Followers

Monday 9 August 2021

மாறும் சீன ஐரோப்பிய ஒன்றிய உறவு


கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் வித்தியாசமான உறவைக் கொண்டிருந்தன. சீன வளர்ச்சியை அமெரிக்கா ஒரு சவாலாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தனக்கான ஏற்றுமதிச் சந்தையின் வளர்ச்சியாகவும் பார்த்தன. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மேர்க்கெல்லும் சீனாவுடனான உறவை உறுதியான நிலையில் வைத்திருக்க விரும்பினர். ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் உலக அதிக்கக் கனவைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சீனாவுடனான வர்த்தக உறவை வளர்க்க விரும்பியது. இதே கொள்கையை ஜோர்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா போன்ற முன்னாள் அமெரிக்க அதிபர்களும் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். 2019-ம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் சீனா தொடர்பான தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கின்றது.

சீன உள்நோக்கதை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியம்

சீனா அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மாற்றியமைக்க முயல்கின்றது என்பதை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் செய்ய விரும்பிய முதலீட்டிற்கான முழுமையான ஒப்பந்தம் (Comprehensive Agreement on Investment) தற்போது கிடப்பில் போடப்படுள்ளது. 2021 மா மாதம் அது தொடர்பான முடிவெடுப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றம் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்களிடையே சீனாமீதான வெறுப்பும் அதிகரித்துள்ளது. ஜேர்மனியும் பிரான்சும் தென் சீனக் கடலில் சுதந்திர போக்கு வரத்தை உறுதி செய்வதற்கு தமது பங்களிப்பை வழங்க முன் வந்துள்ளன. தென் சீனக் கடலில் உள்ள பல மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருள் மற்றும் கடலுணவு வகைகளுக்கு உரிமை கொண்டாடும் போட்டி, அங்கு சீனா அமைத்த செயற்கை தீவுகள் தொடர்பான போட்டி, தென் சீனக் கடலில் கடல் எல்லை தொடர்பாக அதை ஒட்டியுள்ள நாடுகளிடையேயான போட்டி ஆகியன தீவிரமடைந்துள்ளது. அங்கு சீனாவின் ஆதிக்கத்தை சுதந்திரமான கடற்போக்குவரத்துக்கு சீனாவின் அச்சுறுத்தல் என்னும் பெயரில் அமெரிக்கா பல நாடுகளை சீனாவிற்கு எதிராகத் திரட்டுகின்றது.

சீனாவிற்கு சவாலாக பிரெஞ்சுக் கடற்படை

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பிரான்சும் தனது கவனத்தை அதிகரித்துள்ளது. பிரான்ஸ் தனது ஈரூடக போர்க்கப்பலான தொன்னேறேயை (Torrenne) பசுபிக் மாக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கப்பலின் தலைமையில் பிரான்சின் கடற்படையினர் தென் சீனக்கடலில் பல போர்ப்பயிற்ச்சியில் 2021 பெப்ரவரி மாதத்தில் ஈடுபட்டிருந்தது. அதற்கு சீனா தனது ஆட்சேபனையையும் தெரிவித்திருந்தது. ஆனால் அதைத்தொடர்ந்து பிரான்சின் அணுக்குண்டு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான எமரூட் (Emeraude) தென் சீனக் கடலில் போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டது. பிரான்சின் நடவடிக்கைகள் தென் சீனக் கடற் பிராந்தியத்தின் 90 விழுக்காடு கடற்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடுவதற்கு சவால் விடுவதாக அமைகின்றது. 2019 ஓகஸ்ட் மாதம் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை மூன்றும் இணைந்து சீனா ஐக்கிய நாடுகள் சபையின் கடற் சட்ட மரபொழுங்கிற்கு (Unite Nations Conventions on the Law of Sea) ஏற்ப நடக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

தென்சீனக் கடலில் பிரித்தானிய விமானம்தாங்கி

பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பலான குயீன் எலிசபெத் தனது பரிவாரக் கப்பல்கள் நீர்மூழ்கிக்கப்பல்கள் புடைசூழ அமெரிக்கத் தாயரிப்பு F-35 என்னும் உலகின் மிகச் சிறந்த பற்பணிவிமானங்கள் பலவற்றையும் தாங்கிக்கொண்டு தென் சீனக் கடலில் 2021 ஜூலை இறுதியில் பயிற்ச்சியில் ஈடுபட்டது. Career Strike Group 21 என அழைக்கப்படும் இந்த விமானம்தாங்கிக் கடற் படைப்பிரிவு உலகின் அதி நவீனமானது எனக்கருதப்படுகின்றது. இது சிங்கப்பூரில் போர்ப்பயிற்ச்சி செய்தபின் தென் சீனக் கடலூடாக ஜப்பானைச் சென்றடைந்தது. ஜப்பானியப் பிரித்தானியப் படைகள் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்ட்ன. தென் சீனக் கடலூடாக பிரித்தானியக் கடற்படைகள் பயணித்ததை கடுமையாக எதிர்த்த சீனா பிரித்தானியா இப்போதும் குடியேற்ற ஆட்சிக்கால மனப்பாங்குடன் இருக்கின்றது எனக் குற்றம் சாட்டியது. பிரித்தானியா, மலேசியா, சிங்கப்பூர், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது.

