Followers

Showing posts with label நேட்டோ. Show all posts
Showing posts with label நேட்டோ. Show all posts

Wednesday, 4 May 2022

சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது புட்டினிற்கு பாதகமாகும்.

 

நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகியவை நோர்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசமான ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த நோர்டிக் நாடுகளும் அமெரிக்காவும் கனடாவும் இரசியாவுடன் போட்டியிடுகின்றன. எரிபொருள் வளம், கனிம வளம் கடலுணவு ஆகியவை நிறைந்த ஆர்க்டிக் கண்டத்தில் புவி வெப்பமாவதால் பனி உருகி கடற்போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும் அது உருவாகி வருகின்றது.

பின்லாந்தும் இரசியாவும்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அதற்கு முன்னரும். பின்லாந்தை அடிக்கடி இரசியா ஆக்கிரமித்ததுண்டு. இரசியாவின் ஆட்சியின் கீழ் பின்லாந்து இருந்ததும் உண்டு. 2022இன் ஆரம்பத்தில் இரசியாவின் எல்லையைக் கொண்டுள்ள எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய மூன்று போல்ரிக் நாடுகள் மட்டுமே நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இரசியா எஸ்த்தோனியாவுடன் 294கிலோ மீட்டர் எல்லையையும், லத்வியாவுடன் 214கிலோ மீட்டர் எல்லையையும் கொண்டுள்ளது. இரசியாவின் வெளிநில மாநிலமான கலினின்கிராட்டுடன் லித்துவேனியா 275கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளது. இம் மூன்று நாடுகளின் மொத்த எல்லை 783கிமீ நீளமானது. இவற்றிலும் பார்க்க நீண்ட எல்லையை இரசியா பின்லாந்துடன் கொண்டுள்ளது. பின்லாந்தும் இரசியாவும் 1340கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் வரை நேட்டோப்படைகள் மேற்படி மூன்று நாடுகளில் நிலை கொண்டிருக்கவில்லை. அம்மூன்று சிறிய நாடுகளையும் இரசியா ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் அவை தமது நாடுகளில் நேட்டோப் படையினர் இருக்க வேண்டும் என வேண்டின. அந்த நாடுகளில் நேட்டோ படையினரை பெருமளவில் நிலை கொள்ள வைத்தால் அது இரசியாவைக் கரிசனை கொள்ள வைக்கும் என்பதால் ஆயிரம் படையினர் மட்டுமே ஒவ்வொரு நாடுகளிலும் நிறுத்தப்பட்டன. அதே வேளை அங்கு பெரிய படைக்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டன.

பின்லாந்திற்கு சுதந்திரம் கொடுத்த புரட்சி

பின்லாந்தை இரசியப் பேரரசு ஆக்கிரமித்திருந்த வேளையில் நடந்த 1917 ஒக்டோபர் பொதுவுடமைப் புரட்சியின் போது பின்லாந்து இரசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் சோவியத் ஒன்றியத்திடமிருந்து பல நெருக்குவாரங்கள் பின்லாந்தின் மீது செய்யப்பட்டது. 1939இல் பின்லாந்தின் ஹங்கோ குடாநாட்டை தனது கடற்படைக்கு தளம் அமைக்க குத்தகைக்கு தரும்படி சோவியத் ஒன்றியம் வற்புறுத்தியதை பின்லாந்து மறுத்திருந்தது. அதனால் 1939-குளிர்காலப் போர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. வலிமை மிக்க சோவியத் படையினருக்கு எதிராக பின்லாந்து மக்கள் தீரமாக போராடினர். உலக நாடுகள் அமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. 1940-ம் ஆண்டு இரு நாடுகளும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஹங்கோ குடாநாடு முப்பது ஆண்டுகள் இரசியாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பதிலா இரசியா தனது எல்லையை 25கிலோ மீட்டர் பின் நகர்த்தியதுடன். கரெலியா பிரதேசத்தின் ஒரு பகுதியையும் பின்லாந்திற்கு விட்டுக் கொடுத்தது. 1941முதல் 1944வரை இரண்டாம் உலகப் போரின் போது பின்லாந்து ஜேர்மனியுடன் இணைந்து போர் செய்து ஹங்கோ குடாநாட்டை மீளக் கைப்பற்றிக் கொண்டது.

பின்லாந்தின் படை வலிமை

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக நிலப்பரப்பும் குறைந்த மக்கள் தொகையும் கொண்ட பின்லாந்தில் படைக்கு கட்டாயமாக ஆட் சேர்க்கும் முறை உள்ளது. பதினெட்டு வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் கட்டாயம் படைப்பயிற்ச்சி பெறவேண்டும். பின்லாந்தில் 19,000 படையினரும் 3,000 சிறப்பு எல்லைக் காவல் படையினரும் உள்ளனர். ஆனால் பின்லாந்தில் உள்ள கட்டாயப் படைப் பயிற்ச்சியால் அது எந்த நேரத்திலும் 280,000படையினரை போரில் ஈடுபடுத்தக் கூடிய நிலையில் உள்ளது. அத்துடன் பயிற்ச்சி பெற்ற மேன்படையினர் (Reserve Force) பல இலட்சம் பேரையும் பிலாந்தால் போரில் ஈடு படுத்த முடியும். 2023-ம் ஆண்டு பின்லாந்து பாதுகாப்பு செலவிற்கு அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 2.3%ஐ ஒதுக்கவுள்ளது. இது மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவாகும். 

நடுநிலை எடுத்த சுவீடன் மாறுகின்றது

சுவீடனின் 170 ஆண்டுகால வரலாற்றில் சுவீடனின் ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடையேயான மோதலில் நடுநிலை வகிப்பவர்களாக இருந்தனர். ஆனாலும் இரசியா மீதான நெப்போலியனின் படையெடுப்பை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். சுவீடனும் பின்லாந்தைப் போலவே இரசியாவுடன் பல போர்களில் ஈடுபட்டது. 1790-ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர் சுவீடனின் எல்லையை இரசியா மதிப்பதாக ஒத்துள் கொள்ளப்பட்டது. ஜெர்மன் இரசியாமீது தொடுத்த போர் பின்லாந்தை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. அதற்கு முன்னர் நெப்போலியன் இரசியாவிற்கு எதிராக செய்த போர் சுவீடனை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. உலகின் 13வது பெரிய படைக்கல ஏற்றுமதி நாடாக சுவீடன் இருக்கின்றது.  சுவீடனின் Jas 39 Gripen விமானம் உலகின் முன்னணி போர்விமானங்களில் ஒன்றாகும். அதன் போர்விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்து விளங்குபவை. நேட்டோவில் சுவீடன் இணைவது இரசியாவிற்கு எதிரான நேட்டோவின் படைவலுவை அதிகரிக்கச் செய்யும்.

பனிப்போரில் நடுநிலை

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவான பனிப்போரில் சுவீடனும் நேட்டோ பின்லாந்தும் நடுநிலை வகித்து கொண்டன. இருந்தும் சோவியத் ஒன்றியம் தம்மை ஆக்கிரமிக்கலாம் என்ற கரிசனையும் தமது நாடுகளிற்கும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” வரலாம் என்ற அச்சத்துடனும் இருந்தனர். அதனால் அவர்கள் தற்போது மூன்று வல்லரசுகள் உட்பட முப்பது நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்புடன் அதிகம் ஒத்துழைத்தனர். 1990களில் இருந்து சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பினுடன் கூட்டுப் போர்ப்பயிற்ச்சி உட்பட பலச் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

மனம் மாறிய ஜெர்மனி

உக்ரேன் மீது 2022 பெப்ரவரியில் செய்த படையெடுப்பில் இரசியாவிற்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகளில் ஒன்று இரசியாவிற்கு எதிராக ஜெர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையாகும். நேட்டோ விரிவாக்கத்திற்கு ஜெர்மனி ஆதரவு கொடுத்தால் அது இரசியாவிலிருந்து ஜெர்மனி பெறும் எரிவாயு, இரசியாவிற்கான ஜெர்மனியில் மகிழூர்ந்து ஏற்றுமதி போன்றவற்றை பாதிக்கும் என கரிசனை கொண்டிருந்த ஜெர்மனி தனது படைத்துறைச் செலவை அதிகரித்தது. உக்ரேனுக்கு அனுப்ப மறுத்திருந்த படைக்கலன்களை அனுப்பியது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதை ஜெர்மனி ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது. 2022 மார்ச் 3-ம் திகதி ஜெர்மன் அதிபர் Olaf Scholz பின்லாந்தினதும் சுவீடனினதும் தலைமை அமைச்சர்களான Sanna Marin மற்றும் Magadalena Anderson ஆகியோர்  அருகிருக்க ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

பின்லாந்து திசைமாறும் முடிவெடுக்கலாம்

பின்லாந்தின் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் அரசுக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னர் பின்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் இணைவது தொடர்பாக 2022 மே மாதம் 13-ம் திகதி முடிவெடுப்பார்கள். அதே போல் 2022 மே மாதம் 12-ம் திகதி சுவீடனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். இரண்டு நாடுகளினதும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் அவர்களது நாடுகள் இணைவதை விரும்புகின்றார்கள். பின்லாந்தின் மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பும் பெரும்பான்மையானவர்கள் நேட்டோவில் இணைவதை விரும்புகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றன. இரசியாவுடன் 830 மைல் எல்லையைக் கொண்ட பின்லாந்தால் நேட்டோவிற்கு பயன் தரக் கூடிய வகையில் பல உளவுத் தகவல்களை இரசியாவில் இருந்து திரட்ட முடியும். இதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதிலும் பார்க்க பின்லாந்து நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கு சாதகமாகவும் இரசியாவிற்கு பாதகமாகவும் அமையும். ஒன்பது இலட்சம் படையினரைக் கொண்ட பின்லாந்திடம் ஜெர்மனியிடம் இருப்பதலும் பார்க்க அதிக எண்ணிக்கையிலான போர்த்தாங்கிகள் உள்ளன.

