Followers

Monday 3 October 2022

காங்கிரசுத் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி மல்லிகை சூடுவாரா?

 


காங்கிரசு கட்சியின் தலைவர் தேர்வு 2022 ஒக்டோபர் மாதம்17-ம் திகதி நடைபெறவுள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த தலைமைப் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி (அவருக்கு விருப்பமில்லாமலே) போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2019இல் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியடைந்தது. அதைக் சாட்டக வைத்து ராகுல் தன் மீது திணிக்கப்பட்ட தலைமைப் பதவில் இருந்து விலகினார். ஒக்டோபர் 17ம் திகதி நடக்க விருக்கும் தேர்தலில் சோனியா குடும்பத்தின் சொற்படி ஆடக்கூடிய 71 வயதான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என்று கூறப்படுகின்றது. காங்கிரசுக் கட்சியின் உடைப்பூர் பிரகடனம் ஒருவருக்கு ஒரு பதவி தான் எனக் கூறுகின்றது. ஆனாலும் கட்சியின் தலைவராகவும் ராஜஸ்த்தான் முதல்வராகவும் தானே இருக்க வேண்டும் என அசோக் கெலாட் வலியுறுத்தினார். அது முடியாத போது பதவியை ராஜினாமா செய்தாலும் தனது ஆதரவாளர் மட்டுமே முதல்வர் ஆக வேண்டும் என்று அசோக் கெலாட் வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்த்தான் மாநிலத்தில் உட்பூசல் உச்சம் தொட்டது

அசோக் கெலாட் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வராகவும் தேசிய தலைவராகவும் இருக்கட்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரசு சட்டமன்ற உறுபினர்கள் தெரிவித்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி 90 எம்எல்ஏக்கள் மாநில சட்ட மன்றப் பதவியில் இருந்து செய்ய போவதாக காங்கிரசுக் கட்சியை மிரட்டினார்கள். இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். அசோக் தனது காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் தன் கடும் சவாலாக இருப்பவருமான சச்சின் பைலட் தனக்கு பின் முதல்வராக கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவில் ஆக சதிஸ்கர் மாநிலத்திலும் ராஜஸ்த்தான் மாநிலத்திலும் மட்டுமே சோனியாவின் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்த்தான் மாநில சட்ட சபைத் தேர்தலின் முன்னர் யார் முதலமைச்சர் என்ற போட்டி அசோக் கெலாட் என்பவருக்கும் சச்சின் பைலட் என்பவருக்கும் இடையில் நடந்தது. சோனியா காந்தி தனக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடிய அசோக் கெலாட்டை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார். தேர்தலில் 200 தொகுதிகளில் காங்கிரசு கூட்டணி நூறு இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 73 இடங்களைக் கைப்பற்றியது. அசோக் கெலாட் முதலமைச்சரானார். 2019இல் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சோனியாவின் காங்கிரசுக் கட்சி தலைமையிலான கூட்டணி ராஜஸ்த்தானில் 25 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. அடுத்த ராஜஸ்த்தான் சட்ட மன்றத் தேர்தல் 2023இல் நடக்கவிருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி மண்கவ்வாமல் இருக்க அசோக் கெலாட்டை தன் கட்சியில் தலைவராக்கும் முயற்ச்சியை சோனியா கைவிட்டார். காங்கிரசுக் குஞ்சுகளைத் தூக்க மேலிருந்து அமித் ஷா என்ற கழுகு பார்த்துக் கொண்டிருப்பது சோனியாவிற்கு தெரியும். 

மல்லிகை சூடிய சோனியா

தன் குடும்பத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவரான எண்பது வயதான மல்லிகார்ஜூன் கார்கேயை கங்கிரசின் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா நிறுத்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் காங்கிரசு தலைமை பதவி வேட்பளராக போட்டியிடுகின்றார். மல்லிகார்ஜுன கார்கேயை சோனியா நிறுத்தினாலும் G-23 குழுவினர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர். அதன் முன்னணி உறுப்பினர்களாகிய மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிரிதிவிராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் அவரது வேட்பாளர் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளனர். கர்நாடாகா மாநிலத்தில் பிரபல அரசியல்வாதியான மல்லிகார்ஜூண் கார்கே 1972இல் இருந்து தொடர்ந்து பத்து தடவை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். 2019இல் அவர் தோல்வியடைந்த பின்னர் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

3G இற்கு எதிராக G-23

2022இல் காங்கிரசுக் கட்சிக்கு சோனியாவின் குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் திவிரமாகப் பரப்புரை செய்த தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியடைந்தது. 2019 நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் இழந்தது. காங்கிரசுக் கட்சியின் 3Gs எனப்படும் சோனியா ஜீ, ராகுல் ஜீ, பிரியங்கா ஜீ ஆகியவர்கள் மீது விசனமடைந்த பல முன்னணி உறுப்பினர்கள் 23 பேர் ஒன்று கூடி காங்கிரசுக் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதினர். அந்த தலைவர்கள் G-23 என அழைக்கப்படுகின்றனர். அந்த குழுவின் முன்னணி உறுப்பினர்களாகிய குலாம் நபி அசாத் கபில் சிபல் ஆகிய இருவரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தே விலகிவிட்டனர்.

தனித்து விடப்பட்டரா சசி தரூர்?

