Followers

Monday, 11 May 2020

புட்டீனின் செல்வாக்கு ஆட்டம் காண்கின்றதா?


வான்வெளியில் இருக்கும் தனது செய்மதி ஒன்றை தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றால் அழிக்கும் சோதனையை இரசியா 2020 ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இரசியாவின் இந்த நடவடிக்கை தமது விண்வெளிச் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலானது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தப் பரிசோதனைக்கு முன்னர் இரசியாCOSMOS 2542 and COSMOS 2543 என்னும் இரண்டு செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பியது. அவை இரண்டும் அமெரிக்காவின் உளவு செய்மதி ஒன்றை நிழலாகத் தொடர்ந்தன. அமெரிக்கா, இரசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விண்வெளியில் உள்ள செய்மதிகளை அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பையும் மூன்றாவது பெரிய மக்கள் தொகையையும் கொண்ட இரசியாவை ஆக்கிரமித்துக் கைப்பற்றக் கூடிய படை வலிமை எந்த ஒரு நாட்டிடமும் இல்லை ஆனால் இரசியாவின் பாதுகாப்பையிட்டு அதிபர் விளடிமீர் புட்டீன் அதிக கவனம் செலுத்துகின்றார். இரசியாவை உல்க ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாடாக வைத்திருப்பதால் இரசிய மக்கள் அவரை விரும்புகின்றனர்.

புட்டீனின் எதிரியைத் திணறடிக்கும் நகர்வுகள்
1998-ம் ஆண்டு இரசியா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதன்பின்னர் இரசியாவை மேற்கு நாடுகள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என விளடிமீர் புட்டீன் கருதினார். இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் 2015-ம் ஆண்டு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகிலேயே தமது நாட்டு மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். 89 விழுக்காடு இரசியர்கள் அவரது தலைமையில் நம்பிக்கை கொண்டவராக இருந்தனர். 2020 ஜனவரியில் 69% பெப்ரவரியில் 69% என்று இருந்த புட்டீனின் செல்வாக்கு இறங்கி ஏப்ரலில் 59% ஆக வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரம் படித்து குங்ஃபு சண்டையில் தேர்ச்சி பெற்று சதுரங்க விளையாட்டில் திறமை கொண்ட புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் உளவுத் துறை அதிகாரியாக இருந்தவர் புட்டீன். அவர் புவிசார் அரசியல் நகர்வுகளால் எதிரிகளைத் திணறடிக்க் கூடியவர் என்பதை சிரியாவில் நிரூபித்தார்.

ஒத்திப் போடப்பட்ட அரசியலமைப்பு திருத்த கருத்துக்கணிப்பு
இரண்டு தடவை மட்டுமே இரசியாவில் ஒருவர் அதிபர் பதவியில் இருக்கலாம் என்ற இரசிய அரசியல் அமைப்பின் பிரிவுகளை மாற்றி தன் ஆயுள் நிறைவு வரை அதிபராக இருக்க புட்டீன் எடுத்த முன்னெடுப்புக்கு ஏதுவாக இரசிய மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பை 2020 ஏப்ரலில் நட்தத் திட்டமிட்டிருந்தார். இரசியாவின் தனது பிடியை இறுக்கும் திட்த்துடன் புட்டீன இந்த நகர்வை மேற்கொண்டிருந்தார். ஆனால் கொவிட்-19 தொற்று நோய்ப்பரம்பல் காரணமாக அதை புட்டீன் பிற்போட்டுள்ளார். புட்டீன் முன்மொழிந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்தல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றவையும் உள்ளடக்கப் பட்டிருந்தன.  

மீறப்பட்ட வாக்குறுதி
மேற்கு நாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்ட இரசியர்கள் மேற்கு நாடுகளின் பாணியிலான மக்களாட்சி முறைமைய விரும்பி ஏற்பார் என சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பியிருந்தனர். உலகை ஆள முயன்ற ஜேர்மனியர்கள் போரில் தோற்ற பின்னர் மற்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து இப்போது உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பது போல் பனிப்போரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏன் இரசியாவால் அப்படி ஒரு நிலையை எடுக்க முடியாது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் கிழக்கு ஜேர்மனை தவிர்ந்த முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை தம்முடன் இணைக்க மாட்டோம் என சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கிய உறுதி மொழி வழங்கியிருந்தனர். பின்னர் அதை மீறி பல நாடுகள் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டன. இது தொடர்ந்து விளடிமீர் புட்டீன கடும் சினத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது.

