்ற இரசியப் படையினருக்கும் அவர்களின் படைக்கலன் களஞ்சியங்களுக்கும் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய படைக்கலன்கள் அமெரிக்கா உக்ரேனியப் படைகளுக்கு வழங்குகின்றது. ஜேர்மனியும் உக்ரேனுக்கான தனது படைக்கல விநியோகத்தை அதிகரித்துள்ளது. இவை இரசியப் படையினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டன. மேற்கு ஐரோப்பாவை குளிரில் நடுங்க வைக்க எரிவாயுப் போரை புட்டீன் ஆரம்பித்து விட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. உக்ரேனுடன் பிணக்கு Nord Stream குழாய் சேதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இரசிய அதிபர் புட்டீன் ஒரு குழாயடிச் சண்டையை தொடக்கி விட்டார் என்றே தோன்றுகின்றது. இப்போது வலுவாக இருக்கும் புட்டீனின் எரிவாயுப் படைக்கலன் வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கான குழாய்மூலமான எரிபொருள் விநியோகம், அமெரிக்காவில் இருந்து திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு விநியோகம் ஆகியவற்றால் இன்னும் 3 ஆண்டுகளில் வலிமை இழந்து போகும். பின்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எரிபொருள் விநியோகத்தில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

எரிவாயு தொடர்பான கட்டுரையைப் படிக்க இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://veltharma.blogspot.com/2020/06/blog-post_16.html

Saturday, 26 February 2022

உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்


புவிசார் அரசியல் என்பது நிலப்பரப்புக்கள், கடற்பரப்புகள், வான்வெளி, விண்வெளி, வளங்கள், அரசுகள், தலைமைத்துவ ஆளுமைகள், அரசற்ற அமைப்புக்கள், நாகரீகங்கள், மக்கள், பொருளாதாரம், படைவலிமை ஆகியவற்றிடையேயான செயற்பாடுகள் பற்றிய கேந்திரோபாயத்தை பகுப்பாய்வு செய்வதாகும். அரசியல் புவியியல் (Plitical Geography) நிலவியல் (Anthropogeography) ஆகியவற்றில் இருந்து புவிசார் அரசியல் உருவானது. இங்கு நிலம் என்பது அளவு மட்டும் சார்ந்ததல்ல தரமும் சார்ந்ததாகும். புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்

2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பார்கள்.” என்பது அவரது கோட்பாடு. 193இனக்குழுமங்களைக் கொண்ட இரசியாவில் 146மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்திலும் அதிகமாக இருப்பதாலும் குடிவரவாளரகளின் தொகையிலும் பார்க்க குடியகல்வாளர்களின் தொகை அதிகரிப்பதாலும் இரசியாவின் மக்கள் தொகை குறைந்து செல்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவின் நிலப்பரப்பு உலகின் மிகப் பெரியதாக உள்ளது. அதனால் Friedrich Ratzelஇன் கோட்பாடு உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கான உட்பார்வையைக் தரவில்லை.

Sir Halford John Macinderஇன் இதயநிலக் கோட்பாடு

Halford Mackinder புவியியல் சுழற்ச்சி மையத்தின் வரலாறு என்னும் தலைப்பில் 1904இல் எழுதிய கட்டுரையில் அவர் உலகப் புவிசார் அரசியல் ஆசிய-ஐரோப்பிய பெருங்கண்டத்தின் இதயநிலத்தில் தங்கியுள்ளது என்றார். உலகத்தை ஐம்பெரும் பகுதிகளாகப் பிரித்தார்:

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland): உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.

கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலகத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது Halford Mackinder முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது. பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, போலாந்து, இரசியா, சிலோவாக்கியா, பெலரஸ், மொல்டோவா, உக்ரேன், எஸ்த்தோனியா, லத்வியா, எஸ்த்தோனியா, ஜோர்ஜியா ஆகியவை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளாகும். இவற்றில் பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா, போலந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருக்கின்றன. உக்ரேனும் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முற்பட்ட போது இரசியா அவற்றின் மீது படையெடுத்து அங்கு பிரிவினைகளை உருவாக்கி புதிய நாடுகளை உருவாக்கியுள்ளது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த 1914-1918இல் நடந்த முதலாம் உலகப் போர் இதய நிலத்திற்கான போட்டியை முடிவுக்கு கொண்டுவராது என்றும் அவர் அப்போதே எதிர்வு கூறியிருந்தார். இன்று அது மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் இரசியா மறுதரப்பாகவும் இருந்து கொண்டு போட்டி நகர்வுகளில் ஈடுபடுகின்றன. அதன் ஒரு பகுதியே இரசியா 2022 பெப்ரவரியில் 24-ம் திகதி உக்ரேன் மீது செய்த ஆக்கிரமிப்பாகும்.

