Followers

Tuesday 12 July 2022

கோத்தபாயாவை அகற்றியமை யாருக்கு வெற்றி?

 


கியூப மக்கள் எழுச்சி, வெனிசுவேலா தொடர் போராட்டம், ஹொங் கொங் ஆர்ப்பாட்டம், அரபு வசந்தம் ஆகியவற்றால் சாதிக்க முடியாததை இலங்கையில் நடந்த "அரகலய" (போராட்டம்) சாதித்துள்ளது. 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை 5 இலட்சம் மக்கள் தெருவில் இறங்கிப் போராடி அகற்றியுள்ளனர்.

நாட்டைக் கொள்ளையடிக்காத கடாபி கொல்லப்பட்டார் அவருக்கு எதிராக நடந்தது படைக்கலன் ஏந்திய போராட்டம்

சிரியாவில் ஊழல் மிக்க அடக்குமுறை ஆட்சி நடந்தது. பல நாடுகளும் அமப்புக்களும் அங்கு பல் வேறு நோக்கங்களுடன் செயற்பட்டதாலும் அசாத் பதவி இழப்பதை இரசியாவும் இஸ்ரேலும் விரும்பவில்லை என்பதாலும் அவரது ஆட்சியை அசைக்க முடியவில்லை.

எகிப்தில் நடந்த கிளர்ச்சி கிளர்ச்சிக்காரர்களிடையே மாற்றுக் கொள்கை மாற்று தலைமை இல்லாத படியால் இரண்டு தடவை தோற்கடிக்கப்பட்டது.

07/09 நிகழ்வுகளின் பின்னர் இலங்கையில் மாற்றுத் தலைமை என்பது மிகவும் குழப்பமானதாக இருக்கின்றது. அதற்கான தேடலும் ஒரு வன்முறையில் முடியலாம். 18 இற்கு மேற்பட்ட ஒன்றிற்கு ஒன்று முரணான கொள்கைகளையுடைய அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தன. அவற்றால் ஒரு தலைமையை முன் வைக்க முடியாது. அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் முன்னர் தோன்ற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 07/09 சஜித் பிரேமதாச என்ன செய்தார் என்ற கேள்வி வரும் என அறிந்த அவர் மருத்துவ மனைக்கு சென்று படுத்துவிட்டார். பொது இடத்தில் தோன்றிய விமன்வீரவன்ச என்பவர் தனி ஒருவரால் விரட்டப்பட்டுள்ளார். 

சினம் கொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தவர்கள் தமக்கு வெற்றி எனக் கருதுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய நாளாந்த பிரச்சனைகள் மேலும் மோசமடையும்.

இலங்கையில் திரைமறைவில் தீவிரமான புவிசார் அரசியல் போட்டி நடக்கின்றது. அதில் ராஜபக்சேக்களுக்கு எதிரானவர்களுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. தானாக விழுவிருப்பதை ஏன் தடியால் அடித்து விழவைக்க வேண்டும் எனக் காத்திருந்த அமெரிக்காவிற்கு இதில் பெரும் வெற்றி. இலங்கையின் இன்றைய நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவுடன் இணங்கிப் போகாமையினால் வந்த வினை இது. இலங்கைக்கு எதிராகச் செய்யப்பட்ட முதல் நகர்வு உலக வங்கி 2019-ம் ஆண்டு இலங்கையை தாழ்-நடுவண் வருமான நாடு(Lower-middle income country) என்ற நிலையில் இருந்து உயர்-நடுவண்-வருமான (Upper-middle income country) என்ற நிலைக்கு உயர்த்தியமையாகும். இது உலக வங்கியில் இருந்து இலங்கை பெறும் சலுகைகளைக் குறைப்பதற்காக எடுத்த நடவடிக்கையாகும். அமெரிக்காவின் மறைமுகத் தாக்குதலாக இதை நாம் பார்க்க வேண்டும். ராஜ்பக்சேக்களை பப்பா மரத்தில் ஏற்றி மரத்துடன் சாய்த்து விழுத்தியுள்ளது அமெரிக்கா.

ராஜபக்சேக்களால் பெரும் பாதிப்பு உள்ளான தமிழர்களுக்கு ஓர் அற்ப மகிழ்ச்சி கிடைக்கலாம்.

இலங்கையில் மக்கள் எழுச்சியால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது தமது நாட்டு மக்களையும் எழுச்சி செய்ய தூண்டலாம் என இலங்கை எழுச்சியை கரிசனையுடன் கவனித்துக் கொண்டு இலங்கை ஆட்சியாளர்களிற்கு எதிரான சினத்தை தணிக்க அவ்வப்போது இலங்கைக்கு சிறு உதவிகளைச் செய்து வந்த இந்திய ஆட்சியாளர்களுக்கு இலங்கையின் 07/09 நிகழ்வு வெற்றியல்ல. 

கொம் குவின் என்பவர் இலங்கையைப் பற்றி ஜூலை 11-ம் திகதி எழுதிய கட்டுரையின் தலைப்பு Resignations Deepen Sri Lanka’s Crisis என்பதாகும். பதவி விலகல்கள் இலங்கையின் நெருக்கடியை மேலும் ஆழமாக்குகின்றது என்ற அவரது கருத்து முற்றிலும் உண்மையே. அரசியல் உறுதிப்பாடு இன்றி பொருளாதார உறுதிப்பாடு கிடையாது. குடியரசுத் தலைவரை அவரின் பணிமனையில் இருந்து அகற்றியமை வெளிநாட்டுச் செலவாணியைக் கொண்டு வராது; உரத் தட்டுப்பாட்டை இல்லாமல் செய்யாது, உல்லாசப் பயணிகளின் வருகையை மேலும் குறைக்கும்; இலங்கை சிக்கியுள்ள புவிசார் அரசியல் போட்டியை மேலும் தீவிரமாக்கும்.

அனைத்துக் கட்சிகளையும் கூட்ட முடியவில்லை

ஆர்ப்பாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்த வேளையில் தலைமை அமைச்சர் ரணில் அனைத்துக் கட்சி மாநாட்டை நாடாளுமன்ற அவைத் தலைவர் வீட்டில் கூட்டினார். அனுர குமார திசாநாயக்காவின் ஜேவிபியும் சஜித் பிரேமதாசாவின் மக்கள் வலிமைக் கட்சியும் புறக்கணித்தபடியால் அது அனைத்துக் கட்சிக் கூட்டமாக அமையவில்லை. அங்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குடியரசுத் தலைவரும் தலைமை அமைச்சரும் பதவிவிலகுவது முதன்மையானது. 

2022இல் இலங்கைப் பொருளாதாரம் 10%இற்கு மேலாக சுருக்கமடையலாம. 

Gota Go Home ஆரம்ப புள்ளி மட்டுமே.

இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு குலைந்தது மட்டுமல்ல அதன் உடைதன்மை (fragility) அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம். அனைத்துக் கட்சியையும் கொண்ட ஓர் அரசு அமைப்பதற்கு 07/09 குடியரசுத் தலைவரின் பணிமனையைக் கைப்பற்றியவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஜேவிபி+முன்னணி சமூகவுடமைக் கட்சி(FSP) ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளுமா? இந்தியா சவேந்திர சில்வாவை அழைத்தமை ஏன்?

 அரச நிறுவனங்களில், அதுவும் படைத்துறையில், பெருமளவு ஆட் குறைப்பு செய்யாமல் இலங்கைப் பிரச்சனைக்கு முடிவில்லை.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...