Followers

Wednesday, 14 August 2024

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்


இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் மாதம் 6-ம் நாள் உக்ரேனியப் படையினர் ஒரு மிகத்துணிச்சலான படை நகர்வு ஒன்றை இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்தனர். 2022-ம் ஆண்டு பெப்ரவரி தொடங்கப்பட்ட இரசிய உக்ரேனின் போரில் 2022இன் இலையுதிர் காலத்தின் பின்னர் இரண்டு தரப்பினரும் சமரணிகள் (battalions) மூலமாகவே படை நகர்வுகளை செய்து வருகின்றனர். ஒரு சமரணியில் சிற நூற்றுக் கணக்கான படையினர் மட்டும் இருப்பார்கள். ஆனால் உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஐந்திற்கும் மேற்பட்ட படைத்தொகுதிகளை (Brigades) கொண்டு இந்த அதிரடித் தாக்குதலைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு படைத்தொகுதியில் ஆயிரம் படையினர் இருப்பார்கள்.

இரசியக் கண்ணில் மண் தூவல் 

உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் அனுப்பிய படையில் ஐந்து தரைப்படைத் தொகுதிகளும் ஒரு வான் தாக்குதல் தொகுதியும் கவச வண்டிகள் மற்றும் தாங்கிகள் அறுநூறும் பயன்படுத்தப்பட்டன. ஆளிலிவிமானங்கள் கண்காணிப்புப் பிரிவுகள் என்பவற்றையும் சேர்த்தால் மொத்தம் பத்தாயிரம் உக்ரேனியப் படையினர் கேர்ஸ்க் பிராந்தியத்தில் களமிறங்கினர். புதிய போர் முறைமைகளில் இரகசியமாக எந்த ஒரு படைநகர்வையும் செய்ய முடியாது என்பது போரியலாளர்களின் கருத்தாகும். கண்காணிப்பு விமானங்கள், வேவுவிமானங்கள், உளவு விமானங்கள், ஆளிலிவிமானங்கள், ஆகியவை மட்டுமல்ல செய்மதிகள் போன்றவையும் தொடர்ச்சியாக போர்முனிகளை அவதானித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் உக்ரேன் பத்தாயிரம் படையினர் தாங்கிகள் மற்றும் கவச வண்டிகளுடன் இரசியாவை அதிரவைக்கக் கூடியவகையில் நகர்த்தியமை உலகப் படைத்துறை ஆய்வாளர்களை வியக்க வைத்ததுடன் இரசியாவின் படைதுறையினர அதிர வைத்தது. 1.32 மில்லியன் படையினரைக் கொண்ட இரசியா 510,000 பேரை உக்ரேன் போரில் ஈடுபடுத்தியுள்ளது. 900,000 நிரந்தரப் படையினரைக் கொண்ட உக்ரேன் 500,000 படையினரை போர்முனைக்கு அனுப்பியுள்ளது. இரு நாடுக்ளுக்கும் இடையிலான 2295 கிமீ எல்லையில் எல்லையில் வலுக்குறைந்த புள்ளியைத் தெரிவு செய்வது இலகுவானது. ஆனால் எதிரியின் கண்காணிப்பைத் தவிர்த்து முன்னேறுவது மிகக் கடினமானது.



உக்ரேன் அனுப்பிய படைத்தொகுதிகள்

உக்ரேன் தனது ஊடறுப்பு போரை தொடங்கிய மூன்றாம் நாள் உக்ரேனின் 116வது இயந்திரமயமாக்கிய படைத்தொகுதி (Mechanized Brigade) வெளியிட்ட காணொலிப் பதிவில் உக்ரேனின் தங்கிகளும் கவச வண்டிகளும் தம் சொந்த நிலப்பரப்பில் பயணிப்பது போல் எதிர்ப்பின்றிப் பயணிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் உக்ரேனின் 99வது இயந்திரமயமாக்கிய சமரணி (Mechanized Battalion) மிகவும் துரிதமாக தாம் நகர்வதாக ஒரு காணொலியை வெளியிட்டனர். உக்ரேனின் படைத்துறையிலேயே அதன் 99வது இயந்திரமயமாக்கிய சமரணிதான் மிகத் துரிதமாக நகரக்கூடியது. உக்ரேன் இரசியாவின் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்த படைநகர்வை மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தது. ஊடுருவிய உக்ரேனியர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற இரசியாவின் Su-34 என்னும் நவீன போர் விமானம் ஒன்றை உக்ரேனியர்கள் சுட்டு வீழ்த்தினர். அவர்கள் தம்முடன் ஒரு சிறந்த விமான எதிர்ப்பு படைக்கலன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஊடுருவிய உக்ரேனியர்கள் காப்பரண்களை அமைத்து தங்கள் நிலையை வலுப்படுத்துவதுடன் தமது நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் வர முடியாதவாறு கண்ணிவெடிகளையும் விதைத்துள்ளனர். உக்ரேனியர்கள் பல இரசியர்களைப் போர்க்கைதிகளாக கைப்பற்றியுள்ளனர்.  28 கிராமங்களை உக்ரேனியர்கள் கைப்பற்றியதாக இரசியா சொல்கின்றது. 70 கிராமங்கள் என்கின்றனர் உக்ரேனியர்கள். 



உக்ரேனின் நோக்கங்கள் எவை?

ஆளணித் தட்டுப்பாடும் படைக்கலத் தட்டுப்பாடும் உக்ரேனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில் உக்ரேன் ஆறாயிரம் அல்லது பத்தாயிரம் படையினரைக் களத்தில் இறக்கியமை அதனால் துணிச்சனால முடிவுகளை எடுக்க முடியும் என்பதைக் கட்டுகின்றது. உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் சமச்சீரற்ற போரில் (Asymmetric Warfare) அது அவசியமான ஒன்றாகும். உக்ரேன் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஊடறுப்புச் செய்தமையின்:

முதன்மை நோக்கம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு மூக்கறுப்பது போல ஓர் அவமானத்தைக் கொடுப்பதாகும்.

இரண்டாவது நோக்கம் உக்ரேன் படையினரின் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் ஜேர்மன் முதலான நாடுகளின் கருத்தை மாற்றுவதாகும். மூன்றாவது நோக்கம் இரசியப் படையினரை விரக்தியடையச் செய்வது. நான்காவது நோக்கம் உக்ரேனுக்கு கருங்கடலில் நுழைவு மறுப்பு முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் கவனத்தை சிதறடித்தல்.

ஐந்தாவது நோக்கம் கேர்ஸ்க் பகுதியில்இரசியாவின் ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோக நிலையத்தை அழித்து இரசியாவிற்கு பொருளாதார இழப்பீட்டை ஏற்படுத்தல்.