கடல்வலிமைக் கோட்பாடு

அமெரிக்கரான Alfred Thayer Mahan ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது. உக்ரேன் தனது கடற்படையின் வலிமையை பெருக்காமல் விட்டதுடன் தன்னிடம் இருந்த கடற்கலன்களை விற்பனை செய்து தனது பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்தது. உக்ரேனிடம் வலிமையான கடற்படை இல்லாத படியால் அது உலகின் அதியுயர் கேந்திரோபாய நிலப்பரப்பில் ஒன்றான கிறிமியாவை 2014இல் இழந்தது. இன்று (26-02-2022) ஓரிரு நாட்களில் இரசிய போர்த்தாங்கிகள் அதன் தலைநகரிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

Nicholas Spykmanஇன் வளையநிலக் கோட்பாடு

Nicholas Spykman வளைய நிலத்தை ஆள்பவன்தான்தான் உலகத்தை ஆள்வான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி. Nicholas Spykman இன் கோட்பாட்டின் முக்கிய அம்சம் கடல் போக்குவரத்திற்கான  அண்மையாக நாடுகள் இருக்க வேண்டும் என்பதாகும். இரசியாவின் குளிர்மையற்ற கடல் உக்ரேனை ஒட்டியே அமைந்திருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா பிரதேசத்தில் உள்ள இரசியக் கடற்படைத்தளம் இரசியாவின் எதிரியின் கைக்களுக்குப் போனால் அது இரசியாவின் வல்லரசு என்ற நிலையைக் கேள்விக் குறியாக்கும். உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்தால் கிறிமியாவை இரசியா இழக்கும் ஆபத்து ஏற்படும். அதைத் தவிர்க்கவே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது.

நாகரீக கோட்பாடு

Samuel Phillips Huntington (1927- 2008) 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். 1. மேற்கு நாடுகள், 2. லத்தின் அமெரிக்க நாடுகள், 3. இஸ்லாமிய நாடுகள், 4. சீனா, 5. இந்து, 6. மரபு வழியினர், 7. ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப் படுத்தியுள்ளார். இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் உள்ளன. இரசிய உட்பட பலகிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம் பிறந்து வளர்ந்த தொட்டிலாக உக்ரேன் தலைநகர் கருதப்படுகின்றது. அதனால் உக்ரேன் இரசியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்கின்றார் இரசிய அதிபர் புட்டீன். இங்கு இரசிய-உக்ரேனிய கலாச்சார முரண்பாட்டிலும் பார்க்க கலாச்சார ஒற்றுமையே ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றது.

அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக் கோட்பாடு

இரசியாவில் பிறந்து இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவரான அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி முன் வைத்த வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனை இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வழங்கியிருந்தன. ஆனால் வலிமை மிக்க இரசிய வான்படையை எதிர்கொள்ளக் கூடிய படைக்கலன்களை வழங்கவில்லை. அதனால் இரசியாவின் வான்வலிமையால் உக்ரேனில் முன்னேறியது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலைத் தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை நிர்மூலமாக்கக் கூடிய வானில் இருந்து வீசும் எறியியல் ஏவுகணைகளையும் (Kh-47M2 Kinzhal 'Dagger' hypersonic ballistic missile.) அவற்றை வீசக் கூடிய MiG-31 போர் விமானங்களையும் இரசியாவிற்கு சொந்தமான கலின்னின்கிராட் பகுதியில் இரசியா நிறுத்தி வைத்துவிட்டு புட்டீன் உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இரசியாவின் இந்த வான் வலிமையால் நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட அசைத்தால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையை இரசியா உருவாக்கி விட்டது.

மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்-சோனிக்) ஏவுகணைகளின் உற்பத்திக்கு முற்பட்ட மேற்படி கோட்பாடுகளுக்கும் அப்பால் இரசியாவை மேற்கு நாடுகளால் கைப்பற்றி ஆள முடியாது. அதே போல் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் இரசியாவால் கைப்பற்ற முடியாது. இரசியாவின் படைவலிமை அதன் எல்லையை முடிவு செய்யும். உக்ரேனை அதன் நீப்பர் நதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள டொன்பாஸ் பிரதேசத்தைக் கைப்பற்றி ஒரு தனி நாடாக்குவது அல்லது இரசியாவுடன் இணைப்பது இரசியாவால் இயலுமான ஒன்று. டொன்பாஸ் பிரதேசத்தில் இருந்து கிறிமியா வரை செல்லும் கரையோரப்பகுதியைக் கைப்பற்றி இரண்டையும் தரை வழியாக இணைப்பதையும் இரசியாவால் செய்ய முடியும். அது கிறிமியாவை இரசியாவிடமிருந்து பிரிக்க முடியாத பிரதேசமாக்கி இரசியக் கடற்படையை வலிமை மிக்கதாக்கும். இரசியா அதியும் தாண்டி முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று தற்போது நேட்டோவில் இருக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க முயன்றால் உலகம் போரழிவைச் சந்திக்கும்.

 (தொடரும்)

Monday, 7 February 2022

வேகமாக வளரும் இரசிய-சீன நட்பு

 


மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

வித்தியாசமான இரசிய சீன உறவு

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற ஒரு கேந்திரோபாயப் பங்காண்மை அல்ல. அந்த உறவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற உயர் நிலை பொருளாதாரக் கூட்டமைப்பும் அல்ல. சீனாவினதும் இரசியாவினதும் ஆட்சி முறைமைகள் வேறுபட்டனவாக இருப்பதால் அந்த உறவு ஒரு கொள்கைக் கூட்டணியும் அல்ல. அதே வேளை அது தேவைக்கு ஏற்ப ஒன்று கூடி பின்னர் கால் வாரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியும் அல்ல. அது அமெரிக்க உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ளவும் இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்ச்சி. இரசியாவும் சீனாவும் 4200கிமீ நீளமான தரை எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு 2006-ம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. சீனா தனது கொல்லைப் புறத்தில் மக்களாட்சியில் வளர்ச்சியடைந்த தைவான் இருப்பதையும் இரசியா தனது எல்லையில் வளருகின்ற மக்களாட்சி கொண்ட உக்ரேன் இருப்பதையும் விரும்பவில்லை. உலகில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைக் கைப்பற்றக் கூடிய வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் கைப்பற்றும் எண்ணம் எந்த நாட்டுக்கும் இல்லை.

எரிபொருள் வர்த்தகம்.

சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பைக் குறைத்து இரசியாவில் இருந்து பெறும் இயற்கை வாயு மூலம் தனது எரிபொருள் தேவையை சமாளிக்க சீனா முயல்கின்றது. சைபீரியா வலு (Power of Siberia) என்னும் எரிவாயுக் குழாய்த்திட்டம் மூலம் இரசியா சீனாவிற்கு சைபீரியாவில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கவிருக்கின்றது. புட்டீனின் சீனப் பயணத்தின் போது இரசியாவின் Rosneft நிறுவனமும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனமும் சீனாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு மில்லிய தொன் எண்ணெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. எரிவாயு விநியோகத்தையும் தற்போது உள்ள ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லிய கன மீற்றர் அளவில் இருந்து 48பில்லியன் கமீ ஆக உயர்த்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இரசிய சீன கூட்டுப் போர்ப்பயிற்ச்சி

Vostok 2018என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியை இரசியாவும் சீனாவும் செய்யதனVostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய் மிகப்பெரிய படைபயிற்ச்சி இதுவாக அமைந்தது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபட்டன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி நடந்தது. Tsentr-2019 (Center-2019) என்னும் பெயரில் 2019 செப்டம்பர் 16-21 வரை இரசியாவும் சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான், கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்ஹ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளும் இணைந்து படைப்பயிற்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தன.

