Followers

Monday, 26 September 2022

சீன அதிபரி ஜீ ஜின்பிங்கை சிறையிலடைத்த பொய்-ஹிந்த்

 


சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கு எதிராக படையினர் புரட்சி செய்து அவரை சிறையில் அடைத்து விட்டதாக பல இந்திய ஊடகங்கள் 2022 செப்டம்பர் 24-ம் திகதி செய்தி வெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவில் ஒரு பெரிய குழப்ப நிலை என்பது Too good to be true. ஆனால் சீனாவைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்கள் அப்படி ஒரு செய்திகளை வெளிவிடவில்லை. அது மட்டுமல்ல உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகளை முந்தியடித்து வெளிவிடுவதை வழமையாக கொண்ட பிரித்தானிய Daily Mail, அமெரிக்க Washington Post ஆகியவை ஜீ ஜின்பிங்க் கைது பற்றி ஏதும் செய்திகளை வெளிவிடவில்லை.



பொய் சொல்லும் ஜெய் ஹிந்த் கும்பல்

ஜெய் ஹிந்த் என தமது உரையாடல்களை முடிக்கும் இந்திய youtube channels பொய்ச் செய்திகளை வெளியிடத் தயங்காதவரகள், மேஜர் மதன்குமார் என்பவர் பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தைப் பற்றிய கலந்துரையாடலில் உலகில் தனது சொந்த நாட்டு மக்கள் மேல் விமானத்தில் இருந்து குண்டுகளை வீசிய ஒரே நாடு பாக்கிஸ்த்தான் எனப் பொய்யுரைத்தார். இந்தியா 1966இல் மிஸ்ரோம் மக்கள் மீது குண்டு வீசியமையையும் இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியுடன் இலங்கை விமானப் படையினர் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமையையும் ஒரு வாக்கியத்தில் மதன் குமார் மறைக்க முயன்றார். இன்னும் ஒரு youtube channel இல் B-21 Raider போர் விமானங்களை இந்தியா உற்பத்தி செய்வதாக புரட்டினார். ஆனால் அவை அமெரிக்காவின் விமானங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய youtube channels பார்த்தால் இன்னும் சில நாட்களில் சீனா தன் படைக்கலன்களுடன் இந்தியாவிடம் சரணடைந்து விடுபது போலத் தோன்றும். ஈழ விடுதலையையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப் படுத்துவதற்கு அவர்களுக்கு கூலி கிடைக்கின்றதா என எண்ணத்தோன்றும். 

தமிழர்களைப் பொறுக்கி என அழைக்கும் சுப்பிரமணியன் சுவாமி தன் பதிவை நீக்கி விட்டார்.:



ஜின்பிங்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்

சீனாவின் புரட்சி நடந்தமைக்கு ஆதாரமாக சீனாவில் இருந்து 6,000 விமானப் பறப்புக்கள் இரத்து செய்யப்பட்டன என்பதை முதலாவது ஆதாரமாக முன்வைத்துள்ளன. சீனாவில் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டன என்றன. சீனாவில் போர் ஒத்திகை நடக்கும் போது விமானப் பறப்புகள் இரத்துச் செய்யப்படுவதுண்டு. சீன விமானச் சேவைகளின் இணையத்தளங்களில் பறப்பு இரத்துப் பற்றி பெரிதாக எதுவும் இருந்திருக்கவில்லை. SCO மாநாடு முடிய முன்னரே ஜீ ஜின்பிங் உட்பட பல சீனப் பிரதிநிதிகள் உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினர் என்பது இரண்டாவது ஆதாரமாக முன் வைக்கப்படுகின்றது. 2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடக்கவிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் அம்மாநாட்டிற்கான ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் அவசரமாக நாடு திரும்பினர். முன்றவது ஆதாரமாக சீனாவில்  படையினர் நடமாட்டம் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும் காணொலிகள் வெளிவந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. Republic என்ற இந்திய ஊடகம் சீனாவில் 80கிலோ மீட்டர் நீளமான பார ஊர்தி படை வண்டிகள் தலைநகர் பீஜிங்கை நோக்கி நகர்வதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அக்காணொலி ஒரு சில செக்கண்டுகள் மட்டுமே காட்டப்பட்டன். 80கிமீ என்பது போலிச் செய்தி. இந்திய ஊடகங்கள் முன் வைக்கும் நான்காவது ஆதாரம் சீன அதிபர் எங்குள்ளார் என்பது பற்றி எந்த ஒரு சீன ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை என்பதாகும். 69 வயதான ஜீ ஜின்பிங்க் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சீனர்கள் தம்மைத் தனிமைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதையே அவரும் கடைப்பிடித்தார். சில இந்தியர்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் சீனப் படைத்தளபதி லி கியோமிங் விரைவில் சீன அதிபராகுவார் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் Newsweek சஞ்சிகையின் இணையத்தளம் சீனா அதிபர் கைதுச் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வலம் வருகின்றன என்றது.

பொய்யாக முன்வைத்த “பின்னணி”

ஜின்பிங் தைவானைக் கைப்பற்ற அவசரப்படுகின்றார் ஆனால் சீனப் படைத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் ஜின்பிங்குடன் படையினருக்கு பிணக்கு அதனால் அவர்கள் உஸ்பெக்கிஸ்த்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் ஜின்பிங்கை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் என்ற வகையிலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. 2022 ஒக்டோபர் 10-ம் திகதி நடக்கவிருக்கும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் ஜீ ஜின்பிங் மூன்றாவது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் அவர் இறக்கும் வரை சீன அதிபராக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதை பல பொதுவுடமைக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது. ஊழலை ஒழிக்கவும் ஜக் மா உட்படப் பல செல்வந்தர்கள் அளவிற்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பதை தடுக்கவும் ஜீ ஜின்பிங்க் கடுமையாக செயற்பட்டார். அதனால் அவருக்கு பொதுவுடமைக் கட்சியில் எதிரிகள் அதிகரித்துள்ளனர். ஊழல் செய்தவர்கள் பலரை ஜின்பிங் சிறையில் அடைத்துள்ளார். கொவிட்-2019 பெருந்தொற்று நோய்க்கு எதிராக சுழிய-பொறுமைக் கொள்கையை (Zero-Tolerance policy) ஜின்பிங் கடைப்பிடிப்பதால் சீனாவின் உற்பத்தித் துறையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல உற்பத்தியாளர்கள் ஜின்பிங் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர்.

