Followers

Monday, 31 January 2022

இரசியாவிற்கு எதிரான பொருளாதார தடை பயன் தருமா?

 



உக்ரேன் எல்லையில் இரசியா மொத்தமாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட 56 முதல் 70 வரையிலான உத்திசார் சமரணிகளை (Battalion Tactical Group) நிறுத்தி வைத்துக் கொண்டு தாம் உக்ரேனை ஆக்கிமிக்கப் போவதில்லை எனச் சொல்கின்றது. நேட்டோ அமைப்பில் உக்ரேனை இணைக்கக் கூடாது இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளில் குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பவை உள்ளிட்ட பல நிபந்தனைகளைக் கொண்ட ஓர் ஒப்பந்த நகலை இரசியா ஒரு தலைப்பட்சமாகத் தயாரித்து அதில் நேட்டோ நாடுகள் கையொப்பமிட வேண்டும் என இரசியா நிர்ப்பந்திக்கின்றது. மொத்தத்தில் உக்ரேனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நேட்டோவை இரசியா மிரட்டுகின்றது.

இரசியா வேண்டுவது

உக்ரேனை மட்டுப்படுத்தப் பட்ட இறைமையுள்ள நாடாகவும் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும் இரசியாவிற்கான கவசப் பிரதேசமாக இருக்கக் கூடியதாக மற்றுவதற்காகவே இரசிய அதிபரு புட்டீன் தன் படைநகர்வுகளைச் செய்துள்ளார். 2000-ம் ஆண்டே இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறையை ஈடு இணையற்றதாக மேம்படுத்தும் இருபது ஆண்டு திட்டத்தை வகுத்திருந்தார். அத்திட்டம் 2020இல் நிறைவேற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் போல் மீளவும் ஒரு வலிமை மிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் உக்ரேனிய எல்லையில் இரசியப்படைகள் குவிப்பது ஆரம்பமானது. அது 2021இன் இறுதியில் ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் டொன்பாஸ் பிரந்தியத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து ஒரு பிரிவினைவாதப் போர் நடக்கின்றது. அதை ஒரு தனிநாடாக இரசியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்லவில்லை. அங்குள்ள அரசுக்கு ஒரு சிறப்பு நிலை உருவாக்குவதும் இரசியாவின் நோக்கமாக இருக்கின்றது. உக்ரேனை இரசியாவில் இருந்து பாதுகாக்க நேட்டோப் படைகள் களமிறங்க மாட்டாது என நேட்டோ தெரிவித்துள்ளது. இரசியா தனது நிலப்பரப்பில் மட்டுமல்ல தனது நட்பு நாடான பெலரஸிலும் தான் ஆக்கிரமித்து வைத்துள்ள கிறிமியாவிலும் கருங்கடலிலும் அஜோவ் கடலிலும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தன் படையினரைக் குவித்து வைத்துள்ளது.

ஏவுகணைப் பிரச்சனை

பாயும் தூரங்களை அடிப்படையாக வைத்து மரபுவழி ஏவுகணைகளும் அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. நடுத்தரதூர ஏவுகணைகள் 1000-5500 கிமீ (620-3420மைல்)

2. குறுந்தூர ஏவுகணைகள் 500-1000கிமீ (310-620மைல்)

3.  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் இவை 5500கிமீ (3400) மைல்களுக்கு மேல் பாயக் கூடியவை.

அமெரிக்காவும் இரசியாவும் இந்த அணுக்குண்டு உற்பத்தியை மட்டுப்படுத்த சீனா அவற்றின் உற்பத்தியை அதிகரித்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்கா நடுத்தர தூர ஒப்பந்த த்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்கா இரசியாவின் எல்லை நாடுகளில் நடுத்தர தூர அணுக்குண்டு தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை நிறுத்தக் கூடாது என்பது இரசியாவின் வேண்டுகோள்களில் ஒன்றாக இருக்கின்றது.

பொருளாதாரத் தடைகளுக்கான முன்னேற்பாடுகள்

அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினரகள் இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கான சட்ட மூலத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். சில பொருளாதாரத் தடைகள் உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்ய முன்னரே நடைமுறைப்படுத்தப்படும். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை கத்தியில் நடப்பதைப் போலாகும். இரசியாவின் எரிபொருள் உற்பத்தியையும் ஏறுமதியையும் பாதிக்க்க கூடிய வகையில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் அது அமெரிக்கா உட்பட உலக பொருளாதாரத்தை பாதிக்கும். இரசியாவில் பணவீக்கம், பங்குச் சந்தைச் சரிவு, போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருளாதாரத் தடை செய்வது பற்றி தீவிர ஆலோசனகள் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் செய்யப்படுகின்றன. இரசியாவின் பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது பொருளாதாரத்தடை கொண்டு வருவதுடன் புட்டீன் உட்பட இரசியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் மீதும் பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்படலாம். இரசிய திறைசேரி விற்பனை செய்யும் கடன் முறிகள் மீதான முதலீட்டிற்கும் தடை விதிக்கப்படலாம். பிரித்தானியாவிலும் 2022 பெப்ரவரி முதலாம் திகதி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டு வருவதற்கான சட்டஙகள் நிறைவேற்றப்படலாம். இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் அதற்கான ஏற்றுமதிகள் மீது தடை விதிக்கப்படலாம். கொவிட்-19 தொற்று நோயினால் உருவான பல பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல் இருக்கும் மேற்கு நாடுகளுக்கும் இரசியா மீதான பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

SWIFT கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கல்

உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான Society for Worldwide Financial Telecommunication (SWIFT)இல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம். இரசியா மீது ஒரு பொருளாதாரப் போர் தொடுக்க அமெரிக்கா முயன்கின்றது. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை ஆக்கிரமித்த போதும் அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இரசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இரசியா விட்டுக்கொடுக்கவில்லை.

தயார் நிலையில் உள்ள இரசியா

2014இன் பின்னர் இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அதிகரித்துள்ளது. தற்போது அது $639 பில்லியனாக உள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 20% மட்டுமே. அமெரிக்காவின் கடன் 133% ஆகும். 2014இன் பின்னர் இரசியா தனது உள்நாட்டு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை பெருமளவு அதிகரித்துள்ளது. சீனாவிற்கான இரசிய ஏற்றுமதி ஆண்டுக்கு $100பில்லியனாக உயர்ந்துள்ளது. சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் இரசியா அதிகரித்துள்ளது. கணினிகளின் இதயமான குறைகடத்திகள் (Semi-conductors) உற்பத்தியில் அமெரிக்கா, தைவான், தென் கொரியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவற்றை இரசியாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தால் அதில் இருந்து விடுபட இரசியாவும் சீனாவும் இணைந்து செயற்படலாம்.

இரசியர்கள் பல நெருக்கடிகளை தாங்கி நிற்கும் ஆற்றலும் தேசப்பற்றும் உள்ளவர்கள். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படும் இரசியர்கள் இரசிய ஆட்சியாளர்கள் மீது வெறுப்புக் கொள்வார்கள் என அமெரிக்கா நினைக்கின்றது. அதேவேளை இரசியர்களுக்கு மேற்கு நாடுகள் மீது உள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.

No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...