மிரட்டும் புட்டீன்

தனது எல்லையில் இருக்கும் நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணையக்கூடாது என உறுதியுடன் இருக்கின்றார். உக்ரேன் நேட்டோவில் இணையக் கூடாது என்பதற்காக அதன் மீது படையெடுத்த புட்டீன் நேட்டோவில் பின்லாந்தும் சுவீடனும் இணைவதை எதிர்க்க புட்டீன் பலவகையான மிரட்டல்களைச் செய்கின்றார். 2022 மார்ச் 2-ம் திகதி இரசியாவின் இரண்டு Su-27 போர்விமானங்களையும் இரண்டு Su-24 போர்விமானங்களையும் சுவீடனின் வான்பரப்புக்குள் அத்து மீறிச் சென்றன. சுவீடனின் விமானங்கள் அவற்றின் அலைவரிசையை குழப்பி திருப்பி அனுப்பின.

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவது இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான படைவலு நிலைமையை இரசியாவிற்கு பாதகமாக்கும். இரசியா மீதான நேட்டோவின் தாக்கும் திறனை பெருமளவில் அதிகரிக்கும். இரசியாவின் எல்லையில் உள்ள நாடு ஒன்று நேட்டோவில் இணைவது இரசியாவிற்கு அச்சுறுத்தலை அதிகரிக்கும். அதே வேளை அந்த புதிய நேட்டோ உறுப்பு நாட்டில் நேட்டோ படையினர் தளம் அமைப்பது இரசியாவிற்கான அச்சுறுத்தலை பன்மடங்காக்கும். சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தாலும் அந்த இரு நாட்டிலும் நேட்டோ படைகள் தளம் அமைக்க மாட்டாது எனச் சொல்லலாம். நேட்டோவின் ஆரம்பகால உறுப்பு நாடான நோர்வே இரசியாவின் சினத்திற்கு உள்ளாகாமல் இருக்க தனது நாட்டில் நேட்டோ படைத்தளம் அமைக்கப்படுவதை தவிர்த்து வருகின்றது.

Friday, 1 April 2022

புட்டீன் இரும்பு வேலி அமைக்கின்றாரா? பொறியில் சிக்கினாரா?

 


உக்ரேனில் நடப்பது அயோக்கிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி என்பதை மனதில் கொண்டு அங்கு நடப்பதைப் பார்ப்போமாக. London School Economics என்னும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் உக்ரேனை புட்டீனை மாட்ட வைக்கும் பொறியாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில நேட்டோ நாடுகள் பாவிக்கின்றன என ஒரு கட்டுரையை உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade எழுதியுள்ளார். அவரின் கருத்துப் படி உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கத் தூண்டும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அவரை அங்கு சிக்க வைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அவருக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்வது புட்டீனின் எதிரிகளின் நோக்கம் என்கின்றார் Robert H Wade.

வல்லரசுகளுக்கு கவசம் அவசியம்.

ஒரு வல்லரசு நாட்டைச் சுற்றிவர ஒரு கவசப் பிரதேசம் இருத்தல் அவசியம். அப்பிரதேசத்தில் இருக்கும் அரசுகள் நட்பாக அல்லது நடுநிலையாக இருக்க வேண்டும். வலிமை மிக்க இரண்டு போட்டி நாடுகளிடையே இருக்கின்ற நாடுகள் எந்த நாட்டுக்கு கவச நாடாக இருப்பது என்ற போட்டி இடையில் இருக்கும் நாட்டிற்கு மிகவும் பாதகமாக அமையும். இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் இருக்கும் நேப்பாளம் உருப்பட முடியாமல் இரண்டு நாடுகளும் சதி செய்கின்றன. நேப்பாளத்தின் நிலை இரண்டு யானைகள் சண்டை பிடித்தாலும் காதல் செய்தாலும் காலடியில் இருக்கின்ற புற்களுக்குத்தான் அழிவு என்பது போன்றது. சோவியத் ஒன்றியத்தின் இரும்பு வேலி நாடுகளாக போலாந்து, கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, அல்பேனியா ஆகிய நாடுகள் இருந்தன. இவை சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளல்ல ஆனால் இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகள் என ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவிற்கு சவால் விடும் நாடுகளாக இருந்தன. அந்த இரும்பு வேலி 1991இல் வார்சோ கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் தகர்ந்து போனது. “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள்” என்னும் படைத்துறைக் கூட்டமைப்பை 1994-ம் ஆண்டு இரசியா ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான், ஆர்மீனியா, பெலரஸ், கஜக்கஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து உருவாக்கியது. ஆனால் அதில் இருந்து ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான் பின்னர் விலகி விட்டன. அந்த பாதுகாப்பு கூட்டமைப்பில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் இருத்தல் அவசியம். உக்ரேனியர்களை நேட்டோ கூட்டமப்பு தனது பரப்புரைகள் மூலம் தம் பக்கம் கவர்ந்து விட்டது. நேட்டோவில் இணையக் கூடிய தகமை உக்ரேனுக்கோ அல்லது ஜோர்ஜியாவிற்கோ இல்லை. இருந்தும் அவை இரண்டையும் தாம் வரவேற்பதாக நேட்டோ நாடுகள் அறிவித்தன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனை போன்ற இரசியாவுடன் முறுகலை விரும்பாத நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதில் அக்கறை காட்டவில்லை.

நட்பற்றவர்களால் சூழப்பட்ட இரசியா

உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைச் சூழ பதினைந்திற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. வட துருவத்தில் அமெரிக்காவின் அலாஸ்க்கா மாகாணம் எல்லையாக இருக்கின்றது கிழக்கில் நேட்டோ நாடுகளான லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, நோர்வே, போலாந்து ஆகிய நேட்டோ நாடுகள் உள்ளன. தூர கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. தற்போது இரசியாவுடன் பல ஒத்துழைப்பைச் செய்யும் வல்லரசான சீனா இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அணுகுண்டு வைத்திருக்கும் வட கொரியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. உக்ரேனும் ஜோர்ஜியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்ட நாடுகள். 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து அதன் நிலப்பரப்பில் இரு பகுதிகளை தனி நாடாக்கியது இரசியா. 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களையும் பிரித்து இரசியா தனி நாடாக்கியது. கஜகஸ்த்தானும் மொங்கோலியாவும் பிரச்சனை இல்லாத இரசியாவின் அயல் நாடுகள் எனக் கருதலாம். இரசியாவின் ஒரே நட்பு நாடு பெலாருஸ் மட்டுமே. இந்த சூழலில் இரசிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கொள்கை வகுப்பாளர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றார்கள்.

புட்டீனின் சோவியத்-2.0 கனவு

தற்போதைய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் 1991-ம் ஆண்டில் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியம் உடைந்ததை 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார்-அரசியல் விபத்து எனக் கருதுகின்றார். மீண்டும் இரசியா தலைமையில் சோவியத் ஒன்றியம்-2ஐக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவுடன் 1999-ல் ஆட்சிக்கு வந்த புட்டீன் 2020-ம் ஆண்டு இரசியா உலகின் முதற்தர வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டவர். சோவியத் ஒன்றியம் போல் பொருளாதாரம் மீது அதிக கவனம் செலுத்தாமல் படைத்துறையை மட்டும் கட்டி எழுப்பினால் போதாது என்பதை நன்கு உணர்ந்தவர். படைத்துறையை சிக்கனத்துடன் கட்டி எழுப்ப வேண்டும் என நினைப்பவர். இரசியாவை முன்பு ஆண்ட பொதுவுடமைக் கட்சியினர் படைக்கல உற்பத்தியில் சிக்கனத்தையோ பொருளாதாரத் திறனையோ கடைப்பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை கட்டி எழுப்ப இரசியாவிற்கு மிகவும் அவசியமான நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஆகும். இரண்டு நாடுகளையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைப்பது போல அமெரிக்கா நடிக்கின்றது. இரண்டு நாடுகளும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைய விரும்புகின்றன. அப்படி இணைய முற்பட்டால் இரசியா அதைக் கடுமையாக எதிர்க்கும் என நேட்டோ நாடுகள் அறியும். இன்னொரு நாட்டுடன் போர் புரியக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. உறுதியான அரசு, அமைதி, மனித உரிமைகளைப் பேணுதல், காத்திரமான பொருளாதாரம் போன்றவை உள்ள நாடுகள் மட்டுமே நேட்டோவில் இணையலாம். ச் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முயன்றமை விளடிமீர் புட்டீனைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2022 பெப்ரவரி மாதம் 24-ம் திகதி இரசியாவை சுற்றி ஒரு இரும்பு வேலி போடும் நோக்கத்துடன் இரசியப் படைகளை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார்.