மோடியின் கேடி வால்பிடிகள்

சில மோடி ஆதரவாளர்கள் மோடியைச் சந்தித்த வெளிநாட்டுத்தலைவரகள் பதவி இழக்கும் அளவிற்கு அவரிடம் அதிசய சக்தி உள்ளது எனக் கதை அளந்தனர். டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன் ஆகியோரின் வரிசையில் ஜீ ஜின்பிங்கும் இணைந்துள்ளார் என்றனர். டுவிட்டரில் சில இஸ்லாமியர்களுக்கும் சில இந்துக்களுக்கும் கடும் மோதல் நடப்பது வழமை. ஜீ ஜின்பிங் என போலிச் செய்தி வெளியிட்ட இந்துக்களை இஸ்லாமியர்கள் கழுவி ஊற்றுகின்றார்கள். ஜின்பிங் கைது செய்யப்பட்டதாக பொய்யாஅ செய்தி வெளியிட்ட youtube பதிகளை அதன் மொக்கை இரசிகர்கள் "ஆகா அற்புதமான ஆய்வு" என தொடர்ந்தும் வழமையான புளுகித் தள்ளி பின்னூட்டமிடுதலை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.  பல டுவிட்டர் பதிவுகள் இந்திய டுவிட்டர் பதிவுகளை கிண்டல் செய்தன:



உண்மையில் பொதுவுடமைக் கட்சியில் ஜீ ஜின்பிங்கின் எதிரிகளாக கருதப்படுபவர்களை தூக்கிலிட்டும் சிறையிலடைத்தும் தன் இருப்பை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றார். சீனாவை எப்படி முன்னேற்றி உலகின் முதல்தர நாடாக்குவது என்ற கனவுடன் சீனர்கள் செயற்படுகின்றார்கள். பாவம் இந்தியர்கள் மனுதர்ம சாஸ்த்திரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த நாடு எப்போ சீரழியும் என்ற கனவுடன் அலைகின்றார்கள். 

உலக நாடுகளின் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்கும். நாணயங்களின் பெறுமதி குறையும் பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் சரியும். அப்படி ஏதும்  நடக்கவில்லை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கவில்லை. 

பொதுவுடமைச் சர்வாதிகாரிகள் தங்கள் நாட்டில் படையினர் அதிகாரப் போட்டியில் தனித்து ஈடுபடாதவாறு பொதுவுடமைக் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் படையினரை வைத்திருப்பார்கள். இது முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் தற்போதைய சீனாவிலும் உள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது படையினரால் ஏதும் செய்ய முடியவில்லை. இதை அறியாதவர்கள் பலர் youtube channels நடத்தி மக்களிடையே அறியாமையை பரப்புகின்றார்கள். 

Thursday, 22 September 2022

உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா?

 


2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு படையெடுப்பை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தது. அதில் பெரும் பின் வாங்கல் ஒன்றை செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவை உக்ரேன் செய்ய வைத்தது.

Combined Arms Manoeuvre

தொலைதூரத் தாக்குதல் படைக்கலன்களையும் குறுகிய தூரத் தாக்குதல் படைக்கலன்களையும் ஒன்றிறைந்துக் கையாளும் திறனை படைத்துறையில் Combined Arms Manoeuvre (இணைக்கப்பட்ட படைக்கலன்களை கவனமாககையாள்தல்) என அழைப்பர். இதை தனது 2022 செப்டம்பர் 5-ம் திகதி தாக்குதல்களின் போது உக்ரேன் சிறப்பாகச் செய்தனர். இதனால் இரசியாவின் வழங்கல் பாதைகள், கட்டுப்பாட்டு-கட்டளைப்  பணியகத்தின் புறநிலைகள்(outposts) உட்படப் பல தாக்குதல் வலிமைகள் சேதமடைந்தன. 

பின்வாங்கலின் பின்னர் இரசியா செய்த நகர்வுகள்:

1.இரசியப் படையினருக்கு எதிரான சட்டம்

இரசியப் படையில் இருந்து படை நடவடிக்கைகளின் போது தப்பி ஓடுபவர்களையும் படைக்கலன்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிபவர்களையும் கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை 2022 செப்டம்பர் 20-ம் திகதி நிறைவேற்றியுள்ளது. இரசியப் படையினர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய மறுக்கின்றார்கள் தங்கள் சொத்துக்களை தாமே சேதப்படுத்துகின்றார்கள், படையில் இருந்து தப்பி ஓடுகின்றார்கள் என மேச்ற்கு நாட்டு ஊடகங்கள் பரப்புரை செய்தபோது இரசியா அவை பொய்யான செய்திகள் என மறுத்து வந்தது. இரசியாவின் மறுப்பை இரசியாவின் இந்த நகர்வு கேள்விக்குறியாக்கியுள்ளது. இரசியா உக்ரேனில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்த போரை இரசியா போர் என்று சொல்லாமல் அதை ஒரு சிறப்புப் படை நடவடிக்கை என்றே அழைக்கின்றது. இரசியா உக்ரெனில் போர் செய்கின்றது என்று சொல்வது இரசிய சட்டப்படி குற்றமாகும். இரசிய சட்டத்தில் சிறப்பு படை நடவடிக்கை என ஒன்று இல்லை என்றபடியால் அதற்கான சட்டம் இரசியாவில் தேவைப்படுகின்றது.

2. புதிதாக மேன்படைக்கு (Reserve Force) ஆட்சேர்ப்பு

இரசியா புதிதாக மூன்று இலட்சம் பேரை தனது மேன்படையில் (Reserve Force) இணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இரசியா தனது படைக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யலாம் என்ற கரிசனையில் பல இரசியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் என்னும் இரசியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிடும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரசியாவை பின் வாங்கச் செய்யும் அமெரிக்கப் படைக்கலன்கள்:

அமெரிக்கா தொடர்ந்தும் பல படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட வலிமைகளைக் கொண்ட படைக்கலன்களையே அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி வந்தாலும் 2022 ஜூன் மாதத்தில் இருந்து வலிமை மிக்க பல்குழல் ஏவூர்தி செலுத்திகளை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குகின்றது.

1. 155-மில்லி மீட்டர் Howitzers ஏவூர்தி செலுத்திகள்

155-மில்லி மீட்டர் Howitzers என்னும் இழுத்துச் செல்லும் ஏவுகணைச் செலுத்திகள். இந்த வகை எறிகணைச் செலுத்திகள் 122ஐ அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியிருந்தது. அவற்றிற்கான குண்டுகள் எட்டு இலட்சம் வரை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியது.


2. அமெரிக்காவின் GMLR ஏவூர்திகள்

GMLR என்னும் துல்லியமாக எதிரியின் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவூர்திகள். இவை GPS மூலம் வழிகாட்டப்படுபவை. 70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கி அழிக்க வல்லவை. இவற்றைச் செலுத்தக் கூடிய 155மிமீ Howitzer செலுத்திகளையும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.



3. அமெரிக்காவின் M-31 HIMARS மற்றும் M-142 HIMARS ஏவூர்தி செலுத்திகள்

M-31 HIMARS M-142 HIMARS என்ற இருவகை High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய பல் குழல் ஏவுகணைச் செலுத்திகள் ஆகும். இவற்றால் பல தொலைதூரம் பாயும் வழிகாட்டல் ஏவுகணைகளை ஒரேயடியாக வீச முடியும். அமெரிக்கா 2022 ஜூனில் உக்ரேனுக்கு வழங்கிய இந்த ஏவுகணைச் செலுத்தியை இரசியர்களின் கட்டளை நிலையங்களையும் படைக்கலன் கழஞ்சியங்களையும் அழிக்க உக்ரேனியர்கள் பயன்படுத்துகின்றார்கள். பல M-31 HIMAR ஏவுகணைச் செலுத்திகளை அழித்ததாக இரசியர்கள் சொல்கின்றனர். உக்ரேனியர்களிடம் முப்பதிற்கும் மேற்பட்ட M-31 HIMARS இருப்பதாக நம்பப்படுகின்றது. M-31 HIMARS ஐப் பாவித்து 400இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சொல்கின்றது. HIMARS இரசியப் படைக்கலன்களின் அரைப்பங்கை அழித்து விட்டது என சில செய்திகள் வருகின்றன. ஆனால் இரசியா தனது படை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கின்றது. M-142 HIMARSஇல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் 200மைல்கள்(321கிமீ) தூரம் வரை பாயக்கூடியன. இவற்றைப் பாவித்து கிறிமியாவில் உள்ள இரசியப் படை நிலைகள் மீது உக்ரேனியப் படையினர் தாக்குதல் செய்கின்றனர். இதனால் கிறிமியாவில் இருந்து இரசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளியேறியதாகவும் செய்திகள் வருகின்றன. HIMARS ஏவூர்திச் செலுத்திகள் துரிதமாக இடமாற்றம் செய்யக் கூடியவை. ஓரிடத்தில் இருந்து தாக்குதல் செய்து விட்டு உடனடியாக வேறு இடத்திற்கு மாறி மறைந்திருக்க கூடியவை. அதனால் ஏவூர்திகள் செலுத்தப்படும் இடத்தின் மீது பதிலடி தாக்குதல் செய்து அவற்றை அழிக்க முடியாது. 

