Followers

Tuesday 31 January 2023

மோடி-பிபிசி+அதானி-ஹிண்டன்பேர்க்: காவிகளுக்கு எதிராக பாவாடைகளின் தாக்குதலா?

 


மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் வெளியிட்ட போது கொதித்த அதே ஆட்கள் அதானிகளுக்கு எதிராக ஹிண்டன்பேர்க் அறிக்கை வெளியிட்ட போது கொதிக்கின்றார்கள். பல மோடி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளரக்ளும் அதானி மீதான தாக்குதல் மோடி மீதான தாக்குதல் என்கின்றார்கள். மோடியைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதானியின் வீழ்ச்சி மோடியின் வீழ்ச்சி என்கின்றார்கள். கௌத்தம் அதானி தனக்கு எதிரான தாக்குதல் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் என்கின்றார். அதானி குடும்பத்தினர் ஊழல், பணச்சலவை (Money Laundering), வருமான வரி மோசடி, தவறாக வங்கிக் கடன் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. பல அரச விசாரணைகளும் நடை பெற்றன. அவை ஏதும் அவரது செல்வப் பெருக்கத்திற்கு தடையாக அமையவில்லை.

தடையை மீறிய அதானியின் எரிபொருள் வியாபாரம்

உக்ரேன் போரில் மோடியின் நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் என்று சொல்லப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த இரசியாவிடமிருந்து அதானி எரிபொருளை குறைந்த விலையில் வாங்கி அதை உலகச் சந்தையில் விற்பனை செய்வதையும் மேற்கு நாடுகள் விரும்பவில்லை. உலகச் சந்தையில் எரிபொருள் விலை பீப்பாய் ஒன்று $100இற்கு மேல் இருக்கும் போது அதானியின் நிறுவனம் இரசியாவில் இருந்து $33இற்கு வாங்கி அதை இந்திய மக்களுக்கு மலிவு விலையில் விற்காமல் உலகச் சந்தையில் விற்று அதானியின் நிறுவனங்கள் பெருமளவு இலாம் ஈட்டியுள்ளன.

கிருத்தவர்களுக்கு எதிரான இந்துத்துவா?

இந்தியாவில் உள்ள கிருத்தவ அமைப்புக்களுக்கு எதிராக மோடி அரசு செயற்படுவதாக குற்றச் சாட்டு உண்டு. கிருத்த போதகர்களை பாவாடைகள் என பல மோடியின் பாரதியக் ஜனதாக் கட்சியைச் சேர்ந்த பலர் கேலி செய்கின்றார்கள். கிருத்தவ மதத்திற்கு இந்துக்கள் மாற்றப்படுவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். பிரித்தானிய சஞ்சிகையான Spectator 2022 டிசம்பர் நத்தார் பண்டிகைக் காலத்தில் “கிருத்துவம் மீதான இந்தியாவின் போர்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவில் என்றும் இல்லாத அளவு கிருத்தவர்களிக்கு எதிராக அதிக அளவு தாக்குதல்கள் 2022-ம் ஆண்டு நடந்துள்ளன எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



நண்பேண்டா

மோடியும் அதானி குடும்பமும் இணைந்தே வளர்ந்தார்கள். மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது அதானி இந்தியாவில் பெரிய செல்வந்தராக இருந்தார். மோடி இந்தியத் தலைமை அமைச்சரான பின்னர் அவர் உலகில் பெரிய செல்வந்தரானார். மோடி தலைமை அமைச்சராக 2014-ம் ஆண்டு பதவி ஏற்றபோது அதானி குடும்பத்தின் சொத்து $2.8 பில்லியனாக இருந்தது. அது இப்போது $119 பில்லியனாக அதிகரித்துள்ளதுவ் அதானி குடும்பத்தினர் ஊழல், பணச்சலவை (Money Laundering), வருமான வரி மோசடி, தவறாக வங்கிக் கடன் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. பல அரச விசாரணைகளும் நடை பெற்றன. அவை ஏதும் அவரது செல்வப் பெருக்கத்திற்கு தடையாக அமையவில்லை. அதானி தனது சொத்து மதிப்பை கடந்த மூன்று ஆண்டுகளில் $100பி ஆல் உயரத்தியுள்ளார். அவருக்கு சொந்தமான ஏழு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பின் மூலம் அவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அவரது நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 819%ஆல் அதிகரித்துள்ளது.

கடன் ஏய்ப்பு

மற்றச் சந்தைகளைப் போலவே பங்குச் சந்தையிலும் பங்கு விலைகளை விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் முடிவு செய்கின்றனர். ஆனால் அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் தம் பங்குகளை விற்பனை செய்யும் போது அவற்றை மற்ற அதானி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன. இதனால் அப்பங்குகளின் விலைகள் மிகைப்படுத்தப்படுகின்றன. அதானி குழுமத்திற்கு சொந்தமாக பல் வேறு நாடுகளில் பல நூறு நிறுவனங்கள் இருப்பதால் அது இலகுவாகின்றது. அதானி குடும்பத்தினரின் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதானியின் நிறுவனம் Aயில் அதானியின் நிறுவனம் B முதலீடு செய்து அதன் பங்குகளை வாங்கி தனது சொத்தாக கணக்கு காட்டும். போலியாக நிறுவனம் Aயின் பங்குகளின் விலைகள் மிகைப்படுத்திக் கட்டப்படும். அதனால் நிறுவனம் Bயின் சொத்துக்களின் பெறுமதி மிகைப்படுத்தப்படும். அதை ஈடாக வைத்து இந்திய அரச வங்கிகளில் பெருமளவு கடனை நிறுவனம் B பெற்றுக் கொள்ளும். இப்படிப் பல கடன்களைப் பெறுவதால் அதானியின் நிறுவனங்களின் தற்காலிக சொத்துக்களுக்கு ஈடாக தற்காலிக கடன்கள் உள்ளன. பொதுவாக சொத்துக்களின் பெறுமதி கடன்களின் பெறுமதியிலும் ஒன்றரைப் மடங்கிற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பது நிதித்துறை நியமமாகும்.