பொருளாதாரத்தால் இரசியாவை விழுத்தினார்களாம்

பொருளாதாரப் பிரச்சனையால் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தமைக்கு அது ஆப்கானிஸ்த்தானில் படையெடுத்தமை முக்கிய காரணமாகும். சோவியத்-2.0ஐக் கட்டி எழுப்பும் முயற்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய அமெரிக்கா திட்டம் போட்டிருக்கலாம். அமெரிக்கா உக்ரேனுடன் ஒரு தொடர்ச்சியான போரை நடத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் காத்திருந்த வேளையில் 2014-ம் ஆண்டு புட்டீன் ஒரு சில நாட்கள் செய்த படை நடவடிக்கையின் மூலம் இரசியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவைக் கைப்பற்றினார். அப்போரில் இரசியாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படாமல் புட்டீன் பார்த்துக் கொண்டார். அதை சாட்டாக வைத்து உக்ரேனியர்களை நேட்டோவில் இணையத் தூண்டும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உக்ரேனியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களும் போதிய பயிற்ச்சியும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளால் வழங்கப்பட்டது. 2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவில் உக்ரேன் இணையவேண்டும் என அதன் அரசியலமைப்பு யாப்பை திருத்தியது. இது புட்டீனுக்கு போடப்பட்ட தூண்டிலாக இருக்கலாம். 2020இல் சோவியத்-2.0 கட்டி எழுப்பும் திட்டத்துடன் இருந்த புட்டீனுக்கு இது பெரும் சினத்தை மூட்டியது. அப்போது பரவிய கொவிட்-19 பெருந்தொற்று அவருக்கு தடையாக இருந்தது. அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களும். லேசர் படைக்கலன்களும் தொலைதூர தாக்குதல் விமானமான B-21 போன்றவை போர்க்களத்தில் முழுமையான பாவனைக்கு தயாராக முன்னர் 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்கு தன் படைகளை அனுப்பினார்.

உண்மையை உளறிக் கொட்டினாரா ஜோ பைடன்?

அமெரிக்க அதிபர் 2022 மார்ச் 26-ம் திகதி போலந்து தலைநகர் வார்சோவில் தயாரிக்காத உரை ஒன்றை ஆற்றும் போது “கடவுளிற்காக அந்தாள் (புட்டீன்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது” என்றார். இது அவர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லவில்லை என்பதை உலகை நம்ப வைக்க அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் உட்பட பலர் சிரமப் பட்டார்கள். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிலிங்கன் தங்களிடம் இரசியாவில் ஆட்சி மாற்றம் செய்யும் உபாயம் இல்லை என்றார். ஆனால் புட்டீன் உக்ரேனுக்கு படையனுப்பிய 2022 பெப்ரவரி 24-ம் திகதி தனது வெள்ளை மாளிகையில் உரையாற்றைய ஜோ பைடன் இரசியாமீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையல்ல மாறாக இரசியாவைத் தண்டிக்கச் செய்யப்பட்டவை. அதனால் இரசியர்களுக்கு புட்டீன் எதைக் கொண்டு வந்தார் என்பதை உணரவைக்க முடியும் என்றார். அதன் பின்னர் மூன்று நாள்கள் கழித்து பிரித்தானியப் படைத்துறை அமைச்சர் எழுதிய கட்டுரை ஒன்றில் புட்டீனின் தோல்வி முழுமையானதாக இருக்க வேண்டும். உக்ரேனிய இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இரசியர்கள் புட்டீன் தங்களைப்பற்றி என்ன எண்ணுகின்றார் என்பது உணர்த்தப் படவேண்டும். அதன் மூலம் புட்டீனின் நாட்கள் எண்ணப் படவேண்டும். புட்டீனுக்குப் பின்னர் இரசியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்ய முடியாத அளவிற்கு அவர் அதிகாரத்தை இழக்க வேண்டும் என்றார். 2022 மார்ச் முதலாம் திகதி பிரித்தானிய தலைமை அமைச்சரின் பேச்சாளர் இரசியா மீது கொண்டு வரப்பட்டுள்ள தடை புட்டீனின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வரும் என்றார். இந்த அறிக்கைகள் உக்ரேனை நடுவணாக வைத்து மாஸ்க்கோவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அமெரிக்க உபாயத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார் உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade. இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு உக்ரேனை புதைகுழியாக்கக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனியரகளுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தில் இரசியப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரத் தடைகளை இரசியாமிது விதிக்கின்றன நேட்டோ நாடுகள். அதே வேளை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் புட்டீனை ஒரு கொடூரமானவராகவும் மன நிலை சரியில்லாதவராகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

Consortium News என்னும் இணையத் தளத்தில் Joe Lauria எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கு நாடுகளின் இறுதி நோக்கம் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றி தமக்கு இணக்கமாக நடக்கக் கூடிய ஒருவரை இரசியாவின் ஆட்சி பீடத்தில் என்றார். ஆனால் இரசிய மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள்.

Saturday, 26 February 2022

உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்


புவிசார் அரசியல் என்பது நிலப்பரப்புக்கள், கடற்பரப்புகள், வான்வெளி, விண்வெளி, வளங்கள், அரசுகள், தலைமைத்துவ ஆளுமைகள், அரசற்ற அமைப்புக்கள், நாகரீகங்கள், மக்கள், பொருளாதாரம், படைவலிமை ஆகியவற்றிடையேயான செயற்பாடுகள் பற்றிய கேந்திரோபாயத்தை பகுப்பாய்வு செய்வதாகும். அரசியல் புவியியல் (Plitical Geography) நிலவியல் (Anthropogeography) ஆகியவற்றில் இருந்து புவிசார் அரசியல் உருவானது. இங்கு நிலம் என்பது அளவு மட்டும் சார்ந்ததல்ல தரமும் சார்ந்ததாகும். புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்

2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பார்கள்.” என்பது அவரது கோட்பாடு. 193இனக்குழுமங்களைக் கொண்ட இரசியாவில் 146மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்திலும் அதிகமாக இருப்பதாலும் குடிவரவாளரகளின் தொகையிலும் பார்க்க குடியகல்வாளர்களின் தொகை அதிகரிப்பதாலும் இரசியாவின் மக்கள் தொகை குறைந்து செல்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவின் நிலப்பரப்பு உலகின் மிகப் பெரியதாக உள்ளது. அதனால் Friedrich Ratzelஇன் கோட்பாடு உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கான உட்பார்வையைக் தரவில்லை.

Sir Halford John Macinderஇன் இதயநிலக் கோட்பாடு

Halford Mackinder புவியியல் சுழற்ச்சி மையத்தின் வரலாறு என்னும் தலைப்பில் 1904இல் எழுதிய கட்டுரையில் அவர் உலகப் புவிசார் அரசியல் ஆசிய-ஐரோப்பிய பெருங்கண்டத்தின் இதயநிலத்தில் தங்கியுள்ளது என்றார். உலகத்தை ஐம்பெரும் பகுதிகளாகப் பிரித்தார்:

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland): உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.

கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலகத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது Halford Mackinder முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது. பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, போலாந்து, இரசியா, சிலோவாக்கியா, பெலரஸ், மொல்டோவா, உக்ரேன், எஸ்த்தோனியா, லத்வியா, எஸ்த்தோனியா, ஜோர்ஜியா ஆகியவை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளாகும். இவற்றில் பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா, போலந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருக்கின்றன. உக்ரேனும் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முற்பட்ட போது இரசியா அவற்றின் மீது படையெடுத்து அங்கு பிரிவினைகளை உருவாக்கி புதிய நாடுகளை உருவாக்கியுள்ளது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த 1914-1918இல் நடந்த முதலாம் உலகப் போர் இதய நிலத்திற்கான போட்டியை முடிவுக்கு கொண்டுவராது என்றும் அவர் அப்போதே எதிர்வு கூறியிருந்தார். இன்று அது மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் இரசியா மறுதரப்பாகவும் இருந்து கொண்டு போட்டி நகர்வுகளில் ஈடுபடுகின்றன. அதன் ஒரு பகுதியே இரசியா 2022 பெப்ரவரியில் 24-ம் திகதி உக்ரேன் மீது செய்த ஆக்கிரமிப்பாகும்.