உக்ரேன் பாவித்தஉத்தி

தெற்கில் கேர்சன் பிராந்தியத்தைக் மீளக் கைப்பற்றுவோம் கிறிமியாவை மீட்போம் எனச் சொல்லி சிறிய தாக்குதலை அங்கு தொடுத்துவிட்டு வடகிழக்கில் கார்கீவ் பகுதியில் அதிரடித் தாக்குதல் செய்தமை. இரசியப் படைத்துறையில் நிலவும் ஊழலும் இரசியாவின் பின்னடைவிற்கு காரணம். உக்ரேனியர்கள் கேர்சனைக் கைப்பற்றப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் இரசியா அதிக கவனத்தை அங்கு செலுத்தி வட கிழக்குப் பகுதியில் குறைந்த கவனத்தை செலுத்தியது.

போலந்து வழங்கிய Krab Self-propelled ஆட்டிலெறிகள் பலவற்றை செப்டம்பர் 5-ம் திகது உக்ரேனியர்கள் கார்கீவ் படை நடவடிக்கையின் போது பாவித்தார்கள்.

இடர் சூழ் எதிர்காலம்

இரசியா பெரிய அளவில் படை நகர்வுகளை இனிச் செய்தால் பெரும் ஆளணி இழப்பை சந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  HIMRS Howitzer ஆகியவற்றை பயன்படுத்தும் திறனை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கற்றுக் கொண்டனர். உக்ரேனியர்கள் இது போன்ற படைக்கலன்களை ஏற்கனவே தாமே உற்பத்தி செய்தும் பயன்படுத்தியும் உள்ளனர். உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கேர்சன் பிரதேசத்தில் எதிரிகளின் படைநிலைகளுக்கு பின்னால் உள்ள படைக்கலன் களஞ்சியங்கள், பாலங்கள் போன்றவற்றை Howitzer இல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் மூலம் தாக்கி அழித்துள்ளனர். இரசியப் படையினர் அதிக இடர் மிக்க பறப்புக்களைச் செய்கின்றனர். அதில் பல இழப்புக்களை அவர்கள் சந்திக்கின்றனர். தாழப்பறந்து தமது படையினருக்கு ஆதரவாக குண்டுகளை வீசும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இரசிய வான்படையினரின் Situation Awareness தொழில்நுட்பம் உயர்த தரத்தில் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. Situation Awareness தொழில்நுட்பம் எதிரியின் வான்பாதுகாப்பு மற்றும் வான்எதிர்ப்பு முறைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் முறைமையாகும்.

  விலகி நிற்கும் இரசியாவின் நண்பர்கள்

2022 செப்டம்பர் 16-ம் திகதி உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-ம் உச்சி மாநாடு நடைபெற்ற போது அங்கு வைத்து இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தனைத்தனியே சந்தித்தனர். மோடி போர் புரிவதற்கு இது உகந்த காலம் அல்ல என புட்டீனுக்கு மோடி சொல்லியிருந்தார். ஜீ ஜின்பிங்கை சந்தித்த பின்னர் விளடிமீர் புட்டீன் சீனாவிடம் உக்ரேன் போர் பற்றிய கேள்வியும் கரிசனையும் உள்ளன என்றார். சீனாவின் பல முதலீடுகள் உக்ரேனில் இரசியாவின் படை நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளன. சீனா உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு கொண்டு வரப்படுவதையே பெரிதும் விரும்புகின்றது.

இரசிய தேசியவாதிகளும் சில புட்டீனின் ஆதரவாளர்களும் இரசியா உக்ரேன் மீது முழுமையான போரைச் செய்ய வேண்டும் எனவும் அதிக படையினரையும் அதிக சிறப்பு படையணிகளையும் களமிறக்க வேண்டும் எனவும் புட்டீனை வற்புறுத்துகின்றனர். இரசியா கைப்பற்றிய முழுப் பிரதேசத்தையும் உக்ரேனால் மீளக் கைப்பற்ற முடியாது. இரசியா மேலும் அதிக படையினரை போரில் ஈடுபடுத்தும் போது நிலைமை மாற வாய்ப்புண்டு. 

இரசிய நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்வோம்; எம்மிடமிருக்கும் எந்தப் படைக்கலனையும் பாவிப்போம் என புட்டீன் சூளுரைத்துள்ளார். அவர் அணுக்குண்டைப் பாவிப்பார் என மிரட்டுகின்றார் என நம்பலாம். அணுக்குண்டுகள் இரசியாவிடம் இருக்கும் வரை இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படாது. 

இரசியாவின் உக்ரேன் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் நடந்தது:


Tuesday, 13 September 2022

உக்ரேனின் பதிலடி இரசியாவிற்கு பேரிடியாகுமா?

 


தன் நிலத்தை பாதுகாப்பதற்கான போரைச் செய்து கொண்டிருந்த உக்ரேன் நில மீட்பு போரைத் தொடங்கிவிட்டது போல பல தாக்குதல்களை 2022 ஓகஸ்ட் மாத இறுதியில் இருந்து செய்கின்றது. இரசியா தனக்கு மிக மிக கேந்திரோபாய முக்கியத்துவமான கிறிமியா குடநாட்டின் பாது காப்பை உறுதி செய்ய கேர்சன் (Kherson) பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது. அதை மீட்கும் போரை ஆரம்பிப்போம் என சூளுரைத்து விட்டு உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள கார்கீவ் (Kharkiv) பகுதியில் உள்ள இரசியப் படையினரின் வழங்கலின் இதயமாக இருந்த தொடரூந்து நிலையத்தை கைப்பற்றியுள்ளது. 

எதிர்பாராத தாக்குதல்

உக்ரேனியர்கள் இரசியர்கள் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத வகையில் செய்த தாக்குதல் இரசியப் படைகளை நிலைகுலையச் செய்து விட்டது. பல கிராமங்களை விட்டு அவர்கள் பின்வாங்கியுள்ளனர். இஜியம், குபியங்ஸ்க் ஆகிய நகரங்களை இரசியர்கள் இழந்துள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியப் படையினரின் வழங்கல்களுக்கு முக்கியத்துவம் மிக்க தொடரூந்து நிலையங்களைக் கொண்ட இஜியம் நகரை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கைப்பற்றினார்கள் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எதிர்பாராத தாக்குதலால் இரசியர்கள் பெருமளவு படைக்கலன்களையும் சுடுகலன்களையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்கள். T-80 போர்த்தாங்கிகள் உட்பட இரசியர்களின் 200இற்கும் அதிகமான படை வண்டிகளையும் உக்ரேனியர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் உக்ரேனின் கைகள் வலிமையடைந்துள்ளன. இரசியாவின் First Guards Tank Army என்னும் சிறப்புப் படையணியே தாங்கிகளையும் கைவிட்டு தப்பி ஓடியது என்பது இரசியாவிற்கு அவமானகரமான ஒன்றாக அமையும். 