ஆறாவது நோக்கம் இரசியாவின் ஒரு பகுதி நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பது எதிர்காலத்தில் இரசியாவுடனான பேச்சு வார்த்தையில் ஒரு பேரம் பேசும் வலுவை உருவாக்குதல்.



ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோகம்

 உக்ரேன் கைப்பற்றிய நிலப்பரப்பில் இரசியாவின் பெரிய எரிவாயு விநியோக நிலையத்தைக் கொண்ட Sudzha நகரும் அடங்கும். உக்ரேனியர்களால் அங்கிருந்து எரிவாயும் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முடியும். Gas Connect Austria என்ற நிறுவனம் தங்களுக்கு குழாய்கள் மூலமாக கிடைக்கும் எரிவாயுவில் தடங்கல் இல்லை என்றது. இரசியாவின் எரிவாயு உற்பத்தி நிறுவனமான Gazprom தாங்கள் இப்போதும் எரிவாயுவை விநியோகிக்கின்றோம் என்கின்றது. 

கனடா இரசியாவில் படைக்கலன் பாவிக்க அனுமதி

உக்ரேனுக்கு பன்னிரண்டு Leopard-2A4 போர்த்தாங்கிகளையும் பா கவச வண்டிகளையும் நூற்றுக் கணக்கான ரோந்து வண்டிகளையும் கனடா வழங்கியுள்ளது. Kirsk மாகாணத்தை உக்ரேன் ஊடுருவிய பின்னர் (2024-08-15) கனடா தனது படைக்கலன்களை உக்ரேனியப் படையினர் இரசிய நிலப்பரப்புகளிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. Kirsk ஊடுருவலுக்கு முன்னர் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தமது படைக்கலன்களை இரசியாவின் நிலப்பரப்பிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தன. 

இரசியாவின் எதிர்வினை

இரசியாவினுள் ஊடுருவிய உக்ரேனிய படையினர் நான்கு நாட்கள் கழித்து தங்ளுடைய இருப்பை வலுப்படுத்துவதிலும் காப்பரண்களை அமைப்பதிலும் அதிகம் ஈடுபட்டனர். மேலதிக படையினரையும் படைக்கலன்களையும் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு உக்ரேன் அனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன.  அவர்களின் நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் செல்ல முடியாதவாறு பதில் தாக்குதல்களைச் செய்தனர். தனியாக ஒரு வான் எதிர்ப்பு படையணியும் இணைந்து சென்றுள்ளது. இரசியாவால் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களைப் பாவித்து சில மணித்தியாலங்களுக்கும் அவர்களை சாம்பலாக்க முடியும். ஆனால் அதன் பின்னர் உக்ரேனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் உக்ரேனுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ வழங்கினால் போர் ஆளணி இழப்பு மிக்க ஒரு போராக மாறும். இரசியா தனது சிறப்பு படையணிகளை ஆளணி இழப்பைக் கருத்தில் கொள்ளாது கேர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பி உக்ரேனியர்களை விரட்டும் முயற்ச்சியில் ஈடுபடும். ஒரு வாரத்திற்கும் மேலாக இரசியா உக்ரேனியர்களை விரட்ட முடியாமல் இருக்கின்றனர். உக்ரேனின் ஊடுருவலின் வேகம் கொடுத்த ஆச்சரியத்திலும் பார்க்க இரசியாவின் பதிலடி மெதுவாக இருப்பது அதிக ஆச்சரியத்தைத் தருகின்றது.  

அணுக்குண்டு பாவிக்கப்படுமா?

உக்ரேன் கைப்பற்றிய பகுதியைச் சுற்றிவர உள்ள பகுதியில் உள்ள மக்களை இரசிய அரசு வெளியேறச் சொல்லியுள்ளது. உக்ரேன் கைப்பற்றிய பிரதேசத்திலும் பார்க்க மூன்று மடங்கு பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் இருந்து இரசியர்கள் இரசிய அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரசியா அணுக்குண்டு பாவிப்பதற்கு ஏதுவாக மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கலாம். 

உக்ரேனின் தாக்குதல் பற்றிய கருத்துகள்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இரசியாவை உக்ரேனியர்கள் ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

விளடிமீர் புட்டீன்: உக்ரேன் படையினர் இரசியாவில் நிலைகொண்டிருக்கும் வரை பேச்சு வார்த்தை இல்லை. 

நேட்டோ படைத்துறை அதிகாரி Christopher G Cavoli: உக்ரேனியர் ஒரு வலுவற்ற புள்ளியைக் கண்டறிந்து அதை துரிதமாக தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். உக்ரேனியர்களுடைய தாக்குதல் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றது. 

டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு மொத்தமாக 45 அமெரிக்கத் தயாரிப்பு F-16களை வழங்கவுள்ளன. நெதர்லாந்து 2024 ஜூலை இறுதியில் ஆறு F-16களை வழங்கியுள்ளது. அவை முப்பது ஆண்டுகள் பழைய விமான்ங்கள் என்றாலும் பல புதிய இலத்திரனியல் போர் முறைமைகள், ரடார்கள் போன்றவை பொருத்தப்பட்டிருப்பதுடன் பல புதிய தொலைதூர ஏவுகணைகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. உக்ரேன் போர் இனி தீவிரமானதாக மாறுவதுடன் இரசிய நிலப்பரப்பில் செய்யப் படும் தாக்குதல்களின் எண்ணிக்கையும் காத்திரமும் அதிகரிக்கும்.  


Wednesday, 7 August 2024

பங்களாதேச ஆட்சி மாற்றம்: அமெரிக்காவிற்கு தளம் அமைக்க மறுத்ததாலா?

பங்களாதேசத்தின் St Martin’s Island என அழைக்கப்படும் வங்காள விரிகுடாலில் உள்ள சிறு தீவை அமெரிக்காவிற்கு கொடுக்க மறுத்ததால் ஷேக் ஹசீனா பேகம் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டதா? வங்களா விரிகுடாவில் மியன்மாருக்கு (பர்மா) அண்மையாக உள்ள எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட St Martin’s Island என்னும் ஒரு சிறிய தீவு இருக்கின்றது. அது பங்களாதேசத்திற்கு சொந்தமானது. அதற்கு மியன்மாரும் உரிமை கோருகின்றது. 