பல கடல் தாண்டிச் செல்லும் ஜேர்மனி

சீனாவுடன் சிறந்த வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் ஜேர்மனியும் தனது கடற்படையை தென் சீனக் கடலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஜேர்மனியப் பொருளாதாரம் சீனாவிற்கான ஏற்றுமதியால் நன்மையடைந்திருக்கின்றது. சொந்தப் பொருளாதார நலனிலும் பார்க்க சுதந்திரமான உலகக் கடற்போக்குவரத்து முக்கியமானது என உணர்ந்த ஜேர்மனி தனது ஃபிரிகேட் வகைக் கப்பலை தென் சீனக் கடலுக்கு அனுப்புகின்றது.  ஜேர்மனியில் இருந்து வட கடல், ஆங்கிலக் கால்வாய், அத்லாண்டிக் கடல், மத்திய தரைக்கடல், அரபிக் கடல், இந்து மாக்கடல், பசுபிக்மாக்கடல் ஆகியவற்றினூடாக செல்லப் புறப்பட்டுள்ள ஜெர்மனியின் போர்க்கப்பல் 2021 டிசம்பரில் சீனா போய்ச் சேரும் என எதிர் பார்க்கப்படுகின்றது. 2002-ம் ஆண்டின் பின்னர் ஜேர்மனியப் போர்க்கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் பயணிக்க விருக்கின்றது. அது தைவான் நீரிணை வழியாகவோ அல்லது சீனாவின் செயற்கைத் தீவுகளின் 12கடல் மைல் கடற்பரப்பினுள்ளோ செல்ல மாட்டாது. பல விமானம் தாங்கி கப்பல்களைக் கண்ட சீனாவிற்கு 200 படையினரைக் கொண்ட ஜேர்மனியில் ஃபிறிகேற் வகைக் கப்பல் எந்த வித அச்சத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் தனக்கு எதிராக பல நாடுகள் திரள்வது சீனாவைச் சிந்திக்க வைக்கும்.

 

சீனாவின் 2-ம் அணுக்குண்டு ஏவுகணைத்தளம்.

சீனா அமைத்துக் கொண்டிருக்கும் இரண்டாவது அணுக்குண்டு ஏவுகணைத் தளம் அதன் அமைதியான எழுச்சி என்ற கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சீனா தன் அணுக்குண்டு உபாயம் ஆகக் குறைந்த பாதுகாப்பை நோக்கமாக கொண்டது என இதுவரை பறைசாற்றி வந்தது. ஆனால் அது அமைத்துக் கொண்டிருக்கும் இரண்டாவது அணுக்குண்டு ஏவுகணைத்தளம் அதைப் பொய்யாக்குகின்றது. அத்துடன் சீனாவிடமிருக்கும் அணுக்குண்டுகளின் எண்ணிக்கை தொடர்பாக அது உண்மையான தகவலை வெளியிடுவதில்லை எனவும் எண்ணத்தோன்றுகின்றது. சீனா தனது புதிய அணுக்குண்டு ஏவுகணைத்தளத்தில் அமைத்துள்ள குதிர்களையும் சேர்த்து 200குதிர்கள் (Silos) சீனாவிடம் உள்ளது என செய்மதிகளில் இருந்து அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றுடன் சீனாவுடம் பல நகரும் அணுக்குண்டு ஏவுகணை வீசிகளும் உள்ளன. இதனால் சீனாவின் அணுக்குண்டு ஏவுகணை வீசிகளை தரையில் வைத்தே ஒரேயடியாக எதிரிகளால் அழிக்க முடியாது. இது அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் பெரும் சவாலாக அமைகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இவற்றைக் கருத்தில் கொண்டு சீனா தனக்கென ஒரு உலக ஒழுங்கை நிலை நாட்ட முயல்வதை எதிர்க்க முன்வந்துள்ளது.

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி

சீனா தனது அயல் நாடுகளை மிரட்டுவதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்பவில்லை. சின்ஜியாங் மாகாணத்தில் சீனாவின் மனித உரிமை மீறல்களை ஐஒ கடுமையாக எதிர்க்கின்றது. சீனாவிற்கு எதிரான பொருளாதரத்தடையையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது. சீனா Made in China – 2025 என்னும் கொள்கையை வகுத்து அதற்கு ஏற்ப தனது உயர் தொழில்நுட்பங்களை முன்னேற்றி வருகின்றது. அதை தடுக்கும் முகமாக அமெரிக்கா உயர்தொழில் நுட்பத்துக்கான semi-conductorsஐ சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்கும் ஜேர்மனிக்கு சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் சவாலாக 2025இன் பின்னர் அமைய வாய்ப்புண்டு அதனால் ஜேர்மனிக்கு சீனாவின் வளர்ச்சியை தடைசெய்ய வேண்டிய அவசியம் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா ஜேர்மனியிடம் சீனாவிற்கு உயர்தொழில்நுட்பங்கள் கொண்ட கருவிகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என விடுத்த வேண்டுகோளை ஜேர்மனி ஏற்றுக் கொண்டது. பொதுவுடமைச் சீனாவை முதல் அங்கீகரித்தது பின்லாந்து. ஆனால் சீனாவைக் கடுமையாக எதிர்க்கும் சுவீடனில் வாழும் சீனருக்கு சுவீடன் விருது வழங்கியதை அடுத்து இரு நாடுகளிடையேயான உறவு மோசமடைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை பின்லாந்து விரும்பவில்லை.

குழம்பிய குட்டை

பல நாடுகளும் தென் சீனக் கடலுக்கு தமது போர்க்கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் சீனா தென் சீனக் கடலில் தனது விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒரு பாரிய போர்ப்பயிற்ச்சி செய்யப் போவதாகவும் அப்போர்ப்பயிற்ச்சி செய்யும் கடற்பிரதேசத்தில் வேற்று நாட்டு கப்பல்கள் பயணிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது. தென் சீனக் கடல் குழம்பிய குட்டையாகின்றது.

சீனாவிற்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்து அதனைத் தனிமைப் படுத்தும் நகர்வை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்கின்றது. ஆனால் தன்னைத் தனிமைப்படுத்த முடியாது என்கின்றது சீனா.

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...