பணச் சலவையும் வரி ஏய்ப்பும்

இந்தியாவில் இருந்து நிறுவனம் C வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது அதை நேரடியாகச் செய்வதாக கணக்கு காட்டாமல் மொறிசியஸ் தீவுகளில் உள்ள அதானி நிறுவனம் Dயிற்குமிகவும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாக கணக்குக் காட்டப்படும். இதனால் நிறுவனம் Cயின் இலாபம் பெருமளவு குறைத்துக் காட்டப்படும். மொறிசியஸ் தீவுகளில் உள்ள நிறுவனம் D சந்தை விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கணக்கு காட்டப்படும். மொறிசியஸ் தீவில் உள்ள நிறுவனம் D பெருமளவு இலாபம் ஈட்டும். அதற்கு அங்கு வரி விலக்கு உண்டு. இதனால நிறுவனம் Dயிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு இருக்கும். அதை இந்தியாவிற்கு அந்நிய முதலீடு என்னும் பெயரில் கொண்டு வரப்படும். சில அந்நிய முதலீட்டுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதும் உண்டு. இதைப் பணச்சலவை என்பார்கள். 2014இல் இரண்டு நாட்களில் 270 நிறுவனங்களை உருவாக்கினார்கள் அதானி சகோதரர்கள். அவற்றில் 125 இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டன. விநோத் ஷாந்திலால் அதானி வெளிநாடுவாழ் இந்தியச் செல்வந்தர் (Richest NRI) ஆவார். ஹிண்டன்பேர்க் ஆய்வகம் செய்த புலன் விசாரணையை ஒரு நிதித் தடயவியல் விசாரணை (Financial Forensic Inquiry) எனச் சொல்லலாம்.

குஜராத் மாடல் (Model) அல்ல தென் கொரிய மாடல்

திரள்கூட்டாண்மைகளை (Conglomerates) வளர அரசு ஆதரவு கொடுத்ததன் மூலம் தென் கொரியப் பொருளாதாரம் பெரிதும் வளர்ந்தது. அது போல இந்தியாவிலும் செய்ய மோடி முயன்றார். அவரது ஆட்சி நாம்(மோடி, அமிஷா) இருவர் நமக்கிருவர்(அதானி, அம்பானி) என அமைந்திருந்தது. ஆனால் இந்திய திரள்கூட்டாண்மைகளின் வளர்ச்சி இந்தியாவின் நடுத்தர வருமானம் உள்ள மக்கள் மேல் அதிக சுமையை ஏற்படுத்தியது. உலகிலேயே மிகச் சிறந்த மக்கள் தொகைக் கட்டமைப்பைக் (அதிக இளையோர் – குறைந்த முதியோர்) கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக நிர்வகித்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதை மோடியின் வெற்றியாக இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. 

நியதிசார் தாராண்மைவாத ஒழுங்கு Rule Based Liberal Order

உலக அரங்கில் முதலாளிகள் ஒழுங்கான முறையில் போட்டியிட்டு தம் செல்வத்தை பெருக்குவதற்கு என உருவாக்கப்பட்டது தான் நியதிசார் தாராண்மைவாத ஒழுங்கு. எந்த ஒரு முதலாளியும் அரச சலுகையைப் பெற்றுக் கொண்டு உலகச் செல்வந்தராக வருவதை தாராண்மைவாதிகள் விரும்புவதில்லை. மோடியையும் அதானியையும் தாராண்மைவாதிகள் விரும்பத்தகாத வகையில் நடந்து கொள்கின்றார்கள். தாராண்மைவாதிகள் மதக் குரோதத்தை விரும்புவதில்லை. அதிலும் தம் சொந்த மதத்திற்கு எதிரான செய்ற்பாடு என்றால் கொதித்துப் போவார்கள். அந்தக் கொதிப்பின் விளைவுகளாக பிபிசி மோடிக்கு எதிராக ஒளிபரப்பிய ஆவணப்படத்தையும் ஹிண்டன்பேர்க் நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையையும் பார்க்க வேண்டி உள்ளது.

சீனாவைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடன் நேரடியாக மேற்கு நாடுகள் மோத விரும்பாமல் மறைமுகமாக மோதுகின்றன. பிபிசியின் ஆவணப்படம் இந்து மத வெறியர்கள் மத்தியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்தும் என்பது பிபிசியிற்கும் தெரியும் மேற்கு நாடுகளுக்கும் தெரியும். ஆனால் அந்த ஆவணப்படம் உலக இஸ்லாமியர்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான கருத்தை வளர்ப்பது நிச்சயம். “நானும் ரௌடிதான்” என அலையும் துருக்கி இந்தியாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மேலும் மோசமாக்கும். ஈரான் இந்தியாவுடன் உறவை வளர்க்க விரும்பாது. இப்படிப்பட்ட நெருக்குவாரங்களை இந்தியாவை ஆளும் காவிகளுக்கு கொடுப்பதுதான் மேற்கு நாடுகளின் அதாவது இந்துத்துவா மொழியில் சொல்வதானால் பாவாடைகளின் நோக்கமாகும்.

அதானி குடும்பத்தினருக்கு எதிராக மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடை வருமா?

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...