மார் தட்டும் உக்ரேனும் மட்டம் தட்டப்படும் புட்டீனும்

இரசியாவின் தீவிர ஆதரவு சமூக வலைத்தள செயற்பாட்டாளரக்ளான Peter Lundstrom, Yuri Podolyaka ஆகியோர் இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை காரணம் காட்டி புட்டீனிற்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதாகவும் செய்திகள் வருகின்றன. 2022 செப்டம்பர் மாதம் 11-ம் திகதி உக்ரேனியப் படைத்தளபதி வலரி சலுஸ்னி பதினொரு நாட்களில் தமது படையினர் மூவாயிரம் சதுர கிலோ மீட்டரை மீளக் கைப்பற்றியுள்ளதாக மார் தட்டினார். அல் ஜசீரா கார்கீவில் இருந்து முன்னேறிச் சென்ற உக்ரேனியப் படையினர் இரசிய எல்லையில் இருந்து 50கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்கின்றது. 2022 செப்டம்பர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரசிய அரச தொலைக்காட்சியின் வாராந்த செய்தி நிகழ்ச்சியில் உக்ரேனில் இரசியப் படையினர் செய்யும் “சிறப்பு நடவடிக்கையில்” (உக்ரேன் போருக்கு இரசியர்கள் கொடுத்துள்ள பெயர்) இந்த வாரம் மிகக்கடுமையான வாரமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புட்டீனின் படைநடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் இரசிய மரபு வழித் திருச்சபையின் ஞாயிறு ஆராதனையிலும் அது எதிரொலித்தது. ஆனால் இரசிய பாதுகாப்புத்துறை இது புறமுதுகிடல் அல்ல வேறு இடத்திற்கு படையினர் நகர்ந்து தம் நிலையை வலிமையாக்கினர் எனச் சொல்கின்றது.


அதிருப்த்தியடைந்த புட்டீனின் ஒட்டுக்குழுத்தலைவர்

புட்டீனுக்கு நெருக்கமானவரும் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிப்பவருமான செஸ்னிய தலைவர் ரமஜான் கடிரோவ் உக்ரேன் போர் இரசியா திட்டமிட்ட படி நடக்கவில்லை என்றார். அவரது செஸ்னியப் படையினர் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செஸ்னிய விடுதலைப் போரில் இரசியாவிற்கு எதிராக போர் செய்த ரமஜான் கடிரோவ் பின்னர் புட்டீனின் ஒட்டுக்குழுவாக மாறி அவருடன் இணைந்து செயற்படுகின்றார். போர் உத்திகள் மாற்றப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மேற்கு நாட்டு ஊடகங்கள் கார்கீவ் பகுதியில் இரசியப் படையினர் பின்வாங்கியதை உறுதிப் படுத்த ரமஜான் கடிரோவின் கருத்துக்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். உக்ரேன் போருக்கு எதிரான கருத்துக்களை உடைய சில உள்ளூராட்சி உறுப்பினர்கள் புட்டீன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் தனிநாடாகப் பிரகடனப் படுத்திய தொனெட்ஸின்(Donetsk) தலைவர் போர் நடக்கும்விதத்தால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.



பழிவாங்கும் தாக்குதல்கள்

கார்கீவ் பகுதியில் இருந்து பின்வாங்கிய இரசியப் படையினர் கார்கீவில் உள்ள குடிசார் உட்கட்டுமானங்கள் மீது தாக்குதல் நடத்தி பழிவாங்குவதாக உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. அத்தாக்குதலில் கார்கீவில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாம். உக்ரேன் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் இரசியர்கள் உக்ரேனிய் உட்கட்டுமானங்கள் மீதான தாக்குதலைப் பாராட்டியதுடன் அவை 2022 மார்ச் மாதத்தில் செய்திருக்க வேண்டியவை எனவும் சொல்கின்றனர்.


வான் பொய்ப்பின் தானை பொய்க்கும்

இரசியப் போர் இரசியா எதிர்பார்த்திலும் பார்க்க அதிக காலம் நீடிப்பதற்கும் இரசியா அதிக இழப்பை சந்திப்பதற்கும் இரசியாவின் வான் படை சிறப்பாக செயற்பட முடியாமை முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. உக்ரேனிலும் பார்க்க பத்து மடங்கு வான் படை வலிமையைக் கொண்ட இரசியாவால் உக்ரேனின் வான்படையையும் அதன் வான் பாதுகாப்பையும் செயலிழக்கச் செய்ய முடியாமல் இரசியா இருக்கின்றது. இதனால் துணிவடைந்த உக்ரேனியர்கள் இரசியா கைப்பற்றிய Kherson பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் படை நடவடிக்கையை 2022 ஓகஸ்ட் 30-ம் திகதி ஆரம்பித்தனர். 2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம்.

வானாதிக்கம் செய்ய முடியாத இரசியா

2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம். 1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போர், 1971 பங்களாதேசப் போர் ஆகியவற்றை வான் மேலாதிக்கத்தாலேயே வெற்றி கொள்ளப்பட்டது. 1991-ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது நேட்டோ படையினர் ஓரு சில மணித்தியாலங்களுக்குள் ஈராக்கினதும் குவைத்தினதும் வான்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இரசியா உக்ரேனின் 127,484 சதுர கிலோ மீட்டரைக் கைப்பற்றியுள்ள நிலையில் வெறும் மூவாயிரம் சதுர கிமீட்டரை (உக்ரேன் அதிபர் ஆறாயிரம் சகிமீ என்கின்றார்) உக்ரேனியப் படையினர் மீளக் கைப்பற்றியமை அவர்களின் வெற்றியின் தொடக்கம் என்றோ இரசியாவிற்கு பேரிழப்பு என்றோ இப்போது சொல்ல முடியாது. மேலும் பிரதேசங்களை உக்ரேன் கைப்பற்றிய பின்னர்தான் போரின் போக்கைப் பற்றி எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.


Tuesday, 23 August 2022

மகளைப் பறி கொடுத்த புட்டீனின் தத்துவஞானி அலெக்சாண்டர்

 

அலெக்சாண்டர் டுகின் ஒரு தத்துவ ஞானி போல் தாடியுடன் தோற்றமளிப்பவர். இவருக்கு சொந்தமான காரில் பயணித்த இரவது மகள் இரசியாவின் மொஸ்கோ நகரில் 2022 ஓகஸ்ட் மாதம் 20-ம் திகதி கொல்லப்பட்டார். டுகின் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் புலமை மிக்கவர். இவர் புட்டீனின் ராஸ்புட்டீன் எனவும் அழைக்கப்படுபவர். ராஸ்புட்டீன் (1869-1916) இரசிய மன்னருக்கு ஆலோசகராக இருந்த பிரபலமான ஒருவர். அலெக்சாண்டர் டுகின் அவர்களின் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்கள் சீனாவிலும் ஈரானிலும் துருக்கியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. உலகமயமாதலுக்கு எதிரான கருத்துக்களை உலகளாவிய அடிப்படையில் ஒருங்கிணைப்பதில் முன்னின்றவர் அலெக்சாண்டர் டுகின். புட்டீனை எதிர்ப்பவர்கள் யாரும் இரசியாவில் இல்லை, அப்படி யாராவது இருந்தால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்பது டக்கினின் கருத்து. அது மட்டுமல்ல புட்டீன் நிலையானவர், அகற்றப்பட முடியாதவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அவரே என எழுதியவர் டுகின்.