 St Martin’s தீவில் படைத்தளம் அமைக்கும் உரிமையை அமெரிக்கா பங்களாதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்த ஷேக் ஹசீனா பேகம் கோரி வந்ததாக 2023 ஜூன் மாதம் பங்களாதேசத்தின் உழைப்பாளர் கட்சியின் டக்கா-8 தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிட் கான் மேனன் தெரிவித்திருந்தார். மேலும் மேனன் அவர்கள் அமெரிக்கா சீனாவிற்கு எதிரான QUAD என்னும் கூட்டமைப்பில் பங்களா தேசமும் இணைய வேண்டும் என நிர்ப்பந்தித்தாகவும் சொல்லியிருந்தார். 


அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்காவிடில் அவர்கள் பங்களா தேசத்தில் ஆட்சியை ஆட்டம் காண வைப்பார்கள் எனவும் மேனன் எச்சரித்திருந்தார். 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பால் பல வங்காளி மக்கள் காளியம்மனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர். அதனால் தற்போது பங்களாதேசம் இருக்கும் பிரதேசம் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகவும் தற்போதைய மேற்கு வங்கம் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாகவும் உருவாகின. இதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவில் இருந்து பிரியும் போது மேற்கு வங்கம் இந்தியாவுடனும் தற்போதைய பங்களாதேசம் பாக்கிஸ்த்தானுடனும் இணைக்கப்பட்டன.


பங்களா தேசம் விடுதலையான பின்னர் ஷேக் ஹசினா பேகம் அவர்களின் தந்தையும் தலைமை அமைச்சருமான முஜிபூர் ரஹ்மானை படைத்துறையினர் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினர். அந்தச் சதிக்கும் பின்னால் அமெரிக்கா இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதன் பின்னர் பங்களாதேசத்தின் பல இரத்தக் களரி மிக்க ஆட்சி மாற்றங்கள் நடந்தன: 
1975 நவம்பர் மேஜர் ஜெனரல் காலித் மொசராஃப் ஆட்சியைக் கைப்பற்றினார். 1977–1980 பல ஆட்சி மாற்ற முயற்ச்சிகள். 
1982 லெப்டினண்ட் ஜெனரல் ஹுசேன் மொஹமட் எர்சாட் ஆட்சியைக் கைப்பற்றினார். 
1996 சதி முயற்ச்சி. 
2007 காபந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி 
2009 கிளர்ச்சி 
2011 சதி முயற்ச்சி
 2024 மாணவர் எழுச்சி 


ஷேக் ஹசினா பேகம் பங்களாதேசத்தின் ஆட்சி தனக்கு மட்டும் சொந்தமானது என்பது போல ஆட்சி செய்தார். எதிர்க்கட்சியினரை அடக்கினார். சுதந்திரப் போராட்ட த்தில் ஈடுபட்டவர்களுக்கு அரச பதவிகளில் முப்பது விழுக்காடு என பங்களாதேசத்தின் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாட்டைப் பயன்படுத்து தனது கட்சியினரை அரச பதவிகளில் அமர்த்தினார். மாணவர் அமைப்பு என்னும் பெயரில் ஒரு காடைக்கும்பலையும் வழி நடத்தினார். 


 St Martin’s Island என்னும் பவளப் பாறைத் தீவின் அமெரிக்கா படைத்தளம் அமைத்தால் அதில் இருந்து பங்களாதேசம், மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் அச்சுறுத்தல் கொடுக்க முடியும். மியர்மாரில் சீனாவின் ஆதிக்கத்தையும் சமாளிக்க முடியும். தொடர்ச்சியான விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடி, வலுவிழந்த வங்கித்துறை, ஏற்றுமதியிலும் அதிகமான இறக்குமதி, குறைந்து செல்லும் அந்நியச் செலவாணிக் கையிருப்பு ஆகியவை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழ வைத்தது. வளர்முக நாடுகளில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவது அமெரிக்காவிற்கு கைவந்த கலை எனச் சொல்லலாம்.

இந்தியாவும் பங்களாதேசமும்

பங்களாதேசம் இந்தியாவுடன் 54 நதிகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்தியாவில் இருந்து பங்களாதேசத்திற்கு செல்லும் கங்கை, பிரம்மபுத்திரா, ஆகிய நதிகள் பங்களாதேசத்தின் 1.72மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடை நீர்ப்பிடி பிரதேசத்திற்கு நீர் வழங்குகின்றது. பங்களாதேசத்தின் உணவு உற்பத்தி பிரம்மபுத்திரா, கங்கை நதிகளின் வடிநிலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் நீர்ப்பங்கீடு, எல்லை போன்றவை தொடர்பான பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவுடன் உறவை சீர் செய்ய பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக பங்களாதேசம் பல நடவடிக்கைக்களை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்து வங்காளிகளுக்கும் பங்களாதேசத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. வங்காளிகள் மதத்திலும் பார்க்க இன மற்றும் மொழி உணர்வுகளால் அதிகம் பிணைக்கப் பட்டுள்ளார்கள். பங்களாதேசப் பிரிவினைக்கு முன்னர் கிழக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள வங்காளிகளுக்கு அட்டூழியம் நடந்த போது மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகள் கிளர்ந்து எழுந்தனர். பங்களாதேசமும் இந்தியாவும் 4000கிலோ மீட்டர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இது உலகின் ஐந்தாவது நீளமான எல்லையாகும். மியர்மார், வங்கக்கடல் தவிர பங்களாதேசத்தின் மூன்று திசைகளில் இந்திய எல்லைகள் இருக்கின்றன. இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேசத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏழையும் இந்தியாவின் முதன்மை நிலப்பரப்பையும் இணைக்கும் சில்குரி இணைப்புப் பாதை மிகவும் சிறியது என்றபடியால் அது கோழிக்கழுத்து என அழைக்கப்படுகின்றது. இதை சீனா கைப்பற்றினால் அசாம், திரிபுரா, மிசொரம், மெகாலாயா, நாகலாந்து, மணிப்புரி ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும். அப்படி ஒன்று நடக்கும் போது இந்திய பங்களா தேசத்தின் ஊடாகவே தனது விநியோகங்களை அந்த ஏழு மாநிலங்களுக்கும் செய்ய முடியும். அந்த மாநிலங்களை சீனாவால் இலகுவாக கைப்பற்ற முடியும்.

பங்களாதேசமும் இலங்கையைப் போல் அமெரிகா, சீனா, இந்தியா ஆகிய அயோக்கிய நாடுகளின் போட்டிக் களமாக மாறியுள்ளது. 


Tuesday, 16 January 2024

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

 


இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங் சென்றபோது இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயன்றன. இரண்டு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்றும் பெருந்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா இரண்டு நாடுகளையும் வல்லரசுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அப்போது சீனா தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகப்புச் சபையில் நிரந்தர உரிமை பெற்று வல்லரசாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்க்கும் ஒரே வல்லரசு நாடாக சீனா இருக்கின்றது.

