Followers

Wednesday 25 January 2023

போர்த்தாங்கிகளின் மோது களமாக மாறும் உக்ரேன்

2023இன் குளிர்கால முடிவிற்கு முன்னர் உக்ரேன் மீது பெரும் தாக்குதல் நடத்தக் கூடிய வகையில் இரசியா ஒரு மீள் ஒருங்கிணைப்பைச் செய்து கொண்டிருக்கின்றது என உக்ரேனிய உளவுத்துறை 2023 ஜனவரி 20-ம் திகதி கருத்து வெளியிட்டுள்ளது. இரசியா தன்னுடன் இணைத்துள்ள உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள Donetsk, Luhansk ஆகிய பகுதிகளில் இருந்து உக்ரேனியப் படையினரை முற்றாக வெளியேற்றி இரசிய ஆதிக்கத்தை நிலை நிறுத்த இரசியா தீவிர முயற்ச்சி எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

புட்டீனின் இலக்கு

2022 பெப்ரவரியில் உக்ரேனினின் தலைநகரைக் கைப்பற்றி அங்கு ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட புட்டீனின் படை நடவடிக்கை தன் இலக்கை அடைய முடியாமல் போனதால் திசை மாறி நிற்கின்றது. 18-நூற்றாண்டில் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள Donesk மற்றும் Luhansk மாகாணங்களில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக உக்ரேனின் கிழக்குப் பகுதியில் குடியேறிய இரசியர்கள் அங்கு வாழ்ந்த உக்ரேனியர்களை விரட்டி தாம் பெரும்பான்மையினர் ஆகினர். டொன்பாஸ் பிராந்தியம் என அழைக்கப்படும் அந்த இரண்டு மாகாணங்களையும் தற்போது இரசியா தன்னுடன் இணைத்துள்ளது. ஆனால் அவ்விரு மாகாணங்களையும் இரசியாவால் இன்னும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை. இரசிய அதிபர் புட்டீன் அவற்றை முழுமையாக கைப்பற்றுவதையும் உக்ரேனின் கடற்கரைகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதையும் தனது முதன்மை இலக்குகளாகக் கொண்டுள்ளார்.



டொன்பாஸ் வாழும் இரசியர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டா? என்பது பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://puviarasiyal.blogspot.com/2022/04/blog-post_14.html

உக்ரேனிற்கு பாரவகை வண்டிகள் தேவைப்படுகின்றது

2022 செப்டம்பரில்  உக்ரேனின் வட கிழக்கில் உள்ள கார்கீவ் பிரதேசத்திலும் ஒக்டோபரில் தெற்குப் பக்கமாக உள்ள கேர்சோன் மாகாணத்திலும் இரசியப் படைகளை உக்ரேனியர்கள் பின்வாங்கச் செய்துள்ளர். ஆனால் 2023 ஜனவரியில் உக்ரேனியப் படையினரை Soledar நகரில் இருந்து இரசியர்கள் பின்வாங்கச் செய்ததுடன் Bukhmut நகரத்தை கைப்பற்ற முயல்கின்றது. பாறை உப்புக்கள் நிறைந்த Soledar, Bukhmut ஆகிய நகரங்களில் பல சுரங்கங்கள் உள்ளன. அச்சுரங்கங்களில் படைக்கலன்களையும் சுடுகலன்களையும் மறைத்து வைத்திருந்து போர் செய்து டொன்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என புட்டீனின் படையினர் நம்புகின்றனர். கடந்த சில மாதங்களாக உக்ரேனியப் படையினர் அமெரிக்கா கொடுத்த ஹைமார்ஸ் போன்ற துல்லியத்தாக்குதல் செய்யக் கூடிய பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் மூலம் தாக்கி இரசியாவின் படைகலன் களஞ்சியங்களை அழித்து வருகின்றது. இதனால் Soledar நகரை கைப்பற்றும் போரில் இருதரப்பினரும் பலத்த உயிரிழப்பைச் சந்தித்தனர். மேலதிக ஆளிணி இழப்பைத் தவிர்ப்பதற்கு தாம் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரேனியப் படையினர் தெரிவித்துள்ளனர். 2022 டிசம்பரில் உக்ரேனியப் படைத்தளபதி தமக்கு முன்னூறு முதன்மைப் போர்த்தாங்கிகள் (Main Battle Tanks) ஐநூறு புதியவகை ஆட்டிலெறிகள், அறுநூறு தாக்குதற் கவச வண்டிகள் மேலதிகமாகத் தேவைப் படுவதாக அறிவித்திருந்தார்.