பொருளாதார ஒத்துழைப்பு

2001-ம் ஆண்டில் $10.7பில்லியனாக இருந்த இரசிய-சீன வர்த்தகம் 2021இல் 14 மடங்காக அதிகரித்து $140பில்லியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 35% அதிகரித்தது. இரசியா தனது ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க முயல்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரசியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நடுவண் ஆசிய நாடுகளூடாகவும் நடக்கின்றது. புட்டீனின் பயணத்தில் இரசியாவின் தலைமையிலான யூரோ ஆசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt and Road Initiative) ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

நாட்டுறவிலும் உயர்ந்த நட்பு

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவிலும் பார்க்க ஜின்பிங்கிற்கும் புட்டீனிற்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்கின்றது. இருவரும் தத்தம் நாடுகளைத் தாமே உயிருள்ளவரை ஆளவேண்டும் என விரும்புகின்றார்கள். இருவரும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் மனித உரிமை என்னும் பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றன என இருவரும் கருதுகின்றனர். நேட்டோ விரிவாக்கத்தை இரசியா எதிர்ப்பதை ஜீ ஜின்பிங் ஆதரிக்கின்றார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றார் புட்டீன்.

சீனாவிற்கு சாதகமான உறவா?

இரசிய சீன உறவு சீனாவிற்கு இரசியாவிலும் பார்க்க அதிக நன்மையளிப்பதாக இருக்கின்றது என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவரின் கவனம் முழுமையாக சீனாவின் பக்கம் போகாமல் உக்ரேன் பக்கமும் போகச் செய்வதாக புட்டீன் உக்ரேனுக்கு எதிராகச் செய்யும் படை நகர்வுகள் அமைந்துள்ளன. பராக் ஒபாமா ஆசிய சுழற்ச்சி மையம் என்ற முன்னெடுப்பைச் செய்ய முயன்றபோது இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்ததால் அவர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா பன்னாட்டுக் கடல் பிராந்தியம் எனக் கருதும் தென் சீனக் கடலில் சீனா இரு செயற்கைத் தீவுகளை அமைத்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு எதிராகச் செய்ய முயலும் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்கு சீனாவில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரு படி உறவை உயர்த்தும் கூட்டறிக்கை

2021 ஜனவரியில் சீனாவின் ஊடகத்தில் இரசிய அதிபர் புட்டீன் எழுதிய Russia and China: A future-oriented strategic partnership என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இரசிய சீன உறவின் மேம்பட்ட நிலைக்கு சான்றாகி நிற்கின்றது. 2022 பெப்ரவரி 4-ம் திகதி இரு நாட்டுத் தலைவர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐயாயிரத்தி முன்னூறுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்த நீண்ட அறிக்கையில்:

1. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது உள்ள ஒன்றிற்கொன்று நன்மையளிக்கும் சிறந்த உறவை தொடர்ந்தும் பேணுவதும் மேம்படுத்துவதும்;

2. இரசியாவின் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt & Road Initiative) இணைந்து செயற்படுவது.

3. ஆர்க்டிக் வலயத்தில் இணைந்து செயற்படுவது.

4. இரு நாடுகளும் உலக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவாலையிட்டு கரிசனை கொண்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இன்னொரு நாட்டின் பாதுகாப்பை பலியிடக் கூடாது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

5. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இரு நாடுகளும்

அறம்சார் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் விதிகளுக்கமைந்த உலக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.

6. நேட்டோ விரிவாக்கத்தை இரு நாடுகளும் எதிர்க்கின்றன. (உக்ரேன் என்ற வார்த்தையே அந்த கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.)

7. இரசியா-சீனா-இந்தியா என்றவடிவத்தில் ஒத்துழைப்பை விரும்புகின்றோம்.

8. கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒத்துழைக்க விரும்புகின்றோம்.

இரசியாவும் சீனாவும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது அவற்றின் பொது எதிரிகளுக்கு பெரும் சவாலாகும். பல நட்புக்களின் வலிமையை பொது எதிரியே முடிவு செய்கின்றான். அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குளிகால ஒலிம்பிக்-2022இல் நடுங்குகின்றது.

இரசிய சீனக் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.bilaterals.org/?joint-statement-of-the-people-s

Wednesday, 24 November 2021

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?