இந்தியா பிராந்திய வல்லரசல்ல ஆக்கிரமிக்கப்பட்ட நாடு

பிராந்திய வல்லரசு என்ற பதத்தை தற்போது பல்கலைக்கழகங்களும் அரசறிவியலாளர்களும் பாவிப்பதை தவிர்த்து நடுவண் வல்லரசு என்ற பதத்தைப் பாவிக்கின்றனர். ஆனால் எம்மில் சிலர் இந்தியாவை வல்லரசு என அடிக்கடி சொல்கின்றனர். இந்தியா ஒரு படைவலிமை மிக்க நாடுதான். ஆனால் உலகிலேயே அணுக்குண்டு வைத்திருக்கும் இரண்டு போட்டி நாடுகளை அயல் நாடுகளாகக் கொண்டிருப்பதுடன் அவற்றுடன் தீர்க்க முடியாத எல்லைத் தகராற்றைக் கொண்ட நாடு இந்தியா. அதனால் அதன் பாதுகாப்பு மிகவும் வலிமை குறைந்ததாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியாவின் அரசியலமைப்பின் படி இந்தியாவிற்கு சொந்தமானதாக உள்ள பிரதேசங்களை சீனாவும் பாக்கிஸ்த்தானும் கைப்பற்றி வைத்திருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்தியாவிற்கு சொந்தமான 38,000சதுர கிலோ மீட்டரை சீனா கைப்பற்றியிருப்பதாக 2020இல் தெரிவித்திருந்தார். ஆக்கிரமிக்கப் பட்ட நாடாகிய இந்தியா ஒரு “பிராந்திய வல்லரசு” அல்ல. மேலும் இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவால ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கின்றது.

ஓங்கி அடித்த பெரியண்ணனான சீனா

1954-ம் ஆண்டு நேரு மாவோ சே துங் சந்திப்பின் பின்னர் சீனாவை இந்தியாவின் பெரியண்ணன் என விபரித்தார். ஆனால் 1962இல் சீனா தீபெத்தைக் கைப்பற்றியதுடன் இந்தியா மீதும் படையெடுத்து இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் அரச பதிவுகள் வங்கிகளில் இருந்த பணங்களை எல்லாம் தீயிட்டுக் கொழுத்தி விட்டு இந்தியர்கள் தலை தெறிக்க ஓடினர். அதனால் இன்றும் அசாமில் யார் மண்ணின் மைந்தர்கள் என்ற பிரச்சனை இருக்கின்றது.

இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க முயலும் அமெரிக்கா

சீனாவை அடக்கும் அமெரிக்கக் கொள்கையை ஒட்டிய செயற்பாட்டில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா விரும்புகின்றது என சீனா சொல்கின்றது. இந்தியாவும் தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றி வருகின்றது என சீனா கருதுகின்றது. சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்று மடங்காகும். சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்வதில் தயக்கம் காட்டி வந்தது. சீனாவுடன் நல்ல உறவில் இருந்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற முடியும் என இந்தியா கருதி இருந்தது. 2017-ம் ஆண்டு இந்திய சீன எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் பிரதேசத்தில் இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. ஜப்பான் முன்வைத்த குவாட் அமைப்பில் இணைய இந்தியா காட்டிய தயக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவை மட்டுமல்ல இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 என்னும் பெயரில் இரண்டு நாடுகளினதும் வெறியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அடிக்கடி கூடி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்துவருகின்றனர். அதுமட்டுமல்ல அமெரிக்கா இந்தியாடுடனான உறவை தனது கேந்திரோபாய பங்காளியாக தரமுயர்த்தி உள்ளது.

தைவானை இந்தியா காப்பாற்றுமா?

தைவான் மீது சீனா ஓர் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்தால் சீனாவை திசை திருப்ப சீன எல்லையில் இந்தியப் படைகள் தம் நிலங்களை மீட்பது என்னும் பெயரில் ஒரு போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இந்த நம்பிக்கையில் தான் இந்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முழுக் கஷ்மீரையும் கைப்பற்றுவோம் என சூளுரைப்பார். ஆனால் கஷ்மீர் போர் என வரும் போது இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் மோத வேண்டி வரும்.

இந்திய சீன ஒத்துழைப்பு

இந்தியாவும் சீனாவும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஆகிய இரு முக்கிய அமைப்புக்களில் உறுப்பு நாடுகளாக உள்ளன. அவற்றில் இரசியாவும் இருக்கின்றது. இந்தியா அமெரிக்கா பக்கம சாயாமல் இருக்கும் படை சீனா நடந்து கொள்ள வேண்டும் என இரசியா எதிர்பார்க்கின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் படைத்துறை மேம்பாட்டையும் பார்க்கும் சீனர்கள் இந்தியா தக்கு சவால் விடக்கூடிய வல்லரசாக வளரும் என நம்புகின்றனர். அதனால் இந்தியா வளரக்கூடாது என அவர்கள் காய்களை நகர்த்தலாம். சீனாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நீரிணைக்கு அண்மையாக இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளில் இந்தியாவின் படைவலிமை அதிகரிப்பதும் சீனாவை கரிசனை கொள்ள வைக்கின்றது.

சீனாவின் ஒரு துருவ ஆசியா – இரு துருவ உலகம்

சீனாவின் இலக்கு ஒரு துருவ ஆசியாவும் இரு துருவ உலகமுமாகும். அதாவது ஆசியவில் சீனா தனியாதிக்கம் செலுத்த வேண்டும். உலகின் மற்றப்பகுதிகளில் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா தனது படைவலுவைப் பெருக்கும் போது இந்தியா பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. அதனால் சீனாவிற்கு போட்டியாக இந்தியா தன் படைவலுவைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியிலும் பார்க்க சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி ஐந்து மடங்கானது. ஆனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க மூன்றரை மடங்கானது. இதனால் இந்தியா தனது பாதீட்டில் அதிக பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

பங்களாதேசம், இலங்கை, மால தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவிற்கு அச்சுறுத்தலானது. அத்துடன் இந்தியாவில் இருந்து சீனா செய்யும் இறக்குமதியிலும் பார்க்க அதிக அளவு இறக்குமதியை சீனாவில் இருந்து இந்தியா செய்கின்றது. இதை சமநிலைப்படுத்தக் கூடிய வகையில் சீனா தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியவின் நீண்ட நாள் கோரிக்கையை சீனா உதாசீனம் செய்கின்றது.

சீனா தன்னை சமமாக நடத்த வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கையில் சீனா தன்னை ஆசியாவின் தலைமை நாடாகப் பார்க்கின்றது. இந்த முரண்பாடு இல்லாமல் போக வாய்ப்பில்லை.


