Followers

Saturday, 30 April 2022

இம்ரான் கான் இரண்டாம் ஆட்டத்தில் வெல்வாரா?

 

2022 ஜனவரியில் இம்ரான் கானை பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை பாக்கிஸ்தானின் படையினரும் எதிர்க்கட்சியினரும் முடுக்கி விட்ட போது. தான் ஆட்சியில் இருக்கும் போது அவரது எதிரிகளுக்கு உள்ள ஆபத்திலும் பார்க்க ஆட்சியில் அகற்றப் பட்ட பின்னர் வரப்போகும் ஆபத்து அதிகமானதாகவே இருக்கும் என முழங்கினார். மேலும் அவர் தான் தனது ஆதரவாளர்களுடன் தெருவில் இறங்கினால் தன் எதிரிகளுக்கு ஓடி ஒளிக்க இடமிருக்காது என்றார். அவர் சூளுரைத்த படியே அவருக்கு ஆட்சியில் இருக்கும் போது உள்ள ஆதரவிலும் பார்க்க அதிக அளவு ஆதரவு பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் பெருகுவதுடன் பாக்கிஸ்தான் படைத்துறையின் மீது மக்கள் அதிக வெறுப்பு காட்டுகின்றனர்.

இம்ரான் கானின் ஆதரவு அதிகரித்துள்ளது

இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அமெரிக்காவும் பாக்கிஸ்தான் படைத்தளபதி கமார் ஜாவிட் பஜ்வாவும் இணைந்து சதி செய்தே அகற்றினர் என இம்ரான் சொல்லுவதை பல பாக்கிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். அமெரிக்கா இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதற்கு பாக்கிஸ்தானியர் விதி விலக்கல்ல. தலைமை அமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இம்ரான் கான் பாக்கிஸ்தானின் முக்கிய நகரங்களில் எல்லாம் பல பேரணிகளை நடத்தியுள்ளார். அவற்றில் திரண்ட மக்கள் தொகை இம்ரான் கானின் ஆதரவுத் தளம் மேலும் வலிமையடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இம்ரான் கான் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்துள்ளதும் இம்ரான் கானுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இம்ரான் கான் மக்கள் முன் உரையாற்றும் போதெல்லாம் இரண்டாவது விடுதலைப் போர் ஆரம்பம் என்கின்றார். பாக்கிஸ்தானை அமெரிக்கப் பிடியில் இருந்து விடுவிக்கும் விடுதலைப் போரை ஆரம்பிப்போமாக என அவர் முழங்குகின்றார். சிஐஏ பாக்கிஸ்தானில் படைத்தளம் அமைக்க தான் மறுத்த படியால் தன்னை ஆட்சியில் இருந்து அகற்றியது அமெரிக்காவே என இம்ரான் கான் குற்றம் சாட்டுகின்றார்.

உறுதியற்ற ஆட்சி

இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்த ஷபாஸ் ஷெர்ஃப்பால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அதனால் பாக்கிஸ்தானுக்கு ஒரு உறுதியான அரசு தேவைப்படும் நிலையில் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெர்ஃப்பால் உறுதியான ஆட்சி அமைக்க முடியவில்லை. அவரை ஆட்சியில் அமர்த்திய கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தல் நடத்தும்படி அவர நச்சரிக்கின்றனர்.

இம்ரானின் குற்றச் சாட்டை உறுதிசெய்த Fox News

அமெரிக்க தொலைக்காட்சி சேவையான Fox Newsஇல் தோன்றிய அதன் அரசியல் ஆய்வாளரான Rebecca Grant பாக்கிஸ்தான் உக்ரேனுக்கு ஆதரவளிக்க வேண்டும், பாக்கிஸ்தான் இரசியாவுடன் உடன்பாடுகள் செய்வதை நிறுத்த வேண்டும், சீனாவுடனான தனது ஈடுபாடுகளை மட்டுப்படுத்த வேண்டும், அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை கைவிட வேண்டும் ஆகியவை இம்ரான் கான் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டமைக்கான காரணமாக அமைந்தது என்றார். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியமைக்கு அமெரிக்காதான் காரணம் என்பதை Rebecca Grant உறுதிப்படுத்தியுள்ளது என்றார். 