கடல்வலிமைக் கோட்பாடு

அமெரிக்கரான Alfred Thayer Mahan ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது. உக்ரேன் தனது கடற்படையின் வலிமையை பெருக்காமல் விட்டதுடன் தன்னிடம் இருந்த கடற்கலன்களை விற்பனை செய்து தனது பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்தது. உக்ரேனிடம் வலிமையான கடற்படை இல்லாத படியால் அது உலகின் அதியுயர் கேந்திரோபாய நிலப்பரப்பில் ஒன்றான கிறிமியாவை 2014இல் இழந்தது. இன்று (26-02-2022) ஓரிரு நாட்களில் இரசிய போர்த்தாங்கிகள் அதன் தலைநகரிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

Nicholas Spykmanஇன் வளையநிலக் கோட்பாடு

Nicholas Spykman வளைய நிலத்தை ஆள்பவன்தான்தான் உலகத்தை ஆள்வான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி. Nicholas Spykman இன் கோட்பாட்டின் முக்கிய அம்சம் கடல் போக்குவரத்திற்கான  அண்மையாக நாடுகள் இருக்க வேண்டும் என்பதாகும். இரசியாவின் குளிர்மையற்ற கடல் உக்ரேனை ஒட்டியே அமைந்திருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா பிரதேசத்தில் உள்ள இரசியக் கடற்படைத்தளம் இரசியாவின் எதிரியின் கைக்களுக்குப் போனால் அது இரசியாவின் வல்லரசு என்ற நிலையைக் கேள்விக் குறியாக்கும். உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்தால் கிறிமியாவை இரசியா இழக்கும் ஆபத்து ஏற்படும். அதைத் தவிர்க்கவே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது.

நாகரீக கோட்பாடு

Samuel Phillips Huntington (1927- 2008) 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். 1. மேற்கு நாடுகள், 2. லத்தின் அமெரிக்க நாடுகள், 3. இஸ்லாமிய நாடுகள், 4. சீனா, 5. இந்து, 6. மரபு வழியினர், 7. ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப் படுத்தியுள்ளார். இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் உள்ளன. இரசிய உட்பட பலகிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம் பிறந்து வளர்ந்த தொட்டிலாக உக்ரேன் தலைநகர் கருதப்படுகின்றது. அதனால் உக்ரேன் இரசியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்கின்றார் இரசிய அதிபர் புட்டீன். இங்கு இரசிய-உக்ரேனிய கலாச்சார முரண்பாட்டிலும் பார்க்க கலாச்சார ஒற்றுமையே ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றது.

அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக் கோட்பாடு

இரசியாவில் பிறந்து இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவரான அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி முன் வைத்த வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனை இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வழங்கியிருந்தன. ஆனால் வலிமை மிக்க இரசிய வான்படையை எதிர்கொள்ளக் கூடிய படைக்கலன்களை வழங்கவில்லை. அதனால் இரசியாவின் வான்வலிமையால் உக்ரேனில் முன்னேறியது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலைத் தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை நிர்மூலமாக்கக் கூடிய வானில் இருந்து வீசும் எறியியல் ஏவுகணைகளையும் (Kh-47M2 Kinzhal 'Dagger' hypersonic ballistic missile.) அவற்றை வீசக் கூடிய MiG-31 போர் விமானங்களையும் இரசியாவிற்கு சொந்தமான கலின்னின்கிராட் பகுதியில் இரசியா நிறுத்தி வைத்துவிட்டு புட்டீன் உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இரசியாவின் இந்த வான் வலிமையால் நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட அசைத்தால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையை இரசியா உருவாக்கி விட்டது.

மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்-சோனிக்) ஏவுகணைகளின் உற்பத்திக்கு முற்பட்ட மேற்படி கோட்பாடுகளுக்கும் அப்பால் இரசியாவை மேற்கு நாடுகளால் கைப்பற்றி ஆள முடியாது. அதே போல் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் இரசியாவால் கைப்பற்ற முடியாது. இரசியாவின் படைவலிமை அதன் எல்லையை முடிவு செய்யும். உக்ரேனை அதன் நீப்பர் நதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள டொன்பாஸ் பிரதேசத்தைக் கைப்பற்றி ஒரு தனி நாடாக்குவது அல்லது இரசியாவுடன் இணைப்பது இரசியாவால் இயலுமான ஒன்று. டொன்பாஸ் பிரதேசத்தில் இருந்து கிறிமியா வரை செல்லும் கரையோரப்பகுதியைக் கைப்பற்றி இரண்டையும் தரை வழியாக இணைப்பதையும் இரசியாவால் செய்ய முடியும். அது கிறிமியாவை இரசியாவிடமிருந்து பிரிக்க முடியாத பிரதேசமாக்கி இரசியக் கடற்படையை வலிமை மிக்கதாக்கும். இரசியா அதியும் தாண்டி முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று தற்போது நேட்டோவில் இருக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க முயன்றால் உலகம் போரழிவைச் சந்திக்கும்.

 (தொடரும்)

Wednesday, 16 February 2022

உக்ரேனில் புட்டீன்: பதுங்கலா பின்வாங்கலா?

 

2022 பெப்ரவரி 15-ம் திகதி இரசியப் பாதுகாப்புத்துறை உக்ரேன் எல்லையில் இருந்து பத்தாயிரம் படையினரை விலக்குவோம் என அறிவித்தவுடன் உலகப் பங்குச் சந்தைச் சுட்டிகள் அதிகரித்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருந்த அமெரிக்காவின் Dow Jones சுட்டி 400 புள்ளிகளால் அதிகரித்தது. 2022 பெப்ரவரி 14-ம் திகதி இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரேன் நெருக்கடி தணிக்க வாய்ப்புள்ளது எனச் சொன்னவுடன் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி அதிகரித்தது. இரசியப் பங்குச் சந்தையின் சரிவும் குறைந்தது. இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு வார்த்தைக்கு முக்கியமாக படைக்கலக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு இன்னும் இடமுள்ளது என்று அறிவித்தமை போரை தவிர்க்க இரசியா விரும்புகின்றது என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.  

இரசியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்

உக்ரேன் நெருக்கடிக்குப் பின்னர் இரசியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வது ஐம்பது விழுக்காட்டால் குறைந்து போயிருந்தது. இந்தோனேசியா, அல்ஜீரியா, எகிப்த்து ஆகிய நாடுகள் இரசியாவிடமிருந்து வாங்கவிருந்த SU-35 போர் விமானங்களை வாங்குவதில்லை என முடிவெடுத்தன. இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை வந்தால் SU-35இன் முக்கிய பாகங்களை இரசியா மேற்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் போகும். அதனால் SU-35இன் செயற்படு திறன் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் எல்லையில் படை குவித்ததைத் தொடர்ந்து இரசியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

போர் வேண்டாம் உக்ரேனைப் பிரிப்போம்

“எமக்கு போர் வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் வேண்டாம்” என்ற இரசிய அதிபர் புட்டீனின் வாசகம் உலகத்தை உலுப்பியுள்ளது. இரசியாவின் பத்தாயிரம் படையினர் விலக்கல் அறிவிப்பை உக்ரேனும் நேட்டோ நாடுகளும் கவனத்துடன் வரவேற்றன. உக்ரேன் நேரில் காணும் வரை அதை நம்ப மாட்டோம் என்றது. அமெரிக்கா தாம் அதை உறுதி செய்து கொள்வோம் என்றன. இரசிய அதிபர் சமாதான சமிக்ஞையை ஒரு புறம் வெளிப்படுத்த மறுபுறம் உக்ரேனின் இரண்டு வங்கிகள் இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதேவேளை இரசிய நாடாளுமன்றம் உக்ரேனின் கிழக்குப் புறமாக பிரிவினை வேண்டி நிற்கும் Donetsk, Luhansk ஆகியவற்றை குடியரசுகளாக அங்கீகரிக்க அதிபரைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இவை புட்டீனின் பின் வாங்கலுக்கான அறிகுறிகள் இல்லை.