புயலோடு சேர்ந்த மழை
இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியாமீது பொருளாதாரத் தடையை விதித்தனர். புட்டீன் அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டிருக்கையில் சவுதி அரேபியாவும் இரசியாவும் எரிபொருள் உற்பத்தியை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பான உடன்பாட்டை 2020 மார்ச் மாதம் எட்ட முடியாமல் போனது. ஆத்திரமடைந்த சவுதி அரேபியா தான் எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து உலகச் சந்தையில் எரிபொருள் விலையைக் குறைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதறடிக்க முற்பட்டது. இரசியாவின் தேசிய வருமானத்தில் 60%இற்கு மேல் எரிபொருள் ஏற்றுமதியால் கிடைக்கின்றது. இரசியாவின் எரிபொருள் உற்பத்திச் செலவு ஏறக்குறைய பீப்பாய் ஒன்றிற்கு ஏறக்குறைய நாற்பது டொலர்களாகும் உலக எரிபொருள் விலையை அதிலும் குறைத்து இரசியாவை பழிவாங்குவதே சவுதியின் நோக்கம். இந்தப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கையில் 2020 மார்ச் மாதம் உலகெங்கும் கொரொனா நச்சுக் கிருமி பரவி உலகெங்கும் போக்குவரத்த்தும் தொழிற்றுறை உற்பத்திகளும் பெரும் வீழ்ச்சியைக் கண்டதால் உலகெங்கும் எரிபொருள் பாவனையும் பெரு வீழ்ச்சியடைந்தது. இதனால் எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தை புயலாகத் தாக்க கொரொனா நச்சுக் கிருமிப்பரமல் மழையாகத் தாக்கிக் கொண்டிருக்கின்றது. அதனால் இரசியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டு ஐந்தரை விழுக்காடு தேய்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இரசியாவில் வேலை வாய்ப்பின்மை இரண்டு மடங்காக அதிகரிக்கும். கொரோனா நச்சுக்கிருமியால் வரும் கொவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக புட்டீனால் நியமிக்கப்பட்ட இரசியத் தலைமை அமைச்சரையே அந்த நோய் தொற்றிக் கொண்டது.

போர் வெற்றி நாளும் இல்லை
2020 மே மாதம் 8-ம் திகதி இரசியா இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ம் ஆண்டு நிறைவு நாளை பெரும் கொண்டாட்டமாக செய்து தன்னை மக்கள் முன் ஒரு நாயகனாக நிறுத்தும் புட்டீனின் முயற்ச்சியும் கொவிட்-19 தொற்று நோயால் முடியாமல் போயுள்ளது. கொவிட்-19 நோய் எதிர்பார்ப்பதிலும் அதிக நாள் நீடித்தால் எரிபொருள் விலை பத்து டொலரிலும் குறையும். அதனால் இரசியப் பொருளாதாரம் 15விழுக்காடு தேய்வடையும். ஏற்கனவே இரசிய நாணயமான ரூபிள் உலகில் மோசமான மதிப்பிறக்கத்தைச் சந்தித்துள்ளது. பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க புட்டீன இரசியாவின் அரசிறை செல்வ நிதியை எடுத்துப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படலாம். புட்டீன் திட்டமிட்டிருந்த பல உட்கட்டுமானத் திட்டங்கள் கிடப்பில் போடப்படலாம்.

கடந்த இருபது ஆண்டுகளாக அதிபராகவும் தலைமை அமைச்சராகவும் தன் பிடியில் வைத்திருக்கும் புட்டீனின் செல்வாக்கு இரசியர்களிடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக 80 விழுக்காட்டில் இருந்து 59 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்து மேலும் சரிவைச் சந்தித்தால் புட்டீனின் ஆட்சி ஆட்டம் காணும் என சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பல செல்வாக்கு மிக்க இரசியர்கள் அவரை வெறுப்பதும் அதிகரித்துக் கொண்டே போகின்றது எனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் தொற்று நோயால் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உலகில் எல்லா நாடுகளிலும் நடப்பதால் புட்டீனைக் குற்றம் சாட்ட முடியாது என புட்டீன் ஆதரவு ஊடகங்கள் இரசியர்களிடையே செய்யும் பரப்புரையின் வெற்றி அவரை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்கும்.

No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...