உக்ரேன் தனிநாடாக இருக்க கூடாது

உக்ரேன் இரசியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருப்பவர். இரசிய வலதுசாரி தேசியவாதத்தின் முதன்மை அடையாளமாக கருதப்படுபவர். இரசியாவின் உலகம் யூரேசிய(ஐரோப்பா-ஆசியா) பெருநிலப்பரப்பை ஒன்றாக ஆளவேண்டும் எனக் கருதுபவர். புதிய இரசியா (Novorossia) என்ற எண்ணக்கருவிற்கு புத்துயிர் கொடுத்தவர். இவர் 1997இல் எழுதிய புவிசார் அரசியலின் அடிப்படை என்னும் நூலில் உக்ரேன் ஒரு தனிநாடாக இருப்பது என்பது புவிசார் அரசியலில் அடிப்படை அற்றது என வாதிட்டிருந்தார். அந்த நூல் தான் 2014இல் புட்டீன் கிறிமியாவையும் உக்ரேனின் கிழக்குப்பகுதியையும் ஆக்கிரமிக்க வழிவகுத்தது எனக் கருதப்படுகின்றது. அப்போது பேச்சு வார்த்தை வேண்டாம், உக்ரேனியர்களைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொல்லுங்கள் எனச் சொன்னவர் டுகின்.

நிலவலிமையும் கடல் வலிமையும்

இரசியாவும் சீனாவும் இணைந்து பல்துருவ ஆதிக்க உலகை உருவாக்க வேண்டும் என ஒரு தொடர் சொற்பொழிவை ஆற்றியவர். இரசிய சீன ஒத்துழைப்பை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையே நடந்த சந்திப்பின் போது இந்த கருத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அலெக்சாண்டர் டுகின் அவர்களின் கருத்துப்படி ஆசிய-ஐரோப்ப பெரு நிலப்பரப்பில் நடுவில் இருக்கும் இரசியா உலகின் பெரும்பகுதி நிலபரப்பில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. உலக கடற்பரப்பின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய அமெரிக்காவுடன் போட்டி போடக் கூடிய நாடாக இரசியாவில் நில-வலிமை உள்ளது என முழங்குபவர் டுகின். ஐரோப்பாவின் மேற்கு எல்லையில் உள்ள ஐரிஸ் தலைநகர் டப்ளின் முதல் இரசியாவின் (ஆசியாவில்) உள்ள விளடிவொஸ்டொக் நகர்வரையிலான பெரும் பிரதேசம் இரசியாவின் ஆட்சிக்கு உட்பட்டது என்ற பேராசை கொண்டவர் டுகின்.  

புத்தியலுக்கு(Modernity) எதிரான போரில் ஈரான் முன்னணி

ஈரானுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு அங்கு தன் கருத்துகளைப் பரப்பும் அலெக்சாண்டர் டுகின் ஈரானிய மதவாத தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகின்றார். அமெரிக்கா முன்னெடுக்கும் புத்தியலுக்கு(Modernity) எதிராக பல நாடுகள் செய்யும் போரில் ஈரான் முன்னணியில் நிற்கின்றது என டுகின் பாராட்டியுள்ளார். துருக்கியில் AKP என அழைக்கப்படும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று டுகின் சொற்பொழிவாற்றியுள்ளார். துருக்கியிலும் ஈரானிலும் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்களை அவர் விதைக்கின்றார்.

மேற்கு ஐரோப்பவிலும் அமெரிக்காவிலும் டுகின் பரப்புரை

இரசிய வங்கி உரிமையாளரான Konstantine Malofeev அலெக்சாண்டர் டக்கினின் பரப்புரைகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றார். அந்த நிதி உதவியுடன் இத்தாலியின் லீக், பிரான்சில் ரலி, ஒஸ்ரேஇயாவின் சுதந்திரக் கட்சி ஆகிய வலதுசாரிக் கட்சிகளுடன் டுகின் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். டுகின் அமெரிக்க வலதுசாரியான முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பை தான் இதயம் நிறைய ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் ஒரு புவிசார் அரசியல் குழப்ப நிலையை உருவாக்க பிரிவினைவாதிகள், இனவாதிகள், போன்ற பல்வேறு எதிர்ப்பாளர்களை தூண்ட வேண்டியது அவசியம் என டுகின் எழுதியிருந்தார்.

2022இல் பாக்கிஸ்த்தானையும் சீனாவையும் சேர்ந்த அறிஞர்களுக்கு உரையாற்றுகையில் அலெக்சாண்டர் டுகின் உக்ரேனில் தோல்வையைச் சந்திப்பதிலும் பார்க்க அணுக்குண்டை வீசி போரை இரசியா முடிக்கும் எனச் சொல்லியிருந்தார்.

எஸ்த்தோனியாமீது இரசியா நடவடிக்கை எடுக்குமா?

அலெக்சாண்டர் டுகின் அமெரிக்காவினாலும் உக்ரேனினாலும் வெறுக்கப்பட வேண்டிய ஒருவர் என்பது நிச்சயம். டக்கினும் அவரது மகளும் ஒரு நிகழ்வில் கலந்து விட்டு ஒன்றாக வெளியேறுவதாக இருந்தது. அலெக்சாண்டர் டுகின் வேறு இடத்திற்கு போக வேண்டி இருந்ததால் அவரது மகள் மட்டும் அவரது காரில் வீடு திரும்பும் வேளையில் குண்டுத் தாக்குதல் அக்கார் மீது செய்யப்பட்டது. அலெக்சாண்டருக்கு வைக்கப்பட்ட குண்டில் அவர் மகள் பலியானார் என்பதில் ஐயமில்லை. உக்ரேனியப் பெண் ஒருவர் 2022 ஜூலை மாதம் இரசியாவிற்கு தன் மகளுடன் வந்தார் என இரசியா சொல்கின்றது. உக்ரேனின் உளவுத்துறை அவரை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டும் இரசியா இக்கொலையை செய்துவிட்டு எஸ்த்தோனியாவிற்கு அவர் தப்பிச் சென்று விட்டதாகச் சொல்லுவதுடன் கொலையாளியை கைது செய்து நாடு கடத்தும்படி எஸ்த்தோனியாவை இரசியா மிரட்டுகின்றது. எஸ்த்தோனியா ஒரு நேட்டோ உறுப்பு நாடாக இருப்பதால் அதற்கு எதிரான இரசிய நடவடிக்கை ஒரு இரசிய-நேட்டோ முறுகலை உருவாக்கலாம்.