காங்கிரசுக் கட்சியின் அதிருப்தியாளர் குழுவான G-23இல் ஒருவரான சசி தரூரிற்கு ஆதரவாக அந்தக் குழுவினரே இல்லை. G-23 குழுவின் முக்கிய கோரிக்கை காங்கிரசுக் கட்சியின் எல்லாப் பதவிகளிற்கும் உரியவர்கள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைமை (சோனியா குடும்பம்) சுட்டு விரல் காட்டுபவர்களை தேர்ந்தெடுக்க கூடாது என்பதே. திருவானந்தபுரம் தொகுதி நாடாளுமன்ன மக்களவை உறுப்பினராக சசி தரூர் காங்கிரசுக் கட்சியின் துடிப்பு மிக்க செயற்பாட்டாளர். தனக்கு G-23 குழுவின் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்பதை தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றார் தரூர். அவர் தனது தேர்தல் நடவடிக்கையை அம்பேத்கார் பௌத்த மதத்தை தழுவிய இடமாகிய நாக்பூரில் உள்ள தீக்‌ஷபூமி நினைவிடத்தில் ஆரம்பித்துள்ளார். அவர் காங்கிரசுக் கட்சியின் மூன்று ஜீக்களையும் சந்தித்து தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்ததுடன் அம்மூவரையும் சந்தித்த பின்னர் கட்சி அதிகார பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்பதை கட்சி (அதாவது மூன்று ஜீ) தன்னிடம் சொன்னதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். போட்டியில் இருந்து விலகுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது தன்னைப் போட்டியிட வைத்தது கட்சியின் பொதுச் செயற்பாட்டாளர்கள் என்றும் தன் ஆதரவாளர்களுக்கு தான் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார் சசி தரூர். வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதற்கான கடைசி நாள் ஒக்டோபர் 8-ம் திகதியாகும். கட்சியில் அதிகாராம் கீழ் மட்டத்திற்கு பரவலாக்கப் படவேண்டும் என்பது சசியின் கொள்கை. அதிகாரப் பரவலாக்கம் என்பது (காந்தியின் பெயரை தம்முடன் ஒட்டி வைத்திருக்கும்) நேரு குடும்பத்திற்கு பிடிக்காத கெட்ட வாசகமாகும். பிரித்தானியாவில் பழமைவாதக் (Conservative) கட்சி தலைமைத் தேர்தலில் நடப்பது போல் தானும் மல்லிகார்ஜூண் கார்கேயும் பொது விவாதத்தில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சசி தரூர் சிறப்பாகச் செய்யக் கூடியவர். உலக அரங்குகளிலேயே உரையாற்றி பலரையும் வியக்க வைத்தவர் அவர். கட்சி மக்களாட்சிப் படி நடக்கின்றது மூன்று ஜீக்களின் கட்டளைப்படி இயங்கவில்லை எனக் காட்ட சோனியாவுடன் சேர்ந்து சசி தரூர் நாடகமாடுகின்றாரா என்ற கேள்வியும் உண்டு.

G-23 சுருங்கி G-4 ஆகியதா? 

G-23 குழுவில் பங்கு பெற்ற மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பிரிதிவிராஜ் சவான், பூபிந்தர் ஹூடா ஆகியோர் ஆனந்த் சர்மா வீட்டில் ஒரு கூட்டத்தை நடத்தினர். திக்விஜய சிங் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் போட்டியிடாமல் தமது G-23 உள்ள சசி தரூரை ஆதரிக்காமல் மல்லிகார்ஜூணை ஆதரிக்கின்றார்கள். மல்லிகார்ஜூண் காங்கிரசுக் கட்சியில் தற்போது G-23 என்ற குழு இல்லை எல்லோரும் ஒன்று பட்டு விட்டோம் என்கின்றார்.

அடுத்த போட்டி?

காங்கிரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மல்லிகார்ஜூண் கார்கே மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். இப்போது காங்கிரசுக்கு இன்னும் ஒரு தலைவலி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை அது தேர்ந்தெடுக்க வேண்டும். மல்லிகார்ஜூண் சோனியாவிற்கு தன் கீழ்ப்படிவைக் காட்ட சோனியாவே யார் எதிர்க்கட்சித்தலைவர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வதே சிறந்த மக்களாட்சிப் பண்பாகும். இந்தியாவில் அதெல்லாம் கிடையாது.

சோனியாவின் தந்திரம்

கட்சித் தலைவருக்கு பிரித்தானிய பழமைவாதக் (Conservative) கட்சியப் போல் போட்டி அடிப்படையில் வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும் என்பது காங்கிரசுக் கட்சியில் உள்ள சிலரின் வேண்டுகோளாக இருந்தது. அந்த அடிப்படையிலேயே G-23 என்ற குழு செயற்பட்டது. இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க காங்கிரசுக் கட்சியை தமது குடும்பக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது சோனியாவின் முதன்மை நோக்கம், அதற்காக தன் மகன் ராகுலை கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரையிலான நடைப்பயணத்திற்கு அனுப்பி விட்டு காங்கிரசுக் கட்சியில் தனக்கு கீழ்ப்படிவுள்ள ஒருவரை தலைவராக்க அதுவும் போட்டி அடிப்படையில் தெரிவு செய்து தலைவராக்க முயல்கின்றார். சசி தரூர் மல்லிகார்ஜூண் கார்கே போட்டி அவரது நாடகமே. அவர் மல்லிகார்ஜூணையே அவர் வெற்றி பெற வைப்பார். எண்பது வயதான அவரால் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே நின்று பிடிக்க முடியும். அந்த சில ஆண்டுகளுக்குள் ராகுலை கட்சித் தலைமைக்கு தயார் படுத்தலாம் என சோனியா அம்மையார் கனவு காண்கின்றார். ஆனால் ராகுலும் அரசியல் முதிர்ச்சி வரவே வராது. ஈழ வினை வந்து வாட்டும்.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...