இம்ரானிற்கு பின் மோசமான பொருளாதாரம்

2022 மார்ச்சில் பாக்கிஸ்தானில் பணவீக்கம் 12.6% ஆக இருந்தது. அத்துடன் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க அதிகமாகவும் அரச செலவு வரவிலும் அதிகமாகவும் உள்ளது. பாக்கிஸ்தானின் வெளிநாட்டுச் செல்வாணைக் கையிருப்பு $11 பில்லியன் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் மிகக் குறைவான கையிருப்பாகும். இது இரண்டு மாத இறக்குமதிக்கு மட்டும் போதுமான கையிருப்பாகும். பொதுவாக எந்த ஒரு நாடும் மூன்று மாதத்திற்கு தேவையான கையிருப்பை வைத்திருக்க வேண்டும். பாக்கிஸ்தானிற்கு இது போன்ற நிதி நெருக்கடி புதிதல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதின் மூன்று தடவை அது நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. 2021 ஜூலையில் இருந்து 2022 மார்ச் வரையிலான ஒன்பது மாதப் பகுதியில் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க $13.7 பில்லியன் அதிகமாக இருந்தது 2020/2021 அதே ஒன்பது மாத காலப்பகுதியில் அது $275 மில்லியனாக மட்டுமே இருந்தது. இதனால் பாக்கிஸ்தான நாணயத்தின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தத்தில் 2021-ம் ஆண்டு இலங்கை இருந்த நிலையில் பாக்கிஸ்தான் 2022 ஏப்ரல் மாதத்தில் இருக்கின்றது. பாக்கிஸ்தானியர் தமது நாட்டை எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்தியா பாக்கிஸ்த்தானைப் போல் அடிக்கடி பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கப் போவதில்லை என்பதை இட்டு அவர்கள் விசனம் அடைந்துள்ளனர். அத்துடன் பாக்கிஸ்த்தானின் பொருளாதாரச் சுட்டிகள் பல பங்களாதேசத்தின் சுட்டிகளிலும் பார்க்க மோசமாக இருப்பதையிட்டு அவர்கள் வெட்கப்படுகின்றன.

அடுத்த தேர்தலில் இம்ரானின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பவை:

1. பதவியில் இருந்து விலக்கப்பட்ட உடனேயே இமரான் கான் தன் பரப்புரைக் கூட்டங்களை ஆரம்பித்தமை

2. இம்ரான் கானுக்கு பின்னால் அவரே எதிர்பார்த்திராத அளவு மக்கள் கூடுகின்றனர்.

3. உலகப் பொருளாதாரம் உக்ரேன் போரால் பாதிப்படைந்திருப்பது பாக்கிஸ்தானையும் பெரிதும் பாதித்துள்ளமை புதிய தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு எதிர்பாராத தலையிடியைக் கொடுத்துள்ளது.

4. இம்ரான் பாக்கிஸ்தானில் பயங்கரவாதத்தை தணித்திருந்தார்.

5. இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது மக்களிற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கியிருந்தார்.

6. இம்ரான் கான் பாக்கிஸ்தானின் கல்வித்துறையில் பல முன்னேற்றங்களைச் செய்திருந்தார்.

7. ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆட்சி என பாக்கிஸ்தான் மக்களை இம்ரான் நம்ப வைக்கின்றார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி “இறக்குமதி செய்யப்பட்ட ஆட்சி” என்ற கொத்துக்குறியில் (hasgtag) நான்கு மில்லியனக்ளுக்கும் அதிகமான பதிவுகள் இடப்பட்டுள்ளன.

8. அறுபது கோடி கைப்பேசி பாவனை உள்ள பாக்கிஸ்தானில் மற்றக் கட்சியினரிலும் பார்க்க இம்ரான் கான் சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாளுகின்றார்.

9. பல முன்னாள் படைத்தளபதிகள் இம்ரான் கானைப் பராட்டுகின்றனர்.

அமெரிக்கா தனது பிராந்திய நலன்களிற்காக பாக்கிஸ்தானில் ஊழல் செய்யும் சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்துவதை வழமையாகக் கொண்டுள்ளது என்பதை பாக்கிஸ்த்தானிய மக்கள் எல்லோரும் உணர வேண்டும். அமெரிக்காவின் இந்த அணுகு முறையால் பாக்கிஸ்தான் தரமான முறையில் ஆட்சி செய்வதற்கும் மக்களுக்கு நன்மையளிக்க கூடிய வகையில் பொருளாதார முகாமையை செய்வதற்கும் கடினமான ஒரு நாடாக இதுவரை இருந்து வந்துள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பங்களாதேசையும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு  இலங்கையையும் பாக்கிஸ்த்தான் உதாரணமாக பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...