பொறியில் மாட்டிய புட்டீன்

இரசியப் பொருளாதாரமும் படைத்துறைத் தொழில்நுட்பமும் பாரிய வளர்ச்சியைக் காண்பதைச் சகிக்க முடியாத அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரசியாவிற்கு உக்ரேனில் ஒரு பொறி வைக்க முடிவு செய்து உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைப்பது போலப் பாசாங்கு செய்தன. அந்த இரண்டு அமைப்பிலும் இணையும் ஆட்சி முறைமையோ பொருளாதார சூழலோ உக்ரேனில் இல்லை. இதனால் 2014இல் உக்ரேன் மீது இரசிய அதிபர் விளடிமீர் ஓர் ஆக்கிரமிப்பு போரை உக்ரேன் மீது தொடுத்து கிறிமியாவைத் இரசியாவுடன இணைத்தார். அதன் பின்னர் உக்ரேனியப் படையினருக்கு கடுமையான பயிற்ச்சியை நேட்டோ நாடுகள் வழங்கியதுடன் உக்ரேன் நேட்டோவில் இணையும் விண்ணப்பத்தை முன்வைத்தது. அதைத் தடுப்பதற்காக உக்ரேன் மீது தனது இரண்டாவது படை நடவடிக்கையை 2022 பெப்ரவரியில் ஆரம்பித்தார். இப்போது இரசியா ஒரு நீண்ட காலப் போரை இரசியா எதிர் கொள்ள வேண்டிய சூழலை நேட்டோ நாடுகள் உருவாக்கியுள்ளன. இரசியாவிற்கு பெரும் ஆளணி இழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும் முகமாக உக்ரேனுக்கு தாம் வழங்கும் படைக்கலன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் தொலைதூரத் தாக்குதல் செய்யக்கூடிய படைக்கலன்களையும் வழங்குகின்றன.

குளிர் முடிய முன்னர் கொதிக்கலாம்

2023 குளிர்கால இறுதியில் அதாவது பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முற்பகுதியில் இரசியா மேலும் பல படையினரைக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியா ஏற்கனவே மூன்று இலட்சம் பொதுமக்களைப் படையில் சேர்த்துள்ளது, அதை ஐந்து இலட்சமாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. 2022 செப்டம்பரில் கார்க்கீவிலும் ஒக்டோபரில் கேர்சனிலும் வியக்கத் தக்க வெற்றியை கண்ட உக்ரேனியப் படையினர் 2023 ஜனவரியில் Soledar நகரில் நடந்த போரில் இரசியப் படைகள் பெரும் உயிரிழப்புக்களுடன் முன்னேறின. அதற்கு காரணம் உக்ரேனிடம் போதிய வலிமை மிக்க போர்த்தாங்கிகள் இல்லாமையே. அதனால் ஜேர்மனி தனது லெப்பார்ட்-2 போர்த்தாங்கிகளையும் அமெரிக்கா தனது எம்-1 ஏப்ராம் (M-1 Abram) போர்த்தாங்கிகளையும் வழங்கும் முடிவை 2023 ஜனவரி 25-ம் திகதி எடுத்துள்ளன. போலாந்தும் பின்லாந்தும் தம்மிடமுள்ள ஜேர்மன் உற்பத்தி லெப்பார்ட்-2 போர்த்தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்கு முன்வந்து அதை தமக்கு விற்பனை செய்த ஜேர்மனியின் அனுமதிக்கு காந்திருந்தன. ஏற்கனவே பிரித்தானிய தனது சலெஞ்சர்-2 (Challenger-2) போர்த்தாங்கிகள் 12ஐ உக்ரெனுக்கு அனுப்பியுள்ளது. லெப்பார்ட்-2, சலெஞ்சர்-2, எம்-1 ஏப்ராம் ஆகியவை முதன்மை போர்த் தாங்கிகள் (Main Battle Tanks) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குளிர் விட்டுப்போன மேற்கு நாடுகள்

புட்டீன் அணுக்குண்டுகளைப் பாவிக்கும் வாய்ப்புக் குறைந்துள்ளது. சீனாவினதும் இந்தியாவினதும் எதிர்ப்பு. மேற்கு நாடுகளின் திரைமறைவு மிரட்டல் ஆகியவற்றால் புட்டீன் அணுக்குண்டைப் பாவிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாம் மேலதிக படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கினால் போர் மேலும் தீவிரமடையும் கொடூரமான தாக்குதல் மூலம் இரசியா போலில் வெல்லும் என தயக்கம் காட்டிய ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்போது உக்ரேன் இரசியாவை தோற்கடிக்க வாய்ப்பு உண்டு என உணர்கின்றன. இந்த நிலையில் இதுவரை காலமும் உக்ரேனுக்கு தற்பாதுகாப்பு படைக்கலன்களை மட்டும் வழங்கி வந்த நாடுகள் இனி கேந்திரோபாய படைக்கலன்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன் மூலம் ஒரு நீண்ட காலப் போரில் புட்டீனின் படைகளை மாட்ட வைக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முயல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ஐநூறு யூரோ உதவியை உக்க்ரேனுக்கு செய்வதாக முடிவு செய்துள்ளது. உக்ரேன் போர் தீவிரமடைவதை பல நாடுகள் விரும்பாதமைக்கு ஒரு காரணம் எரிபொருள் விலையாகும். தற்போது பெரும் அச்சத்தை விளைவிக்க முடியாத அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



லெப்பார்ட்-2 தாங்கிகள்.