Thursday, 4 January 2024

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மறைமுகப்போர்?

ஈரான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக நிகராளிப் போர் (Proxy war - அதாவது மூன்றாம் தரப்பினர் மூலமாகச் செய்யும் தாக்க்குதல்) செய்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, யேமனில் செயற்படும் அன்சர் அல்லா அமிப்பு உட்பட பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு பணம், பயிற்ச்சி படைக்கலன் போன்றவற்றை ஈரான் வழங்குகின்றது எனவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் உருவாக்கத்தில் இருந்து வளர்ச்சி வரை கடுமையாக உழைத்தவர் ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமான்.

சுலைமானி நினைவுநாளில் படுகொலை

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஈரானியப் படைத்தளபதி காசிம் சுலைமானி நெறிப்படுத்துகின்றார் என்பதால் ஈராக்கிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்த வேளை அங்கு வைத்து அமெரிக்க ஆளிலி விமானம் மூலமாக குண்டுகளை விச்சி அவர் 2020 ஜனவரியில் கொல்லப்பட்டார். 2024 ஜனவரி மூன்றாம் திகதி அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருக்கும் வேளையில் இரண்டு குண்டுகள் வெடித்து நூற்றிற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூறு மக்கள் காயப்பட்டனர்.

ஹிஸ்புல்லா தளபதி படுகொலை

2023-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக காசா நிலப்பரப்பில் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டு தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது துல்லியத் தாக்குதல்களைச் செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது. அதன் பின்னர் பெருமளவு இஸ்ரேலியப் படையினர் காசா நிலப்பரப்பில் இருந்து வெளியேறினர். அத்துடன் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானியா ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் பலஸ்த்தீன மேற்குக் கரைக்குப் பொறுப்பான தளபதியும் ஹிஸ்புல்லாவிற்கும் ஈரானுக்குமான தொடர்பாளராக கடமையாற்றுபவருமான சலே அல் அரூரி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேலிய ஆளிலி மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

ஈரானிற்கு எதிராக பலுச் இனமக்களா?

2023 டிசம்பர் 17-ம் திகதி ஈரானின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ராஸ்க் நகரத்தின் காவல் துறையின் தலமையகம் மீது பலூச் இன போராளிகள் தாக்குதல் நடத்தினர். பலுச் இன மக்கள் பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு அந்த மூன்று நாடுகளிலும் இருக்கின்றது. பலுச் மக்கள் வாழும் பாக்கிஸ்த்தானிய நிலப்பரப்பில் சீனா-பாக்கிஸ்த்தான் பொருளாதாரப் பதையின் முக்கிய பகுதி அமைந்துள்ளது. சீனாவின் முத்துமாலைத் திட்ட துறைமுகமான குவாடர் பலுச் மக்கள் வாழும் பலுஸ்சிஸ்த்தான் மாகணத்தில் உள்ளது. உலக அரசியல் போட்டியில் பலுச் மக்கள் வாழும் பகுதி முக்கியமானதாகும்.

2023 ஒக்டோபர் 7-ம் திகதி ஈரானிய ஆதரவு பெற்ற கமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபின்னர் பலுச் விடுதலைப் போராளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக பலுச் போராளிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தோ அல்லது இணைந்தோ பாவிக்கத் தொடங்கிவிட்டார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.  ஏற்கனவே இஸ்ரேல் ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொல்லுதல் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகளில் தாக்குதல் செய்தல், இணையவெளித்தாக்குதல் எனப் பல பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்துள்ளது. அது ஈரானுக்கு எதிராகச் செய்யும் முதலாவது நிகராளிப் போர் இதுவா?


சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் பற்றி அறிய கீழே சொடுக்கவும்:


Wednesday, 20 December 2023

அமெரிக்கப் பொறியில் இந்தியா அகப்பட்டதா?

 

 















2024 ஜனவரி 26-ம் திகதி நடக்கவுள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில் ஜோ பைடன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அத்துடன் மறுநாள் 27-ம் திகதி இந்தியாவில் நடக்கவுள்ள கோட் (QUAD) என்னும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடும் இந்தியாவில் நடக்கவிருந்தது. ஜோ பைடன் ஜனவரி 2024இல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள மாட்டார் என இப்போது எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியக் குடியரசு நாள் விழாவிற்கான புதிய முதன்மை விருந்தினரை சில வாரங்களுக்குள் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு உள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குடியரசு நாள் விழாவில் தன்னை ஓர் உலகம் மதிக்கும் உன்னதமானவராக காட்ட முடியாமல் போய்விடுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க உறவில் பிணக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. 

அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையில் இந்தியா!

சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்னும் அமெரிக்க குடிமகளை கொல்வதற்கு அமெரிக்காவில் செய்த முயற்ச்சியானது கனடா, வான்கூவரில் ஹர்திப் சிங் நிஜாரைக் கொன்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகும் என அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குற்றப் பத்திரிகையில் நிக்கில் குப்தா என்னும் இந்தியக் குடிமகனும் பெயர் குறிப்பிடாத ஓர் இந்திய அரச ஊழியரும் குர்பத்வந்த் சிங் பன்னுன்னைக் கொல்வதற்கு ஓர் அடியாளை அமர்த்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒளிக்க இடமில்லாமல் தலையாரி வீட்டில் ஒளித்த கதை

பாவம் குப்தா! பன்னுன்னைக் கொல்வதற்கு அவருக்கு ஓர் அடியாள் தேவைப்பட்டது. அந்த அடியாளைத் தேடிப்பிடிக்க ஒரு தரகரும் தேவைப்பட்டது. அவருக்கு அகப்பட்டது தரகர் அல்ல தரகர் போல் நடித்த அமெரிக்க உளவாளி. அந்தத் தரகர் ஏற்பாடு செய்த அடியாளும் அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர். அதனால் நிக்கில் குப்தா மாட்டிக் கொண்டார். கொலைக்கான கூலி ஒரு இலட்சம் டொலர், முற்பணம் பத்தாயிரம் டொலர். 2024 ஜூன் 9-ம் திகதி வழங்கப்பட்டது. ஆனால் குப்தா எப்படியோ செக் குடியரசுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அவரை நாடுகடத்தும் வேண்டுகோள் செக் குடியரசுக்கு விடுக்கப்பட்டதால் அவர் செக் குடியரசில் Prague விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது (ஜூன் 30-ம் திகதி) கைது செய்யப்பட்டார். அவரை ஒரு SUV வண்டியில் வைத்து மூன்று மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர். அவர் மீதான ஆட் கொணர்வு மனுவை அவரது குடும்பத்தினர் இந்திய நீதி மன்றத்தில் கொடுத்தனர். அது தங்களது நியாய ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற இந்திய நீதிமன்றம் மனுவை ஜனவர் 4-ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனது. நிக்கில் குப்தா இதை எழுதும் போது செக் குடியரசுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

கனாடாவில் கொலை மற்றும் அமெரிக்காவில் கொலை முயற்ச்சி ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் தனது தொடர்பை இந்தியா மறுத்துள்ளதுடன் அவை தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாகச் சொல்கின்றது. இந்தியாவிற்கு தொடர்பில்லை என்று விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே? இந்தியா தான் செய்யாத செயலுக்கு ஏன் விசாரணைக்கு ஒத்துக் கொள்கின்றது? அதற்கான விடை ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் தெரியும்.