 


94,000 இரசியப் படையினர் உக்ரேன் எல்லையில் குவிக்கபட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையை மேற்கோள் காட்டி புளூம்பேர்க் ஊடகம் 2021 நவம்பர் 21-ம் திகதி தகவல் வெளியிட்டது. உக்ரேன் அரசு பிரிவினைவாதிகள் கையில் உள்ள உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள Donetsk மற்றும் Luhansk பிரதேசங்களில் இரசியப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தயார் நிலையை விரிவு படுத்தி வருகின்றன என அறிவித்துள்ளது. உக்ரேனின் இறைமைக்குட்பட்ட அந்த இரண்டு பிரதேசங்களும் 2014இல் தம்மை தனி நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ளன. 2014இல் உக்ரேனின் கிறிமியாப் பகுதியை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்கப் படைத்துறையினர் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் எல்லையை நோக்கி இரசியா படைநகர்வு செய்வதைப் பற்றி அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கென் உக்ரேனை ஆக்கிரமிப்பது பற்றி இரசியாவிற்கு தன் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்

எல்லைகளில் தொல்லை

இரசியா உக்ரேன் எல்லையில் படைகளைக் குவிக்கையில் இரசியாவின் நட்பு நாடான பெலரஸ் போலாந்து எல்லையில் பெருமளவு தஞ்சக் கோரிக்கையாளர்களை மேற்காசிய நாடுகளில் இருந்து கொண்டு வந்து குவித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் பெலரஸ் மீது மேலும் பொருளாதாரத் தடையை அதிகரிக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து பெலரஸ் தஞ்சக் கோரிக்கையாளர்களை போலாந்து எல்லையில் இருந்து அகற்றி விட்டது. பெலரஸின் பின்னால் இரசியா நின்று செயற்படுவதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. இரசியா மேன் படையினரையும் (Reserve Force) என்றுமில்லாத அளவில் திரட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2021 நவம்பர் முதலாம் திகதி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் அதிபர் வில்லியம்ஸ் பேர்ண் இரசியா சென்று உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அமெரிக்காவின் எச்சரிக்கையை இரசியாவிடம் தெரிவித்திருந்தார்.

கேந்திர முக்கியம்மிக்க உக்ரேன்

இரசியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருக்கும் உக்ரேன் இரசியா, போலாந்து, சுலோவேனியா, ஹங்கேர், பெலரஸ், மொல்டோவா, ருமேனியா ஆகிய நாடுளுடனும் அஜோவ் கடலுடனும் செங்கடலுடனும் எலைகளைக் கொண்டுள்ளது. இரசிய எல்லையில் உக்ரேனுக்குள் உயர் மலைத் தொடர் இருப்பது இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளில் இருந்தால் அது இரசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பதற்கு இரசியா தயாராக உள்ளது என்பதை உக்ரேனுக்கு எதிராக இரசியா 2014இல் செய்த படை நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இரசியாவின் செய்மதி அழிப்பு ஏவுகணைப் பயமுறுத்தல்

இரசியா தனது செய்மதி அழிப்பு ஏவுகணைகளை (AST Anti Satellite Missiles) 2021 நவம்பர் 15-ம் திகதி வெற்றிகரமாக பரிசோதித்தது. இரசியாவில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை Direct-Ascent missile வகையைச் சார்ந்தது. அது தரையில் இருந்து செலுத்தப்பட்டு நேரடியாக இலக்கின் மீது மோதி வெடிக்கக் கூடியது. விண்வெளியி இருந்த இரசியாவின் சொந்த செய்மதி ஒன்றை அது அழித்த போது பல துண்டங்களாக சிதறியது. அத்துண்டங்கள் வான்வெளியில் உள்ள பல செய்மதிகளுக்கு ஆபத்தானவை என்பதால் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடும் விசனமடைந்தது. இரசியாவால் முப்பதிற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகளை அழித்து அமெரிக்க படையினரைக் “குருடாக்க” முடியும் என்ற இரசிய உளவுத்துறை தெரிவித்தது.