உக்ரேன் அலெக்சாண்டர் டக்கினின் கொலைக்குப் பின்னால் இருக்கின்றது என்ற குற்றச் சாட்டை உக்ரேனிய அரசு கடுமையாக மறுக்கின்றது.

சில மேற்கு நாட்டு ஊடகங்கள், உக்ரேன் போரில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் இரசியா, தனது போரை மேலும் தீவிரப்படுத்த அலெக்சாண்டர் டக்கினை கொலை முயற்ச்சி நாடகமாடி அவரது மகளைப் பலியெடுத்தது எனக் குற்றம் சாட்டுகின்றது.

Tuesday, 2 August 2022

அல் கெய்தா தலைவர் அல் ஜவஹிரியை கொன்றது அமெரிக்கா


அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அல் கெய்தாவின் தலைவர் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார்.  ஆப்கான் தலைநகர் காபுலில் அவர் மறைந்திருந்த வீடு ஒன்றின் மீது 2022 ஜூலை 31-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ செய்த படை நடவடிக்கையால் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் செய்யப்பட்ட இரட்டைக் கோபுரத்தாக்குதலைச் செயற்படுத்துவதில் அல் கெய்தா தலைவர் பின் லாடனுடன் அல் ஜவஹிரியும் இணைந்து செயற்பட்டார் என்பதால் அதற்கான நீதி வழங்கப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அத்தாக்குதலில் 2977பேர் கொல்லப்பட்டனர். கென்யா தன்சானியா ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரகங்களில் அல் கெய்தா தாக்குதல் நடத்தி 244 அமெரிக்கர்களை கொன்றதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 

25மில்லியன் டொலர் கொலை

அல் ஜவஹிரியின் தலைக்கு அமெரிக்கா 25மில்லியன் டொலர் பரிசுத்தொகையையும் அறிவித்திருந்தது.  ஜவஹிரியின் இருப்பிடத்தை உறுதி செய்தபின்னர் அவரைக் கொல்ல தான் அனுமதி வழங்கியதாக அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு பின் லாடனை பாக்கிஸ்த்தானில் வைத்துக் கொலை செய்தபின்னர் அல் கெய்தாவின் தலைமைப் பொறுப்பை தற்போது 71 வயதான எகிப்த்திய கண் அறுவை மருத்துவரான ஐமன் அல் ஜவஹிரி ஏற்றிருந்தார். எத்தனை காலமானாலும் எங்கு மறைந்திருந்தாலும் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதிகளை நாம் அழிப்போம் என அமெரிக்கா மார் தட்டியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்த்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக அனுமதிக்க மாட்டோம் எனவும் அறிவித்திருந்தது. ஆப்கானிஸ்த்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள் தாக்குதலை உறுதி செய்தது ஆனால் கொல்லப்பட்டவர் யார் என்பதைக் கூறவில்லை. 

கண் அறுவை மருத்துவர் (Eye Surgeon)

இளவயதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஐமன் அல் ஜவஹிரி 15வது வயதில் எகிப்திய அரசால் கைது செய்யப்பட்டார். மருத்துவரான பின்னர் பாக்கிஸ்த்தான் சென்று சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்த்தான் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தானில் வைத்து மருத்துவ உதவிகளை செய்துவந்தார். 1998-ம் ஆண்டு கென்யாவிலும் தன்சானியாவிலும் அமெரிக்க தூதுவரகங்களில் செய்யப் பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவால் மிகவும் தேடப்படும் ஒருவராக அவர் இருந்தார். திட்டமிட்டு தாக்குதல்கள் செய்வதில் அவர் வல்லவராக கருதப்படுகின்றார். அவர் கொல்லப்படும் போது அவர் மட்டும் வீட்டில் இருந்தார் எனவும் அவரது குடும்பத்தினர் வேறு இடங்களில் இருந்தனர் எனவும் நம்பப்படுகின்றது. படித்த திமிர் உடையவராகக் கருதப்படும் ஜவஹிரி மற்ற அல் கெய்தா உறுப்பினர்களுடன் கடுமையாக நடந்து கொள்பவர் எனக் கருதப்படுகின்றது. அவரது தலைமையில் அல் கெய்தாவில் பல உள் மோதல்களும் பிளவுகளும் ஏற்பட்டன எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது. 



AGM-114 Hellfire ஏவுகணைகள்

Air to Ground Missiles 114 Hellfire என்னும் வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டால் ஜவஹிரி கொல்லப்பட்டார். 45கிலோ எடையுள்ள துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய இந்த ஏவுகணைகளை பெறுமதி மிக்க இலக்குகள் மீது தாக்குதல் செய்ய அமெரிக்கப்படையினர் பாவித்ஹ்டு வருகின்றனர். 2004-ம் ஆண்டு அவற்றைப் பாவித்து ஹமாஸ் தளபதியை இஸ்ரேலியர் கொலை செய்தனர். அமெரிக்காவில் பிறந்து பின்னர் அல் கெய்தாவில் இணைந்த இஸ்லாமிய போதகரான அனவர் அல் அவ்லாக்கியின் கொலைக்கும் அவ் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. அல் ஷஹாப் தலைவர் அகமட் அப்டி கொடானே சோமாலியாவி வைத்து Air to Ground Missiles 114 Hellfire ஏவுகணையால் கொல்லப்பட்டார். 

சிஐஏயின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

ஒரு பயங்கரவாத அமைப்பாக பலரும் கருதும் அமெரிக்க உளவு  நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு படைத்துறைப் பிரிவை உருவாக்கியது. அதன் படையணிகள் வெளிநாடுகளில் செய்யும் கொலைகள் அமெரிக்காவின் சட்டங்களுக்குள் உட்பட்டதல்ல அமெரிக்க அரசுக்கோ மக்களுக்கோ பொறுப்புக் கூற வேண்டிய நிலையிலும் அவை இல்லை. பல நாடுகளில் சிஐஏயின் படையினர்  தளம் அமைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் அந்த நாடுகளுக்கு தெரியாமலே அவர்களின் படைத்தளம் அமைந்துள்ளது. பாக்கிஸ்த்தானில் சிஐஏயின் படைத்தளம் அமைக்க இம்ரான் கான் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் அதன் பின்னர் ஆட்சியை இழந்தார். 2022-ம் ஆண்டு ஏப்ர மாதத்தில் அல் ஜவஹிரி ஆப்கானிஸ்த்தானில் மறைந்திருக்கும் இடத்தை சிஐஏ அறிந்து கொண்டது. அவர் தனது வீட்டின் உப்பரிகையில் நிற்பதையும் சிஐஏ (Balcony) அவதானித்தது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு அவரது அடையாளம் நடமாடும் விதம் உறுதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் இப்போது திறமையாக சிஐஏயால் உளவுத் தாக்குதல் செய்ய முடியும் என்பது நிருபணமாகியுள்ளது. 

2020-ம் ஆண்டு அமெரிக்காவும் தலிபானும் செய்து கொண்ட உடன்பாட்டின் படி அல் கெய்தா ஆப்கானிஸ்த்தானில் செயற்பட தலிபான் அனுமதிக்காது என ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. தலிபான் உடன்பாட்டை மீறியது எனச் சொல்லி இனி அமெரிக்காவும் உடன்பாட்டை மீறலாம். 

Thursday, 14 July 2022

இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுமா?