அரசுறவு கொலை முயற்ச்சியை மறைக்குமா?

சீனாவிற்கு எதிரான கூட்டணி அமைப்பதில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் இருப்பதால் அமெரிக்கா தம்மை மதித்து நடக்க வேண்டும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அதனால் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைக்க மாட்டாது என இந்தியா நினைத்திருந்தது போலிருக்கின்றது. அமெரிக்கா தனது நீதித் துறை தனது கடமையைச் சரியாகச் செய்யும் என விட்டுவிட்டது. அமெரிக்காவில் சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுமை கொல்ல நடந்த முயற்ச்சி தொடர்பாக இந்தியா விசாரிப்பதாகச் சொன்னது காலத்தை இழுத்தடித்து அதைப் புதைக்கவா என அமெரிக்க மனித உரிமைச் செயற்ப்பாட்டாளர்கள் ஐயப்படுகின்றனர்.

கனடாமீது சீறிய ஜெய்ஷங்கர் அமெரிக்காவிற்கு அடக்கம்

கனடா ஹர்திப் சிங் நிஜார் கொலை தொடர்பான குற்றச் சாட்டை முன்வைத்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் பதில் கடுமையானதாக இருந்தது. அக்குற்றச் சாட்டு அபத்தமானது உள்நோக்கம் கொண்டது என்றார் ஜெய்ஷங்கர். கனடா தீவிரவாதிகளின் புகலிடம் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் குற்றச் சாட்டில் அவர் கடுமையான பதில் கொடுக்கவில்லை. கனடாவிற்கு எதிரான ஜெய்ஷங்கரின் கருத்து அமெரிக்காவை விசனமடைய வைத்திருக்கலாம்.

கனடாவோ அமெரிக்காவோ யோக்கியமான நாடுகளல்ல

1985இல் ரொறென்ரோவில் இருந்து இந்தியா சென்ற Air India விமானம் அயர்லாந்துக் கரையில் குண்டு வெடிப்பில் சிதறி அதில் பயணித்த 329 பேரும் கொல்லப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பாக கனடா நடந்து கொண்ட விதம் ஐயத்திற்கு இடமானது. அமெரிக்கா நீதிக்குப் புறம்பான வகையில் தான் பயங்கரவாதிகள் எனக் கருதும் பல்லாயிரக் கணக்கானவர்களை ஆளில்லா விமானங்களில் இருந்து குண்டுகளை வீசிக் கொன்றுள்ளது.

சதிக்கோட்பாடு

உக்ரேன் போரின் பின்னர் அமெரிக்கா இரசியாமீது விடுத்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. சினாவிற்கு எதிரான கூட்டணியில் இணைய இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பின்னணியில் அமெரிக்கா வெளிநாடுகளில் வாழும் சீக்கிய விடுதலைப் போராளிகள் பற்றிய இந்திய உளவுத்துறையின் நகர்வுகணை வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றதா? அதில் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் நோக்கில் நிக்கில் குப்தா எடுத்த முயற்ச்சிகளில் தனது உளவுத்துறையை புகுத்தி அவர்களையே அடியாளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பன்னுன் என்னும் பயங்கரவாதி



இந்தியா மீது பொருளாதாரத் தடை வருமா?

ஆ ஊ என்றால் பொருளாதாரத் தடைகளை மற்ற நாடுகளில் விதிக்கும் அமெரிக்கா தன்னாட்டில் வைத்து தனது குடிமகனை அந்நிய நாடு ஒன்று கொல்ல எடுத்த முயற்ச்சிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகின்றது? அமெரிக்கா உலகில் தனது ஆதிக்கத்தை பேணுவதற்கு “மனித உரிமை மீறல்”, “பன்னாட்டு நியம மீறல்” ஆகியவற்றை படைக்கலன்களாகப் பயன்படுத்துகின்றது.



Thursday, 14 December 2023

உலக அரசியலில் அயோக்கித்தனத்தைப் புகுத்திய கிஸ்ஸிங்கர்

 


உயர்ந்த கல்விமானாக இருந்து வெற்றீகரமான அரசுறவியலாளராக (இராசதந்திரியாக) மாறிய ஹென்றி கிஸ்ஸிங்கர் உலக அரசியலில் அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதியாக்கியவர். 2023 நவம்பர் 29-ம் திகதி அவர் காலமானார். அவர் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட மக்களாட்சியின் விழுமியங்களை காலின் கீழ்ப்போட்டு மிதிக்கத் தயங்காதவர். இவரின் உலக அரசியல் சிந்தனையின் வழிவந்தவர்களால் தான் தமிழ் ஈழத்தில் மூன்று இலட்சம் உயிர்களைப் பலியெடுக்கப்பட்டன. இவருக்குப் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் அவரது மாணக்கர்கள், அவருக்கு கீழ் பணிபுரிந்தவரகள், அல்லது அந்த இருதரப்பினரின் வழிவந்தவர்கள் ஆகும்.

ஜேன்மனியில் பிறந்த யூதர்

1923-ம் ஆண்டு ஜேர்மனியின் ஃபேர்த் நகரில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூத குடும்பத்தில் பிறந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் அங்கு நிலவிய அடக்குமுறைக்குத் தப்பி அமெரிக்கா நியூயோர்க் நகரில் குடியேறி அங்கு முன்னணிப் பல்கலைக்கழகத்த்தில் கற்றுத்தேர்ந்து அமெரிக்கப்படையில் இணைந்து மொழிபெயர்ப்பாளராகவும் உளவாளியாகவும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின் போது செயற்பட்டார். 1947இல் மீளவும் அமெரிக்கா சென்று மேற்படிப்பை மேற்கொண்டு ஹாவார்ட் பலகலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுத்துறையில் 1957இல் இருந்து பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்கர்கள் ஒழுக்கவாதத்தை ஒதுக்கிவிட்டு நடைமுறைக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும் என்பது அவரது போதனை. அவரது கொடூரமான கொள்கைகளை வெறுத்த பல மாணவர்கள் அவரை விட்டு வெளியேறினர்.