இரண்டு கழுகுகள்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் 1990களில் அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினராகவும் வெளியுறவுத்துறைக் குழுவின் உறுப்பினராக இருந்த போது முன்னாள் சோவியத் ஒன்றிய செய்மதி நாடுகளாக இருந்த போலாந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகளை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைப்பதற்கு முன்னின்று உழைத்தார். நேட்டோ விரிவாக்கத்தில் விருப்பம் உள்ளவராக ஜோ பைடன் கருதப்படுகின்றார். ஜெர்மனியை கிழக்கு மேற்கு என இரு நாடுகளாகப் பிரித்து நின்ற பேர்லின் சுவர் 1989-ம் ஆண்டு தகர்க்கப்பட்டமை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. பேர்லின் சுவர் தகர்க்கப் பட்டபோது கிழக்கு ஜெர்மனியில் சோவியத்தின் உளவுத்துறையில் பணிபுரிந்தவர் தற்போது இரசிய அதிபராக இருக்கும் விளடிமீர் புட்டீன். சோவியத் ஒன்றியத்தை நிலை நிறுத்த உழைத்தவர். அவர் கண் முன்னே அது சரிவதை பார்த்துக் கொண்டிருந்தவர்.

உறுதிமொழி பற்றி உறுதி செய்ய முடியவில்லை

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் கிழக்கு ஜெர்மனியை மட்டும் நேட்டோவில் இணைக்கும் மற்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைக்க மாட்டாது என இரசியாவிற்கு ஜோர்ஜ் புஷ் ஒரு உறுதி மொழியை வழங்கியிருந்தார் என இரசியர்கள் நம்புகின்றனர். 12-09-1990இல் அப்படி ஓர் உறுதி மொழி ஜோர்ஜ் புஷ்ஷால் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கப்பட்டது என புட்டீன அடித்துச் சொல்கின்றார். அது பற்றி எந்த எழுத்து மூலமான ஆதாரமும் இல்லை. இப்போது அப்படி ஓர் உறுதி மொழி வழங்கப்படவில்லை என்கின்றன மேற்கு நாடுகள். ஆனால் தங்களுக்கு துரோகமிழைக்கப் பட்டு விட்டதாக பல இரசியர்கள் நம்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 20-ம் நூற்றாண்டில் நடந்த ஒரு புவிசார் அரசியல் விபத்து என விளடிமீர் புட்டீன் கருதுகின்றார். சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என அவர் கருதுகின்றார்.

இளகிய இரும்பென நினைக்கின்றாரா பைடன்

உக்ரேனில் இருந்து பத்தாயிரம் படையினர் விலக்கப்படுவார்கள் என இரசியா அறிவித்தவுடன் உலக மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் நாம் முழு வலிமையுடன் பாதுகாப்போம். உக்ரேனின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என முழங்கினார். இரசியாவின் பத்தாயிரம் படைவிலக்கலை இளகிய இரும்பென நினைத்து அவர் பாய்ந்து பாய்ந்து அடிப்பது போல் அவரது உரை அமைந்திருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் இரு கட்சிகளும் இணைந்து இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் இரசியாமீது முன்பு எப்போதும் இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அறிக்கை விட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் உலகெங்கும் உள்ள நாடுகளையும் திரட்டி பொருளாதாரத்தடை செய்ய வைப்போம் எனவும் பைடனின் உரையில் சூளுரைக்கப்பட்டிருந்தது.  

புட்டீனின் பிரச்சனைகள்

1, நேட்டோ ஒற்றுமை: புட்டீன எதிர்பார்த்தது போல் உக்ரேனை எப்படி இரசியாவிடமிருந்து பாதுகாப்பது என்பது தொடர்பாக முறுகல் தோன்றவில்லை. அவர்களிடையே எப்படி அணுகுவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்தன. பிரான்ஸ் அதிபரும் ஜேர்மனிய அதிபரும் தமது பாணியில் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஆனால் உக்ரேன் நேட்டோவில் இணைவது தொடர்பாக நேட்டோ தலைவர்களிடம் ஒரே கருத்து இருந்தது. உக்ரேன எந்தப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது என்பது உக்ரேனின் இறைமையுடன் தொடர்புடையது என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். உக்ரேனை இரசியாவிற்கு விட்டுக் கொடுத்தால் இரசியா அத்துடன் நிற்காமல் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துள்ள லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என புட்டீன அடம் பிடிக்கலாம் என நேட்டோ தலைவர்கள் கருதலாம்.

2. பருவ நிலை: 2022 பெப்ரவரி நடுப்பகுதியில் இரசியா உக்ரேனுக்குள் படைகளை அனுப்பினால் அது இரண்டு வாரங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். இரசியாவின் உயர்ந்த எதிர்பார்ப்பு உக்ரேனில் தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்ந்த்துவது ஆகும். உக்ரேனியர்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னால் உறுதியாக திரண்டு நிற்பதுடன் பலர் படையில் சேர விருப்பமும் தெரித்துள்ளனர். மார்ச் மாத ஆரம்பத்தில் உக்ரேனை முடியுள்ள பனி பகுதியாக உருகத் தொடங்கி பனிச்சேறு உருவாகும். அது இரசியப் படையினருக்கான வழங்கல்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விமான மூலமாக உணவு, சுடுகலன்கள், எரிபொருள், படைக்கல உதிரிப்பாகங்களை விநியோகிக்க வேண்டி வரும். அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரேனுக்கு போல்ரிக் நாடுகளூடாக வழங்கியுள்ளது.

3. படைக்கலன்கள்: தரையூடான படை நகர்விற்கு முழு ஆதாரமாக போர்த்தாங்கிகள் செயற்படும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ள போர்த்தாங்கிகளிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையான தாங்கி அழிப்பு ஏவுகணைகள் தற்போது உக்ரேனிடம் உள்ளன. அதனால் இரசியப் படையினர் பெரும் ஆளணி இழப்புக்களை சந்திப்பர்

4. பொருளாதாரம்: மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற பல நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவரும் போது இரசியா பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்ளும்.

5. உக்ரேனின் உறுதிப்பாடு: உக்ரேனை இலகுவில் மிரட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் இரசியா உக்ரேன் எல்லையில் ஒரு இல்ட்சம் படையினரைக் குவித்தது. உக்ரேன் விட்டுக் கொடுக்காத நிலையில் மேலும் முப்பதினாயிரம் படையினரைக் குவித்தது. அதற்கும் உக்ரேன் மசியவில்லை.

6. ஜெர்மனி கடுமையான நிலைப்பாடா? இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜெர்மனி மட்டுமே இளகிய நிலையில் இருந்தது. ஜெர்மனி அதிபரின் நிலைப்பாடு தொடர்பாக ஜெர்மனியிலும் மேற்கு நாடுகளிலும் எதிர்ப்பு உருவானது. ஜெர்மனிய அதிபர் புட்டீனைச் சந்திக்க முன்னரே அவர் தனது நிலைப்பாடு மாறும் என்ற செய்தியை இரசியாவிற்கு தெரியப்படுத்தி இருக்கலாம்.

புட்டீன் புகழுக்கு பங்கம்

பெரியதாக வீராப்பு பேசும் புட்டீன் உக்ரேன் திரையரங்கில் அரங்கேற்ற முயன்ற காட்சி உப்புச் சப்பில்லாமல் முடிவது அவரது விம்பத்திற்கு பங்கம் ஏற்படும். அதனால் அவர் வீராப்பு பேசக் கூடிய வகையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நேட்டோவுடன் செய்ய வேண்டும் அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகள் மூலம் ஒரு தாக்குதலை உக்ரேன் மீது செய்ய வேண்டும். இது போன்ற Face saving நடவடிக்கைகள் எதையாவது செய்து தப்ப வேண்டும்.

மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் புட்டீன் உறுதியாக நிற்பார். தனது எல்லை நாடுகளில் நேட்டோ எந்தப் படையையும் நிறுத்தக் கூடாது இரசியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தக் கூடிய வகையில் படைக்கலன்களைக் குவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த அவர் தொடர்ந்து முயற்ச்சி செய்வார்.

கிழக்கு ஐரோப்பாவில் முடியாததை அவர் நடுவண் ஆசியாவில் செய்ய முயலலாம். அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வர துருக்கி எண்ணுகின்றது. அவற்றைப் பொருளாதார அடிப்படையில் சுரண்ட சீனா தொடங்கி விட்டது.  