அதிக அளவில் உடனடியாக விநியோகிக்கக் கூடிய நிலையில் லெப்பார்ட்-2 தாங்கிகள் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன.

லெப்பார்ட்-2 தாங்கிகள் உக்ரேனின் நில அமைப்பிற்கு பொருத்தமானவை.

லெப்பார்ட்-2 தாங்கிகளைப் பராமரிப்பதும் அவற்றிற்கான விநியோகங்களும் இலகுவானவை.

லெப்பார்ட்-2 தாங்கிகள் சிறந்த தற்பாதுகாப்பைக் கொண்டவை.

கடினமான நிலப்பரப்பிலும் சிறப்பாகச் செயற்படக் கூடியவை.

லெப்பார்ட்-2 தாங்கிகள் அசையும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை.

லெப்பார்ட்-2 இரவிலும் செயற்படக் கூடியவை என்பது மட்டுமல்ல லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் நிலைகளை அறியக் கூடியவை.

கொசோவா, சிரியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய போர் முனைகளில் லெப்பார்ட்-2 தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

லெப்பார்ட்-2 இரசியாவின் முதன்மை போர்த்தாங்கிகளிலும் பார்க்க சிறந்தவை.

ஐரோப்பாவில் 13 நாடுகளிடம் லெப்பார்ட்-2 தாங்கிகள் உள்ளன.

போலாந்து மட்டும் உடனடியாக நூறு லெப்பார்ட்-2 தாங்கிகளை அனுப்பத் தயாராக உள்ளது. அது போலவே பின்லாந்தும் பல லெப்பார்ட்-2 தாங்கிகளை அனுப்பத் தயாராக உள்ளது.

அமெரிக்காவின் எம்-1 ஏ-2 ஏப்ராம் (M-1 A-2 Abram) தாங்கிகள்

ஜேர்மனி முதற்கட்டமாக 14 லெப்பார்ட்-2 தாங்கிகளை அனுப்பும் முடிவை எடுத்ததை தொடர்ந்து அமெரிக்கா எம்-1 ஏப்ராம் தாங்கிகள் 31ஐ அனுப்ப முன் வந்துள்ளது. முன்பு உக்ரேன் போர் முனைக்கு தமது தாங்கிகள் பொருத்தமானவை எனச் சொல்லி வந்த அமெரிக்கா ஜேர்மனி தனது தாங்கிகளை அனுப்புவதாக அறிவித்தவுடன் தானும் அனுப்புவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்-1 ஏப்ராம் தாங்கிகள் விமானங்களைப் போல் ஜெட் எந்திரங்களால் இயக்கப்படுபவை. இவை யூரேனியத்தால் செய்யப்பட்ட வலைகளால் பாதுகாக்கப்படுபவை.

வலிமை காட்ட முடியாத இரசிய வான் படை

கடந்த ஐம்பது ஆண்டுகளில் போர் முனையில் விமானங்களே அதிக பங்காற்றி வந்தன. இரசியாவிடம் சிறந்தப் போர் விமானங்கள் இருந்தும் சிறந்த விமானிகள் இருந்தும் உக்ரேன் போரில் இரசிய வான் படையால் சிறப்பாகச் செயற்பட முடியவில்லை. இரசியாவிடம் தொடர்ச்சியான வான் தாக்குதலுக்கு ஏற்றவகையில் விமானப் பராமரிப்பு முறைமை இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அதனால் இரசியா பெருமளவு காலாட்படையை போர்க்களத்தில் இறக்குகின்றது. அவற்றை சமாளிக்க உக்ரேனுக்கு போர்த்தாங்கிகளும் போர் வண்டிகளும் தேவைப்படுகின்றன. கனடா 600 படையினர் காவு வண்டிகளையும் சுவீடன் ஆட்டிலெறி முறைமைகளையும் அமெரிக்கா மேலதிகமாக நூற்று ஒன்பது Bradleys போர் வண்டிகளையும் உக்ரேனுக்கு வழங்க முன்வந்துள்ளன. இவற்றுடன் ஜேர்மனி நாற்பது Marders போர் வண்டிகளையும் அனுப்பவுள்ளது. இரசியா அதிகம் பாவிக்கும் போர்த்தாங்கிகள் T-90 தாங்கிகளாகும். அவை உக்ரேன் தலைநகரை அண்மித்து விட்டு திரும்பிச் சென்றவையாகும். துருக்கியில் ஆளிலிகளால் (Drones) பெரிதும் பாதிப்பு உள்ளானவை.

இரசியா உக்ரேனின் தாங்கிகளால் விரட்டப்படுமா?

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...