அரசியல் உரையாற்றுவதற்கும் நூல்கள் எழுதுவதற்கும் கட்டணமாகப் பெரும் தொகை பெறுபவர் கிஸ்ஸிங்கர் அவரது ஒரு நூலுக்கான் முற்பணமாக ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் கிஸ்ஸிங்கள் ஜோன் எஃப் கென்னடியின் ஆட்சிக்கு பகுதி நேர ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் ரிச்சர்ட் நிக்ஸனின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியவர்

1901 முதல் 1905 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா ஒரு நல்ல அயல்நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். அவருக்குப் பின்னர் 1914 முதல் 1921 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த வூட்ரு வில்சன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை உயர்குறிக்கோள், அறம், ஆகியவற்றின் அடிப்படையில் மக்களாட்சியை பரப்பும் வகையில் வரையறை செய்யப்பட வேண்டும் என்றார். இந்த கொள்கைகளை மாற்றி அயோக்கியத்தனமான வெளியுறவுக் கொள்கைகளை யதார்த்தவாதம் என்னும் பெயரில் முன்னெடுத்தவர் ஹென்றி கிஸ்ஸிங்கர். அவரது கொள்கை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அவை மாறுவதறகன அறிகுறிகள் ஏதும் இல்லை.

கறுப்பின மக்களை வெறுத்த கிஸ்ஸிங்கர்

கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராகப் பணியாற்றிய போது நைஜீரியாவிற்கான அமெரிக்க தூதுவராகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆபிரிக்க அலுவர்களுக்கான துணைச் செயலராகவும் இருந்த Donald Easum கிஸ்ஸிங்கர் ஆபிரிக்க நாடுகளின் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் மதிப்பதில்லை என்றும் ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றும் எழுதியுள்ளார். தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பின மக்களின் ஆட்சி அமைவதை கிஸ்ஸிங்கர் விரும்பவில்லை. அதற்காக பல சதி நடவடிக்கைகள் செய்தார்.

வியட்நாம் இனக்கொலை சிலி ஆட்சி மாற்றம்

கண்மூடித்தனமான Carpet Bombingஐ வியட்னாமில் மேலும் தீவிரப்படுத்தும் படி ரிச்சர்ட் நிக்சனுக்கு ஒரு புறம் ஆலோசனை வழங்கிவிட்டு மறுபுறம் அமைதிப்புறா போல் தோற்றத்தை மாற்றி வியட்னாமியர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தி பல அமெரிக்க உயிரழப்புக்களைக் கொடுத்த வியட்னாம் போரை நிறுத்தினார். கம்போடியா தரைமட்டமாகியதற்கும் கிஸ்ஸிங்கரே காரணமாகும். சிலியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகவுடமைவாதி சல்வடோர் அலெண்டேயை ஆட்சியில் இருந்து அகற்றியவர். ஹென்றி கிஸ்ஸிங்கர். பொதுவுடமைவாதம், சமூகவுடமைவாதம் போன்றவற்றைப் பின்பற்றுபவர்கள் எந்த ஒரு நாட்டிலும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அமெரிக்காவின் கொள்கையை கொடூரமான முறையில் முன்னெடுத்தவர் கிஸ்ஸிங்கர்.

வங்க இனக்கொலை

பங்களாதேசத்தில் இனக்கொலை செய்த பாக்கிஸ்த்தான் சர்வாதிகாரி ஏ. எம் யஹியா கானின் ஆட்சிக்கு எல்லாவகையிலும் உதவியர் ஹென்றி கிஸ்ஸிங்கர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாடு என்பதற்காக பாக்கிஸ்த்தானிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கிஸ்சிங்கர். இந்திரா காந்தியை பெட்டை நாய் எனவும் இந்தியர்களை வேசிமகன்கள் எனவும் அழைத்தார் என்ற குற்றச்சாட்டு கிஸ்ஸிங்கர் மீது முன்வைக்கப்படுகின்றது.  பாக்கிஸ்த்தானில் ஆட்சியில் இருந்த மற்றும் இருக்கின்ற அயோக்கியர்களுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கின்ற நாடாக இன்றும் இருப்பது அவரது சிந்தனைப் பள்ளியின் அடையாளமே. பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் 2023 ஓகஸ்ட்டில் சிறையிலடைக்கப்பட்டார்.

குர்திஷ் மக்களைக் கால்வாரியவர்

1970களில் ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் தன் உறவை வளர்த்ததுடன் அங்கிருந்து பெருமளவு படைக்கலன்களையும் வாங்கினார். இதனால் சினமடைந்த கிஸ்ஸிங்கர் ஈராக்கில் வாழும் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டினார். ஆனால் 1979இல் ஈரானில் மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மதவாதிள் ஆட்சியைக் கைப்பற்றிய போது ஈரானுக்கு எதிராக ஈரக்கின் சதாம் ஹுசேய்னை கிஸ்ஸிங்கர் தூண்டினார். அதற்காம சதாமின் வேண்டுகோளிற்கு இணங்க குர்திஷ் மக்களுக்கு உதவி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது. குர்திஷ் மக்களை கைவிடுவது சரியான செயல் அல்ல என கிஸ்ஸிங்கரின் உதவியாளர் சொன்னபோது அவரது பதில் நான் நடத்துவது மறைமுக அரசுறவியல் கிருத்துவ பரப்புரையகமல்ல (underground diplomacy not missionary) என்றார் கிஸ்ஸிங்கர். பின்னர் குர்திஷ் மக்கள் தடைசெய்யப்பட்ட படைகலன்களால் கொடூரமாக அழிக்கப்பட்டனர்.

கிஸ்ஸிங்கர் சூ என் லாய் சந்திப்பும் நோபல் பரிசும்

1971-ம் ஆண்டு கிஸ்ஸிங்கர் சீனத் தலைமை அமைச்சர் சூ என் லாயை தான் இரகசியமாகச் சந்தித்ததாக அறிவித்த போது அவரது பெயர் உலகப் புகழ் பெற்றது. அப்போது சோவியத் ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து கொண்டிருந்தது. சீனாமீது ஓர் அணுக்குண்டுப் போரைத் தொடுக்க சோவியத் ஒன்றியம் தயாராக வருகின்றது என்ற செய்தியை அடிப்படையாக வைத்து சீனா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் உறவை வளர்க்க முன்வந்தது. அமெரிக்காவுடன் கடும் போட்டியில் இருந்த சீனாவையும் சோவியத் ஒன்றையத்தையும் பிரித்து வைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை கிஸ்ஸிங்கர் பயன்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாக்க ஷாங்காய் உரையாடல் என்னும் பெயரில் ஒப்புக்கொண்டன. 1972இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அல் ஜசீரா இணையத்தளத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரு போர்க்குற்றவாளி கிஸ்ஸிங்கர் என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை ஹின்றி கிஸ்ஸிங்கர் இறப்புச் செய்தி வெளிவந்தவுடன் பதியப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவரது சிந்தனைப் பள்ளி மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் அறியாதவர்களே ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் பரிகார நீதி பெற்றுத்தரும் என நம்புகின்றனர். 