Monday, 7 February 2022

வேகமாக வளரும் இரசிய-சீன நட்பு

 


மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

வித்தியாசமான இரசிய சீன உறவு

இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற ஒரு கேந்திரோபாயப் பங்காண்மை அல்ல. அந்த உறவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே உள்ளது போன்ற உயர் நிலை பொருளாதாரக் கூட்டமைப்பும் அல்ல. சீனாவினதும் இரசியாவினதும் ஆட்சி முறைமைகள் வேறுபட்டனவாக இருப்பதால் அந்த உறவு ஒரு கொள்கைக் கூட்டணியும் அல்ல. அதே வேளை அது தேவைக்கு ஏற்ப ஒன்று கூடி பின்னர் கால் வாரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியும் அல்ல. அது அமெரிக்க உலக ஆதிக்கத்தை எதிர் கொள்ளவும் இல்லாமற் செய்யவும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்ச்சி. இரசியாவும் சீனாவும் 4200கிமீ நீளமான தரை எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறு 2006-ம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. சீனா தனது கொல்லைப் புறத்தில் மக்களாட்சியில் வளர்ச்சியடைந்த தைவான் இருப்பதையும் இரசியா தனது எல்லையில் வளருகின்ற மக்களாட்சி கொண்ட உக்ரேன் இருப்பதையும் விரும்பவில்லை. உலகில் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைக் கைப்பற்றக் கூடிய வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் கைப்பற்றும் எண்ணம் எந்த நாட்டுக்கும் இல்லை.

எரிபொருள் வர்த்தகம்.

சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பைக் குறைத்து இரசியாவில் இருந்து பெறும் இயற்கை வாயு மூலம் தனது எரிபொருள் தேவையை சமாளிக்க சீனா முயல்கின்றது. சைபீரியா வலு (Power of Siberia) என்னும் எரிவாயுக் குழாய்த்திட்டம் மூலம் இரசியா சீனாவிற்கு சைபீரியாவில் இருந்து எரிவாயுவை விநியோகிக்கவிருக்கின்றது. புட்டீனின் சீனப் பயணத்தின் போது இரசியாவின் Rosneft நிறுவனமும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனமும் சீனாவின் வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு மில்லிய தொன் எண்ணெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. எரிவாயு விநியோகத்தையும் தற்போது உள்ள ஆண்டு ஒன்றிற்கு பத்து பில்லிய கன மீற்றர் அளவில் இருந்து 48பில்லியன் கமீ ஆக உயர்த்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இரசிய சீன கூட்டுப் போர்ப்பயிற்ச்சி

Vostok 2018என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியை இரசியாவும் சீனாவும் செய்யதனVostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய் மிகப்பெரிய படைபயிற்ச்சி இதுவாக அமைந்தது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபட்டன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி நடந்தது. Tsentr-2019 (Center-2019) என்னும் பெயரில் 2019 செப்டம்பர் 16-21 வரை இரசியாவும் சீனா, இந்தியா, பாக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான், கஜகஸ்த்தான், தஜிகிஸ்த்ஹ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளும் இணைந்து படைப்பயிற்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தன.

பொருளாதார ஒத்துழைப்பு

2001-ம் ஆண்டில் $10.7பில்லியனாக இருந்த இரசிய-சீன வர்த்தகம் 2021இல் 14 மடங்காக அதிகரித்து $140பில்லியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 35% அதிகரித்தது. இரசியா தனது ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க முயல்கின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரசியாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நடுவண் ஆசிய நாடுகளூடாகவும் நடக்கின்றது. புட்டீனின் பயணத்தில் இரசியாவின் தலைமையிலான யூரோ ஆசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டமான பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt and Road Initiative) ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

நாட்டுறவிலும் உயர்ந்த நட்பு

சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவிலும் பார்க்க ஜின்பிங்கிற்கும் புட்டீனிற்கும் இடையிலான உறவு சிறப்பாக இருக்கின்றது. இருவரும் தத்தம் நாடுகளைத் தாமே உயிருள்ளவரை ஆளவேண்டும் என விரும்புகின்றார்கள். இருவரும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் மனித உரிமை என்னும் பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றன என இருவரும் கருதுகின்றனர். நேட்டோ விரிவாக்கத்தை இரசியா எதிர்ப்பதை ஜீ ஜின்பிங் ஆதரிக்கின்றார். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்கின்றார் புட்டீன்.

சீனாவிற்கு சாதகமான உறவா?

இரசிய சீன உறவு சீனாவிற்கு இரசியாவிலும் பார்க்க அதிக நன்மையளிப்பதாக இருக்கின்றது என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க குடியரசுத் தலைவரின் கவனம் முழுமையாக சீனாவின் பக்கம் போகாமல் உக்ரேன் பக்கமும் போகச் செய்வதாக புட்டீன் உக்ரேனுக்கு எதிராகச் செய்யும் படை நகர்வுகள் அமைந்துள்ளன. பராக் ஒபாமா ஆசிய சுழற்ச்சி மையம் என்ற முன்னெடுப்பைச் செய்ய முயன்றபோது இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்ததால் அவர் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா பன்னாட்டுக் கடல் பிராந்தியம் எனக் கருதும் தென் சீனக் கடலில் சீனா இரு செயற்கைத் தீவுகளை அமைத்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு எதிராகச் செய்ய முயலும் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்கு சீனாவில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஒரு படி உறவை உயர்த்தும் கூட்டறிக்கை

2021 ஜனவரியில் சீனாவின் ஊடகத்தில் இரசிய அதிபர் புட்டீன் எழுதிய Russia and China: A future-oriented strategic partnership என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இரசிய சீன உறவின் மேம்பட்ட நிலைக்கு சான்றாகி நிற்கின்றது. 2022 பெப்ரவரி 4-ம் திகதி இரு நாட்டுத் தலைவர்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐயாயிரத்தி முன்னூறுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்த நீண்ட அறிக்கையில்:

1. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது உள்ள ஒன்றிற்கொன்று நன்மையளிக்கும் சிறந்த உறவை தொடர்ந்தும் பேணுவதும் மேம்படுத்துவதும்;

2. இரசியாவின் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பும் (Belt & Road Initiative) இணைந்து செயற்படுவது.

3. ஆர்க்டிக் வலயத்தில் இணைந்து செயற்படுவது.

4. இரு நாடுகளும் உலக பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவாலையிட்டு கரிசனை கொண்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இன்னொரு நாட்டின் பாதுகாப்பை பலியிடக் கூடாது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

5. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இரு நாடுகளும்

அறம்சார் நெறிகளைக் கடைப்பிடிக்கவும் விதிகளுக்கமைந்த உலக ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.

6. நேட்டோ விரிவாக்கத்தை இரு நாடுகளும் எதிர்க்கின்றன. (உக்ரேன் என்ற வார்த்தையே அந்த கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை.)

7. இரசியா-சீனா-இந்தியா என்றவடிவத்தில் ஒத்துழைப்பை விரும்புகின்றோம்.

8. கிழக்காசிய உச்சி மாநாடு, ஆசியான் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒத்துழைக்க விரும்புகின்றோம்.

இரசியாவும் சீனாவும் படைத்துறை உற்பத்தியில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது அவற்றின் பொது எதிரிகளுக்கு பெரும் சவாலாகும். பல நட்புக்களின் வலிமையை பொது எதிரியே முடிவு செய்கின்றான். அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குளிகால ஒலிம்பிக்-2022இல் நடுங்குகின்றது.

இரசிய சீனக் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.bilaterals.org/?joint-statement-of-the-people-s

Monday, 31 January 2022

இரசியாவிற்கு எதிரான பொருளாதார தடை பயன் தருமா?

 



உக்ரேன் எல்லையில் இரசியா மொத்தமாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட 56 முதல் 70 வரையிலான உத்திசார் சமரணிகளை (Battalion Tactical Group) நிறுத்தி வைத்துக் கொண்டு தாம் உக்ரேனை ஆக்கிமிக்கப் போவதில்லை எனச் சொல்கின்றது. நேட்டோ அமைப்பில் உக்ரேனை இணைக்கக் கூடாது இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளில் குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பவை உள்ளிட்ட பல நிபந்தனைகளைக் கொண்ட ஓர் ஒப்பந்த நகலை இரசியா ஒரு தலைப்பட்சமாகத் தயாரித்து அதில் நேட்டோ நாடுகள் கையொப்பமிட வேண்டும் என இரசியா நிர்ப்பந்திக்கின்றது. மொத்தத்தில் உக்ரேனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நேட்டோவை இரசியா மிரட்டுகின்றது.

இரசியா வேண்டுவது

உக்ரேனை மட்டுப்படுத்தப் பட்ட இறைமையுள்ள நாடாகவும் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும் இரசியாவிற்கான கவசப் பிரதேசமாக இருக்கக் கூடியதாக மற்றுவதற்காகவே இரசிய அதிபரு புட்டீன் தன் படைநகர்வுகளைச் செய்துள்ளார். 2000-ம் ஆண்டே இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறையை ஈடு இணையற்றதாக மேம்படுத்தும் இருபது ஆண்டு திட்டத்தை வகுத்திருந்தார். அத்திட்டம் 2020இல் நிறைவேற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் போல் மீளவும் ஒரு வலிமை மிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் உக்ரேனிய எல்லையில் இரசியப்படைகள் குவிப்பது ஆரம்பமானது. அது 2021இன் இறுதியில் ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் டொன்பாஸ் பிரந்தியத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு பிரிவினைவாதப் போர் நடக்கின்றது. அதை ஒரு தனிநாடாக இரசியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்லவில்லை. அங்குள்ள அரசுக்கு ஒரு சிறப்பு நிலை உருவாக்குவதும் இரசியாவின் நோக்கமாக இருக்கின்றது. உக்ரேனை இரசியாவில் இருந்து பாதுகாக்க நேட்டோப் படைகள் களமிறங்க மாட்டாது என நேட்டோ தெரிவித்துள்ளது. இரசியா தனது நிலப்பரப்பில் மட்டுமல்ல தனது நட்பு நாடான பெலரஸிலும் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள கிறிமியாவிலும் கருங்கடலிலும் அஜோவ் கடலிலும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தன் படையினரைக் குவித்து வைத்துள்ளது.

