Followers

Monday 6 February 2023

இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிபந்தனைகள்


இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு 54%ஆகவும் வரவு 3.2ரில்லியன் ரூபாவாகவும் செலவு 11.7ரில்லியன் ரூபாவாகவும் பொருளாதார வீழ்ச்சி 2022இல் 9.%ஆகவும் 2023இல்4.2%ஆகவும் இருக்கின்ற நெருக்கடியான வேளையில் இலங்கைக்கு கடன் கொடுக்க பன்னாட்டு நாணய நிதியம் மேலும் பல நெருக்கடிகளை கொடுக்க முயல்கின்றது. அந்த நெருக்கடியை மேலும் மோசமாக்க இலங்கைக்கு கடன் கொடுத்தோர் குழு (Bondholders Group) இலங்கை தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத்திற்கு ஒரு கடிதத்தை 2023 பெப்ரவரி 3-ம் திகதி அனுப்பியுள்ளது.

கடன் கொடுத்தோர் குழுவின் (Bondholders Group) வேண்டுகோள்கள்:

கடன் நெருக்கடியில் இருந்து மீள இலங்கை எடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரச முறிவாங்கியோர் அதாவது கடன்கொடுத்தோரின் குழு ஏற்றுக் கொண்டுள்ளது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று நிபந்தனைகளை தமது கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.

முதலாவது நிபந்தனை 2027-2032 வரை இலங்கையின் அரச நிதிக் கொள்கை தொடர்பானதாகவே உள்ளன. முதலாவது நிபந்தனைக்குள் மூன்று நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன:

1.   Annual Gross Financing need < 13% of the GDP. 2027-2032 இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் ஆண்டொன்றிற்கான நிதித் தேவையானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) 13% ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். 

·         இந்த முதலாம் நிபந்தனையை நிறைவேற்ற இதற்கு இலங்கையின் வரவு அதிகரிக்கப்பட வேண்டும்; செலவு குறைக்கப் படவேண்டும்; மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.

2.   Foreign currency debt service = 4.5% of GDP. 2027முதல் 2032வரை அரசின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் இருந்து ஆண்டு தோறும் செலுத்தப்படும் கடன் சேவைத்தொகையானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 4.5% வரை உயர்த்தப்பட வேண்டும்.

·         இந்த இரண்டாம் நிபந்தனையை நிறைவேற்ற இலங்கையின் ஏற்றுமதியும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் இலங்கைக்கு அனுப்பும் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கையின் இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்.

 

3. Domestic Gross financing should be limited to 8.5% of GDP. 2027-2032 காலப்பகுதியில் உள்ளூர் மொத்த நிதித்தொகை, மொத்த உள்ளூர் உற்பத்தியின் 8.5% ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாம் நிபந்தனை: பநாநி(IMF)இன் நிகழ்ச்சித்திட்ட இலக்குகளுக்கான அடிப்படைத் தற்கோள்களை (assumptions) முடிவு செய்யும் பொறுப்பு பநாநி(IMF)இன் உடையது என்பதை ஏற்றுக் கொண்டு அவற்றின் போதுமை மற்றும் இயலுமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு எமக்கு உண்டு.

மூன்றாம் நிபந்தனை: இந்தியாவின் முக்கிய வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்கின்ற வேளை மற்ற இருதரப்பு கடன்களை இலங்கைக்கு கொடுத்தவர்களுக்கும் இலங்கை அதே விதிகளைப் பாவிக்க வேண்டும்.

விலகி நிற்கும் சீனா பாய்ந்து வந்த இந்தியா

மூன்றாம் நிபந்தனையில் மற்ற இருதரப்பு கடன் கொடுத்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சீச்னாவை என்பது சொல்லத் தேவையில்லை. சீனா தனது கடனில் தள்ளுபடி செய்வது தொடர்பாக எதையும் சொல்லவில்லை. கடன் மீளளிப்பை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைப்பதற்கு மட்டுமே சீனா உடன்பட்டுள்ளது. இலங்கையில் செய்யப்படும் இனக்கொலை முதல் கடன் வழங்குதல் வரை இலங்கைக்கு சேவகம் செய்ய இந்தியா பின்னிற்பதில்லை. இலங்கையின் கடன் தொடர்பாக இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா பன்னாட்டு நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியது கௌத்தம் அதானிக்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை வாங்கிக் கொடுப்பதற்காகவா என்ற கேள்வியும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. . இலங்கையின் மொத்தக் கடனில் சீனாவின் கடன் 10% ஆக இருக்கின்ற வேளையில் இலங்கையின் இருதரப்புக் கடனில் சீனவின் பங்கு 52%ஆக உள்ளது.

இலவசம் இனி இலவசமல்ல

இதுவரை காலமும் அரச சலுகைகளை அனுபவித்து வந்த இலங்கை மக்கள் இனி பல சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு தடவையும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தமக்கு வேண்டியவர்களை அரச பணிகளில் அமர்த்துவது இனிச் செய்யக் முடியாமற் போகலாம். அது மட்டுமல்ல ஆட்சிக்கு வரும் கட்சிகள் தமக்கு வேண்டியவர்களை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிப்பதற்கு என்றே புதிய தூதுவரகங்களை இனித் திறக்க முடியாமற் போகலாம். அரசு தனது செலவைக் குறைத்து வரியை உயர்த்தி மக்களுக்கு செய்யும் சேவைகளைக் குறைத்து சேமிக்கும் பணத்தில் தமது கடனை மீளளிப்பு செய்ய வேண்டும் என பன்னாட்டு நாணய நிதியமும் இலங்கைக்கு கடன் கொடுத்த முதலாளிகளும் சொல்கின்றார்கள்.

இலங்கைக்கு கடன் கொடுத்தோர் குழுவினர் (Bondholders Group) தமது கடனில் எத்தனை விழுக்காட்டை தள்ளுபடி செய்வார்கள் என்பது தொடர்பாக அவர்களது கடிதத்தில் இல்லை.

பநாநி(IMF)இன் நிகழ்ச்சித்திட்ட இலக்குகள்

முதலாம் இலக்கு: 2032இல் அரச மொத்தக் கடன் மொத்த தேசிய உற்பத்தியின் 95%ஆக குறைக்கப்பட வேண்டும்

இரண்டாம் இலக்கு: அரசின் நிதித்தேவை மொத்த தேசிய உற்பத்தியின் 13% ஆக 2027-2032 காலப்பகுதியில் இருக்க வேண்டும். அதே காலப்பகுதியில் வெளிநாட்டு நாணயக் கடன் மீளளிப்பு மொத்த தேசிய உற்பத்தியின் 4.5% ஆக இருக்க வேண்டும்.

மூன்றாம் இலக்கு: அரசின் வெளிநாட்டு நிதித்தேவை இடைவெளி மூடப்பட வேண்டும். அதாவது வெளிநாட்டுச் செல்வாணி வருவாயும் செலவும் ஈடாக இருக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் வாக்குறுதி கொடுத்து விட்டு பின் நிறைவேற்றாமல் போனது வரலாறு சொல்லும் உண்மை. 2027முதல் 2032வரை செய்வோம் என வாக்குறுதி கொடுக்க நரி என அவரது எதிரிகளால் அழைக்கப்படும் ரணில் விகிரமசிங்க பின்னிற்க மாட்டார். ஆனால் அமெரிக்கப்படைகள் நினைத்த நேரத்தில் இலங்கை வந்து இறங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் Status of Forces Agreement (SOFA) ஒப்பந்தத்தை செய்யாமல் இலங்கை தன் கடன் நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...