ஹென்றி கிஸ்ஸிங்கர் பற்றிய முந்தையய கட்டுரையைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்:

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

வல்லரசு நாடுகளின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி பற்றி கிழ் உள்ள இணைப்பில் காணலாம். 

Thursday, 10 August 2023

பிரெஞ்சு சுரண்டலும் நைஜர் ஆட்சி மாற்றமும்



 மேற்கு ஆபிரிக்க நாடாகிய நைஜரில் நடந்த பின்னணி:

1. திறனற்ற தூய்மையற்ற ஆட்சி

2. எரிபொருள், தங்கம், யூரேனியம் போன்றவை உள்ள நைஜரின் பொருளாதாரத்தை பிரான்ஸ் சுரண்டுவதாக நைஜர் மக்கள் சினமடைந்துள்ளனர்.

3. Global South எனப்படும் தெற்குலகில் 1. சீனா, 2. இரசியா 3. திரண்ட மேற்கு ஆகியவற்றிடையே ஆதிக்கப்போட்டி

4. இஸ்லாமியத் தீவிரவாதம்

5. கால நிலை மாற்றம் உணவு உற்பத்தியை பாதித்தது. கொவிட்-19, உக்ரேன் போர்,


செய்திகள்

1. 99.3% இஸ்லாமியர்களைக் கொண்ட நைஜரில்2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த மொஹமட் பஜௌம்மின் ஆட்சி 2023 ஜூல 26-ம் திகதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

2. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியை படையினர் புரட்சி மூலம் கவிழ்த்தனர். அதில் இரசியாவின் கை இருக்கின்றது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதுவும் வாக்னர் குழு சம்பந்தப்பட்டதாக குற்றச் சாட்டு. Telegram channel என்ற சமூக வலைத்தளத்தில் வாக்னர் குழுவினர் தங்கள் அடுத்த இலக்கு நைஜர் என தகவல்களைப் பரிமாறியிருந்தனர்.

3. 1500 பிரெஞ்சுப் படையினர் நைஜரில் உள்ளனர்.

4. ஏழாவது பெரிய யூரேனியம் உற்பத்தி செய்யும் நாடு.

5. நைஜரில் இரசியாவின் தேசியக் கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவர்கள் மக்கள் இரசியாவை விரும்புகின்றனர். பிரான்ஸ் அங்கு செய்து கொண்டிருக்கும் சுரண்டலே இதற்கு காரணம். 

நைஜர் ஆட்சி மாற்றத்தின் விளைவுகள்

திரண்ட மேற்கு நாடுகளுக்கு பெரும் சவால்.

படையினரின் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நைஜரின் உள்ள அமெரிக்காவின் Nigerien Air Base 201 என்ற விமானத்தளத்தை அமெரிக்கப் படையினர் பாவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 6200 அடி விமான ஓடுபாதையைக் கொண்ட இத்தளம் 2019இல் $110மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி ஆளிலியான MQ-9 Reapersயும் மற்றும் விமானிகள் ஓட்டும் விமானங்களும் இத்தளத்தில் உள்ளன.

நடுவண் ஆபிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பெரும் அடி.

இனி நடக்கவிருப்பவை

1. 55 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்க ஒன்றியம் படையினரின் ஆட்சி கலைக்கப்படுவதற்கு விதித்த இரண்டு வாரக் காலக்கெடு முடிந்து விட்டது.

Benin, Burkina Faso, Cabo, Verde, Cote de Ivoire, The Gambia, Ghana, Guinea, Nuinea-Bissau, Liberea, Mali, Niger, Nigeria ஆகிய 15 நாடுகளைக் கொண்ட Economic Community of West African States (ECOWAS) என்ற அமைப்பும் காலக் கெடு விதித்திருந்தது. நைஜரின் அயல் நாடாகிய நைஜீரியாவின் இஸ்லாமிய அறிஞர்கள் அவை நைஜரின் குழப்பத்தை தீர்பதற்கு தமது ஒத்துழைப்பை வழங்க முன் வந்துள்ளது. 2023-08-10 வியாழக்கிழமை அவர்கள் இது தொடர்பாக நைஜரின் தற்ப்போது ஆட்சியில் இருப்பவர்களுடம் கலந்துரையாட முயல்கின்றது. நைஜருக்கு எதிரான பொருளாதாரத் தடையை அந்த அவை கண்டித்துள்ளது. 

மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம் படைகளை அனுப்புமா? 1990இல் லைபீரியாவிற்கு அனுப்பியது. வேறும் பல உறுப்பு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடந்த போது அமைதிப்படையை அது அனுப்பியது. மேஆபொசமூகம் விதித்த காலக்கெடு 2023 ஆகஸ்ட் 6-ம் திகதியுடன் முடிவடைந்தது.

மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமுகம் பொருளாதாரத் தடையை விதித்தது.

நைஜீரியா நைஜருக்கு மின்சார விநியோகத் தடை செய்தது. நைஜருக்கு தேவையான 80% மின்சாரம் நைஜீரியாவில் இருந்தே செல்கின்றது.

ஆனால் நைஜர் தற்போது உள்ள நிலையில் மே ஆ பொ சமூகத்தின் படையினர் சென்றால் அங்கு கடும் மோதல் ஏற்பட்டு பிராந்திய அமைதிக்கு பாதகம் ஏற்படும்.

நைஜீரியா படைத் தளபதி பேச்சு வார்த்தை மூலமாகவோ அல்லது போர் மூலமாகவோ நைஜரில் மக்களாட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

புரட்சி செய்த படையினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது/ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்காவும் பிரான்ஸும் இருக்கலாம். 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

ஆபிரிக்க மக்களின் வேணவாக்கள் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அதன் விளைவாக கடுமையான உள்ளகப் போட்டி ஆபிரிக்க நாடுகளில் நிலவுகின்றது. திரண்ட மேற்கு நாடுகளின் ஆதரவு ஆட்சியாளரகள் கடும் சவால்களை எதிர் நோக்குகின்றார்கள்.வ் 

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...