பொருளாதார காரணிகள்

உக்ரேன் இரசியாவின் யூரேசியா பொருளாதாரக் கூட்டணையில் இணைய வேண்டும் என இரசியா விரும்புகின்றது. இரசியா பொருளாதார வலிமையை அடைவதை விரும்பாத மேற்கு நாடுகள் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை விரும்புகின்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதறகான நிபந்தனைகளை நிறவு செய்யும் அளவிற்கு அதன் பொருளாதாரம் இன்னும் மேன்மையடையவில்லை. அதனால் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுடன் சில வர்த்தக் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அவற்றின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழமானதும் முழுமையானதுமான சுதந்திர வர்த்தக வலயத்தில் உக்ரேனும் ஒரு நாடாக இணைந்துள்ளது. இதில் உக்ரேனைப்போலவே மொல்டோவா, ஜேர்ஜியா ஆகிய நாடுகளும் உள்ளன.

இருதலைக் கொள்ளியெறும்பாக அமெரிக்கா

அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இரசியாவுடனான தனது முறுகல் நிலையை உறை நிலையில் வைத்திருக்க முடிவு செய்திருந்தது. இரசியா உக்ரேன் மீதும் சீனா தைவான் மீதும் ஒரேயடியாக தாக்குதல் செய்தால் அமெரிக்காவால் இரண்டு முனைகளில் அதிக அளவு மீயுயர் ஒலிவேக ஏவுகணைகளை (Hypersonic Missiles) வைத்திருக்கும் இரு வல்லரசு நாடுகளுடன் போர் செய்ய முடியாது. இதை இரசியா தனக்கு சாதகமாகப் பார்க்கின்றது. அத்துடன் 2010-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவிற்கு பல தொல்லைகளை இரசியா கொடுத்து வருகின்றது. சிரியாவில் அமெரிக்காவை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்காவில் பல இணையவெளி ஊடுருவல் இரசியாவில் இருந்து செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

இரசியாவின் வரவு செலவுக் கணக்கு

உக்ரேனின் டொன்பாஸ் பகுதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு இரசியா பெருமளவு செலவழிக்க வேண்டி இருக்கின்றது. உக்ரேனை முழுமையாக கைப்பற்றினால் இந்தச் செலவுகளைத் தவிர்க்கலாம் என்ற கருத்து இரசியாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க உக்ரேனியப் படைகள் தற்போது அதிக பயிற்ச்சியும் மேலதிகப் படைக்கலன்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. இரசியாவின் ஆக்கிரமிப்புத் திமிரால் உக்ரேனியர்கள் அதிக சினம் கொண்டுள்ளனர். அதனால் உக்ரேனியப் படையினர் அதிக ஈடுபாட்டுடன் இரசியர்களை எதிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேனை பெருமளவு இழப்புக்களுடன் இரசியா கைப்பற்றினாலும் அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரசியா பெருமளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்.



இரசியாவின் தாக்குதல் திட்டம்

உக்ரேனின் உளவுத்துறையின் அதிபர் ஜெனரல் கிரிலொ பனரனோவ் வெளியிட்ட தகவலின் படி இரசியா வானில் இருந்து ஆகாயக்குடைகள் மூலம் தரையிறக்கல், கடல்வழி ஈரூடக தரையிறக்கல், தரைவழி நகர்வு ஆகியவற்றின் மூலம் உக்ரேனை ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது. உக்ரேனை இரசியா பத்து முனைகளில் நாற்பது Battalion Tactical Groups (BTGS) மூலம் தாக்கலாம் என்றான் பனரனோவ். 94,000 படையினர் 1200 தாங்கிகள், 1600 சேணேவிகள், (ஆட்டிலெறிகள்), 330 போர்விமானங்கள், 75 கப்பல்கள், 6 நீர்மூழ்கிகள் போன்றவற்றுடன் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். மிகவுக் குளிரான கால நிலை நிலவும் ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பித்தில் இரசியா தனது ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியப் படைத்துறையின் பேச்சாளர் உலகெங்கும் படைகளை அனுப்பும் நாடுகள் எமது நாட்டு எல்லைக்குள் எமது படையினர் செய்யும் நகர்வுகளை போர் என பீதியைக் கிளப்புகின்றனர் என்றார். இரசிய உளவுத்துறையின் (SVR) அறிக்கை: அமெரிக்கா பயமூட்டுகின்றது. (“Whipping up hysteria”) எனத் தெரிவிக்கின்றது.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...