ஏவுகணைப் பிரச்சனை

பாயும் தூரங்களை அடிப்படையாக வைத்து மரபுவழி ஏவுகணைகளும் அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. நடுத்தரதூர ஏவுகணைகள் 1000-5500 கிமீ (620-3420மைல்)

2. குறுந்தூர ஏவுகணைகள் 500-1000கிமீ (310-620மைல்)

3.  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இவை 5500கிமீ (3400) மைல்களுக்கு மேல் பாயக் கூடியவை.

அமெரிக்காவும் இரசியாவும் இந்த அணுக்குண்டு உற்பத்தியை மட்டுப்படுத்த சீனா அவற்றின் உற்பத்தியை அதிகரித்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்கா நடுத்தர தூர ஒப்பந்த த்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்கா இரசியாவின் எல்லை நாடுகளில் நடுத்தர தூர அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பது இரசியாவின் வேண்டுகோள்களில் ஒன்றாக இருக்கின்றது.

பொருளாதாரத் தடைகளுக்கான முன்னேற்பாடுகள்

அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினரகள் இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கான சட்ட மூலத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். சில பொருளாதாரத் தடைகள் உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்ய முன்னரே நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை கத்தியில் நடப்பதைப் போலாகும். இரசியாவின் எரிபொருள் உற்பத்தியையும் ஏறுமதியையும் பாதிக்க்க கூடிய வகையில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் அது அமெரிக்கா உட்பட உலக பொருளாதாரத்தை பாதிக்கும். இரசியாவில் பணவீக்கம், பங்குச் சந்தைச் சரிவு, போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத் தடை செய்வது பற்றி தீவிர ஆலோசனகள் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் செய்யப்படுகின்றன. இரசியாவின் பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத்தடை கொண்டு வருவதுடன் புட்டீன் உட்பட இரசியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் மீதும் பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்படலாம். இரசிய திறைசேரி விற்பனை செய்யும் கடன் முறிகள் மீதான முதலீட்டிற்கும் தடை விதிக்கப்படலாம். பிரித்தானியாவிலும் 2022 பெப்ரவரி முதலாம் திகதி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டு வருவதற்கான சட்டஙகள் நிறைவேற்றப்படலாம். இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் அதற்கான ஏற்றுமதிகள் மீது தடை விதிக்கப்படலாம். கொவிட்-19 தொற்று நோயினால் உருவான பல பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல் இருக்கும் மேற்கு நாடுகளுக்கும் இரசியா மீதான பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கல்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான Society for Worldwide Financial Telecommunication (SWIFT)இல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம். இரசியா மீது ஒரு பொருளாதாரப் போர் தொடுக்க அமெரிக்கா முயன்கின்றது. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை ஆக்கிரமித்த போதும் அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இரசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இரசியா விட்டுக்கொடுக்கவில்லை.

தயார் நிலையில் உள்ள இரசியா

2014இன் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்துள்ளது. தற்போது அது $639 பில்லியனாக உள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 20% மட்டுமே. அமெரிக்காவின் கடன் 133% ஆகும். 2014இன் பின்னர் இரசியா தனது உள்நாட்டு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை பெருமளவு அதிகரித்துள்ளது. சீனாவிற்கான இரசிய ஏற்றுமதி ஆண்டுக்கு $100பில்லியனாக உயர்ந்துள்ளது. சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் இரசியா அதிகரித்துள்ளது. கணினிகளின் இதயமான குறைகடத்திகள் (Semi-conductors) உற்பத்தியில் அமெரிக்கா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவற்றை இரசியாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தால் அதில் இருந்து விடுபட இரசியாவும் சீனாவும் இணைந்து செயற்படலாம்.

இரசியர்கள் பல நெருக்கடிகளை தாங்கி நிற்கும் ஆற்றலும் தேசப்பற்றும் உள்ளவர்கள். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படும் இரசியர்கள் இரசிய ஆட்சியாளர்கள் மீது வெறுப்புக் கொள்வார்கள் என அமெரிக்கா நினைக்கின்றது. அதேவேளை இரசியர்களுக்கு மேற்கு நாடுகள் மீது உள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.

Thursday, 30 December 2021

உக்ரேன் போர்: புட்டீனின் இரண்டாம் சோவியத் ஒன்றியம்


இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஆசியாவிலும் ஐரோப்பியாவிலும் சோவியத் ஒன்றியம் ஒரு வலிமை மிக்க நாடாக உருவெடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் “பொதுவுடமையைப் பரப்பல்” என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்தன. சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கபட்டது.

ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில்

பதினைந்து நாடுகளைக் கொண்ட சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மத்திய ஆசிய நாடுகளும் தனித்தனி நாடுகளாக உருவெடுத்தன. அவற்றில் முக்கியமான நாடுகள் உக்ரேனும் ஜோர்ஜியாவும் ஆகும். இரசியாவுடன் ஓரளவு நல்ல உறவுடன் இருக்கும் நாடு பெலரஸ் மட்டுமே. மொல்டோவா நடுநிலையான உறவை இரசியாவுடன் வைத்திருக்கின்றன. 2008-ம் ஆண்டு ருமேனிய நகர் புச்சரெஸ்டில் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதற்கான வழி-வரைபடம் வகுக்கும் முடிவு எடுக்கப்பட்டதில் இருந்து இரசியாவின் சினம் அதிகரித்தது. இரசியா உடனேயே ஜோர்ஜியாமீது படையெடுத்து ஜோரியாவை இரண்டு நாடுகளாக்கியது. உக்ரேனில் இரசிய சார்பு சார்பானவர்கள் ஆட்சியில் அமர்த்த இரசியா வழி செய்தது.



அமெரிக்க உலக ஆதிக்கம்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

நேட்டோ விரிவாக்கம்

பதினாங்கு நாடுகள் ஆரம்பித்த நேட்டோவில் தற்போதுஅல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பேர்க், மொன்ரிநிகிரோ, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலொவேக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், துருக்கி, ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இரசியா தனது கவச நாடுகளாகக் கருதும் எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட்டமை இரசியாவைக் கடுமையாக சினத்திற்கு உள்ளாக்கியது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைய முற்பட்டபோது இரசியா அந்த நாடுகளுக்கு எதிராகப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிரான இரசிய நகர்வு

2021இன் இறுதியில் இரசியா 120,000படையினரை உக்ரேன் எல்லையில் குவித்து விட்டு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியை நேட்டோ அமைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் விடுத்தார். ஒரு நாடு ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதா இல்லையா என்பதை அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும். அம்முடிவை எடுப்பது இரசியா அல்ல என்பது நேட்டோ நாடுகளினதும் அதில் இணைய விரும்பும் நாடுகளினதும் பதிலாக அமைந்தது. புட்டீனின் வேண்டுகோள் ஒர் ஒப்பந்த வரைபாக வெளியிடப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படையினரின் உட்கட்டமைப்புக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்பதும் புட்டீனின் கோரிக்கையாக இருக்கின்றது. உக்கிரேனுக்கு நேட்டோ நாடுகள் படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்பதும் இடைத்தூர தாக்குதல் ஏவுகணைகளை ஐரோப்பாவில் தடைசெய்ய வேண்டும் என்பதும் புட்டீனின் கோரிக்கைகளாக இருக்கின்றன. இவற்றை நேட்டோ நாடுகள் செய்யவில்லை எனில் இரசியா படை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற மிரட்டலும் புட்டீனால் விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான தாக்குதல் விண்வெளிப் போராகலாம்

2021 நவம்பரில் செய்மதி அழிப்பு ஏவுகணையை வெற்றீகரமாகப் பதிவு செய்தது. புவியின் மேற்பரப்பில் இருந்து 300மைல்கள் உயரத்தில் இருந்த இரசியாவின் செய்மதி அதனால் அழிக்கப்பட்டது. உக்ரேனில் இரசியப்படைகளின் நகர்வுகளை நேட்டோ நாடுகளின் செய்மதிகள் அவதானித்து உக்ரேனுக்கு தகவல் வழங்கினால் அச்செய்மதிகளை இரசியா அழிக்கலாம். அமெரிக்காவின் விண்வெளிப்படை இரசியாவிற்கு எதிராக தாக்குதல் தொடுக்கலாம். அமெரிக்காவின் விண்வெளிப் படையின் ரடார்கள் 22,000மைல்கள் (36,000கிமீ) உயரத்தில் இருந்து ஒரு கால்பந்தின் நகர்வைக் கூட அவதானிக்கும் வகையில் உணர்திறன் மிக்கவை.