அரசியலமைப்பு நெருக்கடி:
அரசியலில் ஏற்படும் முதன்மையான நெருக்கடிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தினிற்குள் அல்லது கடந்த கால முன்மாதிரிகளை வைத்துக் கொண்டோ தெளிவான தீர்வு கொண்டுவர முடியாத நிலையை அரசியலமைப்பு நெருக்கடி என்பார்கள். அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் போது அரசு செயற்பட முடியாத நிலை உருவாகும்.

அரசியலமைப்பு நெருக்கடி உருவாகும் சூழல்கள்:

1, ஒரு நெருக்கடிக்கான தீர்வு அரசியலமைப்பில் இல்லாதபோது

2. அரசியலமைப்பின் வாசகங்களுக்கான வியாக்கியாங்களில் முரண்பாடு நீதித்துறையில் ஏற்படும்போது.

3. அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது.

4. அரச நிறுவனங்கள் செயற்பட முடியாத போது. உதாரணமாக அரசமைப்பின் படி தேர்தல் நடத்த வேண்டிய நேரத்தில் அதை நடத்த முடியாத நிலை ஏற்படுதல்.

அரசியலமைப்பு நெருக்கடிக்கான உதாரணங்கள்

1. உலக அரசியல் வரலாற்றில் பல அரசியலமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டதுண்டு. தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் வாக்களிக்க முடியாமல் அதன் அரசியலமைப்பு தடை செய்திருந்தது. கலப்பின மக்களும் வாக்களிக்க முடியாது என 1950இல் சட்டம் மாற்றப்பட்டதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. அதை அரசு ஏற்க மறுத்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

2. 1975இல் ஒஸ்ரேலியாவின் தொழிற்கட்சி தலைமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது ஆளுநர் நாயகம் தாராண்மைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை தலைமை அமைச்சராக நியமித்தார். அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

3. ஐக்கிய அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குடியரசுத் தலைவர் செயற்படும் போது அரசியலமைப்பு நெருக்கடி அடிக்கடி ஏற்படுவது உண்டு.  

4. 2007-ம் ஆண்டு உக்ரேனிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் கலைத்தமையை நாடாளுமன்றம் ஏற்க மறுத்த போது பிணக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் விட்ட போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்ப்பட்டது.


இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல்

குடியரசுத் தலைவராக 2019இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச 2022 ஜூலை 9-ம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து நாட்டில் இருந்து வெளியேறி விட்டார். தனது வாயால் தான் பதவி விலகுவதாக அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என முதலில் அறிவித்த இலங்கை நாடாளுமன்ற அவைத்தலைவர் (சபாநாயகர்) மஹிந்த யாப்பா அபேவர்த்தன பின்னர் அவர் கடிதத்தில் கையொப்பமிட்டார் என்றார். ஆனால் 2022 ஜூலை 14ம் திகதை காலை 10 மணியளவில் வெளிவந்த செய்திகளின் படி குடியரசுத் தலைவர் அவைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை. பொதுவாக குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்லும் போது தலைமை அமைச்சர் தற்காலிக குடியரசுத் தலைவராக பதவி ஏற்கலாம். குடியரசுத் தலைவர் வெளிநாடு சென்றார் என்பது கூடிய முறைப்படி அறிவிக்காத நிலையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தார். பின்னர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் இன்னொரு உறுப்பினரான பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவும் ரணிலின் பதவி ஏற்றல் செல்லுபடியற்றது என்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்கவும் ரணிலை குடியரசுத் தலைவராக ஏற்கவில்லை. இவர்கள் பாதுகாப்புத்துறையினர், காவற்துறையினர் உட்பட அரசைச் சேர்ந்தவரகள் ரணிலின் உத்தரவிற்கு இணங்க செயற்படக்கூடாது எனப் பகிரங்க அறிக்கை விட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் ஆளும் மக்கள் முன்னணியின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினரகள் ரணிலை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி (மைத்திரிபால சிரிசேன), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவாக இல்லை. இத்தனை பிரச்சனைகளினதும் நடுவண் புள்ளியாகிய மக்கள் எழுச்சியை செய்தவர்களில் முதன்மையானவர்களாகிய அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ரணில் பதவி ஏற்பை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த அமைப்பும் மற்ற கிளர்ச்சிக்காரர்களும் தலைமை அமைச்சரின் அரச வதிவிடமான அலரி மாளிகையை தங்கள் வசமாக்கியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச தான் இருக்கும் போது உள்ள குழப்பத்திலும் பார்க்க தான் போன பின்னால் அதிக குழப்பம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டிருக்கலாம். தனது பதவிலகல் கடிதத்தை சமர்ப்பிக்காமல் விட்டால் தான் தனது பதவிக் காலம் முடியமுன்னர் நாடு திரும்பி மீண்டும் பதவி ஏற்கலாம் என்ற எண்ணத்துடனும் அவர் செயற்ப்பட்டிருக்கலாம். 

2022 ஜூலை 14-ம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு (பிரித்தானிய நேரம்) கோத்தபாய மின்னஞ்சல் மூலம் தன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக செய்தி வந்தது. அங்கும் ஒரு குழப்பம். மின்னஞ்சல் மூலமான பதவி விலகல் கடிதம் அரசியலமைப்பில் இல்லை. அதற்கான முன்மாதிரியும் இல்லை. அவர் வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் உள்ள இலங்கையின் தூதுவரகத்தில் பதவி விலகல் கடிதத்தை வழங்குவது ஏற்புடையதாக இருக்கலாம். பிரித்தானிய நேரம் 16:47இற்கு பிரித்தானிய கார்டியன் பத்திரிகையின் இணையச் செய்தியின் படி சிங்கப்பூரில் இருந்து பதவி விலகல் கடிதம் விமான மூலம் அவைத் தலைவருக்கு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்த பின்னர் ஜூலை 15-ம் திகதி அவைத்தலைவர் பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என அறியக் கூடியதாக உள்ளது. 

அரசியலமைப்பு நெருக்கடி மட்டுமல்ல இரத்தக்களரி

கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவராக இருக்கும் வரை அவருக்கான அரசுறவியல் கவசம் (Diplomatic Immunity) பல நாடுகளில் கிடைக்கும். அதனால் அவர் தனக்கும் தனது உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை பதவி விலகல் கடிதம் சம்ர்ப்பிக்க மாட்டர் என்றே தோன்றுகின்றது. நாடாளுமன்ற அவைத்தலைவர் அபேவர்த்தன பதில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நிலையில் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட அதிபர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான கடிதம் இல்லாத சூழலில் அவர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான சட்ட ஆதாரங்களைத் தான் தேடுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதம் இல்லாமல் அவர் பதவி விலகினார் என்பதை அபேகுணவர்த்தனவோ அல்லது சட்ட மா அதிபரோ உறுதிப்படுத்தாவிடில் இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. அதை “போராட்டம்” (அரகலய) என்னும் பெயரில் கிளர்ச்சி செய்பவர்களை மேலும் சினப்படுத்தலாம். வெளிநாடுகளின் ஆதரவுடன் ரணிலை பதவியில் தக்க வைக்க படையினர் முயன்றால் இரத்தக் களரி ஏற்பட வாய்ப்புண்டு.


Tuesday, 12 July 2022

கோத்தபாயாவை அகற்றியமை யாருக்கு வெற்றி?

