Followers

Monday 13 March 2023

சிலிக்கன் வலி வங்கி சறுக்கிய வழி

 

சிலிக்கன் வலி என்பது மென்பொருள் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலத்திரனியல் பொருட்களை உருவாக்குவோர், உற்பத்திசெய்வோர், வடிவமைப்போர், எண்மியத் தொழிநுட்பவியலாளர்கள் ஆகியோரும் அந்த உற்பத்தித்துறையில் தொழில்முனைவோர்களும் முதலீட்டாளர்களும்  செயற்படும் உளப்பாங்கு இடமாகும் (State of Mind). இதில் புதிதாக முயற்ச்சிகள் செய்வோருக்கு (Startups) கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்று SVB எனப்படும் சிலிக்கன் வலி வங்கியாகும் (Silicon Valley Bank).

மூளைசாலிகளை முதலாளியாக்கும் சிலிக்கன் வலி

தமது தொழில்நுட்ப அறிவைப் பாவித்து புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்யும் நிபுணர்களிடம் அதை ஒரு வர்த்தகப் பொருளாக்கத் தேவையான முதலீடு செய்ய நிதி இருக்காது. கலைமகளுக்கு திருமகள் கை கொடுக்க வருவதுதான் முயற்ச்சிக்கான மூலதனமாகும் (venture capital). மூளைசாலியும் முதலீட்டாளரையும் இணைக்கும் பணியை செய்வது வங்கிகளின் தொழிலாகும். அப்படிப்பட்ட ஒரு வங்கிதான் சிலிக்கன் வலி வங்கி.

வங்கிச் செயற்பாடு

சிலிக்கன் வலி வங்கியில் குறுகிய கால அடிப்படையில் தன் வாடிக்கையாளர்களிடமிருந்து சேமிப்பு என்னும் பெயரில் குறைந்த வட்டிக்கு குறுங்காலக் கடன்களைப் பெறும். அதில் கிடைக்கும் நிதியை நீண்ட கால அடிப்படையில் அதிக வட்டிக்கு புதிய முயற்ச்சிகள் செய்வோருக்கு (Startups) கடன் வழங்கும். இரண்டு வட்டிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு சிலிக்கன் வலி வங்கியின் வருமானமாகும்.

தொழில்நுட்ப உயர்வும் சரிவும் Tech Boom and Bust

2009-ம் ஆண்டு உருவான பெருந்தொற்றின் பின்னர் மக்கள் நடமாக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. வீட்டில் இருந்து தொழில்செய்வோர், வீட்டில் இருந்து பொழுது போக்குவோர், வீட்டில் இருந்து மற்றவர்களை மகிழ்விப்போர் உள்ளிட்ட பலவற்றிர்கு இலத்திரனியல் தொழில்நுட்பம் அவசியமானது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் பல புதிய முயற்ச்சிகள் செய்வோர் (Startups) சிலிக்கன் வலியில் தம் முயற்ச்சிகளை ஆரம்பித்தனர். அதனால் சிலிக்கன் வலி வங்கியில் பலர் விரும்பி முதலீடு செய்தனர் – அதாவது அந்த வங்கிக்கு கடன் கொடுத்தனர். 2019-ம் ஆண்டின் முடிவில் அதன் வாடிக்கையாளர்கள் செய்த முதலீடு மூன்று மடங்காக அதிகரித்தது. அதே காலப்பகுதியில் மற்ற வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடு 30%ஆல் அதிகரித்தது. சிலிக்கன் வலி வங்கிக்கு கிடைத்த சேமிப்பு முதலீடுகளை அது புதிய முயற்ச்சிகளில் முதலீடு செய்ய முடியாமற் போனது. அதனால் அது தன்னிடமுள்ள மேலதிக நிதியை அமெரிக்க அரச கடன் முறிகளில் முதலீடு செய்தது. இது இப்போது ஒரு தவறான முடிவாகப் பார்க்கப்படுகின்றது. வங்கியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளில் இதுவும் ஒன்றாகும். 