அனுபவமற்ற படையினர்.

கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்கா சமச்சீரற்ற போர்களை தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக செய்துள்ளது. வலிமை மிக்க எதிரியுடன் மோதும் அண்மைக்கால அனுபவம் அமெரிக்கப் படையினருக்கு இல்லை, அதேவேளை இரசியப் படையினர் போர் முனை அனுபவம் இல்லாமல் பல பத்தாண்டுகளைக் கடந்து வந்துள்ளன. 1950களின் ஆரம்பத்தில் நடந்த கொரியா போரின் பின்னர் வல்லரசு நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தாக்குவதை தவிர்த்து வந்துள்ளன. உக்ரேன் படையினர் உக்ரேனின் இரசியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்குப் பதியில் இரசிய ஆதரவுடன் செயற்படும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக 2014-ம் ஆண்டில் இருந்து போர் செய்து வருகின்றனர். 120,000இற்கும் மேற்பட்ட படைகளை உக்ரேனுக்கு இரசியா அனுப்பவிருக்கும் இரசியா அவற்றிற்கான வழங்கல்களை ஓரு மோசமான கால நிலையில் செய்ய வேண்டியிருக்கும். ஜனவரி – பெப்ரவரி காலப் பகுதியில் உக்ரேனின் வெப்ப நிலை செண்டிகிரேட்டில் -10 முதல் +8 வரை இருக்கும். பனி நிறைந்த சூழலில் போர் அனுபவம் பெறுவதற்காக நேட்டோ படையினர் பின்லாந்துடன் இணைந்து ஆண்டு தோறும் போர்ப்பயிற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரேனைத் துண்டாடுவது என்பதில் இருந்து உக்ரேனை முற்றாக ஆக்கிரமிப்பது என்பது வரை இரசியாவின் தெரிவுகள் பரந்துள்ளன. உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையாமல் தடுப்பதில் இரசியா தற்காலிக வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை நிரந்தரமாக்குவற்கு இரசியா பெரு முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.  2014-ம் ஆண்டில் இருந்தமையிலும் பார்க்க உக்ரேனியப் படையினர் தற்போது அதிக அளவு பயிற்ச்சிகளையும் படைக்கலன்களையும் நேட்டோப் படையினரிடமிருந்து பெற்றுள்ளார்கள். கனடியப் படையினர் பலர் உக்ரேன் சென்று பயிற்ச்சி வழங்கியுள்ளனர். அமெரிக்கப் படைத்துறை நிபுணர்களும் உக்ரேனில் இருந்து செயற்படுகின்றனர்.

செல்வாக்கு

விளடிமீர் புட்டீனை மேற்கு நாடுகள் எதிர்க்கும் போதெல்லாம் அவரது செல்வாக்கு இரசியர்கள் மத்தியில் அதிகரிக்கும். இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டு வந்தபோது அவரது செல்வாக்கு இரசியாவில் அதிகரித்தது. இரசிய விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள்களைப் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டை மேற்கு நாடுகள் முன்வைத்த போது புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. இரசியா சிரியாவில் தலையிட்டதை மேற்கு நாடுகள் எதிர்க்க புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. உக்ரேனுக்கு எதிரான படை முற்றுகை மிரட்டல் அவரது செல்வாக்கை அதிகரிக்கும். ஆனால் உக்ரேனுக்குள் இரசியப் படைகள் நுழைந்த பின்னர் ஏற்படும் பின்னடைவுகள் உயிரிழப்புகள் பொருளாதார பாதிப்பு போன்றவை மக்கள் நடுவில் அவரது செல்வாக்கை இழக்கச் செய்யலாம்.

வலுவற்ற பொருளாதார நிலை

கொவிட் பெரும் தொற்று நோயால் ஒரு நீண்ட காலப் போரைச் செய்யக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள், உக்ரேன், இரசியா ஆகியவற்றின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. அதிலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உக்ரேனின் பொருளாதாரம் கொவிட்-19இற்கு முன்னரே பாதிப்படைந்த நிலையில் இருந்தது.

படைக்கலப் பரிசோதனைக் களம்

இரசியாவின் எஸ்-500 என்னும் வான் பாதுகாப்பு முறைமை 2021-ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இரசியா தனது எஸ்-400 வான்பாதுகாப்பு முறைமையை சிரியாவில் பரிசோதித்தது. அவற்றிற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கத் தயாரிப்பு F-35-I என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை பரிசோதித்தது. எஸ்-500ஐ இரசியா உக்ரேனில் பாவிக்கலாம். உக்ரேனிற்கு அமெரிக்கா புதிய போர் போர்விமானங்களை விற்பனை செய்யவில்லை. மாறாக இரசியாவின் போர்த்தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரசியாவின் T-14 Armata, T-70, T-90 ஆகியவை இரசியாவிடம் உள்ள எதிரிகளுக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய தாங்கிகளாகும். அமெரிகாவின் Javelin, BGM-71 TOW ஆகிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் இரசியாவின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் போர் அமையலாம். துருக்கியின் ஆளிலிப்போர்விமானங்கள் ஆர்மினீயா – அஜர்பைஜான் போரில் இரசியத் தாங்கிகள் பலவற்றை அழித்தன. துருக்கி அதே பணியை உக்ரேனில் இரசியாவிற்கு எதிராக செய்யலாம். இரசியாவின் SU-37, SU-57, Checkmate போன்ற விமானங்களை எதிர் கொள்ளக் கூடிய படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்குமா?



அமெரிக்க – இரசிய நேரடி மோதல் நடக்க வாய்ப்பில்லை

உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்கும் போது இரசியாவுடன் அமெரிக்கா நேரடியாக மோதுவதைத் தவிர்த்து உக்ரேனிற்கு படைக்கலன்களையும் உளவுத் தகவல்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இரசியப் படைகள் நகரத் தொடங்கும் போதே அவற்றின் மீது முன்கூட்டித் தாக்குதல் நடத்தக் கூடிய வகையில் உளவு ஏற்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது. நிலைமையை உக்ரேனியப் படைகள் சமாளிக்க முடியாத போது போலந்தும் துருக்கியும் படையினரை உக்ரேனுக்கு அனுப்பி நேரடியாக இரசியப் படையினருடன் போர் புரியச் செய்யலாம். இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகவிருப்பவை போலந்தும் துருக்கியுமே. அமெரிக்காவின் இணையவெளிப்படையினர் இரசியாவிற்கு எதிராக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. போர் என்று நடந்தால் அங்கு அமெரிக்கா தனது படையினருக்கு பயிற்ச்சி களமுனைப் பயிற்ச்சி வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதுண்டு. இரசிய – உக்ரேன் போரில் இணையவெளிப் போர்ப் பயிற்ச்சியை அமெரிக்கா தனது படையினருக்கு வழங்கலாம். 2014-ம் ஆண்டு கிறிமியாவை உக்ரேனிடமிருந்து இரசியா அபகரித்த போது முதலில் உக்ரேனின் உட்கட்டுமானங்கள் மீது முதலில் இணையவெளித்தாக்குதல் தான் இரசியாவால் செய்யப்பட்டது.



பொருளாதாரத் தடை – SWIFT

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் மேலதிக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் செய்யலாம். குறிப்பாக பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான SWIFTஇல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆப்த்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம்.

தற்போது இரசியாவிற்கு உக்ரேனை விட்டுக் கொடுத்தால் அத்துடன் நிற்காமல் நேட்டோவில் இருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை விலக்க வேண்டும் என்ற மிரட்டலை புட்டீன் விடுப்பார் என நேட்டோ நாடுகள் கருதுகின்றன. அதனால் உக்ரேனை இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றும் புட்டீனின் முயற்ச்சியை நேட்டோ படையினர் உறுதியாக நிற்கின்றனர். புட்டீனிற்கு விட்டுக் கொடுத்தால் அவரது கனவான மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவார் என்ற கரிசனை நேட்டோ நாடுகளுக்கு மட்டுமல்ல பின்லாந்து, சுவீடன் போன்ற நேட்டோவில் உறுப்புரிமை இல்லாத நாடுகளுக்கும் உண்டு. போர் மூலம் உக்ரேனை ஆட்கொள்ளும் முயற்ச்சி வெற்றி தருமா? 

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...