 


கியூப மக்கள் எழுச்சி, வெனிசுவேலா தொடர் போராட்டம், ஹொங் கொங் ஆர்ப்பாட்டம், அரபு வசந்தம் ஆகியவற்றால் சாதிக்க முடியாததை இலங்கையில் நடந்த "அரகலய" (போராட்டம்) சாதித்துள்ளது. 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை 5 இலட்சம் மக்கள் தெருவில் இறங்கிப் போராடி அகற்றியுள்ளனர்.

நாட்டைக் கொள்ளையடிக்காத கடாபி கொல்லப்பட்டார் அவருக்கு எதிராக நடந்தது படைக்கலன் ஏந்திய போராட்டம்

சிரியாவில் ஊழல் மிக்க அடக்குமுறை ஆட்சி நடந்தது. பல நாடுகளும் அமப்புக்களும் அங்கு பல் வேறு நோக்கங்களுடன் செயற்பட்டதாலும் அசாத் பதவி இழப்பதை இரசியாவும் இஸ்ரேலும் விரும்பவில்லை என்பதாலும் அவரது ஆட்சியை அசைக்க முடியவில்லை.

எகிப்தில் நடந்த கிளர்ச்சி கிளர்ச்சிக்காரர்களிடையே மாற்றுக் கொள்கை மாற்று தலைமை இல்லாத படியால் இரண்டு தடவை தோற்கடிக்கப்பட்டது.

07/09 நிகழ்வுகளின் பின்னர் இலங்கையில் மாற்றுத் தலைமை என்பது மிகவும் குழப்பமானதாக இருக்கின்றது. அதற்கான தேடலும் ஒரு வன்முறையில் முடியலாம். 18 இற்கு மேற்பட்ட ஒன்றிற்கு ஒன்று முரணான கொள்கைகளையுடைய அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தன. அவற்றால் ஒரு தலைமையை முன் வைக்க முடியாது. அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் முன்னர் தோன்ற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 07/09 சஜித் பிரேமதாச என்ன செய்தார் என்ற கேள்வி வரும் என அறிந்த அவர் மருத்துவ மனைக்கு சென்று படுத்துவிட்டார். பொது இடத்தில் தோன்றிய விமன்வீரவன்ச என்பவர் தனி ஒருவரால் விரட்டப்பட்டுள்ளார். 

சினம் கொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தவர்கள் தமக்கு வெற்றி எனக் கருதுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய நாளாந்த பிரச்சனைகள் மேலும் மோசமடையும்.

இலங்கையில் திரைமறைவில் தீவிரமான புவிசார் அரசியல் போட்டி நடக்கின்றது. அதில் ராஜபக்சேக்களுக்கு எதிரானவர்களுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. தானாக விழுவிருப்பதை ஏன் தடியால் அடித்து விழவைக்க வேண்டும் எனக் காத்திருந்த அமெரிக்காவிற்கு இதில் பெரும் வெற்றி. இலங்கையின் இன்றைய நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவுடன் இணங்கிப் போகாமையினால் வந்த வினை இது. இலங்கைக்கு எதிராகச் செய்யப்பட்ட முதல் நகர்வு உலக வங்கி 2019-ம் ஆண்டு இலங்கையை தாழ்-நடுவண் வருமான நாடு(Lower-middle income country) என்ற நிலையில் இருந்து உயர்-நடுவண்-வருமான (Upper-middle income country) என்ற நிலைக்கு உயர்த்தியமையாகும். இது உலக வங்கியில் இருந்து இலங்கை பெறும் சலுகைகளைக் குறைப்பதற்காக எடுத்த நடவடிக்கையாகும். அமெரிக்காவின் மறைமுகத் தாக்குதலாக இதை நாம் பார்க்க வேண்டும். ராஜ்பக்சேக்களை பப்பா மரத்தில் ஏற்றி மரத்துடன் சாய்த்து விழுத்தியுள்ளது அமெரிக்கா.

ராஜபக்சேக்களால் பெரும் பாதிப்பு உள்ளான தமிழர்களுக்கு ஓர் அற்ப மகிழ்ச்சி கிடைக்கலாம்.

இலங்கையில் மக்கள் எழுச்சியால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது தமது நாட்டு மக்களையும் எழுச்சி செய்ய தூண்டலாம் என இலங்கை எழுச்சியை கரிசனையுடன் கவனித்துக் கொண்டு இலங்கை ஆட்சியாளர்களிற்கு எதிரான சினத்தை தணிக்க அவ்வப்போது இலங்கைக்கு சிறு உதவிகளைச் செய்து வந்த இந்திய ஆட்சியாளர்களுக்கு இலங்கையின் 07/09 நிகழ்வு வெற்றியல்ல. 

கொம் குவின் என்பவர் இலங்கையைப் பற்றி ஜூலை 11-ம் திகதி எழுதிய கட்டுரையின் தலைப்பு Resignations Deepen Sri Lanka’s Crisis என்பதாகும். பதவி விலகல்கள் இலங்கையின் நெருக்கடியை மேலும் ஆழமாக்குகின்றது என்ற அவரது கருத்து முற்றிலும் உண்மையே. அரசியல் உறுதிப்பாடு இன்றி பொருளாதார உறுதிப்பாடு கிடையாது. குடியரசுத் தலைவரை அவரின் பணிமனையில் இருந்து அகற்றியமை வெளிநாட்டுச் செலவாணியைக் கொண்டு வராது; உரத் தட்டுப்பாட்டை இல்லாமல் செய்யாது, உல்லாசப் பயணிகளின் வருகையை மேலும் குறைக்கும்; இலங்கை சிக்கியுள்ள புவிசார் அரசியல் போட்டியை மேலும் தீவிரமாக்கும்.

அனைத்துக் கட்சிகளையும் கூட்ட முடியவில்லை

ஆர்ப்பாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்த வேளையில் தலைமை அமைச்சர் ரணில் அனைத்துக் கட்சி மாநாட்டை நாடாளுமன்ற அவைத் தலைவர் வீட்டில் கூட்டினார். அனுர குமார திசாநாயக்காவின் ஜேவிபியும் சஜித் பிரேமதாசாவின் மக்கள் வலிமைக் கட்சியும் புறக்கணித்தபடியால் அது அனைத்துக் கட்சிக் கூட்டமாக அமையவில்லை. அங்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குடியரசுத் தலைவரும் தலைமை அமைச்சரும் பதவிவிலகுவது முதன்மையானது. 

2022இல் இலங்கைப் பொருளாதாரம் 10%இற்கு மேலாக சுருக்கமடையலாம. 

Gota Go Home ஆரம்ப புள்ளி மட்டுமே.

இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு குலைந்தது மட்டுமல்ல அதன் உடைதன்மை (fragility) அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம். அனைத்துக் கட்சியையும் கொண்ட ஓர் அரசு அமைப்பதற்கு 07/09 குடியரசுத் தலைவரின் பணிமனையைக் கைப்பற்றியவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஜேவிபி+முன்னணி சமூகவுடமைக் கட்சி(FSP) ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளுமா? இந்தியா சவேந்திர சில்வாவை அழைத்தமை ஏன்?

 அரச நிறுவனங்களில், அதுவும் படைத்துறையில், பெருமளவு ஆட் குறைப்பு செய்யாமல் இலங்கைப் பிரச்சனைக்கு முடிவில்லை.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...