1. Hold to Mature Assets (HTM) – முதிர்ச்சியடையும்வரை வைத்திருக்கும் சொத்துக்கள்.

2. Available for Sale Assets (AFS) விற்பனைக்கான சொத்துக்கள்     

இவை சிலிக்கன் வலியின் கடன்முறிகள் போன்றவை. இவற்றை அது விற்பனை செய்யலாம். நாட்டில் வட்டி விழுக்காடு அதிகரிக்கும் போது இந்த இரண்டு சொத்துக்களின் விலை குறையும். வட்டி விழுக்காடு குறைந்தால் விலை அதிகரிக்கும்.          

 

2019 இறுதியில்

2022 ஆரம்பத்தில்

AFS சொத்துக்கள்

$13.9 பில்லியன்

$27.3 பில்லியன்

HTM சொத்துக்கள்

$13.8பில்லியன்

$98.7பில்லியன்

அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 2019 கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் வட்டி விழுக்காட்டை அதிகரித்த போது சிலிக்கன் வலி வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சேமிப்பாகப் பெற்ற குறுங்காலக் கடன்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டி அதிகரித்தது. ஆனால் சிலிக்கன் வலி வங்கி தன்னிடம் நீண்டகாலக் கடன்பெற்றவர்களுக்கு ஏற்கனவே விதித்த வட்டியை அதிகரிக்க முடியாது. இதனால் வங்கியின் வருவாயிலும் பார்க்க செலவு அதிகரித்தது. அத்துடன் சிலிக்கன் வலியில் புதிய முயற்ச்சி தொடங்குவோர் தொகையும் குறைந்து போனது. சிலிக்கன் வலி வங்கி முதலீடு செய்த அரச கடன் முறிகளின் விலையும் குறைந்து போனது. இந்த நிலையில் சிலிக்கன் வலியில் சேமிப்பு முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தமது பணத்தை திரும்பப் பெறுவது சடுதியாக அதிகரித்தது. இதனால் சிலிக்கன் வலி வங்கி தன்னிடமுள்ள Available for Sale Assets (AFS) விற்பனைக்கான சொத்துக்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் $1.8பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்தது. அதை நிவர்த்தி செய்ய $2.25பில்லியனுக்கு புதிய பங்கு/கடன் முறி விற்பனை செய்யும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. இதனால் வங்கியில் பெரும் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இது போன்ற வங்கிகளை நெறிப்படுத்தும் நிறுவனமான Federal Deposit Insurance Corporation 2023 மார்ச் 10-ம் திகதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பிரித்தானியாவில் உள்ள சிலிக்க வலி வங்கி என்னும் தவிச்ச முயலை HSBC ஒரு பவுண் கொடுத்து வாங்கியது. சிலிக்கன் வலி வங்கியில் $250,000இலும் குறைந்த முதலீடு செய்தவர்களுக்கு Federal Deposit Insurance Corporation நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொமினோ சரிவு அச்சம்

சிலிக்கன் வலி வங்கியின் வலிமிகுந்த நிலையைத் தொடர்ந்து Signature Bank என்னும் இன்னும் ஒரு வங்கியும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. வங்கிகள் ஒரு டொமினோ சரிவைச் சந்திக்காமல் இருக்க அமெரிக்க அரசு இந்த வங்கிகளை பிணை எடுக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்க குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அரசுக்கு வரி செலுத்துவோருக்கு இழப்பீடு ஏற்படாத வகையில் சிலிக்கன் வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார். 2022இறுதியில் சிலிக்கன் வலி வங்கி தனது சொத்துக்களை $212பில்லியன் என அறிவித்திருந்தது. அதன் படி அமெரிக்க வரலாற்றில் நிதி நெருக்கடிக்கு உள்ளான இரண்டாவது பெரிய வங்கியாகும்.

சிலிக்கன் வலி வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள வங்கிகளின் பங்கு விலைகள் சரிந்துள்ளன. அரச கடன் முறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. 2008-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற ஓர் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்க உலகெங்கும் வட்டிகள் குறைக்கப்பட வேண்டும். எரிபொருள் விலை வீழ்ச்சியடையலாம்.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...